எகிப்தில் சில நாட்கள் 7

எகிப்தில் சில நாட்கள் 6ஸ்பிங்ஸ் பக்கத்தில் கவ்றியின் பிரமிட் ரோமாபுரி ஒரே நாளில் கட்டப்படவில்லை என சொல்வார்கள்.அதே போல் எகிப்திய அரசர்கள் உடனடியாகவே கிசா என்னும் உலக அதிசயமான பிரமிட்டை கட்டிவிடவில்லை. இந்த பிரமிட் அமைப்பு முறை ஒரு கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியுடனேயே வருகிறது. பழைய அரசர்கள்(Old Kingdom) காலத்தில்தான் இந்த பிரமிட்டுகள் கட்டப்பட்டன. இந்தக்கால கட்டத்தில் பல அரச வம்சங்கள் தோன்றி கடைசியில் பெப்பி 2 என்ற மன்னன் 94 வருடங்கள் அரசாண்டபின் பழைய அரசர் காலம் முடிவுக்கு வருகிறது.இன்னமும் அவ்வளவு நீண்ட காலம் அரசர் எவரும் உலகத்தில் அரசாளவில்லை என்பதால் அந்த ரெக்கோட் முறியடிக்கப்படவில்லை. எகிப்திய வரலாற்றில் சுதேச மன்னர்கள் ஆண்டகாலத்தை பழைய , மத்திய, பிற்காலம் என மூன்றாக வகுத்திருக்கிறார்கள் எகிப்திய வரலாற்று ஆசிரியர்கள். அத்துடன் இடைப்பட்ட காலங்களில் எகிப்து நலிவடைந்த வேளையில் வேற்று நாட்டவர்கள் ஆண்டிருப்பது பற்றி ய குறிப்புகள் சரித்திரத்தில் இருந்து மறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். சாதாரண மனிதர்கள் போல் வெற்றிகளை கொண்டாடுவதும் தோல்விகளை மறைக்க நினைப்பதுமான போக்கு எகிப்திய அரசவம்சத்தில் இருந்ததால் நலிவடைந்த காலங்களை அறிவதற்கு இலக்கியங்களைத் தேடி அறிய வேண்டியிருப்பதாக சொல்கிறார்கள்.

ஆரம்பத்தில் முதலாவதாக உருவாகிய அரசவம்ச காலத்தில் (Dynasty1) (3035-2890 BC) சதுரமான சுடப்படாத மண்கற்களினால் கட்டிடங்களைக் கட்டி அங்கு மம்மிகளை பாதுகாப்பாக வைத்தார்கள். இவை எகிப்தின் தெற்கே அபிடொஸ் பகுதியில் (Abydoss) அமைந்திருக்கிறது. இந்த சமாதிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த செல்வங்களுக்காக உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டன.

எகிப்தின் மத்திய பகுதியில் நைல் நதிக்கரையில் அமைந்துள்ள அபிடோஸ் என்ற இடம் இந்துக்களுக்கு காசி போன்று முக்கியத்துவமானது. எகிப்தியர்களின் கர்ண பரம்பரை கதைகளில் வரும் தெய்வம் மம்மியாக புதைக்கப்பட்ட புனிதமான இடம் வரலாற்றில் பதிவு பெறுகிறது.
இங்கிருந்துதான் மம்மிகள் பிரமிட்டுகள் என்பவற்றின் சிந்தனை விதை விருட்சமாகத் தொடங்குகிறது. நாங்கள் நிமிர்ந்து அண்ணாந்தபடி பார்க்கும் பிரமிட்டுகள் மேலும் தொடர்ச்சியான பிரயாணத்தில் பார்க்கவிருக்கும் பிற்கால அரசர்களின் மம்மிகளை வைத்திருந்த ‘அரசர்களின் சமவெளி’(Valley of the kings)) என்பவற்றை இந்த கர்ண பரம்பரை கதையை தெரிந்தால் மட்டும்தான் மம்மியாக்கத்தின் வரலாறை புரிந்து கொள்ளமுடியும்.

