[தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத்தாளர் அ.செ.முருகானந்தனுக்கு முக்கியமானதோரிடமுண்டு. அவரது படைப்புகளில் சிறுகதைகள் சில விடுதலைப் புலிகளின் கலைப் பண்பாட்டுக் கழகத்தினரால் தொகுக்கப்பட்டு ‘மனிதமாடு’ என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டன. யாழ் மாவட்டக் கலாச்சாரப் பேரவையினரும் அ.செ.மு.வின் சிறுகதைகளைத் தொகுத்து ‘மனிதமாடு’ என்னும் தலைப்பில் வெளியிட்டிருக்கின்றார்கள். குறுநாவல்கள், நாவல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் அவர் எழுதியிருந்தபோதும் அவை இதுவரை நூலுருப் பெறவில்லை. ஈழநாடு பத்திரிகையில் அவர் பல்வேறு புனைபெயர்களில் கட்டுரைகள், தொடர்கட்டுரைகள் ஆகியவற்றைப் பல்வேறு விடயங்களை மையமாக வைத்து எழுதியிருக்கின்றார். ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘மறுமலர்ச்சிக்’காலம் முக்கியத்துவம் வாய்ந்ததொரு காலகட்டம். எழுத்தாளர் அ.செ.மு அக்காலகட்டத்துடன் பின்னிப் பிணைந்தவர். பலவேறு பத்திரிகைகள், சஞ்சிகைகளின் ஆசிரிய பீடங்களை அலங்கரித்தவர் அ.செ.மு. எழுத்தாளர் அ.செ.மு.வைப் பற்றி எழுத்தாளர் கருணாகரன் தனது ‘புல்வெளிகள்’ வலைப்பதிவில் நல்லதொரு பதிவினை எழுதியிருக்கின்றார். ஒரு பதிவுக்காக அக்கட்டுரையினை ‘பதிவுகள்’ இங்கே பதிவு செய்கின்றது. – பதிவுகள்-]
அ.செ.மு என்ற அ.செ.முருகானந்தன் ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர். 1950 களி்ல் ஒரு முக்கிய ஊடகவியலாளராக இருந்த அ.செ.மு, ஈழகேசரி, எரிமலை, சுதந்திரன், வீரகேசரி, ஈழநாடு ஆகிய ஊடகங்களின் ஆசிரிய பீடத்திற் செயற்பட்டவர்.
1.
தன்னுள் அடங்கி வாழ்தல். இப்படி எழுதும் போதும் வாசிக்கும் போதும் அ.செ.மு வே எப்போதும் நினைவுக்கு வருகிறார். நான் அறிந்த அளவில் அ. செ.மு பின்னாளில் யாருடனும் அதிகம் பேசியதாக இல்லை. கலகலப்பாக இருந்ததில்லை. எதற்கும் துக்கப்பட்டதாகவும் இல்லை. சந்தோசப்பட்டதாகவும் இல்லை. எதுவும் அவரைத் தீண்டியதாகவும் இல்லை. எதனாலும் அவர் வருத்தப்பட்டதையும் நானறியவில்லை. அல்லது அவருடைய வருத்தங்களையும் வலிகளையும் அவர் எப்போதும் வெளிப்படுத்தியதாகவும் தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு காலம் மிகவும் தீவிரமாக இலக்கியத்தில் இயங்கியவர். ஈழத்துச் சிறுகதையுலகில் தன்னடையாளத்தை துலக்கமாக உருவாக்கியவர். அவருடைய அந்த அடையாளம் இப்போதும் ஒளியோடுதானுள்ளது.
அவருடைய புகழ்பெற்ற சிறுகதைகளான காளிமுத்துவின் பிரஜா உரிமை, மாடு சிரித்தது, பழையதும் புதியதும் இரண்டும் மூன்றும் – இந்தப் போர்க்காலத்திலும் அப்படியே பொருந்தியிருக்கின்றன. காளிமுத்துவின் பிரஜா உரிமை பலதடவைகள், பல இடங்களிலும் மீள்பிரசுரமாகியுள்ளது. இது அந்தக் கதைக்கான முக்கியத்துவத்தைக் காட்டும். மாடு சிரித்தது, பழையதும் புதியதும் ஆகிய இரண்டும் மாறிச்செல்லும் சமூக இயக்கத்தின் போக்கைச் சுட்டும் குறிகாட்டிகள். அதேவேளை உலகமயமாதலின் போக்கை அ.செ.மு அன்றே தன் கதையில் விமர்சித்திருக்கிறார். இது வெளிப்படையான விமர்சனமல்ல. அவர் எதையும் வெளிப்படையாக விமர்சனமோ கண்டனமோ செய்யும் வகையைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை.
பழையதும் புதியதும் அவருடைய கதைகளிலேயே முக்கியமானது. கேலியும் நகைச்சுவையும் கூடிய மொழியில் அவர் கதையை விவரித்துச் செல்வது மிகச் சுவை.
“அவசரமில்லை அண்ணே, ரயிலுக்கு நேரமிருக்கு. மாடுகள் மௌ்ளப் போகட்டும். ஏது, சோடி வாய்த்து விட்டது போலிருக்கு, உனக்கு’’ என்று சும்மா சொன்னேன்.
கால் மைல் தாண்டியதும் நடக்கும் சங்கதிகள் எனக்குத்தெரியாதா. ஆனால், மனுசன் பாவம். நான் கூறியதை மெய்யென்றே நம்பிவிட்டான். முகஸ்துதியிலேயே பழைய காலத்து வெள்ளை மனம் தன்னை மறந்து போய்விடுகிறது.
இந்த மாதிரி கதை நெடுகிலும் ஒரு தொனி தொடர்ந்து கொண்டிருக்கும். இந்தக் கிண்டலும் கேலியும் தராசு முனையைப்போல சமனிலையில் ஆடிக்கொண்டிருப்பது. நமது மனதிலும் பட்டென்று ஒரு உதைப்பை ஏற்படுத்தும் பொறி இதிலுண்டு. தராசில் இருக்கும் முக்கோணத்தன்மை அ.செ.மு வின் கதைகளிலும் உண்டு. ஒரு தராசு பொருளுக்கும் அதை நிறுப்போருக்கும் அதை – அந்த நிறுவையை சாட்சியாக வைத்து பொருளை வாங்குவோருக்கும் இடையில் சமநிலையில் நின்றாடுகிறது. இங்கே அ.செ.மு வும் தன் படைப்புலகத்தை அவ்வாறே வைத்திருக்கிறார்.
