I do not agree with what you have to say, but I’ll defend to the death your right to say it. – Voltaire
பெருமாள் முருகனின் கருத்துகளை நாம் ஏற்கலாம் அல்லது ஏற்காமலிருக்கலாம். ஆனால் அவரது கருத்துகளைத் தர்க்கரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர அவரது எழுத்தின்மேல் வன்முறையினைப் பிரயோகிக்க யாரையும் தூண்டக்கூடாது. அவரது கருத்துகளைக்கூறும் அவரது அடிப்படை உரிமையினை மதிக்கும் அதே சமயம், அவரது கருத்துகளைத் தர்க்க ரீதியாக எதிர்வு கொள்ளும், அமைதியான வழிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாற்றுக்கருத்தாளர்களினது உரிமையினையும் மதிப்போம். கருத்தை கருத்துரீதியாக எதிர்கொள்ளாமல், எழுத்தாளர் ஒருவரின்மேல் வன்முறையினைப் பிரயோகிப்பது அல்லது தூண்டிவிடுவது, அனைவராலும் எதிர்க்கப்பட வேண்டியது. தர்க்கரீதியாக படைப்புகளை அணுகுங்கள்; உணர்ச்சிவெறியூடாக ஒருபோதுமே அணுகாதீர்கள். எழுத்தாளர் ஒருவரின் படைப்புச் சுதந்திரம் முக்கியமானது’ மதிக்கப்பட வேண்டியது. அதே சமயம் எழுத்தாளரொருவர் இவ்விதமான எதிர்ப்புகளைக் கண்டு தளர்ந்து விடுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இந்துக்களின் இரு பெரும் இதிகாசங்களிலொன்றான மகாபாரதத்தில் வரும் பாஞ்சாலி பாண்டவர்கள் ஐவரின் மனைவி. இப்பொழுதும் கூட இந்தப் பழக்கம் வட இந்தியாவிலுள்ள ஓரின மக்களிடம் காணப்படுவதாகச் சஞ்சிகையொன்றில் வெளியான கட்டுரையொன்றினை வாசித்திருக்கின்றேன். மகாபாரதத்தில் அவ்விதம் வருவதற்காக யாரும் மகாபாரதத்தை எரிக்கவில்லையே. மகாபாரதத்தில் குந்தி திருமணமாகாத நிலையில் கருத்தரித்து கர்ணனைப் பெறுகின்றாள். இதற்காக மகாபாரதத்தை யாரும் எரித்துப் போராடுவதில்லையே. அப்பாத்திரங்களின் பின்னால் பல்வேறு தத்துவங்கள் இருப்பதாக இந்து அறிஞர்கள் ஆய்வுரைகள் வழங்குவார்கள். அதுபோல்தான் எழுத்தாளர் பெருமாள் முருகனின் படைப்பான மாதொருபாகனில் வரும் பிள்ளைகளற்ற தம்பதிகள் பற்றிய கதையினையும் , பழக்க வழக்கங்களையும் அணுக நேரடியாக அணுகாமல், தத்துவரீதியில், தர்க்கரீதியில், அது ஒரு கலைப்படைப்பு என்னும் ரீதியில் அணுக வேண்டும்.
இன்னுமொரு கோணத்தில் பார்த்தால் மாதொருபாகன் நாவலைப் படித்து முடிக்கும்போது காளி தன் மனைவியின்மேல் வைத்துள்ள அபரிதமான காதலையும், ஊர்ப்பழக்கத்தினை காரணமாக வைத்துத் தன் மனைவி இன்னுமொருவனுடன் சென்றுவிட்டதைப் பொறுக்க முடியாத வேதனையையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. உண்மையில் அந்தப் படைப்பு வெளிப்படுத்தும் உணர்வானது அவ்விதமான நிலவிய பழக்க வழக்கங்களை எதிர்ப்பதாகவே இருக்கின்றது. காளியையும், அவன் மனைவியின் உணர்வுகளையும் ஆசிரியர் வெளிப்படுத்தியிருக்கும் முறையில் அறிந்துகொள்ள முடியும். இன்னுமோர் ஆடவனுடன் இணையும் மனைவியின் உணர்வுகளையும், அவளுக்காகவே உருகும் கணவனின் உணர்வுகளையும் ஆசிரியர் வெளிப்படுத்தியிருக்கும் கதை சொல்லும் முறையில் அறிந்துகொள்ள முடியும். அதே சமயம் இவ்விதமான குறைபாடுகள் தம்பதியினரில் யாருக்காவது இருக்கலாம். ஏன் கணவனுக்குத்தான் இருக்க வேண்டுமென்று நடைமுறை நிலவியதாக ஆசிரியர் படைத்தாரோ? .
உண்மையில் ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயத்தில் குழந்தைகள் இல்லையென்றால் கணவன் இரண்டாவது திருமணம் செய்வது சாதாரணம். ஆனால் கணவனிடம் இவ்விதமான குறைபாடு இருப்பின், மனைவியானவள் அவ்விதம் செய்வதற்கு இந்தியச் சமூக அமைப்பில் வெளிப்படையாக அனுமதியில்லை. ஆனால் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ அவ்விதமானதொரு வழக்கத்தை விபரிக்கின்றது. இது உண்மையில் உண்மையாக நிலவிய வழக்கமா அல்லது ஆசிரியரின் கற்பனையில் உருவானதொரு குறியீடா என்பதைத் திறனாய்வாளர்கள்தாம் ஆய்வு செய்து கூற வேண்டும்.
உண்மையில் இவ்விதமான நடைமுறை உண்மையாக இல்லாதிருக்கும் சந்தர்ப்பங்களில் , உண்மையான ஊரொன்றுடன் இணைத்து எழுதுவதற்குப் பதில் ஆசிரியர் நாவலில் கற்பனையான நகரொன்றினைப் படைத்திருக்கலாமென்பதென் கருத்து. ஆனால் உண்மையாக இவ்விதமான நடைமுறையொன்று அந்த நகரில் வழக்கத்திலிருந்திருந்தால் அந்த நகரின் பெயரைப் பாவிப்பதில் தவறொன்றுமில்லை, ஏனெனில் அவ்விதமானதொரு படைப்பானது வரலாற்று ஆவணமாக விளங்குவால்.
பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவல் ஆசிரியரே விரும்பாவிட்டாலும் கூட, ஏற்பட்ட சர்ச்சை காரணமாகத் தமிழ் இலக்கியத்தில் நிலைத்து நிற்குமொரு படைப்பாக மாறிவிட்டது.
நூலினை எதிர்ப்பவர்கள் சரியா, நூல் கூறும் விடயங்கள் சரியானவைதாமா? , நூலாசிரியர் எழுத்திலிருந்து ஒதுங்குவதாக வெளிவந்த அறிக்கை நியாயமானதா என்று விவாதங்களை தொடர வழிவகுத்துவிட்டுள்ளது ‘மாதொருபாகன்’ ஏற்படுத்தியுள்ள சர்ச்சை