நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 29

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அத்தியாயம் இருபத்தி ஒன்பது

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 29நேர்த்தியான தோற்றம் உடைய ஒரு முதிய கனவானையும், கூடவே காயம்பட்ட வலது கையை தாங்கி நிறுத்தும் ஒரு தூக்கி மாட்டியுள்ள இன்னொரு இளம் வாலிபனையும் அந்தக் கூட்டம் கூட்டி வந்தது. ஓ! என்ன ஒரு காட்சி அது! கூட்டம் கொக்கரித்துக் கொண்டு சிறிது நேரம் சிரித்துத் தீர்த்தது. அங்கே வேடிக்கையாய் சிரிக்க என்ன உள்ளதென்று எனக்குப் புரியவில்லை. ராஜாவும், பிரபுவும் என்னைப் போன்றுதான் யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணினேன். அவர்கள் முகம் வெளுத்துப் போயிருக்கும் என்று நினைத்து அவர்களை நோக்கினேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அவர்கள் பயத்தில் வெளுத்துப் போகவில்லை. சந்தேகிக்கும் நிலையை பிரபு அங்கே உண்டு பண்ணவேயில்லை. பதிலாக வாயில் வெள்ளை நுரை தள்ளியவாறு கூ கூ என்று இன்னும் அதிகமாக சத்தமிட்டார்.

புதிதாக வந்த மனிதர்களை ஏதோ நயவஞ்சகர்கள் இந்த உலகத்தில் மோசடி செய்ய வந்தது தனது இதயத்தை வேதனைப் படுத்துவது போல ராஜாவோ மிகவும் சோகமாக அவர்களை நோக்கிக் கொண்டிருந்தார். ஓ! ரசிக்கும்படியான நடிக்கும் தொழிலை அவர் அங்கே செய்தார், தெரிந்து கொள்ளுங்கள்! ஊரில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தாங்கள் ராஜாவின் பக்கம் என்பதைக் காட்டிக் கொள்வது போல அவர் பக்கம் கூடி நின்றார்கள்.

புதிதாக வந்த முதிய கனவானோ குழப்ப மிகுதியால் மண்டை உடைந்துவிடும் நிலையில் இருந்தார். இறுதியாக அவர் பேசத் தொடங்கியதும், அவரின் பேச்சில் ஆங்கிலேயர்களின் உச்சரிப்பை என்னால் உணர முடிந்தது. ராஜாவும் ஆங்கிலேயர்களின் உச்சரிப்பை அப்படியே பின்பற்றி நடித்து வந்தாலும், இந்த புதிய மனிதனின் உச்சரிப்பு ராஜா பேசுவது போன்று இல்லை. அந்த முதிய கனவான் என்ன வார்த்தைகள் சொன்னார் என்பது என் நினைவில் இல்லை. அவர் போன்று நான் பேசிக் காட்டவும் முடியாது. ஆனால் அவர் கூட்டத்தை நோக்கி பின்வருமாறு கூறினார்:

“நல்லது. இது எங்களுக்கு ஒரு எதிர்பாராத திருப்பம். நான் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ளத் தயாராயில்லை என்பதை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். எனது சகோதரனுக்கும் எனக்கும் வரும் வழியில் நிறைய கஷ்டங்கள் ஏற்பட்டது. அவன் தனது கரத்தை முறித்துக் கொண்டான். அத்துடன் நேற்றிரவு நதியின் மேல்புறத்தில் எங்கள் பெட்டிகள் தவறுதலாக அங்கே இறக்கிவைக்கப்பட்டுவிட்டன. நான் பீட்டர் வில்க்ஸ்ஸின் சகோதரன் ஹார்வி மற்றும் இது பீட்டரின் இன்னொரு சகோதரன் வில்லியம். அவனால் பேசவோ, கேட்கவோ முடியாது. அத்துடன் பெரிதாக சைகைகள் செய்து காட்டவும் முடியாது. அதுவும் இப்போதிருக்கும் ஒரு கையினால் எதுவும் அவனால் செய்ய முடியாது. நாங்கள் யார் என்பது நாங்கள் கூறியது போல நாங்கள்தான். இன்னும் ஓரிரு நாளில் தவறுதலாக இறக்கிவைக்கப்பட்ட எங்களின் உடைமைகள் எங்கள் கைக்கு வந்து சேர்ந்து விடும். அதிலிருக்கும் சாட்சிகளை வைத்து எங்களை நான் நிரூபிக்கிறேன். அதுவரை நான் எதுவும் மேற்கொண்டு பேச விரும்பவில்லை. நாங்கள் தாங்கும் விடுதிக்குச் சென்று அங்கே காத்திருப்போம்.”

பின்னர் அவரும், அவருடன் வந்த ஊமையும் விடுதிக்குக் கிளம்பிச் சென்றார்கள். ராஜா சமாளித்துக் கொண்டு சிரித்தபடியே கூறினார்:

“கையை முறித்துக் கொண்டானா? இருக்கலாம். இல்லையா? ரொம்ப நல்லதாகப் போயிற்று. இன்னும் கையெழுத்து போடப்பழகிக் கொள்ளாத ஏமாற்றுப் பேர்வழி அப்படிதான் நடிப்பான். உடைமைகள் தொலைந்து விட்டதாம். அடுத்த வலிமையான கதை! இந்த சூழலுக்கேற்ற தனித்துவமான ஒரு சாக்கு.”

அவர் மீண்டும் சிரித்தார். அவருடன் சேர்ந்து ஒரு மூன்று அல்லது நான்கு மனிதர்கள், ஒரு அரை டஜன் கூட இருக்கலாம், அவர்களைத் தவிர மற்ற அனைவரும் சிரித்தார்கள். சிரிக்காத மனிதர்களில் ஒருவர் அந்த டாக்டர். உண்மையான கம்பளித் துணியால் செய்யப்பட்ட ஒரு கம்பளிப் பையை சுமந்து கொண்டு நின்றிருந்த புத்திசாலித்தனமாகத் தென்பட்ட இன்னொரு கனவானும் சிரிக்கவில்லை. அவரும் அந்த நீராவிப் படகிலிருந்துதான் இறங்கி வந்திருந்தார். அத்துடன் யாருக்கும் கேட்காதவாறு குறைவான குரலில் டாக்டருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அவ்வப்போது ராஜாவை பார்த்துக் கொண்டே தலையை அசைத்தவாறு அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்தான் லூயிவில் சென்று திரும்பியிருக்கும் வக்கீல் லெவி பெல். அங்கே வந்த மனிதர்களில் பருத்து, உயர்த்து முரட்டுத்தனமாகத் தென்பட்ட இன்னொரு மனிதனும் சிரிக்காமல் அங்கே நின்றிருந்தான். முன்பு பேசிய முதிய கனவானையும் அவன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். இப்போது ராஜா பேசுவதையும் கேட்டுக் கொண்டிருந்தான். ராஜா பேசி முடித்ததும் அவன் கேட்டான்:

“ஹேய்! இங்கே பார். நீ ஹார்வி வில்க்ஸ் என்றால் எப்போது நீ இந்த ஊருக்கு வந்தாய்?”