அவர் சிலவேளை பொருளாகிறார். சிலபோது அவர் விற்போனாகிறார். இன்னொரு போது பொருளை தராசின் சாட்சியத்தோடு வாங்குவோராகிறார். அதற்கேற்ப நம்மையும் மாற்றிக் கொள்ள வைக்கிறார். இது தமிழ்ப் பெரும்பான்மையில் அதிகம் கிடைக்காத ஒரு பண்பு.
பழையதற்கும் புதியதற்கும் இடையில் நிகழும் மோதலையும் நாகரீக வலையில் ஈர்க்கப்படும் மனித இயல்பையும் அதை மனித வாழ்க்கையே மறுபடி பழைய நிலைக்கு கொண்டு போகும் வேடிக்கையையும் இந்தக்கதை விவரிக்கிறது. போர் எல்லா வளர்ச்சியையும் சமனிலைப்படுத்தி மனிதனை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு போய்ச் சேர்க்கிறது. புதியனவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாத மனம் தன்னையறியாமலே போரின் மூலம் பழைய இடத்தை சென்றடைகிறது என்பதை மிக ஆழமாக உணர்த்துகிறது இந்தக்கதை. உளவியற் பரிமாணத்தில் விரியும் இந்தக் கதையை வாசிக்கும் போது எழும் வியப்பு பெரிது.
பொதுவாக போரை பிற்போனது எனவும் போர் விரும்பிகள் எப்போதும் அடிப்படைவாதிகள் என்றும் சொல்லப்படுவதுண்டு. அ.செ.மு வின் இந்தக்கதை இதற்கு நல்ல ஆதாரம்.
மாட்டு வண்டி சவாரி வைத்திருக்கும் கார்த்திகேசுவுக்குப் போட்டியாக மலையாளத்தானின் கார் வந்து விடுகிறது. அந்தக் காரோடு கார்த்திகேசுவின் மாட்டு வண்டியால் போட்டி போடவே முடியவில்லை. இந்த இயலாமை – அவனுடைய கோபம் ஒரு கட்டத்தில் மாடுகளின் மேல் பாய்கிறது. காரோடு போட்டிபோடும் படி அவன் மாடுகளுக்கு செம அடி அடிக்கிறான். ஆனால் மாடுகளால் காரோடு போட்டியிட முடியுமா. இதையெல்லாம் கார்த்திகேசு பிறகொரு சந்தர்ப்பத்தில் புரிந்து கொண்டு வெட்கப்படுகிறான்.
கார் வெளித்தரப்பின் உற்பத்தி. ஆக அதற்குச் செலவு செய்யும் முதலீடு வெளியேயே போகிறது. அதற்கு செலவும் அதிகம். ஆனால் மாட்டு வண்டிக்கு அதெல்லாம் கிடையாது. அது உள்@ர் தயாரிப்பு. அதனால் அதன் வரவும் செலவும் ஊருக்குள்ளேயே சுற்றும். என்றெல்லாம் தன்னுடைய வண்டிக்கு நியாயம் சொல்லும் கார்த்திகேசுவின் வண்டியை யாரும் ஏற்பதாகவேயில்லை. அவனுடைய அந்தக் கருத்தையும் எவரும் பொருட்படுத்துவதாகவும் இல்லை.
ஆனால் ஒரு கட்டத்தில் இந்த நிலைமை மாறுகிறது. காலம் வேறாக மாறி வரும்போது – யுத்த காலம் வரும்போது – கார்கள் பெற்றோல் இல்லாமல், தெருவில் இறங்க முடியாமல் வீடுகளில் முடங்கி விடுகின்றன. பதிலாக பத்தாண்டுகளாக யாராலும் கவனிக்கப்படாதிருந்த மாட்டு வண்டி இப்பொழுது மறுபடியும் தெருவுக்கு வந்திருக்கிறது. போர் அதைக் கொண்டு வந்திருக்கிறதுது. அது எரிபொருட்தடையைக் கொண்டு வந்ததால் எல்லாமே மாறிவிட்டன. கார்திகேசு மீண்டும் சவாரிக்காரனாகி விட்டான்.
இந்தக்கதைகள் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் 1943 காலப்பகுதியில் அ.செ.மு வினால் எழுதப்பட்டவை. சொன்னால் நம்ப மாட்டீர்கள், இப்பொழுதும் இதே நிலைமைதான ஈழத்தில். அப்படியே கதை அதே இளமையோடு காலத்தை ஊடுருவிப் பொருந்துகிறது.
தமிழில் போர்க்கதைகள் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின் பாதிப்பு அன்றைய படைப்பாளிகளை போர்க்கதைகளை எழுத வைத்துள்ளது. இந்தவகையில் தமிழக எழுத்தாளர்கள் பர்மாவை மையமாக வைத்தும் அதைத் தொட்டும் பல கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஏன், ப.சிங்காரத்தின் நாவல்களில் கூட போர்ச்சூழலின் பிரதிபலிப்பைக்காணலாம்.
அவ்வாறாயின் அ.செ.மு ஈழத்துப் போர்க்காலக் கதைகளின் முன்னோடி எனலாமா. எப்படியோ அ.செ.மு வின் கதைகளில் காலத்தின் துருவேறா நிலை உள்ளது.
2
அ.செ.மு வின் இளமைக்காலத்தைப்பற்றி பலரும் பலவிதமாக சொல்கிறார்கள். அவர் சிறுவதிலேயே அமைதியான சுபாவங்கொண்டவராக இருந்தார் என்று அளவெட்டியைச் சேர்ந்த பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அ.செ.மு அளவெட்டியில் பிறந்தவர். அளவெட்டி எழுத்துத்துறையிலும் இசை மற்றும் பிற கலை ஈடுபாடுகளிலும் அதிகமானவர்களைக் கொண்ட பேரூர். யாழ்ப்பாணத்திலேயே அளவெட்டிதான் பெரிய ஊர். புகழ்மிக்க இசைக்கலைஞர்களும் இலக்கியப்படைப்பாளிகளும் கவிஞர்களும் அளவெட்டியைச் சேர்ந்தவர்களே. ஆகக்குறைந்தது ஐம்பது பேராவது இந்தப்பட்டியலில் சேருவார்கள்.
தவில் மேதை தட்சணாமூர்த்தி, நாதஸ்வர வித்வான் என்.கே. பத்மநாதன், பாவலர் துரையப்பா பிள்ளை, பண்டிதர் நாகலிங்கம், நவீன ஈழக்கவிதையின் பிதாவாகக் கொள்ளப்படும் மஹாகவி, அ.ந.கந்தசாமி, சிறந்த சிறுகதை எழுத்தாளர் அ.செ.மு, கவிஞர் சேரன், புதுசு ரவி என்றழைக்கப்படும் இரவி அருணாசலம், விஜயேந்திரன், பாலசூரியன், ஓவியர் ரமணி, ஈழத்துச் சினிமாவின் புதிய அலையை தொடக்கிவைத்த ஞானரதன் என்ற சச்சிதானந்தன், ஒளவை என்று ஒரு நீட்சி அளவெட்டிக்குண்டு. இதில் இன்னும் பலர் இருக்கிறார்கள்.
