எண்பதுகளில் குறிப்பேடுகளில் என் உள்ளத்து உணர்வுகளையெல்லாம் கவிதைகளாக, உரைச்சித்திரங்களாக, கட்டுரைகளாக என்றெல்லாம் எழுதி வைப்பது வழக்கம். அவை ஒருவிதத்தில் உணர்வுகளின் வடிகால்களாக அன்று விளங்கின. அவ்விதம் அன்றைய காலகட்டத்தில் அறிந்தவற்றை , புரிந்தவற்றைப் பற்றிச் சிந்திப்பதை குறிப்பேடுகளில் எழுதுவதென்பது எனக்கு மிகவும் பிடித்தமானதொரு செயல். அவ்விதம் எழுதிய குறிப்பேடுகளில் பல நாட்டுச்சூழலில் தொலைந்துவிட்டன. எஞ்சிய குறிப்பேடுகளை மீண்டும் வாசிக்கும்போது அவை அன்றைய காலகட்டச் சமூக, அரசியல் சூழல் என்மேல் ஏற்படுத்திய தாக்கங்களின் பிரதிபலிப்புகளாக விளங்கியதை அறியமுடியும். அவற்றை எந்தவித மாற்றமுமின்றிப் பதிவு செய்வது அவசியமென்று பட்டதன் விளைவாக, அக்குறிப்பேட்டுக் குறிப்புகள் சிலவற்றை பதிவுகள் இணைய இதழிலும், அண்மையில் முகநூலிலும் பதிவு செய்திருந்தேன். அவ்விதம் அண்மையில் முகநூலில் பதிவு செய்தவற்றை ஒரு பதிவுக்காக இம்முறை வாசிப்பும், யோசிப்பும் பகுதிக்காகப் பதிவிடுகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் இந்தக் குறிப்புகள் ஒருவிதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் இவை அன்றைய காலகட்டத்து என் உணர்வுகளை, சிந்தனைப் போக்குகளைப் பிரதிபலிப்பவை. ஒரு பதிவுக்காக இங்கே.
‘வெளியில் அவர்கள்!’ என்னுமிக் கவிதை. அன்றைய காலகட்டத்து உணர்வுகளைப் பிரதிபலிப்பது. இன்றைய காலகட்டத்து உணர்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது வரலாறு ஒரு முறை பூரணமானதொரு சுழற்சியில் முடிந்து, தொடங்கியிருக்கிறதென்பது புரிகின்றது. 1982இல் எழுதப்பட்ட கவிதை. அன்று எழுதிய கவிதைகள் சிலவற்றை இளங்கவிஞர் ஒருவர் தொகுப்புக்காகக் கேட்டபோது கொடுத்திருந்தேன். ஆனால் அவர் அவற்றில் சிலவற்றைத் தனது கவிதைகளாக வெளியிட்டதாகப் பல வருடங்களின் பின் அறிந்தேன். அப்பொழுது நான் நாட்டிலில்லை. அவரைப் பற்றிப் பின்னர் நான் எதுவும் பெரிதாகக் கேள்விப்பட்டதில்லை. அவர் எழுதுவதாகவும் தெரியவில்லை. அவர் எந்தக் கவிதைகளைத் தனது தொகுப்பிலிட்டார் என்பதுவும் தெரியவில்லை.
குறிப்பேட்டிலிருந்து… வெளியில் அவர்கள்!
– வ.ந.கிரிதரன் –
இந்தக் குடிசையினின்றும் வெளியே
இறங்கிடவே யான் அஞ்சுகின்றேன். ஆம்! ஏனெனில்
இங்கு நான் பூரணமனிதனாக, பூரண மனிதனாகவே
இருப்பதனை உணர்கிறேன்.
இருப்பதையுண்டு, உறங்கிட முடிகின்றது.
இன்பமே! உந்தனன்பினில் குளித்திட முடிகின்றது.
இங்கு யாரிடத்துமென் தன்மானத்தினை நான்
இழந்திடத் தேவையில்லை.
கூனிக் குறுகி யார் கால்,கையையும் பற்றிக்
கும்பிடு போடுமொரு வாழ்வு இங்கில்லை.
உள்வைத்துப் புறம்பேசுமொரு
உழுத்த பழக்கத்திற்கு அவசியமேதுமில்லை.
ஆயின் அவர்கள் வெளியே நிற்கின்றார்கள்.
அவர்தம் வெடிமருந்து தோய்ந்திட்ட கைகளைப் போலவே,
இதயமும்… ஆம்! வெடிமருந்து தோய்ந்த நெஞ்சம் அவருடையது.
சிதைத்தல்! சீரழித்தல்! வதைத்தல்! அவர்தம் வாய்ப்பாடு
இதுவே.
அச்சமும், பேடிமையும், அடிமைச் சிறுமதியும் கவிந்த
புறவுலகோ,
பாவத்தின் சன்னிதியில் மாய்ந்து வேகும்; நோகும்.
தருமத்தின் சரித்திரத்தில் பொறுமைக்கும்
ஓரெல்லையுண்டு.
இனி ஒரு விதி செய்வோம். ஆம்! எந்நாளுமே
அதனைக் காத்திடப் போகின்றேன். அஞ்சிடப் போவதில்லை.
ஆமாம்! ஆமாம்! ஆமாம்!
இனி நானும் வெளியே இறங்கிடப் போகின்றேன்.
வெளியே இறங்கிடப் போகின்றேன்.
– 1982 –
குறிப்பேட்டுப் பதிவுகள் சில: தத்துவஞானம் பற்றியதொரு விசாரம் அல்லது ஆராய்வு!.
18.8.1982!
