83 ‘ஜூலை’ இலங்கை இனக்கலவர நினைவுகள்…..

ஓவியர் புகழேந்தியின் 1983 பற்றிய ஓவியம்சிதம்பரம் கப்பலை கூகுளில் தேடிப்பார்த்தேன். கப்பலின் படம் வந்தது. இக்கப்பலைத்தான் இலங்கையின் 1983 இனக்கலவரத்தையடுத்து அன்று தமிழக முதல்வராகவிருந்த எம்ஜிஆர் கொழும்பில் தங்கியிருந்த அகதிகளை யாழப்பாணம் கூட்டிச்செல்வதற்காக அனுப்பியிருந்தார். இக்கப்பல் பல நினைவுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிகள் முகாமில் ஆரம்பத்திலிருந்தே தொண்டர்களாக மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் சேவையாற்றினர். தர்மகுலராஜா அவர்களும் அவர்களிலொருவர். இவர் எனக்கு ஒரு வருட ‘சீனியர்’. அவர்களில் நானுமொருவனாக இணைந்திருந்தேன். ஏற்கனவே இலங்கை அரசு வழங்கியிருந்த லங்கா ரத்னா போன்ற சரக்குக் கப்பல்களில் அகதிகள் பலரை அனுப்பி வைத்தோம்.

பின்னர் இறுதியாக சிதம்பரம் கப்பல் தமிழக அரசால் அனுப்பப்பட்டபோது , இரு வாரங்கள் கழிந்திருந்த நிலையில், நானும் யாழ்ப்பாணம் செல்வதற்கு முடிவு செய்தேன். என் வாழ்க்கையில் கட்டுமரங்களில் பயணித்திருக்கின்றேன்; படகுகளில் பயணித்திருக்கின்றேன்; ஆனால் கப்பலொன்றில் பயணித்தது அதுவே முதற் தடவை. கொழும்பிலிருந்து கிழக்கு மாகாணத்தைச் சுற்றிச் சென்ற கப்பலின் பணியாளர்களெல்லாரும் அகதிகளென்று மிகவும் அன்புடன் , பண்புடன் உதவியாகவிருந்தார்கள். கொழும்பில் கப்பலில் ஏறும்பொழுதும் வரிசையில் நின்று ஒவ்வொருவர் உடமைகளையும் வாங்கியுதவி ஏற்றினார்கள். நேற்றுத்தான் நடந்ததுபோல் இன்றும் நினைவிலிருக்கின்றது.

1977கலவரம் நடைபெற்று மக்கள் அகதிகளாக யாழ்ப்பாணம் ஹாட்லிக் கல்லூரி அகதி முகாமுக்கு வந்துகொண்டிருந்தவேளையில் நண்பர்களுடன் மாலை நேரங்களில் சென்று வரும் அகதிகளுடன் அளவளாவி அவர்கள் கதைகளைக் கேட்டு உணர்ச்சி வசப்படுவதுண்டு. ஆனால் நானே என் சொந்த மண்ணில் அகதியாக கப்பலில் மீண்டும் வருவேனென்று அச்சமயத்தில் எண்ணியிருக்கவில்லை.

அகதிகளாக முகாமில் இருந்த சமயத்தில் என்னுடன் பணி நகர அதிகார சபையில் பணிபுரிந்த சிங்கள நண்பர்கள் சிலர் விடயமறிந்து எங்களை வந்து பார்த்தார்கள். தங்களுடன் வந்து பாதுகாப்புடன் தங்கலாமென்று அழைத்தார்கள். அப்போதிருந்த சூழலில் எம்மால் அவர்களுக்கும் பிரச்சினைகள் வரலாம்; நிலவிய சூழலில் எமக்கும் பாதுகாப்பில்லை. எனவே அகதிகள் முகாமில்இருப்பதே உசிதமாகப்பட்டது. அங்கேயே தங்கி விட்டோம். அவர்களின் பெயர்களைக் கூட மறந்து விட்டேன். ஆனால் பணியாற்றிய காலத்தில் எம்முடன் நன்கு அன்புடன் பழகிய நண்பர்கள் அவர்கள். அவ்விதம் அச்சூழலில் எம்மை வந்து பார்த்ததும் அழைத்ததும் முக்கிய விடயமாக அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி தோன்றுகின்றது.

