[கணித்தமிழ் பற்றி குறிப்பாக இணைய இதழ்கள் பற்றி அவ்வப்போது வெளிவரும் அல்லது ஆய்வரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகளை அல்லது புதிய ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். பதிவுகளில் பிரசுரிக்கிறோம். இணைய இதழ்கள் பற்றிய மேற்படி கட்டுரைகளின் தொகுப்பானது இணைய இதழ்கள் பற்றியதோர் ஆவணங்களின் தொகுப்பாகமிருக்கும்; அதே சமயம் இணைய இதழ்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்வோருக்குப் பேருதவியாகவுமிருக்கும் -பதிவுகள்]
1. இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள்
– சு. குணேஸ்வரன் -=
1.0 அறிமுகம்
புகலிடச் சிற்றிதழ்கள் கடந்த 1983 இன் பின்னர் ஈழத்தமிழர் புகலடைந்த நாடுகளில் இருந்து வெளிவந்துள்ளன. ஏறத்தாழ 150 ற்கும் மேற்பட்ட இதழ்கள் இதுகாலவரையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்தும் வெளிவந்துள்ளன. 90 களின் பிற்பகுதியில் இருந்து இலத்திரனியற் சூழலை தமிழ்ப் படைப்புலகு தமது எழுத்துக்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கியது. இந்நிலையில் புகலிடச் சிற்றிதழ்ச் செயற்பாட்டை நோக்குவதே இக்கட்டுரையின் பணியாக அமைகின்றது.
2.0 இலத்திரனியற் சூழலில் சிற்றிதழ்கள்
கலை இலக்கியம் சார்ந்து வெளிவரும் இதழ்களை இலக்கியச் சிற்றிதழ்கள் (Little Magazines) என்று அழைப்பர். 1914 இல் அமெரிக்காவில் வெளியாகிய The Little Review என்ற இதழுடன் சிற்றிதழ் என்ற சொற்பிரயோகம் வழக்கத்திற்கு வருகிறது. (தமிழகத்தில் 1933 இல் வெளிவந்த ‘மணிக்கொடி’யும், ஈழத்தில் 1946 ஜனவரி வெளிவந்த ‘பாரதி’ யும் முதல் இதழ்களாக வெளிவந்தபோதிலும்) தமிழில் 1959 இல் தோற்றங்கொண்ட ‘எழுத்து’ இதழே முதல் இலக்கியச் சிற்றிதழாக அமைகின்றது. ஈழத்தில் 1946 இல் வெளிவந்த மறுமலர்ச்சியும, புகலிடத்தில் 1985 இல் மேற்கு ஜேர்மனியில் இருந்து வெளிவந்த தூண்டிலும் முதலில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்களாக அமைந்துள்ளன. சிற்றிதழ் என்பதற்கு “கவிதைகள் புனைகதைகள் விமர்சனக் கட்டுரைகள் முதலியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு குறைந்த எண்ணிக்கைப் பிரதிகளை வெளியிடும் இதழ்கள். நீடித்த ஆயுளைக் கொண்டிராதவையுங்கூட.” (1)
என வல்லிக்கண்ணன் விளக்கம் கொடுக்கின்றார். வெளிவந்த அதிகமான சிற்றிதழ்கள் நின்று விட நிலையிலே கலை இலக்கியத்தில் தம்மைத் தக்கவைக்கும் நோக்குடன் புகலிடத்திலிருந்து தற்போது வெளிவந்து கொண்டிருப்பனவாக உயிர்நிழல்> காலம்> எதுவரை> தேசம்> மண்> கலப்பை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். கடந்த ஓரிரு ஆண்டுகள் வரை வெளிவந்து நின்றுபோனவை இவற்றைவிட அதிகம். அச்சுப்பிரதிகளாக வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களோடு இன்றைய இலத்திரனியற் சூழலும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். இவ்வகையில் புகலிடச் சிற்றிதழ்ச்
செயற்பாட்டைப் பின்வருமாறு நோக்கலாம்.
1 அச்சிதழ்கள் (Print magazines)
2. அச்சிதழ்களும் இணைய இதழ்களும் (Print magazines and net magazines)
3. இணைய இதழ்கள்/மின்னிதழ்கள் (e- journals /e-zines)
4. இணையத்தளம் மற்றும் வலைப்பூ (Website and blogspot)
2.1 அச்சிதழ்கள் (Print magazines)
ஒரே காலப்பகுதியில் ஏறத்தாழ 40 வரையான சிற்றிதழ்கள் வெளிவந்த வரலாறு புகலிடச் சூழலில் உண்டு. அது அருகி கடந்த காலம் வரை 10 -15 வரையான இதழ்களே வந்துள்ளன. தற்போது 10 ற்கும் குறைவான இதழ்களே கலை இலக்கியம் சார்ந்து தொடர்ந்து வெளிவருவதைக் கட்டுரையாளரால் இனங்காண முடிந்துள்ளது. பிரான்சில் இருந்து வெளிவரும் உயிர்நிழல் என்ற சஞ்சிகை (1999 ஜனவரியில் முதல் இதழ் வெளிவந்துள்ளது) இடையில் வெளிவராதிருந்து கலைச்செல்வனின் மறைவுக்குப் பின்னர். லஷ்மியால் முன்னெடுக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து வருகிறது. உயிர்நிழல் நவீன இலக்கியத்தின் மீதான அக்கறையை> குறிப்பாக பின்நவீனத்துவம்> பெண்ணியம்> தலித்தியம் எதிர்ப்பிலக்கியம் ஆகியவை குறித்த இலக்கிய அரசியலில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றது. இவ்விதழின் உள்ளடக்கம்; இலக்கியம் மற்றும் அரசியல் சார்ந்தது மட்டுமல்லாமல் சினிமா அல்லது குறும்படம் குறித்தும் முக்கிய படைப்புக்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.
கனடாவில் இருந்து காலம் என்ற இதழ் கடந்த 1990 ஜூலை முதல் வெளிவருகிறது. இதழ் தொடங்கிய காலம் முதல் செல்வம் ஆசிரியராக இருக்கின்றார். இன்றுவரை 35 இதழ்கள் வந்துள்ளன. இவ்விதழின் சிறப்பம்சமாக தமிழ்ப் படைப்பிலக்கியச் சூழலின் ஆளுமைகளை இனங்கண்டு அவர்களின் படைப்புக்கள் பற்றிய உரையாடலை முன்னெடுக்கும் சிறப்பிதழ்களா அமைந்திருத்தலைக் குறிப்பிடலாம். சுந்தரராமசாமி அ. முத்துலிங்கம்> தெணியான்> ஏ.ஜே கனகரட்னா> கே.கணேஷ் மற்றும் கலைத்துறைக்குப் பணியாற்றியவர்களையும் வெளிக் கொண்டு வரும் இதழாக காலம் இதழ்கள் அமைந்துள்ளன.
இலங்கையில் இருந்து வெளியாகிய மூன்றாவது மனிதன் சிற்றிதழின் ஆசிரியாகிய எம் பெளசர் 2009 ஏப்ரல் முதல் லண்டனில் இருந்து எதுவரை என்ற சிற்றிதழைக் கொண்;டு வருகிறார். இதுவரை 4 இதழ்கள் வந்துள்ளன. இவ்விதழ் புகலிட எழுத்துச் சூழல் ஈழ அரசியற்சூழல் குறித்த படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றது.
மண் சஞ்சிகை 20 வருடமாகத் தொடர்ந்து வருகிறது. இதில் வியப்பு என்னவென்றால் இந்த இதழுடன் சமகாலத்தில் பெருந் தொகையாக வெளிவந்த இதழ்கள் நின்று போன பின்னரும் கூட இந்த இதழ் கடந்த ஏப்ரல் 2010 இல் 20ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியுள்ளது. (2) சிறுவர்களை மனங்கொண்டு தமிழ்மொழி> தமிழ் இலக்கியம்> இளையவர்களின் எழுத்தாற்றலை வளர்த்தல் ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து வருகின்றது.
கலை இலக்கியம் தொடர்பான ஆண்டிதழ்களும் வேறு இதழ்களும் வருகின்றன. தமிழ்ச் சூழலில் ஓரளவு வாசிப்புக்குக் கிடைக்கக்கூடிய இதழ்களையே மேலே குறிப்பிட்டேன். இவை தவிர கலை இலக்கியம் சாராத விளம்பர இதழ்களும் மற்றும் அமைப்புக்கள் நிறுவனங்கள் சார்பான இதழ்களும் வெளிவருகின்றன. அவை இக்கட்டுரையில் கவனத்திற் கொள்ளப்படவில்லை.
2.2 அச்சிதழ்களும் இணைய இதழ்களும் (Print magazines and net magazines)
தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற காலச்சுவடு, உயிர்மை ஆகியன இவ்வகைப்பாட்டுக்கு நல்ல உதாரணமாகும். இதேபோல் அச்சில் வெளிவருகின்ற எதுவரை> உயிர்நிழல்> காலம் ஆகியவற்றை இணையத்திலும் வாசிக்க முடிகின்றது. லண்டனில் இருந்து முல்லை அமுதனின் முயற்சியால் காற்றுவெளி என்ற இதழ் வெளிவந்தது. இதுவரை 16 இதழ்கள் அச்சில் வந்துள்ளன. ஈழ> தமிழகப் படைப்பாளிகளும் இதில் எழுதுகிறார்கள். நல்ல படைப்புக்களை மீள்பிரசுரமாகவேனும் தொடர்ந்த இச்சஞ்சிகை இவ்வருடம் யூலை மாதம் முதல் மாதாந்தம் மின்னிதழாக வெளிவருகின்றது.
த. ஜெயபாலனை ஆசிரியராகக் கொண்டு லண்டனில் இருந்து வெளிவந்த ‘தேசம்’> தேவதாசனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘வடு’ ஆகியனவும் மின்னிதழ்களாகவே வாசிக்கக் கிடைக்கின்றன.
“இன்றைய நிலையில் தரமானதோர் அச்சிதழாக வரும் ஒன்று நீடித்து எதிர்காலத்திலும் தொடர்வதோடு நிலையாகவும் இருக்கவேண்டும் என்றால்> மின்வெளியில் (Cyber Space) நுழைந்து இணைய இதழாகவும் திகழ வேண்டும்” (3)
இது புகலிடச் சூழலில் இன்று சாத்தியமாகி வருகின்றது. இவையெல்லாம் இன்றைய வாசிப்பு சாதாரண அச்சுநிலையைத் தாண்டி இணையத்தின் தேவையை வலியுறுத்துவனவாகவே அமைந்துள்ளன.
2.3 இணைய இதழ்கள்/மின்னிதழ்கள் (e- journals /e-zines)
இணையத்தில் மட்டுமே வெளிவரக்கூடிய இதழ்களை இணைய இதழ்கள் என்று குறிப்பிடுவர். இவை அச்சிதழ்களாக அல்லாமல் தொடர்ந்தும் இணையத்திலேயே குறிப்பிட்ட கால ஒழுங்கில் புதுப்பிக்கப்படுகின்றன. படைப்புக்களைப் பெறுவதுமுதல் அதன் செம்மையாக்கம்> வடிவமைப்பு இடுகை> பின்னூட்டம் என்பனவெல்லாம் இணையத்திலேயே நிகழ்கின்றன. தேவைப்படும் படைப்புக்களின் பக்கங்களைப் பிரதி எடுக்கக்கூடிய வசதிகளும் மற்றவர்களுக்கு அந்தப் பக்கங்களை அனுப்பக்கூடிய வசதிகளும்> வாசிப்பதற்கு இணைப்புக் கொடுக்கக்கூடிய வசதிகளும் இந்தஇதழ்களின் எளிமையான வழிமுறைகளாக உள்ளன.
தமிழிலே பிரபலமான இணைய இதழ்களாகவும் அதிக வாசகர்களைக் கொண்டவையாகவும் திண்ணை> பதிவுகள்> வார்ப்பு> நிலாச்சாரல்> தமிழோவியம்> வரலாறு. கொம்> முத்துக்கமலம்> அம்பலம்> திசைகள்> ஊடறு> ஆறாம்திணை , மரத்தடி > வெப். உலகம் > தமிழ் சிபி> தோழி.கொம்> ஆகியன உள்ளன. இவற்றில் புகலிடத்தைப் பொறுத்தவரையில் புகலிடத்தமிழர்களால் கொண்டு வரப்படும் இணைய இதழ்களாக பதிவுகள்> அப்பால் தமிழ்> ஊடறு> லும்பினி> நிலாச்சாரல்> தமிழோவியம்> தமிழமுதம்> நெய்தல்> வார்ப்பு> புகலி> ஈழம்.நெட்> தூ, இனி> ஆகியவை முக்கியமானவை. கனடாவில் இருந்து எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளிவருகின்ற ‘பதிவுகள்’ தமிழ்ச் சூழலில் மிகுந்த கவனத்திற்குரிய இணைய இதழாகும்.
‘அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்’ என்ற மகுட வாக்கியத்துடன் கலை இலக்கியம் மட்டுமல்லாமல் ஏனைய அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இணையத்தைத் தமிழ்ச் சூழல் பயன்படுத்தத் தொடங்கியவுடனே ஆரம்ப காலங்களில் வெளிவந்த திண்ணை , அம்பலம் , ஆறாம்திணை ஆகிய இதழ்களுடன் பேசப்படக்கூடியதாக ‘பதிவுகள்’ இணைய இதழும் அமைந்திருந்தது.
தமிழ் இலக்கியம் சார்ந்த எழுத்துக்களையும்> தரவுகளையும்> இணைப்புக்களையும்> ஆய்வுக் கட்டுரைகளையும் கொண்டுள்ளதோடு: ஆங்கிலக் கட்டுரைகள்> மொழியாக்கக் கட்டுரைகள் ஆகியவற்றையும் பதிவுகள் தாங்கி வருகின்றது. குறிப்பாகப் புகலிட எழுத்துக்களை இணையத்தில் கொண்டு வந்த இதழ்களுள் முதன்மையானதாக பதிவுகளைக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
றஞ்சி> தேவா ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு ஊடறு என்ற இணைய இதழ் 2005 ஜூனில் இருந்து வெளிவருகின்றது. 2009 இல் இருந்து உமா> ஆழியாள் ஆகியோரும் இணையாசிரியர்களாகச் செயற்படுகின்றனர். பெண்களின் எழுத்துக்களைக் கொண்டு வருவதற்கான ஒரு களமாக இது
அமைந்துள்ளது. ‘அதிகாரவெளியினை ஊடறுக்கும் பெண்குரல்’ என்பதை மகுட வாக்கியமாகக் கொண்டு அரங்கியல்> அறிவிப்பு> இதழியல்> உரையாடல்> கட்டுரை> கவிதை> சினிமா> குறும்படம்> சிறுகதை> செவ்வி> பதிவு> மடல்> விமர்சனம்> வேண்டுகோள் ஆகியவற்றைப் பிரிவுகளாகக் கொண்டுள்ளது.
பெண்களின் படைப்புக்களை வெளிக்கொண்டு வரும் சிற்றிதழ்களாக இருந்த சக்தி> கண்> ஊதா மற்றும் ஊடறு பெண்கள் சந்திப்பு மலர்கள் ஆகியவற்றில் எழுதிய பெண்படைப்பாளிகள் ஊடறு இணையசஞ்சிகையில் இணைந்து எழுதுகிறார்கள். வெளிவந்த பெண்சஞ்சிகைகள் நின்றுவிட்ட நிலையிலே பெண்களின் எழுத்துக்களை ஒருமுகப்படுத்தும் பணியினை ஊடறு செய்து வருகின்றது. வருடாந்தம் நடைபெறும் பெண்கள் சந்திப்பு மலர்கள் பற்றிய செய்திகள் தகவல்கள் வெளிவருதல் இதன் சிறப்பசமாகும். புகலிட ஈழ தமிழகச் சூழலில் பெண்கள்> அவர்களின் பிரச்சினைகள்>
அவை சார்ந்த உரையாடல்கள்> பெண் அமைப்புக்களின் செயற்பாடுகள்> என்பவற்றை வெளிக்கொண்டு வருகின்றது. பெண்ணியம் சார்ந்த உரையாடலுக்கான சிறந்த களமாகவும் தன்னை வளர்த்து வருவதோடு சமூக நல செயற்பாட்டிலும் பெண்படைப்பாளிகள் இணைந்து செயற்படுவது அறியமுடிகிறது.
அப்பால் தமிழ் (பிரான்ஸ்) இதுவும் ஒரு இணைய இதழாகும். “அப்பாலும் விரிகின்றது வேற்றுமைச் சூழல் அணையாமல் எரிகின்றது நெஞ்சினில் தழல் ஆற்றுப்படுத்தட்டும் அப்பால் எழும் தமிழ்” என்பதை மகுட வாக்கியமாகக் கொண்டு 2002 இல் இருந்து வெளியாகின்றது. 1993 இல் வெளியாகிய ‘மெளனம்’ என்ற காலாண்டிதழில் (6 இதழ்கள் வெளிவந்தது) பங்கேற்றவர்கள் அப்பால் தமிழில் இணைந்து செயற்படுகிறார்கள். மட்டுப்படுத்தப்பட்ட பொது நோக்குக் கொண்ட கூட்டுறவு நிறுவனமாகவும் அப்பால் தமிழ் இணையத்தளத்துடன் அப்பால் தமிழ் நூல்வெளியீட்டு பதிப்பகமாகவும் இது செயற்படுகின்றது. சமூகம் கலை இலக்கியம் வரலாறு தத்துவம் அரசியல் பொருளியல் ஆகிய துறைகளில் அக்கறை காட்டுவதோடு குறுநாவல்கள் குறும்படங்கள்> ஒளிப்படங்கள் ஆகியவற்றையும் தாங்கி வருகிறது.
2.4 இணையத்தளம் மற்றும் வலைப்பூ (Website and blogspot)
புகலிடத்திலிருந்து வருகின்ற தனிநபர் இணையப்பக்கங்களையும் வலைப்பூக்களையும் (வலைப்பதிவுகள்) ஒன்றாக நோக்கலாம். இவையே இன்றைய புகலிட எழுத்துலகை அதிகமாகக் கொண்டு செல்பவை. இணையத்தளம் என்பது ஒரு நிறுவனமோ> அமைப்போ தனிநபரோ தம்மைப் பற்றிய தரவுகளையும் தகவல்களையும் தமது செயற்பாடுகளையும் வெளிப்படுத்தப் பயன்படுத்தும் ஓர் ஊடகமாகும். இதில் தனியே எழுத்துத் தகவல்கள் மட்டுமல்லாமல் ஒலி ஒளி தகவல்களையும் இணைப்பதற்குக் கூடுதல் வசதி செய்து தரப்பட்டுள்ளது. தரவுத்தளங்கள்> செய்தித்தளங்கள்> இணையத்திரட்டிகள் இவற்றில் முக்கியமானவை. புகலிடப் படைப்பாளிகள் தனிநபராகவோ கூட்டாகவோ தமது படைப்புக்களைப் பதிவேற்றி அனைவருக்கும் பகிர்ந்துள்ளார்கள். தமிழில் மட்டும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட வலைப்பக்கங்கள் உள்ளதாக எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிடுகின்றார் (இணைய எழுத்து> pathivukal.com)
இணையத்தின் கட்டற்ற வெளியைப் பயன்படுத்துவதில் இன்று இணையத் தளங்களுக்கு அடுத்ததாகப் பேசப்படுவன வலைப்பதிவுகளே ஆகும். வலைப்பதிவுகள் 1997 இல் இருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதனை ஆங்கிலத்தில் Blog என்றும் தமிழில் ‘வலைப்பூ’ என்று அழைப்பர். இந்த வலைப்பூக்களில் தமது பதிவுகளைச் செய்வோர் வலைப்பதிவர் என்று அழைக்கப்படுவர். எல்லா வலைப்பதிவுகளையும் ஒருங்கிணைக்கும் இணையத்தளங்களும் உள்ளன. (இலவசமாக பதிவிடும் வசதியை வழங்குபவற்றில் blogger.com, wordprees.com ஆகியன பிரபலமானவை) வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொடுக்கும் பிரபல்யமான திரட்டிகளாக தமிழ்மணம்> திரட்டி.கொம்> தமிழ் 10.கொம்> தமிழிஷ்> தமிழ்வெளி , தமிழ்ப்புள்ளி மற்றும் இலங்கையில் யாழ்தேவி ஆகியன உள்ளன.
“வலைப்பதிவு என்பது அடிக்கடி இற்றைப்படுத்துவதற்கும் கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்துவதற்கும் என சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப் படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் வலைப்பதிவுகளில் ஊடாடுவதற்குமான வழிமுறைகள் வலைத்தளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்” (4)
சிற்றிதழ்கள் போலவே வாசிக்கக்கூடிய மிகக் கனதியான படைப்புக்கள் வலைத்தளங்களிலும் வலைப்பதிவுகளிலும் கிடைக்கின்றன. மிகப் பிரபல்யமான படைப்பாளிகள் முதல் புதியவர்கள் வரை தத்தமக்கென பக்கங்களை உருவாக்கி எழுதி வருகின்றார்கள்.
அ. முத்துலிங்கம்> எஸ். பொ> பொ. கருணாகரமூர்த்தி> ஷோபாசக்தி> றயாகரன்> வ.ந.கிரிதரன்> இளைய அப்துல்லா> டி.செ.தமிழன்> ப.வி சிறீரங்கன்> கறுப்பி> முல்லை அமுதன்> சந்திரவதனா செல்வக்குமரன்> சந்திரா ரவீந்திரன்> செங்கள்ளுச்சித்தன்> நளாயினி தாமரைச் செல்வன்> பெட்டை> சுகன்> ரமணிதரன்> பொறுக்கி> தேவகாந்தன் ஆகியோர் தொடர்ந்து எழுதுகிறார்கள்.
இவர்களுள் பொ. கருணாகரமூர்த்தி (karunah.blogspot.com) 2003 செப்ரெம்பரில் இருந்து பதிவிடத் தொடங்கியதே புகலிடத்தில் ஆக முதலில் வெளியாகிய வலைப்பதிவாக கட்டுரையாளரால் இனங்காண முடிந்துள்ளது. அதிகமானவர்கள் 2004 – 2005 காலத்திலிருந்தே பதிவிடலைச் செய்திருக்கின்றார்கள். ஆழியாள்> சாந்தி ரமேஷ் வவுனியன்> தான்யா> நட்சத்திரன் செவ்விந்தியன் இன்னும் பலரின் ஏற்கனவே பதிவிட்ட வலைப்பதிவுகள் பார்க்கக் கிடைக்கின்றன.
அன்றாடம் நாட்குறிப்பு எழுதுவது போலவும் எழுதமுடியும். எழுதும் படைப்புக்களுக்கு உடனுக்குடன் பின்னூட்டங்களைப் பெறமுடியும். இன்னொரு அம்சம் சுதந்திரமான வெளி. சஞ்சிகைகள்> பத்திரிகைகளில் தணிக்கைக்கு உட்படக் கூடியவற்றை எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி பதிவு செய்யலாம்.
ஒலிஒளிக் காட்சிகளை இணைக்கும் வசதியும் உண்டு. இதனாலேயே இன்று உலக அளவில் பேசப்படும் மிக முக்கிய ஊடகவெளியாக வலைப்பதிவுகளும் இணையத்தளங்களும் உள்ளன.
ஊடகவெளி மாற்றம்
80 களின் இருந்து ஒரு அலையாக பெருமளவிலான சஞ்சிகைகளில் புகலிடப் படைப்பாளிகள் எவ்வாறு எழுத ஆரம்பித்தார்களோ அந்த அலை 90 களின் நடுப்பகுதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைய ஆரம்பித்தது. இதற்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தியமையை அவதானிக்கலாம். ஈழத்திலிருந்து இனப்போராட்டத்தின் காரணமாக அதிகமான இளைஞர்கள் புலம் பெயர்ந்தனர். அந்தப் புலப்பெயர்வுக்கு பல காரணங்கள் இருந்தன. அவை இந்த சஞ்சிகை வெளியீட்டுக்கு செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தன. காலத்துக்குக் காலம் ஈழத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள்> அடக்குமுறையின் வடிவங்கள்> என்பன புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டன. அது 90 களின் நடுப்பகுதி வரை தொடர்ந்தது.
என்றாலும் அவர்கள் அரசியல் ரீதியாக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைப்பது கண்காணிப்புக்கு உள்ளாகியது. இதனால் சஞ்சிகைகளில் தொடர்ந்து இயங்குவதும் அச்சுறுத்தலாக அமைந்தது. இலக்கியச் செயற்பாட்டிலிருந்து ஒதுங்குவதும் தொடர்ந்து இயங்குவதும் மாற்றம் கண்டது.
இக்காலகட்டத்தில் உலகமயமாக்கலின் விளைவான இணையத்தின் செல்வாக்கும்> புலம்பெயர்ந்தவர்களின் பல்கலாசார சூழலும் இணையத்தினினூடாக அவர்களின் எழுத்துக்களைக் கொண்டு வருவதற்கு சாத்தியங்களை ஏற்படுத்தின. இணையம் என்ற கட்டற்ற வெளி கதையாடலுக்கான வெளியாக மாறியது. ஓரளவு கணனி அறிவு பெற்றவர்கள் படிப்படியாகத் தமது விமர்சனங்களையும் படைப்புக்களையும் இந்த வெளியில் வைப்பதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.
குறிப்பாக இணைய இதழ்களின் வருகையே இங்கு முக்கியமாக அமைந்தன. அதனோடு இணைந்த தமிழகத் தொடர்புகள்> தமிழகத்தில் பதிப்பகங்களின் வாய்ப்புக்கள் இன்னும் இந்த எழுத்துக்களை நூலாக்குவதற்கு ஏற்ற வாய்ப்பைக் கொடுத்தன. அதிகமான புகலிடப் படைப்புக்கள் 90 இன் பிற்பகுதியிலிருந்து நூலுருப்பெறுவதையும் இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.
எனவே> இந்த மாற்றங்கள் ஈழ அரசியலோடு மட்டும் தொடர்புடையனவல்ல. புலம்பெயர் தமிழர்களின் பல்கலாசார சூழலும் இதில் செல்வாக்குச் செலுத்தியிருப்பதை அவதானிக்கவேண்டும். இது புகலிடச் சஞ்சிகைச் சூழலில் வீழ்ச்சி எனக் கருதுவதற்குப் பதிலாக அவர்களின் எழுத்துக்கள் இன்னொரு தளத்திற்கு நகர்ந்துள்ளன எனக் கருதுவதே பொருத்தமாக இருக்கும். அந்த எழுத்துக்களே இணையம் என்ற கட்டற்ற வெளியில் இன்று தொடர்கின்றன.
அடுத்த கட்ட நகர்வு
“பெரும்பான்மையான இணைய இதழ்களின் பொது உள்ளடக்கம் சிற்றிதழ் ஒன்றின் வடிவம் போலவே உள்ளது. கதை கவிதை கட்டுரை ஒரு சினிமா பத்தி> கொஞ்சம் அரசியல் அல்லது விஞ்ஞானம் என்ற மரபான சிறுபத்திரிக்கை வடிவமே இன்றும் இணையத்தில் அதிகம் காணப்படுகிறது. இதை ஒரு குறையாகவே கருதுகிறேன். இணையத்தின் முழுமையான பலத்தை அறிந்து கொள்ளாமலே தான் இவை செயல்படுகின்றன.
வீடியோ> ஆடியோ மற்றும் ஓவியங்கள்> கூடுதல் தரவுகளுக்கான இணைப்புகள்> நேர்காணல்களின் தரவிறக்க வசதி> நேரடியாக எழுத்தாளருடன் தொடர்பு கொண்டு உரையாடுதல் என்று இணையத்தின் முக்கிய வசதிகள் இன்றும் இலக்கிய முயற்சிகளுக்காக மேற்கொள்ளப்படவில்லை” (5) என்ற எஸ். ராமகிருஷ்ணனின் கூற்று இணைய எழுத்துக்களின் அடுத்த கட்ட நகர்வு பற்றிய சிந்தனையை முன்வைக்கின்றது.
