சிறுகதை: அகதியும், சில நாய்களும்!

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -குழந்தை மீண்டும் அழத் தொடங்கியது. வீரிட்ட அழுகை. இரவு முழுவதும் இதே கதைதான். அப்பன் எழுந்து வெளியே வந்தான். அப்பன் அவனது இயற்பெயர். குழந்தையின் அப்பனும் அவன்தான். பொழுது ஏற்கனவே விடிந்துகொண்டிருந்தது. நேரத்தோடு எழுந்த சில காகங்கள் முற்றத்திற்கு வந்திருந்து விடுப்புப் பார்த்தன. இரவு குழந்தை ஒவ்வொரு முறை அழுதபோதும் அப்பனின் நித்திரையும் குழம்பியது. அதனால் பொழுது விடியும் அசுகையே தெரியாமற் கிடந்திருக்கிறான். சிறியதொரு வாங்குபோல தொழிற்படும் மரக்கட்டையில் ஆறப்போட்டுக்கொண்டு அமர்ந்தான். அதையும் வெட்டி அடுப்புக்கு வைக்காதவரையிற் சரிதான். சேவலொன்று பொழுது விடிந்துவிட்ட செய்தியை இப்போதுதான் வந்து (அறை) கூவல் விடுத்தது. அப்பன் இருக்கும் கோலத்தை நான்கு கோணத்திலும் நின்று திரும்பித் திரும்பிப் பார்த்தது. “கவலைகளை ஒருபக்கம் போட்டுவிட்டு எழுந்திரு!” என இன்னொருமுறை கூவியது. சேவல் யாரோ ஒரு வீட்டுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் அயலிலுள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று இப்படிச் சம்பளமில்லாத உத்தியோகம் செய்யும் சேவையுணர்வைப் பார்;த்தால் அப்பனுக்கும் ஓர் உற்சாகம் தோன்றியது. ஆனால் அந்தக் கணநேர உற்சாகத்தையும் அழுத்தும் எந்தப் பக்கம் போகலாம் என்று புரியாத கவலைகள். வீடு வாசலை விட்டு உடுத்த உடுப்போடு ஓடிவந்த கவலைகளை ஒருபக்கம் போட்டுவிடலாம். தனக்குச் சொந்தமில்லாத இருப்பிடத்தில் அகதி எனும் பட்டத்துடன் சீவிப்பது.. வயிற்றுப்பாட்டுக்கு  அவ்வப்போது நிவாரணம் என்ற பெயரில் மற்றவர் கையை எதிர்பார்த்து நிற்பது.. அதையும் விட்டால் வேறு வழி இல்லாதிருப்பது போன்ற கவலைகளை எங்கே போடுவது?

குழந்தையின் அழுகை நாலு வீடுகளுக்குக் கேட்குமாப்போல இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது. குடிசைப் பக்கம் திரும்பி மனைவியிடம் குரல் கொடுத்தான்.

‘கமலம் பிள்ளை ஏன் அழுது….? பாலைக் குடுமன்!”

மூன்று மாதக் குழந்தைக்குப் பசியெடுத்தால் எப்போதும் ரெடியாகத் தாய்ப்பால் கிடைப்பது நல்லதொரு வசதியாகத்தான் இருக்கிறது. அந்த விடயத்தில் அப்பன் தலையைப் போட்டு உடைக்கத்தேவையில்லை. தனது கடமை முடிந்தது என்பதுபோல கைகளை அகல நீட்டி அலுப்பு முறித்தான். வயிற்றைத் தடவினான். வெறுவயிறு.. விடிய எழுந்ததும் ஒரு தேத்தண்ணியென்றாலும் சுடச்சுடக் குடித்தால் நன்றாயிருக்கும். பசி தெரியாது.

‘கமலம்! தேத்தண்ணி போடயில்லையா?”

‘அதுக்கு… சீனிக்கு எங்கை போறது?”

‘வெறும் தேத்தண்ணியெண்டாலும் போடுமன்…. வயிறெல்லே…. புகையிது!”

தேநீருக்கு சீனி இல்லாத சங்கதி அப்பனுக்குத் தெரியும். அவனுக்கு அது தெரியுமென்பது அவளுக்கும் தெரியும். எனினும் ஒரு சம்பிரதாயம்போல தினமும் இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர்தான் தேநீர் தயாராகும். மனைவி மூத்த பிள்ளைகள் இரண்டையும் விரட்டுவது கேட்டது.