கருத்துமுதல்வாதமா, பொருள்முதல்வாதமா என்று மனிதர்கள் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கையில், விஞ்ஞானத்தின் வெற்றியும், மானிடரின் வளர்ச்சியும் பொருள்முதலவாதத்திற்கே ஆதரவாக நின்றன. பொருள் பிரபஞ்சத்தின் அடிப்படையென்று பொருள்முதல்வாதிகள் ஆதாரபூர்வமாக அல்லாவிடினும், பகுத்தறிவிற்கேற்ப அறுதியிட்டுக் கூறினர். இயல்பாகவே மூடநம்பிக்கைகளுடன் கூடிய மதமும், அதனைச் சார்ந்த கருத்துமுதல்வாதமும் அடிபட்டுப் போயிற்று. ஆனால் கருத்துமுதல்வாதம் , அறிந்தோர் மத்தியில் மட்டுமே அடிபட்டுப் போயிற்று என்பதனையும் நாம் மறந்து விடலாகாது. அறியாமையும், சுரண்டல் சமுதாய அமைப்பிலுள்ள குறுகிய நோக்குள்ள அறிவினைப் பெற்று சமூகத்தில் படித்த பெரிய மனிதர்களாக உலாவிவரும் அறிந்தோர் கருத்து முதல்வாதத்தினை அழிந்து விடாதபடி காத்து வைத்திருபோராவர். உண்மையில் மானுட சமுதாயம் முழுவதுமே பொருளாதாரரீதியிலான விடுதலையினைப் பெற்றபின்னரே, மானுட வர்க்கத்தின் பரிணாம வளர்ச்சிப் போக்கின் அடுத்த கட்டம் (மனரீதியிலானது) ஆரம்பமாகும்.
இதுவரை கால மானுட வர்க்கத்தின் சமுதாய அமைப்பின் பரிணாம வளர்ச்சிப் போக்கினை அவதானிப்போமாயின், ஆதி காலத்து மானுடர் அறியாமையில் வாழந்த காலகட்டத்தில், அவரது மனம் பூரணமாகத் தொழிற்பட ஆரம்பிக்காதவொரு காலகட்டத்தில் நிலவிய தாய்வழி மரபினையொட்டிய பொதுவுடமைச் சமுதாய அமைப்பு, பின்னர் உற்பத்திக் கருவிகளின் பரிணாமவளர்ச்சிப் போக்கிற்கேற்ப மாறுதலடைந்து வந்த ஆண்டான், அடிமை, அதாவது அடிமை-உடைமை சமுதாய அமைப்பு, நிலப்பிரபு-பண்ணையடிமை அல்லது நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு, அதன் பின்னர் உருவான முதலாளித்துவ சமுதாய அமைப்பு, நவீன முதலாளித்துவ சமுதாய அமைப்பு …. இப்படியாகப் பரிணாம வளர்ச்சிப் போக்கினைக் கொண்டுள்ள சமுதாய வரலாற்றுப் போக்கில் , அடுத்ததாக நிச்சயம இன்னுமொரு மாற்றம் நிச்சயம ஏற்பட்டே தீரும். இன்னுமொன்றையும் இச்சமுதாய அமைப்பின் வளர்ச்சிப் போக்கில் அவதானிக்கலாம். அதாவது, எண்ணற்ற வர்க்கங்களாகப் பிரிந்து கிடந்த மானுடவர்க்கத்தினை, இச்சமுதாய அமைப்பின் பரிணாம வளர்ச்சிப்போக்கு மேலும் மேலும் எளிய வர்க்கங்களாகப் பிரித்து, இறுதியில் முதலாளி, தொழிலாளி என்னுமிரு வர்க்கங்களை உள்ளடக்கியதொரு சமுதாய அமைப்பாக மாற்றி விட்டுள்ளது. இதற்கு அடுத்த படி நிச்சயமாக வர்க்கங்களேயற்றதொரு சமுதாய அமைப்பாகத்தானிருக்க முடியும். பொதுவுடமைச் சமுதாய அமைப்பு ஒன்றே அத்தகையதொரு அமைப்பாகவிருக்க முடியும். பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தின் மூலம் உருவாகும் அத்தகைய சமுதாய அமைப்பில் பொருள்முதல்வாதிகள் கூறுவதுபோல் இறுதியில் ‘அரசு’ என்னும் ஒன்றே இல்லாமல் போய்விடும். அது நிச்சயம். உண்மையில் ‘அரசு’ என்பதே இறுதியில் உதிர்ந்து உலர்ந்துதான் போய்விடும். ஆனால் அத்துடன் மானுடவர்க்கத்தின் சகல பிரச்சினைகளும் தீர்ந்து போய்விடுமா என்ன?
அதன்பிறகுதான் மானுட வர்க்கத்தின் சிந்தனைப் போக்கிலான பரிணாம வளர்ச்சிப் போக்கின் அடுத்தகட்டமான , அரவிந்தர் கூறும் ‘உயர்நிலை மனம்’ (Super Mind) உடைய ‘உயர்நிலை மனிதர்களைக்’ கொண்ட (Super Human) சமுதாய அமைப்பு உருவாகும். இதுவரை கால மானுட வர்க்கத்தின் வரலாற்றுப் போக்கில் , சமுதாயத்தில் மட்டுமல்ல, சகல ஜீவராசிகளிலும், சகல நிலைகளிலும், பிரபஞ்சம் முழுவதுமே பரிணாம வளர்ச்சிப்போக்கிற்காட்பட்டுத்தான் வந்துள்ளது. தத்துவஞானப் போக்கிலும் , ஆரம்பத்தில் மூட நம்பிக்கைகளுடன் கூடிய கருத்துமுதல்வாதமும், இறுதியில் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப பொருள்முதல்வாதமும் மானுட வர்க்கத்தினை ஆட்கொண்டன.
ஆனால் ‘உயர்நிலை மனம்’, ‘உயர்நிலை மனிதர்க’ளைக் கொண்ட ‘அதிமானுட’ வர்க்கத்துச் சமுதாய அமைப்பிற்குரிய தத்துவஞானம் எதுவாகவிருக்க முடியும்? நிச்சயம் பொருள்முதல்வாதம் மட்டுமாயிருக்க முடியாது. அதே சமயம் கருத்துமுதல்வாதமாக மட்டுமிருக்க முடியாது. இவற்றை இரண்டினையும் இணைத்த , இவற்றை மேலும் சுத்திகரித்ததொரு தத்துவஞானமாகத்தானிருக்க முடியும். மானுட வர்க்கத்தின் பரிணாம வளர்ச்சிப் போக்கு ‘அதிமானுட’ சமுதாய அமைப்புடன் நின்றுவிடுமா என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அப்படி நின்றுவிடாது அதன் அடுத்த படியினை , அதற்கடுத்த படியினையென்று… பரிணாம வளர்ச்சிப் போக்கும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். தற்போது மானிடருக்கு விளங்காமலிருக்கும், பிரபஞ்சம் பற்றிய உண்மைகளெல்லாம் அச்சமயத்தில் இலகுவாகத் தெரியவரும்.