இணையவெளியின் வாய்ப்பை எல்லாப் படைப்பாளிகளும் சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்ற கேள்வி முதலில் முக்கியமானது. புகலிட வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிக்கக் கூடியதும் அனைத்துலகத் தளத்திற்கு எடுத்துச் செல்லக்;கூடியதுமான எழுத்து வகையறாக்கள் எவ்வளவு து}ரம் சாத்தியமாகியுள்ளன என்பது கவனத்திற் கொள்ளப்படவேண்டும். ‘நானும் இணையத்தில் எழுதுகிறேன்’ என்று சொல்வதற்காக எழுதும் எழுத்துக்களையும் ‘கட்டற்ற வெளியில் எதையும் எழுதலாம்’ என்ற எழுத்துக்களையும் கணக்கில் எடுக்கமுடியாது.
அடுத்து இணைய வெளியில் யுனிக்கோட் எழுத்துருக்களைப் பயன்படுத்துதல்> தேடு பொறிகளில் படைப்புக்களைப் பெறமுடியுமாறு பதிவேற்றுதல்> பழைய சிற்றிதழ்களை pdf கோவைகளாக மாற்றி ஆவணப்படுத்துதல்> அச்சில் வரும் இதழ்களை இணையத்திலும் வாசிப்பதற்கு வழிசெய்தல்> படைப்பாளிகள் மற்றும் படைப்புக்கள் பற்றிய விபரங்களை ஆவணப்படுத்துதல் ஆகியன இணையவெளியில் கவனத்திற் கொள்ளவேண்டிய ஏனைய முக்கிய அம்சங்களாகும்.
தொகுப்பு
இலத்திரனியல் உலகத்தில் தினந்தோறும் புதிய மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. அந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து எமது இருப்பை நிலைநிறுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உரியது. இந்த வகையில் தமிழ்ச் சூழலில் புகலிடச் சிற்றிதழ்களுக்கு இருக்கும் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. அவை இன்றைய உலகப் போக்குக்கு ஏற்ப மாற்றம் கண்டுள்ளன. சில பிரதிகள் மட்டுமே அச்சாகி சிலரின் கைகளிலேயே முடங்கிப் போயிருந்த படைப்புக்கள் மற்றும் கருத்துக்கள் இன்று உலகின் பார்வைக்கு கிடைத்து வருகின்றது.
புகலிடத் தமிழரது வாழ்வு> அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்> பல்கலாசார சூழலில் அவர்களின் இடம்> தமிழ்மொழி – தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றின் எதிர்காலம் என்பன பற்றியெல்லாம் ஆவணப்படுத்துவதற்கும் ஆராய்வதற்கும் அடுத்த கட்டம் நோக்கிச் சிந்தித்துச் செயற்படுவதற்கும் இவற்றில் வெளிவரும் படைப்புக்கள் முக்கியமாக அமைந்துள்ளன.
எனவே> புகலிடச் சிற்றிதழ்களும் அவற்றில் வெளிவந்த படைப்புக்களும் இன்று இணைய வெளியில் உலாவரும் காத்திரமான படைப்புக்களும் நூலுருப்பெறும்போது அவற்றின் பெறுமதியை தமிழ்ச் சூழல் கணித்துக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இந்தச் சிற்றிதழ்கள் அச்சில் வெளிவந்தாலும் இன்றைய உலகப் போக்கைக் கருத்திற்கொண்டு மின்னிதழ்களாகவும் தொடரவேண்டிய தேவையை இன்றைய இலத்திரனியற் சூழல் வலியுறுத்தி நிற்கின்றது. இதன் மூலம் படைப்புக்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளவும் அது சார்ந்த உரையாடல்களை நிகழ்த்தவும் அனைத்துலகத் தளத்திற்கு அவற்றை எடுத்துச் செல்வதற்குரிய வாய்ப்புக்கள் பற்றியும் சிந்திக்க முடியும். அது சாத்தியமாகி வருகின்றது என்பதையே இன்றைய சிற்றிதழ்ச் செயற்பாடுகள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
(கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் 08.01.2011 அன்று சிற்றிதழ் அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
அடிக்குறிப்புகள்
(1) வல்லிக்கண்ணன்> ‘இலக்கியச் சிற்றிதழ்கள்’ http://www.encyclopediatamilcriticism.com/little_magazines.php
(2) கவிஞர் ப. பசுபதிராஜா> ஜேர்மனி>
http://tamilamutham.net/home/index.php?option=com_content&view=article&id=395;-20-&catid=55;germany&Itemid=415
(3) பேராசிரியர் அ. பசுபதி (தேவமைந்தன்)> ‘இணைய இதழா அச்சிதழா எது நீடிக்கும்’>
http://www.pathivukal.com/
(4) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%
E0%AE%B5%E0%AF%81
(5) எஸ். ராமகிருஷ்ணன்> ‘இணைய எழுத்து’> http://www.geotamil.com/pathivukal/s_ramakrushnan_on_internet_writing.htm
உசாவியவை
1. குணேஸ்வரன். சு : “புலம்பெயர் சஞ்சிகைகள் – ஆய்வுக்கான ஓர் அறிமுகம்”> கலைமுகம்> ஜனவரி-ஜீன் 2008> இதழ் 47> ப3-7
2. குணேஸ்வரன். சு : “புலம்பெயர் சிற்றிதழ்களின் அரசியல்” 2010 ஆய்வரங்கச் சிறப்பு மலர்> உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு> கோவை ப.325
(பின்வரும் சுட்டியினூடாக கட்டுரையை முழுவதும் வாசிக்கலாம் http://vallaivelie.blogspot.com/ அல்லது
http://kathiyaalkal.blogspot.com/2010_08_01_archive.html)
3. தீபச்செல்வன் : “இணையம் : அளவுகளையும் தாமதங்களையும் அகற்றிய கட்டுப்பாடற்ற வெளி”> கலைமுகம்> 50 வது சிறப்பிதழ்> 2010>
ப225-228
4. ஹரன் : “இணையம்: கதையாடல்களுக்கான புதிய வெளி”> கலைமுகம்> ஜீலை-டிசம்பர் 2007> இதழ் 46> ப3-9
5. http://www.google.com : இணைய இதழ்கள் மற்றும் வலைப்பதிவுகள்
6. http://www.noolaham.org
7. http://www.pathivukal.com/ : கணித்தமிழ் பிரிவில் உள்ள கட்டுரைகள்
8. http://www.tamilcircle.net
9. http://www.tamilmanam.net/
s kuneswaran <kuneswaran@gmail.com
நன்றி: பெப்ருவரி 2011 இதழ் 134
2. இணையத்தில் தமிழ்!
– முனைவர் மு. பழனியப்பன் –
தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்துக் காண்டே வருகிறது. இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில் பயன்படுத்தப் பெற்று வருகின்றது. ஏறக்குறைய இணையப் பயன்பாட்டில் தமிழ் மொழி குறித்த தகவல் பரிமாற்றம் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இணையத்தில் தமிழ் பற்றி அறிந்து கொள்ள, தமிழ்ச் செய்திகளை அறிந்து கொள்ள பற்பல வாய்ப்புகள் உள்ளன. தமிழில் உள்ள நூல்களை இணையத்தில் வாசிக்கமுடியும். தமிழ் நூல்களை மின்நூல்களாக மாற்றி இணையத்தில் வழியாக அனைவரும் பயன்கொள்ளும்படிச் செய்யப்பட்டு வருகிறது. இவற்றை மின் நூலகம், இணைய நூலகம் என்று அழைக்கின்றனர். கள்வரால் களவாடப்பட முடியாமல், வெந்தணலில் தமிழ் ஏடுகள் தற்போது இணையத்தில் ஏற்றி அழியா நிலைக்குச் சென்றுவிட்டன.
மதுரைத்திட்டம் என்ற இணைய தளம் ஏறக்குறைய பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தன்னுள் மின்பதிப்பாகக் கொண்டுள்ளது. http://www.project madurai.org” இணையதள முகவரிக்குச் சென்றால் இத்தளத்தைப் பார்வையிடலாம். இத்தளத்தின் சிறப்பு என்னவென்றால் பல தமிழ் அன்பர்கள் ஒன்றுகூடி, அவர்கள் அவர்களாகவே சிலச்சில நூல்களை மின்வடிவமாக மாற்றி ஒட்டுமொத்தமாகத் தந்திருப்பதுதான். இது ஒரு கூட்டு முயற்சியாகும்.
தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் இணைய நூலகம் மிகவும் பயன்பாடு மிக்கது. இதனுள் பல நூறு நூல்கள் சேமிக்கப் பெற்றுள்ளன. நூல்களை அடுத்த அடுத்த பக்கங்களுக்குச் சென்று படிப்பது போல இணையப் பக்கங்களைப் புரட்டி நூல்களைப் பார்வையிட முடியும். மேலும் இந்நூலகத்தில் தேடுதல் வசதி உள்ளது. அதாவது தேடுதல் வசதி என்பது சொல் தேடல் என்பதாகும். திருக்குறளில் ஏதாவது ஒரு சொல் எந்தெந்த இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கண்டறியவேண்டுமானால் இத்தளத்திற்குச் சென்று திருக்குறள் பகுதியை அழுத்தி அதன்பின் தேடல் பகுதியில் தேவையான சொல்லை இட்டால் அந்தச் சொல் பயன்படுத்தப் பட்டுள்ள இடங்கள் அனைத்தும் கிடைக்கும். இப்படியே ஒவ்வொரு நூலிலும் தேடல் வசதி தரப் பெற்றுள்ளது. தற்போது தமிழ் இணையப் பல்கலைக் கழகம் என்ற பெயர் உலகத் தமிழ் இணையப் பயிற்சிக் களம் என்பதாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இருப்பினும் http://www.tamilvu.org என்ற முகவரியில் இத்தளம் இயங்கி வருகிறது. இத்தளத்தில் கலைக் களஞ்சியங்களும் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி சொல் வளம் பெற இயலும்.
அடுத்து சென்னை லைப்ரரி என்ற தளம் குறிக்கத்தக்கது ஆகும். சிறுகதைகள், நாவல்கள் முதலியனவற்றைப் படிப்பதற்கு இந்தத்தளம் உதவுகின்றது. குறிப்பாக சங்க இலக்கியம், சங்கம் மருவிய இலக்கியங்கள் போன்றனவும் இத்தளத்தில் கிடைக்கின்றன. கம்பராமாயணம் முழுவதும் இதனுள் கிடைக்கின்றது. பெரும்பாலும் இணையத்தில் தற்போது முல நூல்கள் மட்டுமே கிடைக்கின்றன. உரை நூல்கள் கிடைப்பதில்லை. கல்கியின் நாவல்கள், புதுமைப்பித்தன் கதைகள், ஜெயகாந்தன் படைப்புகள் போன்றவற்றை இதனுள் பெற இயலும்.
அடுத்துப் பொள்ளாச்சி நசன் அவர்களின் தமிழம்.நெட் இணைய தளம் பல அறியப்படாத நூல்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இத்தளத்தில் இன்னும் பல சிறப்புகள் உள்ளன. முன்னூறு தமிழ் அறிஞர்களின் புகைப்படங்கள் கிடைக்கின்றன. மேலும் சிற்றிதழ்களின் கண்காட்சியாக பல சிற்றிதழ்கள் பார்வைக்கு உள்ளன. தமிழில் உள்ள குறிக்கத் தக்க இணையதளங்களுக்கான இணைப்பு தரப்பெற்றுள்ளது. இவ்வகையில் மிக முக்கியமான தளமாக இது விளங்குகின்றது.
இதுபோன்று தமிழ் மரபு அறக்கட்டளைhttp://www.tamilheritage.org) , நூலகம்.காம் போன்ற பல தளங்கள் வாயிலாக தமிழ் நூல்களை இணைய நூல்களாகக் காண முடிகின்றது. தமிழ் மரபு அறக்கட்டளை இணையதளம் ஓலைச்சுவடிகளை மின்வடிவில் தருவதில் பெரு முயற்சி எடுத்து வருவது குறிக்கத்தக்கது.
சமண சமய நூல்களினைப் பார்வையிட ஜெயின்வோர்ல்டு .காம் என்ற இணையதளம் பயன்படுகிறது. தமிழ் விக்கிபீடியா என்ற இணையதளம் தமிழின் கட்டற்ற கலைக் களஞ்சியமாக உள்ளது. தமிழ்மொழியில் உள்ள தகவல்களைப் பெற இத்தளம் மிக முக்கியமானதாகும். மேலும் இதனுள் இடுகை இடுதலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். யார் வேண்டுமானாலும் திருத்தலாம். அதற்கான வழிமுறைகள் படி நுழைய வேண்டும். இதனை வளப்படுத்தவே தற்போது இளைஞர்களுக்குப் போட்டிகள் வைக்கப் பெற்றுள்ளன.
இணையப் பரப்பில் அடுத்து முக்கியமாகக் கருதத்தக்கது இணைய இதழ்கள் ஆகும். இணையத்தில் மட்டுமே இடம் பெறும் இதழ்களை இணைய இதழ்கள் என்று குறிப்பிடவேண்டும். பிரபல தமிழ நாளிதழ்கள், தமிழ் வார இதழ்கள் அனைத்தும் இணைய முகவரியைப் பெற்றுள்ளன. இருப்பினும் இவற்றை இணைய இதழ்கள் எனக் கருதமுடியாது. இணையத்தில் மட்டுமே செய்திகளைத் தருகின்ற இதழ்களே இணைய இதழ்கள் எனப்படும்.
அவ்வகையில் குறிக்கத்தக்க தமிழ் இணைய இதழ்களாக கருதத்தக்கனவாக திண்ணை, பதிவுகள், முத்துக்கமலம், வரலாறு.காம், வார்ப்பு, நிலாச்சாரல், தமிழோவியம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். பதிவுகள், நிலாச்சாரல், தமிழோவியம் போன்றன வெளிநாட்டுத் தமிழர்கள் நடத்தும் இணைய இதழ்கள் ஆகும். இவற்றுள் திண்ணை இதழ் மிகச் சிறப்பான இடத்தை வகித்து வருகின்றது. இது வாரம் ஒருமுறை தன் பக்கத்தை மாற்றி அமைக்கிறது. பல இலக்கியச் செய்திகள் இதில் இடம் பெறுகின்றன. வார்ப்பு இதழ் கவிதைகளை மட்டுமே தாங்கி வரும் இதழாகும். இதனுடன் கவிதை நூல்களின் விமர்சனங்கள், மற்றும் நிகழ்வுகளின் அறிவிப்புகள் போன்றனவும் இவ்விதழில் இடம் பெறுகின்றன. இது தவிர இன்னும் பல இணைய இதழ்கள் தமிழ் இணையப் பரப்பில் உள்ளன.
வரலாறு .காம் என்ற இதழ் திருச்சி அறிஞர் கலைக்கோவன் அவர்களின் மேற்பார்வையில் நடத்தப் பெற்றுவருகின்றது. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தின் பல செய்திகளை, அரிய புகைப்படங்களுடன் தாங்கி வரும் இணைய இதழ் இதுவாகும். பழைய இதழ்களைக் காணும் வசதியும் இதில் உள்ளது. எனவே இது நல்லதொரு ஆவணமாக விளங்குகின்றது. ஏறக்குறைய ஆயிரம் செய்திகளைத் தொட்டுவிடும் தூரத்தில் இது வளர்ந்து வருகிறது. இது ஒரு மாத இதழாகும்.
செய்திகளை மட்டும் வழங்கும் தமிழ் இணைய இதழ்களும் உள்ளன. தட்ஸ் தமிழ்.காம், எம்.எஸ்.என் வெப்தூனியா.காம், யாஹூ தமிழ்.காம் போன்ற தளங்கள் இவ்வகையில் குறிக்கத்தக்கன. இந்நிறுவனங்கள் உலக அளவில் பெருமை பெற்றனவாகும். இவை தமிழிலும் தளங்கள் வைத்திருப்பது தமிழின் இணைய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவதாக உள்ளது. இவற்றின் வழி உலகத்தின் உடனடிச் செய்திகளை உடனே தெரிந்து கொள்ளமுடிகின்றது.
தமிழ் இணையப் பரப்பில் தற்போது வலைப்பூக்கள் அதாவது பிளாக்கர் என்ற அமைப்பு மிகச் சிறந்த இடத்தைப் பெற்றுவருகின்றது. கூகிள் என்ற நிறுவனம் பிளாக்கர் என்ற வசதியை வழங்குகின்றது. இந்த வசதி கூகிளின் மின்னஞ்சலான ஜிமெயில் பெற்றிருப்பவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஜி மெயில் முகவரியைப் பெற்றுள்ள எவரும் பிளாக்கரைத் தொடங்கலாம். எத்தனை வேண்டுமானாலும் தொடங்கலாம். பிளாக்கரில் புகைப்படங்கள், அசை படங்கள், படக் காட்சிகள் போன்ற எவற்றையும் சேர்க்க முடியும். அவற்றைப் பகிர்ந்துகொள்ள முடியும். பகிர்ந்து கொண்ட செய்திகளுக்கான விமர்சனங்களையும் பார்ப்பவர்கள் வழங்கமுடியும். இந்த வசதி மிகச் சிறப்பானதாகும். வளவுபிளாக்ஸ்பாட்.காம், மானிடள்பிளாக்ஸ்பாட்.காம், இட்லிவடைபிளாக்ஸ்பாட்.காம், மலையருவிபிளாக்ஸ்பாட்.காம், தமிழ்க்கடல்பிளக்ஸ்பாட்.காம் போன்றன இவ்வகையில் குறிக்கத்தக்கன.
இந்த வலைப்பூக்களில் இடம் பெறும் செய்திகளை ஒன்று கூட்டும் அரங்கங்கள் பல உள்ளன. அதாவது ஒருவர் வலைப்பூவில் ஒரு செய்தியைப் பதிவு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அதனை ஒருங்குகூட்டும் ஒரு அமைப்புக்கு அவர் தெரிவித்து விடவேண்டும். அதன்பின் அந்த ஒருங்கு கூட்டும் இணையப்பக்கத்திற்கு வரும் அனைவருக்கும் அந்தச் செய்தி தெரியவரும். இதன் முலம் வலைப்பக்கச் செய்திகள் பரவலாக்க முடிகிறது.
இந்த ஒருங்கு கூட்டும் இணையப் பக்கங்களில் திரட்டி.காம், தமிழிஷ் .காம், தமிழ்மணம் .காம், தமிழ் வெளி.காம் போன்றன குறிக்கத்தக்கன. தமிழ் இலக்கியப் பாடல்களைத் தக்க இசையோடு பல இணையதளங்கள் தருகின்றன. இசைத்தமிழை வளர்க்கும் இனிய பணி இதுவாகும். முருகன் குறித்த தமிழ் இலக்கியப் பாடல்களைக் கேட்கவேண்டுமானால் கௌமாரம்.காம் செல்ல வேண்டும். தமிழ் மரபு இசை மாறாமல் திருப்புகழ், திருமுருகாற்றுப்படை போன்றவற்றை இதில் கேட்டு ரசிக்கலாம். பன்னிரு திருமுறைகளையும் மரபு இசையுடன் தேவாரம்.காம் என்பதில் கேட்டு ரசிக்க முடியும். ஓதுவார்.காம் என்பது தமிழக இசைவாணர்களான புகழ்பெற்ற ஓதுவார்களின் இசைவடிவங்களை இணைத்துத் தரும் தளமாகும். இதுபோன்று ஆழ்வார்பாசுரங்கள் http://www.tamilheritage.org) என்ற தளத்தின் வாயிலாகக் கேட்க முடியும்.
இணையத்தமிழ் வானொலி சேவை இன்னும் குறிக்கத்தக்கதாகும். பி.பி.சி தமிழ்ச்சேவை, வேரித்தாஸ்வானொலி, சக்தி பண்பலை போன்றன இவற்றுள் குறிக்கத்தக்கன. இதனுள் மிக முக்கியமான வசதி என்னவென்றால் நாள் தேதி குறிப்பிட்டு வானொலி நிகழ்ச்சிகளைத் திரும்பக் கேட்க இயலும் என்பதுதான். வானொலி நிகழ்ச்சிகளை உரிய நேரத்தில் கேட்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இவற்றில் இல்லை. தேவையான நிகழ்ச்சியை தேவையான போது கேட்டுக் கொள்ளும் வசதி இதனுள் உள்ளது.
இதுதவிர தமிழ்த் திரை இசைப் பாடல்களைக்கேட்க பல தளங்கள் உள்ளன. தேனிசை. காம், ஓசை.காம் போன்றன இவ்வகையில் குறிக்கத்தக்கன. இவ்வாறு இசைத்தமிழ் பல நிலைகளில் முன்னேறி இணையத்துக்குள் ஆட்சி செலுத்தி வருகின்றது.
இதுதவிர குழந்தைகள் கற்பதற்கான தமிழ்ப் பாடத் தளங்கள் பல உள்ளன. குறிப்பாக தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளம் இதற்குப் பெரிதும் உதவுகின்றது. மழலைக் கல்வி முதல் இளங்கலைக் கல்வி வரை அனைத்து நாட்டுத் தமிழரும் கற்கும் வண்ணம் ஒலி, ஒளிக் காட்சிகளுடன் பாடங்கள் இதனுள் அமைக்கப் பெற்றுள்ளன. மேலும் இணைய வகுப்பறை சேவையும் இதனுள் தொடங்கப் பட்டுள்ளது. இதன் வழியாக வகுப்பறைத் தோற்றத்தினை வீட்டில் அமர்ந்து பெற இயலும். இணையவழித் தேர்வுகளும் இதன் வழியாக நடத்தப்படுகின்றன.
மழலைகள்.காம் என்ற தளமும் குழந்தைகளுக்கான தகவல்களை வழங்கி வருகிறது. இதுபோன்று பல தளங்கள் தமிழைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுதவிர தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் தன் பாடநூல்களை இணையத்தில் இட்டுள்ளது. இதன் காரணமாக இந்தப் பாட நூல்களை உலகத்தமிழர் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் குறிப்பிட்ட பாட நூலைத் தன் குழந்தைகளுக்கு வழங்கி அவர்களின் தமிழறிவை வளர்க்க இயலும். இவ்வாறு அடுத்த தலைமுறைக்குத் தமிழ் இணையத்தின் வாயிலாகக் கொண்டு சேர்க்கப்படுகிறது. இதுதவிர நகைச்சுவைப் பக்கங்களும் உள்ளன. அப்புசாமி. காம் என்ற தளம் பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியால் நடத்தப்படுகிறது. இவரின் கைவண்ணத்தில் எழுந்த நகைச் சித்திரங்களை இவற்றில் வாசிக்க முடியும். இதுபோன்று தனிநபர் இணையப் பக்கங்களும் தமிழில் அதிகமாக வாசிக்கப் பெறுகின்றன. எழுத்தாளர்களான ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா போன்றோர் தனக்கான இணையப் பக்கங்களை உருவாக்கியுள்ளனர்.
இதனுள் வாசகர்களுடனான உரையாடலையும் அவர்கள் நிகழ்த்துகின்றனர். சமையல் குறிப்புகள், ஜோதிடக் குறிப்புகள் போன்றவற்றைத் தமிழில் தரும் தளங்களும் உள்ளன.
மின்அஞ்சல் குழுமங்கள் என்ற குழு அமைப்பும் இணையத்தமிழுக்குப் பெருமை சேர்த்து வருகின்றது. அதாவது மின் அஞ்சலை ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பலாம். இதற்குக் குழு மடல் என்று பெயர். இந்தக் குழு மடல் போலவே ஒரு குழுவை மின்அஞ்சல்காரர்கள் உருவாக்கிக் கொள்வார்கள். இதில் இணைவதற்கு உரிய நடைமுறைகளைச் செய்துவிட்டால் ஒருவர் மின்மடல் குழுமத்தில் உறுப்பினராகிவிடலாம். பின் ஒருவர் இடும் மடல் அனைத்து உறுப்பினருக்கும் கிடைக்கும். ஒரு செய்தியைப் பற்றி அனைவரும் விவாதிக்கலாம். இந்த முறையில் முத்தமிழ்குழுமம், மின்தமிழ் குழுமம் போன்ற மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. இவையும் பல இணையத் தமிழ் விவாதங்களுக்கு களம் அமைத்துத் தருகின்றன.
மொத்தத்தில் உலக அளவில் தமிழின் தரத்தை உயர்த்த இணையத்தமிழ் உதவி வருகின்றது. இதனைச் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய கடமை அனைத்து தமிழ் இணையப் பக்கங்களுக்கும் உண்டு.
நன்றி: http://manidal.blogspot.com/2010/04/blog-post_27.html
பதிவுகள் ஜூலை 2010 இதழ் 127
3. கட்டுரை இலக்கியம்
– பா. ராகவன் –
நண்பர்களே, நல்லபல ஓட்டல்களும் பூங்காக்களும் திரையரங்குகளும் கூப்பிடு தூரத்தில் இருக்கின்ற இந்த இடத்தில், தமிழ் கட்டுரை இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து ஆதௌ கீர்த்தனாரம்பத்திலிருந்து நான் பேச ஆரம்பித்தால் பெரிய பிரச்னையாகி விடக்கூடிய அபாயம் இருக்கிறதாக நினைக்கிறேன். மேலும் தமிழில் கதையல்லாத எழுத்துவகையின் வயசும் மிக அதிகம் என்பது இதற்காகக் கொஞ்சம் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது தெரிந்தது. நவீன தமிழ்ச்> சிறுகதை இடுப்பில் அரசிலை நழுவ, நீந்தத் தொடங்கியிருந்த காலத்தில் கட்டுரை இலக்கியம் என்பது எட்டுமுழ வேட்டியும் சங்குமார்க் லுங்கியும் அணிந்து உலா வரத் தொடங்கியிருக்கிறது. வழக்கம்போல அதைப் பண்டிதர்களிடமிருந்து பாரதி பிடுங்கிக்கொண்டுவந்து மக்கள் மத்தியில் புழங்க வி ட்டாலும் தொடர்ந்து பல காலத்துக்குக் கட்டுரைகள் என்பவை இந்தமாதிரி பொருட்படுத்திப் பேசத் தகுந்ததொரு விஷயமாக இல்லை.
தமிழ்க் கட்டுரைகளின் ஆரம்பக் காலம் எப்படி இருந்திருக்கிறது என்பதை இன்றைக்குவரை உள்ள நமது தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்துத் தமிழ்ப் புத்தகங்களிலிருந்து சுலபமாக அறியமுடிகிறது. இன்றைய தலைமுறைத் தமிழ்க் குழந்தைகள் ஏன் தமிழ் என்றாலே தலைதெரிக்க ஓடுகின்றன என்பதற்கான
உதாரணங்களாகவும் அவை திகழ்கின்றன.
ஆகவே இந்த 2004ம் ஆண்டில் கட்டுரைத் துறை எப்படி இருக்கிறது என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்பதன்மூலம் நாம் எத்தனை தூரத்துக்கு வளர்ந்து வந்திருக்கிறோம், அல்லது உட்கார்ந்து பல் குத்திக்கொண்டிருந்திருக்கிறோம் என்கிற உண்மையைக் கண்டடையமுடியும் என்று தோன்றுகிறது.
பழம்பெருமை பேசிக்கொண்டிருப்பதைக் காட்டிலும் இனி செய்யவேண்டியவை குறித்துச் சிந்திப்பதே இம்மாதிரி மாநாடுகளின் ஆகப்பெரிய அர்த்தமாக இருக்கமுடியும் என்று நினைக்கிறேன்.