“இறுதிச் சடங்கிற்கு முதல் நாள், தோழரே!” ராஜா கூறினார்.

“ஆனால் எந்த நேரத்தில்?”

“மாலை நேரம்- சூரியன் மறைவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் முன்பு.”

“எப்படி வந்தாய்?”

“சின்சினாட்டியிலிருந்து வந்த சூசன் பவல் என்ற நீராவிப் படகில் நான் வந்தேன்.”

“நல்லது. பிறகு காலையில் எப்படி அந்த நீராவிப் படகு இருக்கும் முனைக்குப் போனாய்? சிறு படகு மூலமா?”

:நான் காலையில் அந்த முனைக்குப் போகவே இல்லை.”

“நீ பொய் சொல்கிறாய்.”

கூட்டம் இடையில் குறுக்கிட்டது. ஒரு முதிய மத போதகரிடம் இவ்வாறு அவமரியாதையாகப் பேச வேண்டாம் என்று அவனிடம் கெஞ்சினார்கள்.

“போதகர், உன் தலை! அவன் ஒரு பொய்யன். ஒரு மோசடிப் பேர்வழி. இவன் அந்த முனை வரை காலையில் அங்கே சுற்றித் திரிந்துகொண்டிருந்தான். நான் வசிப்பது அங்கேதான், இல்லையா? நல்லது. நான் அங்கே இருந்தேன். இவனும் அங்குதான் இருந்தான். இவனை நான் அங்கே கண்டேன். ஒரு சிறு படகில் டிம் காலின்ஸ் மற்றும் ஒரு சிறுவனுடன் இவன் அங்கே நதியில் சென்று கொண்டிருந்தான்.”

“அந்தச் சிறுவனை நீ மீண்டும் பார்க்க நேர்ந்தால் உன்னால் அவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா, ஹைன்ஸ்?” அந்த டாக்டர் உடனே கூறினார்.

“என்னால் முடியும் என்றுதான் நான் நினைக்கிறன். ஆனால் உறுதியாகக் கூறமுடியாது. ஏன் — அதோ இப்போது அங்கே நிற்கிறானே. என்னால் சுலபமாக அவனை அடையாளம் காண முடிகிறதே.”

அவன் என்னைக் குறிவைத்துக் காட்டினான். டாக்டர் கூறினார்.

“அண்டை வீட்டு நண்பர்களே! புதிதாக வந்த ஜோடிகள் மோசடிப் பேர்வழிகளா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த இரண்டு ஆட்கள் மட்டும் கயவர்கள் இல்லையென்றால், நான் ஒரு கோமாளிதான். இதை இன்னும் கொஞ்சம் தெளிவாக ஆராய்ந்து கண்டுபிடிக்காதவரை இவர்கள் இங்கிருந்து தப்பித்துபி போகாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டியது நம் கடமை என்று நான் நினைக்கிறேன். எல்லாரும் வாருங்கள். ஹைன்ஸ், நீயும்தான், அனைவரும்தான். என்னுடன் வாருங்கள். அங்குள்ள சத்திரத்திற்கு இவர்களை அழைத்துச் சென்று புதிதாக வந்துள்ள கனவான்களுடன் நேருக்கு நேர் நிற்க வைப்போம். நம்முடைய ஆராய்ச்சி முடிவில் கண்டிப்பாக ஏதேனும் சரியாகக் கண்டுபிடிப்போம் என்று எனக்குத் தோன்றுகிறது.”

எனது கையை டாக்டர் இறுக்கிப் பிடித்திருந்தார். அவர் மிகவும் நல்லவர் வல்லவர், எல்லாமும்தான். ஆனாலும் என் கையை விடாமல் இறுக்கிப் பிடித்திருந்தது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

ராஜாவின் பக்கம் நிற்கும் ஒருசில நண்பர்களைத் தவிர மற்ற அனைவரும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தவாறு நடந்தனர். நாங்கள் அனைவரும் அங்குள்ள சத்திரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்த போது சூரியன் கீழ்வானில் மறைய ஆரம்பித்துக் கொண்டிருந்தான். எனது கையை டாக்டர் இறுக்கிப் பிடித்திருந்தார். அவர் மிகவும் நல்லவர் வல்லவர், எல்லாமும்தான். ஆனாலும் என் கையை விடாமல் இறுக்கிப் பிடித்திருந்தது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

அந்த சத்திரத்தின் மிகப்பெரிய அறை ஒன்றில் நாங்கள் அனைவரும் நுழைந்தோம். அங்கே சில மெழுகுதிரிகளை ஏற்றிவைத்த பின் புது கனவான்களை அங்கே கூட்டி வந்தார்கள். முதலில் டாக்டர் சொன்னார்:

“இந்த இரண்டு பேர்வழிகளிடம் நான் கடுமையாக நடந்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் அவர்கள் மோசடிக்காரர்களாக இருக்குமோ என்று நான் சந்தேகிக்கிறேன். அத்துடன் அவர்களின் கூட்டாளிகள் கூட இங்கே எங்காவது மறைந்திருக்கலாம். அது நமக்குத் தெரியாது. அப்படி அவர்களுக்கு உதவியாளர்கள் இருந்தால் அவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து, பீட்டர் வில்க்ஸ் சேர்த்து வைத்த தங்கக்காசுகள் நிறைந்த பையை களவாடிக் கொண்டு ஓடிவிடலாம். அது நடக்க வாய்ப்புள்ளது. இந்த மனிதர்கள் கயவர்கள் இல்லையென்றால், அந்தப் பணப் பையை இங்கே கொண்டு வந்து நம்மிடம் கொடுத்தால், இந்த பிரச்னை சுமுகமாக முடியும்வரை அதை நாம் பத்திரமாக வைத்திருந்து யார் உண்மையான சகோதரர்கள் என்று அறிந்தவுடன் அவர்களுக்குக் கொடுத்து விடலாம். நான் கூறுவது சரிதானே?”