இரண்டு மூன்று தலைமுறைப்படைப்பாளிகள், கலைஞர்கள் அளவெட்டியின் புகழைப் பரப்பியிருக்கிறார்கள். அதில் அ.ந.கந்தசாமியும் அ.செ.முவும் முக்கியமானவர்கள்.அ.ந.கந்தசாமி இடதுசாரி இயக்கத்தில் இயங்கிய முக்கியமான படைப்பாளுமை. அ.செ.மு பிரகடனங்கள் அற்ற, அரசியல் அமைப்புகளையோ நிலைப்பாடுகளையோ பகிரங்கப்படுத்தாத ஒருவர். அ.செ.மு புகழுக்கும் பெருமைக்கும் தனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதாகவே எப்போதும் நடந்திருக்கிறார்.
அ.செ.மு ஈழத்துச் சிறுகதைகளின் இரண்டாம் தலைமுறைப்படைப்பாளிகளில் முதல் ஆள். முதல் தலைமுறையில் இயங்கிய சி.வைத்திலிங்கம், சம்மந்தன், இலங்கையர்கோன் ஆகியோரில் அ.செ.மு வுக்கு இலங்கையர்கோனிலேயே அதிக ஆர்வம் இருந்தது. இதை அவருடன் பேசிக் கொண்டிருந்த போது ஒரு தடவை என்னிடமே சொன்னார்.
ஆனால் அவர் தமிழகப்படைப்பாளிகளிடமும் ஈடுபாட்டைக் கொண்டிருந்தார். மௌனியை அவருக்கு நிறையப்பிடித்தது. புதுமைப்பித்தனை அவர் கொண்டாடினார். அ.செ.மு வின் சிறுகதைகளில் புதுமைப்பித்தனின் தொடர்ச்சியையே நாம் அவதானிக்கலாம். அவர் புதுமைப்பித்தனின் தொடரியே. அதிகம் அறியப்பட்ட அவருடைய சிறுகதையான மாடு சிரித்தது புதுமைப்பித்தனின் தொடரியாக அ.செ.மு இயங்கினார் என்பதற்கு நல்ல ஆதாரம். புதுமைப்பித்தனில் தொனிக்கும் கிண்டலும் கேலியும் கலந்த அங்கதம் அ.செ.முவிடமும் தொனிக்கிறது.
அ.செ.மு முதல் தலைமுறைப்படைப்பாளர்களைப் போலல்லாமல் தன்னுடைய எழுத்துக்கு வசதியாக பத்திரிகைத் துறையில் வேலை செய்தார். இது அவர் எழுத்துத்துறையில் இயங்குவதற்கு இன்னும் வாய்ப்பாகவும் வசதியாகவும் இருந்தது. ஒரு காலகட்டத்தில் அவர் நிறைய எழுதுவதற்கு நன்றாக உதவியிருக்கிறது இந்தத் தேர்வு.
தான் வேலைசெய்த ஈழநாடு பத்திரிகையில் அ.செ.மு தொடர்கதைகளாகவும் சிறுகதைகளாகவும் குறுநாவல்களாகவும் கட்டுரைகளாகவும் எழுதித்தள்ளினார்.
ஈழநாட்டில் புகையில் தெரிந்த முகம், யாத்ரீகன், ஜீவபூமி, ஜெயந்தி ஆகிய நாவல்களை தொடராக எழுதினார். இதில் ஜெயந்தி முழமையடையவில்லை. (ஆனால் அதை அவர் ஒரு குறுநாவல் என்ற அளவில் மாற்றியமைத்ததாகச் சொல்கிறார்). இதைவிட குறுநாவல்கள் வேறு. ஒரு நேர்காணலில் அவர் சொல்வதைப்போல ஈழநாடுவிலிருந்து விலகியபிறகும் பதினைந்து ஆண்டுகளாக ஈழநாடு பத்திரிகைக்கு தொடர்ந்து விசயதானங்களைக் கொடுத்திருக்கிறார். அப்படி என்றால் எவ்வளவை எழுதித்தள்ளியிருப்பார் என்று நம்மால் ஊகிக்க முடியும். ஆனால் அவை எதுவும் முழுமையாக யாராலும் தொகுக்கப்படவில்லை.
ஏன் மனிதமாடு என்ற ஒரு சிறுகதைத் தொகுதிக்கு மேல் அவருடைய கதைகளே தொகுக்கப்படவில்லை. இவ்வளவுக்கும் அ.செ.மு ஈழத்துச் சிறுகதைகளில் முக்கியமான படைப்பாளி. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஈழத்து இலக்கியத்திலும் முப்பதாண்டுகளுக்கும் மேலாக படைப்பாளிகளிடத்திலும் செல்வாக்குச் செலுத்திய ஆளுமை. இப்போதும் கூட அவருடைய பாதிப்பு பலரிடமுண்டு. அவருடைய சிறுகதைகள் இப்போதும் அதே கவர்ச்சியையும் பெறுமதியையும் கொண்டிருக்கின்றன.
3
அ.செ.மு வை நாம் இரண்டு நிலைகளில் நோக்கலாம். அப்படி நோக்குவது ஒரு வகையில் அவசியமும் கூட. ஒன்று அவர் ஒரு படைப்பாளி. அதிலும் உரை நடையில் அவர் செலுத்திய ஆளுமை. இந்த வகையில் அவருடைய இடம், அவருடைய அடையாளம், அவருடைய பயணத்திசை, அதன் தடங்கள் என்று இதைப் பார்க்க வேணும். மற்றது, அ.செ.மு ஒரு ஊடகக்காரர் என்ற வகையிலானது. ஆனால் அ.செ.மு ஊடகவியலாளராக தொழில் செய்திருந்தாலும் அவர் அடிப்படையில் ஒரு படைப்பாளியாகவே இருந்திருக்கிறார். அவருடைய விருப்பமும் கவனமும் எழுத்துத்தான். அதற்காகவே அவர் ஊடகங்களைச் சார்ந்திருந்தார். அவை போதாதபோது வேறு இதழ்களையும் பத்திரிகையையும் வெளியிட்டார்.
