எரிமலையை நோக்கிய பயணம்: வனவாத்து (Vanuatu) – தென்பசிபிக்தீவுகள்

செஸ்னா விமானம்

ஏழாயிரம் அடி உயரத்தில் ஆகாயவெளியில் ஆறு இருக்கைகளைக் கொண்ட செஸ்னா விமானம் பறந்தபோது எதிரே புகைபோல் வந்த ஓவ்வொரு மேகக்கூட்டமும் அந்த விமானத்தை தூக்கித் தூக்கி எறிந்தது. சிறுகுழந்தை, விளையாட்டு விமானத்தை விளையாடுவதுபோல் அந்த மேகக்கூட்டங்கள் விளையாடியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த மேககூட்டங்களை பயத்துடன், மவுனமாக சபித்துக் கொண்டேன்.வனவாத்து வருவதற்கு முதல்நாள் மண்டைக்கயிறுக்கு (மனைவியின் தம்பி) கொடுக்க வேண்டிய பணத்தை வங்கியில் போட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. ஏதாவது காரணத்தால் அந்த ஒற்றை எஞ்சின் விமானத்தில் கோளாறு ஏற்படும் பட்சத்தில் கடன்காரனாக மரணமடைய வேண்டிஇருக்காது என்பது ஒரு ஆறுதலான நினைப்பு. எனக்குப் பக்கத்தில் இருந்த மனைவிக்கு அது ஒற்றை இயந்திர விமானம் என்பது தெரியாது. எனக்குப் பக்கத்தில் மேலும் சுமார் இருபது வயதுள்ள இரண்டு அவுஸ்திரேலிய இளைஞர்ளைப் பார்த்ததும் மனதில் தைரியம் வந்தது. கமராவை எடுத்து படங்கள் எடுக்கத் தயாரானேன்.

இம்முறை ஈஸ்டர் விடுமுறைக்கு சென்ற இடம் மெல்பனில் இருந்து நான்கு மணிநேர விமானப்பயணத்தில் வரும் வனவாத்து என்ற நாடு. 82 சிறிதும் பெரிதுமான தீவுகளைக்கொண்டது. பிஜி ,நியு கலிடோனியாவிற்கு அருகில் உள்ள தீவுப் பிரதேசம்.மூன்று இலட்சம் மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள் தென் பசுபிக் தீவுகள் யாவும் கடலில் ஏற்பட்ட பூகம்பத்தால் உருவாகியவை. மற்றைய நில கண்டங்களோடு ஒப்பிடும்போது புதிதாக உருவானவை. இங்கு வாழும் மக்கள் பிஜி, சொலமன் தீவுகள் மக்களைப்போல் மெலனீசியன் குழுவைச் சேர்ந்தவர்கள். கருமையான நிறமும் சுருட்டைமயிரும் உள்ளவர்கள். அவுஸ்திரேலியா தனி நாடாக முன்பு பிரித்தானிய குடியேற்ற நாட்டில் குவின்ஸ்லாந்து மாநிலம் அக்காலத்தில் தனி காலனியாக இருந்தபோது 1846 இல் இருந்து கரும்புத்தோடடத் தொழிலாளர்கள் தேவைக்காக இந்த மெலனீசியாவில் இருந்து இளைஞர்களை கடத்திக்கொண்டு கப்பலில் வருவது குவின்ஸ்லாந்து தோட்ட முதலாளிகளின் வழக்கம். ஆடு மாடு திருடுவதுபோல், மாண்புமிகு பிரித்தானிய ஆட்சியில் அந்த அடிமை வர்த்தகம் நடந்தது இதனை கருப்புப்பறவைகள் பிடித்தல் என்று சொல்லப்படும் (Black Birding) இந்தக் கடத்தல் விவகாரம் அவுஸ்திரேலியா கொமன்வெல்தாகிய பின்னர் 1906 ஆம் ஆண்டில் தடைசெய்யப்பட்டது.

வனவாத்து அக்காலத்தில் பிரித்தானியா- பிரான்ஸ்ஸின் இணையாட்சியின் கீழ்இருந்தபோது ஆயிரக்கணக்கானவர்கள் இங்கிருந்தும் அவுஸ்திரேலியாவிற்கு கருப்புப்பறவைகள் பிடித்தல் மூலம் மனிதர்கள் கடத்தப்பட்டார்கள். பிற்காலத்தில் சிலர் திருப்பியனுப்பப்பட்டார்கள்.

இரண்டாம் உலகப்போரில் பசுபிக் பகுதியில் அமெரிக்கர்களின் முக்கிய கப்பல்படைத்தளமாக இருந்த போடவில்லா (Port Villae)தற்போது வனவாத்துவின் தலைநகரம். இங்குதான்) அதிகமாக மக்கள் வாழ்கிறார்கள்.