O
இன்றைக்குத் தமிழில் கட்டுரைகள், மூன்று தளங்களில் தொடர்ந்தும் தீவிரமாகவும் எழுதப்பட்டுவருகின்றன. வாரப்பத்திரிகைகள் மற்றும் தினசரிகள் அவற்றுள் முதலானவை. சிற்றிதழ் சார்ந்த எழுத்துகள் அடுத்தது. மூன்றாவதும் முக்கியமானதுமான தளம், இணையம் என்கிற இண்டர்நெட்.
எழுத எடுத்துக்கொள்ளப்படுகிற விஷயங்கள், கையாளும் மொழி, பின்னணியில் இருந்து செய்யப்படக்கூடிய ஆய்வுகள், அலைச்சல்கள், தொகுப்பு நேர்த்தி, வாசிக்கிற குழுவினரின் ஏற்புப் பக்குவம், எதிர்வினைகள் அனைத்துமே இந்த மூன்று தளங்களிலும் முற்றிலும் வேறுவேறானவையாகவே இருக்கின்றன. இவை ஒருபோதும் ஒன்றையொன்று நெருங்கியோ, அனுசரித்தோ வரப்போவதில்லை என்றாலும், இந்த வித்தியாசங்கள்தான் கதையல்லாத எழுத்து முயற்சிகளை இன்றளவும் புத்துணர்சியுடன் வைத்திருக்கிறது.
ஒருபக்கச் சிறுகதைகள், சீர்காழி ரேவதி ஜோக்குகள், கண்களில் நீர்மல்க வைக்கிற தொடர்கதைகள் விஷயத்தில் வெகுஜன இதழ்களில் பிரமாதமான மாறுதல்கள் ஏதும் சமீபகாலத்தில் ஏற்படவில்லை என்றாலும் கதையல்லாத விஷயங்களின் தேர்விலும் வெளிப்பாட்டிலும் குறிப்பிடத்தகுந்த மாறுதல்கள் உண்டாகியிருப்பதாகவே நினைக்கிறேன்.
லட்சக்கணக்கான வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுகிற பத்திரிகைகள், இப்போது தம் வாசகர்களின் ரசனையை உயர்வாக மதிக்கத் தொடங்கியிருக்கின்றன. நேற்றைக்கு வரைக்கும் சிற்றிதழ்களுக்கும் வார இதழ்களுக்கும் இடையில் இருந்த பெர்லின் சுவர் இடிக்கப்பட்டிருக்கிறது. நல்ல பல சிற்றிதழ் சார்ந்த படைப்பாளிகள் ஆர்வமுடன் வார இதழ்களில் பத்திகள் எழுதுகிறார்கள். தமிழில் இதற்குமுன் இல்லாத அளவுக்கு அரசியல் வரலாறுகளும் சர்வதேச அரசியல் விவகாரங்களும் பொருளாதாரக் கட்டுரைகளும் நீண்ட தொடர்களாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. சதாம் உசேனின் வாழ்க்கையை சம்பந்தப்பட்ட பத்திரிகை பரபரப்பு கருதி வெளியிட்டாலும் அதனூடாக மத்தியக் கிழக்கு நாடுகளின் எண்ணெய் அரசியலும் இனப் பிரச்னை விவகாரங்களும் இன்னபிறவும் தமிழ் வாசகர்களுக்குச் சென்று சேர்ந்துவிடுவதை நாம் நிச்சயம் புறக்கணித்துவிட முடியாது.
கடந்த சில மாதங்களாக நான் பயணம் செய்ய நேர்கிற அனைத்து இடங்களிலும் சந்திக்கிற வாசகர்கள் மறக்காமல் ராமகிருஷ்ணனின் துணையெழுத்து குறித்துப் பேசுகிறார்கள். ஜெயமோகனின் சங்கச் சித்திரங்களை சிலாகிக்கிறார்கள். இவர்கள் இதற்குமுன் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்று ஆர்வமுடன் விசாரிக்கிறார்கள். நேற்றைக்கு முந்தினம் நெய்வேலி போயிருந்தேன். ஒரு எஸ்.டி.டி. பூத் வைத்தி ருக்கும் இளைஞர், ராமகிருஷ்ணனின் விகடன் கட்டுரைகளின் வழியே அவரது உபபாண்டவத்தைச் சென்றடைந்த கதையைச் சொன்னபோது உண்மையிலேயே சந்தோஷமாக இருந்தது.
கவனமுடன், ஒரு சிறுகதைக்குரிய இறுக்கமும் கட்டுக்கோப்பும் கொண்டு எழுதப்படுகிற அடர்த்தியான கட்டுரைகள் பல இன்றைக்கு வெகுஜனப் பத்திரிகைகளில் வரத் தொடங்கியிருக்கின்றன.
மூன்று வருடங்களுக்கு முன்பு குமுதம் வார இதழில் பாகிஸ்தானின் அரசியல் வரலாறை நான் ஒரு தொடராக எழுதினேன். சாமிநாத சர்மா தொடங்கிவைத்து, அவரோடேயே அடக்கமும் செய்யப்பட்டுவிட்ட அரசியல் வரலாறு என்கிற எழுத்துப்பிரிவு மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியபோது தமிழ் வாசகர்கள் அளித்த வரவேற்பும் காட்டிய ஆர்வமும் சாதாரணமாக இல்லை. அதன் தொடர்ச்சியாக ஆப்கனிஸ்தான் குறித்தும் அமெரிக்க அரசியல் குறித்தும் சாண்டில்கன் கதைகள் அளவுக்கு நீளமாக எழுதிக்கொண்டே போனாலும் விடாமல் வாசித்து உடனுக்குடன் எதிர்வினை புரியும் ஒரு பெரிய வாசகர் சமூகம் வெகுஜன பத்திரிகை உலகில் உருவாகியிருக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.
இதற்கு, சிறுகதைகளும் தொடர்கதைகளும் தொடர்ந்து அளித்துவரும் ஏமாற்றம் ஒரு முக்கியக் காரணியாக இருப்பதை நிராகரிக்க முடியவில்லை. கதைகளைக் காட்டிலும் யதார்த்தம் சுவாரசியமாக இருப்பதாக வாசகர்கள் நினைத்திருக்கலாம். அல்லது கதை படிக்கிற ஆர்வத்தைத் தொலைக்காட்சி ஒழித்தது காரணமாயிருக்கலாம். தொலைக்காட்சித் தொடர்களுக்குச் சற்றும் சளைக்காத அறுவைக் கதைகளாகவே தொடர்ந்து பிரசுரமாவதும் காரணமாயிருக்கலாம்.
இன்றைக்கு வாரப்பத்திரிகைகளில் தமிழ் லினக்ஸ் பற்றிப் பேசப்படுகிறது. குவாண்டம் தியரி குறித்து எழுதப்படுகிறது. மரபணுச் சோதனைகள் குறித்து உடனுக்குடன் எளிய தமிழில் விரிவான அறிமுகங்கள் தரப்படுகின்றன. இலக்கியத் துறை நிகழ்வுகள் குறித்து மனுஷ்யபுத்திரன் தன் கூர்மையான விமர்சனங்களைச் செய்தித் தொனியில் முன்வைக்கவும் இடம் இருக்கிறது. ப. சிதம்பரத்தால் ஆரோக்கிய அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகள் தர முடிகின்றது.
இதை எழுதமுடியாது என்பதே இல்லாமல் எதுவும் எழுதப்படலாம் என்று வார இதழ்கள் தம் முகத்தை மாற்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அடிப்படையில் ஒரு பொதுவான இலக்கணம் இதற்கு இருக்கிறது எப்பேற்பட்ட கனமான விஷயமானாலும் எளிமையாக எழுதப்படவேண்டும் என்பதே அது.
உ.வே.சா., சாமிநாத சர்மா வழியில் உயிர்பெறத்தொடங்கிய தமிழ் வெகுஜனப் பத்திரிகைக் கட்டுரை இலக்கிய மரபு திரு. சுஜாதாவின் வருகைக்குப் பிறகு அதன் அதிகபட்ச சாத்தியங்களைத் தொட்டு இன்றைக்கு மிகவும் நம்பிக்கையளிக்கும் விதத்தில் மேலும் பல எல்லைகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் ஜீவஜோதியும் செரினாவும் இல்லாதுபோனாலும் பத்திரிகைக் கட்டுரைகளில் சுவாரசியப் பஞ்சம் நேராது என்கிற நிலைமை உருவாகிவிடும் என்றே நினைக்கிறேன்.
சுவாரசியம் என்பதென்ன? வாசகர்களின் ரசனை உயர்வு. வாரப் பத்திரிகைகளைப் பொறுத்தவரை இது அவ்வளவுதான்.
O
சிற்றிதழ்களைப் பொறுத்தவரை அவற்றில் வெளியாகும் கட்டுரைகளின் மொழி ஏனோ நாளுக்குநாள் இறுக்கமாகிக்கொண்டே போவதாகத் தோன்றுகிறது. தீவிரமான விஷயங்களை விவாதிக்கும் கட்டுரைகளை உள்வாங்கிக்கொள்வதில் தொடர்ந்து சிரமம் இருக்கிறது. இத்தனைக்கும் தமிழ்ச் சிற்றிதழ் சூழலை வலுப்படுத்தி, வளர்த்த முன்னோடிகள் மொழி விஷயத்தில் மிகவும் அக்கறை செலுத்தி, எளிமையை ஒரு பிரதானமான அளவுகோலாக வைத்திருந்ததை நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.
அந்தக் காலத்துச் சிற்றிதழ் படைப்பாளியான ஏ.கே. செட்டியார் போன்றவர்களுக்கும் சரி. தற்காலப் படைப்பாளிகளான அசோகமித்திரன், சுந்தரராமசாமி போன்றோரும் சரி. சிற்றிதழ் இயக்க முன்னோடிகள் அனைவருமே விஷயநேர்த்தி அளவுக்கு மொழி நேர்த்தியிலும் கவனம் செலுத்திவந்திருக்கிறார்கள்.
ஆனால் சமீபகால சிற்றிதழ்களில் இடம்பெறுகிற பல முக்கியமான கட்டுரைகள் அவற்றில் கையாளப்படும் மொழியினாலேயே உரிய கவனம் பெறாமல் போய்விடுவதாகத் தோன்றுகிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைக்குச் சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புகள் வாசிக்கக் கிடைக்கின்றன. அதிகம் பிரபலமடையாத – அதே சமயம் முக்கியமான பல உலக எழுத்தாளர்கள் குறித்த விரிவான, முழுமையான அறிமுகங்கள் அவர்கள் படைப்புகளுடன் சேர்த்துக் கிடைக்கின்றன.
சொல்புதிது இதழின் வருகைக்குப் பிறகு இலக்கியம் மட்டுமல்லாமல் இந்தியத் தத்துவங்கள், மேலை நாடுகளின் தத்துவங்கள் குறித்த விரிவான அறிமுகமும் அலசலும் வாசிக்கக் கிடைப்பதை ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதுகிறேன்.
சிற்றிதழ்களில் அதிகம் எழுதாவிட்டாலும் சிற்றிதழ் சார்ந்த சிந்தனையாளராகவே அறியப்படும் வேங்கடாசலபதியின் வருகையும் செயல்பாடும் ஆராய்ச்சிபூர்வமான கட்டுரைகளின் பெருக்கத்துக்கு மிகமுக்கியமானதொரு வாசல் திறந்திருப்பது சமீபகாலத்தில் நிகழ்ந்ததுதான்.
பெரும்பாலான சிற்றிதழ் கட்டுரையாளர்கள் குழப்பமான மொழியையே தொடர்ந்து கையாண்டுகொண்டிருந்தாலும் வேங்கடாசலபதி, காலச்சுவடு ஆசிரியர் கண்ணன், சி. மோகன், ஜெயமோகன், சாருநிவேதிதா போன்ற சிலர் மிகுந்த மொழிப்பிரக்ஞையுடன் வாசக அக்கறையுடன் எழுதுவதை அவசியம் குறிப்பிடத் தோன்றுகிறது. குறிப்பிடப்படவேண்டிய முக்கியமான இன்னொரு நபர் மனுஷ் யபுத்திரன். கவிஞராகவே பெரிதும் அறியப்பட்டிருக்கும் மனுஷ்யபுத்திரனை அவரது கட்டுரைகளை முன்வைத்துத் தனியே குறிப்பிடவேண்டும் என்று நினைக்கிறேன். அடர்த்தியும் கூர்மையும் மிக்கத் தனது தலையங்கங்கள் மூலம் சமூக – அரசியல் நிகழ்வுகள் மீதான யோக்கியமான விமர்சனங்களைத் தொடர்ந்து முன்வைத்துவருகிறார் அவர்.
O
மூன்றாவதாக இணையம். வாரப்பத்திரிகைகளுக்கும் சிறுபத்திரிகைகளுக்கும் கூடக் கல்யாண சம்பந்தம் உருவாகிவிடும் போலிருக்கிறது. ஆனால் இந்த இரு தரப்புமே தமிழ் இணையத்தை இன்னும் பொருட்படுத்தவே ஆரம்பிக்கவில்லை என்பதை மிகவும் வருத்தத்துக்குரிய விஷயமாக நினைக்கிறேன்.
குறிப்பாக, கட்டுரைத் துறையைப் பொறுத்த அளவில் இன்றைக்கு இணையத்தில் நிகழும் சங்கதிகளை – நல்ல அர்த்தத்தில் – ஒரு புரட்சி என்றே சொல்லமுடியும். ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிக் கண்டங்கள் நீங்கலாக உலகின் அத்தனை கண்டங்களிலிருந்தும் பல தமிழ்ப் படைப்பாளிகள் மிகத் தீவிரமாகவும் சி றப்பாகவும் பல்வேறு துறைகளில் தொடர்ந்து ஆக்கபூர்வமான கட்டுரைகளைத் தந்துகொண்டிருக்கிறார்கள். பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், கம்ப்யூட்டர் தொழில் நுட்பம், விஞ்ஞானம், அரசியல் ஆகிய ஐந்து துறைகள் தமிழ் இணையத்தில் அதிகம் அலசப்படுகின்றன.
இத்தனைக்கும் வார இதழ்களுக்கும் சிற்றிதழ்களுக்கும் இருப்பதுபோன்ற நீண்ட சரித்திரமெல்லாம் தமிழ் இணையத்துக்கு இல்லை. ஒரு பத்திருபது வருஷங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டு மூன்று நான்கு வருடங்களாகத்தான் இணையத்தில் தீவிரமாகத் தமிழ் புழங்க ஆரம்பித்திருக்கிறது.
இரா. முருகன், ஜெயமோகன், பாவண்ணன் போன்ற தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர்கள் தவிர, இணையத்திலேயே பிறந்து வளர்ந்த எழுத்தாளர்கள் ஏராளமானவர்கள் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாகப் புகலிடத் தமிழர்களின் இன்னொரு தாய்வீடாகவே தமிழ் இணையம் இன்றைக்கு ஆகியிருக்கிறது என்று சொல்லிவிடமுடியும்.
கோ. ராஜாராம் நடத்திக்கொண்டிருக்கிற ‘திண்ணை’ என்கிற மின்னிதழும் வ.ந. கிரிதரனின் ‘பதிவுகள்’ மின்னிதழும் தொடர்ந்து தீவிரமாக, கட்டுரை இலக்கியத்துக்கு ஆற்றிவரும் பங்கினைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். மிகச் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட மாலனின் ‘திசைகள்’ குறுகிய காலத்தில் செய்திருக்கும் சாதனைகள் பிரமிப்பூட்டுபவை.
இணையத்தில் எழுதும் எழுத்தாளர்கள், தமிழ் சமூகத்தின் தற்கால நடப்புகளை இணையத்திலிருந்தே செய்தியாகப் பெறுகிறார்கள். பிறகு மின் குழுக்களில் நண்பர்களுடன் விவாதிக்கும்போது செய்திகளின் பல பரிமாணங்கள் வெளியாகின்றன. கட்டுரையாகப் பதிவு செய்யப்படவேண்டிய விஷயங்களை உடனுக்குடன் எழுதி மின்னிதழ்களுக்கு அனுப்புகிறார்கள்.
பத்திரிகைகளில் இருப்பது போல இலக்கிய வாசகர்கள் – வெகுஜன வாசகர்கள் என்கிற பாகுபாடுகள் இன்னும் இணையத்தைத் தீண்டவில்லை என்பதால் எல்லா மின் இதழ்களிலும் மின் குழுக்களிலும் எல்லாவிதமான எழுத்தாளர்களும் வாசகர்களும் ஒன்றாக இணைந்தே படைக்கிறார்கள்; படிக்கிறார்கள்.
விவாதங்களின்போது தரமான கட்டுரைகள் எவை, எந்தெந்தக் காரணிகளைக்கொண்டு தரம் மதிப்பிடப்படுகி றது என்பது வெளியாகிவிடுவதால் சராசரி வாசகர்கள் சுலபமாகத் தம்மை மதிப்பிட்டுக்கொள்ளவும் வாசி ப்புத் தரத்தை உயர்த்திக்கொள்ளவும் முடிகிறது. இதை மிக முக்கியமானதொரு விஷயமாக நினைக்கிறேன்.
தமது தீவிரமான நவீன இலக்கிய அறிமுகக் கட்டுரைகள் மூலமும் ஆலோசனைகள் மூலமும் ராயர் காப்பி க்ளப் என்கிற மின் குழுவிலிருந்து எழுத்தாளர் இரா. முருகன் உருவாக்கியிருக்கும் இளம் கட்டுரையாளர்கள் குறைந்தது ஐம்பது பேராவது இருப்பார்கள். சுமார் இருநூறு பேர் உறுப்பினர்களாக இருக்கிற ஒரு குழுவில் இரண்டு வருடங்களில் சுமார் ஐம்பது நம்பிக்கை அளிக்கும் கட்டுரையாளர்களை உருவாக்குவது என்பது சாதாரண விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. வெகுஜன இதழ்களிலோ, சிற்றி தழ்களிலோ இது நிச்சயம் சாத்தியமில்லை. இந்த ஐம்பது இளம் படைப்பாளிகளுக்குப் பத்திரிகை உலகோடு பரிச்சயம் கிடையாது. அவர்கள் எழுதும் விஷயம் அன்னா கோர்னிகோவாவின் அழகு பற்றியதாக இருக்கலாம், அருந்ததி ராயின் படைப்புகள் பற்றியதாக இருக்கலாம், அத்வைதம் குறித்தோ, அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து குறித்தாகவோ இருக்கலாம். இணையத் தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டுமே அவர்களைத் தெரியும்.
இதேபோல பழந்தமிழ் இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் குறித்துத் தீவிரமாக விவாதிக்கும் கட்டுரைகளைத் தொடர்ந்து பிரசுரிக்கும் ‘அகத்தியர்’ என்கிற மின் குழுவை மலேசியாவிலிருந்து டாக்டர் ஜெயபாரதி நடத்திவருகிறார்.
இங்கே வெளியாகும் கட்டுரைகளுக்கும் நமது பத்திரிகைக் கட்டுரைகளுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், இணையத்தில் எழுதப்படும் கட்டுரைகள் அதனளவில் ஒரு முழுமையையும் எளி மையையும் தவறாமல் பெற்றிருக்கின்றன. கடல் கடந்து வசிக்கிற இந்த எழுத்தாளர்கள் தமிழில் எழுதுவதை ஒரு சந்தோஷமான கடமையாக முதலில் நினைப்பதால், மற்ற அனைத்தைவிட மொழியின் அழகைத் தம் படைப்பெங்கும் பரவவிட நினைக்கிறார்கள். இறுக்கங்கள் இல்லை. மயக்கங்கள் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, எழுதுவோர் யாருக்கும் தம்மைப்பற்றிய பிரமைகள் கிடையாது.
கனடாவில் வசிக்கிற விஞ்ஞானியான வெங்கட் ரமணனும் சிங்கப்பூரில் வசிக்கிற இன்னொரு விஞ்ஞானியான முகுந்தராஜும் இன்னும் சில நண்பர்களும் லினக்ஸ் என்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை முற்றி லுமாகத் தமிழ்ப்படுத்தி, சராசரித் தமிழர்கள் அனைவரும் கம்ப்யூட்டரின் சௌகரியங்களை அனுபவி க்கவேண்டும் என்பதற்காக வருஷக்கணக்காகப் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஒரு வரியைப் புரிந்துகொள்வதற்கே கொஞ்சம் மெனக்கெடவேண்டும். ஆனால் டாக்டர் வெங்கட் ரமணன், தமிழ் லினக்ஸ் குறித்து மிக விரிவாகவும் அதிகபட்ச எளிமையாகவும் சுவாரசியமாகவும் ‘திண்ணை’ மின் இதழில் எழுதிய கட்டுரைத் தொடர் உண்மையிலேயே பிரமிப்பூட்டக்கூடியது. தமிழ்ப் பத்திரிகை உலகுக்கு அறிவியல் எழுத்து என்றால் திரு. சுஜாதா ஒருவரைத் தான் தெரியும். ஆனால் இணையத்தில் குறைந்தது பத்துபேராவது மிகத் தீவிரமாக அறிவியல் கட்டுரைகள் தந்துகொண்டிருக்கிறார்கள்.
அறிவியல் மட்டுமல்ல. வாழ்க்கை சார்ந்த அனுபவங்களை மண்ணின் வாசனையுடன் பதிவுசெய்யும் மதி என்கிற சந்திரமதி கந்தசாமி, ரமணீதரன் கந்தையா போன்றவர்கள், தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சிகளை உடனுக்குடன் அறிமுகப்படுத்தும் டாக்டர் பத்ரி சேஷாத்ரி, வெங்கட், முகுந்தராஜ் போன்றவர்கள், நவீன இலக்கியம், சமூகம், அரசியல், சட்டம் மற்றும் கலைத் துறைகளில் ஆழமான வி மர்சனக் கருத்துகளை முன்வைக்கும் ரவி ஸ்ரீனிவாஸ், ஐகாரஸ் பிரகாஷ், கே.வி.ராஜா, பிரசன்னா, பிரபு ராஜதுரை போன்றவர்கள், கட்டுரைகள் மூலம் கவிதையை ரசிக்கக் கற்றுக்கொடுக்கும் ஹரிகிருஷ் ணன், அபுல்கலாம் ஆசாத் போன்றவர்கள் – போதும். பொதுவாகப் பட்டியல்கள் போரடிக்கிற ரகத்தைச் சேர்ந்தவை. ஆனால் இந்தப் பெயர்களுக்கு உரியவர்களின் சராசரி வயது அதிகபட்சம் முப்பத்தைந்துக்குள்தான் இருக்கும். இவர்களை இணையத்துக்கு வெளியே இருக்கிற உலகத்தைச்சேர்ந்தவர்கள் அறியமாட்டார்கள். ஆனால் அறியாதது பெரிய இழப்பு என்று பின்னால் வருந்தவேண்டிய அளவுக்குத் தமது கட்டுரைகளின்மூலம் மௌனமாக மிகப்பெரிய காரியங்களைச் செய்துகொண்டிருப்பவர்கள் என்பதால்தான் பெயர்களையாவது அறிமுகப்படுத்த விரும்பினேன்.
O
தமிழ் கட்டுரை இலக்கியத்தின் மிக நீண்ட மரபு இந்த இருபத்தோறாம் நூற்றாண்டின் ஆரம்ப வருஷங்களில் ஒரு புதுப்பரிமாணம் கொண்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். சிற்றிதழ்களின் வசைக்கட்டுரைகளையும் வார இதழ்களின் அக்கப்போர்க் கட்டுரைகளையும் சேர்த்தேதான் இதைச் சொல்லுகிறேன்.
09/01/2004
நன்றி: http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/4995
பதிவுகள் ஆகஸ்ட் 2009 இதழ் 116
4. இணைய எழுத்து
– எஸ். ராமகிருஷ்ணன் –
– மதுரையில் ஆகஸ்ட் 30ல் அன்று நடைபெற்ற உயிரோசை இணையஇதழின் ஒராண்டு விழாவில் பேசுவதற்காக நான் எழுதிய குறிப்புகள் இவை. இதில் ஒரு பகுதியை அந்த விழாவில் உரையாற்றினேன். –
நான் இணைய எழுத்தை தொடர்ந்து வாசித்து வருபவன். தினம் இதற்காக குறைந்தது ஒரு மணி நேரம் செலவிடுகிறேன். வலைப்பக்கங்கள்.
இணையதளங்கள், இணைய இதழ்கள், என்று தேடித்தேடி வாசிக்கிறேன். புதிதாக யார் எழுதுகிறார்கள், என்ன எழுதுகிறார்கள். அது எப்படி வாசிக்கபடுகிறது என்பதில் என் அக்கறை எப்போதுமே அதிகமானது.
இணையத்தில் இரண்டு வகையான எழுத்துகள் வாசிக்க்கிடக்கிறது. ஒன்று தங்களுக்கு பிடித்த சினிமா, புத்தகம், இசை சார்ந்த ரசனைகள் பாதித்த நிகழ்வுகள், நடப்புகளின் மீதான அவதானிப்பு . ஆன்மீகம். சமையல், வேடிக்கை, கிசுகிசு, அரசியல், ஆவேசம், என்று அவரவர் வலைப்பக்கங்களில் எழுதப்படுபவை. அதில் பெரும்பான்மை வலைப்பக்கங்களின் வழியே முதன்முறையாக எழுத துவங்கியவர்கள்.. மற்ற வகை. எழுத்தாளர்கள் இணையத்தில் எழுதுவது. இணைய தளங்கள் நடத்துவது.
நான் இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவன்.
நான், சாருநிவேதிதா, ஜெயமோகன், நாகார்ஜ�னன், மனுஷ்யபுத்திரன், உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் இணையத்தளங்கள் நடத்திவருகிறோம். இன்று தமிழின் முக்கிய படைப்பாளிகள் பலரும் இணையதளங்களில் கட்டுரைகள், பத்திகள் எழுதுகிறார்கள். ஈழத்து இலக்கியம் குறித்து அதிகம் இணையதளங்களின் வழியாக மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறது.
அச்சு ஊடகங்களில் காணமுடியாத அரசியல் சமூக கலாச்சார பிரச்சனைகள் பற்றிய விவாதங்கள், பத்திகள், நேரடியான கருத்துமோதல்கள், உடனடி எதிர்வினைகள் என்று இணையம் பன்மடங்கு வீரியமாக செயல்படுவதை உணர்ந்தவன் நான்.
அதே நேரம் அசட்டுதனமான கருத்துகளை கொண்டாடுதல், மலிவான சண்டைகள், தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் மிதமிஞ்சிய சுயபாராட்டுதல்கள். குப்பையாக கொட்டப்படும் அபிப்ராயங்கள், கவிதை என்ற பெயரில் எழுதி தள்ளப்படும் சுயபுலம்பல்கள். தமிழ்சினிமா கிசுகிசுக்களை கவர்ச்சிபடங்களுடன் வெளியிடுவது என்று அதன் இன்னொரு பக்கம் களைப்படையவும் செய்கிறது.
இணைய எழுத்திற்கு என்று இன்னமும் தனி அடையாளம் உருவாகவில்லை. இரண்டாயிரத்திற்கும் மேல் உள்ள தமிழ் வலைப்பக்கங்களில் மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே தரமாகவும், ஆக்கபூர்வமான அக்கறைகளுடனும், விவாதிக்க கூடிய படைப்புகள் காணக்கிடைக்கின்றன. இதே நிலை தான் அச்சு ஊடகங்களிலும் உள்ளது. ஆனால் அச்சு ஊடகங்களில் தேர்வு செய்யபடுதல் என்று முறை இருப்பதால் கொஞ்சமாவது வடிகட்டபடுகிறது. இணையம் அப்படியில்லை.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக சுஜாதா கணிணியை பயன்படுத்தி தமிழில் எழுதுகிறார் என்பது நாளிதழ்களில் செய்தியாக வந்தது. அதற்காகவே அவரை தேடி போய் எப்படி தமிழில் எழுதுகிறார் என்று வியப்புடன் பார்த்து வந்தேன். கணிணியில் தமிழில் உள்ளீடு செய்வதற்கான மென்பொருட்கள் அதிகம் வராத நாட்கள் அவை. அந்த வியப்பு தான் என்னை கணிணி நோக்கி உந்தியது. நானும் கணிணியில் தமிழில் எழுத வேண்டும் என்று முனைப்பு கொண்டேன்.
