இன்றைய தினம் (11.02.2013) பவள விழா அகவையைத் தொட்டு நிற்கும் கவிஞர் ஏ.இக்பால் ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் அசைக்க முடியாததொரு ஆளுமை என்பது யாவரும் அறிந்ததே. அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மேல் மாகாணம் தர்கா நகரை புகுந்தகமாகக் கொண்டு அங்கு இற்றைவரை வாழ்ந்து வருகிறார். இலக்கியத்துறையில் தன்னை நிலைநாட்டி ஜாம்பவானாகத் திகழும் அதே நேரத்தில் கல்விப் புலத்தில் அவர் பணி இரண்டாம் பட்சமானதல்ல. அக்கரைப்பற்று ரோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் படிக்கும்போது அங்கு பயிற்சி ஆசிரியர்களாகக் கடமையாற்றிய எம்.வை.எம். முஸ்லிம், அ.ஸ.அப்துஸ்ஸமது ஆகியோரால் இனம் காணப்பட்டு வழி நடத்தப்பட்டார். அங்கு “கலாவள்ளி’ என்ற கையெழுத்துச் சஞ்சிகை இவர் பொறுப்பில் நடத்தப்பட்டது. ஆசிரியராகக் கல்விச் சேவையை ஆரம்பித்த இவர் தமிழ்ப் பாட நூல் ஆலோசனை சபை உறுப்பினராக, இஸ்லாமிய பாடநூல் எழுத்தாளராக விடுவிப்பு ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக, கல்விக் கல்லூரி தமிழ்ப் பிரிவு போதனாசிரியராக பல்லாண்டுகள் சேவையாற்றியுள்ளார்.
எந்த மட்டத்தில் தமிழ் கற்பித்தபோதும் அங்கு பாடவிதானத்தை மட்டுமே இவர் சுற்றிவருவதில்லை. அதனையொட்டிய பரந்த தகவல்களை இவர் முன்வைத்துச் செல்வார். இதனால் இவரது மாணவர்கள் மிகுந்த உள்வாங்கலுடன் தேர்ச்சியடைந்து பலரது கவனத்தையும் ஈர்த்து நிற்பர்.
எழுத்தாக்க முயற்சியிலும் எதையாவது எழுதிப் பெயர் வாங்குவதென்ற நிலையில் இவர் என்றுமே இருந்ததில்லை. இவரது எழுத்தில் தனித்துவமும் முதிர்ச்சியும் இருந்தே வந்துள்ளன. சுய கலாசாரப் பகைப்புலத்தைப் புறந்தள்ளாத இடதுசாரிக் கருத்தியலே இவரது பலம் எனலாம். இது அவரது சமூக வாழ்வில் பல சோதனைகளைக் கொண்டுவந்தபோதும் அவரது நிலைப்பாடு ஆட்டம் காணவில்லை.
இவர் எம்.எச்.எம்.சம்ஸ், எம்.எஸ்.எம். இக்பால் ஆகியோருடன் இணைந்தெழுதிய “நூல் விமர்சனம்’ என்ற புத்தகம் வெளிவந்தபோது எதிர்ப்பு மாநாடுகளே நடந்தன. கண்ட இடத்தில் தாக்க குண்டர்கள் முடுக்கிவிடப்பட்டிருந்தனர். அந்த எழுத்தின் வலிமை அப்படி.
6570 களில் வெளிவந்த சமூக விமர்சனப் பத்திரிகையான “இன்ஸான்’ சில போராட்ட எழுத்தாளர்களின் எழுத்து தானத்தால்தான் தலை நிமிர்ந்து நின்றது. எதிர் அரசியலைக் கொண்ட பத்திரிகையாக அமைந்ததால் புனை பெயர்களில் எழுத வேண்டிய நிலையிருந்தது. கவிஞர் ஏ.இக்பால், அபூஜாவித், லப்கி, கீர்த்தி போன்ற புனைபெயர்களை இவ்வாறான சூழலில் பயன்படுத்தி வந்தார்.
இவர் எழுதி நூலாக வேண்டிய எவ்வளவோ படைப்புக்கள் கிடக்கின்றன. இருந்தும் முஸ்லிம் கலைச்சுடர் மணிகள், மௌலானா ரூமியின் சிந்தனைகள், மறுமலர்ச்சித் தந்தை, பண்புயர் மனிதன் பாக்கீர் மாக்கார், கல்வி ஊற்றுக் கண்களில் ஒன்று, நம்ப முடியாத உண்மைகள், பிரசுரம் பெறாத கவிதைகள், ஏ.இக்பால் கவிதைகள் நூறு, இலக்கிய ஊற்று, மாயத் தோற்றம், வித்து, மெய்ம்மை, புதுமை இப்படிப் பதின்மூன்று நூல்களை இதுவரையிலும் வெளியிட்டுள்ளார். இவரது நூல்களிலுள்ள சிறப்பம்சம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை நிலை சார்ந்ததாகும். மிக விரைவில் ஆய்வுகள்… திறனாய்வுகள் என்ற நூல் வெளிவரவுள்ளது.