பலகாலமாக மனிதர்களைக் கொன்று தின்னும் கனிபலிசம் என்ற நரமாமிசம் உண்ணும் பழக்கமும் பிஜி ,பப்புவா நியு கினிபோல் வனவாத்துவிலும் இருந்தது. தற்பொழுது மூன்று இலட்சம் மக்கள்தான் இங்கு வழ்கிறார்கள். இந்த நாடு தீவுகளாக சிதறி இருப்பதால் போக்குவரத்துகள் சிறிய விமானங்கள் மூலம்தான் நடக்கிறது. மூன்று நாட்கள் மட்டுமே வனவாத்து தீவில் நின்றதால் சென்ற இடங்கள் பார்த்த விடயங்கள் அதிகமில்லை.

புகையும் எரிமலை

ரானா என்ற தெற்கே உள்ள தீவில் எரிமலை தொடர்ச்சியாக வெடித்தபடி இருக்கிறது.மேலும் அங்குள்ள எரிமலையை அருகில் சென்று பார்க்கக்கூடியதென்பதால் சிறிய விமானத்தில் பயணித்தது எனக்கு புது அனுபவம். உயிரை கையில் பிடித்துக்கெண்டு ஒருமணிநேரம் பிரயாணம் செய்தது வித்தியாசமானது. பெரிய பயணிகள் விமானங்கள் 35000 – 40000 அடி உயரத்தில் பறக்கும்போது மேகக்கூட்டங்கள் கீழே தெரியும். ஆனால் இந்த சிறிய விமானம் முகில்களை ஊடறுக்கும்போது கண்ணுக்குத் தெரியாத ஆகாயவெளியில் பறப்பது போன்று இருந்தது.

தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த விமானச்சாரதி என்னைத்திரும்பிப் பார்த்து ‘இதுதான் முதல் அனுபவமா?’ எனக்கேட்டபோது தலையை ஆட்டினேன். பெரும்பாலான விமான விபத்துகள் விமானம் உயரே ஏறும்போதும் கீழே இறங்கும்போதும் நடப்பதாகவே புள்ளி விபரங்கள் சொல்வதனால் அந்த சிறிய விமானத்தை விட்டு இறங்கியபோது மட்டுமே மனதில் அமைதி வந்தது.

நாங்கள் அடுத்த நாள் சென்றது ராங்குயிலிற்றிதீவு. (Tranquillity Island) வழக்கமான படகுப்பயணத்திற்கு அப்பால் நாம் பார்த்த இந்தத் தீவில் கடல் ஆமைகளின் ((Hawksbill Turtle)) முட்டைகளை எடுத்து பாதுகாத்து பொரிக்க வைத்தபின்பு அந்த குட்டி ஆமைகளை பருவம் வந்தபின்பு கடலில் விடுகிறார்கள். ஆமைகள் இந்தத் தீவுக்கு வந்து முட்டை இட்டதும் பொரித்த குஞ்ஞகளுக்கு முதுகில் ஓடு இல்லாததால் பறவைகளுக்கு இரையாகிவிடுகின்றன. ஆமைகள் உணவிற்காகவும் அவைகளின் ஓட்டிற்காகவும் பிடிப்பதால் அந்த இனம் அருகிவருகின்றது.இந்த ஆமைகளை அடையாளமிட்டு கடலில் விடும்போது அவை அவுஸ்திரேலியா வரையில்செல்கின்றன. இந்த ஆமைகள் முப்பது வருடத்தில் முதிர்ச்சியடைந்ததும் நூறு வருடங்கள் உயிர்வாழக்கூடியவை. முதிர்ந்த பருவத்தில் ஒரு மீட்டர் நீளமாகும் இந்த ஆமைகள் பராமரிப்பு சூழல்நலன்விரும்பிகளின் நன்கொடையில் நடைபெறுகிறது.

இரவு உணவுக்கு ஒரு விடுதிக்குப் போனபோது அங்கு நண்டு உணவு இருக்கிறது என்றார்கள் . அதனை கஷ்டப்பட்டு உண்டபின்புதான் அது வித்தியாசமான நண்டு எனப் புரிந்தத. வனவாத்து உணவுகளில் தென்னை நண்டு என்ற ஒருவகை நண்டு உணவுக்கு பிரபலமானது. இந்த நண்டுகள் கடற்கரையோரத்தில் உள்ள தென்னைமரங்களில் ஏறி தேங்காய் மட்டும் தின்று உயிர்வாழும்.

வனவாத்து மக்கள் பன்றிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒருவிதத்தில் இந்தியாவில் மாடுகள்போன்று செல்வத்தை குறிக்கும். அதேபோல் காவா என்ற கிழங்கில் இருந்து வரும் போதை தரும் உணவும் சடங்குகளில் பாவிக்கப்படுகிறது. படிகம்போன்ற கடற்கரைகள். சோலைபோன்றகாடுகளில் வனவிலங்குள் அதிகம் இல்லை. பெரும்பாலான தீவுகளில் பாம்புகள் இல்லை இருப்பவைகளும் நங்சுத்தன்மையற்றவை
அழகான தீவுகள். பழகுவதற்கு இனியமனிதர்கள் இந்த தீவு மக்கள்.

uthayam@optusnet.com.au