நண்பர் எழுத்தாளர் இரா. முருகன் முரசு மென்பொருளை ஒரு பிளாப்பியில் தந்து அதை பயன்படுத்தும் முறை பற்றி சொன்னார்; அப்படி தான் கணிணியில் தமிழில் எழுத துவங்கினேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக அட்சரம் என்றொரு வலைப்பதிவை தொடங்கி சில ஆண்டுகள் நடத்தினேன். அதன் பிறகு இரண்டு வருசங்களாக எனது பெயரிலே இணையதளம் நடத்திக் கொண்டிருக்கிறேன்.
இணையத்தில் உள்ள இதழ்களில் திண்ணை தான் முன்னோடியான முயற்சி. திண்ணையில் கட்டுரை வந்திருக்கிறது வாசித்தீர்களா என்று கேட்பார்கள். புதிய ஊடக வெளியாக திண்ணை அமைந்திருந்தது. அதன் பிறகு ஆறாம்திணை. அம்பலம், சிபி.காம் துவங்கி இன்று உயிர்மை. காலச்சுவடு, போன்ற அச்சு இதழ்களின் மின்வடிவங்களும், கீற்று, அதிகாலை. தமிழ்மணம், மாற்று என்று இணைய எழுத்துகளை ஒரு சேர வாசிக்கும் கூட்டு தளங்களும் வந்துவிட்டன. உயிரோசை, சொல்வனம், பதிவுகள் போன்ற இலக்கிய இதழ்களும் வெளியாகின்றன. வார இதழ்கள், நாளிதழ்கள் கூட இணையத்தில் முழுமையாக வாசிக்க கிடைக்கினறன.
உயிரோசை இணைய இதழ் ஒரு ஆண்டு வெளிவந்து அதில் எழுதிய முக்கிய படைப்பாளிகளின் பத்து புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது சந்தோஷம் தருகிறது. இணையத்தில் எழுதப்பட்ட முக்கிய கட்டுரைகள் ஒரு சேர புத்தகமாவது இதுவே முதல்முறை . உயிரோசை இணையத்தில் சிறந்த இலக்கிய இதழாக வளர்ச்சிபெற்று வருகிறது. நான் அதன் தொடர்ந்த வாசகன். அதில் வரும் பத்திகளை தொடர்ந்து வாசிக்கிறேன்.
நான் அறிந்தவரை மற்றமொழிகளில் எழுத்தாளர்கள் தங்களது இணையதளங்களை ஒரு விசிட்டிங் கார்டு போல தான் பயன்படுத்துகிறார்கள். அதில் அவர்களை பற்றிய சுயவிபரங்கள் , அவர்கள் எழுத்தின் சில மாதிரி பக்கங்கள் இடம் பெற்றுள்ளன. நேரடியாக இணையத்திற்கு என்றே எழுதுவதுதில் தமிழ் எழுத்தாளர்களே முன்னோடியாக இருக்கிறார்கள்.
உலகெங்கும் இலக்கிய இதழ்களோ அல்லது பதிப்பகங்களோ தான் எழுத்தாளர்களுக்கான வலைப்பக்கங்கள், இணையதளங்களை நடத்துகின்றன. தங்களது இதழில் எழுத்தாளர் எழுதும் பத்தியை அதில் உள்ளீடு செய்கின்றன. அதிலும் தமிழில் நடந்துள்ள மாற்றம் முக்கியமானது,
எழுத்தாளர்களே தங்களுக்கான இணைய தளத்தினை, வலைப்பக்கத்தை நடத்துகிறார்கள். அல்லது அவர் மீது அக்கறை கொண்ட வாசகர் அவருக்கான இணைய தளத்தை உருவாக்கி தந்து நடத்துகிறார். இந்த முயற்சி வேறு மொழிகளில் அதிகம் இல்லை பெரும்பான்மையான இணைய இதழ்களின் பொது உள்ளடக்கம் சிற்றிதழ் ஒன்றின் வடிவம் போலவே உள்ளது. கதை கவிதை கட்டுரை ஒரு சினிமா பத்தி, கொஞ்சம் அரசியல் அல்லது விஞ்ஞானம் என்ற மரபான சிறுபத்திரிக்கை வடிவமே இன்றும் இணையத்தில் அதிகம் காணப்படுகிறது. இதை ஒரு குறையாகவே கருதுகிறேன். இணையத்தின் முழுமையான பலத்தை அறிந்துகொள்ளாமலே தான் இவை செயல்படுகின்றன.
வீடியோ, ஆடியோ மற்றும் ஒவியங்கள், கூடுதல் தரவுகளுக்கான இணைப்புகள், நேர்காணல்களின் தரவிறக்க வசதி, நேரடியாக எழுத்தளாருடன் தொடர்பு கொண்டு உரையாடுதல் என்று இணையத்தின் முக்கிய வசதிகள் இன்றும் இலக்கிய முயற்சிகளுக்காக மேற்கொள்ள படவில்லை.
இணையத்தில் எழுதுவதால் நிறைய சம்பாதிக்கிறார்கள் என்ற பொது வதந்தி தமிழகம் எங்கும் காணமுடிகிறது. நான் அறிந்த பல எழுத்தாளர்கள் அதை நேரடியாக என்னிடமே கேட்டிருக்கிறார்கள். உண்மையில் இணையத்தில் எழுதி சம்பாதிக்கின்றவர்கள் என்று எவரையும் இன்று வரை நான் காணவில்லை. மாறாக ஒவ்வொருவரும் தன் கையில் இருந்து ஆண்டிற்கு குறைந்தபட்சம் பதினைந்தாயிரம் செலவிட்டே இணைய தளங்களை நடத்துகிறார்கள்.
கடுமையான எதிர்வினைகள், வசைகளை நேரடியாக மின்னஞ்சல்கள் பின்னூட்டங்கள் வழியாக பெருகிறார்கள் என்பதே உண்மை. உலகெங்கும் உள்ள வாசகர்களுடன் தனது படைப்புகளை பகிர்ந்து கொள்வது என்ற எத்தனிப்பே பல எழுத்தாளர்களையும் இணையதளங்களில் எழுத வைத்துள்ளது.
இணையத்தில் நான் கண்ட முக்கிய அம்சம். இங்கே வாசகர்கள் என்று யாரும் கிடையாது. வாசிப்பவரும் ஒரு எழுத்தாளரே. அவர் என்ன எழுதுகிறார் என்பதில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் அவர் நிச்சயம் ஒரு வலைப்பக்கம் வைத்திருப்பார். தொடர்ந்து எழுதி வருபவராக இருப்பார். அது தான் இதன் பலம் அதுவே இதன் பலவீனம்.
தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள மேற்கொள்ளபடும் எத்தனங்களையே அதிகம் காணமுடிகிறது. அதற்காக எந்த அளவும் செயல்பட தயங்காத பலர் இணையத்தில் எழுதுகிறார்கள். பல வலைப்பக்கங்கள் அவர்களது டயரிகுறிப்புகள் என்ற அளவில் தான் உள்ளன.
சமீபமாகவே இணைய எழுத்தாளர்கள் தங்களது ரசனையை , எழுத்தாற்றலை மேம்படுத்திக்கொள்ள நேரடியாக சந்தித்து கொள்கிறார்கள். உலக சினிமாவை திரையிடுவது. சிறுகதை பயிலரங்கம் நடத்துவது. குறும்படங்கள் உருவாக்குதல் என்று தங்களின் செயல்தளங்களை விரிவு படுத்தி வருகிறார்கள். இது பாராட்டுக்குரிய முயற்சி.
இணையம் அச்சு ஊடகங்களை தாண்டிய நவீன ஊடக வெளி. அதை எப்படி பயன்படுத்தி கொள்ள போகிறோம் என்பது எழுதுபவரின் கையில் தானிருக்கிறது. பக்க கட்டுபாடு இல்லை என்று பொதுவாக சொல்லிக் கொண்டாலும் இரண்டு பக்கங்களுக்கு மேலாக எழுதப்படும் பதிவுகளை பலரும் படிப்பதில்லை என்பது தான் உண்மை. பின்நவீனத்துவக் கருத்துகள், மொழியாக்கங்கள், தத்துவம் சார்ந்த உரையாடல்கள், விஞ்ஞானம் பற்றிய ஆழ்ந்த கட்டுரைகள் இணையத்தில் வெளியாகின்றன. ஆனால் அவை வாசகர்களை கவனிப்பதேயில்லை.
அது போலவே தொடர்ந்து தமிழ் வலைப்பக்கங்களை வாசித்து வரும்போது பத்துக்கும் குறைவானவர்களே தீவிரமாக தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்து எழுதி வருவதை காணமுடிகிறது. மற்றவர்கள் மிதமிஞ்சிய வேகத்தில் எழுத துவங்கி சில மாதங்களில் இணையத்தை விட்டே போய்விடுகிறார்கள். அல்லது ஒதுங்கி கொண்டு விடுகிறார்கள். சலிப்படைந்து திட்ட துவங்குகிறார்கள். சிலருக்கு வலைப்பக்கம் என்பது அன்றாட செயல்படாகியிருக்கிறது. எழுத வேண்டும் என்ற கட்டாயத்திற்காக எதையாவது உள்ளிடுகிறார்கள்.
சமீபமாக இணையத்தில் எழுத துவங்கிய சிலர் இதிலிருந்து அச்சு ஊடகங்களுக்கு தாவியிருக்கிறார்கள். பத்தி எழுதுகிறார்கள். அது போலவே பல ஆண்டுகளாக எழுதாமல் ஒதுங்கிய இருந்த இலக்கியவாதிகள் இணையத்தின் வருகையால் அச்சு ஊடகங்களை விலக்கி நேரடியாக இணையத்தில்எழுத வந்திருக்கிறார்கள். வார மாத இதழ்கள் இணைய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து அடையாளம் காட்டுகின்றன. பெண்கள் வேறு எந்த ஊடகங்களையும் விட இணையத்தின் வழியே தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். அது மிக முக்கியமான வரவு.
இது போலவே ஒய்வு பெற்றவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலருக்கும் வலைப்பக்கம் தங்களுக்கான தொடர்பு வெளியாக மாறியிருக்கிறது.
வலைப்பக்கங்கள் பொதுவாக மேடைப்பேச்சை போன்ற உடனடி கைதட்டல்களுக்கானவையாக கருதப்படுகின்றன. அப்படி இருக்க வேண்டியது அவசியமில்லை. அதனால் தான் பின்னூட்டம் இடுவதை இவ்வளவு பரபரப்பாகவும் நான் தான் முதலில் என்று கொண்டாட்டத்துடனும் செயல்படுகிறார்கள். பின்னூட்டம் ஒரு எதிர்வினை மட்டுமே. அதை விரும்புவதும் விலக்குவதும் படைப்பாளியின் சுதந்திரம்.
பிரிண்ட் அவுட் செய்து கையில் வைத்து மறுபடி படிக்க செய்யும் படியாக பல கட்டுரைகள் இணையத்தில் வெளிவந்துள்ளன. அவை இணையத்திலும் அதிகம் கண்டுகொள்ளப்படாமலே தானிருக்கின்றன.
சுற்றுசூழல், சமகால அரசியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம், தமிழ் மரபு சார்ந்த சிலரது வலைப்பதிவுகள் காத்திரமானவை. ஆனால் அதனை வாசிக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை பார்த்தால் மிக குறைவு. இணைய எழுத்திலும் சினிமாவே பிரதானமாக உள்ளது. அதிலும் கிசுகிசு, அதிரடி விமர்சனம், கவர்ச்சிபடங்களுக்கு அதிகமான வருகை காணமுடிகிறது.
அச்சு இதழ்களில் இல்லாத ஒரே வித்தியாசம் தமிழ்சினிமாவை தாண்டி பலரும் வெவ்வேறு மொழி படங்களை பற்றி எழுதுகிறார்கள் என்பதே. ஆனால் அவை அந்த படங்களை பற்றிய தங்களது ரசனையை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. ஆய்வு மிக குறைவே.
லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான போர்ஹேயின் வாழ்க்கை வரலாற்றை பற்றி ஏதாவது ஆவணப்படம் இருக்கிறதா என்று தேடினால் மறுநிமிசம் அவரது நேர்காணல், ஆவணப்படம். கவிதை பற்றிய அவரது சொற்பொழிவுகள் என்று நாலைந்து மணி நேரம் காணும் அளவிற்கு இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் தமிழ் எழுத்தளார்களை பற்றிய ஆவணப்படங்கள், அவர்களது நேர்காணல்களின் வீடியோ பதிவுகள், மற்றும் அவர்களது சொற்பொழிவுகளின் ஆடியோ என எதையும் காண முடிவதில்லை. அரிதாக ஒன்றிரண்டு பதிவுகள் காணப்படுகின்றன. ஆனால் அவை தரவிறக்கம் செய்ய இயலாது. அத்துடன் அவை நேரலையாக காணவும் போராட வேண்டியிருக்கிறது.
வெவ்வேறு இலக்கிய கூட்டங்கள், கருத்தரங்கங்கள் என்று எழுத்தாளர்கள், விமர்சகர்கள் ஆய்வாளர்கள் தொடர்ந்து உரையாற்றி வருகிறார்கள். ஆனால் அவை அந்த நிகழ்வோடு காற்றில் கரைந்து போய்விடுகின்றன. அதை முறையாக பதிவு செய்து இணையத்தில் தர முன்வந்தால் தமிழின் மாற்று சிந்தனை வெளி அதிகம் பேரை சென்று அடையும்.
கல்வி புலங்கள் தங்களது செயல்பாடுகளை இணையத்தில் தொடர்ந்து தரவேற்றம்செய்வதன் வழியே பொது வாசகர்கள் அதை அறிந்து கொள்ள செய்யய இயலும். அது போலவே சாகித்ய அகாதமி தமிழ் வளர்ச்சி துறை, கலை பண்பாட்டு துறை உள்ளிட்ட முக்கிய அரசு அமைப்புகள் தங்களது கருத்தரங்கங்கள், நிகழ்ச்சிகள், படைப்பாளிகளை பற்றிய ஆவணப்படங்கள் இணையத்தில் எளிதாக பார்வையிட வசதி செய்து தருவதன் வழியே அவை இன்னும் அதிகம் பார்வையாளர்களை சென்றடைய கூடும் ஈழத்து படைப்பிலக்கியங்களை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எளிதாக வாசிக்க கிடைக்கும் விதத்தில் ஈழம்.நெட் என்ற இணையம் உருவாக்கபட்டிருக்கிறது. இதில் முக்கிய படைப்பாளிகளின் நூல்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள வசதி உள்ளது. இது ஒரு முன்னோடியான முயற்சியாகும். தமிழில் இது போன்ற கூட்டு முயற்சி அவசியம் தேவையானதாக உள்ளது.
தமிழ் இணையத்தில் உள்ளீடு செய்யப்பட்ட பல முக்கிய தகவல்கள், கட்டுரைகள், விவாதங்கள், இன்று வரை ஒருமித்து சேகரமாக்கபட்டு ஆவணப்படுத்தபடுதல் வேண்டும். தமிழ் எழுத்தாளர்கள் பற்றி சுயவிபரங்கள், புகைப்படங்கள், முக்கிய புத்தகங்கள், அதன் பதிப்பகங்கள், விமர்சனங்கள் என்று அடங்கிய விரிவான தகவல் சேமிப்பு தளங்கள் உருவாக்கபடவேண்டும். இதற்கான ஒன்றிரண்டு முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தமிழ் விக்கிபீடியா போன்றவற்றில் உள்ள தகவல்பிழைகள் முறையாக சரி செய்யப்படல் வேண்டும்.
இணையத்தில் புதிதாக எழுத வருகின்ற பலரும் எதை படிப்பது. என்ன சினிமாவை பார்ப்பது.எந்த இணைய தளங்களை வாசிப்பது என்று வழிகாட்டுதலை விரும்புகிறார்கள். அது அச்சு இதழில் காணமுடியாத வசதி. அதை எளிதாக பலரும் செயல்படுத்த முடியும். நான் தொடர்ந்து நான் வாசிக்கும் இணையதளங்கள், புத்தகங்கள், திரைப்படங்களை சிபாரிசு செய்கிறேன். இதற்காகவே எவராவது முன்வந்து ஒரு இணைய தளம் தொடங்கப்பட்டால் அது அதிகம் உதவிகரமாக இருக்க கூடும்.
தமிழ் வலைப்பக்கங்களுக்கான இன்டெக்ஸ் ஒன்று உருவாக்கபடுதல் வேண்டும். அதன்வழியே எவரும் எந்த இணையதளத்தையும் உடனடியாக பார்வையிட முடியும். அது போலவே வாசிக்க கிடைக்காத பல முக்கிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் ஆன்லைனில் வாசிக்க கிடைக்கின்றன. தமிழில் அது இன்றும் சாத்தியமாகவில்லை.
நுண்கலை, பண்பாடு சார்ந்து ஒவ்வொரு ஊரிலும் உள்ள முக்கிய இடங்கள், நிகழ்வுகள் குறித்த பதிவுகள் எண்ணிக்கையற்று ஆங்கிலத்தில் உள்ளன. தமிழகத்தின் பண்பாட்டு புள்ளிகள் இணையத்தில் இன்னமும் ஒருங்கிணைக்கபடவில்லை.
இணைய எழுத்து நாளை இன்னமும் அதிகமான முக்கியத்துவம் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. புதிதாக எழுத வருகின்றவர்கள் இணையத்தின் வழியே அறிமுகமான போதும் தனித்த படைப்பாளியாக உருவாக அதிக சாத்தியங்கள் உள்ளன. அது போலவே மாற்று சிந்தனைகளுக்கு இணையம் இன்னமும் கூடுதலான முக்கிய ஊடகமாக அமையும்.
ஆவணபடுத்துதல், அறிமுகம் செய்வது. பல்துறைகளை ஒன்றிணைத்தல், புதிய வாசக தளங்களை உருவாக்குதல், அடிப்படை மாற்றங்கள் குறித்த விவாதங்களை உருவாக்குதல், குறும்படங்கள், ஆவணப்படங்களை எடுப்பவர்கள் இணையத்தின் வழியே அதை வெளியிடுவது என்று இணையம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. அதன் ஒருபகுதியாகவே இணையத்தில் எழுதுவதும் இருக்கிறது.
கசடுகளை நீக்கி தேவையானதை அறிந்து கொள்வது வாசகனின் கையிலே உள்ளது. இணையம் புதிய வாசகபரப்பை, எழுத்தை உருவாக்கும் தடையற்ற சாத்தியங்களை தருகிறது. அதன் வளர்ச்சியும் செயல்பாடும் கூட்டுமுயற்சிகளால் மட்டுமே மாறுதல் அடையும் என்று தோன்றுகிறது.
நன்றி: http://www.sramakrishnan.com/
செப்டம்பர் 2009 இதழ் 117
5. தமிழில் இணையத்தள வளர்ச்சி பற்றியதொரு கருத்தரங்கு!
– முனைவர் மு. இளங்கோவன் –
22.08.2008 மாலை சிங்கம்புணரியில் நீண்ட நேரம் நின்றும் பேருந்து இல்லை.மழை பெய்தபடி இருந்தது.மதுரை செல்லும் பேருந்து வரவில்லையாதலால் கொட்டாம்பட்டி சென்றால் விரைவுப் பேருந்துகள் கிடைக்கும் என்றனர். கொட்டாம்பட்டிக்கு அங்கிருந்து நகர் வண்டியில் சென்றேன்.அங்கிருந்தும் பேருந்துகள் வாய்ப்பாக இல்லை.கூட்டம் மிகுதியாக இருந்தது.அவ்வழியில் மகிழ்வுந்து ஒன்று வந்தது. அதில் ஏறிக்கொண்டேன். கையில் கைப்பையும்,மடிக்கணினிப் பையும் தோள்பட்டைகளைப் பதம் பார்த்தன.இப்பொழுது செலவு இனித்தது.போக்கில் இருக்கும் பொழுது அறிஞர் தமிழண்ணல் அவர்கள் செல்பேசியில் அழைத்தார்கள்.பிறகு பேசுவதாக ஐயாவிடம் தெரிவித்துவிட்டு, வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ் இணையக் கருத்தரங்கை ஏற்பாடு செய்த நண்பர் முத்துராமன் அவர்களுக்குப் பேசினேன்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள உணவகத்திற்கு முன்பாகக் காத்துள்ளதைத் தெரிவிக்க மகிழ்ந்தேன்.கால் மணி நேரத்ததில் அன்பர் முத்துராமன் இருந்த இடம் சென்று சேர்ந்தேன்.இரு மாணவர்களும் காத்திருந்தனர்.
அங்குள்ள உணவகத்தில் உணவை முடித்தோம்.காலையில் சிற்றுண்டி உண்டதும்,தொடர்ந்து செலவுக் களைப்பு,பேச்சு,பரபரப்பு என மிகவும் சோர்வாக இருந்தேன்.உணவை முடித்துக் கொண்டு காமராசர் பல்கலைக்கழகம் அருகில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியை இரவு பத்து மணியளவில் அடைந்தேன்.
அறிஞர் தமிழண்ணல் ஐயாவிற்குச் செல்பேசியில் பேசி, நாளைய நிகழ்ச்சி பற்றி சொன்னேன். அண்ணல் அவர்களிடம் பல்லாண்டுகளாக ஒரு விருப்பத்தை முன்வைத்து அடிக்கடி நினைவூட்டி,எழுதியும்,பேசியும் வைத்திருந்த ஒரு விருப்பம் நிறைவேற உள்ளதை அண்ணல் அவர்கள் சொன்னதும் அளவிலா மகிழ்ச்சியடைந்தேன்.நான் கேட்டிருந்த ஒரு பொருளை நாளை வந்தால் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் நாளை வந்து பெற்றுக்கொள்வதாக உறுதிகூறி,இரவு 11.30 மணியளவில் ஓய்வெடுத்துக் கொண்டேன்.
காலை 7.30 மணிக்கு அன்பர் முத்துராமன் அவர்கள் அறைக்கு வந்துசேர்ந்தார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக கல்லூரியை ஒருமுறை சுற்றிப்பார்க்க நினைத்து என் ஒளிப்படக் கருவியுடன் சென்று பல படங்களை எடுத்துக்கொண்டு அறைக்கு வந்து காலைக் கடமைகள் முடித்து நிகழ்ச்சிக்கு ஆயத்தமானேன்.
நாடார் இன மக்களால் அவர்களின் பொருள் உதவியால் இயங்கக்கூடிய அரசு உதவிபெறும் தன்னாட்சிக்கல்லூரி வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி ஆகும்.இக்கல்லூரி ஏறத்தாழ நாற்பது (1965) ஆண்டுகளுக்கு முன்னர்த் தொடங்கப் பட்டுள்ளது.பல்வேறு உயர் படிப்புகளை வழங்கும் நல்ல நிறுவனம்.நல்ல கட்டட வசதிகள். ஆடுகளங்கள் உள்ளன. போக்குவரவு வசதிஉடையது. நல்ல இயற்கைச் சூழல்.கல்லூரி வனப்பை எண்ணும்பொழுது மகிழ்வு தருகிறது.
காலை 9 மணி அளவில் தனசேகரபாண்டியன் அரங்கில்(விழா நடைபெறும் இடம்) உள்ள இணைய வசதிகள்,கணிப்பொறி வசதிகள்,இருக்கை அமைவுகள் யாவற்றையும் ஒரு முறை சரிபார்த்துக்கொண்டேன்.ஏற்பாடுகள் அனைத்தும் மிகச்சிறப்பாக இருந்தது.கல்லூரி நூலகத் துறையில் நடைபெறும் முதல் கருத்தரங்கம் என்பதால் விடுமுறை நாள் எனினும் மாணவர் கள் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டனர்.
பின்னர்க் கல்லூரி முதல்வர் அறைக்கு என்னை அழைத்துச்சென்று அறிமுகம் செய்தனர். கல்லூரியின் நிர்வாகத்தைச் சிறப்பாகச் செய்துவரும் பொறுப்பாளர்களைக் கண்டு மகிழ்ந்தேன். கல்லூரியின் சிறப்பை உரையாடித் தெரிந்துகொண்டேன்.என் தமிழ் இணைய ஈடுபாட்டைக் கண்டு அனைவரும் பாராட்டினர்.அனைவரும் விழா அரங்கை அடைந்த பொழுது மாணவத் திரள் மிகுதியாக இருந்தது. 500 மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்.
காலை சரியாக 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.
கல்லூரிப்பொருளாளர் திரு மணிமாறன் அவர்கள் தலைமை தாங்கினார்,திரு குணசேகரன் அவர்கள் வரவேற்புரை.கல்லூரி முதல்வர் மகாத்மன்ராவ் அவர்கள் மிகச் சிறப்பாக என்னை அறிமுகம் செய்துவைத்து உரையாற்றினார்.
முற்பகல் 11 மணிக்குத் தமிழில் இணையத்தள வளர்ச்சி என்னும் என் உரை தொடங்கியது. பகல் ஒரு மணிவரை நீண்ட காட்சி விளக்க உரை மாணவர்களுக்குச் சலிப்பின்றி இருந்ததை உணர்ந்தேன்.என் பேச்சின் விவரம் வருமாறு:
(நேற்றே திருச்சியில்,மேலைச்சிவபுரியில் உரையாற்றிய செய்திகள் சில இடம்பெற்றாலும் அடிப்படைச் செய்திகள் ஒன்று என்பதால் மீண்டும் சிலவற்றை நினைவுகூர்தல் தேவையாகிறது.)
உலகில் கணிப்பொறி தோன்றிய விதம்,தமிழ் எழுத்துகள் உள்ளிடப்பெற்று அச்சான கணிப்பொறிவழி உருவான முதல் நூல் பற்றிய செய்தி, தமிழ் எழுத்துகள் தொடக்கத்தில் ஏற்படுத்திய சிக்கல்,தரப்படுத்தப்பட்ட எழுத்துகள்,பல்வேறு தமிழ் மென்பொருள்கள்,தமிழ் மென்பொருள் உருவாக்கத்திற்கு உழைத்தவர்கள்,சீனர்களின் மொழிப்பற்று,தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை,தமிழ் இணைய மாநாடுகள்,இதற்காக உழைத்த அறிஞர் சிங்கப்பூர் கோவிந்த சாமி அவர்களின் பங்களிப்பு,முரசு முத்தெழிலன், வா.செ.குழந்தைசாமி,முனைவர் ஆனந்த கிருட்டிணன்,முனைவர் பொன்னவைக்கோ அவர்களின் ஈடுபாடு,பணிகள் பற்றிப் பலபட எடுத்துரைத்தேன்.
தமிழக அரசு கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சிக்காலத்தில் மிகபெரிய தமிழ் இணைய மாநாடு நடத்தியதையும்,தமிழ் இணையப்பல்கலைக்கழகம் உருவான விதத்தையும் எடுத்துரைத்தேன்.சேந்தமங்கலம் முகுந்தராசுவின் எ.கலப்பை,காசியின் தமிழ்மணம் பற்றி காட்சி விளக்கத்துடன் என் பேச்சு தொடர்ந்தது.
தமிழில் வெளிவரும் மின்னிதழ்களை அறிமுகம் செய்தேன். நாளிதழ், வார இதழ், மாத இதழ் எனப் பல பிரிவுகளாகப் பிரித்துகொண்டு விளக்கினேன். தினமலர் நாளிதழ் உலக அளவில் தமிழர்களால் படிக்கப்படும் இதழாகவும்,பல்வேறு வசதிகளை இவ்விதழ் தருவதையும் விரிவாக எடுத்துரைத்தேன்.
(இதனைத் தினமலர் மதுரைப் பதிப்பில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டது.24.08.08).
