– அண்மையில் மறைந்த தனது மனைவி வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா நினைவாகப் பேராசிரியர் கோபன் மகாதேவா எழுதிய கவிதை. –
நித்திரையே வாராத நீள் இரவின் நதியினில் நீந்துகிறேன்.
பத்தரை மாற்றவள் எனப் பல் மக்கள் புகழ்ந்து சொன்ன
பத்தினியாள் பிரிந்துசென்று வாரம் ஏழு ஆகுது இன்று.
எத்தனையோ எண்ணங்கள் எனது நுனி மனக் குகையில்
நத்தைகள்போல் நெளிந்து நித்திரையை அரித்து உண்டு
புத்தியையும் புண் ஆக்கிச் செல்லும் வேகமும் அடக்கிச்
சத்தியமும் சபலமும் சாக்கடையின் சேறையும் கலந்து
மெத்தையிலே நீரூற்றாய் மேனி தனைக் குளிப்பாட்டி
எத்தையுமே நிரல் போட்டு எத்தனிக்கும் அதை நிறுத்தி
முத்துமுத்தாய் முன்னாளில் கவி புனைந்த என் மனசைக்
குத்திக் குடைவதனால் குழப்பத்துக்கு உருக்கொடுத்து
கத்திக் கதற வைத்துப் பல கலவரங்கள் உண்டு செய்து
சத்தம் இல்லா இரவினிலே சலசலப்பால் நிறை குலைத்து
செத்து ஒழிந்த நாட்களுக்கு நான் செல்லாமல் முன் போக
உத்தி ஒன்றும் தோன்றாது உருளுகிறேன் தீச்சுடரில்
கோபன் மகாதேவா
20.07.2013
professorkopanmahadeva@yahoo.co.uk