பத்தி 8: இணையவெளியில் படித்தவை

சார்வாகனின் சிறுகதை “கனவுக் கதை”

எழுத்தாளர் சார்வாகனன் மறைவு!

சத்யானந்தன்

சார்வாகன் பற்றிய அறிமுகமே இல்லாதிருந்தேன். சென்றமாதம் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கட்டுரைகள் வந்த போது அவருடைய படைப்புக்களை வாசிக்கவில்லையே என்னும் வருத்தம் ஏற்பட்டது. காலச்சுவடு அவருக்கான அஞ்சலியுடன் அவரது சிறுகதையையும் பிப்ரவரி 2016 இதழில் வெளியிட்டிருக்கிறார்கள்.  அஞ்சலிகளுக்கு இது ஒரு மாதிரியாக இருக்கும். அஞ்சலி செலுத்தும் போது கூட ஒரு எழுத்தாளர் வாசிக்கப் படவில்லையென்றால் அவர் கவனம் பெறவில்லை என்னும் அஞ்சலி ஆதங்கமும் பொருளற்றுப் போகிறது இல்லையா?

இந்த இடத்தில் நாம் ஆளுமை வழி வாசிக்கும் மனப்பாங்கினால் மட்டுமே சார்வாகன் போன்ற நவீனத்துவ முன்னோடிகளைப் பற்றி அறியாமல் போகிறோம் என்பதைப் பற்றியும்  வேண்டும். ஒரு ஆளுமை கவனிக்கப்படுவது தம்மை கவனப்படுத்த முயற்சி எடுப்பது இவை எழுதப்படாத விதிகளாக ஆகி விட்டன. எழுதும் எந்த ஒரு படைப்பாளியின் தடமும் முயற்சிகளால் ஆன ஒரு சங்கிலியே. அதன் ஒரு கண்ணி தங்கமாகவும் மற்றொன்று பித்தளையாகவும் பிறிதொன்று இரும்பாகவும் இருக்கலாம். ஒரு படைப்பின் வெற்றி அதைப்படித்த பின் நம்முள் தொடரும் சிந்தனையின் சரட்டிலேயே வெளிப்படுகிறது.

தான் பார்த்த ஒன்றை, தம்மை பாதித்த ஒன்றைப் பகிர்ந்து கொள்ளும் எளிய முயற்சி தான் எழுத்து என்பது மிகவும் எளிமையான புரிதல். தனது சிந்தனை மற்றும் கற்பனையின் பொறி ஒன்றின் வழி வாசகனை ஒரு ஆழ்ந்த தரிசனத்துக்கு இட்டுச் செல்லும் இலக்கியமாக்கும் முயற்சிதான் எழுத்து. புதிய தரிசனத்துக்கு ஆழ்ந்த புரிதலுக்கு தீவிரமான சிந்தனைக்கு இட்டுச் செல்லும் ஒரு படைப்பு வாசித்து முடித்தவுடன் நம்முள் இயங்குகிறது. வாசிக்கும் போது படைப்பாளி தென்படுவதில்லை. வாசித்த பின் படைப்பும் தென்படாமல் அது முன் வைத்த தரிசனமே நம்முள் தொடர் சிந்தனையில் இயங்குகிறது.

சார்வாகனின்  சிறுகதை ‘கனவுக் கதை’க்கான இணைப்பு … இது.

இந்தக் கதை நவீனத்துவப் படைப்பின் சொல்லாடல் எப்படிப்பட்டது என்பதற்கு நல்ல உதாரணம். கதையை வாசித்த பின் ஒரு எழுத்தாளருக்குக் கூட சில நுட்பங்கள் பிடி பட்டிருக்காமல் போகலாம். சில முனைகளைக் கீழே தருகிறேன். மறுவாசிப்பில் நவீனத்துவம் எளிய நடைக்குள் நமது சமகால உலகின் வாழ்வின் விடையில்லாக் கேள்வி ஒன்றை இலக்கியமாய்த் தருகிறது என்பது புலப்படும்.

1. இந்தக் கதையில் சார்வாகன் தரும் ஒரே ஒரு உள்நுழை வாசல் இந்த இடத்தில் இருக்கிறது. கதையின் மையத்தில் அவர் மணிக்கூண்டை அறிமுகம் செய்கிறார். சிற்றூரில் இருந்து வருபவர்களுக்கு மணிக்கூண்டு என்பது நேரம் காட்டி மட்டுமல்ல என்று தெரியும். அது அரசாங்கத்தின் ஒரு பிரதிநிதியாகவே இருந்தது. சூரியனின் வழி அது வீழ்த்தும் நிழலின் வழி நேரத்தைக் காணும் மக்களுக்கு  நீங்கள் கடிகார நேரம் வழி வாழ்க்கையை நடத்துங்கள் என்று நினைவு படுத்துவது. என் ஊரான துறையூரில் மணிக்கூண்டு சங்கு இரண்டும் அருகருகே இருந்தன. காலை ஒன்பது மணி மதியம் ஒரு மணி என குறிப்பிட்ட நேரங்களில் சங்கு ஒலிக்கும். அது மின்சாரத்தால் இயங்குவது. ஜெமீந்தாரின் அரண்மனையை ஒட்டியே அது  அமைக்கப் பட்டிருந்தது. அதிகாரத்தின் அடையாளமான மணிக்கூண்டு இங்கே காலத்தைச் சுட்டுகிறது. மணிக்கூண்டு வருட மாதம் தேதி காட்டுவதில்லை. அதிலுள்ள கடிகாரம் எப்போது நின்றது என்பதே தெரியவில்லை என்று அவர் பதிவு செய்யும் இடத்தில் நாம் காலத்தை அது மானுட வாழ்வின் மீது செலுத்தும் பன்முகமான எல்லையற்ற அதிகாரத்தை வியக்கிறார்.