அதுபோல் தினகரன், மாலைமலர், தமிழ்முரசு, தினமணி, திண்ணை, தமிழ்க்காவல், தெளிதமிழ், தமிழம். நெட், தட்சுதமிழ், வணக்கம் மலேசியா, லங்காசிறீ, புதினம், பதிவுகள், தினக்குரல், கீற்று உள்ளிட்ட பல இதழ்களைப் பற்றி விளக்கிப் பேசினேன்.காட்சி வழியாகவும் விளக்கினேன். அவையினர் இவ்வளவு இதழ்களையும் கண்டு வியப்பும் மலைப்பும் அடைந்தனர்.
பிறகு தமிழ்மரபு அறக்கட்டளையின் தளத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள மரபுச் செல்வங்களை விளக்கினேன்.மேலும் தமிழ் இணையப்பல்கலைக்கழக நூலகம்,படிப்புகள், ஓலைச்சுவடிகள்,பண்பாட்டுக்கலைகள்,திருக்கோயில் படங்கள் உள்ள அதன் சிறப்புகளை எடுத்துரைத்தேன்.
அதுபோல் மதுரைத்திட்டம்,சென்னை நூலகம், காந்தளகம் விருபா, விக்கிபீடியா பற்றியெல்லாம் காட்சி வழியாகவும் உரை வழியாகவும் பல தகவல்களை அவைக்கு வழங்கினேன்.ஒரு மணிக்கு உணவு இடைவேளைக்காக அனைவரும் பிரிந்தோம்.இதற்குள் இச்செய்தி ஊடகங்கள் வழியாக மதுரை மக்களுக்கும் உலகிற்கும் தெரியவந்தது.தட்சுதமிழ் இணைய இதழ் இச்செய்தியை உடன் வெளியிட்டு உலகிற்கு முதலில் தந்தது.
பிற்பகல் உணவுக்குப்பிறகு 2,30 மணிக்கு மீண்டும் பேசத் தொடங்கினேன்.தமிழ் விசைப் பலகை 99 பற்றியும் அதில் உள்ள சிறப்புகள், அமைப்புகள் பற்றியும் காட்சி விளக்கத்துடன் செய்து காட்டியபொழுது அனைவரும் மகிழ்ந்தனர்.
அதன் பிறகு வலைப்பூக்கள் உருவாக்கும் முறை பற்றி விளக்கிக் காட்டப்பட்டது. தமிழில் மின்னஞ்சல் செய்வது, உரையாடுவது, குழுவாக இயங்குவது பற்றியெல்லாம் விரிவாகப் பேசினேன்.மாலை 4.30 மணிக்கு என் காட்சி விளக்க உரை நிறைவுக்கு வந்தது.அனைவரும் உள்ளம் நிறைந்த அன்போடு விடைதந்தனர்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நூலகத் துறையினர்க்கு அளவுகடந்த மகிழ்ச்சி.கருத்தரங்கம் வெற்றியுடன் நடந்ததால் கல்லூரி முதல்வர் நூலகர் அவர்களையும் ஒருங்கிணைப்பாளர்கள் முத்துராமன்,கவிதா தேவி ஆகியோரையும் என் கண்முன் பாராட்டினார். அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அறிஞர் தமிழண்ணல் இல்லத்திற்கு வந்து உரையாடினேன்.அவர் தமிழுக்குப் பாதுகாத்து வைத்திருந்த மிகப்பெரிய செல்வத் தொகுதியை என் பல ஆண்டுகால விருப்பத்தை நிறைவேற்றும் படியாக வழங்கினார்.அண்ணல் அவர்களைச் சில படங்கள் எடுத்துக்கொண்டேன்.
28.08.2008 இல் வெளியிட உள்ள பத்து நூல்களை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார். அவற்றைப் பெற்றுக்கொண்ட மகிழ்விலும் அண்ணலைக் கண்ட மகிழ்விலும் மூடுந்தில் ஏறிச் சிறிது தூரம் வந்த பிறகு உடன் அண்ணல் செல்பேசியில் அழைத்தார்.முதன்மையான அந்தத் தமிழ்ச் செல்வத்தைப் பேச்சுவாக்கில் அங்கே மிசைமேல் வைத்து வந்தது அப்பொழுதுதான் அண்ணல் அழைப்பிற்குப் பிறகு நினைவுக்கு வந்தது. மீண்டும் அண்ணல் இல்லமான ஏரகத்திற்குத் திரும்பினேன்…
muelangovan@gmail.com
http://muelangovan.blogspot.com/
பதிவுகள் செப்டம்பர் 2008 இதழ் 105
6. தமிழில் இணைய இதழ்கள்!
– முனைவர் க.துரையரசன், தமிழ் இணைப்பேராசிரியர் –
முன்னுரை
செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் முதலானவற்றைத் தகவல் தொடர்பு ஊடகங்கள் என்று கூறுவர். அவ்வரிசையில் இணையத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பிற தகவல் தொடர்பு ஊடகங்களைக் காட்டிலும் முழு வீச்சில் இணையம் வளர்ச்சியுற்று வருகிறது என்றே கூற வேண்டும். எதிர்காலத்தில் பிற ஊடகங்களைப் புறந்தள்ளிவிட்டு இது முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
இத்துணை சிறப்பு வாய்ந்த இணையத்தின் வழி இதழ்கள் வெளி வருகின்றன. இதனை இணைய இதழ்கள் அல்லது மின்னிதழ்கள் (e- journals /e-zines) என்று குறிப்பிடுவர். அச்சு வடிவில் வெளி வருகின்ற இதழ்களைப் போலவே காலம் (நாளிதழ், வார இதழ்) மற்றும் பொருண்மை அடிப்படையில் (அரசியல் இதழ், பக்தி இதழ்) மின்னிதழ்களையும் வகைப்படுத்தலாம். அனைத்து வகை மின்னிதழ்களைப் பற்றியும் இங்குக் குறிப்பிடின் இக்கட்டுரை மிக நீளும் என்பதால் தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புகளைத் தாங்கி, அச்சில் வெளிவராமல் இணையத்தில் மட்டுமே வெளிவருகின்ற குறிப்பிடத்தக்க மின்னிதழ்கள் பற்றி மட்டும் இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.
திண்ணை;
வீட்டில் திண்ணை வைத்துக் கட்டுவது தமிழர் மரபு. நாகரிக உலகில் இம்மரபு மெல்ல அற்றுப் போய்விட்டது என்றே கூற வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் கிராமத்தில் கட்டப்படுகின்ற வீடுகளில்கூட திண்ணைகளைக் காணோம்.
இத்திண்ணைகளில் அமர்ந்து உள்ளூர் செய்தி முதல் உலகச் செய்தி வரை பேசப்படும். இது வெறும் திண்ணைப் பேச்சாக (வெட்டிப் பேச்சு) இல்லாமல் அறிவார்ந்த செய்திகளை ஆராய்கின்ற பேச்சாக இருக்கும். திண்ணையில் அமர்ந்து பலரும் பல விதமான செய்திகளைப் பேசுவதைப் போல திண்ணை மின்னிதழிலும் யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். இதன்பொருட்டுத்தான் இவ்விதழுக்குப் இப்பெயர் ஏற்பட்டதாக அறியமுடிகிறது.
இம் மின்னிதழில் கலை, அரசியல், அறிவியல், சமூகம், கதை, கட்டுரை, கவிதை, இலக்கியம் சார்ந்த செய்திகள் எனப் பல்வகைச் செய்திகள் இடம் பெறுகின்றன.
இவ்விதழ் இலாப நோக்கமின்றி செய்திகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் மட்டுமே செயற்படுகிறது. இதனைப் பார்வையிடுவதற்கோ, படைப்புகளை வெளியிடுவதற்கோ கட்டணம் கிடையாது. அதுபோல படைப்பாளிகளுக்கும் இவ்விதழ் எவ்விதமான கட்டணங்களும் வழங்குவதில்லை. அதாவது வாங்குவதும் இல்லை; கொடுப்பதும் இல்லை.
இம்மின்னிதழ் ஒருங்குறியீட்டு (Unicode) முறையில் இயங்குதல், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று புதுப்பிக்கப்படுதல், தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக வெளிவருதல், பழைய இதழ்களைப் பார்வையிடும் வசதி வழங்கல், பிற இணைய தளங்கள் மற்றும் மின்னிதழ்களுக்குச் செல்ல இணைப்பு வழங்கல் உள்ளிட்டவை இதன் சிறப்புகளாக அமைந்துள்ளன. இதன் இணைய முகவரி: www.thinnai.com
தட்ஸ் தமிழ்:
திண்ணையைப் போல முழுக்க முழுக்க இலக்கிய இதழாக இல்லாமல் நாளிதழைப் போல இம்மின்னிதழ் வெளி வருகிறது. இதில் பல்துறைச் சார்ந்த விரிவான செய்திகள் வெளிவந்தாலும்கூட இலக்கியச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவருகிறது என்பதும், இதில் செய்திகள் உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன (Update) என்பதும் வியத்தகு செய்தியாகும். இதில் தமிழகச் செய்திகள் மட்டுமின்றி இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகச் செய்திகளும் கவிதை, கட்டுரை, சிறுகதை முதலான இலக்கியச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், திரைத்துறை உள்ளிட்ட ஒளிக்காட்சிகளையும் இதில் காணலாம். இதன் இணைய முகவரி; www.thatstamil.oneindia.in
வார்ப்பு:
இது, கவிதைக்கென்று வெளிவருகின்ற இணைய இதழ்; வாரம் தோறும் வெளிவருகின்றது. இது 1998 ஆம் ஆண்டு ‘நிக்குமோ நிக்காதோ’ என்ற பெயரில் இணைய இதழாக வெளிவந்தது. கவிஞர் இசாக் அவர்களின் ஆலோசன்ப்படி கவிஞர் மாலியன் அவர்களால் வார்ப்பு என்ற பெயர் மாற்றம் பெற்றது. இவ்விதழின் பதிப்பாசிரியர் பா.மகாதேவன். இதுநாள் (21-03-2008) வரை இதன்கண் 285 கவிஞர்களின் 1195 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. கவிஞர்கள், கவிதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்னும் தலைப்புகளில்
செய்திகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அறிவுமதி, கனிமொழி போன்ற புகழ் பெற்ற கவிஞர்களின் கவிதைகள் வெளிவந்துள்ளமை கொண்டு இதன் சிறப்பை வெளிப்படுத்தும்.
இதன்கண் அமைந்துள்ள நூலகம் என்ற இணைப்பின் வழி சென்று புதிதாக வெளிவந்துள்ள தமிழ் நூல்களைப் பற்றிய விமர்சனத்துடன் கூடிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என்பது மிகச் சிறப்பான ஒன்றாகக் கருதலாம். இவ்விதழ் ஒருங்குறியீட்டு முறையில் வெளிவருவதால் எழுத்துரு (Fonts) சிக்கல் ஏதுமில்லை.
நாட்டுப்புறப் பாடல்களை நாட்டின் சொத்து என்று கருதுகின்ற இவ்விதழின் பதிப்பாசிரியர் பா.மகாதேவன் அதனைப் பாதுகாத்து வைக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு இருப்பதாகக் குறிப்பிடுகிறார். எனவே எதிர்காலத்தில் நாட்டுப்புறப் பாடல்களையும், மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் வகை தொகைப்படுத்தி எளிதில் பெறுகின்ற வகையில் வெளியிடுகின்ற திட்டமும் இவருக்கு இருப்பதை அறிய முடிகிறது. இதன் இணைய முகவரி: www.vaarappu.com
பதிவுகள்:
2000 ஆம் ஆண்டிலிருந்து கனடாவிலிருந்து வெளிவருகின்ற இந்த இதழின் ஆசிரியர் வ.ந.கிரிதரன். இது ஒருங்குறியீட்டு முறையில் மாதந்தோறும் வெளிவருகின்ற மின்னிதழ் ஆகும். அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம் என்ற முழக்கத்துடன் வெளிவருகின்ற இதன்கண் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நூல் விமர்சனம், அறிவியல், நூல் அங்காடி ஆகிய இலக்கியம் சார்ந்த செய்திகளைக் காண இயலும். தமிழ்க் கலைக்களஞ்சியம் போன்று இணையத்தில் தகவல் களஞ்சியமாக திகழ்கின்ற விக்கிபீடியா, மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தமிழ் இணைய தளம் மற்றும் இணைய இதழ்களுக்கான இணைப்புகளும் இதன்கண் வழங்கப்பட்டுள்ளன.
இலவசமாக கிடைக்கின்ற இவ்விதழில் ஆக்கங்களை வெளியிடவும், பார்வையிடவும் கட்டணம் ஏதுமில்லை. ஆயினும் இதன் வளர்ச்சிக்காக ஆண்டுக் கட்டணமாக 24 டாலர்களை விருப்பமுடையவர்கள் வழங்குமாறு கோருகின்றனர். இதன் இணைய முகவரி; www.pathivukal.com
மரத்தடி:
மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறலாம். வெட்டிக் கதை பேசலாம். உருப்படியான கதைகளைப் பேசி அறிவைப் பெருக்கலாம். மரத்தடி என்ற இம்மின்னிதழ் இளைப்பாறவும், உருப்படியான தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் வகை செய்கிறது. மரத்தடிக் குழுமத்தில் உறுப்பினராக உள்ளவர் மட்டுமே இதில் தங்கள் படைப்புகளை இட முடியும். ஆயினும் வரும்பும் எவரும் இதில் உறுப்பினராகலாம். கட்டணம் எதுவும் கிடையாது. கதை, கவிதை, கட்டுரை முதலியவற்றை இவ்விதழ் வெளியிடுகிறது. படைப்புகளை ஒருங்குறியீட்டு முறையில் வெளியிடுவது இதன் சிறப்பாகும். ஆயினும் இது குறித்த காலத்தில் வெளிவருவதில்லை. இதன் இணைய முகவரி; www.maraththadi.com
தமிழம் நெட்;
மாதந்தோறும் வெளிவரும் இம்மின்னிதழைப் பொள்ளாச்சி நசன் நடத்தி வருகிறார். இவ்விதழ் பல அரிய செய்திகளைத் தாங்கி வெளிவருகிறது. தமிழறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகள். தமிழறிஞர்களின் படங்கள் (இதுவரை 276 படங்கள்), அரிய புகைப்படங்கள், நூல் மதிப்புரை, இலக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட செய்திகள் இதன்கண் இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம் வழியாக தமிழ் கற்பிக்கின்ற அரும்பணியையும் இவ்விதழ் செய்து வருகிறது. கட்டணம் ஏதுமின்றி நடைபெற்றுவரும் இப்பணி அனைவராலும் பாரட்டப்படுகின்ற பயனுள்ள பணியாக அமைந்துள்ளது. இதன் இணைய முகவரி; www.tamizham.net
தமிழ்க்கூடல்;
இம்மின்னிதழ் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. கட்டுரைகளை இலக்கியம், சமூகம், அரசியல், பொருளாதாரம் என்றும் கவிதைகளை மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ கவிதை என்றும் வகைப்படுத்தி வெளியிடுவதன் மூலம் இது பிற இதழ்களினின்றும் வேறுபட்டு விளங்குகிறது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள் பற்றிய சுருக்கமான தகவல்களைக் கொண்ட பட்டியல் ஒன்றையும் இது வெளியிட்டுள்ளது. இதன் இணைய முகவரி; www.koodal.com
நிலாச்சாரல்;
இம்மின்னிதழ் ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் வெளிவருகிறது. இது ஒருங்குறியீட்டு எழுத்துரு முறையைப் பயன்படுத்துகிறது. தொடர்கள், கதைகள், கவிதைகள், சுவடுகள், பூஞ்சிட்டு முதலிய வகையில் இலக்கியச் செய்திகளை இவ்விதழ் வழங்குகிறது. பூஞ்சிட்டு என்ற பகுதியில் சிறுவர்களுக்கான கதைகள் வெளிவருகின்றன. பல்சுவை என்ற பகுதியில் கைமணம், கைமருந்து, சுவடுகள் ஆகிய தலைப்புகளில் செய்திகள் வெளிவருகின்றன. இதன் இணைய முகவரி; www.nilacharal.com
தமிழோவியம்;
இம்மின்னிதழின் ஆசிரியர் மீனாக்ஷி. ஒருங்குறியீட்டு எழுத்துருவைப் பயன்படுத்தி வாரந்தோறும் இவ்விதழ் வெளிவருகிறது. கவிதை, கட்டுரை. சிறுகதை, திரை விமர்சனம், நூல் விமர்சனம் உள்ளிட்ட செய்திகளைத் தாங்கி இவ்விதழ் வெளிவருகிறது. தமிழ் ஈபுக் (Tamil e -books) என்ற இணைப்பும் இதன்கண் உள்ளது. இதன் மூலம் தமிழில் வெளிவருகின்ற மின் நூல்களையும் காண முடிகிறது. இதன் இணைய முகவரி; www.tamiloviam.com
முடிவுரை;
இலக்கியச் செய்திகளை வெளியிடுகின்ற இணைய இதழ்களில் மேற்காட்டியவை குறிப்பிடத் தக்கவையாகும். இவை போன்ற இன்னும் பல நூற்றுக்கணக்கான இதழ்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. இவ்விதழ்களை எல்லாம் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும், ஆசிரியர்களும் கண்டு பயனுற வேண்டும். ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்’ என்பது பாரதியின் அமுத வரிகள். ஆனால் இன்று எட்டுத் திக்கும் செல்ல வேண்டியதில்லை; இணையத்திற்குச் சென்றாலே எல்லாத் திக்குகளும் நம்மை நோக்கி இணையக் கரம் நீட்டும்.
http://duraiarasan.blogspot.com/2008/04/blog-post.html
பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102
7. காலச்சுவடு: கணித்தமிழ்: தமிழ் இணைய இதழ்கள்: ஓர் அறிமுகம்!
– பத்ரி சேஷாத்ரி –
இணையம் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் இன்று பல நாளேடுகள், வார, மாதத் தமிழ் இதழ்கள் இணையத்தில் வருகின்றன. தமிழகத்தில் அச்சில் வரும் செய்தித்தாள்களும் பெரும் வணிக இதழ்களும் சிறிது சிறிதாக 1990களிலிருந்தே இணையத்தில் வர ஆரம்பித்தன. இன்று தினத்தந்தி (www.dailythanthi.com), தினகரன் (www. dinakaran.com), தினமலர் (www.dinamalar.com), தினமணி (www. dinamani.com), தமிழ்முரசு (www.tamilmurasu.in), மாலைமலர் (www.maalaimalar.com) போன்ற அனைத்தும் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றுள் தினமலர் (http://epaper.dinamalar. com), தினகரன் (www.dinakaran.com/epaper/default.asp), தமிழ் முரசு ஆகியவை மின்-தாள் வடிவில் வருகின்றன. அதாவது அச்சில் எப்படி இருக்குமோ அதைப் போலவே அந்தந்தப் பக்கங்களில் லே-அவுட் மாறாமல், விளம்பரங்கள் மாறாமல் வெளியாகின்றன.
விகடன் (www.vikatan.com), குமுதம் (www. kumudam.com), கல்கி (www.kalkionline.com) ஆகியவை தமது குழும இதழ்கள் அனைத்திற்கும் வலையங்களை வைத்துள்ளன. விகடன், கல்கி இரண்டுமே காசு கொடுத்துப் படிக்கும் இதழ்கள். குமுதம் இப்போதைக்கு இலவசம்.
இவை அனைத்திலுமே ஒரு பெரும் பிரச்சினை உள்ளது. இந்தத் தளங்களின் பக்கங்கள் ஒன்று மின்-தாள்களாக, அதாவது முழுவதுமே படங்களாக உள்ளன அல்லது ஒவ்வொன்றுமே தமக்கு உரித்தான எழுத்துரு (font) ஒன்றைப் பயன்படுத்துகின்றன. இந்த எழுத்துருக்கள் எவையும் யூனிகோடு கிடையாது. இதனால் இலவசமான தளங்கள்கூடத் தேடு பொறிகளான கூகிள், யாஹூ!, எம்எஸ்என் ஆகியவற்றில் அகப்படா. வலையகங்களின்
அடிப்படையே யாராவது எதையாவது தேடும்போது ‘டக்’கென்று கிடைப்பதுதான்.
மின்-தாள்களாக வெளியாகும் செய்தித் தாள்களைத் தவிர்த்துப் பிற அனைத்திலுமே வடிவமைப்பு மோசமாகத்தான் உள்ளது. தமது அச்சு இதழ்களில் கவனம் செலுத்தும் அனைத்து நிறுவனங்களும் மின்னிதழ்களுக்கு அதே அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதன் காரணம், இதுநாள்வரையில் இந்த மின்னிதழ்கள் மூலம் வருமானம் பெறச் சரியான, நிலையான வழிகள் இல்லாமையே.
இதே நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் தமிழ் முரசு (தமிழக இதழுக்கும் சிங்கை இதழுக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை போல) முழுவதும் யூனிகோடில் வெளிவருகிறது (http://tamil murasu.asia1.com.sg). அதேபோலவே இலங்கையிலிருந்து வெளியாகும் தினக்குரல் (www.thinakural.com), வீரகேசரி (www.virakesari.lk) முதலியன முழுவதும் யூனிகோட் எழுத்துருவிலேயே வருகின்றன.
இணையம் வளர்ச்சி அடைந்த காலத்தில் உருவான வலைவாசல்கள் (போர்ட்டல்கள்) பலவும் தமிழில் தினசரிச் செய்திகள், சிறப்புச் செய்திகள், இலக்கிய, பல்சுவை இதழ்கள் என்று ஆரம்பித்தன. இணையக் குமிழ் வெடித்தபோது இவ்வாறு உருவான பல வலையகங்களும் தமது சேவையைக் குறைத்துக்கொள்ள நேரிட்டது. சில காணாமல் போயின. சில இன்றும் இருந்துவருகின்றன. இவை அனைத்துமே இணையத்தில் மட்டுமே உள்ளன என்பது முக்கியம். அவற்றில் வணிக நோக்கில் நடந்துவரும் இதழ்கள் கீழ்க்கண்டவை:
சிஃபி (sify.com) நிறுவனத்தின் தமிழ் வலையகம்: http://tamil.sify.com. அதே நிறுவனம் நடத்தும், தினசரிகளிலிருந்து செய்திகளைச் சேகரித்து ஒரே பக்கத்தில் வழங்கும் சேவை: www.samachar.com/tamil/index.php. Thats Tamil: http://thatstamil.oneindia.in, ஆறாம் திணை: www.aaraamthinai.com, வெப் உலகம்: www.webulagam.com. இவை தினசரிகள். என்றாலும் தினசரி அச்சு இதழ்களுடன் போட்டிபோட முடியாமல் மிகக் குறைந்த நிருபர்களையும் வசதிகளையும்கொண்டு, முடிந்தவரை அலுவலகத்தின் நான்கு சுவர்களுக்குள் அமர்ந்துகொண்டே தமது இணைய இதழ்களைக் கொண்டுவருகின்றன. இந்த நிறுவனங்கள்கூட யூனிகோடில் தமது இதழ்களைத் தருவதில்லை.
வணிக நோக்கில்லாத சில இணைய இதழ்களும் உருவாகியுள்ளன. திண்ணை (www.thinnai.com), தமிழோவியம் (www. tamiloviam.com) வாராவாரமும், திசைகள் (www.thisaigal.com) மாதம் ஒரு முறையும், பதிவுகள் (www. pathivukal.com), நிலாச்சாரல் (www.nilacharal.com) ஆகியவை எப்பொழுதெல்லாம் வர முடியுமோ அப்பொழுதும் வெளிவருகின்றன. இவை அரசியல், சமூகம், இலக்கியம், சினிமா எனப் பல விஷயங்களை விவாதிக்கின்றன. இந்த இதழ்களின் சிறப்பம்சம் இவற்றில் எழுதுபவர்கள் பலரும் இணையத்தில் மட்டுமே எழுதுபவர்கள்.
திண்ணை, பதிவுகள், நிலாச்சாரல் ஆகியவை யூனிகோட் எழுத்துருவைப் பயன்படுத்துவதில்லை; திசைகளும் தமிழோவியமும் பயன்படுத்துகின்றன. சிஃபி தமிழ்ப் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாகப் பல சிற்றிதழ்கள், நடுத்தர இதழ்களை முழுவதுமாக ஆவணப்படுத்திவருகிறது. அவை :
காலச்சுவடு: http://tamil.sify.com/kalachuvadu/index.php, உயிர்மை: http://tamil.sify.com/uyirmmai/index.php, அமுதசுரபி:
http://tamil.sify.com/amudhasurabi/index.php, கலைமகள்: http://tamil.sify.com/kalaimagal/index.php, மஞ்சரி:
http://tamil.sify.com/kalaimagal/index.php, தலித்: http://tamil.sify.com/dalit/index.php, பெண்ணே நீ: http://tamil.sify.com/pennaenee/index.php
இவை எதுவும் யூனிகோடில் இல்லை.
ஆனால் கீற்று என்னும் வலையகம் (www.keetru. com) பல்வேறு சிற்றிதழ்களை அழகாக யூனிகோடில் வெளியிடுகிறது. இங்குக் கிடைக்கும் இணைய இதழ்கள்:
தலித் முரசு: www.dalithmurasu.com, புதிய காற்று: www.puthiyakaatru.keetru.com, புது விசை: www.puthuvisai.com, கூட்டாஞ்சோறு:
www.koottanchoru.com, அநிச்ச: www.anicha.keetru.com, புரட்சி பெரியார் முழக்கம்: www.puratchiperiyarmuzhakkam.com, விழிப்புணர்வு:
www.vizhippunarvu.keetru.com, தாகம்: http://keetru.com/thaagam/index.html, தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல்:
http://www.keetru.com/anaruna/index.html.
இவை அனைத்திலும் உள்ள விஷயங்கள் கூகிள் தேடலின்போது கிடைக்கும்.
குறிப்பிட்ட ஒரு வகுப்பினரை மட்டும் குறிவைக்கும் niche magazines தமிழில், அச்சில், நிறைய வருகின்றன. பெண்களுக்காக மட்டும், குழந்தைகளுக்காக, பங்குச் சந்தை/தொழில் தொடர்பானவை, மோட்டார் வாகனங்களுக்காக என்று. தோழி (www.thozhi.com) என்ற தளம் பெண்களுக்காக என்று பிரத்யேகமாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தளம் நல்ல வடிவமைப்புடன் உள்ளது. நின்னை (www.ninnay.com) என்றொரு தளம், கவிதைகள், மாற்று சினிமா ஆகியவற்றுக்காக உருவாகியுள்ளது. ஆனால் முழுக்க முழுக்க எழுத்துகளால் அல்லாமல் பட வடிவில் (png கோப்புகளாக) அமைத்திருக்கிறார்கள். நான் இதுவரை குறிப்பிட்டவற்றைத் தவிர இன்னமும் பல சிறு மின்னிதழ்கள் இருக்கலாம்.
தொழில்நுட்ப வகையில் பார்க்கும்போது வெகு சிலவற்றைத் தவிரப் பிற அனைத்துமே யூனிகோடை ஏற்காமல் இருப்பதால் அவற்றின் பயன் குறைவே.
இதைத் தவிர, RSS feed, வாசகர்களிடமிருந்து கருத்துகளைக் கேட்பது, tagging போன்ற பலவற்றைப் பற்றி அறியாமலே இருக்கிறார்கள். பல சிற்றிதழ்களுக்கும் அச்சு இதழ்களை நடத்துவதே போராட்டமாக இருக்கும் போது இணைய இதழ்களில் அதிகக் கவனம் செலுத்துவார்கள் என்று சொல்ல முடியாது. பெரிய வணிக இதழ்களுக்கோ, இப்பொழுது வலையகங்களை அவர்கள் உருவாக்கும் பாணியை மாற்றுவது என்பது மிக அதிகமான அளவு வேலையை இழுத்தடிக்கும்.