அனைவரும் இந்த யோசனைக்கு சம்மதித்தார்கள். எங்கள் நிலை இன்னும் கடினமாக மாறிவிட்டது என்று நான் நினைக்க ஆரம்பித்தேன். ஆனாலும் ராஜா மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார். பின்னர் இவ்வாறு கூறினார்:

“கனவான்களே! அந்தப் பணமூட்டை அங்கே இருக்க வேண்டுமென்பதே என் விருப்பம். ஏனெனில் இந்த பரிதாபமான வேளையில் திறந்த மனதுடன் உண்மையாக நான் இருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய விரும்பவில்லை துரதிஷ்டவசமாக, அந்தப் பணம் அங்கே இல்லாமல் போய்விட்டது. நீங்களே யாரையேனும் அனுப்பி வீட்டில் நன்கு சோதித்துக் கொள்ளலாம்.”

“பின் வேறெங்கு அது உள்ளது?”

“நல்லது. அவள் பெயரில் முதலீடு செய்யச்சொல்லி அந்தப் பணத்தை எனது அண்ணன் மகள் என்னிடம் கொடுத்த பிறகு, எனது படுக்கையின் கீழ் உள்ள வைக்கோல் விரிப்பில் மறைத்து வைத்தேன். இன்னும் சில நாட்களே நாங்கள் இங்கே தங்கவிருப்பதால், அதை நான் வங்கியில் செலுத்த விரும்பவில்லை. படுக்கையின் கீழ் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று நான் எண்ணினேன். அங்கு வேலை செய்த நீக்ரோ பணியாளர்களைப் பற்றி அதிகம் தெரியாது. அவர்கள் இங்கிலாந்தில் உள்ள நீக்ரோக்கள் போன்றே நேர்மையானவர்கள் என்று நினைத்தேன். நல்லது. அவர்களில் அடுத்த நாள் காலை நான் கீழே சென்ற சமயம் பார்த்து அவர்களில் ஒரு நீக்ரோ அதைத் திருடிவிட்டான். அவர்களை வணிகரிடம் விற்றபோது அந்தப் பணம் காணாமல் போனது எனக்குத் தெரிய வரவில்லை. லட்டு போல் அதை எடுத்துக் கொண்டு அவர்கள் சென்று விட்டார்கள். இது பற்றி எனது பணியாள் உங்களுக்குத் தெளிவாகச் சொல்லக் கூடும், அன்பர்களே!”

டாக்டருடன் இணைந்து வேறு சிலரும் உச்சுக் கொட்டினார்கள். அவர்கள் ராஜாவை நம்பிட்டது எனக்குத் தெரிந்தது. அந்த நீக்ரோ திருடியதை நீ பார்த்தாயா என்று ஒரு மனிதன் என்னிடம் கேட்டான். இல்லை என்று நான் கூறினேன். ஆனால் யாருக்கும் தெரியாமல் அவர்கள் அறைக்குள்ளிருந்து அவசரமாகப் புறப்பட்டுப் போனதைக் கண்டேன் என்று கூறினேன். எனது முதலாளியை எழுப்பி கோபமூட்டி அவரிடம் திட்டு வாங்காமலிருக்க அவ்வாறு அவர்கள் செல்கிறார்கள் என்று நான் நினைத்துக் கொண்டதால் அது வித்தியாசமாக எனக்குத் தென்படவில்லை என்று நான் கூறினேன். இந்த விஷயம் மட்டும் என்னிடம் அவர்கள் கேட்டார்கள்.

பிறகு அந்த டாக்டர் என் பக்கமாகத் திரும்பி, “நீயும் ஆங்கிலேயன்தானா?” என்று கேட்டார். நானும் ஆங்கிலேயன்தான் என்று கூறியதும் அவர்கள் அனைவரும் கொல்லென்று சிரித்தார்கள். பின் டாக்டர் “மடத்தனம்” என்று கூறினார்.

நல்லது. இதே போன்று பொதுப்படையான சில குறுக்குக் கேள்விகளை என்னிடம் கேட்டார்கள். மணிக்கணக்காக நாங்கள் அங்கேயே இருந்தோம். இரவு உணவைப் பற்றி யாரும் பேசவே இல்லை. ஏன், சிந்திக்கக் கூட இல்லை. விசாரணை போய்கொண்டே இருந்தது. இவ்வாறான குழப்பமான ஒரு கூட்டம் நீங்கள் எங்கேயும் கொண்டிருக்கவே முடியாது.

ராஜாவை அவரின் கதையைத் திரும்பக் கூறச் சொல்லி அவர்கள் கேட்டார்கள். அந்த புதுக் கனவான்களையும் அதே போல் அவரின் வாழ்க்கை பற்றிக் கூறச் சொன்னார்கள். அந்தப் புது மனிதன் உண்மை சொல்லுவதும், ராஜா புளுகு மூட்டை அவிழ்த்து விடுவதும் மடையன் அல்லாத ஒரு அறிவுள்ள மனிதனுக்குக் கண்டிப்பாக இனம் காண முடிந்திருக்கும். விரைவிலேயே எனக்குத் தெரிந்ததைக் கூறும்படி என்னைக் கேட்டார்கள். ராஜா ஓரக்கண்ணால் என்னை ஒரு நோட்டமிட்டார். எனவே எனக்குத் தெரிந்த எனக்கு உண்மை என்று பட்ட சில விஷயங்களை மட்டுமே நான் கூறினேன்.

ஷெபீல்ட் ஊர் பற்றியும் அங்கு எங்களின் வாழக்கை முறை பற்றியும், ஆங்கிலேயர்களான வில்க்ஸ் குடும்பத்தார் பற்றியும் என இது போன்ற பல விஷயங்களை நான் பேச ஆரம்பித்தேன். நான் பேச ஆரம்பித்து சிறிது நேரத்திற்குள்ளாகவே, டாக்டர் சத்தமிட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். பிறகு அந்த வக்கீல் லெவி பெல் இவ்வாறு கூறினார்:

“உக்காரு, சிறுவனே! நான் மட்டும் உன்னிடத்தில் இருந்திருந்தால், இவ்வாறு என்னை கஷ்டப்படுத்திக் கொள்ள மாட்டேன். உனக்கு பொய் அதிகம் சொல்லிப் பழக்கம் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் அது உனக்கு லகுவாக வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. ஆயினும் ரொம்ப மோசமில்லை. கொஞ்சம் பயிற்சி உனக்குத் தேவை.”