2. இது மையமாக நாம் மேலும் சில படிமங்கள் வழி காலமும் நாமும் இடைவிடாது இணைந்திருந்தாலும் காலத்தைப் பற்றிய புரிதலே இல்லாமல் இருக்கிறோம். பெரிய முரணில்லையா இது? நாம் காணும் மற்றொரு படிமம் மூன்று பொருட்களை எடை போடும் தராசு. அதாவது காலப் போக்கில் ஒற்றை எடை மட்டும் காட்டிய கருவி அதற்கு மேலும் எடை போடும் திறனோடு வளர்ந்து விட்டது. இல்லையா? ஆனால் அது எத்தனை பொருட்களை ஒரே சமயத்தில் எடை போடும்? எத்தனை சந்தர்ப்பங்கள் அப்படி அமைந்தாலும் அமையா விட்டாலும் அவை தற்செயலானவையே. ஆனால் அந்தக் கருவியை உருவாக்கியவன் வாங்கியவனது ஆவல் தீவிரம் மானுட வாழ்க்கையின் இடையறா விருப்பங்கள் என்னும் தனிச் சரடு. காலம் மாறாது மௌனமாய் மணிக்கூண்டு கடிகாரம் போல் ஒரே இடத்தில் உறுதியாய் அதிகாரமாய் அமர்ந்திருக்கிறது. நம் ஆவலின் விருப்பத்தின் அதன் அடிப்படையிலான முயற்சியின் சரடு மானுட வாழ்க்கையின் மையமாயிருக்கிறது. காலமும் இந்த இயக்கமும் வெட்டிக் கொள்ளும் புள்ளிகள் ஏனோ நமக்கு வியப்பாகவும் ஒரு தேடலின் துவங்கு புள்ளியாகவும் இருப்பதே இல்லை.

3. பெப்பர்மிட்டு மிட்டாய் மேற்குறிப்பிட்ட தராசு மற்றும் கடிகாரம் ஆகிய இரண்டு கருவிகள் தாண்டி மூன்றாவது படிமம். கருவியாகாத ஒன்று ஆனால் கவர்ச்சியான ஒன்று. கதையின் முத்தாய்ப்பாய் வருகிறது. ஊரில் பெரும்பான்மை மக்களுக்கு மிட்டாய் கவர்வதாக ஒரே நேரத்தில் நடக்க முடியுமா? அப்படி நடந்தால்? இதன் வழி மறுபக்கம் எதிர்க்கேள்வி எழுகிறது. மிட்டாய் போன்ற அற்ப விஷயங்கள் கவர்வதும் அது நம்மை இயக்கி வழி நடத்துவதும் காலத்தின் கோலமா? இல்லையே? ஆனால் அது இடையறா இயக்கமாக இருக்கிறதே.

காலம் நம் முன் உறுதியான அதிகாராமான பிரம்மாண்டமாய் இருக்கிறது. ஆனால் அற்பாமானவை நம் அன்றாட வாழ்க்கையை மையமாயிருந்து இயக்குகின்றன.

முந்தைய பத்தியில் சந்திராவின் ‘அறைக்குள் புகுந்த தனிமை” சிறுகதை பற்றி நான் குறிப்பிட்டது இது:

யதார்த்தத்துக்கும் மாய யதார்த்தத்துக்கும் இடைப்பட்டு ஒரு மந்திரத்தன்மையுடனான காட்சிப்படுத்துதல் இந்தக் கதையில் இருக்கிறது. கதையின் உள்ளடக்கத்துக்கு ஏற்ற உருவம் அது. இப்படி ஒரு உருவத்துடன் வேறு கதைகள் என்னென்ன வந்திருக்கின்றன என நாம் தேடுமளவு வித்தியாசமான வடிவம்.

இந்த வித்தியாசமான வடிவம் இருக்கும் படைப்புக்களை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். சார்வாகனின் இந்தக் கதை முன்னோடியாயிருக்கிறது.

 

sathyanandhan.mail@gmail.com
Sathyanandhan: http://sathyanandhan.com
sathyanandhan.mail@gmail.com