அரசியல், சமூகம், இலக்கியம், சமையல், பெண்கள், மருத்துவம், ஆன்மீகம், வணிகம், சோதிடம், பல்சுவை என பல தலைப்புகளில் செய்திகளை தன்னில் உள்ளடக்கி வெளிவரும் இணைய இதழ்களில் கீழ்க்கண்டவை பலராலும் வரவேற்பு பெற்றவை. திண்ணை: வீட்டில் திண்ணை வைத்துக்கட்டுவது தமிழா் மரபு. இந்த திண்ணையில் உட்கார்ந்து பல செய்திகள் அலசப்படும். அதுபோல இலாப நோக்கமின்றி நடத்தப்படும் இம்மின்னிதழில் கலை, அரசியல், கதை, கட்டுரை இலக்கியம், கவிதை எனப் பலவற்றையும் படிக்கலாம். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று புதுப்பிக்கப்படுகிறது. பழைய மின்னிதழ்களில் இதுவும் ஒன்று. தட்ஸ் தமிழ்: இலக்கிய இதழாக இல்லாமல் நாளிதழைப்போல வெளிவருகிறது. இதில் பலதுறைச் சார்ந்த செய்திகளும் இலக்கியமும் இடம் பெற்றுள்ளது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, கன்னடம் ஆகிய 6 மொழிகளில் வெளிவருகிறது. மேலும் திரைத்துறை உள்ளிட்ட ஒளிக்காட்சிகளையும் இதில் காணலாம். வார்ப்பு: தமிழ்க் கவிதைக்கோர் இணைய இதழ். 1998 இல் ‘நிக்குமோ நிக்காதோ” என்ற பெயரில் வந்த இம்மின்னிதழ் பிறகு ‘வார்ப்பு” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கவிஞர்கள், கவிதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்னும் தலைப்புகளில் செய்திகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவுமதி, கனிமொழி போன்ற கவிஞர்களின் கவிதைகள் இதில் வெளிவந்துள்ளன. புதிதாக வெளிவந்துள்ள தமிழ் நுால்களைப் பற்றிய விமர்சனத்துடன் கூடிய தகவல்களை இந்த இதழில் உள்ள ‘நூலகம்” என்ற இணைப்பின் வழியாக காணலாம். பதிவுகள்: 2000 ஆம் ஆண்டிலிருந்து கனடாவிலிருந்து வெளிவருகின்றது. இதன் ஆசிரியர் வ.ந. கிரிதரன் . மாதந்தோறும் வெளிவரும் மின்னிதழ். இதன் நோக்கம் ‘அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்” என்பதாம். கவிதை, சிறுகதை, நாவல், நூல் விமர்சனம், அறிவியல். . .இலக்கியம் சார்ந்த செய்திகளைப் படிக்கலாம். இலவசமாக கிடைக்கின்ற இவ்விதழில் ஆக்கங்களை வெளியிடவும், பார்வையிடவும் கட்டணம் ஏதுமில்லை. உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாகப் பிரசுரித்து உதவுகிறது. மேலும் விக்கிபீடியா (தமிழ் தகவல் களஞ்சியம்), மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் இணைப்புகளையும் வழங்குகிறது.
மரத்தடி: கதை, கட்டுரை, கவிதை வெளியிடுகிறது. இது ஒரு இலவச மின்னிதழ். ஆனால் மரத்தடி குழுமத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே இதில் தங்கள் படைப்புகளை இட முடியும். விரும்பும் எவரும் இதில் உறுப்பினர் ஆகலாம்.
தமிழகம் நெட்: மாதந்தோறும் வெளிவரும் இம்மின்னிதழைப் பொள்ளாச்சி நசன் நடத்தி வருகிறார். தமிழறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், தமிழறிஞர்களின் புகைப்படங்கள், நூல் மதிப்புரை, இலக்கிய நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை இதில் காணலாம். ஆங்கிலம் வழியாக தமிழ் கற்பிக்கின்ற பணியையும் இவ்விதழ் செய்துவருகிறது.