அது புகழ்ச்சியா அல்லது நக்கலா என்று தெரிந்து கொள்ள எனக்கு அக்கறையில்லை. அந்த வலையிலிருந்து அவர்கள் என்னை விடுவித்ததே எனக்கு பெரும் ஆனந்தம்.

டாக்டர் ஏதோ சொல்ல ஆரம்பித்தார். பிறகு திரும்பி வக்கீலைப் பார்த்துகே கூறினார்:

“நீ மட்டும் முன்னமே இந்த ஊரில் இருந்திருந்தால், லெவி பெல் ……..” ராஜா அவரைக் குறுக்கிட்டு தனது கரத்தை வக்கீலின் பக்கம் நீட்டியபடியே கூறினார் “ஏன், நீங்கள்தான் எனது சகோதரனின் நீண்ட நாள் நண்பனா? அடிக்கடி நாங்கள் கடிதங்களில் குறிப்பிட்டுக் கொள்ளும் நபர் நீங்கள்தானா?”

அவரும் வக்கீலும் கைகுலுக்கிக் கொண்டார்கள். வக்கீல் கொஞ்சம் திருப்தியடைந்தவராய் காணப்பட்டு மெல்லிய புன்னகை பூத்தார். அவர்களுக்குள் சிறிது நேரம் பேசிக் கொண்டார்கள். பின்னர் ஒரு பக்கமாக நகர்ந்து டாக்டருடன் கிசுகிசுத்த குரலில் பேசினார். இறுதியாக அந்த வக்கீல் பேச ஆரம்பித்தார்.

“அது போதும். நான் அப்படியே எடுத்துக் கொள்கிறேன். கொஞ்சம் தாள்களை எடுத்து வரச் சொல்கிறேன் அவர்களும் இதை புரிந்து கொள்வார்கள்.”

எனவே, அவர்கள் சில தாள்களும் பேனாவும் எடுத்து வந்தார்கள். ராஜா அமர்ந்து தன் தலையை ஒரு பக்கமாகத் திருப்பி வைத்துக் கொண்டு, நாக்கைக் கடித்துக் கொண்டே அந்தத் தாளில் ஏதோ கிறுக்கினார்.

பிறகு பிரபுவிடம் பேனாவைக் கொடுத்தார்கள். முதல் முறையாக பிரபு கொஞ்சம் வெளிறிக் காணப்பட்டார்.ஆனாலும் பேனாவைக் கையிலெடுத்து ஏதோ எழுதினார். பின்னர் அந்த வக்கீல் புது ஜோடி சகோதரர்கள் பக்கம் திரும்பிக் கூறினார்:

“தயவு கூர்ந்து, நீங்களும் உங்கள் சகோதரனும் ஒரு வாக்கியம் எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுங்கள்.” என்றார்.

அந்த முதிய கனவானும் ஏதோ அதில் எழுதினார். ஆனால் அதை யாராலும் படிக்க இயலவில்லை. வியப்படைந்தவராகக் காணப்பட்ட வக்கீல் கூறினார்: “நல்லது. நான் தொலைந்தேன்!”

அவரது மேல் சட்டைப் பையிலிருந்து சில பழைய கடிதங்களை அவர் வெளியே எடுத்தார். அவற்றை சோதித்துப் பார்த்து விட்டு பின் புதிதாய் வந்த முதியவரின் கையெழுத்தையும் அதனுடன் சேர்த்து வைத்து சோதித்தார். மீண்டும் ஒரு முறை அவர் ஏதோ கூற வரும் முன் கையிலிருந்த கடிதங்களை ஒருமுறை பார்த்தார்.

“இந்தப் பழைய கடிதங்கள் எல்லாம் ஹார்வி வில்க்ஸ் எழுதி அனுப்பியவை. இதோ! இங்கே இரண்டு கையெழுத்து மாதிரிகள். இந்த இரண்டுமே பழைய கடிதங்களுக்கு ஒத்துப் போகவில்லை என்பது காண்பவர் எல்லாருக்குமே தெரியும்.” ராஜா, புது முதியவர் இருவரையும் நோக்கிச் சுட்டிக் காட்டியபடியே வக்கீல் கூறினார்.

இருவருமே வக்கீல் தங்களை ஏமாற்றியதை நினைத்து இடிந்து போய் காணப்பட்டார்கள்.

“இதோ! இது புதிதாய் வந்த முதிய அன்பர் எழுதியது. இதைப் பார்த்த யாருமே இவர் அந்தக் கடிதங்களை எழுதியிருக்க மாட்டார் என்று கூறிவிடுவார்கள். சொல்லப்போனால், அவர் இந்தத் தாள்களில் எழுதியது கையெழுத்தே அல்ல, கிறுக்கல்கள் என்றுதான் கூற வேண்டும். இப்போது, சில கடிதங்கள் …………..”

புதிதாய் வந்த முதியவர் இடைமறித்தார்

“என்னைக் கொஞ்சம் விளக்கம் கூற அனுமதித்தால் நல்லது. என்னுடைய கையெழுத்தை எனது சகோதரனைத் தவிர யாரும் இங்கே புரிந்து கொள்ள முடியாது. எனவே, அவன் எனக்காகக் கடிதங்களை எழுதுவது வழக்கம். நீங்கள் வைத்திருக்கும் பழைய கடிதங்களில் இருப்பது அவனின் கையெழுத்துதான். என்னுடையது அல்ல.”

“அப்படியானால் நல்லது!” வக்கீல் கூறினார் “இது ஒரு கடினமான சூழ்நிலை. என்னிடம் வில்லியம் எழுதிய சில கடிதங்களும் உள்ளது. எனவே அவரை நீங்கள் ஒன்றிரண்டு வாக்கியங்கள் எழுதிக் காட்டச்சொன்னால், நாம் ஒரு முடிவுக்கு …………”

“அவனின் இடது கரத்தைப் பயன்படுத்தி அவனால் எழுத முடியாது.” அந்த முதிய கனவான் கூறினார் “அவனின் வலது கரத்தை அவன் பயன்படுத்த முடியுமானால், எனக்காக அவன் எழுதிய கடிதங்களையும், அவனுக்காக அவன் எழுதியதையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இரண்டையும் பாருங்கள். ஒரே கையெழுத்தால்தான் அந்தக் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.”