இங்கே முதலில் அவருடைய எழுத்து ஈடுபாட்டைப் பார்க்கலாம். படிக்கிற காலத்திலேயே அ.செ.மு எழுத ஆரம்பித்து விட்டார். அவர் படித்தது, யாழ்ப்பாணத்தில் பேரோடு விளங்கிய தெல்லிப்பளை மஹாஜனாக் கல்லூரியில். அப்போதே அவருக்கு இலக்கிய நண்பர்களாக அ.ந.கந்தசாமி, மஹாகவி, கதிரேசன் பிள்ளை ஆகியோர் இருந்திருக்கிறார்கள். அந்த நாட்களில் அ.செ.மு ஈழகேசரியின் இளைஞர் பக்கத்தில் எழுதினார். இது 1930 களின் இறுதிப்பகுதியில். பிறகு 1941 இல் அவர் ஈழகேசரியில் இணைந்தே விட்டார். ஆக அப்போதே எழுதுவதற்காக என்று அவர் அதற்குத் தோதான தொழிலைத் தேர்ந்திருக்கிறார். அதுதான் பின்னாளிலும் தொடர்ந்திருக்கிறது.
ஈழகேசரியிலும் அ.செ.மு நிறையக்கதைகளை எழுதியிருக்கிறார். ஈழகேசரி அவரையும் அவரைப்போல பல இளைஞர்களையும் அவர்கள் தங்களுக்கேற்றமாதிரி உருவாகிக் கொள்வதற்கு ஒரு தளமாக இருந்திருக்கிறது. அதற்கான முழுச்சுதந்திரத்தையும் அது கொடுத்திருக்கிறது. அரசியல் சாய்வுகள், அதிகாரங்கள் எதுவுமில்லாத இந்தத்தளத்தில் அப்போது அ.செ.மு வைப்போன்ற பலரும் தங்களை உருவாக்கிக் கொண்டார்கள். இதற்காக அது இளைஞர் இலக்கிய மாநாடுகளையும் நடத்தியிருக்கிறது. அவற்றில் அ.செ.மு வும் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.
ஈழசேகரியில் வேலை செய்து கொண்டிருந்த நாட்களிலேயே அ.செ.மு வரதர், அ.ந.கந்தசாமி ஆகியோருடன் இணைந்து மறுமலர்ச்சி என்ற சங்கத்தை உருவாக்கினார். இந்தச் சங்கம் யாழ்ப்பாணத்தில் மறுமலர்ச்சி என்ற இதழை வெளியிட்டது. இது தமிழகத்தில் வந்து கொண்டிருந்த மணிக்கொடி, கிராம ஊழியன், கலைமகள் போன்ற இதழ்களின் தாக்கத்தினால் உருவானதாக ஊகிக்க முடிகிறது. அதுவே பின்னாளில் ஈழத்திலக்கியத்தில் மறுமலர்ச்சிக் காலகட்டம் என்ற சிறப்பான ஒரு காலத்தைக் கொண்ட இலக்கியவளர்ச்சிக்கு உதவியது. தமிழகத்தில் மணிக்கொடி காலகட்டத்தைப்போல ஈழத்தில் மறுமலர்ச்சிக் காலகட்டத்தை நோக்கலாம்.
அ.செ.மு மறுமலர்ச்சியின் ஆசிரியப் பொறுப்பிலிருந்தார். அந்த நாட்களில் மிகச்சுறுசுறுப்பாக அ.செ.மு இயங்கியிருக்கிறார். பெரும் வசதிகளைக் கொண்; குடும்பப்பின்னணி எதுவும் அ.செ.மு வுக்கில்லை. என்றபோதும் அவர் தன்னுயை இயங்கும் முறையினால் எப்போதும் இதழ்களையோ பத்திரிகைகளையோ வெளியிட்டுக் கொண்டேயிருந்திருக்கிறார். அவருடைய அணுகுமுறையும் இயங்கும் விதமும் அவரின் அமைதியான சுபாவமும் விரிவான நோக்கங்களும் சாய்வற்ற நிலைப்பாடும் பிறரை அவரின் மேல் ஈடுபாடு கொள்ள வைத்திருக்கின்றன. அதுவே அவருக்கு வெற்றியைத் தந்தது.
மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த நாட்களில் அவர் முழுதாக இலக்கிய வாழ்க்கையையே வாழ்ந்தார். அவருடைய மற்றத் தோழர்களைப்போல குடும்பம் பிற விவகாரங்கள் என்று எதுவும் இல்லாதது அ.செ.முவுக்கு ஒரு வசதி. அவருக்கும் பிற சகோதரர்களோ சகோதரிகளோ இல்லை. அவர் தனிப்பிள்ளை. தாய் மட்டும்தான். ஆக பார்க்க வேண்டிய ஒரே பொறுப்பு அவருக்கு தாய் மட்டும்தான். எனவே தன்னுடைய புலன் முழுவதையும் அவர் எழுத்துக்கும் இதழ் வெளியீட்டுக்குமாகவே செலவிட்டார். அதனால் பின்னாளில் வந்த யாழ்ப்பாணத்தின் எழுத்தாளர்களுக்கெல்லாம் மறுமலர்ச்சி வாய்ப்பான பெருங்களத்தைத் திறந்து கொடுத்தது. மறுமலர்ச்சியில் அ.பஞ்சாட்சர சர்மா, சு.வே என்று பின்னாளில் வேறு ஆட்களும் இணைந்து கொண்டாலும் அ.செ.முவே இதில் மையசக்தியாக இருந்தார். அந்த நாட்களில் அ.செ.மு இலக்கியக்காரர்களிடம் பெரும் செல்வாக்கொடு இருந்திருக்கிறார்.
மறுமலர்ச்சியில் மூன்று தலைமுறைப்படைப்பாளிகள் எழுதியிருக்கிறார்கள். பதினைந்து ஆண்டுகால மறுமலர்ச்சி இதழின் வரலாற்றில் அதன் சாதனையாக ஏறக்குறைய நூறு வரையான சிறுகதைகள் வெளியாகியுள்ளன.
அ.செ.மு வுக்கு மறுமலர்ச்சியில் தொடர்ந்து இயங்க விருப்பம் இருந்தாலும் அவரால் அதில் தொடர்ந்து செயற்பட முடியவில்லை. அ.செ.முவை விரட்டிக்கொண்டேயிருந்த நோய் அவரை யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு விரட்டியது. ஆனாலும் அங்கே போன அ.செ.மு சும்மா ஆஸ்பத்திரியில் படுத்திருக்வில்லை. அவர் திருகோணமலையில் எரிமலை என்ற பத்திரிகையைத் ஆரம்பித்தார். அவருக்குத் துணையாக தாழையடி சபாரத்தினம் உதவினார். ஈழநாடுவிலும் ஈழகேசரியிலும் மறுமலர்ச்சியிலும் அவருக்கு அறிமுகமாகியிருந்த படைப்பாளிகளை எரிமலையில் எழுதவைத்தார். ஆனால் எரிமலை ஆறு இதழ்களுடன் திருகோணமலையின் முதலாவது பத்திரிகை என்ற பெயருடன் நின்று விட்டது. அது நின்று போனதுக்கு பொருளாதாரப்பிரச்சினையே காரணம் என்று பின்னாளில் அ.செ.மு வருத்தத்தோடு சொன்னார்.
