என்னோடு வந்த கவிதைகள் (9)

படைப்பின் முதிர்வு மனிதன்
மனிதனின் முதிர்வு மொழி
மொழியின் முதிர்வு கவிதை- என்று நாம் விரும்புவது
உண்மையாகவோ உண்மைக்கு மிக அண்மையிலோ இருகிறது.    – வைரமுத்து    
        
- பிச்சினிக்காடு இளங்கோ கவிதையை நான் ஏன் எழுத விழைந்தேன்.? கவிதை ஏன் என்னை எழுத வைத்தது?  கவிதைக்கும் எனக்குமான உறவு எப்படி வந்தது என்பதை அசைபோடுகிறபோதுதான் சில அரிய தருணங்களை நினைவுக்குக் கொண்டுவருகிறோம். இல்லையெனில் அவை தோன்றா நட்சத்திரங்களாக,  விழிக்கா விதைகளாக ஆகியிருக்கும். ஒவ்வொரு கவிஞனும் இயற்கையைப் பார்த்திருக்கிறான். இயற்கையும் கவிஞனைப்பார்த்திருக்கிறது.; கவிஞனைப் பாதித்திருக்கிறது. அந்த விளைவின் விளைச்சல்தான் கவிதை. இந்த உணர்வு , தேடல், புரிதல், அறிதலாக விளைகிறபோது எத்தனையோ மாற்றங்களைக் கண்டிருக்கிறது; எத்தனையோ வடிவங்களைக் கொண்டிருக்கிறது. அதற்கும் எத்தனையோ பெயர்களைச்சூட்டி அழைத்துக் கொண்டிருக்கிறோம்.   கவிதை வளர்ந்துகொண்டே வருகிறது. கவிஞன் வளர்வதால்தான் கவிதையும் வளர்கிறது. “நிலையாமையே நிலைத்தது” என்ற உண்மையை குறுந்தொகையில் (143)குறிப்பட்டதுபோல் நாம் மாறியிருக்கவேண்டும். நாம் மாறியிருந்தால் நம் படைப்பும் மாறியிருக்கும். நிலையாக இருந்தால் நாம் மரமாக இருந்துவிடுவோம். மனிதனாக இருக்கவேண்டும். அதே மரத்திலிருந்து அதே காய், அதே கனி. அதே செடியிலிருந்து அதே வண்ணத்தில் அதே  பூ, அவ்வளவுதான். தேரடித்தேராக நின்றுவிடுவோம்; நிலைத்துவிடுவோம் . ‘நிலையாக’ என நான் குறிப்பிடுவது சிந்தனைத்தேக்கத்தை. அண்மையில் கவிஞர் சிற்பியின் ‘பூஜ்ஜியங்களின் சங்கிலி’ கவிதைத்தொகுப்பைப் படித்தேன் அதில் கிரேக்க முனி ஹெராக்ளிடஸ் “ நீ உன் கால்களை

 ஒரே நதியில்
இரண்டுதரம்
நனைக்க முடியாது
ஏனெனில்
இரண்டாம்முறை
நனைக்கையில்
ஓடுவது அதே நதியல்ல”
                 

அதாவது கால்களை ஈரப்பப்படுத்துவது பழைய தண்ணீரல்ல. அது புதிய தண்ணீர். நதி புத்தம்புதிதாய் ஓடிக்கொண்டேயிருக்கிறது.  நதி ஓடுவதுமட்டுமே நிலையானது. நதியின் நீர் புதிதானது. கவிஞனும் கவிதையும்  அப்படித்தான். நித்தம் புதிதாய்ப் பிறந்து புத்தம்புதிதாய் எழுதவேண்டும்.