நான் எகிப்தின் தென்பகுதியில் பார்த்த கோயில்கள், சமாதிகளில் உள்ள ஓவியங்கள், சுவர்களில் செதுக்கப்பட்ட படிமங்கள் என்பன அவற்றை வலியுறுத்தின. அக்காலத்தின் நம்பிக்கைகள், வழிபாடுகள் என்பன அவர்கள் இடையே உலாவி வந்த கர்ண பரம்பரைக் கதைகளைச் சுற்றி வந்தபடி இருந்தன.

300 வருடங்கள் கிரேக்கர்கள் எகிப்தை ஆண்ட காலகட்டத்தில் (மகா அலெக்சாண்டரில் இருந்து யூலியஸ் சீசர் வரையுள்ள காலம் ) அவர்களது கதைகளில் உலாவி வந்த பல எகிப்திய கடவுள்களின் ,எகிப்திய பெயர்கள் சிதைந்து கிரேக்க பெயர்களாக மாறிவிட்டன. ஒவ்வொரு தொன்மையான சமூகமும், எப்படி உலகம், உயிர்கள் , பின்பு மனிதர்கள் உருவாகியது பற்றி விளக்க முயன்றன. அவை பிற்காலத்தில் வாய் வழிக் கதைகளாக பரம்பரை பரம்பரையாக எடுத்துச் செல்லப்படுகிறது. பிற்காலத்தில் பாறைகள், களிமண்கட்டிகள், ஓவியங்கள் என பதியப்பட்டு அதன் பின் பப்பரசில், ஓலைச்சுவடுகளில் ஓவியங்களாக எழுதப்படுகிறது. இதற்கு அக்கால எகிப்தியரில் இருந்து , இக்கால அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் வரை விதி விலக்கல்ல. அங்கோர் வாட் எனும் கம்போடிய கோயிலில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த கதை கல்லில் அழகாக செதுக்கப்பட்டிருந்தது. கர்ண பரம்பரை கதைகளில் மிகவும் முக்கியமான ஒன்றை மட்டும் இப்பொழுது பார்ப்போம்

நமக்கு பரிச்சயமானது வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட உலகத்தின் உருவாக்கம். மிகவும் இலகுவாகவும் ,சிக்கலற்றதுமானது. விஞ்ஞானத்தில் கூறப்படும் விளக்கம் போல் அல்லாமல் பாமரர்களாலும் , ஞாயிற்றுக்கிழமை பாடசாலைக்கு செல்லும் சிறுவர் சிறுமியர்களுக்கு புரிந்து கொள்ளக் கூடியது. அதன்படி ஆரம்பத்தில் உருவாகிய உலகம்,வானம் பூமி என வரையறையற்ற தெளிவற்ற அல்லது உருவமற்றதாக உருவாகிறது அதன்பின் இரவு,பகல் மற்றும் கடல், நிலம் எனப் பிரிக்கப்படுகிறது. மூன்றாவது நாளில் தாவரங்கள். நாலாவது நாளில் சூரியன், சந்திரன் என இவ்வுலகம் சிருஸ்டிக்கப்பட்டது.