வலைப்பதிவுகள் (blogs) எனப்படும் தனியார் இணையக் குறிப்பேடுகள் இன்று மிகவும் பிரபலமாக உள்ளன. இவற்றை இணைய இதழ்களோடு நேரடியாக ஒப்பிட முடியாவிட்டாலும் வரும் வருடங்களில் இவை இணைய இதழ்களைவிட அதிகமாக மிளிர வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஒவ்வொரு துறையிலும் உள்ள நிபுணர்கள் பலரும் தமக்கெனத் தமிழில் வலைப்பதிவுகளை உருவாக்கும்போது அவற்றில் காணக்கிடைக்கும் செய்திகளும் செய்தி அலசல்களும் இணைய இதழ்களில் காணக் கிடைப்பதைவிட வலுவாக இருக்கும். இந்நிலை ஏற்கெனவே உலகளாவிய ஆங்கில வலைப் பதிவுகளில் எட்டப்பட்டுவிட்டது. ஒரு நல்ல விஷயம் – தமிழ் வலைப்பதிவுகள் ஆரம்பிக்கும் போதே உயர் தொழில்நுட்பங்களான யூனிகோட், RSS feeds, tagging போன்ற பலவற்றையும் பாவித்தே உருவாக்கப்படுகின்றன.
இணைய இதழ்கள் வருவதால்தான் இன்று நம்மால் பல்வேறு இதழ்களையும் படிக்க முடிகிறது. காசு கொடுத்து 30-40 இதழ்களை நாம் வாங்கிப் படிக்கப் போவதில்லை. இதனால் மாற்றுக் கருத்துகள் நம்மை வந்தடைகின்றன. இன்று வாசகர்கள் சில ஆயிரங்களே இருந்தாலும், இணையம் வளர வளர, நாளை இந்த வாசகர் வட்டம் பத்து மடங்கு அதிகரிக்கும் என்பதை மனத்தில் வைத்து இது வரையில் இணையத்தைத் தொடாத இதழ்களும் இணையத்தைத் தொட வேண்டிய தேவையை உணர வேண்டும்.
அதைப் போலவே சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைச் சிற்றிதழ்கள் வெளியிடுவதில் செலவழித்துவிடும் பலரும்கூட இணையத்தில் மட்டுமே இருக்கக் கூடிய இதழ்களை உருவாக்குவதன் மூலம் காசை மிச்சப்படுத்தலாம். நிறையச் செலவுசெய்து 300-1000 வாசகர்களை அச்சு மூலம் அடைவதைவிடச் சில ஆயிரம் வாசகர்களைச் செலவே இல்லாமல் அடைந்துவிட முடியும்!
[கட்டுரையாளர் கிழக்குப் பதிப்பகத்தின் பதிப்பாளர். இவரது வலைப்பதிவு: http://thoughtsintamil.blogspot.com ]
பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102
8. மீள்பிரசுரம்: திண்ணை.காம்.
தமிழ் இணைய இதழ்கள் – ஒரு முன்னோட்டம்!
– சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., –
உலகம் தன் பரப்பில் இருந்துச் சுருங்கி இன்று ஒரு கிராமமாக மாறிவிட்டது, இதற்குக் காரணம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி. இத்துறையின் பெரும்பகுதி வளர்ச்சிக்குக் காரணம் கணினித்துறை. அறிவியல் துறையின் முன்னேற்றத்திற்கும், புரட்சிகரமான செயல்பாட்டிற்கும் காரணமாக விளங்கி வருவது கணினித்துறை என்பது கண்கூடான உண்மை. அறிவியல், தொழில்நுட்பத்தின் வழியில் கணினித்துறையும், தகவல் தொழில் நுட்பத்துறையும் இணைந்து மனித சமுதாயத்திற்குத் தந்துள்ள புதிய வழிமுறைதான் இணையம். அதன் விரிவும், அது ஏற்படுத்தியுள்ள வாய்ப்புகளும் எண்ணிலடங்காதவை. மனித அறிவுத்திறனின் எல்லையே அதன் எல்லை; மனித படைப்புத்திறனின் வரம்பே அதன் வரம்பு. உலகு முழுவதும் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இணையத்தின் செயல்பாடு அண்மையில்தான் பல்வேறு வழிகளில் பெரும்¢ மாற்றத்தையும் வளர்ச்சியையும் கண்¢டுள்ளது. தொடக்க காலத்தில் அஞ்சல் செய்திகளை அனுப்ப மட்டுமே பயன்பட்டுவந்த இணையம் தற்போது மின்வணிகம், மின் அரசான்மை, மின் பொழுதுபோக்கு, மின்நூலகம், மின்னிசை எனப் பல வகைகளில் தன் பயன்பாட்டுத்தளத்தை விரிவாக்கிக் கொண்டே செல்கிறது.
அண்மைக்காலம் வரையில் இணையத்தின் செயல்பாடு, பயன்பாடு ஆகியவற்றில் பெரும்பாலும் ஆங்கில மொழியே பயன்படுத்தப்பட்டு வந்தது. பல்வேறு நாடுகள் இணையத்தைப் பலவழிகளில் பயன்படுத்தத் தொடங்கியபின் அந்தந்த நாட்டு மொழிகள் இணையத்தில் இடம் பெறும் தேவை ஏற்பட்டது. எந்தத் துறையின் அறிவும் மக்கள் பேசும் மொழியில் இருந்தால் அது மக்களை எளித்¤¢ல் சென்றடையும்; மக்களால் பெரிதும் பயன் படுத்த முடியும் என்ற அடிப்படையி¢ல் தமிழ் மொழி இயைத்தில் இடம் பெற வேண்டி தேவையைக் காலம் ஏற்படுத்தித் தந்தது.
தமிழும் கணினிப் பயன்பாடும்
தமிழ் மொழியைப் பொறுத்த மட்டில் ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பே அது இயைத்தில் இடம் பெறத் தொடங்கிவிட்டது. இதன் வழியாக உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களும் இணையத்தை, கணினியை அதிகமாகப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. மின் அஞ்சலில் தமிழ் முதலில்¢ இடம் பெற்றது. மெல்ல மற்ற துறைகளிலும்¢ கால்பதி¢த்தது.
தமிழ் இணையம் 99 மாநாட்டிற்கு முன்வரை உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் பல குழுவினராக இருந்து அவரவருக்கான தனித்தனியான தமிழ் எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டு அவ்வற்றை மின்னஞ்சலிலும் இணைய தளங்களிலும் பயன்படுத்தி வந்தனர். இதனால் ஒரு குழுவினர்¢ அனுப்பிய மின்னஞ்சலையோ, இணையதளத் தகவலையோ ஏனையோர் படித்து அறிய இயலாத நிலை நிலவியது. தமிழ்மொழி ஒன்றுதான் என்றபோதிலும் அது இணையத்தில் பல வடிவங்களில் வலம் வந்து கொண்டிருந்தது.
மேற்கண்ட சிக்கலில் இருந்து மீள தமிழக அரசு நடத்திய தமிழ் இணையம் 99 மாநாட்டில் தமிழ் எழுத்துருக்கள் தரப்படுத்தப்பட்டு டாம் (TAM), டாப் (TAM) என்ற எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட அறிவிக்கப்பட்டன. இதனால் அச்சிக்கல் ஓரளவிற்கு அந்நேரத்தில் தீர்க்கப்பட்டது. இருப்பி¢னும் இந்த எழுத்துருக்களை ஒரு கணினியில் உள்ளீடு செய்தபின்னேதான் பயன்படுத்தமுடியும் என்ற சிக்கல் நீடித்தது.
தமிழில் யுனிகோடு முறைமை
தற்போது உலகமொழிகள் எல்லாவற்றிற்கும் ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகுதரமான யுனிகோடு (UNICODE) என்ற எழுத்துருவால் உலக மற்றும் இந்திய மொழிகளின் இடையில் தமிழுக்கு என்று தனியிடம் கிடைத்துள்ளது.
இம்மாற்றம் குறிப்பிடத்தக்கது. இதிலும் சில கயைப்பட வேண்டிய குறைபாடுகள் உள்ளன என்ற கருத்தும் இங்கு சுட்டத்தக்கது.
இந்த யுனிகோடு முறை மூலம் பதிக்கப்பட்ட தகவல்களைத் தமிழிலேயே தேடவும், பெறவும், மின்னஞ்சல்களை அனுப்பவும் எளிதாக முடியும். மேலும் இத்தகுதரம் உலகில் உள்ள பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டமையால் தமிழ் மொழிக்கு இணையத்தில் எதிர்காலத்தில் மிகச் சிறப்பான ஏற்றம் உண்டு என்பதில் ஐயமில்லை.
யுனிகோட் முறை தமிழ் இணையப் பயன்பாட்டில் ஒரு மைல்கல். இவ்வளர்ச்சியால் தமிழ் மொழியிலேயே கணினி பயன்பாடு அமைவது மிகச் சிறந்த மாற்றத்தைத் தற்போது ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் தமிழின் இடம்
இன்று இணையத்தில் உலகின் பல மொழிகள் இடம் பெற்றுவருகின்றன. ஆயினும் ஆங்கில மொழியை அடுத்து மிகுதியாகப் பயன்படுத்தப்படும் மொழி தமிழ் என்பது பெருமைக்குரிய செய்தி. மேலும் இதனால் வளர்ந்துவரும் கணினித்துறை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவ எளிதான வழி பிறந்¢துள்ளது.
தமிழ் இணைய இதழியல்
இன்று கல்வி, வணிகம், வங்கி, வேளாண்மை, பொறியியல், மருத்துவம், அறிவியல் போன்ற பல்வேறு துறைகள் கணினி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னேறி வருகின்றன. இவ்வரிசையில் இதழியல் துறையும் முன்னேறி வருகிறது. அச்சு இதழியல் தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய மாற்றத்தை கணினி விளைவித்துள்ளது. இது தவிர இணையத்தில் இதழியல் என்ற புதிய பிரிவும் தற்போது தொடங்கியுள்ளது. தமிழ் மொழியிலும் பல இணைய இதழ்கள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இது ஒரு புதிய முயற்சியாகும்.
தமிழ் இணைய இதழ்கள் உலக அளவில் உள்ள தமிழ் வாசகர்களை உடன் எட்டுகின்றன ; உலக அளவில் வாசகர்களைப் பெறுகின்றன. உடனடியாக மின்னஞ்சல் மூலமாக வாசகர் கருத்துப் பரிமாற்றமும் நடைபெற்று விடுகிறது. இதன்மூலம் தமிழ் மொழியின் கலை, பண்பாட்டுப் பகிர்வுகள், தேடல்கள், பார்வைகள் பன்முக நோக்கில் பரவிவருகின்றன.
உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் இடத்தால் வேறுபட்டு, பண்பாட்டு நாகரிக மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும் தமிழால் தமிழ் இணையத்தால் இன்று ஒன்றுபட முடிகிறது. இதற்குப் பெரும் பங்காற்றி வருவன தமிழ் இணைய இதழ்கள்.
தமிழ் இணைய இதழ்கள் சிலவும் அவற்றின் வகைப்பாடும்
தமிழில் பல இணைய இதழ்கள் தற்போது எழுந்து வளர்ந்து வருகின்றன. அவற்றுள் பின்வருவன குறிக்கத்தக்கன. அம்பலம், திண்ணை, தமிழோவியம், வார்ப்பு, திசைகள், ஊடறு, நிலாச்சாரல், ஆறாந்திணை, மரத்தடி, பதிவுகள், வெப் உலகம், தமிழ்சிபி தோழி.காம் போன்ற இதழ்கள் வாசகர்களைப் பெருமளவில் பெற்றவை.
இவ்விதழ்களில் சில மாத இதழ்கள், சில வார இதழ்கள். இவை பெரும்பாலும் இலக்கியம் சார்ந்த இதழ்கள் என்பது இவற்றின் பொதுப்பண்பாக உள்ளது.
இந்த இதழ்களில் பெண்களுக்கானவை, கவிதைக்கானவை, செய்திகளுக்கானவை என்ற பிரிவுகளும் உண்டு. கட்டணம் கட்டி படிக்கவேண்டியவை, கட்டணம் தேவைப்படாதவை என்ற பிரிவுகளும் உண்டு. இவை தவிர தமிழ் நாட்டில் வெளியாகும் அச்சு இதழ்களி¢ல் பேர்போன இதழ்களும் தங்கள் இதழ்ப்பகுதிகளை இணையவழியாகத் தந்து வருகின்றன. அவற்றை மீள்பிரசுரம் என்பதாகக் கருத இயலுமே தவிர இணைய இதழ்களாகக் கருதத் தகாது. மேலும் இணைய இதழ்களைச்¢ சிற்றிதழ்கள் போன்றவை/ தரத்தவை என்று கருதினாலும் தவறாகாது.
இதனடிப்படையில் தமிழ் இணைய இதழ்களின் தரத்தையும் அவற்றின் பங்களிப்பையும் ஆராய ஏற்ற காலம் இதுவேயாகும்.
தமிழ் இணைய இதழ்களின் உள்ளடக்கம்
மேற்சுட்டிய இணைய இதழ்களின் உள்ளடக்கத்தை அறிந்து கொள்வது அவற்றின் தரத்தை உணர்ந்து கொள்வதற்கு ஈடானது. அவவ்கையில் சில இதழ்களின் உள்ளடக்கம் இங்கு தரப்படுகின்றன.
திண்ணை
இந்த இதழ் அரசியலும் சமூகமும், கதைகள், கவிதைகள், அறிவியலும் தொழில் நுட்பமும், கலைகள், சமையல், இலக்கியக்¢ கட்டுரைகள், நகைச்சுவையும் வித்தியாசமானவையும், கடிதங்கள் அறிவிப்புகள் போன்ற பல பகுதிகளை உள்ளடக்கி அமைகிறது. இது ஒரு வார இதழாகும்.
பதிவுகள்
இந்த இதழில் அரசியல், கவிதை, சிறுகதை, கட்டுரை, நூல்விமர்சனம், நிகழ்வுகள், அறிவியல் , திரைப்படம், வாசகர் எதிரொலி, நாவல், உங்கள் நலம், விவாதம், தமிழ் வர்த்தக் கையேடு, இலவச வரிவிளம்பரம், நூல் அங்காடி போன்ற பகுதிகள் இடம் பெறுகின்றன.
தோழி. காம்
இந்த இதழ் பெண்களுக்கான இதழ் ஆகும். இதனுள் விவாதம், அழகு, தாய்மை, பயணம், திரை, உங்கள் நாட்குறிப்பு முதலிய இடம்பெற்று வருகின்றன.
அம்பலம்
இந்த இதழில் செய்திகள், வார இதழ், கவிதைகள், சிறப்பிதழ்கள், மகளிர்பக்கம், வாழ்த்துகள், மின்னஞ்சல், இளையர், திரை முதலிய பகுதிகள் உள்ளன.
வார்ப்பு
இது கவிதைகளுக்கான இதழாக வெளிவருகிறது. இதில் கவிதைகள், கவிதைத்தொகுதி அறிமுகம், கவிதை விமர்சனங்கள், கவிஞர்களின் பட்டியல் முதலியன இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு வகைக்கு ஒன்று இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவைதவிர மற்றவையும் கணக்கில் கொள்ளப்பட வேண்டியவையே. இடங்கருதி இவை மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டன.
தமிழ் இணையஇதழ்கள் ஆய்வின் தேவை
தமிழ் இணைய இதழ்கள் என்பவை தமிழ் இதழியல் வரலாற்றில் புதுமையானவை. அவற்றிற்கு என்று சில வரையறைகள் தற்போது உள்ளன ; பொதுப்பண்புகள் உள்ளன. அவை இணைய இதழ்களுக்கு மட்டுமே உரித்தானவை. இவை ஆராயப்படவேண்டும்.
தமிழ் இணைய இதழ்களில் உள்ள குறை நிறைகள் ஆராயப்பட வேண்டும். இதன்மூலம் இணையஇதழ்கள் சரியான பாதையை நோக்கிப் பயணிக்க முடியும்.
தமிழ் இணைய இதழ்களின் தரம், வாசகர் கருத்து ஆகியவையும் ஆராயப் படவேண்டிய களங்கள். இதன்மூலம் இணையஇதழ்களின் தரம் மேம்பாடு அடையும். தமிழ் இணைய இதழ்கள் ஒரு குறிப்பிட்ட வட்ட மக்களை மட்டுமே சென்றடைகின்றன. அவை அனைத்து வட்ட மக்களையும் சென்றடைவதற்கான வழிமுறைகள் ஆராயப்பட வேண்டும்.
தமிழ் இணைய இதழ்களுக்கும் மற்ற துறை இதழ்களுக்குமான ஒற்றுமை வேற்றுமை அளந்தறியப்பட வேண்டும். இதன்மூலம் இணைய இதழ் வளர தனித்த வழி உருவாகும்.
சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., ஆசிரியப் பயிற்றுநர், வட்டார வளமையம், புதுக்கோட்டை
குறிப்பு: பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள இந்தக் களத்தை எடுத்துக்கொண்டுள்ளேன். இதற்கு ஆய்வு நெறியாளராக
முனைவர் மு. பழனியப்பன் எம்.ஏ., எம். பில்., பிஎச்.டி., பிஜிடிசிஏ., முதுநிலை தமிழ் விரிவுரையாளர், மா. மன்னர் கல்லூரி, (த), புதுக்கோட்டை, 622 001 அமைகிறார். இது குறித்தத் தகவல்கள் ஏதேனும் இருப்பினும் கீழ்க்காணும் மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டுகிறேன்.
muppalam2003@yahoo.co.in
நன்றி: திண்ணை.காம்
பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102
9. இணைய இதழா, அச்சிதழா? எது நீடிக்கும்? இணைய இதழா, அச்சிதழா? எது நீடிக்கும்?
– பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்)
ஓர் இதழ் மிகுந்த விற்பனையுள்ளதா, குறைந்த விற்பனை உள்ளதா, அப்படியாயின் அது பேரிதழா சிற்றிதழா என்ற வினா மறைந்துபோய், இணைய இதழா அச்சிதழா இன்றைய வளர்ச்சியில் எது நீடிக்கும் என்ற வினா உலகம் முழுதும் எழுந்துள்ளது.. இணைய இதழ், அச்சிதழ் – இவற்றுள் எது சிறந்தது? என்ற வினாவைத் திண்ணை இணைய இதழில் (ஆகஸ்ட் 10, 2006;வியாழன்) எழுப்பியுள்ளார் ஜெர்மனியில் வாழும் சந்திரவதனா செல்வகுமாரன்.
இணைய இதழ்களின் வரவால் இன்றைய ஜெர்மனிய இதழ்கள் ஆட்டம் கண்டுள்ளன என்கிறார் அவர். இந்த நிலையில் நமது இதழ்கள் நாளேடுகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்று ஆர்வமுறுகிறார். ஈழத் தமிழர்கள், பன்னாட்டுத் தொடர்பும் இடையூடாட்டங்களும்[interactions] கொண்டவர்கள் என்பதால் அவர் எழுப்பியுள்ள வினா, அவர்களைப் பொறுத்தவரை பொருள் மிகுந்ததுதான். கரணியம், அவர் விதந்தோதியுள்ள ‘பூவரசு’ என்ற இதழ், தன் பதினேழாவது ஆண்டில் தொடர்ந்து அச்சுப் பதிப்பாக வருவதா அல்லது இணைய இதழாகி விடுவதா என்ற இக்கட்டுக்கு உள்ளாகி இருக்கிறது.
புலத்தில் படைப்பாளரும் இதழ் வெளியீட்டாளரும் மிகுந்த பணநெருக்கடிக்கு ஆளாகிறார்கள். உள்ளூரில் வெளியாகும் பேரிதழ்கள்தாம் படைப்புகளுக்குப் பணம் தர முடியும். வேறுவகையில் சொன்னால் புலத்தில் வெளியாகும் பரவலான வாசிப்புடைய இதழின் வெளியீட்டாளருக்கு உள்ள பொருளியல் நிலையும் உள்ளூரில் நடத்தப்பெறும் சிற்றிதழ் வெளியீட்டாளருக்குள்ள பொருளியல் நிலையும் ஒன்றேதான். இணைய இதழ் நடத்துவோர் ஆண்டுக்குச் செலவிடும் தொகை, பரவலான சிற்றிதழொன்றுக்கு மாதமொன்றுக்குத்தான் சரிவரும். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இப்பொழுது ஒரு காசும் செலவு செய்யாமல் இணைய இதழை நடத்தும் வாய்ப்பை இணைய நிறுவனங்கள் தர முன்வந்திருப்பதுதான். பணத்தட்டுப்பாட்டுடன் இணைய இதழை நடத்தி மாய்வதைவிட, வருமானத்துக்குரிய பணியொன்றைச் செய்துகொண்டே மனநிறைவுடன் தொடர்ந்து தன்னிதழை, மேலதிகமான வாசகர்ப் பரப்புடன் நடத்தக்கூடிய வாய்ப்பு வருகிறதெனில் விடுவாரா, அவ்வாறு இக்கட்டில் உள்ள ஓர் இதழாசிரியர்? ‘பூவரசு’ இதழாசிரியரைக் குறித்து நான் இவ்வாறு சொல்லவில்லை. ஏனெனில், அவர் அதை வாசகரிடம் விட்டிருக்கிறார். அவர்கள் எவ்வாறேனும் அவ்விதழைத் தொடர்ந்து நடத்தவே வேண்டும் என்று கருத்துரைத்திருக்கின்றனர்.
பழகிவிட்ட கண்களுக்கு, அச்சுப்பதிப்பாக வரும் இதழ் தரும் மனநிறைவு இணைய இதழால் வராது. இது உண்மையே என்றாலும், தொடர்புடையதே.
பொதுவாக இன்றைய தலைமுறையில் உள்ள வளரிளம் பருவத்தினர் இணைய இதழை வாசிக்கவே விரும்புகின்றனர். நான் வழக்கமாக இணையமுலவும் நடுவத்தில், அதை நடத்துபவர் ஒழுங்குக்கு முதன்மை கொடுப்பவரென்பதால், ஆக்கவழியில் இணையமுலவும் வளரிளம்பருவத்தினர் பலர் வந்து செல்கின்றனர். அவர்களுள் பல்கலை மாணவர் ஒருவரிடம் இது குறித்துக் கேட்டபொழுது, தமிழ்நாட்டில் விற்பனையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் வார இதழ் ஒன்றை, நாள்தோறும் பகுதி பகுதியாக அவர் படிக்கிறார் என்றும் ஏணைய இணையம் உலவும் பொழுதைத் தன் ஆய்வுப் பணித்திட்டம் உருவாக்கச் செலவிடுகிறார் என்றும் அறிந்து கொண்டேன்.
அந்த வார இதழ் விலை பத்துரூபாவுக்கும் குறைவுதானே, ஒரு முறை வாங்கிக் கொண்டால் போதுமே, கையிலோ பையிலோ வைத்துக் கொண்டு இதேபோல் வாரம் முழுதும் வாசிக்கலாமே என்று கேட்டேன். அவர் சொன்ன மறுமொழி என்னைப் பெரிதும் ஆச்சரியப்பட வைத்தது. “ஒரு மணிநேரத்துக்கு இங்கு இணையம் உலவப் பதினைந்து ரூபா. இதே சாலையில் மேல்நிலைப் பள்ளியருகில் பன்னிரண்டு ரூபாதான். சூழ்நிலை, அப்பா வழங்கும் கைப்பணம் ஆகியவற்றைப் பொறுத்து அங்கும் இங்கும் இணையமுலவுவேன். பணித்திட்டத்தைத் தரவுகளிலிருந்து தட்டெழுதும்பொழுது சலிப்பு வரும். அப்பொழுது, வந்தவுடன் முகவரியிட்டு வரவழைத்து சுருக்கி(minimise)வைக்கும் அவ்விதழை விரிவாக்கி வாசித்துவிட்டு மீண்டும் பணித்திட்டத்தில் இறங்குவேன். இதனால் எனக்கு வேலையும் நடக்கிறது. நான் விரும்பும் இதழை இலவசமாகவே வாசிக்கவும் முடிகிறது. அதை வாங்கி, அடுத்தவர் கேட்டு, அவருக்குக் கொடுத்து, திரும்பப் பெற துன்பப்படவும் வேண்டியதில்லை. தூசியுமில்லை. பழையதாள் கடைக்குச் சுமந்து சென்று தொல்லைப்பட வேண்டியதுமில்லை” என்றார் அவர். என் அடுத்த வினாவையும் கேட்டேன். “நீங்கள் வாசிக்கும் இதழ் முழுவதையும் இலவசமாகத் தருவதில்லையே! கதை, கட்டுரைகளின் முதற்பகுதியைத்தானே தருகிறார்கள்..’மேலும் வாசிக்க’ என்று கேட்டால், நம் மின்னஞ்சல் முகவரி கேட்கிறார்கள். தொகை அனுப்பச் சொல்கிறார்களே…” என்றேன். அவர் மர்மமான புன்னகையொன்றை உதிர்த்தார். “குறிப்பிட்ட சாவி மட்டும்தான் பூட்டைத் திறக்குமா?” – என்று விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளத்தின் பாணியில் வினாவொன்றை உதிர்த்துவிட்டு, தன் ‘டூவீல’ரைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டார்.
“இணையங்களின் வரவுக்குப் பின், குறிப்பாக வலைப்பதிவுகளின் வரவுக்குப்பின் [அச்சுப்] பதிப்புகளோடான ஊடாடல் வாசகர்களிடையே குறைந்துவிட்டதுதான் அப்பட்டமான உண்மை” என்று சொல்லும் சந்திரவதனா, “எப்போதுமே [அச்சுப்] பதிப்பாக வரும் ஒன்றுக்கு இருக்கும் தனித்தன்மை இணைய இதழ்களுக்கு இல்லை..” என்ற தெளிவான கருத்துடையவர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
அதனால்தான், நானும், எனக்கென்று மூன்று இணைய வலைப்பதிவுகள் உள்ளபொழுதும் அவற்றை விடாது இடுகைகளிட்டு நிகழ்த்துவதுடன், தொடர்ந்து அச்சிதழ்களுடன் ஊடாடியும் படைப்புகள் தந்தும் வருகிறேன்.
இளந்தலைமுறையினரில் விதிவிலக்கானவர்களைத் தவிர எல்லோரும் வகைவகையான ‘மொபைல்’களுக்குச் செலவிடுகிறார்கள்; ‘ஸ்ப்ரே’க்களுக்குச் செலவிடுகிறார்கள்; திரைப்படங்களுக்குச் செலவிடுகிறார்கள்.[திரைப்படம் ஒன்றுக்குச் சீட்டு, நொறுக்குத் தீனி, ‘சாஃப்ட் டிரிங்ஸ்’ ஆகியவற்றுக்கு ஆகக்குறைவாக ஐம்பது ரூபாவாவது தனக்குச் செலவாவதாக தொ.கா.’வில் ஓரிளைஞர் குறிப்பிட்டார். தான் நண்பர்களுக்குச் செலவிடுவதோ, கெட்ட பழக்கங்களுக்குச் செலவிடுவதோ இல்லை என்றார். தனக்குப் பிடித்த படத்தை இவ்வாறு குறைந்தது ஏழு,எட்டு முறையாவது பார்த்துவிடுவாராம். “ஒரு வாரத்துக்கு எத்தனைப் படம் பார்ப்பீர்கள்?” என்ற கேள்விக்கு, “எப்படியும் ஏழுக்குக் குறையாது!” என்றார். வாரத்துக்கு ஏழு நாட்கள்தாமே!…] ஆனால் புத்தகத்தையோ, இதழையோ காசு கொடுத்து வாங்க விரும்புவதில்லை. தரமான இதழ் என்றால் சொல்ல வேண்டுவதே இல்லை. பணிக்குச் செல்லும் பெண்டிரும், இல்லத்தரசியருள் பலரும் வாடகை நூலகங்களையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். எட்டு ரூபா இதழை இரண்டு ரூபா வாடகைக்குத் தரும் அத்தகைய நூலகங்களுக்குப் போட்டியாக, ஒரு ரூபாவுக்கே தரும் ‘மொபைல்’ வாடகை நூலகங்களும் உள்ளன. ‘டி.வி.எஸ். டூவீலர்’ அதற்கு வசதியாக உள்ளதாம். இணையம் உலவுவோரில் தொண்ணூறு சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், இதழ்களை விலைகொடுத்து வாங்கி வாசிக்கும் மனம் இல்லாதவர்கள் என்பதே உண்மை. எதிர்வரும் 2010ஆம் ஆண்டளவில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள – ஐம்பது அகவைக்கு மேற்பட்டவர்களே இதழ்களை வாசிப்பார்கள் என்கிறது ஆராய்ச்சி.