இவரது எழுத்துக்களை பல்வேறு உயர்கல்வி நிலைய மாணவர்கள் ஆய்வுக் கெடுத்துக்கொண்டுள்ளனர். அவற்றுள் ஏ.எச்.நஜபுந்நிஸா எழுதிய கவிஞர் ஏ. இக்பால் கவிதைகள் சில ஒரு மதிப்பீடு, என்பது மாத்திரமே நூல் வடிவம் பெற்றுள்ளது. “இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் கவிஞர் ஏ.இக்பாலின் படைப்பிலக்கியங்கள்’ என்ற ஆய்வும் நூல் வடிவம் பெறவேண்டியதொன்றாகும். இலங்கை நூலக சங்க டிப்ளோமாதாரர் ஒருவரால் இவரது ஆக்க விவரப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவரது ஐம்பது வருட கால இலக்கிய சேவையை மதிப்பிட்டு வெளியிடப்பட்ட பெருந்தொகுப்பில் பல்வேறு அறிஞர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கியுள்ளன. இலக்கியம் மாத்திரமன்றி இவரது ஆளுமை, தனித்தன்மை பற்றியெல்லாம் அவை பேசுகின்றன.
கல்வி, இலக்கியம், மொழி, வரலாறு தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். 2002 இல் உலகத் தமிழின் மாநாடு தமிழ் நாட்டில் நடைபெற்றபோது கலந்துகொண்டு நாட்டாரியல் தொடர்பான கட்டுரை படித்தார்.
இவரது வானொலிப் பங்களிப்பு தனியாக எழுதப்படவேண்டிய தொன்றாகும். மௌலானா ரூமியின் சிந்தனைகளுக்கு கவிதை வடிவம் கொடுத்து வாராந்தத் தொடர் நிகழ்ச்சியாக நடத்தினார். பின்னர் அது நூல் வடிவம் பெற்றது. முதன் முதலில் வானொலி முஸ்லிம் சேவையில் கவிதைப் பொழிவு என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியவர் இவரே. தொலைக் காட்சியிலும் அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
கவிஞர் ஏ.இக்பாலின் சேவையைப் பாராட்டி அவ்வப்போது கவிஞர் , இலக்கியமணி, கலாபூசணம், இலக்கிய வாரிதி, இலக்கிய விற்பன்னர், தமிழ் மாமணி முதலான பட்டங்களை அரசு, தனியார் தகுதிசார் நிறுவனங்கள் வழங்கி கௌரவித்துள்ளன. இவற்றுள் ஊர்மக்கள் வழங்கிய”கவிஞர்’ என்ற பட்டத்தையே மிகவும் அவாவி தன்பெயரோடு இணைத்துப் பயன்படுத்தி வருகின்றார். எங்கே, எப்படிப் புகுந்து பட்டங்களைத் தட்டிக்கொள்ளலாமென்று திருகுதாளம் புரிவோருக்கு மத்தியில், தேடி வந்த பட்டங்களை ஒழுங்கீனம் கருதி மறுதலித்த வரலாறு இவருக்குண்டு. அரச சாகித்திய மண்டலம், கிழக்கு கலாசார திணைக்களம், கொடகே வெளியீட்டகம், புதிய சிறகுகள், சம்ஸ் மன்றம், இலங்கை இலக்கியப் பேரவை போன்றவை விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கியுள்ளன.
மல்லிகை, குளம், படிகள் போன்ற இலக்கிய சஞ்சிகைகள் இவரது உருவத்தை அட்டையில் பதித்து பெருமைப்படுத்தியுள்ளன.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க அக்கரைப்பற்றுக்கிளை, முஸ்லிம் எழுத்தாளர் மஜ்லிஸ், தர்கா நகர் படிப்பு வட்டம், ஆசிரியர் தொழிற் சங்கம், இப்படிப் பல மட்டங்களில் சமூக நிறுவனங்களில் இணைந்து இவர் பணியாற்றியுள்ளார்.
கொழும்பிலிருந்து திக்குவல்லை வரையிலான பிராந்திய இலக்கிய விழிப்புக்கு நீண்ட காலமாக இவர் ஒரு குவிமையமாக இருந்திருக்கிறார். இலக்கிய விழாக்கள். பாடசாலை கலை இலக்கிய நிகழ்வுகள், வெளியீட்டு விழாக்களில் இவரது பங்களிப்பும் வழிகாட்டலும் பெறப்பட்டன. இன்னும் இப்பகுதிகளில் இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் இவரது மாணாக்கர்களாகவே உள்ளனர்.
கவிஞர் ஏ.இக்பாலின் மிகப்பெரிய பலம் அவர் ஒரு வாசகனாக இருப்பதுதான். பல்லாயிரம் புத்தகம் கொண்ட நூலகத்தை தன்வசம் வைத்துள்ளார். பல மட்ட ஆய்வாளர்களும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர் ஓர் அதிரடி தகவல் களஞ்சியம். வெளிப்படையாக எதையும் பேசுவார். இவர் கூட்டங்களில் பேசுவதென்றால் அதற்கென்றே ஒரு பட்டாளம் வந்து சேர்ந்துவிடும்.
இவ்வளவு இலக்கிய வெளிப்பாடுகளையும் அனுபவங்களையும் தன்னகத்தே கொண்ட கவிஞர் இக்பாலுக்கு பவள விழா அகவையென்பது பெரிய மட்டத்தில் கொண்டாடப்பட வேண்டிய விடயம்தான். இருந்தும் ஆர்ப்பாட்டமில்லாமல் ஆரம்பித்துள்ளது. இவர் நற்சுகத்துடனும் மனப்பலத்துடனும் தன்பணியைத் தொடர வேண்டுமென்பதே இலக்கிய உலகின் எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும்.