எகிப்தின் கர்ண பரம்பரை கதையில் இப்படியான தெளிவற்ற ஒன்றில் இருந்துதான் உலகம் ஆரம்பமாகிறது. ஒருவிதத்தில் பார்த்தால் நமது இந்து சமயத்தில் தேவர்களும் அசுரர்களும் கடைந்த பாற்கடலை ஒத்தது போல் தெரிகிறது. பிறைமோடியல் வாட்டர் (Primordial Water) என்ற சமுத்திரத்தில் இருந்து எட்டு கடவுள்கள் தோன்றுகிறார்கள். இவர்கள் ஆண் , பெண் என இணையாக இருப்பார்கள் இந்த சமுத்திரத்தில் இருந்து நமது மேருமலையை ஒத்த மலை ஒன்று உருவாகி நிற்கிறது இந்த மலையில் அட்டும் (ATUM) என்ற கடவுள் தன்னை உருவாக்கி பின்பு ஒன்பது இயற்கை கடவுள்களை உருவாக்குகிறார். காற்று,ஈரலிப்பு ,பூமி ,வானம் என நமது வர்ணபகவான், வாயுபகவான் என்பதுபோல் உருவாக்கப்படுகிறது. இந்த எகிப்திய வரலாற்று விடயத்தை நமக்கு புரிந்து கொள்ள தற்பொழுது வானம், புவி ஆகிய இரு கடவுள்களே அவசியம் எனக் கருதிக்கொண்டு மேலே செல்வோம்

நட்(Nut) என்ற வானமும் (Geb) என்ற பூமியும் நான்கு கடவுளைத் தருகின்றன இந்த நான்கு கடவுளரும் பண்டைய எகிப்தியர்களின் வாழ்வு ,கலை ,இலக்கியம் ,வரலாறு என்பவற்றில் முக்கியத்துவம் பெற்றிருப்பது மட்டுமல்ல அவர்கள் விட்டுச் சென்ற பிரமிட், கோயில்கள் முதலானவற்றில் தொடர்கிறார்கள். இந்த நான்கு கடவுள்களை கடந்து எகிப்திய வரலாற்றை பார்க்க முடியாது.

.நட்டுக்கும் ஹெப்பிற்கும் பிறந்த நான்கு கடவுள்கள் முறையே ஒசிரஸ்(Osiris), ஐசிஸ்(Isis), நெப்தி(Nephthys) , சேத்(Seth) இவர்கள் உடன்பிறந்தவர்கள். அதேபோல் நெப்தியும் சேத்தும் கணவனும் மனைவி. ஐசிஸ் – ஒசிரஸ் கணவனும் மனைவி.

இந்த நான்கு தெய்வங்களும் எகிப்திற்கு வருகிறார்கள் ஒசிரஸ் எகிப்தின் அரசனாக ஆட்சி செய்வதுடன் விவசாயத்தின் தெய்வம் என்பதால் எகிப்தில் விவசாயம் தழைக்கிறது. சில காலத்தில் ஐசிசை அரசாள சொல்லிவிட்டு ஓசிரஸ் உலகத்தின் மற்றய நாடுகளில் வாழும் மனிதர்களுக்கு விவசாயத்தை கற்பிக்க சென்று விடுகிறான். மீண்டும் எகிப்திற்கு வந்த போது ஐசிசால் எகிப்து திறம்பட அரசாளப்படுகிறது என்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அரசுரிமையில் நாட்டம் கொண்ட சேத் கபடமாக ஒசிரசை விருந்துக்கு அழைத்து உபசரிக்கிறான். அந்த விருந்தின் கேளிக்கைகள் நடந்து முடிந்த பின்பாக தன்னால் உருவாக்கப்பட்ட அழகான பிரேதப் பெட்டியை காண்பித்து அதில் ஒசிரஸ்ஸை படுக்க வைத்து,அந்த பிரேதப்பெட்டியை மூடி நைல் நதியில் எறிந்து விடுகிறான். அப்பொழுது ஒசிரஸ்; இறந்து விடுகிறான். கணவனின் உடலைத்தேடிச் சென்ற ஐசிஸ், நைல் நதியில் எறியப்பட்ட உடலை மீண்டும் அக்காலத்தில பைபிலோஸ் என சொல்லப்படும் இக்கால லெபனானில் மீண்டும் கண்டெடுக்கிறாள். ஆனால் மீண்டும் அந்த உடலை செத் பதின்மூன்று துண்டுகளாக வெட்டி நைல்நதியில் எறிந்தபோது ஐசிஸம் நெப்தியும் மீன் சாப்பிட்ட ஆண்குறியை தவிர்த்து இதர உடல்பாகங்களை எடுத்து மம்மியாக்கி அதனை எகிப்தில் புதைக்கக் கொண்டு வரும்போது ஒசிரஸ் உயிர்த்தெழுகிறார்.