இதழ்கள் சிலவற்றுக்குப் படைப்புகளை அனுப்புவோர், தம் படைப்பு அதில் வெளிவந்துள்ளதா என்பதை அறிய, அவற்றை விலை கொடுத்து வாங்கிப் பார்த்தே அறிந்தாக வேண்டும் என்று கேள்விப்படுகிறேன். அதே பொழுது, மூன்று உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால், சேர்த்து விடுபவருக்கு இலவசமாக இதழைத் தொடர்ந்து அனுப்பும் இதழ்களும் உள்ளன. படைப்பாளருக்கும் புரவலருக்கும் தனித்தனியே இதழ்களைப் பொறுப்பாக அனுப்பித் தரும் இதழ்கள் உள்ளன. இணைய இதழ் எனில் இந்தச் சிக்கல் எதுவுமில்லை.
காலாண்டிதழ் ஒன்று. அதன் ஐந்தாவது இதழை வாசித்து முடித்துவிட்ட பின்பு, அதன் முன்னிதழ்கள் பாதுகாப்பாக வைக்கப்பெற்றுள்ள [ஓதமில்லாமல் வறண்ட] இடத்துக்குச் சென்று பார்த்தேன். முதலாம் இதழும் இரண்டாம் இதழும் பழுப்பாகி அச்செழுத்துகள் மங்கித் தெரிந்தன. இணைய இதழ் அவ்வாறில்லை. மின்னூலும் அப்படியே. இப்பொழுது கூகிள் தேடுதளத்தில் ‘மரபுத் தொடர்கள்’ என்று தட்டெழுதித் தேடினால் இலவசமாகக் கிடைக்கும் சோலைக்கிளி அவர்களின் ‘காகம் கலைத்த கனவு’ என்ற முழு மின்னூல், மதுரை மின் நகலகத் திட்டத்தாரால் உருவாக்கப் பெற்றுள்ளது. அதன் தலைவர், சுவிட்சர்லாந்தில் வாழும் டாக்டர் கல்யாணசுந்தரம் அவர்கள். ஜெர்மனியில் வாழும் திரு கண்ணன் அவர்கள், அத்திட்டத்தின் செயலாக்க ஆசிரியர். வடிவான நூல். என் மேசையின் சிறிய இழுவியுள் அது போன்ற இருநூறு நூல்களை வைத்துக் கொள்ள முடியும். இணைய இதழ்கள் பலவற்றை, “எதைக் கொண்டு போனோம்! அதைக் கொண்டு வருவதற்கு!” என்ற எதிர்மறை முறையில், உலவுபுலங்களில் வாசித்துவிட்டு வந்து விடுகிறேன். ‘புதுச்சேரி’ மின்னிதழை வாசிக்கும்பொழுதே கூடல், வார்ப்பு, திசைகள், தமிழோவியம், மரத்தடி, முத்தமிழ் மன்றம், திருக்குறள், எழில்நிலா, தமிழம், அன்புடன் புகாரி, அம்பலம், ஆறாம் திணை, கதம்பம், தமிழமுதம், தமிழ்மண், பதிவுகள், நிலாச்சாரல், நம் நாடி, சிஃபி, இ-சங்கமம், தமிழன் எக்ஸ்பிரஸ், கல்கி, மங்கையர் மலர், விகடன், குமுதம், திண்ணை, கீற்று ஆகிய இணைய இதழ்களையும் சுட்டிசொடுக்கி வாசித்துவிட முடிகிறது.
இவற்றுள் கூடல், முத்தமிழ் மன்றம், திருக்குறள், தமிழம், தமிழமுதம், நிலாச்சாரல், சிஃபி தமிழ் ஆகியவை இணைய தளங்களும் கூட. குமுதம்(=குமுதம் குழும இதழ்களான தீராநதி முதலியவை), விகடன்(+ விகடன் குழும இதழ்களாகிய சுட்டி விகடன் முதலியவை), தமிழன் எக்ஸ்பிரஸ், மங்கையர் மலர், கல்கி ஆகியவை அச்சிதழ்களாகவும் இணைய இதழ்களாகவும் ஒரே நேரம் வெளிவருபவை. ஏன் இவை அச்சிதழ்களாக மட்டும் வெளிவரவில்லை? இவ்வாறு இணைய இதழ்களாகவும் வந்தால்தான் மேலும் பரவலான பன்னாட்டு வாசகர் வட்டத்தைப் பெறமுடியும் என்பதே விடை. இன்னும் மின்னிதழ்களாக வரும் நாளேடுகளும் உள்ளன அல்லவா? தினகரன், தினத்தந்தி, தினமலர் முதலானவையும் அவ்வகையில் குறிப்பிடத் தகுந்தவை.
ஆகவே, மேற்குறிப்பிட்ட செய்திகளை வைத்துப் பார்க்கும்பொழுது, இன்றைய நிலையில் தரமானதோர் அச்சிதழாக வரும் ஒன்று, நீடித்து எதிர்காலத்திலும் தொடர்வதோடு நிலையாகவும் இருக்க வேண்டும் என்றால், மின்வெளியில்(Cyber Space)நுழைந்து இணைய இதழாகவும் திகழ வேண்டும் என்பது தெளிவாகிறது.
நன்றி: http://kalapathy.blogspot.com/2006/10/blog-post_116106401618516138.html
பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102
10. இணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்
– முனைவர் மு. பழனியப்பன் –
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து என்பதாம் ஆண்டு முதல் கணினியில் தமிழ் இடம் பெற ஆரம்பித்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு முதல் தமிழ் இணையத்தில் உலாவர ஆரம்பித்தது. இணையத்தில் தமிழ் இடம் பெற்று ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்ட இந்த சூழலில் அதன் வளர்ச்சி குறிக்கத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை கணினி அல்லது இணையம் தமிழை வளர்க்க ஒரு துணை கருவியாகப் பயன்பட்டு வந்தது. ஆனால் தற்போது கணினித் தமிழே தனித் துறையாக வளர்ந்து வருகிறது. ஆங்கில வழியாகக் கற்ற கணினித் தொழில் நுட்ப வல்லுநர்கள் மெல்லத் தமிழில் நுழைந்து தொழில் நுட்பங்களைத் தமிழ்ப் படுத்தித் தமிழ இணையத்தை வலுப் பெறச்செய்து வருகின்றனர். இனிவரும் காலத்தில் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் தனியாக கணினித் தமிழ்த்துறை ஆரம்பிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
கல்வெட்டுக்களிலும், ஓலையிலும், காகிதத்திலும் உலா வந்த தமிழ தற்போது வலையேறி இணையத்தில் இணைந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளத்தில் அழியாமல், வெந்தணலில் வேகாமல், கள்வரால் கொள்ளப்படாமல் காக்கின்ற நிலைபெற்ற தன்மைக்குத் தமிழ் வந்துவிட்டது.
தேடுபொறிகளில் தமிழில் தேடவும், தகவல்களைத் தமிழில் பெறவும் தற்போது இணையம் பெரிதும் உதவுகின்றது. துல்லியமான தகவல்களைப் பெற, குறிப்பிட்ட ஒரு சொல்லைத் தேடித் தகவல்கள் பெற இணையம் வழிவகை செய்துள்ளது. எந்தப் பாடலானாலும், எந்தப் படைப்பானாலும் அவற்றின் வரிகளை, சொற்களைத் தந்து தேடுபொறிகளை இயக்கினால் உடன் தேடப்பட்ட பாடலின் வரிகளை, சொற்களை முழுதாகத் தந்து இலக்கிய முயற்சிக்கு ஈடேற்றத்தைத் தந்துகொண்டிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு படைப்பாளரைப் பற்றிய தகவல்களை, அவரின் பேட்டிகளை இணையம் வாயிலாகப் பெற இயலும். இதனால் கற்றது கைமண் அளவு, தேடியது சுட்டுவிரல் சொடுக்களவு என்றநிலை ஏற்பட்டுள்ளது.
இணையத்தமிழின் வருகையால் சாதாரண நூல்களுக்குக் கூட நூலகங்களைத் தேடி அலையும் கால விரயம் தீர்க்கப் பெற்றுள்ளது. தமிழில் செய்திகளை மின்னஞ்சல் இட்டு, குறுஞ்செய்தி இட்டு உடனுக்குடன் உலக நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடிகின்றது. குறிப்பிட்ட ஒருவருடன் இணையவழித் தொடர்பு கொண்டு அவருடன் நேர்காணலிட முடிகிறது. இந்த நேர்காணல் நேரத்தை அனைவருக்கும் தெரிவித்துவிட்டால் அவர்களும் பங்கு பெற முடிகிறது. நாடுகள் கடந்து தமிழுக்கான ஆக்கமுறைகள் வலுப்பெற்று வருகின்றன. இன்றைய இணைய உலகால் தமிழ்ப்பயன்பாடு என்பது மிக விரைவு படுத்தப்பட்டுள்ளது என்பது மிக முக்கியமான செய்தியாகும்.
தமிழில் உள்ள வலைதளங்கள் வாயிலாக தமிழர் செய்திகளை அறிந்து கொள்ளவும், பல்லாயிரக்கணக்கான தமிழ் நூல்களைப் பெறவும், இணையத் தமிழ் இதழ்களைப் படிக்கவும், தமிழிசையைக் கேட்கவும், தமிழ்க் காணொலிகளைக் காணவும் முடிகின்றது. மொத்தத்தில் தற்கால தகவல் தொழில் நுட்ப உலகில் தமிழைத் தழைக்கச் செய்யவேண்டிய முயற்சிகள், செயல்பாடுகள் நடைபெற்றுவருகின்றன என்பதில் ஐயமில்லை.
தமிழ் எழுத்துரு, தமிழ் விசைப்பலகை பற்றித் தொடக்க காலத்தில் நிகழ்ந்த வாதங்கள், பிரதி வாதங்களுக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். தமிழில் ஒருங்குறி முறை அனைவராலும் ஏற்கப் பெற்றபின் தமிழ் எழுத்துரு பற்றிய தடை முற்றிலும் நீங்கியே விட்டது. இருப்பினும் ஒருங்குறியில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டிப் போராட வேண்டியிருக்கிறது. ஒருங்குறி முறை கணினிக்கும், இணையத்திற்கும் ஏற்ற முறை என்றாலும் அம்முறை முற்றிலும் தமிழ் அச்சுத்துறைக்கு ஒத்துவராத நிலையில் உள்ளது. இதனை மாற்றி தமிழ் அச்சகத் துறைக்கு ஏற்ற வடிவாக ஒருங்குறி அமைப்புமுறையை அல்லது அச்சு வெளிப்பாட்டு மென்பொருளை உருவாக்க வேண்டி உள்ளது. மேலும் ஒருங்குறி அமைப்புக்கு ஏற்ற சொல் திருத்தி, இலக்கணத்திருத்திகளை உருவாக்கவும் இனிச் செயல்பட வேண்டி இருக்கிறது.
ஒருங்குறியின் ஒத்த தன்மை காரணமாக இணையத்தின் வழியாக உலகத் தமிழர்கள் தடையின்றி ஒன்று கூடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்று கூடும் தமிழர்கள் தங்களின் தரவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ளுகின்றனர். அதன்முலமாக தமிழின் பல்வேறு சிறப்புக்களை, தமிழின் பன்முகங்களை, தமிழ்ப் பயன்பாட்டை அவர்கள் வளப்படுத்தி வருகின்றனர்.
தரமாகும் தமிழ்ச் செய்தித் தளங்கள்
தமிழர் செய்திகளை அறிந்து கொள்ள பற்பல தளங்கள் உருவாக்கப் பெற்றுள்ளன. உலக நிறுவனங்களான யாகூ
(http://in.tamil.yahoo.com/), எம்எஸ்என் http://msn.webdunia.com/tamil/index.htm , கூகிள் http://news.google.com/news?ned=ta_in போன்றனவும்
தமிழ்ச்செய்தித் தளங்களைக் கொண்டுள்ளன என்பது தமிழர் செய்திகளுக்குத் தரப்பட்டுள்ள முக்கியத்துவம் ஆகும். மேலும் இந்நேரம்.காம்
http://www.inneram.com/ அதிகாலை.காம் http://www.adhikaalai.com/ போன்றனவும், தட்ஸ்தமிழ்.காம் போன்றனவும் இணையத்தில் தமிழில் செய்திகளைத் தருவதில் குறிக்கத்தக்கன. இவை இணைய இதழியல் தமிழுக்குப் பெருமை சேர்த்துவருகின்றன.
தமிழில் வெளிவரும் நாளிதழ்கள் அனைத்தும் தமது தளங்களை இணையத்தில் பரவவிட்டுள்ளன. மேலும் இத்தளங்களில் செய்திகள் முந்தித்தரப்படுகின்றன. காலையில் சராசரியாக வீடுகளுக்கு வரும் நாளிதழின் நேரத்திற்கு ஏறக்குறைய நான்கு மணிநேரத்திற்கு முன்னதாகவே செய்திகளை நாளிதழ்களின் இணையதளங்களில் வாசிக்க முடிகின்றது. மேலும் வெளிநாட்டு நண்பர்களும் இந்தியச் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள முடிகிறது. அன்றைக்குக் காலையில் வந்துவிட்ட நாளிதழில் அன்றைக்குரிய நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை அறிய இயலாது.
ஆனால் இத்தளங்களில் உடனுக்கு உடன் செய்திகளை அறிந்து கொள்ளும் வசதி உள்ளது. தமிழ் இதழியல் இதன்முலம் மிக முக்கியமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பது கருதத்தக்கது. இமெயில் வழியாகவும், கைபேசி வழியாகவும் கூட செய்திகள் பத்திரிக்கை அலுவலகங்களை அடைந்து உடனுக்கு உடன் மக்களைச் சென்றடைய நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்முலம் பத்திரிக்கைத் துறை மேம்பாடு அடைந்து வருகிறது.
வார, மாத இதழ்களும் தங்களுக்கான இணைய தளங்களை வைத்துள்ளன. இத்தளங்களில் சில வணிகமயமாகி உள்ளன. சில கடவுச் சொற்களின் வழியாக வாசிக்கவிடுகின்றன. இவற்றில் வாசிக்கும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை இவை காட்டுகின்றன. இவ்வாறு இதழியலில் இணையத் தமிழ் பயன்பாடு பெருவளர்ச்சியடைந்துள்ளது.
இனிய உதவிக்கு இணைய நூலகம்
இணைய நூலகம் தற்போது வளர்ந்து வரும் பெருந் துறையாகும். பெரிய பரப்பில் நூல்களை அடுக்கி வைத்து, தூசுதட்டிப் பாதுகாத்துச் சேவை செய்தாலும், வேண்டியபோது வேண்டிய நூல் கிடைக்காமல் போகும் தொல்லை இனி இல்லை. இணையத்தில் நூல்கள் சேமிக்கப் பெற்றுப் பக்கம் பக்கமாகப் படிக்கும் வசதி வந்துவிட்டது. இணைய நூல்களில் தேடுதல் வசதியும் கிடைக்கிறது. குறிப்பிட்ட திணை சார்ந்த பாடல்கள் மட்டும் குறுந்தொகையில் வேண்டும் என்றால் அவற்றைத் தேடி அறியமுடியும். குறிப்பிட்ட ஒரு சொல் வந்துள்ள திருக்குறள்களைத் தேடி அறியவேண்டுமானால் சில மணித்துளிகளில் பெற்றுவிடலாம். இவ்வகையில் மிகுந்தப் பயன்பாடுடையதாக இணைய நூலகங்கள் உள்ளன. தற்போது இ- நூல்கள் என்ற தனிவசதி வந்துவிட்டது. இந்நூல்களில் ஒலியமைப்பும் உண்டு. வாசித்துக்கொண்டே கேட்கலாம். இத்தனை அரிய வசதிகளும் ஒரு சொடுக்கலில் நிகழ்ந்து விடுவது ஆச்சர்யமான ஒன்றுதான்.
தமிழ் நூல்களைப் பெற மதுரைத்திட்டமும் http://www.projectmadurai.org/ நூலகத்திட்டத்தின் தளமும் http://www.noolaham.org, சிற்றிதழ் சேகரிப்பாளர் பொள்ளாச்சி நசன் அவர்களின் தமிழம் தளமும் http://www.thamizham.net , தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகப் பிரிவும் http://www.tamilvu.org/library/libindex.htm, சென்னை லைப்பரரி . காம் http://www.chennailibrary.com விக்கி புக்ஸ் http://ta.wikibooks.org, லைப்பரரி செந்தமிழ்.காம் http://library.senthamil.org/index.jspபோன்ற தளங்கள் உள்ளன. இவற்றில் மூல பாடங்கள் கிடைக்கின்றன. சிற்சிலவற்றிற்கு உரைகள் கிடைக்கின்றன. உரைகள் பழைமையானவையாகவே உள்ளன. நூல்களை வலையாக்கம் செய்வதில் பல இடையூறுகள் இன்னமும் உள்ளன.
நேரமின்மை, தமிழ்த்தட்டச்சுப் பழக்கமின்மை போன்றன இணையத் தமிழ் நூல்கள் அதிகம் வலையேறுவதைத் தடுத்துவருகின்றன. இதில் ஒரு குறிப்பிட்ட குறையும் உண்டு. வெளிநாடுகளில் பெருமளவில் தமிழ் நூல்களை வலையேற்றம் செய்யும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தாய்த்தமிழகத் தமிழர்கள் வலையேற்றிய நூல்கள் மிகக்குறைவே. பெரும்பாலும் அது இரண்டு சதவீதம் என்ற அளவினதாகத்தான் இருக்கும். தாய்த்தமிழகத் தமிழர்கள்
நுகர்வு முறையிலேயே தமிழ் இணைய உலகைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது இதன் முலம் தெரியவருகிறது. மென்பொருளை உருவாக்கவோ, அல்லது நூல்களை வலையேற்றவோ அவர்களுக்கு நேரம் இருப்பதும் இல்லை. பொருளாதாரச் சூழலில் இணையத்தை வைத்திருப்பதே பெருஞ் செலவு என்ற எண்ணமே தாயகத் தமிழர்களிடம் மிஞ்சி நிற்கிறது. இதுதவிர பழைய நூல்கள் பல பக்கம் பக்கமாக படியெடுக்கப் பட்ட நிலையிலும் உள்ளன. இவற்றைத் தேடிப் பிடித்துக் கண்டறியவேண்டியதும் கடினம்.
நூல் வலையேற்றத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பங்கு குறிக்கத்தக்கது. http://www.tamilheritage.org இவ்வமைப்பின் வழியாகப் பழைய ஓலைச்சுவடிகள் மின்வடிவில் வந்து கொண்டே இருக்கின்றன. பல தல புராணங்கள் இத்தளத்தில் கிடைக்கின்றன. பல தமிழகப் பல்கலைக் கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பத்தந்தத்தை ஏற்படுத்தி இந்நிறுவனம் உலக அளவில் தமிழை மேம்படுத்த பல பணிகளைச் செய்து வருகின்றது.
இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் முயற்சி ஏற்பட்டால் ஒரே நூல் பலரால் கணினியாக்கம் செய்யப்படும் முறையைத் தவிர்த்திடலாம். இதன் முலம் நேர, பணச் செலவினைக் கட்டுக்குள் கொண்டுவர இயலும்.
தகவல்களை வழங்கும் தமிழ்க்களஞ்சியங்கள்
தமிழ்க்களஞ்சியங்கள் பல இன்னும் வலையேற்றம் பெற வேண்டும். அகராதித் துறை வளரவேண்டிய துறையாக இணைய அளவிலும் உள்ளது. பல்கலைக்கழகங்கள் முயன்று தொகுத்த பல அகராதிகள், களஞ்சியங்கள் இன்னமும் நூல்வடிவிலேயே உள்ளன. அவற்றைக் கணினியாக்கி உலகம் பரவச் செய்ய வேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்லெக்ஸிகன், ஆங்கிலம் தமிழ் அகராதிகள் , பால்ஸ் அகராதி போன்றன தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளத்தில் கிடைக்கின்றன. இவற்றின் முலம் அரிய தமிழ்ச்சொற்கள் உலகம் முழுவதும் பரவ வாய்ப்புகள் உண்டு. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாழ்வியில் களஞ்சியங்கள், அறிவியல் களஞ்சியங்கள் போன்றன வலையேறவேண்டும்.
இவைதவிர விக்கிபீடியா ஏறக்குறைய இருபத்தி இரண்டாயிரம் தமிழ்க்கட்டுரைகளை உள்ளடக்கிய நிலையில் ஆற்றி வரும் பணியும் குறிக்கத்தக்கது.
இதனுள் இடுகைகளை இடவும், திருத்தவும் உரிமை தரப்பட்டுள்ளது. தற்போது வைக்கப் பெற்றுள்ள மாணவப் போட்டி இக்கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இருப்பினும் தரம் என்ற நிலையில் விக்கிக் கட்டுரைகள் இன்னும் மேம்பட வேண்டி இருக்கிறது.
விக்கி தரும் நூலகப்பிரிவு இன்னும் வளமாகவேண்டும். மேலும் விக்கி ஆங்கிலத்தில் வழங்கிக் கொண்டிருக்கும் அனைத்துப் பிரிவுகளும் தமிழிலும் வர வேண்டும்.
தமிழ் நூல்களை வலையேற்றம் செய்வதில் உரிமைச் சிக்கல்களும் உள்ளன. ஏறக்குறைய பல நல்ல நூல்கள் சில நிறுவனச் சொத்துரிமைகளாக இருந்து வருகின்றன. ஐம்பது ஆண்டுகள் ஆனபின் உள்ள நூல்கள் அனைத்தையும் வலையேற்றம் செய்யலாம் என்ற நடைமுறையே தற்போது உள்ளது. எனவே தற்கால நூல்கள் பல வலையேற காலம் பார்த்துக் கொண்டுள்ளன.
இது போன்ற பல தடைகளை மீறி தமிழ் நூல்கள் இணையத்தில் பரவலாக வரவேண்டும். வாசிக்கப்பட வேண்டும்.
சமயங்கள் வளர்க்கும் இணையம்
சமயம் சார்ந்த பல தளங்கள் அரிய தகவல்களை, நூல்களை வழங்கி வருகின்றன. சைவம், வைணவம், சமணம் போன்ற சமய நூல்களை இவை சார்புடைய பல அமைப்புகள் வலையேற்றி உள்ளன. சமண சமயத்தின் செய்திகள் வண்ணமயமாகவும், வளமான அளவிலும் கிடைக்கின்றன என்பது குறிக்கத்தக்க செய்தி. சமணசமயம் ஆதி சமயம். அது இந்தியா முழுவதிலும் பரவி இருந்தது என்ற பழைய நிலை போலவே தற்போதும் இது இணைய அளவில் பெருத்த பரவல் நிலையில் உள்ளது. சமண சமயத் தளங்களின் சிறப்புகளை, ஆலய வடிவங்களை, புகைப்படங்களை, சமண நூல்களைப் பெற பல தளங்கள் உள்ளன.ஜெயின்வேர்ல்டு.காம்(http://www.Jain world.com) என்ற தளம் தமிழ்ச்சமணத்தின் நீள அகலத்தைத் தக்க சான்றுகளுடன் எடுத்துரைக்கின்றது. இதனுள் சமண மத நூல்களும் கிடைக்கின்றன. சைவம். ஆர்கனைசேசன்(http://www.shaivam.org/) என்ற தளம் சைவத்தின் பெருமைகளை எடுத்துரைக்கிறது. பன்னிரு திருமுறைகளையும், சாத்திர நூல்களையும் தேவாரம்.ஆர்கனைசேசன் http://www.thevaram.org/) என்ற தளம் இசையோடும், பொருளோடும், பதம் பிரித்தும் தருகிறது. மிகப் பெரிய சைவக் கொடையாக இது விளங்குகின்றது. இதுதவிர கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கெனத் தனித்தளமும் உள்ளது. இதில் இவரின் உரைகளைக் கேட்கமுடிகிறது. இதுபோன்று பல தனித்தளங்களும் சைவத்தை வளர்த்து வருகின்றன. வைணவ சம்பிரதாயங்களை அறிந்து கொள்ளவும் இணையம் உதவுகின்றது. மாறன்ஸ் டாக் .காம் வைணவப் பாடல்களை கேட்க உதவுகின்றது. http://www.maransdog.com. இவ்வாறு சமயங்கள் வளர்த்த தமிழைப் பரவலாக்கம் செய்யும் முயற்சியில் இணையம் ஈடுபட்டு வருகின்றது.
மேலும் பல தளங்களில் வைணவத் தளங்கள், சைவத்தளங்கள் பற்றிய ஒலி, ஒளிக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை தல தரிசிப்பிற்குப் பெரிதும் உதவுகின்றன. இதுதவிர இத்தளங்களில் இணைய வழி பூசைகளை ஆற்ற தமிழக அரசு தக்க ஏற்பாடுகளை இணையவழியாகச் செய்து தந்துள்ளது.
கௌமாரம்.காம் என்ற தளம் முருகன் பற்றிய அனைத்துச் செய்திகளையும் கொண்டு ஈடு இணையற்றதாக விளங்குகிறது. தமிழரின் தனிப் பெரும்
அடையாளமாகச் சமயம் விளங்க இணையம் இவ்வகையில் உதவி வருகின்றது.
இணையில்லா இணைய இதழ்கள்
தற்காலத்தில் இணைய இதழ்கள் குறிக்கத்தக்க அளவில் வாசகத் தளத்தைப் பெற்றுவருவது கவனிக்கத்தக்கது. இணையத்தில் மட்டுமே தன் ஆளுமையைச் செலுத்தும் இதழ்களே இணைய இதழ்கள் ஆகும். இவ்வகையில் திண்ணைhttp://www.thinnai.com, பதிவுகள்http://www.pathivukal.com,
வார்ப்பு http://www.vaarppu.com(கவிதையிதழ்), நிலாச்சாரல்http://www.nillasaral.com, வரலாறு.காம் http://www.varalaaru.com, தமிழ்த்திணை, முத்துக்கமலம் போன்ற பல இதழ்களைக் குறிப்பிடலாம்.
பல இலட்சங்கள் போட்டு அச்சிதழாகக் கொண்டுவருவதைக் காட்டிலும் இவ்விதழ்கள் வண்ணமயமாக அதிக பணச்செலவின்றி வாசகர்களை எட்டும் நிலையில் சிறந்தனவாகும். மேலும் இவ்விதழ்களில் வந்த ஆக்கங்களை பகுதி பிரித்து வைத்துக் கொள்ள முடியும். மேலும் நாள்படி, ஆசிரியர்படி தேட முடியும் என்பது இன்னுமொரு சிறப்பு. இதனைத் தமிழ் இணைய இதழ்கள் அனைத்தும் கடைபிடித்து வருவது குறிக்கத்தக்கது. உலகத் தமிழர்கள் ஒருங்கு கூடும் இடமாக இந்த இணைய இதழ்கள் விளங்குகின்றன. பிரபலமான எழுத்தாளர்களும் இதில் எழுதி வருவது குறிக்கத்தக்கது.