வக்கீலும் அவ்வாறே பார்த்தார். பின் கூறினார்:

“நீங்கள் சொல்வது சரி என்று நான் நம்புகிறேன். இல்லையானாலும், இரண்டு கடிதங்களில் அதிக அளவு ஒற்றுமை உள்ளது என்பதை நான் முன்னம் கவனித்ததை விட இப்போது நன்றாகப் பார்க்க முடிகிறது. ரொம்ப நல்லது. நாம் விடை கண்டுபிடிக்கக் கூடிய சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்று நினைத்தேன். ஆனால் அப்படி அல்ல போல் தெரிகிறது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். இந்த இந்த இருவரும் உண்மையான வில்க்ஸ் சகோதரர்கள் இல்லை” ராஜாவையும், பிரபுவையும் நோக்கித் தன் தலையை அசைத்தவாறே அவர் கூறினார்.

அதன் பின் என்ன நடந்ததென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இத்தனை ஆனபிறகும் பிடிவாத குணம் கொண்ட ராஜா விட்டுக்கொடுக்கவே இல்லை. கண்டிப்பாக அவர் விட்டுக் கொடுக்கவே மாட்டார். இது ஒரு மோசமான விசாரணை முறை என்று எதிர்த்தார். வில்லியம் என்று வந்திருக்கும் புது மனிதன்தான் உலகிலேயே மோசமான பசப்புக்காரன் என்றும் அவன் எழுதுவது கூடக் கஷ்டம் என்றும் ராஜா கூறினார். தான் தாளில் எழுதும்போது வில்லியம் ஒரு வேடிக்கை விளையாட்டு நடத்திச் சிரித்துக் கொண்டிருந்தான் என்று குற்றம் சாட்டினார். ராஜா மிகவும் ஆவேசமாக ஏதேதோ உளற ஆரம்பித்து அனைவரையும் குழப்பிக் கொண்டிருந்தார். கடைசியாக அவர் சொல்வதை அவரே நம்ப ஆரம்பித்தும் விட்டார் போலத் தோன்றியது. ஆனால் வெகு விரைவில், புதிய கனவான் குறுக்கிட்டுக் கூறினார்.

“எனக்கு இன்னொரு யோசனை தோன்றுகிறது. இங்கே உள்ள யாராவது எனது சகோதரன் பீட்டர் உடலை இறுதிச் சடங்கிற்கு முன் தயார்படுத்தினீர்களா? யாரெல்லாம் அவனை நல்லடக்கம் செய்ய உதவினீர்கள்?”

“ஆம்” யாரோ சொன்னார்கள் “அப் டர்னர் உடன் சேர்ந்து நானும் செய்தேன். நாங்கள் இருவருமே இங்கே இருக்கிறோம்.”

பின்னர் அந்த முதியவர் ராஜாவின் பக்கம் திரும்பிக் கேட்டார்: “எனது சகோதரன் பீட்டர் நெஞ்சின் மேல் என்ன படம் பச்சை குத்தப்பட்டிருந்தது என்று ஒருவேளை இந்தக் கனவானால் கூற முடியுமா?”

இந்தக் கேள்வி ராஜாவை கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும், நதி நீரால் அரிக்கப்பட்டிருந்த கரை பொத்தென்று சரிந்து விழுவதைப் போல வீழ்வதற்கு முன்பாகவே அவர் விரைவாகவே தன்னைச் சுதாரித்துக் கொண்டார் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். உண்மையில் உங்கள் முகத்தில் கும்மென்று ஒரு குத்து விட்டு வீழ்த்தும் அளவு திகைப்பூட்டும் திடீர் கேள்விதான் அது. அவர் நெஞ்சில் பச்சை குத்தப்பட்ட படம் என்னவென்று ராஜா எப்படிச் சொல்லுவார்?

ராஜாவின் முகம் ஒரு கணம் வெளிறியதை அவராலேயே தடுக்க முடியவில்லை. அறை முழுதும் நிசப்தம் நிலவியது. அனைவரும் மிகவும் ஆவலுடன் முன்பக்கம் சாய்ந்தவாறே, அவரின் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். இதோ! அவர் தன் தோல்வியை ஒப்புக் கொள்ளப் போகிறார் என்று நான் நினைத்தேன். இனிமேலும் இந்த மோசடியை இழுக்க இயலாது அல்லவா! அனைவரும் களைத்துப் போய் அந்த அறையை விட்டு அகலும்வரை அவர் வாய் திறக்காது அமைதியாகவே இருந்து கழுத்தை அறுக்கக் போகிறார் என்று நான் அனுமானித்தேன். அனைவரும் சென்ற பின் ராஜாவும், பிரபுவும் தப்பி ஓடிவிடச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று கூட ராஜா யோசித்திருப்பார் என்று நினைத்தேன். அப்படியே அமர்ந்திருந்த ராஜா சிறிது நேரத்தில் புன்னகை பூத்தவாறே உரைத்தார்:

“ஹ்ம்ம்ப்! அது கொஞ்சம் கடினமான கேள்விதான். இல்லையா? ஆம் சார். அவர் நெஞ்சில் என்ன பச்சை குத்தியிருந்தது என்று நான் கூறுகிறேன். அது ஒரு சன்னமான நீல நிற அம்புக்குறி. அதுதான் அங்கே இருந்தது. அதைக் கொஞ்சம் உற்று கவனிக்காவிட்டால், உங்களால் அதைப் பார்க்கவே முடியாது. இப்போது நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஹ்ம்ம்?”

ஐயோ! இவ்வாறு ஒரு அசட்டுத் தைரியம் கொண்ட ஒருவனை நான் பார்த்ததே இல்லை.

கடைசியாக ராஜாவை வலையில் வீழ்த்தியது போன்ற பெருமிதத்தில் புதிய மனிதனின் கண்கள் விளக்கேற்றியது போல ஒளிர்ந்தன, அப் டர்னர் மற்றும் அவரின் கூட்டாளி இருவர் பக்கமும் திரும்பி அவர் கேட்டார்:

.”இப்போது கூறுங்கள். அவர் கூறியது நீங்கள் கேட்டீர்கள் அல்லவா? அப்படி ஒரு பச்சை குத்தப்பட்ட குறி பீட்டர் வில்க்ஸ்ஸின் மார்பில் காணப்பட்டதா?”