‘இஞ்சையிருந்து ஆய்க்கினைப்படுத்தாமல் போங்கோ….! அப்பாவோடை போய் கொஞ்சம் விறகுதடி வெட்டிக்கொண்டு வாங்கோ…. அடுப்புக்கு…. வைக்க!”

ஆய்க்கினை என்று அவள் தன்னையும் சேர்த்துத்தான் சொல்கிறாளோ என அப்பன் நினைத்தான். அவளும் ஒரு கையால் எத்தனை அலுவல் என்றுதான் பார்ப்பாள்.  அதுதான் சினப்படுகிறாள். அப்பன் பிள்ளைகளை அழைத்தான்.

‘கத்திய எடுத்துக்கொண்டு வாங்கோ….! விறகு வெட்டுவம்!”

சிறு மரக்கிளைகள், தடிதண்டுகள் சிலவற்றை வெய்யிலிற் காயப்போட்டிருந்தாள். அவற்றை அடுப்புக்கு வைக்கக்கூடிய சிறு துண்டுகளாக வெட்டி எடுக்கலாம்.

‘ஒவ்வொரு தடியாய் எடுத்துக்கொண்டு வாங்கா…! நான் வெட்டிறன்!” எனப் பிள்ளைகளிடம் கூறியவாறு அப்பன் ஒரு கல்லில் அமர்ந்தான். காலை வெய்யில் கன்னத்தில் சுட்டது. சில மரக்கிளைகள் எட்டி எட்டி நிழல் தர முயன்றன. மரங்கள் வீசிய காற்று உடலைத் தழுவி சூட்டைத் தணிவித்தது. தெருவில் ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து இன்னும் சில நாய்கள் குரைத்தன. அப்பனிடம் நாய் இல்லை. முன்னர் அப்பனிடம் ஒரு நாய் இருந்தது. அவனது சொந்த வீட்டில். சொல்லப்போனால் அதுதான் அவர்களது உயிரைக் காத்தது எனலாம். அன்று இரவிரவாக நாய் எதையோ கண்டதுபோல குரைத்துக் கொண்டிருந்தது. குரைத்துக் குரைத்து அழுதது. அப்பன் நித்திரை குழம்பி எழுந்து பார்த்தான். வாசல்வரை ஓடிப்போய் ஆவேசம் கொண்டதுபோல ஏன் குரைக்கிறது? பேய் பிசாசுகளின் நடமாட்டத்தை நாய்கள் இலகுவில் மோப்பம் பிடித்து விடுமாம். அயலில் இன்னும் பல நாய்கள் குரைத்துக்கொண்டிருந்தன.

“இந்த ராவிருட்டியிலை ஏன் இப்படிச் சேர்ந்து ஊளையிடுதுகள்?” என யோசித்துக் கொண்டிருக்கும்போதே முதற் குண்டுச்சத்தம் கேட்டது. பிறகு சடார் சடாரென குண்டுகள் வந்து விழத்தொடங்கின. வீட்டுக்கு மேலாக விண்கூவிக்கொண்டு போகும் ஷெல்கள். அப்பன் பதற்றமடைந்தான்.

‘எழும்புங்கோ….! எழும்புங்கோ! வாறாங்கள் போலை!”

பெய்கிற மழையூடு துளிகள் படாமல் ஓட முடியுமா? ஓட வேண்டும். பிள்ளைகளைச் சுமந்துகொண்டு அப்பனும் மனைவியும் ஓடத்தொடங்கினார்கள். தலையில் குண்டுகள் விழக்கூடாது என ஆண்டவனை வேண்டியவாறு.. ஓடக்கூடியவர்களெல்லாம் அந்தக் கடற்கரைக் கிராமத்திலிருந்து ஓடிக்கொண்டிருந்தார்கள்.

