7-ம் அத்தியாயம் ஸ்ரீதர் மோசக்காரனல்லன்!
[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்] மனித இதயத்தைத் தாக்கும் உணர்ச்சிகளிலே காதலைப் போன்ற சக்தி வேறில்லை என்றே சொல்ல வேண்டும். அதுவும் வாலிப இதயத்தை வாடவும் மலரவும் அங்கலாய்க்கவும் வைப்பதிலே, காதலுக்கு இணை காதலேதான். ஸ்ரீதர் இரவு நெடு நேரம் வரை கண் விழித்து பத்மாவுக்கும், பரமானந்தருக்கும் கடிதங்கள் எழுதி விட்டுப் படுக்கைக்குச் செல்லச் சற்றேறக் குறைய இரண்டு மணியாகிவிட்டது; இருப்பினும் விடியற் காலை வரை அவனுக்கு நித்திரை வரவேயில்லை. நித்திரை கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாளை பகல் முழுவதும் உடம்பில் உற்சாகமாயிராதே” என்ற நினைவால் அவன் தனது கண்களை மூடித் துயிலுதற்கு எவ்வளவு தூரம் முயன்ற போதிலும், நித்திரை வர மறுத்துவிட்டது. பத்மாவின் நினைவால் ஏற்பட்ட தாபங்கள் அவன் மனதின் ஒவ்வொரு பகுதியையும் பிய்த்துப் பிடுங்கிக் கொண்டிருந்ததே அதற்குக் காரணம்.
நாளைக் காலை பத்மாவைப் பல்கலைக் கழகத்தில் சந்தித்ததும் அவளிடம் “பத்மா, நான் உனக்கும் உன் தந்தையாருக்கும் — இல்லை இல்லை மாமாவுக்கும் –அப்படித்தானே உன் அப்பாவை நான் அழைக்க வேண்டும், என்று அவர் என்னிடம் கூறினார்? — இரு கடிதங்கள் எழுதியிருக்கிறேன். வாசித்துப் பார்த்து உடனே பதில் எழுத வேண்டும். தவறக் கூடாது என்று சொல்லுவேன். பத்மா ஆச்சரியத்துடன் “என்ன கடிதம்? என்ன எழுதியிருக்கிறீர்கள்?” என்று கேட்பாள். “ஓ! அது இரகசியம்! ஒருவரிடமும் சொல்ல மாட்டேன்!” என்று நான் சொல்ல, “நன்றாயிருக்கிறது உங்கள் கதை! கடிதம் எழுதப்பட்டவருக்கே கடிதத்தின் விஷயத்தைச் சொல்லக் கூடாதோ? இந்த இரகசியம் அப்பாடா, மிகப் புதுமையான இரகசியமாயிருக்கிறது! சும்மா விலை வைக்காமச் சொல்லக் கூடாதோ? இந்த இரகசியம் அப்பாடா, மிகப் புதுமையான இரகசியம் அப்பாடா, மிகப் புதுமையான இரகசியமாயிருக்கிறது! சும்மா விலை வைக்காமச் சொல்லுங்கள்” என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு என் கையைப் பிடித்துக் கெஞ்சுவாள். ஆனால் நானா சொல்லுவேன்? எனது பிடிவாதம் அவளுக்குக் கோபத்தைக் ஊட்டும். “அப்படியானால் போங்கள். என்னோடு பேச வேண்டாம்” என்று முகத்தைச் சுளிப்பாள்.. அதற்குப் பிறகும் என்னால் விஷயத்தைச் சொல்லாமல் இருக்க முடியுமா? என் ஆசைப் பத்மா மனங் கோண, நான் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? ஆனாலும் நான் விஷயத்தைச் சொல்ல மாட்டேன். சொல்லவே மாட்டேன்! அவளுக்கு உண்மையில் கோபம் பொத்துக் கொண்டு வரும் என் கையைப் பிடித்துக் கிள்ளுவாள். சிவப்புச் சாயம் பூசிய அவளது பளபளக்கும் நகங்களால் அவள் கிள்ளுவது கூட எனக்கு இன்பமாய்த் தான் இருக்கும். ஆனால் நல்ல வேளை. மற்றப் பெண்கள் போல் அவள் தனது நகங்களை நீளமாக வளர்க்கவில்லை. அப்படி வளர்த்திருந்தால், அது மிக அழகாகத்தானிருந்திருக்கும். ஆனால் அழகான நகமும் நீள நகமாயிருந்தால் கிள்ளும் போது – மிகவும் உறைக்குமல்லவா? ஆகவே, நாளைக்கு அவள் நகங்கள் இப்போதிருப்பது போல் மொட்டை நகங்களாக இருப்பதே மேல்! வேண்டுமானால் பின்னர் தனது நகங்களை வளர்த்துக் கொள்ளட்டும்” என்று தனது ஆசைகளையும் கவலைகளையும் கனவுகளாகப் பின்னிப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் அவன்.