“அப்படி ஒரு குறியை நாங்கள் இருவருமே காணவில்லை” இருவரும் ஒன்றாகச் சேர்ந்து கூறினார்கள்

“நன்று!” அந்த முதிய கனவான் கூறினார் “நீங்கள் அங்கே பார்த்தது பி, பீ மற்றும் வ (அவர் சிறுவயதில் எழுதப் பயன்படுத்தி பின் நிறுத்திக் கொண்ட எழுத்துக்கள்) போன்ற மங்கிய எழுத்துகளுக்கிடையே சிறு கோடுகள் போட்டிருக்கும் குறிதான். அப்படித்தான் அவர் தாளிலும் எழுதுவார். இப்போது சொல்லுங்கள். இதுதானே நீங்கள் அங்கே பார்த்தது?”

“இல்லை. நாங்கள் பார்க்கவில்லை. எந்தக் குறியும் நாங்கள் அங்கு பார்க்கவே இல்லை” இருவரும் ஒன்றாக இணைந்து கூறினார்கள்.

இது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. மக்கள் கத்த ஆரம்பித்தார்கள்.

“இவர்கள் அனைவருமே கயவர்கள். அவர்களைப் பிடியுங்கள். பிடித்து நதியில் மூழ்கடித்துக் கொல்லுங்கள். அவர்களை இரும்புக் கம்பிகளில் ஏற்றி ஊர் முழுக்கக் கூட்டிச் செல்வோம்.”

அனைவரும் ஒன்று கூடி ஒரே சமயத்தில் ஊளையிட்டவாறே கத்தி கலாட்டாச் செய்தார்கள். வடக்கில் வசிக்கும் சிவப்பிந்தியர்களின் கும்மாளப் பாடலின் கூச்சல் போன்றே அவர்கள் ஊளையிட்ட ஓசையும் கேட்டது. அந்தக் கணத்தில் வக்கீல் மேசையின் மீது ஏறி சத்தமிட்டுக் கூறினார்:

“அன்பர்களே! கனவான்களே! ஒரு நொடி நான் சொல்வதைக் கேளுங்கள். தயை கூர்ந்து, ஒரு நொடி மட்டும்தான். வேறு எந்த வழியிலும் இந்தச் சிக்கலை நாம் தீர்க்க முடியாது. ஒரே ஒரு வழி மட்டுமே மிச்சம் இருக்கிறது. நாம் அனைவரும் சென்று சுடுகாட்டில் புதைக்கப் பட்டுள்ள சவப் பெட்டியை தோண்டிப் பார்ப்போம்.”

அவர் கூறியது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. “ஹூரே” அனைவரும் சத்தமிட்டனர். மக்கள் அனைவரும் உடனடியாக நடக்கத் தொடங்கினார்கள். ஆனால் வக்கீலும், டாக்டரும் அனைவரையும் கூவி அழைத்தார்கள்.

“நிறுத்துங்கள். நிறுத்துங்கள்! இந்த நான்கு ஆண்களையும், இந்தச் சிறுவனையும் கைப்பிடியாகப் பிடித்து நம்முடன் அழைத்து வாருங்கள்.”

“அப்படியே நாங்கள் செய்கிறோம்” அவர்கள் அனைவரும் கத்தினார்கள் “அப்படி அந்தக் குறிகள் அங்கே காணப் படவில்லையெனில் மொத்த நபர்களையும் தூக்கிலிடுவோம்.”

நல்லது. நான் மிகவும் திகிலடைந்தேன் என்று உங்களிடம் கூறுகிறேன். ஆனால் தப்பிக்க வழி இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் எங்களை இறுக்கிப் பிடித்தவாறே, ஒன்றரை மைல் தொலைவில் நதியின் கீழ்புறம் உள்ள கல்லறைத் தோட்டத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். மொத்த ஊருமே எங்களின் பின்னால் வந்து கொண்டிருந்தது. கடும் அமளி துமளியுடன் நடை போட்டுக் கொண்டு சென்றாலும், அப்போது நேரம் இரவு ஒன்பதுதான் ஆகி இருந்தது.

நாங்கள் அந்த வீட்டைக் கடக்கும் போது, மேரிஜேனை நான் அந்த வீட்டைவிட்டு அனுப்பியது மிகவும் தவறு என்றுணர்ந்தேன். அவள் மட்டும் இருந்திருந்தால், அவளைப் பார்த்து நான் கண்ணசைத்திருந்தால் போதும், ஓடி வந்து இந்த மோசடிப் பேர்வழிகளைக் காட்டிக் கொடுத்து என்னைக் காப்பாற்றியிருப்பாள்.

‘கும்பலாக காட்டு மிருகங்களைப் போல் நதியை ஒட்டிய வழியில் நாங்கள் சென்றோம். இருள் சூழ்ந்து கொண்டு, காற்று ஊ ஊ என்று சுழற்றி அடிக்க, மின்னல் வேறு இடைஇடையே வெட்டி இழுக்க அந்தப் பிராந்தியம் முழுதுமே அச்சத்தைக் கூட்டும் விதமாக பயங்கரமாக இருந்தது. என் வாழ்வில் நான் சந்தித்த கஷ்டங்களில் மிகவும் அபாயமானது இதுதான் என்பதால் நான் திகிலில் உறைந்து போயிருந்தேன். நான் திட்டமிட்டதற்கு எதிராக ஒவ்வொரு விஷயமும் புதிது புதிதாய்க் கிளம்பி என் திட்டத்தைச் சுக்குநூறாக உடைத்தது. என் விருப்பப்படி என் காரியங்களை நான் செய்து முடிக்க இயலாமல், ராஜாவும், பிரபுவும் ஆபத்தில் சிக்கியிருப்பதைப் பார்த்து சந்தோசம் கொள்ள முடியாது, நிலைமை கட்டு மீறிப் போன வேளையில் மேரிஜேன் என்னைக் காப்பாற்றி சுதந்திரப் பறவையாய் பறக்கவிடும் ஆனந்தத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்காமல், இதோ, இந்த கும்மிருட்டில், எனக்கும் சாவுக்கும் நடுவே அந்த பச்சை குத்தப்பட்ட குறிகள் மட்டுமே இப்போது இருக்கின்றன. அவர்கள் அந்தக் குறியைக் காணாவிடில்………………….