4
அ.செ.மு எழுதிக் கொண்டிருந்த காலத்தில் ஈழத்தில் இரண்டு பெரும் இலக்கியப்போக்குகள் செல்வாக்கிலிருந்தன. தமிழ்த் தேசிய அரசியல் அப்போது வெகுஜன மட்டத்தில் செல்வாக்கைச் செலுத்திக் கொண்டிருந்தது. அதற்குப் போட்டியாக இடதுசாரிகளின் அரசியல் இலக்கியத்திலும் செல்வாக்கைச் செலுத்தத் தொடடங்கியிருந்தது. ஆனால் இந்த இரண்டு அரசியல் குழாத்திலும் அ.செ.மு சேரவேயில்லை. அவர் இந்த ஈர்ப்பு விசைக்கு அப்பால் தன்னை வைத்துக் கொண்டார். அவருக்கு எந்த அரசியலிலும் ஈடுபாடிருக்கவில்லை. அவர், சுதந்திரனில் எழுதியபோதும் அந்த அரசியலை அவர் விலக்கி தன் அடையாளத்தையே அதில் வைத்திருந்தார். ஆனால் தான் ஒரு மிதவாதி என்றே சொல்கிறார். ஆனாலும் அந்த மிதவாதத்திலும் அவர் தீவிரம் கொண்டவரல்ல. அவர் அமைதியான விலகிய தனித்த புள்ளி.
அ.செ.மு வின் எந்தச் சிறுகதையும் நேரடியாக அரசியலைப் பேசியதில்லை. வாழ்வை, அதன் ஆதார சுருதியை, அதனுள்ளோடும் புரியாமலும் நீங்காமலும் தொடரும் புதிர்களை நோக்கியே அவருடைய கரிசனை இருந்தது. கதைகளின் உட்தொனியிலேயே அவர் கவனமெடுத்தார். பரப்புரை எழுத்துக்கு எதிரான இயக்கம் அவருடையது. அதில் அவருக்கு நம்பிக்கையுமில்லை.
இதற்கு நல்ல சான்று சுதந்திரனில் வேலை செய்தபோதும் அவர் அந்த அரசியலில் ஆர்வப்படவில்லை என்பது. சுதந்திரன் தமிழரசுக்கட்சிப்பத்திரிகை. அப்போது தமிழ்த் தேசிய எழுச்சி பிரமாண்டமாக இருந்தது. ஆனால் அந்த அரசியலுக்குள் அவர் இறங்கவுமில்லை. ஏறவுமில்லை. அதைப்போல அவர் முற்போக்கு அணிக்குள்ளும் போகவுமில்லை. வரவுமில்லை. மட்டுமல்ல, எந்த அணியை ஆதரிக்கவுமில்லை, நிராகரிக்கவும் இல்லை. அவர் தன்பாட்டில் தன் வழியில் பயணித்தார். அவருடைய சுபாவமே இதுதான். தன் பாட்டில் இருப்பது. இதன்படி ஒரு துலக்கமான தனிக் கோடு அ.செ.மு.
அ.செ.மு வுக்கு தல்ஸ்தோயைப்பிடிக்கும். காஃகாவையும் பிடிக்கும். அவருடைய ஈடுபாடுகள் இப்படியே இருந்தன. சார்;புகளை விட்டு விலகிய பாதையில் அவருடைய பயணம் நிகழ்ந்ததால் அவர் எல்லாவற்றையும் படித்தார். எல்லாவற்றையும் விரும்பினார். அவருடைய தேர்வுகள் பரந்ததாகவும் வரையறைகளற்றதாகவும் இருந்தது.
5
அடுத்தது அ.செ மு வின் ஊடகப் பங்களிப்பு. புதுமைப்பித்தன் சினிமாவில் இயங்கியிருந்த போதும் அவருடைய அடையாளம் சிறுகதையில் இருப்பதைப்போல அ.செ.மு வும் பத்திரிகைகளில் வேலை செய்திருந்தாலும் அவர் ஒரு சிறுகதைப்படைப்பாளியாகவே தெரிகிறார். ஆனால் அவர் ஊடகங்களில் இயங்கிய காலகட்டம் உலக அரசியலிலும் இலங்கை அரசியலிலும் முக்கியமானது. இரண்டாம் உலகப் போரும் அதன் முடிவில் கொலனி ஆதிக்கமும் மறைந்த காலகட்டம் அது. இந்த நாட்களில் இலங்கை நிலவரம் மிகப் பெரிய மாறுதல்களை நோக்கியிருந்தது. அத்துடன் தமிழ் – சிஙகள முரண்பாடுகள் வரலாற்று மீட்புடன் மீண்டும் முளைவிடத் தொடங்கியது. இதற்குள் அவர் அமைதிவழித் தீர்வை வலியுறுத்திச் செயற்பட்டார். வன்முறைக்கெதிரான நிலைப்பாட்டை அவர் வலியுறுத்தினார். ஆனால் அவருடைய அந்த எண்ணத்துக்கு எந்த மதிப்பும் இலங்கை நிலவரத்தில் கிடைக்கவில்லை. என்றபோதும் அ.செ.மு இன்று உலகம் வலியுறுத்துகின்ற அமைதியை அன்றே முன்னிறுத்தியிருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் வெளியான பிராந்தியப்பத்திரிகையான ஈழநாடுவை வெற்றிகரமமாக வளர்த்தெடுக்க அ.செ.மு உழைத்ததை பலரும் நினைவு கூர்கிறார்கள். அதைப்போல திருகோணமலையில் தணிகரமாக ஒரு தமிழ்ப்பத்திரிகையை வெளியிட்டுமிருக்கிறார். மறுமலர்ச்சியின் ஆசிரியராக அதன் பதினெட்டு இதழ்கள் வரையிலும் இருந்திருக்கிறார். இதைத்தவிர முன்னர் குறிப்பிட்டுள்ளதைப்போல ஈழகேசரி, சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளிலும் வேலை செய்திருக்கிறார். இதில் எல்லாம் அ.செ.மு வின் பங்களிப்பு இலக்கிய வகையானதானதே. அரசியலுக்கு அவர் அளித்த நம்பிக்கையை விடவும் இலக்கியத்துக்கு வழங்கிய முன்னுரிமையும் அந்தப் பண்பாட்டை வளர்த்தெடுப்பதிலுமே அதிக அக்கறையை அவர் கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் மறுமலர்ச்சி தவிர ஏனைய பத்திரிகைகள் வெகுஜன ஏடுகள். அதனால்தான் அவர் ஊடகங்களிலும் படைப்பாளியாகவே பார்க்கப்படுகிறார். படைப்பாளிகளை ஊடகங்களுடன் இணைக்கும் ஒரு நுட்பவியலாளராகவும் அவர் கருதப்படுகிறார். அ.செ.மு வுக்குப்பிறகு இதுவரையிலும் ஈழத்தில் அவரைப் போன்றதொரு ஆளுமை எந்தப்பத்திரிகைகளிலும் வரவில்லை.