இதன் பின்னர், ஒசிரஸ் இறந்தவர்களின் தெய்வமாகிறார். ஒரு விதத்தில் இந்து சமய யமனைப்போல் இறந்தவர்களின் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப தீர்ப்பு வழங்கும் இறந்தவர்களின் நீதிபதியாகவும் விவசாயத்திற்கு உதவும் தெய்வமாகவும் எகிப்தியர்கள் ஓசிரஸ்ஸை பார்ப்பதாக இந்தக் கதை கூறுகிறது.

முதலாவது மம்மியாக்கமும் ஒசிரஸ்ல் தொடங்குகிறது.

 ஐசிஸ், ஹோரஸ் என்ற குழந்தையை பெறுகிறாள். அந்தக் குழந்தை பெரியவனாகியதும் சேத்தை போரில் தோற்கடித்தாலும் அந்தப் போரில் ஹோரஸ் ஒரு கண்ணை இழந்து, பின்பு தெய்வ அருளால் மீண்டும் பார்வை பெறுவதாக கூறப்படுகிறது. உண்மையில் இந்தப் போர் அரசுரிமைக்கான போராகிறது. அரசுக்கட்டில் பிற்காலத்தில் சகோதரனுக்கா இல்லை, அரசனின் மகனுக்கா என்பதே வாதம். நகரங்களை ஹோரசும் பாலைவனத்தை சேத்தும் ஆட்சி செய்ததாக இந்த போராட்ட வரலாறு முடிந்தது என்கிறர்கள். இதனால்த்தான் எகிப்திய அரசர்கள் அனைவரும் கழுகுத் தலையுடைய ஹோரஸ் உடன் தொடர்புள்ளவர்களாக காணப்படுவார்கள்.

எகிப்திய வரலாற்றில் இந்தக் கதை முக்கிய விடயமாகிறது. எகிப்தியர்கள் இறந்தால் எகிப்தில் புதைக்கப்படவேண்டும். அதனால்தான் எகிப்தியர்கள் பல நாடுகளை படை எடுத்து கைப்பற்றினாலும் கைப்பற்றிய நாடுகளில் படைவீரர்களை வைத்திருப்பதில்லை

ஒசிரஸ் இறந்த விடயம்  ஒரு மிகவும் முக்கியமான தகவலைக் கூறுகிறது. மத்திய தரைக்கடல் நாடுகளான எகிப்து, பாபிலோனியவில் வணங்கப்ட்ட கடவுள்கள் இந்த உலகத்தில் இருப்பவர்கள். மேலும் இவர்களுக்கு இறப்பு உண்டு. ஆனால் எமது இந்துக் கடவுள்கள் மற்றும் கிரேக்க, ரோமன் நாடுகளின் கடவுள்கள் இறப்பற்றவர்களாக வேறுபடுகிறார்கள்.

நாங்கள் அடுத்ததாக பார்த்த சாகாரா ((Saqqara)) பிரமிட் சோசரால் (Zoser-Dynasty 3) மெம்பிசில் கட்டப்பட்டது. இந்த பிரமிட், கற்களால் சதுர வடிவத்தில் ஐந்து படிகளாக கட்டப்பட்டது. இதை ஸ்ரெப் பிரமிட் என்பார்கள். இந்த பிரமிட்டை வடிவமைத்த கட்டிடக் கலைஞர் இறந்தபோது இந்த பிரமிட்டின் அருகே புதைக்க அரசன் சோசரால் அனுமதிக்கப்பட்டார். இந்த பிரமிட்டுக்கு தனித்துவமான விடயங்கள் உண்டு. இக்காலத்தில் (2686-2613 கிமு) இவ்வளவு பெரிதாக மனிதர்களினால் கல்லால் உருவாக்கப்பட்ட வடிவமாகவும் இருந்தது. அத்துடன் எகிப்திய அரசர்கள் முப்பது வருடம் அரசாண்ட பின்னர், தாங்கள் தொடர்ந்து அரசாள்வதற்கும், போர் புரிவதற்கும் தகுதியானவர்கள் என்பதை நிரூபிக்க ஒரு வீர விளையாட்டு நிகழ்ச்சியை நடத்துவார்கள். அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கான மைதானமும் இந்த பிரமிட் உள்ளே அமைக்கப்பட்டிருந்ததாம். அத்துடன் கோயில் ஒன்றும் உள்ளே கட்டப்பட்டிருந்தது.