என்னால் அது பற்றி சிந்திக்கவே முடியவில்லை. இருந்தாலும் அது தவிர வேறு எதுவும் சிந்தனைக்கு வரவும் இல்லை. இருள் மேலும் மேலும் கவிழ்ந்து கொண்டே செல்ல, அங்கிருந்து தப்பித்து ஓட அது நல்ல நேரம் என்று எனக்குத் தோன்றினாலும், அந்த குண்டு முரடன் – ஹைன்ஸ் – எனது மணிக்கட்டை இறுக்கிப் பிடித்திருந்தான். இவனிடம் இருந்து தப்புவதற்கு, பைபிளில் வரும் பெருத்த அரக்கன் கோலியாத்திடமிருந்து கூட தப்பிவிடலாம் போல் இருக்கிறது. அவன் மிகுந்த உற்சாகத்துடன் அவனின் வேகத்திற்கு என்னைத் தர தரவென்று இழுத்துச் சென்றான். அவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது நான் கூடவே ஓட வேண்டியிருந்தது.

உயர்ந்து வரும் ஒரு கடலலை போன்று அந்தக் கூட்டம் கல்லறைத் தோட்டத்துள் நுழைந்தது. நூறு மண்வெட்டிகளாவது இருந்தால்தான் காரியம் முடியும் என்பது பீட்டரின் கல்லறைக்கு வந்தபோதுதான் அவர்களுக்குத் தெரிந்தது . ஒரு லாந்தர் விளக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்று யாருக்குமே தோன்றவில்லை போலும். பக்கத்திலுள்ள வீட்டுக்கு ஒருவனை அனுப்பி ஒரு லாந்தர் விளக்கை கடன் வாங்கிவரச் செய்தார்கள். இதற்கிடையில், அவ்வப்போது வெட்டும் மின்னல் ஒளியின் உதவி கொண்டு, அவர்கள் அனைவரும் குதித்து கல்லறையைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.

அடுத்த நாள் என்று ஒன்று இல்லாது போனது போல் அவர்கள் விடாமல் தோண்டிக்கொண்டே இருந்தார்கள். கும்மிருட்டு எங்கும் சூழ்ந்தது. கருமேகம் திரண்டு மழை பொழிய ஆரம்பித்தது. காற்று உஸ் ஸ் ஸ் ஸ் என்ற இரைச்சலுடன் மொத்த இடத்திலும் ஊளையிட்டது. மின்னல்கள் அதிக அளவில் வானில் கீற்றுக்கள் போட்டன. இடியோ பூம் என்று முழக்கமிட்டது. ஆனால் மக்கள் அனைவரும் தோண்டுவதிலேயே குறியாக இருந்தார்கள்.

வானும், பூமியும் உருவாக்கிய இந்த சப்தங்களை, அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அந்த நேரத்தில், எல்லாவற்றையும், கூட்டத்திலுள்ள ஒவ்வொரு முகத்தையும், கல்லறையிலிருந்து மண்வெட்டியால் தோண்டப்பட்ட குப்பை மண் காற்றில் பறப்பதையும் என எல்லாமே ஒரு கணம் உங்களால் காண முடியும். அடுத்த நொடி காரிருள் அனைத்தையும் அகற்றி உங்களை எதுவும் பார்க்கவிடாமல் குருடாக்கிவிடும்.

கடைசியாக சவப்பெட்டியை வெளியே இழுத்து அதன் மூடியைத் திறக்க வேண்டி ஆணியைக் கழற்றினார்கள். அந்தக் காட்சியைக் காணக் கூட்டம் ஒருவருக்கொருவர் தோளின்மீது உரசிக் கொண்டும், தள்ளிக் கொண்டும் ஆவலாய் இருந்தது போன்றதொரு சம்பவம் நீங்கள் திருவிழாக்களில் கூடக் காண மாட்டீர்கள். அதிலும் கும்மிருட்டு வேளையில் இவ்வாறு நிகழ்வது மிகுந்த இனம் புரியாத கலக்கத்தை ஏற்படுத்தியது. ஹைன்ஸ் என்னை பலமாக இழுத்து அழுத்திப் பிடித்திருந்த காரணத்தால் எனது மணிக்கட்டு உடைந்து விடும் போல நோக ஆரம்பித்தது. எனக்கென்னவோ நான் ஒருவன் உயிருடன் இருப்பதைக் கூட அவன் மறந்து விட்டானோ என்று கூடத் தோன்றியது. மிகுந்த கிளர்ச்சியால் அவன் ஒருபக்கம் பதைபதைத்துக் கொண்டிருந்தான்.

எதிர்பாராத அந்த வேளையில் வெண்ணிற ஒளியை இடி முழக்கத்துடன் கலந்து மின்னல் நாற்புறமும் வீசியது. யாரோ கூவினார்கள் “அடச் சாத்தானே! இதோ அந்த தங்கக் காசு மூட்டை இங்கே மார்பின் மீது கிடக்கிறது.”

ஒரு கடூர ஊளைச்சத்தத்தை ஹைன்ஸ் மற்றவர்களுடன் இணைந்து எழுப்பினான். அதிர்ச்சி கலந்த வியப்பில், என் கரத்தை விட்டுவிட்டு அதைப் பார்வையிட முன்னோக்கிச் சென்றான். அதுதான் சந்தர்ப்பம். எடுத்தேன் ஓட்டம்! சாலையை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் அன்று நான் ஓடியது போல வேறு யாரும் ஓடுவதை நீங்கள் கண்டிருக்கவே மாட்டீர்கள்.

தனித்து நான் புயல் வேகத்தில் சாலையில் ஓடிக் கொண்டிருந்தேன். நல்லது. இருள், மின்னல் ஒளிக் கீற்றுக்கள், சோவெனக் கொட்டும் மழை, வீசி அடிக்கும் காற்று மற்றும் காதைச் செவிடாக்கும் இடி ஆகியவைகளும் என்னுடன் துணையிருந்தது உண்மைதான். உங்களின் பிறப்பு எத்தனை ஊர்ஜிதமானதோ, அத்தனை உறுதியுடன் நான் சாலையினூடே பறந்தோடிக் கொண்டிருந்தேன்.