1981 இல் இலங்கை அரசாங்கத்தின் வன்முறையில் யாழ்ப்பணம் எரிக்கப்பட்டது. அப்போதுதான் யாழ்ப்பாண நூலகம், ஈழநாடு பத்திரிகை, நகரிலிருந்த பூபாலசிங்கம் புத்தகக்கடை எல்லாம் எரிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் எல்லோரையும் போல அ.செ.முவையும் ஆழமாகப்பாதித்தது. இதற்குப்பிறகு அவர் எழுதவேயில்லை. அ.செ.முவையும் அவருடைய எழுத்தையும் அந்த வன்முறைத்தீ எரித்து விட்டது.
6
நான் அ.செ.மு வைச் சந்தித்தது அவர் எழுதுவதைக்கைவிட்டிருந்த நாட்களில்தான். ஆனால் அவரோடு எழுத்தைப்பற்றி, அவருடைய காலத்தைப்பற்றி பேசினால் முதலில் எந்த ஆர்வமுமில்லாதவராக இருப்பார். தொடர்ந்து மெல்லப்பேசிக் கொண்டிருந்தால் அவர் பூனை மெதுவாக நடந்து வருதைப்போல மெல்ல உரையாடலில் நுளையத் தொடங்குவார். ஆனால் அதிக சத்தமோ, விவாதமோ கிடையாது. ஆர்வமும் பெரிதாக இருக்காது. மெதுவாக, தன்பாட்டில் எதிலும் பற்றற்ற ஒரு விவரிப்பாளனைப்போல தணிந்த குரலில் பேசுவார். இதுவும் எப்போதுமென்று சொல்ல முடியாது. பின்னர் இதுவும் நின்று போயிற்று.
அந்த நாட்களில் அவர் நோயாலும் ஆதரவற்ற நிலையாலும் பொருளாதாரக் குறையாலும் பெரிதும் சிரமப்பட்டார். வீடு இல்லை. யாரோ ஒரு தெரிந்தவரின் வளவில் ஒரு சிறு குடிசையைப் போட்டுக் கொண்டு அதில் குடியிருந்தார். ஆஸ்மாவும் நீரிழிவும் அவரைப் படுத்திக் கொண்டிருந்தன. எங்கேயும் போவதில்லை. யாரோடும் தொடர்பில்லை. எல்லாவற்றையும் அவர் துண்டித்து விட்டார். எதுவும் அவருக்குத் தேவைப்படவில்லை. அநேகமாக அவர் பின்னாளில் இலக்கியத்தில் என்ன நடக்கிறது என்பதையே அறியாமலிருந்தார். அவருக்கு அவற்றில் ஆர்வமேயில்லை. அவையெல்லாம் அவரைத் தொந்தரவு படுத்துவதாகவே அவர் உணர்ந்திருக்கக்கூடும். இலக்கிய ஆர்வத்துக்கு அவருடைய வாழ்க்கை நிலவரம் இடமளிக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால் இதெல்லாம் பின்னாளில் அவருக்குத் தேவையில்லாத சங்கதிகள் ஆகிவிட்டன. அவர் இவை எல்லாவற்றுக்கும் அப்பால் தன்னை வைத்துக் கொண்டார் என்றே நினைக்கிறேன்.
அ.செ.முவை அவருடைய முதுமைக்காலத்தில் கோகிலா மகேந்திரன், நா.சுப்பிரமணியன், கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை போன்றோர் இயங்கிய தெல்லிப்பழை கலை, இலக்கியக் களம் ஆதரித்தது. அவருக்கு நிதி சேகரித்துக் கொடுத்தார்கள். ஆனால் எதுவும் அவரை பழைய நிலைக்கு கொண்டு வரவில்லை. எவ்வளவு காசைக் கையில் கொடுத்தாலும் அவர் இனிப்புப் பண்டங்களிலேயே அதையெல்லாம் கரைத்துவிடுவார். அவர் ஒரு குழந்தையைப்போல தன்னிலை இழந்து இயங்கினார்.
இதை துக்கத்தோடு சொல்வார் ஏ.ரி.பி.
அ.செ.மு பின்னாளில் குழந்தையாகி விட்டார். நீரிழி வியாதி அவரைப் பாடாய்ப் படுத்தியது என்று சொன்னேனே. அது இனிப்பைக் கொடுத்து அவரை அப்படியே உறிஞ்சி விட்டது. அவர் மெலிந்து துரும்பாகியிருந்தார். இருமி இருமி களைத்த அந்த மெல்லிய உடலை தொடவேண்டும். அதற்கு ஆதரவாயிருக்க வேண்டும் என்று என் மனம் எத்தனையோ தடவை உள்ளே கூவியிருக்கிறது. ஆனால் அவர் அதற்கெல்லாம் நெகிழ்ந்து கொடுக்க வில்லை. தனியாகவே இருந்தார். அவருடைய மனதுக்கு அது தேவையாக இருந்திருக்கலாம். அவரை நண்பர்களும் அடுத்த தலைமுறைப்படைப்பாளிகளும் போய்ப்பார்த்து பேசி வந்தார்கள். ஆனால் அந்தச் சந்திப்புகள் எல்லாமே மரியாதையின் நிமித்தமான – அனுதாபத்தின் பாற்பட்;ட சந்திப்புகளாகவே இருந்தன. அவருக்குள் அடங்கிப் போயிருந்த ஒரு பேராற்றை, உறைந்துபோன ஒரு படைப்பாளியை பின்னாளில் எவரும் பார்க்கவேயில்லை.
1991 இல் அவருக்கு உதவி நிதியளிப்பதற்காக வெளிச்சம் இதழின் சார்பில் நான் அவரிடம் போயிருந்தேன். அ.செ.மு வைப்போல அல்லை ஆறுமுகமும் தனிமையிலும் முதுமையிலும் வறுமையிலும் வதங்கிக் கொண்டிருந்தார்;. இருவருக்கும் விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக்கழகம் உதவ முன்வந்தது. அந்த நிகழ்வுக்காக அழைக்கப் போயிருந்தேன். அ.செ.மு வரத்தயங்கினார். அவர் இந்த மாதிரி நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் விட்டு பல வருசங்களாகிவிட்டது. புதுமைப்பித்தன் தன்னுடைய கஸ்ரங்களைப் பகிர்ந்து கொள்ள அவருக்கு கமலா இருந்தார். பாரதிக்கு செல்லம்மா இருந்தார். அ.செ.மு வுக்கு யாருமேயில்லை.