அப்பனது நாயும் கூட ஓடிவந்தது. கொஞ்சத்தூரம்தான். பின்னர் நின்றது. அழுது ஊளையிட்டது. மீண்டும் திரும்ப ஓடியது. அந்த வீட்டை விட்டு வர அதற்கு விருப்பமில்லையோ? வீட்டுக்குத் தான்தானே காவல்நாய். தானும் ஓடிப்போவது என்ன நியாயம் என்று நினைத்திருக்குமோ? அல்லது.. எங்கேயோ போய் அகதியாக வாழ்வதை விட சொந்த வீட்டிலிருந்து செத்தாலும் மேல் என நினைத்திருக்கலாம். இப்போது அதன் கதி என்னவாயிருக்கும்? மூன்று வருடங்களாகிவிட்டது. அந்த வீட்டிலேயே சாப்பாடின்றி அழுதழுது கிடந்து செத்துப் போயிருக்குமோ? வீடுகளெல்லாம் அங்கு தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன என்றும் கேள்வி. அதைத் தாங்க முடியாமலும் அது தன்னை மாய்த்துக் கொண்டிருக்குமோ? அல்லது அதை அவர்கள் சுட்டும் போட்டிருக்கலாம். அப்பனின் மனம் வேதனைப்பட்டது. அந்த நாய் எங்காவது தப்பியொட்டி உயிருடன் இருக்கவேண்டும்.. ஒருநாள் மீண்டும் சேர்த்துக்கொள்ளவேண்டும் என மனசு வேண்டிக்கொண்டது. குழந்தையின் அழுகைச் சத்தம் ஒரு பக்கம். நாய்கள் குரைக்கும் சத்தம் இன்னொரு பக்கம். அப்பன் எரிச்சலடைந்தான். விமானத்தின் கோரச்சத்தம் இப்போதுதான் மனிதக் காதுகளுக்குக் கேட்டது. மகள் சத்தமிட்டாள். ‘பொம்பர் வருகுது!”
மகள் ஓடிவந்து அப்பனுக்குப் பக்கத்தில் நின்றாள்.

விமானம் வட்டமிடத்தொடங்கியது. சத்தம் வரும் திக்கை அண்ணாந்து பார்த்தால் சூரியன் கண்ணுக்குள் குத்தினான். தென்னைமரங்கள் வானத்தைப் பார்க்க முடியாதவாறு மறைத்துக்கொண்டிருந்தன. ஆ!… இந்தத் தென்னைமரங்களெல்லாம் பெரிய குடைகளாக குண்டுகளைத் தாங்கும் சக்தி படைத்தவையாக மாறிவிட்டால் எவ்வளவு நல்லது! அந்த அற்புதம் நிகழவில்லை. இடி விழுந்தது… நிலமதிர! பொம்பர் குண்டுகளைப் பொழியத் தொடங்கியது. தாயைப் பற்றிக்கொள்ளும் குரங்குக்குட்டியைப் போல் மகள் நெஞ்சு நடுங்க அப்பனைத் தாவிக் கட்டிப் பிடித்தான். அப்பன் கண்கள் பனிக்க தன் மகளை அணைத்துக் கொண்டான். மகனும் ஓடிவந்து அப்பனைக் கட்டிப்பிடித்தான். அவனது உடல் நடுங்குவதைத் தன் மேனியில் உணரக்கூடியதாயிருந்தது. மகனுக்கு வயசு ஏழு. கொஞ்சம் விவரம் புரிகிறது. அந்த இருள் அகலாத அதிகாலையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிவந்த பயம் இன்னும் அவன் நெஞ்சில் படிந்திருந்தது. குண்டுகளை வீசி அட்டகாசம் புரிந்த பொம்பர் பின்னர் தெற்குத்திசை நோக்கிப் பறந்து போனது. எதையோ சாதித்துவிட்ட திருப்தி அதற்கு இருக்கக்கூடும். அதை ஒரு பெருமையான விடயமாக அது கருதவும்கூடும். அதனாற்தான் அடிக்கடி இந்தக் காரியத்தைச் செய்கிறது. குழந்தை குண்டுச்சத்தத்தில் திடுக்குற்று வீரிட்டுக் குளறுவது கேட்டது. அப்பன் எழுந்து குடிசைக்குள் போனான்.

‘எந்த நேரமும் ஏன் பிள்ளை அழுகுது? ஏதாவது வருத்தமோ?” என மனைவியிடம் கேட்டான்.

‘வருத்தமுமில்லை…. ஒண்டுமில்லை… பசி!”