இதற்கு பின்பாக வந்த அரசர்களில் முக்கியமானவர் சினபெரு(Sneferu ) (2613-2589) இவரால் கட்டப்பட்டது வளைந்த பிரமிட் (Bent pyramid). பிரமிட் கட்டியபின் அந்த கட்டிய தரை இறுக்கமாக இல்லாததால் பிரமிட்டின் ஒரு பகுதி தரையில் இறங்கியது. இதன் பின்பும் மனம் தளராமல் மீண்டும் இரண்டு பிரமிட்டை கட்டியதாகவும் அதில் ஒன்றே ரெட் பிரமிட் எனச் சொல்லப்படுகிறது. எகிப்திய வரலாற்றில் சினபெருக்கு முக்கிய இடமுண்டு. இரத்தினங்கள் வகையைச் சேர்ந்த விலைமதிப்பான கற்களை(turquoise) அகழும் சுரங்கங்களை சினாய் பாலைவனப்பகுதியில் உருவாக்கியதுடன் லெபனான்,சிரியா போன்ற நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்ட முதல் எகிப்திய அரசன். இவரது காலத்தில் கலைகள், எழுத்துகள் உருவாகியதாக சொல்லப்படுகிறது. அரச குடும்பத்தின் உருவங்கள் கற்களிலும், இரத்தினங்களிலும் இவரது காலத்தில் செதுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

சினபெருவைப் பற்றிய அழகான கதை ஒன்று உண்டு

சினபெரு ஒரு முறை நைல் நதியில் பயணித்தபொழுது, இருபது இளம் கன்னிகள் மீன்வலையை மட்டும் தங்கள் உடையாக உடுத்தபடி அந்த உல்லாசப்படகை வலித்தார்கள். படகில் செல்லும்போது படகின் துடுப்பு வலிக்கும் பணிப்பெண் ஒருத்தி திடீரென முகம்வாடி அமைதியாகி விட்டாள். இதைக் கவனித்த சினபெரு “ஏன் பெண்ணெ முகம் வாடிவிட்டாய்“ என கேட்டதாகவும் அந்தப்பெண், தனது கழுத்தில் இருந்த சங்கிலில் தொங்கிய மீன் வடிவமான பதக்கம் தலை மயிரில் சிக்கி நைல் நதியில் விழுந்தாக கூறியபோது, சினபெரு தனது மந்திரவாதிகளை அழைத்து நைல் நதியை இரண்டாக பிரிய வைத்ததாகவும், அதன்பின்பாக அந்த பதக்கத்தை எடுத்து பெண்ணிடம் கொடுத்தாகவும் கூறும் கதை பப்பரசில் எழுதப்பட்டு பெர்லின் நூதனசாலையில் உள்ளது.