எனக்கு அவருடைய நிலைமை புரிந்தது. அவர் உடுத்து வருவதற்கு உடைகளே இருக்கவில்லை.
ஒரு வாங்கு, சில தினப்பத்திரிகைகள், பழைய துணிகள், சாப்பிடுவதற்கும் குடிப்பதற்குமான பாத்திரங்கள் என்று இருந்த அந்தச் சிறு குடிசையின் முற்றத்தில் அவருடன் நீண்ட நேரம் பேசினேன். அவர் நிகழ்வில் கலந்து கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார். உடுத்துக் கொண்டு வருவதற்கு வேட்டியையும் சேர்ட்டையும் கொண்டு வருவதாக சொன்னேன். அதற்குப்பிறகே அவர் முழுதாகச் சம்மதித்தார்.
இந்த நிலைமையை நான் கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளராக இருந்த கவிஞர் புதுவை இரத்தினதுரையிடம் சொன்னேன். அவர் ஏற்பாடுகளைச் செய்தார்.
அ.செ.மு கலந்து கொண்ட இறுதி இலக்கிய நிகழ்வு வெளிச்சம் முதலாவது இதழ் வெளியீடாகத்தானிருக்கும் என நினைக்கிறேன். அதற்குப்பிறகு வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டதாக தெரியவில்லை.
அ.செ.மு கடைசி நாட்களில் திருகோணமலையில் முதியோர் விடுதியொன்றில் இருந்தார். அங்கேயே அவர் மரணத்தையும் சந்தித்தார். அவர் இரண்டு தடவைகள் இறந்து விட்டதாக பத்திரிகைகள் எல்லாம் போட்டிபோட்டுக்கொண்டு செய்தி வெளியிட்டன. ஆனால் அவர்; ஒரு தடவைதான் இறந்தார்.
00
அ.செ.மு.வின் புனைபெயர்கள் – யாழ்பாடி, வள்ளிகந்தன், யாழ்தேவி, பீஷ்மன், முருகு,நீலாம்பரி, காங்கேயன், கதிரவன், மயிற்புறவம், இளவேனில், புராடன், சோபனா, மேகலை, தனுசு, கத்தரிக்குறளி.
00
அ.செ.மு 1950 இல் தன்னுடைய “புகையில் தெரிந்த முகம்“ என்ற கதைநூலுக்கு எழுதிய முன்னுரையை இத்துடன் இணைத்துள்ளேன். இந்த நூல் 136, செட்டியார் தெரு, கொழும்பில் இயங்கிய நவலட்சுமி புத்தகசாலையினால் – நவலட்சுமி பிரசுரம் 01 என வெளியிடப்பட்டது. அப்பொழுது இதன் விலை 50 சதம் மட்டுமே.
இந்தக் கதையை நீங்கள் noolaham.net இல் படிக்கலாம்.
கதையின் கதை
சில மாசங்களின் முன் சிறுகதை ஒன்று எழுதி ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு அனுப்பினேன். சில தினங்களின் பின் ஒருநாள் அது திரும்பி வந்தது. திரும்பி வந்தபோது ஒரு கடிதத்தையும் அது கொண்டுவந்தது. கடிதம் பின்வருமாறு போயிற்று.
அன்ப,
உங்கள் கதையைப் பார்த்தேன். தயவுசெய்து அதனை ஒரு தொடர்கதையாகவே நீட்டி எழுத வேண்டுகிறேன். ஒரு நல்ல தொடர் கதையைப் பொறுத்த வரையில் நமது பத்திரிகைக்கு இப்பொழுது மழைக்காலம்” (அதாவது பஞ்சகாலம்).
இந்தப் பத்திரிகை ஆசிரியர்களுக்கு எப்பொழுதும் தங்கள் தங்கள் பத்திரிகைகளைப் பற்றித்தான் முதல் கவலை. நாலைந்து இதழ்களுக்கு நல்ல சரக்காக ஏதாவது கிடைக்குமா வென்று எங்கேயும் எந்த சந்தர்ப்பத்திலும் து}ண்டில் போட்டுக்கொண்டேயிருப்பார்கள். அவர்களத முக்கிய பிரச்சினை அதுதான். இல்லாவிட்டால் ஒரு சிறு கதையை பெருங்கதையாக நீட்டும்படி கேட்க என்ன துணிச்சல்! சிறுகதை என்றால் என்ன இழுப்பு மிட்டாயா அல்ல ரப்பரா?
அந்த ஆசிரியருக்கும் எனக்கும் ஏற்கனவே அறிமுகமிருந்தபடியால் போனால் போகிறது என்று விட்டுவிட்டேன். அவர் கேட்டுக்கொண்ட படியே சிறு கதையைப் பெருங் கதையாக நீட்ட (நீட்டி முழக்க!) தொடங்கினேன்.
அந்த உருக்குப்பட்டடை வேலையின் முடிவு தான் – 50 பக்கங்கள் வரை கொண்ட இந்தச் சிறு புத்தகம்.
இனி, அது எப்படி புத்தக வடிவெடுத்தது என்பதையும் சொல்லிவிடுகிறேன். காசு கொடுத்து புத்தகம் வாங்கிப் படிக்கும் வாசக நேயர்களுக்கு இவைகளை யெல்லாம் தெரிந்துகொள்ள உரிமை இல்லையென்றால் வேறு யாருக்கு அது இருக்க முடியும்?
தொடர்கதை பத்திரிகையில் வெளியாகிக் கொண்டிருந்தபோது வாரம் வாரம் அதுபற்றி வரும் கடிதங்களை ஆசிரியர் எனக்கு அனுப்பி வைத்தார். அதாவது டெலிபோன் எக்ஸ்சேஞ் நிலையத்திலுள்ள டெலிபோன் ஒப்பரேட்டர் வேலையை ஆசிரியர் வாசகர்களுக்கும் எனக்கும் மத்தியில் நின்று சில மாசங்களாகச் செய்து கொண்டிருந்தார்.
ஆசிரியர் அனுப்பிய வாசகர்களின் கடிதங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக வைத்துப் பார்த்தபோது அது ஒரு நெல்லிக்காய் மூட்டையைப்போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் கோணிக்கொண்டு போயிற்று. ஒருவருக்கு வண்டில் சவாரி வர்ணனை பிடித்திருக்கும்@ இன்னொருவருக்கு திருவிழாபற்றிய வர்ணனைதான் பிடித்துப் போயிருக்கும். வேறொருவருக்கு கறிக்கு உப்புக் குறைவானதுபோல கதாநாயகர்களின் காதல் சம்பாஷணை போதாமலிருக்கும். மற்றொருவருக்கு கதையில் வரும் புகையிலைச் சுருட்டுப் பிடிக்கும் (அதாவது அது அவரைப் பிடித்துவிட்டது என்பது கருத்து!)