இன்றைய மனிதர் ‘விஞ்ஞானத்தால்’ பிரபஞ்சத்தையே அளந்துவிட்டோம் என்பதுபோல் கொலம்பியா ஓடங்களில் கொக்கரிப்புடன் சேர்ந்து சிரிக்கின்றார். ஆனால் அவரால், கேவலம் இந்த விஞ்ஞானத்தால் ‘அகவிடுதலைக்கு’ எதையுமே ஆற்ற முடியவில்லை. ஆனால் விஞ்ஞானம் மானிடரின் அகத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளில் பூரணமாக இறங்குவதன்மூலம் , மானுட வர்க்கத்தின் ‘அகவிடுதலைக்கு’ உதவி செய்ய முடியும். ஆனால் நாம் வாழும் உலகில் காண்பதென்ன? இன்றைய மனிதர் ஆக்கத் துறைகளைவிட, பாதுகாப்பு, பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு அழிவுத்துறைகளுக்கே விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி வருகின்றார். அணுக்குண்டுகளும், நியூத்திரன் குண்டுகளும், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளும் மானுட வர்க்கத்திற்கே சவாலாயிருந்த போதிலும், நிச்சயம் மானுட வர்க்கத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சிக் கட்டமான ‘அதிமானுட’ சமுதாய அமைப்பு உருவாகியே தீரும். சூழ்நிலைகளும் அதற்கேற்ப உருவாகியே தீரும். –
29.11.1982!
.குறிப்பேட்டுப் பதிவுகள் சில: இயற்கையும் மனிதரும்!
– வ.ந.கிரிதரன் –
11.8.1982
ஒரு காலம் இருந்தது. மானுட வர்க்கத்தின் தோற்றுவாயின் ஆரம்பகாலகட்டமது. ஆறுகள் பொங்கிப் பெருகிப் பாய்ந்தோடின; மரங்கள் தழைத்துச் செழித்துக் கிடந்தன; புட்கள் பாடிப் பறந்து திரிந்தன; இயற்கையின் அரவணைப்பில் காடுகளில், குகைகளில், சமவெளிகளிலென்று ஆதிமானுடர் அலைந்து திரிந்த சமயத்தில், அவரிடம் அறிவு வளர்ச்சியுற்றிருக்கவில்லை. பரிணாம வளர்ச்சிப் போக்கின் ஆரம்பக் கட்டமது. அவர் மனிதிலோ ஒருவித திகில். செயல்களுக்கு அர்த்தம் புரியாத நிலையில் ஒருவித பயம் அவர் மனதை மூடியிருந்தது. இயற்கையோடு இயற்கையாக , அதனோரங்கமாக வாழ்ந்துவந்த ஆதிமானுடர் வரலாற்றில் நிகழ்ந்திட்ட பரிணாமப் போக்கின் இன்றைய விளைவோ? இயற்கையின் குழந்தையான மனிதரை, நாகரிக மனிதரின் அறிவு வளர்ச்சி அவர் தாயிடமிருந்து பிரித்து விட்டது. ஆதிமானுடரிடமிருந்த அறியாமையை அகற்றவேண்டிய வரலாற்றின் இன்றைய வளர்ச்சிப் போக்கு, அவரது வாழ்முறைகளை இன்னுமொரு பிழையான நிலைமைக்கிட்டுச் சென்று விட்டதுபோல்தான் தெரிகின்றது. இன்றைய மனிதரின் போர்வெறிப் பூசல்கள் இவற்றையே உணர்த்தி நிற்பதாகப் படவில்லையா? இன்றைய இறுமாப்புமிக்க மனிதர் அறிவென்று கருதுவதெல்லாம், புதிய புதிய கண்டுபிடிப்புகளை வழங்கும் விஞ்ஞான அறிவினைத்தான். ஆனால் அவரது வாழ்க்கையைச் செப்பனிடக்கூடிய ‘மனம்’, அவரது ‘மனம்’ இன்னும் அந்தப் பழைய காட்டுமிராண்டிக் காலத்து மனிதரிடமிருந்து எவ்விதத்திலேனும் பரிணாமம் அடைந்ததாகத் தெரியவில்லை. நாள்தோறும் பத்திரிகைகள் பெரிதாகக் கக்கும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, போர்ப் பூசல்கள் எல்லாம் எதை உணர்த்தி நிற்கின்றன? இவற்றைத்தானல்லவா? ஒருவேளை இனித்தான் மனிதரது மனப் பரிணாம மாற்றம் நடைபெறுமோ? ஆனால் அதற்கிடையில் அவரது அறிவு வளர்ச்சியின் கடந்த காலப் பிழையான பரிணாமப் போக்கால் மனிதரே தமக்கிடையில் இதுவரை ஏற்படுத்திக் கொண்ட சமுக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண்பதற்கே இன்றைய மனிதரின் பரிணாமப் போக்கு ஒழுங்காக நடைபெற வேண்டியதன் அவசியம் அவசியமாகின்றது.
