ஆகஸ்ட் கவிதைகள் -2

ஆகஸ்ட் கவிதைகள் -2

இர.மணிமேகலை (பூ.சா.கோ.அர.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி.,கோயம்புத்தூர்.) கவிதைகள்!

1. தகனங்கள்
 
கதவு திறக்க
மடை திறந்த மனித முக வெள்ளத்தினூடாக
நீந்திக்கடக்கிறேன்
ஆங்காங்கே முட்களின் நெருடல்
பரிகசிப்புக்கள் விகசிப்புக்களைத் தாண்டுகிறேன்
தொலைந்து போன மலர்களின் மணம் நாசிதடவுகிறது
ஆவிகள் நிஜமோ
வாகனத்தை உயிர்ப்பிக்கச் சென்ற
இரு விழிகளின் பொருட்டுப் பாதத்தின் இயக்கம் தடைபட
நொடிகளில் என் நயனங்கள்
வினாத் தயாரிப்புத் தொழிற்சாலையாகிவிடுகின்றன
அவளிடமிருந்து வெடித்து வீழ்ந்த சொற்களில் அனல்
அலைபேசிக் குறுந்தகவல்களில்
தடுமாறி வரும் மெய்மை
நியான் வெளிச்சமிடுகிறது
கூட்டிலிருந்து பறக்கும்
ஆண் பறவையின் பாதை
எங்கெங்கோ சென்று முடிகிறது
அவள் காத்திருப்பைத் தகர்த்தெழுகிறாள்
 .
 
2. சங்கிலி

மெல்லொலிகளுக்கும்
செவிகள் ஒவ்வாமையைச் சூடிக்கொள்கின்றன
சிவப்புக் கலந்த மஞ்சள் ஒளிச்சாலைகள்
இனிமையானவை
விரல் பிடித்து நடந்தால் அதிலும்
மேய்ப்பன் ஒருவனின் பிடியில் சிக்கிக்கொண்ட மனது
மின்கம்பியில் சிறைப்பட்ட காற்றாடியென
ஆளற்றுக் காற்றில் அலையும் ஊஞ்சலை
ஏக்கத்துடன் தழுவும் அவளது விழிகள்
புல் நுகரும் ஆடுகள்
பலிபீடத்துக்கானவை.

3. விடை

அந்த வீட்டில் மரணத்தின் நிழல் கவியத்துவங்கியது
காத்திருப்பின் வலியுணர்த்தி
மீளாப்பாதையில் பயணத்தின் புள்ளி இயங்கத்துவங்கியது
பெட்டிக்குள் அடங்கிய அந்தக் கணங்கள்
நெருப்பில் கனல்கின்றன
தகிப்பில் ஒவ்வொரு முகமாக வந்துபோகிறது
அடங்கச் செய்தது எது
வினாப் பெரிதாகிக் கொண்டே செல்கிறது
மனம் பொறுக்க முடியாத கனத்தில் ஆழ்கிறது
இப்படிப் பார்க்க முடியலையே
கதறும் மகளின் முகம்
எதையோ உறுத்து நோக்குகிறது
விடை தெரியாமல்.

4. வட்டங்களிலிருந்து

அறையில்
இளவேனில் காய்ந்து கொண்டிருந்தது
என் சிறுவனின் கேள்வியைத்தாண்டி
கதையாடல்களுக்குள் தொலைந்து போகிறேன்
என் சிறுமியுடன்
நெற்றியளந்த திலகத்துடன்
முகமொன்று
என்னை  அறிந்திருப்பதாய்
இதழ் அவிழ்க்கிறது
திலகம் குறித்த சினத்தில் விலகியிருந்தது
நினைவுப்படிமங்களில் மீள்கிறது
நித்திரை உலகில் நுழைந்தபின்னும்
மொழியும் முகமும் விலகவேயில்லை
வட்டங்களிலிருந்து
விடுபடுகிறேன் நான்.

smekala10@gmail.com


புனிதத் திங்கள் .!

– கலைமகள் ஹிதாயா றிஸ்வி  இலங்கை –

மாண்புடன் பொழியும் ‘ ரமழான்’
மாதமோ “ரஹ்மத் “தாகும்
நீண்ட நாள் பாவம் யாவும்
நீக்கிடும் புனித திங்கள் .!

பூண்டிடும் தர்மக் கொள்கை
பூமியில் மலியப் பண்ணும்
ஆண்டியோ டரசன் சேரும்
அறத்தினை வளர்க்கும் மாதம் ..!

வஞ்சகம் பொய்மை மாந்தர்
வாழ்வினை அழிக்கும் சூது
நஞ்செனும் செயல்கள் யாவும்
நலமுடன் அறவே நீக்கி
நெஞ்சினில் அன்பு பாசம்
நிறைந்து மே மாந்தர் யாவும்
ஒன்றென மறையோன் வேதம்
ஓதியே வாழும் மாதம் ..!

ஆயிரம் இரவில் காத்து
அருந்தவம் புரிந்து ஈற்றில்
நேய (இ )ரா !”லைலத்துல் கதர் ” ரில்
நில மிசை அருளாய் பொங்கும்
தூயதாய் துன்பம் நீங்கித்
துலங்கிடும் ரமழான்தன்னை
நேயமாய் நோற்க .!வென்றே
கண்ணியமாய் கடை பிடிக்கின்றோம் …

sk.risvi@gmail.com


சுதந்திர தினம்

– முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி) –

அகிம்சையெனும் ஆயுதமேந்த
அடிபணிந்தனர் ஆங்கிலேயர்
கிடைத்தது சுதந்திரம்

சுதந்திரம் கொடுத்த சுதந்திரத்தில்
சுதந்திரமாய்ச் சுற்றித்திரிகிறது
ஜாதி

விடுதலை கிடைத்தும்
விழலுக் கிறைத்த நீரானது
ஊழல் அரசியலால்

நாம் விடுதலையடைந்ததை
ஆண்டுக்கொருமுறை நினைவுபடுத்துகிறது
சுதந்திரதினம்

பள்ளிகளில் மிட்டாய் கொடுக்கப்பட்டது
குழந்தைகள் நன்றி சொன்னார்
சுதந்திர தினத்திற்கு

munaivendri.naa.sureshkumar@gmail.com