‘பசியெண்டால்… பாலைக் குடுக்கலாம்தானே?”

‘நான் என்ன வைச்சுக்கொண்டு குடுக்காமலிருக்கிறனா? ஆன சாப்பாடு சாப்பிட்டாலெல்லொ பால் இருக்கும்…! பாலைக் குடுத்தால்… உமிஞ்சி பாத்திட்டு தள்ளிவிட்டிட்டு… குளறுறான்… நான் என்ன செய்யிறது?”

அப்பன் சற்று நேரம் பேசமுடியாதவனாய் நின்றான். பின்னர் மிகத் தாழ்ந்த குரலில் சொன்னான்.

‘பிள்ளைக்குப் பால் குடுக்கிறனி… எனக்கு இல்லாட்டியும் பரவாயில்லை… வடிவாய் வயிறு நிறையச் சாப்பிட்டிருக்கலாம்தானே….?”
அவள் அப்பனை பரிதாபமாகப் பார்த்தாள். அழுவதா, சிரிப்பதா என்று தெரியாத பார்வை.

‘போங்கோ…! போய் நடக்கக்கூடிய அலுவலைப் பாருங்கோ!”

‘நடக்கக்கூடிய அலுவலா…. என்ன….?”

‘பால் மா வேண்டினால்… கரைச்சுக் குடுக்கலாம்!”

அப்பன் இன்னொரு எதிர்பாராத தாக்குதலுக்குள்ளாகி நின்றான்.

‘பால்மா கிடைக்காது கமலம்…! எங்கை போய்த் தேடிறது?”

ஒரு சாட்டுத்தான்! பொருட்களுக்குள்ள தடை தட்டுப்பாட்டை ஒரு சாட்டாக வைத்துத்தான் சொன்னான். மனமிருந்தால் இடமுண்டு. பணமிருந்தாலும் இடமுண்டுதான்!

‘எங்கையாவது பாத்து…. வேண்டியாங்கோ…! பிள்ளை அழுகுது…. இப்பிடியே பட்டினி போட்டு சாகடிக்கிறதா?”

வேறு வழியின்றி மனைவியிடம் சரணடைந்தான் அப்பன்.

‘கமலம்… பால்மா வாங்கக் காசுக்கு எங்கை போறது?”

‘நான் எத்தனையோ தடைவ சொன்னனான்…. வேண்டாம் வேண்டாம்…. எண்டு! கேட்டாத்தானே…? அழிக்கக்கூடாது பாவம்…. பாவம்…. எண்டு சொன்னியள்! இப்ப இந்தப் பாலன் பசியிலை துடிக்கிறதைப் பார்த்து நான் எப்பிடித் தாங்கிக் கொண்டிருக்கிறது?”

கரு தங்கியபோது அவள் வற்புறுத்தியது உண்மைதான். ஷஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு வேளாவேளைக்குச் சாப்பாடு போடவும் வழியில்லை. அகதிகளாய் இருந்துகொண்டு பிள்ளையும் வேணுமா? கருவை அழித்துவிடலாம்| என்று. அப்பன் சம்மதிக்கவில்லை, “அகதிகள் என்றால்….? பிள்ளை பெறக்கூடாதா….? எந்த அகராதியில் இருக்கு…? அதெல்லாம் சமாளிக்கலாம்” எனத் தடுத்துவிட்டான்.
மனைவி சேலையில் முகத்தைப் புதைத்து விம்முவது தெரிந்தது.

‘சரி…. சரி! இப்ப என்ன….. பால்மாதானே வேணும்….? வேண்டியாறன்…. அழாதை!”