இயற்கைக்கும், இயற்கைவாழ் ஜீவராசிகளுக்குமிடையில் நிலவிவந்த ஒழுங்கான சமநிலையினை இன்றைய மனிதரின் ஆணவம் மிக்க அறிவு குலைத்து விட்டது. ஓங்கி வளர்ந்த பச்சைப் பசிய விருட்சங்களுக்குப் பதிலாக ‘காங்ரீட்’ காடுகளால் நிறைந்த மாநகரங்களையே காண்கிறோம். அங்கே புள்ளினங்களின் இன்ப கானங்களை நாம் கேட்கவில்லை. நாம் கேட்பதெல்லாம்,.. பார்ப்பதெல்லாம்… வானொலிகளின் அழுகுரல்களையும், தொலைக்காட்சிகளின் ஆரவாரங்களையும்தான். ஊர்வனவற்றின் ஆனந்தமான வாழ்க்கைக்கு இங்கு இடமேது? வாகனங்களின் பெருமூச்சுவிடுதலுடன் கூடிய ஊர்வலங்களையே காண முடிகிறது. தூய்மையான தென்றலென்று காவியங்கள் கூறலாம். ஆனால் இங்கு வீசும் தென்றலோ காபனோரொட்சைட்டு, கந்தவீரொட்சைட்டு போன்ற நச்சு வாயுக்களின் கலவையாகவன்றோவிருக்கிறது. போதாக் குறைக்கு சுயநிர்ணய உரிமை என்று பேசும் மானுடர் இறைச்சிக்காகக் கொன்று குவிக்கும் உயிரினங்களுக்கோ அளவில்லை. ஆமை, ஆடு, அணில், மாடு, மான், மரை, பாம்பு, தவளை,,,, இப்படி ஒன்றைக் கூட இந்தப் பாவி மனுசர் விட்டு வைப்பதில்லையே. மிருகங்களைப் பொறுத்தவரையில் சிந்தனையாற்றலற்றதனால் அவை ஒன்றையொன்று கொன்று தங்களைக் காத்துக் கொள்கின்றன. ஆனால் மானுடரோ.. ஆறறிவு பெற்ற அற்புதப் பிறவிகளென்று தம்மையே புள்காங்கிதத்துடன் வர்ணித்துக் கொள்கின்றார். இத்தகைய மனிதரும், மிருகங்களைப் போல் மற்றைய உயிர்களைக் கொன்று குவிப்பாரென்றால் இவருக்கும் அவற்றிற்குமிடையிலான வித்தியாசம்தானென்ன? மானுட விடுதலைக்காய் போராடும் மனிதர் சகலஜீவராசிகளினினதும் சுயநிர்ணய உரிமைகளையும் அங்கீகரிக்க வேண்டியவராகவன்றோயிருக்கின்றார். ஆனால் அவர் அதைச் செய்கின்றாரா என்ன?
இயற்கையாக உருவாகிய ஒவ்வொன்றுமே அதனதன் வாழ்நாள் முடிவுறும் வரையில் வாழுதற்குரிய சுயநிர்ணய உரிமையினை யாவருமே அங்கீகரிக்க வேண்டும். மனிதர் இயற்கையோடு இயற்கையாக , அதனோர் உறுப்பாகவொன்றி வாழவேண்டுமே தவிர, அதனைச் சிதைப்பதன்மூலம் ‘காங்க்ரீட்’ காடுகளை உருவாக்கி அதனோர் அங்கமாக வாழுவது அவருக்கு மட்டுமல்ல அவர் வாழும் இவ்வுலகிற்குமே ஏற்றதல்ல. இன்றைய மனிதரின் கட்டடக்கலையின் வளர்ச்சியில் இன்னுமொரு பரிணாமப் போக்கு எழவேண்டியதன் தேவை அவசியமாகின்றது. அவரது கட்டடங்களின் அடிப்படைத் தேவைகள் என்ன, எவை?
1. சூழலின் கோர விளைவுகளிலிருந்து அவரைக் காப்பது.
2. அவர் வசிப்பதற்கு.
இவற்றைப் பூர்த்தி செய்வதற்கு அவருக்குத் தேவையான கட்டடங்கள் இயற்கையோடொத்ததாக, எளிமையானதாக உருவாக்கப்படல் வேண்டும். இவற்றை அடைவதற்கு முன்னோடியாக மனிதர் அளவற்று இனப்பெருக்கம் செய்வது நிச்சயம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். எதற்கும் ஓரளவின் அவசியம் தேவையாகின்றது. ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்றொரு பழமொழி பேச்சு வழக்கிலுண்டு. இயற்கைக்கும், மனிதருக்குமிடையிலான தொடர்பு அறுந்து போகாதபடி செயலாற்ற வேண்டியது அதிமானுடத்தினை நோக்கி முன்னேறும் இன்றைய மனிதர் செய்ய வேண்டிய கடமையாகும்.
11.8.1982.
13.1.1983:
மனிதரும், இயற்கை, புற, அக உலகத்துடனான மோதல்கள் அல்லது ஆதிமனிதரிலிருந்து …(ஒரு சிக்கலான பிரச்சினை பற்றிய கண்ணோட்டம்).
இன்றைய மனிதர் தம்மை அதிபெரும் மேதாவியென்றும் , நாகரிகத்தின் உச்சாணிக் கொப்பிலிருப்பவராகவும் மிகவும் பெரிதாகவே இயலும் போதெல்லாம தம்பட்டமடித்தும் பீற்றியும் கொள்கின்றார். கொலம்பியா விமானங்களிலேறி இப்பிரபஞ்சத்தையே சுற்றி வந்தவர் போல் கொக்கரித்துக் கொள்கின்றார். செயற்கையிருதயமென்ன, செயற்கை மனிதரையே உருவாக்கி விடுவோமென்பதுபோல் ஆர்ப்பரித்துக் கொள்கின்றார். இவையெல்லாம் மனிதரின் அறியாமையின் விளைவிலிருந்துருவான கர்வத்தின் வெளிப்பாடுகளே தவிர வேறல்ல. ஆதிமனிதர், குகைகளிலும், காடுகளிலும், அலைந்து திரிந்த ஆதிமனிதர், இயற்கையுடன் பெரிதும் போராடியே வாழவேண்டியிருந்தது. ஆசை, கோபம், பொறாமை முதலான குணங்கள் அறியாமையில் கிடந்த ஆதிமனிதரைப் பெரிதும் ஆட்கொண்டதன் விளைவாக ஈவு, இரக்கமற்ற முறையில் கொலைகள், மோதல்கள் வெடித்துச் சிதறின; இரத்தம் ஆறாகப் பெருகியோடியது. பெண்களே சமுதாயத்தின் முக்கிய உறுப்பினர்களாக இருந்த காலகட்டமது. பெண்களின் தலைமையிலேயே குழுக்கள், குழுக்களாக ஆதிமனிதக் குழுக்கள் வாழ்ந்து வந்தன. ஒவ்வொரு குழுக்களின் தலைவராகப் பெண்ணேயிருந்தாள். ஆண்கள் இனப்பெருக்கம் செய்வதற்கும், உணவு சேகரிப்பதற்குமே பயன்படுத்தப்பட்டார்கள். இயலாதவர்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள்.