ஆனால் இச்சிந்தனைகளின் பயனாக ஸ்ரீதரின் மனதில் ஒரு புதிய பிரச்சினை தோன்றிவிட்டது. கடிதத்திலுள்ள விஷயத்தைப் பத்மாவிடம் முன்னரே கூறி விடலாமா அல்லது கடிதத்தைப் பார்த்துத் தான் அவள் விஷயங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று விட்டு விட வேண்டுமா என்பதே அது. அன்று மாலை சுரேஷிடம் பேசும் வரை தன் ஆள் மாறாட்ட நாடகத்தைப் பத்மாவிடம் எப்படி நேரில் எடுத்துச் சொல்வது என்று திக்குமுக்காடிய ஸ்ரீதர் அதற்காகத் தானே கடித மூலம் – தன் கபட நாடகத்தை வெளியிடத் தீர்மானித்தான்? ஆனால் கடிதத்தை எழுதி முடித்தப் பின்னர், மனம் வேறு விதமாக வேலை செய்கிறது. “சீச்சீ, மனதை இவ்வாறு அலைய விடக் கூடாது. தீர்மானித்தது தீர்மானித்ததுதான். விடிந்ததும் கடிதத்தைப் பதிவுத் தபால் மூலம் அனுப்புவேன். அவள் சகல விஷயங்களையும் கடித மூலமே தெரிந்து கொள்ளட்டும்” என்று முடிவு செய்த ஸ்ரீதர் மனதில் மற்றோர் அச்சமும் எழுந்தது. ஒரு வேளை கடிதத்தைப் படித்ததும் நான் பொய்யன் என்பதைத் தெரிந்து கொண்டு என் மீது பத்மா வெறுப்படைந்தாளானால்..?” என்ற பழைய அச்சமே அது. ஆனால் “ஒரு போதும் ஒரு பெண் இப்படிப்பட்ட காரியத்துக்காகத் தன் காதலனை வெறுக்கமாட்டாள்; உண்மையில் இவ்விஷயம் தெரிந்ததும் என்னை அடைவதற்காகத்தானே என் காதலர் இப்படிப் பொய் சொன்னார்?” என்றெண்ணி அவள் தன் காதலன் மீது முன்னிலும் அதிகமான அன்பைப் பொழியவும் கூடும்” என்று சுரேஷ் கூறிய வார்த்தைகள் அவனுக்கு ஞாபகம் வந்தன. “ஆம் சுரேஷ் அறிவாளி. என் போலக் காதல் ‘கீதல்’ என்று அலையாமல் பெரிய புத்தகங்களை எந்நேரமும் வாசிப்பவன். அவன்தான் “கிஷ்கிந்தா”வின் சாக்ரட்டீஸ்! அவன் சொன்னது சரியாகவே நடக்கும்” என்று தனக்குத்தானே தேறுதலும் கூறிக்கொண்டான் அவன்.
“இருந்தாலும் அதை அவ்வளவு நிச்சயமாக நாம் எப்படிக் கூற முடியும். இந்த ஆள் மாறாட்ட நாடகத்தால் எவ்வித தீய பலனும் ஏற்படாதிருப்பதை எப்படிச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதிப்படுத்துவது? அதற்கேதாவது வழியில்லையா?” என்று தன்னைத்தானன் வினாவிய ஸ்ரீதருக்கு உடனே ஒரு பதிலும் கிடைத்துவிட்டது.
“கொட்டாஞ்சேனை மாரியம்மனுக்கு ஐம்பது ருபாவுக்குக் கற்பூரம் கொளுத்துவேன். மாரியம்மன் கைவிட மாட்டாள். தீய பலன் எல்லாவற்றையும் தவிர்ப்பாள் என் தாய்” என்று தீர்மானித்த ஸ்ரீதர் சிறிது யோசித்தப் பின்னர் இப்படிப்பட்ட பெரிய வேலைக்கு ஐம்பது ரூபா போதாது. நூறு ரூபாவுக்குக் கற்பூரம் கொளுத்துவேன்.” என்று உடனடியாக நேர்த்திக்கடனின் பெறுமதியை உயர்த்தினான். உண்மையில் வங்கியில் இருந்த முழுப் பணத்தையுமே கற்பூரமாகக் கொளுத்த அவனது காதலுள்ளம் தயாராக இருந்ததென்றாலும் அவ்வளவு பெரிய தொகைக்கு எவரும் கற்பூரம் கொளுத்தியதாக அவன் முன்னொரு போதும் கேள்விப்பட்டிராததால், தான் அவ்வாறு பல ஆயிர ரூபாக்களுக்குக் கற்பூரம் கொளுத்துவதைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா என்று அவன் அஞ்சியதே கற்பூரச் செலவை நூறு ரூபாவாகக் கட்டுப்படுத்தும்படி அவனை உந்தியது. பார்க்கப் போனால் நூறு ரூபா கூட மற்றவர்களின் கண்களில் சற்று அதிகமாகத் தான் படும். ஆனால் மாரியம்மனிடம் அவன் கோரிய சேவையின் முக்கியத்துவத்தோடு ஒப்பிட்டால் நூறு ரூபா எம்மாத்திரம்? ஆனால் அதைக் கண்டும் சிலர் சிரிக்கக் கூடும், என்றாலும் அதற்காக அதனை இன்னும் குறைப்பது நியாயமல்ல என்று ஸ்ரீதர் தீர்மானித்துக்கொண்டான். பார்க்கப் போனால், என்ன உலகமிது? ஒருவனுக்குத் தன்னிஷ்டப் பிரகாரம் கற்பூரம் கொளுத்துவதற்குக் கூடச் சுதந்திரமில்லா உலகம்!
இப்படிப் பலவாறாகச் சிந்தித்துப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த ஸ்ரீதர் இடையிடையே துயிலுலகிற்கு எழுவதும் மீளுவதுமாக இருந்து முடிவாகத் துயிலுலகிற் புகுந்த போது நேரம் நான்கரைக்கு மேலாகிவிட்டது.
அடுத்த நாட் காலை பத்து மணியளவில் காதலர்கள் “வழமையான இடத்”தில் சந்தித்தபோது இருவரும் தாம் தாம் வகுத்த திட்டங்களின் படி நடந்து கொண்டனர். பத்மா தன் மனதில் பொங்கிக் கொண்டிருந்த உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, ஸ்ரீதரிடம் “எனக்கு இன்று நிறைய வேலை இருக்கிறது. ஆகவே இப்பொழுது பேசிக் கொண்டிருக்க நேரமில்லை. நீங்கள் இன்று மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வாருங்கள். அப்பா உங்களிடம் ஏதோ பேச வேண்டுமாம்” என்றாள்.