அப்பன் வெளியே வந்தான். பெண்சாதியின் கண்ணீரைத் தாங்கமுடியவில்லை. நிலைமையைச் சமாளிப்பதற்காகவேனும் அப்படிச் சொல்லவேண்டியிருந்தது. இனி? நிவாரணப் பொருட்கள் கிடைத்தால் சீனி.. பருப்பு போன்றவற்றை விற்று இப்படியான இக்கட்டுக்களைச் சமாளிக்கலாம். இப்போது நிவாரணமும் ஒழுங்காகக் கிடைப்பதில்லை. பல காரணங்கள் சொல்லுகிறார்கள். வேலி அடைத்தல், தோட்டம் கொத்துதல் போன்ற இன்னோரன்ன கூலி வேலைகளுக்கும் போய் அப்பன் சம்பாதிப்பதுண்டு. ஆனால் கிழமையில் ஓரிரு நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாக இருக்கிறது. இந்த விசித்திரத்தில் பால்மா வேண்டுவதா? சரி…. பார்க்கலாம்! ஏதோ ஒரு வழி கிடைக்கும். வீடு வாசலை விட்டு ஓடிவந்து யாழ்ப்பாண நகரையண்டிய பகுதிகளில் நின்றபோது தனக்குச் சொந்தமான இடத்தையும் தந்து அதில் குடிசை போட்டு உதவியதும் ஒரு புண்ணியவான்தானே? அப்படி நல்ல மனசுள்ள சனங்கள் யாராவது கிடைக்காமலா போய்விடுவார்கள்?
அப்பன் கிணற்றடிப் பக்கம் போனான். கைகால் அலம்பிக் கொண்டு கடைத்தெருவுக்குப் போய் வரலாம்.

‘அப்பா…! இந்த வாழைக்குலை எப்ப பழுக்கும்?” பிறகால் வந்த மகன் கேட்டான். கிணற்றடியில் சில வாழைகளை நட்டிருந்தான் அப்பன். அதில் ஒரு வாழை குலை ஈன்றிருந்தது. சிறிய குலைதான். கப்பற்குலை. காய்கள் பெருத்து பருமனாயிருந்தன. கிணற்றடிக்கு வரும் வேளைகளிலெல்லாம் மகன் தவறாமல் இந்தக் கேள்வியைக் கேட்பான்.

‘அப்பா…! இந்த வாழைக்குலை எப்ப பழுக்கும்?”

பொறி தட்டியது அப்பனுக்கு. காய்கள் முற்றித்தான் இருக்கின்றன. வெட்டி வைத்தால் பழுத்துவிடும்.

தலையைக் குனிந்து “இந்தா வெட்டு!” எனக் கழுத்தை நீட்டிக்கொண்டு தியாகம் செய்யத் தயாராய் நின்றது வாழை.

‘கத்தியை எடுத்துக்கொண்டு வா…. வெட்டுவம்!”

மகன் மகிழ்ச்சி பொங்கத் துள்ளினான். கைகளைத் தட்டிக் குதூகலித்தான். ‘பழுத்திட்டிதாப்பா?”

பிள்ளiயை ஆதரவாக அணைத்துக்கொண்டான் அப்பன்.

‘குட்டித்தம்பி பசியிலை அழுகிறான்…. பால்மா வேண்டவேணும்…. அப்பாட்டைக் காசில்லை…  இந்த வாழைக்குலையை வித்திட்டு வேண்டுவம்… என்ன?”

மகனது தலை மௌனமாக அசைந்து சம்மதித்தது. வேதனை அப்பாவின் தொண்டையை அடைத்துக்கொண்டது. சின்னஞ்சிறுசுகளானாலும் கஷ்ட்ட நிலையை உணர்ந்து என்ன மாதிரி பக்குவமடைந்துவிடுகிறார்கள்! வாழைக்குலையை எடுத்துக்கொண்டு புறப்பட்டபோது மனைவி தன் ஏக்கத்தைக் கொட்டுவது கேட்டது.

‘இந்தப் பிள்ளையள் அது பழுக்கும்.. பழுக்கும் எண்டு எவ்வளவு ஆசையோட காத்துக் கொண்டிருந்ததுகள்!”

நிலாவும் இல்லாமல் நட்சத்திரமும் இல்லாமல் ஒரு பூதத்தைப் போல இரவு வந்து மூடிக்கொண்டது. எந்தப் பக்கம் திரும்பினாலும் இருள் அமுக்கிக் கொண்டிருந்தது. மாலையிலிருந்தே பொழுது மப்பும் மந்தாரமுமாகத்தான் இருந்தது. மழை வருமோ என்ற பயம் அப்பனுக்கு. குடிசை தாங்காது! ஒழுகும். பச்சைக் குழந்தையையும் கொண்டு எந்தத் தாழ்வாரத்தில் ஓடி ஒதுங்குவது என்ற கவலை. பாவம் குழந்தை. இப்போது ஒரு பூனைக்குட்டியைப் போல உறங்குகிறான். பால்மா குடித்தது வயிறு நிறைந்திருக்கிறது. மழை வந்து அதன் உறக்கம் கலையக் கூடாதே எனக் கலக்கமாயிருந்தது. தொலைவில் கேட்கும் குண்டுச்சத்தங்கள் கோரமாக எக்களித்துக் கொண்டிருந்தன.