அக்கலவரம் எனக்கு நன்கு தெரிந்த சிலரைப் பலி வாங்கியிருக்கின்றது. அவர்களில் பொறியியலாளர் ராஜாராம் ஒருவர். மொறட்டுவைப் பல்கலைக்கழகக் காலகட்டத்தில் பல்கலைக்கழகத்து முன்பாக இருந்த தெருவொன்றில் சிங்கள் வீடோன்றில் வாடகைக்கு நண்பர்களுடன் வசித்தபோது எம்முடன் வசித்தவர்களிலொருவர். மலையகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஒரு காதலி இருந்தார்; ஆசிரியை என்றும், பெயர் ராஜேஸ்வரி என்றும் ராஜாராம் கூறியதாக நினைவு. நீண்ட காலமாகக் காத்திருந்து ராஜாராம் படிப்பை முடிந்து பணி புரிந்து கொண்டிருந்தபோதுதான் திருமணம் செய்தார். பல்கலைக்கழகப்படிப்பு முடிந்து பணி புரிந்துகொண்டிருந்த சமயத்தில் கலவரத்துக்குச் சில மாதங்களின் முன்பே அவரை வழியில் இ.போ.ச பஸ்ஸொன்றில் சந்தித்து உரையாடியிருந்தேன். யாருக்குமே தீங்கு செய்ய மனம் வராத அப்பாவி அவர். நன்கு சிங்களம் பேசக்கூடியவர். 83 கலவரத்தில் களுபோவிலை ஆஸ்பத்திரியில் ஏற்கனவே காயமுற்றிருந்து அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காடையர்கள் சென்று கொலை செய்ததாகப் பின்னர் அறிந்து துயருற்றேன்.

அடுத்தவர் வேல்முருகன். இவர் எங்களுக்கு ‘யூனியர்’. கண்ணாடியும், சிரித்த முகமுமாக எப்பொழுதும் காணப்படுவார். மிகவும் சாந்தமானவர். கலவரக் காலத்தில் இவர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் , பொறியியல் துறையில் இறுதியாண்டில் படித்துகொண்டிருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். வெள்ளவத்தையில் நாங்கள் அழகு என்பவரிடம் (இவர் ஒரு தமிழகத்தமிழர்) சென்று சாப்பிடுவதுண்டு. ஐ.பி.சி வீதியிலிருந்த வீடொன்றில் வசித்து வந்த அவரிடம் கொழும்பில் பலர் காலை, மதியம், மாலையென்று சென்று உணவு உண்பதுண்டு. கையிலை இல்லாவிட்டாலும் மாதா மாதம் அவருக்கு உணவுக்கான பணத்தைக் கொடுக்கலாம் என்னும் வசதியை அவர் அளித்திருந்ததால் அவருக்கு வாடிக்கையாளர்கள் பலரிருந்தனர். அங்கு அவ்வப்போது வந்து சாப்பிடுவர்களில் வேல் முருகனும் ஒருவர். அங்குதான் அவரை இறுதியாகச் சந்தித்திருந்தேன். பின்னர் 83 கலவரத்தில் இரத்மலானைப் பகுதியில் காடையர்களால் கிறித்தவ ஆலயமொன்றை நோக்கி அவர் துரத்திச் செல்லப்பட்டதாகவும், பின்னர் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன். இறுதிவரை அவர் உடல் கிடைக்கவேயில்லையென்றும் கேள்விப்பட்டேன்.

சிதம்பரம் கப்பல்

– 1983 கலவரக் காலகட்டத்தில் தமிழக முதல்வர் எம்ஜிஆர் அகதிகளை ஏற்றிச் செல்ல அனுப்பிய ‘சிதம்பரம்’ கப்பல் –

இலங்கைத்தமிழர்களைப்பொறுத்தவரையில் 1983 இனக்கலவரம் அதுவரை நிலவி வந்த அரசியற் சூழலையே மாற்றி வைத்ததெனலாம். அதுவரை உள்நாட்டுப்பிரச்சினையாகவிருந்த இலங்கைத்தமிழர் பிரச்சினையை உபகண்ட பிரச்சினையாக , பின்னர் சரவதேசப் பிரச்சினைகளிலொன்றாக ஆக்கிய இனக்கலவரம் அது. மிகவும் துயரகரமான நினைவுகள் அவை. இவற்றை எனது நாவல்களான ‘அமெரிக்கா’ மற்றும் ‘குடிவரவாளன்’ ஆகியவற்றில் பதிவு செய்திருக்கின்றேன்.

ngiri2704@rogers.com

நன்றி: ஓவியர் புகழேந்தி (1983 ஓவியம்)