“என்ன? மாமா மருமகனைக் காண விரும்புகிறாரா? மகளையும் மருமகனையும் ஒன்றாக வைத்து ஆசிர்வதிக்க விரும்புகிறார் போலும்!” என்றான் ஸ்ரீதர்.
வேறு நேரத்தில் என்றால் பத்மா ஸ்ரீதரின் இப்படிப்பட்ட கேலிப் பேச்சுக்களைக் கேட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்திருப்பாள். அத்துடன் தானும் பதிலுக்கு ஏதாவது பகடிப் பேச்சுப் பேசியிருப்பாள். ஆனால் அப்போதிருந்த மன நிலையில் அவளால் அவ்வாறு பேச முடியவில்லை. இருந்த போதிலும் ஸ்ரீதர் கேலியாகவேனும் அப்பாவை மாமாவென்று உரிமையோடு அழைத்தது அவளுக்கு இன்பமாகவே இருந்தது. ஆகவே ஸ்ரீதரின் வேடிக்கைப் பேச்சில் அவளால் உளம் மறந்து சங்கமிக்க முடியவில்லை என்றாலும், ஒப்புக்காவது புன்னகை செய்ய முடிந்தது. ஆகவே சிரித்த முகம் காட்டினாள் அவள்.
ஸ்ரீதர் தான் இரவு தீட்டிய திட்டத்தின் பிரகாரம் “பத்மா, நான் உனக்கும் மாமாவுக்கும் இரு கடிதங்கள் எழுதியிருக்கிறேன். நாளைக் காலையில் பதிவுத் தபாலில் அவை உங்களை வந்தடையும். வாசித்துவிட்டு உடனே பதிலெழுத வேண்டும். தவறக் கூடாது. தெரிந்ததா?” என்றான். இவ்வாறு சொல்லிக் கொண்டே சட்டைப் பையில் இருந்த பதிவுச் சீட்டை எடுத்து பத்மாவுக்குக் காட்டினான்.
பத்மா ஆச்சரியத்துடன் “கடிதமா? எனக்கும் அப்பாவுக்குமா? எதற்கு? தினசரி நேரில் காணுபவர்களுக்கு எதற்காகக் கடிதம் எழுத வேண்டும்? பேச வேண்டியவற்றை நேரே பேசிவிடலாமல்லவா?” என்றாள்.
ஸ்ரீதர், “சில விஷயங்களை நேரில் சொல்லுவதை விட கடிதம் மூலம் எழுதுவது இலகு. அதனால்தான் கடிதத்திலெழுதியிருக்கிறேன்.” என்றான்.
பத்மாவுக்கு அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சிலருக்கு நாடி தளர்ந்து பேசச் சக்தியற்றுப் போய்விடுகிறது. பத்மா அன்று அந்த நிலையிலேயே இருந்தாள். ஏமாற்றம், துக்கம், கோபம், எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் என்ற நான்கு பேருணர்ச்சிகளின் பீடிப்பிலே அவள் இதயம் சிக்கித் தடுமாறிக் கொண்டிருந்தது. அதனால் வழக்கமாக அவள் பேச்சிலும் நடையிலும் அலைவீசும் உயிரும் உற்சாகமும் அன்று எங்கோ மறந்துவிட்டன. அத்துடன் இதயத்தில் குமுறல் கண்ணீர்க் குமுறலாக மாறிவிடுமோ என்ற அச்சம் வேறு. அதனால் அவளைச் சுற்றிலும் ஒரு வகை இருள் — ஒரு வகை மந்தம் அல்லது மப்பு — திரையிட்டிருந்தது.
ஆனால் ஸ்ரீதருக்கோ பத்மாவின் இம்மாற்றம் சற்றேனும் தெரியவில்லை. அவன் கண்கள் காதற் கண்கள். பத்மா அவன் கண்களுக்கு வழக்கம் போல் தான் தோன்றினாள். உண்மையில் அவன் கண்களில் அவள் இன்று சற்று அதிக கவர்ச்சியுடன் தோன்றினாள் என்று கூட சொல்லலாம். காதலன் கண்களிலே தினசரி அதிக சிறப்பைப் பெறாத காதலி யார்? வழமையான உற்சாகமில்லாத இன்றைய பத்மாவின் போக்கு, அவளுக்கு அமைதியின் சிறப்பை நல்கியது. உண்மையில் வழக்கத்திலே வெகு துடுக்காகப் பேசும் பத்மா இன்று மிக அடக்கமாகப் பேசிய முறையைக் கண்டு, “ஓகோ, அப்பா திருமணத்துக்கு அனுமதித்துவிட்டார். ஆகவே பத்மா மணப்பெண் அல்லவா? இந்து சமூகத்து மணப்பெண் கால் பெருவிரலைப் பார்த்து நடக்க வேண்டியவளல்லவா? பத்தினிப் பண்புகள் அவளிடம் தோன்றுகின்றன. சரியாக அம்மாவிடம் காணும் அந்த அடக்கமும் அமைதியும் இவளிடம் தோன்றத் தொடங்கி விட்டனவே. நிச்சயம், என் பத்மாவின் அழகும் அமைதியும் இனிய பேச்சும் அம்மாவைக் கொள்ளை கொள்ளப் போகின்றன!” என்று சிந்தித்தான் ஸ்ரீதர். பத்மாவை மணப்பெண்ணாக எண்ணியதும், தலையில் மல்லிகைப்பூ அலங்காரத்துடனும் நெஞ்சு நிறைந்த தங்க வைர நகைகளுடனும் அவன் கிராமத்திலுள்ள தனது மாளிகையின் சலவைக்கல் பதித்த தரையில் தங்கச் சரிகையிட்ட கரு நீலக் காசிப் பட்டுக் கொடிச் சேலை சரசரக்க, இடுப்பில் தங்க ஒட்டியாணம் அணிந்து தன் கையைப் பற்றிக் கொண்டு, நிதானமாக நிமிர்ந்து தங்கப் பதுமை போல் நடந்து செல்வது போன்ற ஒரு பிரமை அவனுக்கு ஏற்பட்டது. அதில் மெய்மறந்த அவன் “பத்மா வாத்தியார் மகளாயிருந்தாலென்ன, அரசகுமாரனை மணந்து அரண்மனைக்கு ஒளியேற்றவல்ல அற்புதமான பெண். சீதையை மணந்த இராமன் தசரத மாளிகைக்குப் போன போது எப்படி இருந்திருப்பாளோ அப்படித் தோன்றுவாள் அவள். என்னுடன் தோளோடு தோளாகத் தன் பூங்கையால் என் கை பற்றி நடந்து வரும் பொழுது” என்று ஒரு தெய்வ மகளைப் பற்றி எண்ணுவது போல எண்ணினான்.