நான் தொடக்கத்தில் எப்படி எழுதினேன்? எதை எழுதினேன்? இப்போது எதை எழுதுகிறேன்? கொஞ்சம் யோசிக்கிறபோது கவிதையும் நானும் எவ்வளவு கடந்து வந்துவிட்டோம் என்பது புரிகிறது. ரசித்து எழுதிய காலம்போய் வலித்து எழுதுகிற காலம் வந்திருக்கிறது. பார்த்ததைப் பார்த்தவாறு பரவசத்தோடு பாடினோம். வியந்து வியந்து எழுதினோம். மிகையாக எழுதினோம். இப்போது அப்படி எழுதுவதில்லை. அப்படி எழுத நாட்டமில்லை. மிகையாகக்கூற விருப்பமில்லை. அப்படிப் பாடுவதும் பிடிக்கவில்லை; பாடுகிறவர்களயும் பிடிக்கவில்லை. காட்சி சொற்களாவதற்குமுன் பதனப்படுத்தப்படுகிறது மூளையில். அடிமனம், ஆழ்மனம் அதை உள்வாங்கிக்கொள்கிறது. அது ஒரு மாற்றத்திற்கு ஆளாகி வெளிப்பாட்டு நிலைக்கு வந்துவிடுகிறது. அங்கேயே அது செதுக்கப்படுகிறது. அப்புறம்தான் அது வெளிப்படுகிறது. இப்போது வெளிப்படுத்தும் முறையில் மாற்றம் தெரிகிறது; நிகழ்கிறது. வெளிப்பாடே புதுமையாகிறது.

பாரதி சொன்னதுபோல் இப்போது ‘சொல்புதிது பொருள் புதிது’ ஆகிவிடுகிறது. பட்டியலிடமால், பார்த்ததைச்சொல்லாமல், புதுத்திசை காட்டுவதாக அமைந்தால் படிக்கப்படிக்க பயன் நூறு கிட்டும். என்னுடைய அடுத்தக் கவிதைத்தொகுதியின் பெயரே ‘அந்த நான் இல்லை நான்’ என்பதாகும். கவிதையை இப்படித்தான் எழுதவேண்டும் என்று திட்டமிட்டு எழுதுவதில்லை. கவிதையின் பாடு பொருளே அதைத்தீர்மானிக்கிறது. வடிவத்தைக்கூட அதுவே முடிவுசெய்கிறது.

சிங்கப்பூரில் இருபது ஆண்டுகளுக்குமேல் இருந்து வருகிறேன்.சிங்கப்பூரில்தான் கவிதையின் முழுபரிமாணத்தையும் அடைந்தேன். முறையாக மரபுக்கவிதை எழுதினேன். மரபென்றால் எண்சீர் விருத்தம் மட்டும் எழுதாமல் காவடிச்சிந்து, பஃறொடை வெண்பா, வெண்பா, அறுசீர் விருத்தம், ஆசிரியப்பா, கும்மிப்பாடல் ,சிந்து என்று எல்லா வடிவத்திலும் எழுதினேன். காரணம் மரபு எழுதமுடியாமல்தான் புதுக்கவிதை எழுதுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டை வைத்தார்கள். மரபு எழுதத்தெரியாத நீயெல்லாம் ஏன் கவிதை எழுதுகிறீர் என்றார்கள். கவிதைக்கு அடிப்படை இலக்கணம் அல்ல சிந்தனை.. சிந்தனை இருந்தால் எந்த இலக்கணச்சட்டத்துக்குள்ளும் வைத்துவிடலாம்.. சிந்தனை இல்லாத இலக்கணம் எதைச்சொல்லும்?சிங்கபூரில் கவிஞர் பாத்தேறல் இளமாறன் காய்கறிகளை வெண்பாவில் அடக்கி வெண்பா எழுதியிருந்தார். இலக்கணம் தெரிந்தால் அதுபோலச்செய்யலாமே தவிர கவிதை எழுதமுடியாது. அந்தக்குறையைப்போக்க மரபில் எழுதினேன். என்னுடைய முதல் தொகுப்பான ‘வியர்வைத்தாவரங்கள்’தமிழகத்தில்1989-ல் வெளியிட்டேன். 1999-ல் மீண்டும் கவிஞர் வைரமுத்து சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தினார். அதற்குப்பின் என்னுடைய அனைத்துத் தொகுப்புகளும் சிங்கப்பூரிலிருந்துதான் வெளிவந்தது. ‘அந்தநான் இல்லைநான்’ என்ற தொகுப்பு தமிழகத்திலிருந்து வெளிவர இருக்கிறது. 2008,ஏப்ரல் முதல் தேதிக்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது. எதையும் கவிதையாக்கலாம்.திட்டமிட்டும் எழுதலாம்.திட்டமிடாமலும் எழுதலாம்.சிங்கப்பூரில் ஒருநாள் தொலைக்காட்சி பார்த்துகொண்டிருந்தபோது அமைச்சர் ஒரு நிறுவனத்திற்கு பரிசு வழங்கினார். அமைச்சர் பேசும்போது குறிப்பிட்டதும் என் மனைவி அடிக்கடி குறிப்பிட்டதும் ஒன்றாக இருந்தது. உடனே அதை கவிதையாக்கிவிட்டேன். அது தான்:

தலைப்பு   “ மனைவியும் மந்திரிதான்”

   நூலிழையாய்ச் சத்தமின்றிக்
   குளியலறை குழாய்நீர்…

   நிரம்பிச் சிரித்தது
   வாளி

  திருந்தமாட்டீர்கள்…
  திட்டித்திருத்தினாள் மனைவி

  குளியல் முடிந்ததும்
  அணைக்காத விளக்கைக்கண்டு
 ஆத்திரத்தின் எல்லையில்
 அவள்

 தொலைபேசியில்
 கொஞ்சமாய்ச்சிரியுங்கள்
 கட்டணம் கட்டமுடியாமல்
 அழவேண்டியிருக்கிறது

 இதுவும் அவளுடைய
 சங்கீதத்தின் சரணம்தான்

 எரிச்சலின் விளிம்பில்
 நெளிந்துகொண்டு நான்

 தொலைக்காட்சியில்
 இந்த ஆண்டு
 அதிகலாபம் ஈட்டிய
 நிறுவன விருதை
 நிர்வாக இயக்குநரிடம்
 அமைச்சர் வழங்கினார்

குடும்பத்தோடு
பார்த்துக்கொண்டிருந்தேன்

நிறுவன லாபத்திற்கு
வருமானம் மட்டும் வழியல்ல
சிக்கனமும்
சிறந்த நிர்வாகமும் காரணம்

மந்திரி சொன்னபோது
மனைவி சொன்னவை
சுறுக்கென்றது

மனைவியும்
மந்திரிதான்

இப்படியும் ஒரு கவிதை எழுதிமுடித்தேன்.கவியரசு கண்ணதாசன் சொன்னதுபோல் கருப்படு பொருளை உருப்படவைப்பது நம்கையில்தான் உள்ளது.கவிஞன் இயங்கிக்கொண்டிருக்கவேண்டும்; கற்றுக் கொண்டிருக்கவேண்டும்: கவனித்துக்கொண்டிருக்கவேண்டும். வல்லம் வேங்கடபதியின் கவிதை பொருத்தமாக அமைகிறது:

கற்கண்டில் சர்க்கரையில் கரும்பின் சாற்றில்
  காதலுக்கு மூச்சுதரும் கனிவாய்ப் பேச்சில்
பற்பலவாம் இன்பங்கள் பிழிந்தெ டுக்கப்
  பனிக்காற்றில் மிதந்துவரும் பறவைப் பாட்டில்
நிற்காமல் நிலைக்காமல் நீல வானில்
  நீந்திசெல்லும் நிலவின்வாய் உமிழும் தேனில்
கற்கின்றேன் நற்கவிதை கற்றுக் கற்றுக்
  கறங்கஉயிர் சுழல்கின்றேன் சுழல்கின் றேனே

 வரும் 10)