இந்தக்கதை வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் செங்கடல் பிரிந்து இஸ்ரேலியர்களுக்கு வழிவிட்டதாக சொல்லப்படும் கதை நடந்த காலத்திற்கு கிட்டத்தட்ட ஆயிரம் வருடம் முந்தியது

கடைசியாக நாம் சென்று பார்த்தது ஸ்பிங்ஸ் என்ற புகழ்பெற்ற சிலை. ஒரேகல்லில் செதுக்கப்பட்டுள்ளது. செபெரன் ((Chephren)) என்ற மன்னரால் அவனது முகத்தை உருவகித்து செதுக்கப்பட்டிருக்கலாம் என ஒரு சிலரும் குபுவின் மகனாகிய கவ்றி (khafre) அரசனின் காலத்தில் செதுக்கப்பட்டிருக்கலாம் என மற்றவர்களாலும் நம்பப்படுகிறது. அதற்குக் காரணம் ஸ்பிங்ஸ் பக்கத்தில் கவ்றியின் பிரமிட் ஒரே நேர்கோட்டில் உள்ளது. ஸ்பிங்ஸ் 2500 கிமு வில் செதுக்கப்படிருக்கலாம் என வரையறுத்துள்ளார்கள். சிங்கத்தின் உடலையும் மனிதனது முகத்தையும் கொண்ட கற்பனையான உருவம். இது எகிப்திய அரசர்களின் வீரத்திற்கு அடையாளமான படைப்பு. மனிதன் முகத்தில் மிருகங்களது உடல் கொண்ட இந்த அடையாளங்கள் மத்திய தரைக்கடலை ஒட்டிய நாகரீகங்களான மொசப்பத்தேமிய துருக்கி கிரேக்க பகுதிகளில் மட்டுமல்ல தென் ஆசியா தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படுகிறது. இந்து மதத்தில் நரசிம்ம அவதாரம் எனப்படும் வடிவத்திற்கு ஒப்பானது.

ஐரோப்பாவில் மறுமலர்ச்சிகாலத்தின் பின்னால் இந்த ஸ்பிங்ஸ் வடிவம் பல வடிவங்களில் உருமாறியது. ஸ்பிங்ஸ் மூக்கு உடைந்தும் தாடியற்றும் உள்ளது. எகிப்த்திய அரசர்கள் செயற்கையான தாடி வைப்பது கிரீடம் சூடுவது போன்றது. தற்பொழுது அந்தத் தாடி பிரித்தானிய மியுசியத்தில் உள்ளது. அதேபோல் ஸ்பின்சின் மூக்கை யார் உடைத்தர்கள் என்பது ஒரு சூடான விவாதத்திற்கு உட்பட்டது.ஆரம்பத்தில் நெப்போலியன் என்று நினைத்தாலும் தற்பொழுது துருக்கியர்கள் காலத்தில் மூக்குடைந்தது என முடிவாகியுள்ளது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த காலங்களில் சிறிய பிரமிட்டுகள் கட்டப்பட்டன. எகிப்தின் சரித்திரத்தில் பின்னடைவான காலத்தில் பல அரசர்கள் அடிக்கடி அரச கட்டில் ஏறும்போதும் இந்த பிரமிட் கட்டும் வேலை நடைபெறவில்லை. இதை விட பிற்காலத்தில் எகிப்திய மன்னர்கள், பிரமிட்டை கொள்ளையடிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கிறது என்பதால் மம்மிகளை வேறு இடங்களுக்கு கொண்டு சென்றர்கள். பெரும்பாலான பிரமிட்டுகள் கட்டப்பட்ட காலத்தை பழைய அரசர்களின் காலம் என சரித்திர ஆசிரியர்கள் வர்ணிப்பார்கள். அதன் பின்பான 200 வருடங்கள் அதிக வரலாற்று குறிப்புகள் இல்லை மேலும் அன்னியர்கள் படையெடுத்து வந்ததாகவும் எகிப்திய விளை நிலங்களையும் வளங்களையும் நாசம் செய்ததாகவும் சில குறிப்புகள் இருக்கின்றன.

பிரமிட்டுகளை முடித்துக்கொண்டு லக்சர் செல்வதற்காக மீண்டும் கெய்ரோ விமான நிலயத்திற்கு சென்றோம்
 
uthayam@optusnet.com.au