காலம் உருண்டோட, உருண்டோட மனிதரது சிந்தையிலேற்பட்ட வளர்ச்சியின் விளைவாக இயற்கைக்கும், மனிதருக்குமிடையிலான மோதலிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. உண்மையில் முற்றாக ஒழிக்கப்படவில்லையென்றே கூறலாம். இன்னும் ஆறுகள் பெருகி ஊர்கள் நாசமாவதும், எரிமலைகள் பொங்கி உருகுவதும், சூறாவளிகள் உயிர்களைச் சுருட்டிச் செலவதும் சர்வசாதாரணமல்லவா. இயற்கையை வெற்றி கொள்ளத் தொடங்கிய மனிதரின் வாழ்நிலைகளிலும் மாற்றங்கள் பல உருவாகின. நாடோடிகளாகத் திரிந்தவர் நாடு, நகரங்களை உருவாக்கினார். உற்பத்திகளின் விளைவாக ஏற்றத்தாழ்வுகள் உருவாகின. ஏழை, பணக்காரர் என்று மனித சமுதாயம் பிரிவுபட்டதிலிருந்து இன்றைய முதலாளித்துவ சமுதாய அமைப்பு வரையிலான காலகட்டத்தில் மனித சமுதாயம் பலவிதமான சமுதாய அமைப்புகளைக் கண்டு கொண்டது. எவ்வாறு இத்தகைய அமைப்புகள் (அடிமை உடமைச் சமுதாய அமைப்பு, நிலப்பிரபுத்துவ அமைப்பு முதலியவை) நீங்கி முதலாளித்துவ அமைப்பு உருவானதோ அவ்வாறே காலவோட்டத்தில் இவ்வமைப்பு நீங்கி இதனிலும் மேலானதொரு அமைப்பு பொதுவுடமை வரும். ஆனால் மனிதரின் இதுவரை கால வரையிலான வரலாற்றினைப் பார்ப்போமாயின் ஒன்றினை வெகு தெளிவாகவே உணர்ந்து கொள்ளலாம். ஆதியில் மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான பிரதானமான மோதல் நிலவியது. மனிதர் அச்சமயம் தமக்குள்ளும் மோதிக் கொண்டனர். ஆனால் இத்தகைய மோதல்கள் மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான மோதல்களுடன் ஒப்பிடும்பொழுது மிகச்சிறிதளவாகவேயிருந்தன.
மாறாக, மனிதர் இயற்கையைப் பெரிதும் அடக்கிய காலகட்டத்திலிருந்து உருவான, இன்று வரையிலான காலகட்டத்தினை எடுத்துப் பார்ப்போமாயின் மனிதருக்கும் மனிதருக்குமிடையிலான மோதல்களுடன் ஒப்பிடும்பொழுது , மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான மோதல்கள் மிக்ச்சிறிதளவாகவேயிருப்பதைக் காணலாம். இந்த மோதல்களெல்லாம் மனிதர் மனிதருடன் தாமாக்வே ஏற்படுத்திக் கொண்ட மோதலகள். இந்த மோதல்களின் விளைவாக இக்காலகட்ட வரலாறு முழுவதுமே போர்களினாலும், இரத்தக் களரிகளினாலுமே நிரப்பப்பட்டிருப்பதைக் காணலாம்.
மண்,பெண், பொன் முதலான ஆசைகளின் விளைவாகவும், பொறாமை, கோபம் முதலான உணர்வுகளின் விளைவாகவும் உருவான பிரச்சினைகளே இன்றைய மனிதரின் சகல பிரச்சினைகளும். ஆக ஆரம்ப காலகட்டம் மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான மோதல்களையே பிரதானமாகக் கொண்ட காலகட்டமானால், அதன்பிறகு தொடங்கிய இன்று வரையிலான காலகட்டமோ, மனிதருக்கும் , புற உலகுக்கும் (அதாவது மற்றைய மனிதர்கள், நாடுகள் முதலான புறவுலகம்) இடையிலான மோதல்களைக் குறித்திடும் காலகட்டமாகும்.
மனிதர் மட்டும் ஆசை, பொறாமை, கோபம் முதலான குணங்களை அறவேயொதுக்கித் தள்ளிவிடுவாரென்றால், மனிதரின் சகல பிரச்சினைகளுமே தீர்ந்த மாதிரித்தான். ஆனால் அப்படி இம்மனிதரால் வாழ்ந்திட முடியாமலிருக்கின்றதே. ஏன்? அதன் சரியான காரணம் இதுதான்: மனிதர் தம்மையே உணரத்தொடங்கினால் இப்பிரச்சினைகள் யாவுமே தீரும். தீர அவர் தம் மனதினை உணர்ந்திட அதன் சக்தியில் நம்பிக்கை வைத்திட வேண்டும். எதனையாவது நன்கு கிரகித்துக் கொள்ளவேண்டுமென்றால் அமைதியான சூழலை நாடுகிறோமே. ஏன்? தெளிந்த மனதில் விடயங்கள் மிக இலகுவாகவே பதிந்து விடுகின்றன. அதுபோல்தான் மனிதரும் தம்மைப் பற்றி, தமக்கும் பிரபஞ்சத்திற்குமிடையிலான தொடர்புகள் பற்றிச் சிந்தித்து உணர்ந்திட வேண்டுமென்றால், முதலில் அவர் புற உலகச் சூழ்நிலைகளின் கோரத்தாக்குதல்களிருந்து விடுபட வேண்டும். எவ்வாறு இயற்கையின் கோரத்தாக்குதல்களிலிருந்து விடுபட மனிதர் இயற்கையைப் பற்றி ஆராய்ந்திடத் தொடங்கினாரோ, அவ்வாறே இன்றைய மனிதரின் சகல பிரச்சினைகளுக்கும் காரணமான, அவரே உருவாக்கிய புறவுலகச் சூழ்நிலைகளின் தாக்குதல்களுக்கான காரணங்களை அறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். பசி, வறுமை, நோய், துன்பம் இவையல்லவா புறவுலகச் சூழலின் தாக்குதல்கள். இவற்றை நீக்கிட வேண்டுமானால், இவை உருவாகுவதன் காரணங்களை அறிந்திட வேண்டும். இவையனைத்திற்கும் காரணம் ஒரு சிலரிடம் அபரிமிதமானச் செல்வம் குவிந்திடுவதை அனுமதிக்கிற , அதாவது ‘தனியுடமை’ அமைப்பல்லவா காரணம். ஆக மனிதர் முதலில் செய்யவேண்டியது இத்தகைய அமைப்பினை உடைத்தெறிவதுதான். கார்ல்மார்க்ஸ் கூறுவதுபோல் பொதுவுடமை அமைப்பினை உருவாக்கிவிடுவதுதான்.