ஆனால் ஸ்ரீதரின் இந்த அற்புதமான கற்பனை உலகத்துக்குத் தன்னை உயர்த்திச் செல்ல பத்மாவால் அன்று முடியவில்லை. அவள் பல்கலைக் கழகத்தின் சிமெந்துத் தரையில் நிற்க அவன் மின்னல்களிடையே நின்று பேசினான். ”பத்மா! இனிமேல் நாம் பிரிந்திருக்கக் கூடாது. சீக்கிரமே திருமணம் செய்துகொள்ள வேண்டும். பார், எவ்வளவு சீக்கிரமாக அம்மாவிடமும் அப்பாவிடமும் எங்கள் கல்யாணத்துக்கு அனுமதி பெற்று வருகிறேன்.” என்றான். பத்மா திடுக்கிட்டாள். கனவிலே நின்று பேசுவது போல் பேசிய ஸ்ரீதரின் அவ்வார்த்தைகளிலே தோய்ந்திருந்த கனிவும் திடமும் அவன் முகத்தின் படர்ந்திருந்த சாந்தமும் அவ்வார்த்தைகளை உண்மையிலும் உண்மையாகச் சத்தியத்தின் உறையுளாக அவளுக்குக் காட்டின. அவற்றை எவ்வாறு நம்பாதிருக்க முடியும்? காதலே உருவானவன் போல் காட்சி அளித்த அவன் முகத்தை அண்ணாந்து பார்த்து நின்ற பத்மா “சீ, ஸ்ரீதர் மோசக்காரனல்லன். அவன் என்னை விட வேறு யாரையும் எண்ணியதில்லை. எண்ணப் போவதுமில்லை. நான் தான் சலனமடைந்து விட்டேன். தங்கமணி சொன்னதெல்லாம் பொய்! ஸ்ரீதரைப் போன்ற உண்மையானவன் இவ்வுலகில் இல்லை. அவன் சிவநேசர் மகனல்லன். சின்னப்பா வாத்தியார் மகன்தான். எதற்கும் எல்லாம் இன்று தெரிந்து விடுமல்லவா? ஸ்ரீதரே என் காதலன்; கமலநாதனல்லன்” என்ற எண்ணங்கள் அவள் மனத்தை ஊடுருவிச் செல்ல அவளது கள்ளமற்ற மனதின் எதிரொலி போல அவள் கண்கள் கலங்கின; கட்டுப்படுத்த முடியாத கண்ணீர்த் துளிகள் கன்னத்தின் வழியாகக் கொட்டத் தொடங்கின. உணர்ச்சிகளை மறப்பதற்காகச் சிரித்தவண்ணம் தன் கண்களைத் தனது வளைக்கைகளால் கசக்கிவிட்டாள் அவள். வளையல்கள் சப்தித்தன. கைகள் ஈரமாகின. இருந்த போதிலும் ‘ஹாண்ட் பாக்’கிலிருந்த கைக்குட்டையை எடுக்க அவள் மறந்து போனாள். சேலையில் முன்றானையை எடுத்து நாணத்தோடு கன்னங்களைத் துடைத்து நின்றாள் அவள்.
ஸ்ரீதர் “பத்மா! ஏன் அழுகிறாய்?” என்றான். அவன் மூளை குழம்பியது, “ஏதாவது துக்கமா?”
“இல்லை, ஆனந்தம்! எங்கள் திருமணம் சீக்கிரம் நடக்குமல்லவா?”
“ஆம் சீக்கிரம். வெகு சீக்கிரத்தில் நடக்கும், பத்மா”
ஸ்ரீதர் நடைசாலை நீளக் கண்ணைச் செலுத்திப் பார்த்தான். யாரையும் காணோம். இரு மாணவர்கள் புற முதுகுக் காட்டித் தூரத்தில் போய்க் கொண்டிருந்தனர். ஆகவே யாரும் தங்களைப் பார்க்கவில்லை என்ற உறுதியுடன் பத்மாவின் கண்களைத் தடவி அவளது பட்டுக் கன்னங்களைத் தன் கரங்களால் மெல்லத் தட்டினான் ஸ்ரீதர். மெல்லிய கண்ணாடி பாத்திரத்தைத் தடவுவது போல் அவள் வளவளப்பான கன்னங்களைத் தன் விரல்களால் சிறிது நேரம் தடவிக் கொண்டே நின்றான்.
பத்மா திருப்தியுடன் புன்னகை செய்தாள். கூம்பிய தாமரை மீண்டும் விரிவது போல் அவள் அன்பு மீண்டும் மலர்ந்தது.