ஊரை நான் வந்தடைந்ததும், புயலின் காரணமாக யாரையும் அங்கே பார்க்க இயலவில்லை. எனவே சந்துகளுக்குள் புகுந்து பதுங்கிப் போவதை விடுத்து முக்கியப் பாதையிலேயே நேராகச் சென்றேன். அந்த வீட்டுக்கு அருகே சென்றபோது, அதை நோக்கி இன்னும் அதிகமாக வேகமெடுத்து ஓடினேன். விளக்குகள் எதுவும் ஏற்றப் படாமல், வீடு முழுதும் இருளில் மூழ்கியிருந்தது. என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இது என்னை ஏமாற்றத்திற்கும், சோகத்திற்கும் உள்ளாக்கியது. ஆனால் அதைத் தாண்டி நான் ஓடுவதற்குள், மேரிஜேனின் அறைச் சன்னலிலிருந்து பளிச் என ஒரு ஒளி மின்னியது. பெருமிதத்தில் விம்மிய என் இதயம் இன்னும் பெரிதாகி வெடித்து விடும் போல் இருந்தது. அடுத்த ஒரு கணத்தில் அந்த வீடும், மற்ற அனைத்தும் பின் தங்கிப் போய்விட, நான் இருளில் ஓடிக் கொண்டிருந்தேன். ஒரு போதும் இனி என் வாழ்வில் நான் அங்கே திரும்பி வரவே போவதில்லை. நான் பார்த்த பெண்களிலேயே அவள்தான் மிகச் சிறந்தவள். மிகவும் வீரம் மிக்கவளும் கூட.

ஊரை விட்டு வெகு தொலைவு ஓடி வந்தவுடன், அங்கிருந்த மணல் திட்டுகளை நோக்கி ஓடினேன். ஏதேனும் அங்கு நிறுத்தப் பட்டிருக்கும் படகுகளை யாருக்கும் தெரியாது எடுத்து கொள்ளலாம் என்று கவனமாகத் தேடினேன். மின்னல் முதல்தடவையாக ஒரு ஒளிக் கீற்று அனுப்பியபோது, கட்டப்படாது அங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு படகு கண்ணில் பட்டது. அதை எடுத்து நதிக்குள் தள்ளினேன். அந்தப் படகு ஒரு சிறு கயிறால் மட்டுமே பிணைக்கப்பட்டிருந்தது. நதியின் மத்திய பகுதியில் வெகு தூரத்தில் மணல் திட்டுகள் காணப்பட்டன. ஆனாலும் நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. படாத பாடு பட்டு கடைசியாக நான் எங்கள் தோணியை அடைந்தபோது, நான் சக்தி இழந்து மிகுந்த சோர்வடைந்திருந்தேன்.

நேரம் கொஞ்சம் கிடைத்திருந்தால், களைப்புத்தீர அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் அப்படி நான் செய்யவில்லை. அடித்துப் பிடித்துத் தோணியில் ஏறிக் கூச்சலிட்டேன்.

“வெளியே வா, ஜிம்! தோணியை அவிழ்த்து நதியில் விடு. கடவுள் புண்ணியத்தில் அவர்களைத் தொலைத்துக் கட்டிவிட்டோம்.”

நான் வந்துவிட்டேன் என்ற மகிழ்ச்சியில் ஜிம் தன் இரு கரங்களையும் விரித்துக் கொண்டே வெளியே ஓடி வந்தான். ஆனால், அப்போது பார்த்து அடித்த மின்னல் ஒளியில் அவனைக் கண்ட என் இதயம் குதித்து வாய் வழியே வெளியே வந்துவிடும் நிலைமைக்குச் சென்றது. பீதியில் தோணியிலிருந்து பின்புறமாக நான் நீருக்குள் விழுந்தேன். ராஜா லியரையும், நீரில் மூழ்கி இறந்த அரேபியனையும் இணைத்துச் படைக்கப்பட்ட ஒரு தோற்றத்தில் ஜிம் இருக்கிறான் எனபதை நான் சுத்தமாக மறந்தே போய் விட்டேன். அவனின் தோற்றம் என்னை பேய் அடித்தது போலத் தாக்கி, மிஞ்சி இருந்த அத்தனை சக்தியையும் உறிஞ்சி விட்டது. ஜிம் கைகளால் துழாவி என்னை நதி நீரிலிருந்து எடுத்தான். நான் திரும்பி வந்துவிட்டேன் என்ற ஆனந்தத்திலும், ராஜா மற்றும் பிரபு இருவரைத் தொலைத்த திருப்தியிலும் அவன் என்னைக் கட்டியணைத்து வாழ்த்துக் கூற அருகில் வந்தான். ஆனால் நான் சொன்னேன்:

“இப்போது வேண்டாம். காலை உணவு சமயத்தில் அதை வைத்துக் கொள்ளலாம். அந்த சமயத்திற்காக இதை சேர்த்து வைத்துக் கொள். இப்போது தோணியைத் தளர்த்தி விட்டு நதியின் கீழ்புறமாக அதை மிதக்க விடு.”

அடுத்த இரண்டு நொடிகளில், நதியில் மிதந்தவாறு அங்கிருந்து தள்ளிச் சென்றோம். பரந்து விரிந்த அந்த மகா நதியில், எங்களுக்கு தொல்லை தர யாருமில்லாது, நாங்கள் மட்டுமே அந்தத் தோணியில் மிகவும் சுதந்திரமாக இருப்பது எத்தனை பெரிய இன்பம்! எனது முட்டிகள் மற்றும் குதிகாலைச் சரி செய்து நெட்டி முறித்து, கொஞ்சம் எழுந்து குதித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னால் அப்படிச் செய்யாமலிருக்க முடியவில்லை. மூன்றாம் முறை அவ்வாறு செய்து பார்த்துக் கொண்டிருக்கையில், எனக்கு மிகவும் பரிச்சயமான ஒரு சத்தத்தை நான் கேட்க நேர்ந்தது. மூச்சை இழுத்துப் பிடித்தவாறு, கூர்ந்து கேட்டுக் கொண்டே காத்திருந்தேன். அடுத்த மின்னல் ஒளி வீசியபோது, அதோ அங்கே — உறுதியாக அவர்கள்தான் – கடும் வேகத்துடன் சிறு படகைச் செலுத்திக் கொண்டு நீரின்மேல் பறந்து வந்துகொண்டிருந்தார்கள்! அவர்கள் வேறு யாருமல்ல – ராஜாவும், பிரபுவும்தான்.

என் முயற்சிகளைக் கைவிட்டு, உயிரற்ற உடல் போல் தோணியின் மரக்கட்டைத் தரை மேல் தடாலென்று சரிந்து விழுந்தேன். கதறி அழுவதையும் தாண்டி என்னால் செய்ய முடிந்த ஒரே விஷயம் அது ஒன்றுதான்.

 

[தொடரும்]


முனைவர் ஆர்.தாரணி

 

– முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். –

akilmohanrs@yahoo.co.in