சரி இப்பொழுது இப்படியொரு கேள்வி எழலாம்? ‘சரி பொதுவுடமை உலகம் முழுவதும் பரவியபின் என்ன நடக்கும்?’. விடை இதுதான்: அத்தகையதொரு நிலையில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனனுமொரு நிலை உருவாகும். மனிதர் தமது புற உலகப் பிரச்சினைகளிலிருந்து பெரிதும் விடுபடுமொரு சூழல் உதயமாகும். அந்நிலையில் மனிதர் தம்மையே , தம் மனதினையே அறிந்து கொளவதற்குப் பெரிதும் நேரம் கிடைக்கும். சகல பிரச்சினைகளிற்கும் காரணங்களான ஆசை, கோபம், பொறாமை முதலானவற்றினை நிரந்தரமாக உதறித்தள்ளிடக் கூடியதொரு நிலை உதயமாகும். இன்றைய மனிதரிற்கு இவ்வுண்மை தெரிந்தபோதும், அவர் நிரந்தரமாகவே , தூயவராக வாழுதற்கு அவர் சார்ந்திருக்கும் புறச்சூழல் விடுவதில்லை. ஆக, இயற்கைகளுடனான மோதல்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்ட மனிதரின் , அவரே உருவாக்கிய புறச்சூழலுடனான மோதல்கள் முற்றுபெற்றதும், அவருள்ளமைந்துள்ள அகவுலகுடனான மோதல்கள் ஆரம்பமாகும். அதன் வெற்றியிலேயே ‘பிரபஞ்சத்தின் புதிர்’ தங்கியுள்ளது. காலவோட்டம் நிச்சயமாகவே இதனைச சாதித்து வைத்திடும்.
13.1.1983
23.2.1983இல் எழுதிய இன்னுமொரு கவிதை குறிப்பேட்டிலிருந்து ஒரு பதிவுக்காக இங்கே.
விளக்கு!
– வ.ந.கிரிதரன் –
காலக்கடலின் குமிழியென அர்த்தமற்ற
குறுவாழ்வில்
அவலங்களே அனர்த்தங்களாயவிந்திட
அர்த்தமற்றதொரு வாழ்வு.
… ‘பொய்மையின் நிழல்படர்ந்து’
புழுங்குமுலகிலெல்லாமே நாசம்;
படுநாசம்; அழிவு; அழிவுதான்.
காரணமற்ற வாழ்வின் காரணம்தான்
யாதோ?
வெளியே, வெற்றிடமே, விரிகதிரே!
விடை பகின்றிடாயோ?
விடை பகின்றிடாயோ?
சலிப்பின் அலைக்கழிப்பில்
நலிந்திட்ட வுலகில்
வழிந்திடும் சோகங்களென்றுமே
தெளிந்திடாவோ?
அண்டச் சுடர்களே! அண்ரமீடாக்களே!
புதிரை அவிழ்ப்பீரோ? அன்றி,
முதிர வழி சமைப்பீரோ? கூறுவீர்.
நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்
நானென்றால் சிரிக்காதீர்.
திக்குத் திசையோ புரியவில்லை.
திணறலினில் மூச்சு முட்டித்
தடுமாறினேனே.
என்றாலுமொரு விளக்கமெங்கோ
ஒளிந்துதானுள்ளது.
விளக்கிடுவேன்; விளக்கிடுவேன்; அவ்
விளக்கின் ஒளிதனிலே
வழிதனைக் கண்டிடுவேன்; அவ்
வழிதனைக் கண்டிடுவேன்.
23.2.1983
குறிப்பேட்டுப் பதிவுகள் – களத்தில் குதித்திடு!
– வ.ந.கிரிதரன் –
– 14-11-1982.
என்று உன்னால் உனது சொந்த மண்ணிலேயே
தலை நிமிர்ந்து நிற்க முடியாமல் ஆகின்றதோ,
என்று உன்னால் சுதந்திரமாக உன் கருத்துகளை
எடுத்துரைக்க முடியாமற் போகின்றதோ,
உனது சோதரர்களின் உயிர்களுக்கு
உத்தரவாதம் என்று இல்லாதொழிந்து போகின்றதோ,
என்று என் தோழனே! பெண்மை கொத்தி
எகிறிடப் படுகின்றதோ,
என்று உனது சுயகெளரவம் சிதைக்கப்பட்டு
எரிக்கப்பட்டு கசக்கப்படுகிறதோ,
என்று உனது தாயின் கண்ணீரிற்கு
உன்னால் பதிலுரை பகரமுடியவில்லையோ,
என்று சுதந்திரமாக மூச்சு மூச்சுவிடுவதுகூட
மறுக்கப்பட்டு விடுகின்றதோ,
என்று உன் பிஞ்சுகளின் கொஞ்சல்களை இரசிக்கமுடியாது
உன்னால் ஆகிவிடுகின்றதோ,
என்று உன்னைச் சுற்றிலும் துப்பாக்கிகளின் புகையால்
அவலங்கள் பரவிடத் தொடங்கிடுதோ,
என்று உன்னைச் சுற்றிலும் அச்சம், அவலம், சோகம், சாவு
ஆகியன வலை பின்னத் தொடங்குகின்றனவோ,
என்று உன்னைச் சுற்றிலும் போராட்டமும், குமுறலும், விரக்தியுமே
வாழ்வென்றாகி விடுகின்றனவோ,
என்று உன்னைச் சுற்றிலும் , ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும்,
ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு கணத்தின்
ஒவ்வொரு துளியுமே..