“சரி நான் வரட்டுமா ஸ்ரீதர்? கட்டாயம் பின்னேரம் வர வேண்டும். தவறக்கூடாது” என்றாள் பத்மா.
“வருவேன். என் கடிதத்துக்கும் நீ கட்டாயம் பதிலெழுத வேண்டும். தெரிந்ததா?” என்றான் ஸ்ரீதர்.
“எழுதுகிறேன். சரி. வருகிறேன் டார்லிங்”
பத்மா அங்கிருந்து போகு முன்னர் சுற்று முற்றும் பார்த்து விட்டு அவனது சிவந்த திரண்ட கரங்களைத் தன் கைகளால் கிள்ளி விட்டு விரைந்து நடந்து சென்றாள். செஞ்சாயம் பூசிய பள பளக்கும் அவள் நகங்கள் நீளமில்லாவிட்டாலும் அவன் எதிர்பார்த்தது போல அவ்வளவு மொட்டையாக இருக்கவில்லை. ஆகவே அவளது கிள்ளு சற்று உறைக்கவே செய்தது! அவனுக்கு மிக மிக ஆனந்தம்!
ஸ்ரீதர் இரவு கண்ட கனவு பலித்து விட்டது. அவன் தன் மனதில் பின்னியிருந்த சித்திரத்தின் போலவே பத்மா அவனைக் கிள்ளிவிட்டுப் போய்விட்டாள். உண்மையில் அவள் அன்று கிள்ளாது போயிருந்தால் அது பெரிய ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும். மேலும் அவளது கண்ணீர், உணர்ச்சி நிறைந்த அவளது கண்ணீர் அவள் நேசத்தின் கின்னம். “நிச்சயம் எனது பொய்க்காக அவள் என்னை வெறுக்க மாட்டாள். மாரியம்மன் என் காதலைக் கட்டாயம் காப்பாற்றுவாள்.” என்று சொல்லிக் கொண்ட ஸ்ரீதர் தன் விரல்களைல் படிந்திருந்த அவளது கண்ணீரின் ஈரத்தை மறு கரத்தால் தொட்டுப் பார்த்துக் கொண்டான். அவன் கண்ணிலும் கண்ணீர் பிறந்தது. தனது கைகளால் துடைக்கும் பொழுது அவனது விரல்களில் பட்டிருந்த பத்மாவின் கண்ணீரும் அவன் கண்ணீரும் ஒன்று சேர்ந்தன. அதில் அவனுக்கு அளவு மீறிய திருப்தி!
அன்று பிற்பகல் ஸ்ரீதர் வழக்கம்போலத் தனது பிளிமத் காரைக் கொலீஜ் ரோட்டிற்குச் சற்றுத் தூரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி வருபவன் போல் 48ம் இலக்கத் தோட்டத்தை வந்தடைந்த போது, அங்கே பரமானந்தர் அவனுக்காக ஆவலுடன் காத்திருந்தார். இன்று அவனிடம் விஷயத்தைப் பேசித் தீர்த்து விட வேண்டுமென்பது அவர் தீர்மானம். எதற்காக அவன் பொய் சொல்ல வேண்டும்? உண்மையில் அவன் சிவநேசர் மகன் தானா? அப்படியானால் இந்தத் திருமணம் நடக்கக் கூடியதா? — இவ்வாறு அவர் யோசித்துக் கொண்டிருக்க ஸ்ரீதர் சிரித்த முகத்தோடு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும் “வா தம்பி” என்று வழக்கம் போலவே அழைத்த பரமானந்தர் உள்ளே விமலாவுக்கும் லோகாவுக்கும் ஆங்கில பாடம் சொல்லிக் கொண்டிருந்த மகளை நோக்கி “பத்மா, பத்மா” என்று சப்தமிட்டார்.
உண்மையில் பரமானந்தருக்கு ஸ்ரீதர் மீது கடுமையான கோபம் இருந்தது இருந்தாலும் கள்ளங்கபடமற்ற அவனது புன்முறுவல் பூத்த முகத்தைக் கண்டதும் அக்கோபம் எங்கேயோ மறைந்துவிட்டது. இவனா பொய் சொல்லியிருப்பான். ஏன் – அவரால் அவன் தீய எண்ணத்துடன் எதையும் செய்யக் கூடியவன் என்ற நம்ப முடியவில்லை. இருந்தாலும் இது சாதாரண விஷயமில்லவே, பேசாது விடுவதற்கு. இன்னும் தன் ஒரே மகள் பத்மாவின் முழு வாழ்க்கையையுமே பாதிக்கத்தகக பெரிய விஷயம் இது. ஆகவே எப்படியும் அதனை வெளியாகப் பேசித் தீர்த்துவிட வேண்டியதுதான். அப்படிப் பேசி, அவன் உண்மையிலேயே குற்றவாளியாகக் காணப்பட்டால், விஷயத்தைப் பெரிதுபடுத்திக் குழப்பிக் கொண்டிராமல், “போ சனியன்” என்று முடித்துவிட்டுத் தனக்கு நன்கு தெரிந்த ஓர் இடத்தில் பத்மாவுக்கு வேறு மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டியதுதான். தாயில்லாத ஒண்டி பெண். நான் திடீரெனக் கண்ணை மூடி விட்டால் என்ன செய்யும்? கல்யாணம் ஒன்று தான் அவனைக் கரை சேர்த்துப் பாதுகாப்பளிக்கவல்லது. ஆகவே அதைத் தட்டில் கழிக்கவோ, ஒத்தி போடவோ முடியாது.
