சிலபோதுகளில் ஏன் மெய்யியலைக் கற்கவேணும் இதனால் என்ன பயன் என்கிற கேள்விகளைப் பலர் கேட்பர். மெய்யிலுக்கான பயன்பாடு என்ன? தத்துவத்தால் என்ன பயன்..? பயன்பாட்டு வாதம் ஒரு புறமிருக்கட்டும்.
லுட்விக் விற்கிஸ்ரைன்ற் எனும் மொழியியல் மெய்யியலாளரிடம் போகலாம். அவர் சொன்னார்- ஒரு போத்தலுக்குள் ஒரு ஈ அகப்பட்டுவிட்டது அந்த ஈ ஐ எவ்வாறு விடுவிக்கலாம்- இதுவே மெய்யியல். எல்லோரும் அகப்பட்டுவிட்ட ஈ ஆ மெய்யியல்?
அவர் இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மெய்யிலாளர் என்பது என் கணிப்பு. பாரிய பிரச்சினைகளை அவர் தீர்த்தார்.
1) தனியன் ஒன்றைச் சுட்டும் பொழுது அது வெறுமனே தனியனைச் சுட்டுகிறதா.? அல்லது பொதுவைச் சுட்டுகிறதா..? உதாரணமாக – மரம் – எனும் தனியனை நாம் சுட்டும் பொழுது.. அந்த மரம் இந்த மரம் எனச் சொல்கிறோம். ஆனால் –மரம்- என்பது எதைச் சுட்டுகிறது ? பொதுக் கருத்து என்பது என்ன..? பொதுவிலே ஒரு கருத்து இருக்கமுடியுமா..? -அழகு- என்பது தனிச்சொல்லா..? பொதுச் சொல்லா..?
இப்படியாகப் பல கேள்விகளை அவர் கேட்டார். ஈற்றில் சொல்= அர்த்தம்= பயன்பாடு என்கிற சமன்பாட்டை நிறுவினார்.
இவருக்கு முன்னோர்கள் சொல்=அர்த்தம் என்பதுடன் நின்றுவிட்டனர். இவரே உலகிற்கு முதன்முதலில் சொன்னார் சொல்லுக்கு அர்த்தம் மட்டுமில்லை அதற்கொரு பயன்பாடும் இருக்கிறதென்று.
-கூப்பிடுதொலை- இந்தச் சொல்லின் அளவீடு என்ன..? எத்தனை மீற்றர். -அந்திமாலை- இந்தச் சொல்லின் உண்மையான அர்த்தம் என்ன..?
-இளவேனில்- இப்படியே இவர் பல உதாரணங்களைச் சொல்வார்.
இவரது புகழ்பெற்ற உதாரணம் -பல்லுக்கொதி-
பல்வலி- என்பது பொதுச் சொல்லா தனிச்சொல்லா? பல்வலியை உணரமுடியும் சொல்லமுடியுமா என்று இவர் கேட்டார்.
உனக்கு நீ யே பேசமுடியுமா இது சாத்தியமா..? மொழி பொதுவாக இல்லாமல் தனியனுக்கு மட்டும் உரித்தாக முடியாது. அது தன் பயன்பாட்டில் மட்டுமே அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. அர்த்தம் என்பது ஒரு சொல்லின் பயன்பாடு. தனிச்சுட்டு தனிச் சுட்டுத்தான். பொதுச் சொல் என்பது அதனதன் பாரம்பரியம் சார்ந்தது.
பாரம்பரியமும் தொடர் அர்த்தங்களுமே சொல்லாகிறது அதுவே மொழி. இது சிக்கிலானது. இங்கே தர்க்கத்தைக் கொண்டு நிறுவுவது இயலாமற் போகலாம்.
என்று சொன்னார் விற்கின்ஸ்ரைன். கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில்- தர்க்க அணுவியல் வாதத்தின் தந்தை பேர்ட்ரண்ட் ரசலுடன் நேரடியாகவே மோதினார்.
அவர் வாழ்ந்த காலத்தில் அவர் மிகத்தலைக்கனம் பொருந்தியவர். என்றும் புரிந்துகொள்ளப்பட முடியாதவர் என்றும் கணிக்கப்பட்டார். மிக இளவயதில் இறந்து போனார்.
நோர்வே பேர்கன் பல்கலைக்கழகத்திலும் அவர் வாழ்ந்திருக்கிறார். நான் அந்த இடங்களைப் பார்த்திருக்கிறேன். எனக்குத் தத்துவம் பயிற்றுவித்த ஆசான் காசிநாதர் இவரது பாரம்பரியத்தில் வந்தவர். அதனாலும் இவரை எனக்குப் பிடிக்கும்.