வாழ்வே ஒரு கேள்வியாக, உயிர்ப் போர்முனையாக,
உருவாகி விடுகின்றதோ, அன்று , ஆமாம் அன்று,
நீ உனது போர்ப்பிரகடனத்தைத்
தொடங்கிவிடு!
சுதந்திரக் காற்றினைத் தரிசிப்பதற்கான
தர்மத்திற்கான உன் போர் முரசத்தினைக் கொட்டிடு.
கோழைத்தனத்தினக் குதறியெறிந்துவிட்டுக்
களத்தே குதித்திடு.
அன்று , உன்னை, இப்பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு துளியும,
ஒவ்வொரு எழிற்பட்சியும்,
மெல்லிய பூந்தென்றலும், நிலமடந்தையும்,
எழில் வானும், நட்சத்திரங்களும், கோள்களும்,
இளங்காலைப் பனியினொவ்வொரு துளியும்,
இளம்பரிதியினொவ்வொரு கதிரும்,
விருட்சத்தினொவ்வோரிலையும்,
வாழ்த்தி வழியனுப்பிடும். ஆம்!
வாழ்த்தி வழியனுப்பிடும். ஆம்!
வாழ்த்தி வழியனுப்பிடும்!
– 14-11-1982.
‘சமர்ப்பணம்.’ என்னும் பெயரில் 9-06-1983.இல் எழுதப்பட்ட இன்னுமொரு கவிதையிது. இதுவும் எனது குறிப்பேட்டிலிருந்து.
சமர்ப்பணம்…
– வ.ந.கிரிதரன் –
மீண்டும் இலங்கை பற்றியெரிகின்றது.
தூய மிருதுவான நெஞ்சங்களைச்
சிதைப்பதில்,
மீண்டும் நொந்த உள்ளங்களின்
… மரண ஓலங்கள்.. பிலாக்கணங்கள்…
சோகநிழல்கள்…
சிதறிய பாதைகளில்
வாழ்வேயொரு கேள்விக்குறியாக….
அவமானம், அச்சம், வேதனை, சோகம்
அடியே! புரிகிறதாடீ! உன்னவர்
இங்கு புரியும் கூத்து.
என்ன செய்தாரிவர்? எடியே!
ஏன் மெளனித்து விட்டாய்? உன்னைத்தான்.
உன்னைத்தானடி!
மீண்டும், மீண்டும்.. முடிந்த கதை
தொடர்ந்த கதையாய்…
பென்சீன் வளையமாய்… அடியே!
இங்கு நடக்குமிந்தக் கூத்து..
இதற்கொரு முடிவு?
அன்பே! எனக்குப் பாலஸ்த்தீனத்துக்
கவிஞனொருவனின்
சொற்கள்தான் ஞாபகத்தில் வருகின்றன:
“கோழிக்குஞ்சுக்குக் கோதும்,
முயலிற்கு வளையும் உண்டு.
ஆயின் பாலஸ்த்தீனியனுக்கோ…?”
அன்பே! புரிகின்றதா?
‘எலி வளையானாலும் தனிவளை’.
ஆமாம். அது இல்லாததுதான்.
9-06-1983.
‘சமர்ப்பணமொன்று..’ 30-05-1983இல் எழுதிய கவிதை. எனது குறிப்பேட்டிலிருந்து இங்கே ஒரு பதிவுக்காக,.
சமர்ப்பணமொன்று……..
– வ.ந.கிரிதரன் –
இந்தச் சொல் மாலையை நானுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.
ஏனெனில் என்னால் தற்சமயம் மட்டுமல்ல
இப்பிறவியிலேயே செய்யக் கூடியது இது ஒன்றுதான்.
சிலவற்றைச் சோல்லாமலிருக்க முடிவதில்லை.
… இதுவும் அப்படிப்பட்டதொன்றுதான். இதயத்தின்
கோடியினில் கொலுவாக்கிடவேண்டிய நினைவு;.
உறவு.
உந்தன் சின்னஞ்சிறிய ஆனால் எளிய, இனிமையான
அதிகாலையையொத்த உலகில் பாடல்களை, வசந்தங்களை,
அருவிகளை, நீரூற்றுகளை,
நீ வார்த்தைகளால் சொல்லிவிடவேண்டிய தேவையென்ற
ஒன்று இங்கிருந்ததில்லை.
உனது அந்தக் கணகள் எல்லாவற்றையுமே எனக்குக்
கூறிவிட்டன.
வாழ்வின் அர்த்தங்களைப் புரியாததொரு பொழுதினில்
நீயாகவே இந்தச் சிறைக்குள் வந்து சிக்குண்டது
உனக்கே தெரியும்.
அர்த்தங்களைப் புரிந்த நிலையில்.. இன்றோ
விடுபட முடியாததொரு நிலை. அது
உனக்கும் புரியும். எனக்கும் தெரிகின்றது.
நான் வேண்டக் கூடியதெல்லாம் இது ஒன்றுதான்:
உன் இரக்கமிக்க நெஞ்சினில் அமைதி நிறையட்டும்.
வீதியினில் நீ எழிலெனப் படர்கையில்
கூடவே ஒரு சோகமும் படர்வதை
என்னால் அறிய முடிகின்றது.
எனக்கே புரியாமல், திடீரென உன்னாலெங்ஙனம்
நுழைந்திட முடிந்தது? நெஞ்சினில்தான்.
கள்ளமற்ற, வெள்ளைச் சிரிப்பில்
பரவிக் கிடக்கும் அந்த இனிமை…
அதன்பின்னே தெரியுமந்த அழுத்தம்…
அபூர்வமாக மலரும் சில மலர்களில்
நீயும் ஒன்றென்பதை அவையே உணர்த்தும்.