‘இவங்களுக்கு ராவிருட்டியிலையும் நித்திரையில்லையோ….?” என மனைவி முணுமுணுப்பது கேட்டது.

அது பதில் தேவைப்படாத கேள்விதான். பதிலும் அவளுக்குத் தெரியாததல்ல. இருளில் பாயிற் கிடக்கும்போது குண்டுச்சத்தங்கள் பயத்தைத் தருகின்றன. பிள்ளை குட்டிகளை எண்ணிய கலக்கம். அதனாற்தான் அலுத்துக்கொள்கிறாள்.

அப்பன் தான் விழிப்பாகவே கிடப்பதை ஒரு செருமல் மூலம் அவளுக்கு உணர்த்தினான். அது அவளுக்குக் கொஞ்சமாவது தைரியத்தைக் கொடுக்கும்.

குழந்தை அருண்டு எழுந்து அழத் தொடங்கினான்.

கைவிளக்கைக் கொளுத்திப் பார்;த்தபோது வயிற்றோட்டமாகியிருப்பது தெரிந்தது.

‘பால்மா குடிச்சது… முதற்பழக்கம்தானே….. அதுதான் வயிற்றைக் குழப்பியிருக்கு…. சரியாகிவிடும்!” என அப்பன் ஆறுதல் சொன்னான்.
அது சரியாகவில்லை. இரவிரவாக வயிற்றுப்போக்கு இருந்தது. அதிகாலையில் வாந்தி எடுக்கவும் தொடங்கியிருந்தான்.

காலை வெளிச்சமானதும், ஒரு சந்தேகத்தில் பால்மாவைத் திறந்து பார்த்த மனைவி.. ‘கடவுளே! இந்த அநியாயத்தைப் பாருங்கோ!” எனப் பதறினாள்.

மிக உன்;னிப்பாகப் பார்த்தாற்த்தான் தெரிகிறது. மெல்லிய நூல் கனத்தில் சிறுசிறு புழுக்கள்…. பால்மாவுடன் கலந்துகொண்டு..! இந்தப்பக்கம் அனுப்பபப்டும் பால்மா வகைகள் பழுதடைந்திருக்கின்றன என்றும்.. கடைக்காரர்கள் கலப்படம் செய்கிறார்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் பத்திரிகைச் செய்திகளை வாசித்தபோது அவை வெறும் செய்திகளாகத்தான் தெரிந்தன. அவற்றின் உண்மை.. பொய்யைப் பற்றி அப்பன் கவலைப்பட்டதேயில்லை. இப்போது அவை செய்திகளாக அல்லாமல் நிஜரூபமெடுத்து அவனது நெஞ்சைப் பிடித்து உலுக்கின.

‘ஐயோ…. இந்தப் பால்மாவை எத்தனை தரம் பிள்ளைக்குக் குடிக்கக் குடுத்திட்டன்…. என்ன செய்யுமோ?” மனைவி விம்மலெடுத்து அழுதாள்.

‘பிள்ளையைக் கொண்டுபோய் டொக்டரிட்டைக் காட்ட வேணும்!”

அப்பன் கலங்கியவாறு நின்றான்.

அடிமேல் அடி விழுகிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் அடியும் இடியுமாகத்தான் இருக்கின்றது.

‘அழாதை கமலம்! அந்தப் பால்மாவைத் தா…! கடைக்காரரிட்டைக் குடுத்திட்டு காசை வேண்டியாறன். பிள்ளையை டொக்டரிட்டைக் காட்டலாம்!”