வலைப் பூக்கள் என்னும் வரப்பிரசாதம்
தமிழ் இணைய வளர்ச்சியில் பரவலாக்கத்தையும், எளிமையையும் கொண்டுவந்தது வலைப்பூக்கள் ஆகும். வலைதள வடிவமைப்பைக் கற்க பெரும் பொருள் தரவேண்டும் என்ற தமிழனின் கவலையை இந்த வலைப்பூக்கள் நீக்கின. எளிமையான, அழகான வலைப் பூக்களைத் தமிழர்கள் வளமையுடன் பைசா செலவின்றி அமைத்துக் கொள்ளமுடியும்.
வலைப்பூக்களின் முகவரிகள் கொண்டே தற்போது தமிழர்கள் தங்களின் அறிமுகங்களைத் தொடங்கிக் கொள்கின்றனர்.அந்த அளவிற்கு வலைப் பூக்கள் தமிழர்கள் மத்தியில் பிரிபலமடைந்துள்ளது. வலைப்பூக்களை வடிவமைக்க எளிய வழிகளை பலர் தமிழகத்தில் சொல்லித் தந்தும் வருகின்றனர். இதற்கான குழுக்களும் அவ்வப்போது சந்தித்து வலைப்பூ பரவலாக்கத்தினை மேம்படுத்தி வருகின்றன.
மகிழ்வுந்துகளில் வலைப் பூ முகவரிகள் செல்லமாகத் தரப்படுகிற நிலை வந்துவிட்டது. வலைப்பூக்களில் தரமற்றவற்றை ஒதுக்கிவிட வலைப்பூக்களை அளிக்கும் நிறுவனங்கள் முயன்றுவரும் முயற்சிக்குப் பாராட்டுக்களைச் சொல்லவேண்டும்.
மாறிக் கொண்டே இருக்கும் இணைய வெளிப்பாட்டுப் பரப்பில் வலைப்பூக்கள் இன்னமும் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது அதற்குள்ள சிறப்புக் கூறுகள் காரணமாகவே ஆகும். முகவரி(பேஸ்புக்), குறுஞ்செய்தி(டிவிட்டர்) போன்றன வந்துவிட்ட போதும் வலைப்பூக்களுக்கான மதிப்பு தமிழ்ப்பகுதியில் அப்படியே இருப்பது குறிக்கத்தக்கது. பிரபலங்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், பெண்கள், கவிஞர்கள், சமுகவியலாளர்கள் போன்ற பல்வேறு துறைசார்ந்தவர்களும் வலைப்பூக்களை வைத்திருப்பது அதன் வளமையைப் பெருக்குவதாக உள்ளது.
இருப்பினும் வலைப்பூக்களின் மொழிநடை கவலைக்கு இடமாகவே காட்சியளிக்கிறது. அதிக அளவில் சாதி, சமய பூசல்கள் இங்கு அரங்கேறுகின்றன.
இவற்றிற்கு மத்தியஸ்தம் செய்திடவும் சில பஞ்சாயத்துக் குழுக்கள் உள்ளன. இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
வலைப்பூக்கள் தரும் செய்திகளை வகைப்படுத்தித் தமிழ்மணம், தமிழிஷ்.காம், திரட்டி போன்றன வழங்கி வருகின்றன. வலைப்பூக்களின் வடிவமைப்பைத் தரப்படுத்த, மேம்படுத்த பல வலைப்பூக்களே உள்ளன. மென்பொருள்.காம் போன்றன அவ்வகையில் குறிக்கத்தக்கன.
வலைப்பூக்களின் தரத்தை, நேர்த்தியை மேம்படுத்தப் பல அமைப்புகள் போட்டிகள் நடத்தி வருகின்றன.சமீபத்தில் தமிழ்மணம் தளம் அறிவித்த போட்டியும், சிங்கப்பூர் அன்பர்கள் அறிவித்த மணற்கேணி போட்டியும் இதற்குச் சிறந்த உதாரணங்கள். இவற்றின் முலம் பல புதிய, தரமிக்க வலைப்பூ எழுத்தாளர்கள் தமிழ் இணைய உலகிற்கு அறிமுகம் ஆனார்கள்.
மதிக்கப் பெறும் மின்னஞ்சல் குழுக்கள்
மின்னஞ்சல் குழுக்கள் பல தமிழின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகின்றன. முத்தமிழ் குழுமம், மின்தமிழ் குழுமம், தமிழ்த் தென்றல் குழுமம் போன்றன இவ்வகையில் அறியத்தக்கன. இவற்றில் இடப் பெறும் பொதுவான அஞ்சல் அனைத்து உறுப்பினர்களையும் அடைகிறது. இந்தச் செய்தியில் விருப்பமுடைய அன்பர்கள் மீள பதில் அனுப்புகின்றனர். இந்தத் தொடர் சங்கிலி விவதமாகவும் வளர்வதுண்டு. இவ்வகையில் மின்னஞ்சல் குழுக்கள் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட அஞ்சல்கள் ஒவ்வொரு தமிழரின் மின்னஞ்சல் உள்பெட்டியில் வந்து குவிகின்றன. இவற்றினாலும் இணையத் தமிழ் மேம்பட்டு வருகின்றது.
தற்போது பேஸ்புக், டிவிட்டர் போன்ற நிலைகளில் இணையத்தில் தமிழ் ஆதிக்கம் பெற்று வருகின்றது. இவற்றின் வருங்காலமும் இணையத் தமிழ்ப்பரப்பில் குறிக்கத்தக்கது.
தமிழ் ஒலிபெயர்ப்பிற்குப் பல மென்பொருள்கள் வந்துவிட்டன. தமிழ் சொல், இலக்கணத் திருத்திகள் எளிதில் மக்களுக்குக் கிடைக்கவேண்டும். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கும் மென் பொருள் கிடைத்துவிட்டால் உலக அரங்கில் தமிழ்ப்படைப்புகள் முன்னிலை பெறும்.
இது போன்ற சவால்கள் நிறைந்துள்ள இணையப் பரப்பில் இணையப் பங்களிப்பை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மாநாடுகளின் வாயிலாக அவ்வப்போது நிறைவேறி வருகிறது. தற்போது நாட்டுக்குநாடு இந்த மாநாடுகள் நடந்து வருகின்றன. உத்தமம் போன்ற அமைப்புகள் உலக அளவில் பல மாநாடுகளை நடத்தி வருகின்றன. இவற்றில் அடுத்த கட்டத்திற்கு இணையத்தமிழை முன்னெடுக்கும் முயற்சி நடைபெற்று வருவது சிறப்பானதாகும்.
தமிழக அரசும் பல நிலைகளில் இணையத் தமிழ் வளர்ச்சிக்கு உதவி வருகின்றது. தன் தளங்களைத் தமிழக அரசு யுனிகோடிற்கு மாற்றும் முயற்சிக்கு ஒற்றைத் தன்மைக்கு வர இருப்பது வரவேற்கத்தக்கது. டைடல் பூங்காங்கள் தமிழகத்தில் இணையப் பரப்பை விரிக்க ஆரம்பித்துள்ளன. இவற்றில் தமிழும் தலையாய இடம் பிடிக்க வேண்டும். இவ்வகையில் தமிழின் வளர்ச்சியில் இணையப் பரப்பிற்கு நிலையான இடம் உள்ளது என்பது மறுக்க இயலாது.
palaniappan m <muppalam2006@gmail.com
பதிவுகள் மார்ச் 2011 இதழ் 135
11. தமிழில் இணைய இதழ்கள்!
– முனைவர். மு. இளங்கோவன் –
[புதுச்சேரி வலைப்பதிவு பயிலரங்கில் (09.12.2007) வெளியிடப்பெற்ற மலரில் இடம்பெற்றுள்ள இக்கட்டுரை இங்கு ஒரு பதிவுக்காக மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. இணைய இதழ்கள் பற்றி அவ்வப்போது வெளிவரும் அல்லது ஆய்வரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகளை அல்லது புதிய ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். பதிவுகளில் பிரசுரிக்கிறோம்.- பதிவுகள்]
இருபதாம் நூற்றாண்டு வழங்கிய தகவல்தொடர்புக்கருவிகளுள் இணையம் குறிப்பிடத் தகுந்த,தவிர்க்க முடியாத ஒன்றாக இன்று விளங்குகிறது.செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள உதவும் இதன் சிறப்புகள் பலவாக உள்ளன. அச்சுவடிவிலும், ஒலி, ஒளி வடிவிலும் தகவல்களைப் பெறக்கூடிய, வழங்கக் கூடிய இருவழிக் கருவியாக இது விளங்குகிறது.இணையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு தகவல்களைப் பல முனைகளில் இருந்து பல வடிவங்களில் பெற்றுக்கொள்ள,அனுப்ப முடிகிறது. எனவே அச்சுவடிவில் ஒரு குறிப்பிட்ட நில எல்லைக்குள் கிணற்றுத் தவளையாக இருந்த ஊடகங்களும், ஒலி,ஒளி வடிவில் இருந்த ஊடகங்களும் இணையத்தின் வழியாக இன்று உலகம் முழுவதற்கும் பயன்படத்தக்க படைப்புகளை,தகவல்களை உலகச்சொத்தாக்க முனைந்துள்ளன.
உலகப்போட்டிக்கு ஈடு கொடுத்து ஒவ்வொருவரும் தங்கள் நலனுக்காக இணையத்தை ஒவ்வொரு வகையில் சார்ந்து நிற்கின்றனர்.அவ்வகையில் அச்சில் வந்த,வரும் இதழ்கள் பலவும் தங்கள் இதழ்களை மின்னிதழ்களாகவும்(e-zines) வெளியிடுகின்றன.அவ்வகையில் உலக மொழிகள் பலவற்றுள்ளும் மின்னிதழ்கள் வெளிவருகின்றன.இக்கட்டுரை தமிழில் வெளிவரும் இணைய இதழ்கள் சிலவற்றை அறிமுகம் செய்கின்றது.
தரவுதளம் (Database site) இணையதளம்,இணைய இதழ், வலைப்பூ வரையறை
தமிழில் வெளிவரும் இணைய இதழ்களைப்பற்றி அறிவதற்கு முன்பாக தரவுதளம் (Database site), இணையதளம்,இணைய இதழ்,வலைப்பூ என்னும் சொற்களைப்பற்றிய வரையறையைச் செய்துகொள்வது நன்று. ஏனெனில் இவை யாவும் தொடர்புடையனவாக இருப்பதால் ஒன்றுபோல் தோன்றும்.
தரவுதளம் என்பது பல்வேறு தகவல்களைச் சேகரித்து நிரல்படுத்திக் கட்டமைக்கப்பட்ட தொகுப்பு இணையதளம்.ஆங்கிலத்தில் பல தரவுதளங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக உலகளாவிய திரைப்படங்கள் தொடர்பில் அனைத்துத் தகவல்களும் www.imdb.com தளத்திலும், மட்டைப்பந்து விளையாட்டினைப் பற்றிய தகவல்களுக்காக www.cricinfo.com தளமும் உள்ளன.
தமிழில் முதலாவது தரவு தளமாக www.viruba.com உள்ளது. இத்தளத்தில் தமிழில் வெளியாகும் நூல்களைப் பற்றியும், அவற்றைப் பதிப்பித்த பதிப்பகங்கள் பற்றியும், நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர்களைப் பற்றிய தகவல்களுடன் தமிழ் ஊடகங்கள் பற்றிய வெளியீட்டுத் தகவல்கள், புத்தகங்களுக்கான மதிப்புரைகள் ஆகியவற்றுடன் தமிழில் வெளியாகும் பல சிற்றிதழ்கள் பற்றிய வெளியீட்டுத் தகவல்களும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தளம் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. தமிழ் ஆர்வலர்கள்,தமிழ் ஆய்வுமாணவர்கள் மற்றும் வாசகர்களின் பேராதரவைப் பெற்ற தளமாக இது விளங்குகிறது.
இணையதளம் என்பது ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு, அல்லது தனிநபர் தமது விவரங்கள், தகவல்கள்,செய்திகள்,சேவைகள் முதலானவற்றை,எழுத்தாகவோ, படமாகவோ ஒலி, ஒளி வடிவிலோ தருவது இணையதளமாகக் கருதலாம்.எ.கா. அப்பல்லோ மருத்துவமனையின் தளம் (www.apollohospitals.com) அதன் சேவை,மருத்துவர்கள் பற்றிய விவரம், வசதிகள் இவற்றைத் தாங்கியுள்ளமையை நினைவிற்கொள்க.
இணைய இதழ்கள் என்பவை அச்சுவடிவ இதழ்களைப் போலவே பல்வேறு செய்திகள், படைப்புகள்,படங்கள் இவற்றைக்கொண்டு வெளிவருவனவாக உள்ளன.எ.கா.கீற்று, திண்ணை. பதிவுகள்,நிலாச்சாரல், எழில்நிலா, அந்திமழை முதலியன.
வலைப்பூ என்பது தம் விருப்பத்தை எழுத்தாகவோ,படமாகவோ,ஒலி,ஒளி வடிவாகவோ வழங்குவது. கட்டணம் கட்டியும்,இலவசமாகவும் வலைப்பூக்களை உருவாக்கமுடியும்.பல நிறுவனங்கள் இலவசமாக இச்சேவையை வழங்குகின்றன. Google நிறுவனத்தின் www.blogger.com என்னும் வலைப்பூ சிறந்த நூல்கள், சிறந்த தளங்கள், இலக்கிய நிகழ்ச்சிகள், பதிப்பு, நூல் தொர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகளை வெளியிட்டு வருவதை அத்தளத்திற்குச் சென்று பார்வையிடலாம்.
இணைய இதழ்கள்
தமிழ்மொழியில் பல்வேறு இணைய இதழ்கள் வெளிவருகின்றன. இவ்விதழ்கள் இலவசமாகவும், கட்டணம் கட்டியும் படிக்கும் படியாக உள்ளன.அதுபோல் அனைவரும் எளிதில் படிக்கும்படியாக ஒருங்குகுறி(unicode) எழுத்திலும், எழுத்துகளைப் பதிவிறக்கம் செய்துபடிக்கும் படி தனிவகை(டாம்,டேப்) எழுத்திலும் வெளிவருகின்றன. ஒருங்குகுறியில் வெளிவரும் இதழ்களையே அனைவரும் விரும்பிப் படிக்கின்றனர்.
தொடக்கத்தில் டாம்,டேப் எழுத்துகளைப் பயன்படுத்திய இதழ்கள்கூட உலக ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து ஒருங்கு குறிக்கு மாறிவிட்டன.தனிவகை எழுத்தில் தொடக்கத்தில் வெளிவந்த தினபூமி,தினமணி இதழ்கள் இன்று ஒருங்கு குறியில் வருகின்றமையைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
எழுத்துருக்களைப் பதிவிறக்கம் செய்து படிக்கவேண்டிய தளத்திற்கோ, இதழிற்கோ படிப்பாளிகள் செல்லத் தயங்குகின்றனர்.தினத்தந்தி இதழ் ஒருங்குகுறியில் இல்லாமையால் படிக்கும் சிக்கல் உள்ளது.
இணைய இதழ்களின் வகைப்பாடு
இணைய இதழ்களை அதன் வெளியீட்டு முறைகளுக்கு ஏற்ப நாளிதழ்,வார இதழ்,மாத இதழ் என்றெல்லாம் வகைப்படுத்த முடியும். நாளிதழையும் காலை இதழ்,மாலை இதழ் என வகைப்படுத்தலாம் நாளிதழ்
பெரும்பாலான அச்சு இதழ்கள் இன்று மின்னதழ்களை வெளியிடுகின்றன. தினமலர், தினமணி, தினபூமி, விடுதலை, தினத்தந்தி, தினகரன், மாலைமலர் முதலியன இணைய இதழ்களாக வெளிவருவதில் குறிப்பிடத்தக்கன.இவற்றுள் தினமலர் நாளிதழ் மின்னிதழாக வெளிவருவதுடன் குறிப்பிட்ட மணி நேரத்தில் செய்திகளைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றது.மேலும் அயல்நாட்டுத் தமிழர்களைக் கவரும் பல்வேறு உத்திகளையும் பின்பற்றி அயலகத் தமிழர்களைத் தன் இதழைப் படிக்கும்படி செய்கின்றது. உலகத்தமிழர் செய்திகள், பிற மாநிலச் செய்திகள், மாவட்டங்கள் என்றெல்லாம் பல்வேறு வகையில் வாசகர்களைக் கவர்ந்திழுக்கின்றது. இவ்வகையில் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆத்திரேலியா, சீனா,சப்பான் முதலான நாடுகளில் நடைபெறும் செய்திகளை அந்த அந்த நாட்டிலிருக்கும் செய்தியாளர்கள் திரட்டி அனுப்புகின்றனர்.
இது தவிர புதினம்.காம்,சங்கதி,பதிவு,லங்காசிறீ,தினக்குரல்,உதயன், தாட்சுதமிழ்,வெப் உலகம், சிபி.காம், பி,பி.சி.தமிழ்,வணக்கம் மலேசியா முதலான தளங்கள் பல்வேறு வகையில் அன்றாடச் செய்திகளைத் தருகின்றன.
வார இதழ்கள்
தமிழகத்தில் அச்சில் வெளிவரும் வார இதழ்கள் பலவும் மின்னிதழாகவும் வெளிவருகின்றன. மின்னிதழின் தரம் படிப்பாளிகளை மனத்தில்கொண்டு சிறப்புப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்தும் சில இதழ்கள் வழங்குகின்றன. ஆனந்தவிகடன், குமுதம், மங்கையர்மலர், கல்கி,நக்கீரன்(வாரம் இருமுறை) முதலிய இதழ்கள் இணைய இதழ்களாகவும் கிடைக்கின்றன.இவற்றுள் சிலவற்றை இலவசமாகவும்,சிலவற்றைக் கட்டணம் கட்டியும் படிக்கவேண்டியுள்ளது.
திண்ணை வாரந்தோறும் புதுப்பிக்கப்படுகின்றது.இதன் வடிவமைப்பும்,வகைப்பாடும் கண்ணைக்கவரும் வண்ணம் உள்ளது. முகப்பு,அரசியலும் சமூகமும்,கதைகள், கவிதைகள், அறிவியலும் தொழில்நுட்பமும்,கலைகள்-சமையல் என்னும் வகைப்பாட்டில் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. எட்டாண்டுகளாகத் தொடர்ந்து வாரந்தோறும் இவ்விதழ் புதுப்பிக்கப்பட்டுத் தரமான படைப்புகளைத் தாங்கி வெளிவருகின்றமை பாராட்டிற்கு உரியது. உலகம் முழுவதும் இவ்விதழுக்கு வாசகர்கள் உள்ளனர்.அதுபோல் படைப்பாளிகளும் உள்ளனர்.உலகம் முழுவதும் நடைபெறும் தமிழ் சார்ந்த இலக்கிய நிகழ்வுகளைத் திண்ணை வழங்குவதில் ஓர் உலகப்பார்வை உள்ளமை புலனாகும். அனைத்துத்தர மக்ககளும் அமர்ந்துபேசும் இடமாகத் திண்ணை இருப்பதுபோல் திண்ணை இணையதளமும் அனைத்துக் கொள்கைகளையும், கருத்துகளையும் கொண்டவர்களைத் தம் எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளமை திண்ணையின் தனிச்சிறப்பாகும்.
திண்ணையில் பல வகையான படைப்பாளிகளும் தங்கள் படைப்புகளை வந்து வழங்குகின்றனர். கதை, கட்டுரை,கடிதம், ஆய்வுகள், நாட்டு நடப்புகள், இலக்கியச் சந்திப்புகள், விவாதங்கள்,உலக அரசியல் முதலியன பற்றிய பல தரமான படைப்புகள் திண்ணையில் வெளியிடப்பட்டுள்ளமையை அதன் முந்தைய ஆவணப்பகுதிக்குச் சென்று பார்வையிடும்படி பழைய இதழ்கள் தொகுத்தும் திண்ணையில் வைக்கப்பட்டுள்ளன.
திண்ணையில் கி.இராசநாராயணன், அம்பை, கோபால்இராசாராம், அ.மார்க்சு, விக்கிரமாதித்தியன், காஞ்சனாதாமோதரன், வாசந்தி, பாவண்ணன்,வ.ந.கிரிதரன், பழ.நெடுமாறன், இன்குலாப், சா.கந்தசாமி, இந்திராபார்த்தசாரதி, தேவமைந்தன், செயபாரதன், பிச்சினிக்காடு இளங்கோ முதலானவர்கள் பலவகையில் தங்கள் படைப்புகளை வழங்கியுள்ளனர்.
மாத இதழ்கள்
தமிழ் இணைய இதழ்கள் மாதஇதழாகவும் சில வெளிவருகின்றன. அவற்றுள் கனடாவிலிருந்து வெளிவரும் பதிவுகள் இதழ் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் (www.pathivugal.com). பதிவுகள் இலவசமாக வெளிவரக்கூடிய இதழாக இருப்பினும் ஆண்டுக்கு 24 டாலர் கட்டணம் கட்டும்படி வேண்டுகிறது. ஆசிரியர் வ.ந.கிரிதரன். 2000 ஆம் ஆண்டில் கனடாவிலிருந்து தொடங்கப்பட்டது.தொடக்கத்தில் முரசுஅஞ்சல் (இணைமதி) எழுத்துரு பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது ஒருங்குகுறி எழுத்து பயன்படுத்தப்படுகிறது. அரசியல், கவிதை, சிறுகதை, கட்டுரை, நூல்விமர்சனம், நிகழ்வுகள்,அறிவியல்,திரைப்படம்,வாசகர் எதிரொலி, நாவல்,உங்கள் நலம், விவாதம், தமிழ் வர்த்தக கையேடு, இலவச விளம்பரம்,நூல் அங்காடி, சமூகம் என்னும் தலைப்புகளில் செய்திகள் வெளியாகின்றன.
இலக்கிய இதழ்கள்
இலக்கியம், இலக்கணம், படைப்புகள் சார்ந்த செய்திகளைக்கொண்டும் இதழ்கள் வெளிவருகின்றன. திண்ணை என்னும் இணைய இதழ் பல்வேறு படைப்பாளிகள், எழுத்தாளர்கள்,ஆய்வாளர்களின் படைப்புகளைத் தாங்கித் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தோறும் வெளிவருகின்றது.புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தெளிதமிழ் என்னும் மாத இதழ் இலக்கியம், இலக்கணம் தமிழ்வளர்ச்சி சார்ந்த செய்திகளைத் தாங்கி வெளிவருகின்றது.
பதிவுகள் என்னும் இதழ் கனடாவிலிருந்து வ.ந.கிரிதரன் அவர்களால் சிறப்பாக இலக்கியம் சிறுகதை,கவிதை,கட்டுரை முதலான பலதரப்பட்ட செய்திகளுடன் வெளிவருகின்றமை குறிக்கத்தக்க ஒன்றாகும். இந்த இதழில் திண்ணை, தமிழ்மணம், விக்கிபீடியா, வார்ப்பு, நூலகம்,கீற்று,மதுரைத்திட்டம், சென்னை நூலகம் முதலான இதழ்,தளங்களுக்கான இணைப்புகளைக் கொண்டிருப்பது தனிச்சிறப்பு.
படைப்பாளிகளுடன், இலக்கிய ஆர்வலர்களுடன் தம் சிந்தனையைப் பகிர்ந்து கொள்ளவும், எல்லைகளைக் கடந்து அனைவருடனும் தொடர்புகொள்ளவும் பதிவுகள் தோற்றுவிக்கப்பட்டது என்ற் இதன் நோக்கம் பதிவாகியுள்ளது. குழுமனப்பான்மையின்றி, அனைவரும் கலந்து பங்காற்றும் இதழாகவும், உலகில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சிகளை இலவசமாக வெளியிடும் இதழாகவும் இது உள்ளது. இவ்விதழில் இந்திரன், செயபாரதன், கா.சிவத்தம்பி, செயமோகன், சுப்பிரபாரதிமணியன், அ.முத்துலிங்கம், பிச்சினிக்காடு இளங்கோ, நளாயினி, சோலைக்கிளி கிரிதரன் முதலானவர்கள் பல்வேறு பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்.
வடஅமெரிக்கா,ஆத்திரேலியா,ஐரோப்பா,சிங்கப்பூர்,சப்பான்,மலேசியா,இலங்கை,இந்தியா உட்பட பலநாடுகளின் வாசகர்கள் இந்த இதழுக்கு உண்டு.பதிவுகள் தமிழில் வெளிவந்தாலும் ஆங்கிலப் படைப்புகளும் இதில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.மாத இதழாகப் பதிப்பிக்கப்பட்டு அனைவராலும் விரும்பிப்படிக்கப்படுகின்றது.
பொள்ளாச்சியிலிருந்து பொள்ளாச்சிநசன் அவர்களால் வெளியிடப்படும் தமிழம்.நெட் (www.thamizham.net) என்னும் இதழ் தமிழில் வெளிவரும் இதழ்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்(இதனைத் தளமாகவும் கொள்ளலாம்).தமிழறிஞர்களின் படங்கள், அறிஞர்களின் வாழ்க்கைக்குறிப்பு,பொள்ளாச்சி நசன் அவர்களுக்கு வரும் இதழ்கள் மடல்கள் பற்றிய விவரம், நூல் மதிப்புரை, தமிழ்ப்பாடம், திருக்குறள், இலக்கிய நிகழ்வுகள், அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.இதில் இடம்பெற்றுள்ள பாடங்கள் உலக அளவில் மதிக்கப்படுகின்றன. மாதந்தோறும் புதுப்பிக்கப்படுகின்றது.
புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தெளிதமிழ் தலைசிறந்த தமிழறிஞர்களின் பாடல்கள், இலக்கண,இலக்கியம் சார்ந்த கட்டுரைகள்,நூல்மதிப்புரை,தமிழ்சார்ந்த நிகழ்வுகள்,பாடல் எழுதும் பயிற்சி முதலியவற்றைக்கொண்டு மூன்று இதழாக இணைய இதழாக வெளிவருகிறது.
இணைய இதழ்களின் பயன்
இணைய இதழ்களைப் படிப்பவர்கள் உலக அளவில் உள்ளதால் படைப்பாளியின் படைப்பு உலக அளவில் செல்கிறது.உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை இணைய இதழ்கள் செய்கின்றன.ஒரு படைப்பாளியின் படைப்புகளை எளிதில் திரட்டமுடிகிறது. பின்னூட்டங்களின் வழி நம் படைப்புகளின் தன்மையை உணரமுடியும்.அச்சு வடிவ இதழ்களைப் படித்த பிறகு சேமிக்க வீட்டில் இடம் தேவை.அச்சுவடிவ இதழ்கள் நம்மை அடைய கால தாமதம் ஏற்படலாம்.இதழ்களை வாங்க தொகை தேவை.ஒரு இதழை ஒரு இடத்திலிருந்து ஒருவர்தான் படிக்கலாம்.ஆனால் இணைய இதழை உலகின் பல பகுதிகளிலிருந்து பலர் படிக்கலாம்.பி.பி.சி. போன்ற தளங்களில் செய்திகைளைப் படிப்பதுடன் செய்திகளை ஒலிவடிவில் கேட்கவும் முடிகிறது.
இணைய இதழ்களைப் பலர் தொடங்கி நடத்தினாலும் சில இதழ்கள்தான் தொய்வின்றி வருகின்றன.தரமாக இதழ்கள் வெளிவந்தாலும் போதிய ஆதரவு இன்மையாலும்,பொருள் நெருக்கடியாலும்,குழு மனப்பான்மையாலும் பல இதழ்கள் வெளிவராமலும் பராமரிக்கமுடியாமலும் போய்விட்டன. வெளிவந்த,வெளிவரும் சில இதழ்களைத் திரட்டித்தர இக்கட்டுரை முனைகிறது (இப் பட்டியல் முழுமையானதல்ல.விடுபட்ட இதழ்களைத் தெரிவிக்கப் பட்டியலை முழுமைப்படுத்தலாம்).
பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102