இப்படியே ரசிக மகாகோடிகளின் பல வேறுபட்ட அபிப்பிராயங்களின் நடுவே குறிப்பிடத்தக்க ஒரு கடிதம் இருந்தது. குறிப்பிடத் தக்கது என்று ஏன் சொல்லுகிறேன் என்றால் வருஷக் கணக்காக கடிதங்கள், யாத்திரை செய்துகொண்டிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவரும் இந்தக்காலத்தில் கடல்கடந்திருக்கும் ஒருவர் எனது கதையைப்பற்றி அபிப்பிராயம் தெரிவித்து எழுதிய கடிதம் மட்டும் காலாகாலத்தில் NÑமமாக என் கைக்கு வந்து சேர்ந்துவிட்டதல்லவா, அதனால்தான்!
குறித்த கடிதம் எட்டயபுரம் பாரதி மண்டபத்திலிருந்து வந்தது. திரு. வி. கல்யாணசுந்தர முதலியாரின் ‘தோழமைத் தொண்ட’ரும் தற்சமயம் பாரதி மண்டபத்து நு}ல் நிலைய கண் காணிப்பாளராயிருப்பவருமான திரு.ல.நாராயணனுக்கு எனது கதை பிரமாதமாகப் பிடித்துப் போய்விட்டதாம்! என்ன ஆச்சர்யம்!
‘ஈழ நாட்டுத் தமிழ் மக்களின் – பிரதானமாக யாழ்ப்பாணத்து கிராம மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும்’ இந்தக் கதையை அவர் வெகு ‘அருமையாக’ ரசித்துப் படித்தாராம். தென்னிந்திய தமிழர்கள்இந்த வெளியீட்டை நிச்சயம் வரவேற்பார்கள் என்று தென்னாட்டுத் தமிழர்களின் பிரதிநிதியாகவே திரு. நாராயணன் நின்று பேசினார் – அல்ல, எழுதினார்.
சுருட்டுப் புகையின் மயக்கத்தில் கற்பனை பிறக்கும் எனக்கு பாரதி மண்டபத்தில் பிறந்த இக் கடிதத்தில் கற்பனை தோன்றுவது பெரியகாரியமா?
மகாகவி பாரதியார் நேரில் வந்து “சபாஷ் பாண்டியா! உன் புத்தகத்தை இப்படிக் கொடடா” என்று தட்டிக் கொடுத்ததுபோல எனக்கு ஒரு பிரமை மனத்தில் தட்டிற்று!
இந்தப் புத்தகத்தை என் அன்பார்ந்த வாசகர்களின் தலையில் சுமத்தவேண்டி ஏற்பட்டதற்கு இதோடு இன்னும் பல காரணங்கள் உள்ளன.
“உமது புத்தகங்களை அன்பளிப்பாகவே அனுப்பிச் செலவாக்கவேண்டிய நிலைவரம் உமக்கு ஏற்படாமல் நான் பார்த்துக்கொள்ளுகிறேன். அதைப்பற்றி நீர் கொஞ்சமும் யோசிக்காமல் புத்தகத்தை வெளியிடும்” என்று தைரியம் கூறிய ஒரு நண்பர், இதை மனமுவந்து அச்சிட்டுக் கொடுத்த ‘சுதந்திரன்’ அதிபரும் அச்சுக்கூட நிர்வாகஸ்தர்களும், இதை தங்கள் பொறுப்பாகவே ஏற்று வெளியிட முன்வந்த நவலட்சுமி புத்தகசாலையார், சித்திரம் எழுதி உதவிய அன்பர் ‘கதிர்’, மகாகவி சுப்பிரமணி பாரதியார் – ஆகிய இத்தனை பேர்களும் தான் இந்தப் புத்தகம் வெளியாவதற்கு, காரணமாக – காரணஸ்தர்களாக உள்ளனர்.
பத்தகத்தைப் படித்து முடித்த வாசகர்களுக்கு, யாரையாவது பாராட்ட வேண்டுமென்று தோன்றினால் உங்கள் பாராட்டுதல்களை மேலே கூறியவர்களுக்கே செலுத்துங்கள்.
அடுத்தபடியாக இந்த முகவுரையை ஏன் எழுதினீர் என்று கேட்கிறீர்களா? சரி அதையும் சொல்லிவிடுகிறேன்.
புத்தகத்தின் அச்சு வேலை முடிவடைந்த போது பிரசுராலயத்தார்கள் அதில் ஒரு பிரதியை கொண்டுவந்து என் முன்னால் போட்டுவிட்டு “இதென்ன இப்படி மெலிந்து போயிருக்கிறதே!” என்றார்கள். அதைக் கொழுக்க வைக்க பயில்வான் லேகியம் வாங்கலாமா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தபோது நோயைத் தெரிவித்த அவர்களே அதற்கு மருந்தும் சொன்னார்கள். ஒரு தடைவ பேனா இன்ஜெக்ஷன் கொடுத்தால் சரியாய்ப் போய்விடும் என்றார்கள். அவர்களது யோசனைதான் இப்படி முன்னுரை என்ற பெயரில் ஐந்து பக்கங்கள் கொண்ட வெட்டிப் பேச்சாக முடிந்தது.
முன்னுரையை நானேதான் எழுதவேண்டுமென்று நியதி இருக்கிறதா என்று வாசகர்கள் கேட்பார்களானால் – அதற்கு சுருக்கமாகவே பதிலளித்துவிடுகிறேன். புத்தகத்தை எழுதியவரே அதற்கு முன்னுரை எழுதக்கூடாது என்று நியதி இருக்கிறதா?
இன்னும் சொல்லப்போனால், நான் எழுதிய புத்தகத்திற்கு முன்னுரை எழுத என்னைவிட வேறு யார் அதிகமாக ஆசைகொள்ளப் போகிறார்கள்?
வணக்கம்
அ.செ.மு.
கொழும்பு
1-08-50
நன்றி: http://pulvelii.blogspot.ca/2011/12/blog-post_13.html
அ.செ.மு.வின் நூலுருப்பெற்ற படைப்புகள்:
அ.செ.மு.வின் ‘மனிதமாடு’ சிறுகதைத் தொகுதி: http://noolaham.net/project/16/1533/1533.pdf
அ.செ.மு.வின் குறுநாவல்: புகையில் தெரிந்த முகம் http://www.noolaham.net/project/02/168/168.pdf