பத்மா வெளியே சிரித்த முகத்துடன் வந்து ஸ்ரீதரை வரவேற்றாள். ஸ்ரீதரும் புன்னகை செய்து கொண்டே ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். அவன் நாற்காலியில் அமர்ந்ததும் பத்மா விமலாவைக் கூப்பிட்டு, அவள் கன்னத்தைத் தடவிக் காதோடு காதாக, “விமலா! ஓடிப் போய் மூலைக் கடை வேலாயுதக் கிழவனை நான் கையோடு வரச் சொன்னதாக அழைத்து வா” என்று கூறி விட்டு, தகப்பனாரைத் தனியே அழைத்து “அப்பா நீங்கள் ஒன்றும் பேச வேண்டாம். நான் சில ஏற்பாடுகள் செய்திருக்கிறேன். எல்லாவற்றையும் நான் கவனிக்கிறேன்” என்றாள். பரமானந்தரும் “சரி” என்று சொல்லி விட்டு ஒரு சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டார். விமலா வேலாயுதக் கிழவனை அழைக்கத் துள்ளிக் கொண்டு ஓடி விட்டாள். லோகாவும் அவளுக்குப் பின்னாலே குதித்துக் கொண்டு ஓடினாள்.
பரமானந்தர் ஸ்ரீதரோடு ஏதாவது பேச எண்ணி, “தம்பி, உன்னுடைய தந்தையார் சின்னப்பாவை நான் காண வேண்டும். நீ அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவரால் இங்கு வர முடியுமானால், நல்லது. அவரால் வர முடியாவிட்டால், எனக்குக் கூட உடுவில்லுக்குப் போக ஆசைதான். பத்மாவையும் அழைத்துக் கொண்டு போய்விட்டு வரலாம்” என்றார்.
ஸ்ரீதருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இருந்த போதிலும் சமாளித்துக் கொண்டு, “ஆம் அது நல்ல யோசனைதான். நாங்கள் மூவருமே இம்மாத முடிவில் ஊருக்குப் போவோம். வீட்டுக்குக் கடிதம் எழுதி எல்லா ஏற்பாடுகளும் செய்கிறேன்” என்றான்.
இதற்கிடையில் பத்மா ஸ்ரீதருக்குச் சூடான் தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். அவன் அதை மெல்லக் குடித்துக் கொண்டே பரமானந்தர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருக்க, வேலாயுதக் கிழவன் தனது தலையைத் தடவிக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். அவன் பின்னாலே விமலாவும் லோகாவும் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டு வந்தார்கள். கிழவன் அவர்களுக்கு இனாமாகக் கொடுத்த ‘அம்ப்ரெல்லா’க் காயை அவர்கள் கடித்துத் தின்று கொண்டிருந்தார்கள்.
பரமானந்தர் வீட்டுக்குள் புகுந்து வேலாயுதக் கிழவன் திடுக்கிட்டு விட்டான். தனது பழைய எஜமானர் சிவநேசரே அங்கு உட்கார்ந்திருப்பது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது அவனுக்கு. “என்ன? தம்பி ஸ்ரீதரல்லவா — சிவநேசப் பிரபுவின் மகனல்லவா இங்கிருப்பது?” என்று தன்னுள் தானே கூறிக் கொண்ட வேலாயுதம், “ஸ்ரீதர் ஐயா, நீங்கள் எப்போது வந்தீர்கள்?” என்று கூனிக் குறுகி நின்று கேட்டான். ஸ்ரீதரும் திடுக்கிட்டு விட்டான் என்றாலும் சமாளித்துக் கொண்டு “யாரது வேலாயுதமா? நீ இங்கேயா இருக்கிறாய்?” என்றான்.
“ஆம் ஐயா! தோட்டத்திலே ஒரு வெற்றிலை பாக்குக் கடை வைத்திருக்கிறேன். வீட்டிலே சிவநேசப் பிரபு சுகமாயிருக்கிறாரா?” என்றான் வேலாயுதக் கிழவன்.
இதைக் கண்ட பரமானந்தர் “என்ன ஸ்ரீதரை உனக்குத் தெரியுமா, வேலாயுதம்?” என்று கேட்டார். அவருக்கும் இது திடுக்கிடும் செய்திதான்.
“என்ன, என்னை அப்படிக் கேட்கிறீர்கள்? அவர்கள் வீட்டிலே பிழைத்தவன் யான். இவருடைய தகப்பனாரைப் பற்றித் தான் உங்களுக்குத் தெரியுமே! இலங்கையிலே பெரிய, பணக்காரர், படித்தவர், சிவநேசப் பிரபு” என்றான் வேலாயுதம் விநயமாக.
“உண்மைதானா? நீங்கள் சிவநேசர் மகனா? பார்த்தால் உங்கள் முகம் அவரைப் போல் தான் இருக்கிறது” என்றார் பரமானந்தர். வெறுப்பாலும் கோபத்தாலும் அவர் முகம் விகாரமடைந்தது. “ஆம், ஸ்ரீதர் பொய்காரன் தான். ஏமாற்றுக்காரன். மோசக்காரன்.” என்றது அவர் மனம்.
பத்மா இவற்றை எல்லாம் தொலைவில் நின்று கேட்டுக் கொண்டிருந்தாள். “ஆம், தங்கமணி வெற்றி பெற்றுவிட்டாள்.” அவள் சொன்னது முற்றிலும் உண்மை. ஸ்ரீதர் மோசக்காரன், பொய்யன், அயோக்கியன்” என்று நினைத்தவன்ணமே வேலாயுதத்தை உள்ளே வரும்படி அழைத்தாள். “வேலாயுதம்! நான் எதற்கு உன்னை அழைத்தேன், தெரியுமா? இன்று உனக்கு இங்கே எட்டு மணிக்குச் சாப்பாடு, கட்டாயம் வர வேண்டுமென்று சொல்வதற்குத் தான். இப்பொழுது வேலையிருந்தால் போய்விட்டு நேரத்துக்கு வந்துவிடு” என்றாள். வேலாயுதக் கிழவனும் அப்படியே செய்வதாகப் புறப்பட்டான். ஆனால் வெளியே போகு முன் ஸ்ரீதர் முன்னிலையில் சென்று இரு கரங்களையும் கூப்பி, அவனைக் கும்பிடக் கிழவன் மறக்கவில்லை.