தமிழ்கூடல்: தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு பயன்படும் வகையில் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் சான்றோர்கள் பற்றிய சுருக்கமான தகவல்களைக் கொண்ட பட்டியல் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன கட்டுரை, இலக்கியம், அரசியல். . இடம் பெற்றுள்ளன.கவிதைகளை மரபுக் கவிதை, புதுக் கவிதை, கைக்கூ கவிதை என்று வகைப்படுத்தி வெளியிடுகிறது.
நிலாச்சாரல்: கதைகள், கவிதைகள், சுவடுகள், பூஞ்சிட்டு என்னும் சிறுவர்பகுதி, பலசுவை பகுதி, இலக்கியச் செய்திகள் முதலியன இவ்விதழில் வெளிவருகின்றன. இது ஒரு வார இதழ்.
தமிழோவியம்: கட்டுரை, கவிதை, சிறுகதை, திரை விமர்சனம். . .ஆகியவற்றை எடுத்தியம்பும் வார இதழ் இது. தமிழ் ஈ புக் என்ற இணைப்பின் மூலம் தமிழில் வெளிவருகின்ற மின் நூல்களை காண முடியும். விசை, தலித் முரசு, கூட்டாஞ்சோறு, புதுவிசை, தாகம், தமிழ்ச் சான்றோர் பேரவை. . . போன்ற பல்வேறு சிற்றிதழ்களை அழகாக யுனிகோடில் வெளியிடுகிறது கீற்று என்னும் இணையதளம்.
சிப்பி : ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் இயங்கும் இவ்விணையதளத்தில தமிழ் பகுதியில் காலச்சுவடு, அமுதசுரபி, கலைமகள், மஞ்சரி, தலித், பெண்ணே நீ. . .போன்ற சிற்றிதழ்களைப் படித்து மகிழலாம்.
விகடன் குழுமம் – ஆனந்த விகடன், அவள்விகடன், சுட்டிவிகடன், ஜீனியர்விகடன், நாணயம்விகடன், மோட்டார்விகடன், சக்திவிகடன் ஆகிய இதழ்களைக் கொண்டது.இவற்றைப் படிக்கச் சந்தா கட்டவேண்டும்.
குமுதம் குழுமம் – தீராநதி, குமுதம், சிநேகிதி.மங்கையர் மலர், கல்கி, தமிழன் எக்ஸ்பிரஸ் , இவை அனைத்தையும் பணம் செலுத்திப் படிக்க இயலும்.
விகடன், குமுதம் – அச்சிதழாகவும் இணைய இதழாகவும் ஒரே நேரத்தில் வெளிவருபவை.
இலங்கைத் தமிழா் குறித்த செய்திகளை ஈழ நாதம் ஈழ முரசு மற்றும் யாழ் இணையம் வழியாகவும் அறியலாம். தமிழ் முரசு சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் மின்னிதழ். மலேசியா இன்று – மலேசியச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவருகிறது.
புதுச்சேரி – புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தமிழிலக்கியத் திங்கள் மின்னிதழ்.
இதைத்தவிர தமிழ் சினி டைரக்டரி சௌத் இந்தியன் சினிமா வழியாக தமிழ்த் திரைப்படச் செய்திகளை அறியலாம்.
இது வரையில் இணையத்தைத் தொடாத இதழ்களும் இணைய இதழ்களாக வந்தால் பன்னாட்டு வாசகர் வட்டத்தைப் பெறமுடியும்.
இணைய இதழ்களுக்குப் போட்டியாக இணையத்தில் உலா வருபவை வலைபூக்களாகும் இதுபற்றி அடுத்த சந்திப்பில் பார்ப்போமா தோழிகளே!
மூலம்: பிரான்சு கம்பன் மகளிரணி http://francekambanemagalirani.blogspot.ca/2010/10/blog-post_15.html