அன்று ஒயிலாகச் செல்கையில் , ஓரக்கண்ணால்
சிறைப்பிடித்துச் சென்றாயே. அந்தப் பார்வையை.
நான் உனக்குச் சொல்வதெல்லாம்,
சொல்ல முடிந்ததெல்லாம் இதனைத்தான்.
அந்தப் பார்வையைத் தப்பியோடிட ஒருபோதுமே
விட்டிடாதே. உந்தன் இதயத்தில்
ஆழ்ந்த அறையொன்றின் ஆழத்தே கொண்டுபோய்ச்
சிறை வைத்திடு.
ஏனெனில் சோகமுகிலகள் படர்கையில்,
பாதையில் இருட்டு செறிகையில்,
வாழ்வே ஒரு கேள்விக் குறியாகி,
இதயம் இரணமாகிச் செல்கையில்
அன்பே!
உன்னிதயத்தின் உற்றதோழனாக, தோழியாக
இருக்கப் போவது அது ஒன்றேதான்.
அதனால்தான் சொல்கிறேன். உன்னிதயத்தின்
ஆழத்தே அந்தப் பார்வைத் துண்டத்தைச்
சிறைப்பிடித்து வைத்திடு.
பாலைகளின் பசுமையென,
கோடைகளில் வசந்தமென,
அன்பே! உன் வாழ்வில், நெஞ்சிற்கு
இதமான ஸ்பரிசத்தைத் தந்திடப்
போவது அது ஒன்றுதான்.
உனக்காக என்னால்
வானத்தை வில்லாக வளைக்கவோ அல்ல்து
பூமியைப் பந்தாகவோ மாற்றமுடியாது.
ஆனால் அந்த உனது ஏங்குமிதயத்தின்
துடிப்பலைகளை இனங்கண்டிட முடியும்.
அவற்றை நெஞ்சினொரு கோடியில் வைத்து
அபிஷேகம் செயதிட முடியும்.
புரிகிறதாடீ! புரிந்தால் கவலையை விடு.
உன் பாதையில் இன்பப் பூக்கள்
பூத்துச் சொரிவதாக.
30-05-1983
ருஷ்யக் கவிஞர் புஷ்கினின் காதல் கவிதையொன்று.
– தமிழில்: வ.ந.கிரிதரன் –
ருஷ்யக் கவிஞரான புஷ்கினின் கவிதையொன்றின் மொழிபெயர்ப்பிது. எனது குறிப்பேட்டிலிருந்து. இக்கவிதையின் தலைப்பினை எழுத மறந்து விட்டேன். தேடித்தான் பார்க்க வேண்டும். மூலக் கவிதையின் ஆங்கில வடிவம் என்னிடம் இல்லாததால் இந்தக் கவிதையின் மொழிபெயர்ப்பு பற்றி எதுவும் கூறுவதற்கில்லை. மூலம் கிடைத்தால் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இம்மொழிபெயர்ப்பு எழுதப்பட்ட நாள்: 29 ஜூன் 1983. இருந்தாலும் ஒரு பதிவுக்காக இங்கே.
– இடையிலொரு மொழிபெயர்ப்புக் காதற் கவிதையொன்று. புஷ்கினின்
கவிதையினை இயன்றவரை மொழிபெயர்த்திருக்கிறேன். –
நான் உன்னைக் காதலித்தேன். அழிவதற்கு மறுக்கும்
அந்தக் காதல்… இன்னமும் இருக்கக் கூடும்.
யாரறிவார்? இவன் நெஞ்சினில் எரிந்து கொண்டிருக்கக்
கூடும்.
பிரார்த்தி! வருத்தமடையாதே!
என்னை நம்பு! என்னுடைய தெரிவின் மூலம்
நான் ஒரு போதுமே உன்னை
பிரச்சினையிலாழ்த்தியதில்லை.
இன்னமும் அந்த மிருதுவான அன்பு
மிகுந்த ஆர்வத்துடன்
இங்கே தகதகத்துக் கொண்டுதானுள்ளது.
என்னுடைய காதல் சுயநயலமானது. ஆயினும்
கட்டுப்படுத்த முடியாதது.
சொர்க்கம் உனக்கு இன்னுமொரு காதலைத் தரட்டும்.
– 29 யூன் 1983
மனப்பெண்ணே!
– வ.ந.கிரிதரன் –
அன்று எழுதிய கவிதைகளிலொன்று. குறிப்பேட்டிலிருந்து/
ஜூன் 6, 1983
என்ன ஆயிற்றாம்? உன்னைத்தான் கேட்கின்றேனடீ!
என்னவாயிற்றாம்? அட உன்னைத்தானென் மனப்பெண்ணே!
… உனக்கென்னவாயிற்றாம்? உரைப்பாயெனிலது நன்றன்றோ!
தாவித் தாவிக் குதியாட்டம் போட்டிருந்தவுன்னாலெங்ஙனம்
வாடிக் கிடந்திட முடிந்ததோ?
வனிதையே! விளம்புவையே!
போராட்டங்களிற்குள் புத்தெழுச்சி பெற்றனையே! பின்னேன்
பதுங்கி மாய்ந்து கிடக்கின்றனை.
பாய்ந்தெழு! பாய்ந்தெழு! பாய்ந்தெழு! அட,
பாய்ந்தெழத்தான் மாட்டாயோ பைங்கிளியே!
தோல்விகள் செறிந்திட்ட போதெல்லாம்
தோள்கொட்டி எழுந்து எழுந்து நின்றனையே!
சிரித்தனையே! ஆயின், வெட்டுண்ட விருட்சமென
வீழ்ந்து கிடப்பதுவும்தான் முறையாமோ?
விருட்டெனப் பொங்கியெழத்தான் முடியாதோ?
அட, உன்னைத்தானென் ஆருயிர் மனமே!
உன்னைத்தான்.
வாழுமிச் சிறுவாழ்விலுமுனைத்
தாழ்த்துவதுதானெதுவுமுண்டோ?
உண்டோ? உண்டோ? சொல் மனமே!
பிரபஞ்சச் சுழல்களிற்குள்
உரமற்று உளைவதாலென்ன பயனோ?
உளைவதாலென்ன பயனோ? பயனோ? பயனோ
************************