ஸ்ரீதர், “சரி போய் வா” என்று கூறினானாயினும், வேலாயுதத்தின் சந்திப்பு அவனை திகைக்க வைத்திருந்தது! தலையில் ஒரு குண்டு விழுந்தது போலிருந்தது அவனுக்கு!
வேலாயுதக் கிழவன் போன பின்னர் பரமானந்தரும் பத்மாவும் ஏக காலத்தில் ஸ்ரீதர் மீது பாய்ந்தார்கள். அவர்கள் பேச்சிலே ஆத்திரமும் ஆவேசமும் தொனித்தன.
“தம்பி ஸ்ரீதர்! உன் நாடகம் நன்றாயிருக்கிறது! இது பல்கலைக் கழகத்தில் நீ நடித்த ஈடிப்பஸ் நாடகத்தை விட எவ்வளவோ மேல்! ஆனால், இந்த நாடகத்தின் அர்த்தம் தான் எனக்கு விளங்கவில்லை.” என்றார் பரமானந்தர். அவர் குரல் வழக்கத்துக்கு மாறான உச்ச ஸ்தாயியில் ஒலித்தது.
“என்ன அர்த்தம்? எல்லாம் பொய் சொல்லி எங்களை ஏமாற்றி, மெல்ல நழுவும் திட்டம் தான் அப்பா. இல்லாவிட்டால் அவர் பொய் விலாசம் கொடுக்க வேண்டிய காரணமென்ன?” பத்மா இவ்வாறு கூறும்போது கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. அவள் அடக்க முயன்ற அழுகை விம்மலாக வெடித்து வெளி வந்தது. கோபமும் ஆத்திரமும் ஏமாற்றமும் அவள் குரலை நடுங்க வைத்தன.
ஸ்ரீதருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தான் மோசக்காரனல்லன் என்பதை நிரூபித்தே தீர்வது என்று முடிவு கட்டி விட்டான் அவன்.
“பத்மா! வெறுமனே கூச்சலிட்டு அழாமல் நான் சொல்வதைக் கேட்டுவிட்டுப் பேசு! எனக்குப் பேசச் சந்தர்ப்பம் கொடுங்கள். என் நிலையை எடுத்துச் சொல்ல இடமளியுங்கள்” என்று உரத்த குரலில் சப்தமிட்டான் ஸ்ரீதர். “ஈடிப்பஸ்” நாடகத்தில் அவன் செய்த முழக்கம் பத்மாவுக்கு ஞாபகம் வந்தது. அப்பொழுது பரமானாந்தர் “இதிலென்ன தம்பி பேச இருக்கிறது? நீ சொன்னது பொய்தானே? நீ சின்னப்பா மகனல்ல. சிவநேசர் மகனென்பது மெய் தானே?” என்றார்.
ஸ்ரீதர் “அது மெய்தான். ஆனால் என்ன காரணத்துக்காக நான் பொய் சொன்னேன் என்பது தெரிந்தால் நீங்கள் என்னை ஒரு போதும் மோசக்காரனென்று கூற மாட்டீர்கள். மேலும், பத்மாவை ஏமாற்றி ஓடும் கீழ்த்தர எண்ணம் எனக்கு ஒரு போதும் ஏற்பட்டதில்லை” என்றான், அழுத்தம் திருத்தமாக.
“அப்படியானால் பொய் சொல்ல வேண்டிய காரணம்?” பத்மாவின் கேள்விப் பானம் இது.
“சொல்லுகிறேன். முதலில் இருவரும் அமைதியாக உட்காருங்கள்” என்று கூறிக் கொண்டே தன் கதையைக் கூற ஆரம்பித்தான் ஸ்ரீதர்.
“உண்மைதான். நான் சிவநேசரின் மகனே. இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரர் எங்கள் குடும்பந்தான் என்று தான் எல்லோரும் சொல்லுகிறார்கள். அத்துடன் அவர் படித்தவர். உயர்ந்த ஜாதிக்காரர். இவை எல்லாம் சேர்ந்து எங்களை மற்றவர் கண்களில் அபூர்வப் பிறவிகளாக்கிவிட்டன. அவர்கள் ஒன்றில் எங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள், அல்லது எங்கள் முன் தாழ்மை உணர்ச்சியால் பதறுகிறார்கள். இதனால் பல்கலைக் கழகத்தில் கூட என்னுடன் பழகுபவர்கள் மிகக் குறைவு. இந்த நிலையில் நான் பத்மாவைக் கண்டு அவளை என் மனைவியாக்க வேண்டுமென்று தீர்மானித்தபோது, என் முன் ஒரு பிரச்சினை எழுந்தது. சாதாரண குடும்பத்தில் பிறந்த பத்மா நான் சிவநேசரின் மகன் என்று தெரிந்ததும் மிரண்டு போய் விடுவாள் என்று அஞ்சினேன். அப்படி அவள் மிரண்டு சென்றால் எப்படி அவள் அன்பை நான் பெற முடியும்? ஆகவே பத்மா மிரளாமலிருக்க வேண்டுமென்றே நான் வாத்தியார் சின்னப்பா என்று ஒருவரைக் கற்பனை செய்து அவரது மகன் நான் என்று கூறிக் கொண்டேன். ஆனால் எவரையும் ஏமாற்றும் நோக்கம் எனக்கு இருந்ததில்லை. சமயம் வந்ததும் உண்மையைச் சொல்லி, பத்மாவை என் மனைவியாக்க வேண்டுமென்பதே என் திட்டம். ஆனால் அதற்கிடையில் வேலைக்கார வேலாயுதத்தால் இந்தக் குழப்பமேற்பட்டுவிட்டது.”
ஸ்ரீதரின் கதையை முற்றிலும் கேட்ட பரமானந்தர் “ஆனால் நீ சொல்லும் இக்கதை வெறும் கட்டுக் கதையல்ல என்று எப்படி நாம் நம்புவது? உன் திட்டம் எங்களை ஏமாற்றுவதாகவே இருந்திருக்கலாம். இப்பொழுது அகஸ்மாத்தாகப் பிடிபட்டுக் கொண்டதும் தப்பித்துக் கொள்வதற்காக நீ இக் கதையைச் சோடித்திருக்கலாம்!” என்றார்.
ஸ்ரீதர், “நான் சொல்வதற்கு என்னால் ஆதாரம் காட்ட முடியும்!” என்றான்.
“காட்டுங்களேன்,” என்றாள் பத்மா.
ஸ்ரீதர், “நாளை உங்கள் இருவருக்கும் இரண்டு கடிதங்கள் வரும். இன்று காலையில் கட்டில் சேர்த்த பதிவுத் தபால்கள். அவற்றில் நான் சொன்ன இக்கதை முழுவதும் இருக்கும். அவை நேற்றிரவு நான் எழுதிய கடிதங்கள். அக் கடிதங்கள் இன்று இப்பொழுது நடை பெற்றவைகளை எதிர்பார்த்து எழுதப்பட்ட மோசடிக் கடிதங்களாக இருக்க முடியாதல்லவா? மேலும் அவை இன்று காலை தபாலில் சேர்க்கப்பட்டன என்பதற்கு இதோ அத்தாட்சி!” என்று கூறிக் கொண்டே தனது சட்டைப் பையிலிருந்த பதிவு ரசீதுகளை எடுத்து, பரமானந்தர் கையில் கொடுத்தான்.
பரமானந்தர் அவற்றை வாங்கிக் கொண்டு மெளனமானார். பத்மா முகத்தில் மலர்ச்சி. அது திடீர்ப் புன்னகையாகிப் பின்னர் சிரிப்பாக விகசித்தது. ஸ்ரீதரும் சிரித்தான். ஆம் ஸ்ரீதர் மோசக்காரனல்லன்! பத்மா முகம் நாணியது. இடம் விட்டு இடமோடிய அவள் கன்னச் சுழியை இரசித்தான் ஸ்ரீதர்!
பரமானந்தர் உள்ளத்திலும் திருப்தி. இருவரையும் பார்த்துப் புன்னகை செய்தார். “சரி, நாளைக்குக் கடிதத்தை வாசித்துப் பார்ப்போம்” என்றார் அவர். ஆனால் கடிதத்தை வாசிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஸ்ரீதர் மோசக்காரனல்லன் என்பதை அவர் நன்குணர்ந்து கொண்டார்.
அன்று இரவு சுரேஷிடம் கொட்டாஞ்சேனைச் சம்பவங்கள் யாவற்றையும் நவ ரசங்களும் ததும்ப விவரித்த ஸ்ரீதர், “எல்லாம் மாரியம்மனின் அருள். நாளைக்கு நான் மாரியம்மன் கோவிலில் நூறு ரூபாவுக்குக் கற்பூரம் கொளுத்தப் போகிறேன்” என்றான்.
“எதற்காக? உன்னைக் காப்பாற்றியவை அக்கடிதங்கள். அவற்றை எழுதச் சொன்னது நான். ஆகவே நீ அதற்காக ஏதாவது ‘பீஸ்’ செலுத்த விரும்பினால் அதை எனக்குத் தான் செலுத்த வேண்டும்.” என்றான் சுரேஷ்.
ஸ்ரீதர் சுரேஷின் பேச்சை இலட்சியம் செய்யாமல் ஏதோ பாட்டொன்றைப் பாடிக் கொண்டிருந்தான். அப்போது கூரையில் பல்லி சொல்லுவது கேட்டது. “சுரேஷ்! பல்லி சொல்வதைக் கேட்டாயா? பல்லி என்ன சொல்கிறது?” என்றான் ஸ்ரீதர்.
“பல்லியக் கூரைச் சாஸ்திரியாராக எண்ணிக் கொண்டு நீ இக் கேள்வியைக் கேட்கிறாய். நான் அறிந்துள்ள மிருகவியலின் படி எந்தப் பல்லியும் சோதிடம் கற்றுக் கொண்டதாக எனக்குத் தெரியாது!” என்றான் சுரேஷ்.
“பல்லி சொல்வது என்ன என்பது எனக்குத் தெரியும். பத்மாவும் நானும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்வோம் என்று பல்லி சொல்லிற்று” என்றான் ஸ்ரீதர் மன மகிழ்ச்சியால் சுரேஷோடு குழந்தை போல் கொஞ்சினான் அவன் .
ஸ்ரீதரின் மனதில் இருந்த பெரிய பாரம் – எப்படித் தன் ஆள் மாறாட்ட நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்ற பிரச்சினை – இப்பொழுது தீர்ந்துவிட்டதால், அவன் மனம் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது! அவனைப் போன்ற சந்தோஷமான மனிதன் இவ்வுலகில் வேறு யாரும் அன்றிருக்கவில்லை. தங்கள் காதலென்னும் முழுமதியைப் பீடித்த இராகு நீங்கியதே என்று மகிழ்ந்து கொண்டிருந்தான் அவன்.
[தொடரும்]