கடையில் மக்கள் பொருட்களை மொய்த்துக்கொண்டிருந்தார்கள். கடைக்காரன் பத்துக் கைகளால் எல்லோருக்கும் படியளந்துகொண்டிருந்தான். முழி மட்டும் பக்குவமாகப் பணத்தை பரிசோதித்துப் பார்த்துப் பார்த்து லாச்சியில் பூட்டியது.
அப்பன் போய் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றான். ஆட்களுக்கு முன்னிiயில் கேட்டு குழப்பமேற்படுத்தக்கூடாது.. எல்லோரும் போகட்டும்.
ஆனால் நேரம் நீண்டுகொண்டிருந்தது…. பொறுமையில்லை…. ‘தம்பி!”

கடைக்காரன் கவனிக்கவில்லை. :தம்பி” என அழைத்ததும் சரியில்லையோ எனப் பட்டது. காரியம் ஆகவேண்டுமென்றால் கொஞ்சம் மரியாதையாகத்தான் பேசவேண்டும். எப்படியாவது பால்மாவிற்குரிய பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும். அவனுக்கும் தனது வயதுதான் இருக்கலாம்…. பரவாயில்லை…. ‘அண்ணை!”

‘என்ன வேணும் உங்களுக்கு?”

‘இந்தப் பால்மா…. இஞ்சைதான் வேண்டினது…. சரியில்லை…”

கடைக்காரரின் முகம் இருட்சியடைந்தது. பின் சுதாகரித்துக் கொண்டது.

‘நிண்டுகொள்ளும்…. வாறன்… மற்றவையை விட்டிட்டு!”

அப்பன் மிகப் பயபக்தியுடன் ஒதுங்கி நின்றான். நின்றவர்களும் வந்தவர்களும் போகும்வரை பொறுமையாக நின்றான். பொறுமை பூமியைவிடப் பெரியது என அப்போது புரிந்தது. அவ்வளவு கனதி. பிள்ளைக்கு என்ன பாடோ என்ற துடிப்புடன் பொறுமையைக் கடைப்பிடிக்கும் காரியத்தைச் செய்யவே ஓர் அபார பொறுமை (திறமை) வேண்டும் போலிருந்தது.

‘சரி, உமக்கு என்ன வேணும்?” ஒரு வழியாக அவனது ‘கடைக்’கண் பார்வை அப்பன் மேல் விழுந்தது.

‘இந்தப் பால்மா சரியில்லை…. பழசு…. புழுப் பிடிச்சிருக்கு…. இஞ்சதான் வேண்டினது.”

‘அதுக்கு நான் என்ன செய்யிறது…? பக்கற் அடைச்சுத்தானே இருந்தது?”

‘அடைச்சுத்தான் இருந்ததுங்கோ…. எண்டாலும் இஞ்சை பாருங்கோ… இதை எப்பிடிப் பிள்ளைக்குக் குடுக்கிறது?”

‘குடுக்கேலாட்டி… வேற இடத்திலை வேண்டிக் குடுமன்..”

‘நான் உங்களைக் குறை சொல்லயில்லையுங்கோ… இதை வைச்சுக்கொண்டு என்ர காசைத் தந்தால் பெரிய உதவி….”

‘என்ன பகிடி விடுகிறீரோ…? வித்த சாமான திருப்பி எடுக்கேலாது.. போய் வேற வேலையைப் பாரும்!”

‘ஐயா…. இதைக் குடிச்சு பிள்ளைக்கு வயித்தாலை அடிக்குது”

‘அதுக்கு…? டொக்டரிட்டைக் கொண்டுபோறதுதானே? ஏன் இஞ்சை வந்தனீர்?”

‘அதுக்குத்தான் ஐயா…! டொக்டரிட்டைக் காட்டிறதுக்குக் கையிலை காசில்லை. இதை வைச்சுக்கொண்டு என்ர காசைத் தாங்கோ!”
‘வழியில்லாட்டி ஏன் பிள்ளை பெறுகிறனீங்கள்?”

அப்பனின் வாய் அடைத்துப்போனது. நெஞ்சுக்குள் மூண்டு கொண்டிருந்த கனல் ஜுவாலையிட்டு எழுந்தது. நிதானித்து அடக்கினான்.

‘உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும். நீங்கள் முழுக் காசும் தரவேண்டாம். அரைவாசிக் காசையெண்டாலும் தாருங்கோ.”

‘இப்பிடி யாவாரம் செய்தால் நான் கடையைத்தான் இழுத்து மூடவேணும். ஒரு சதமும் தரேலாது. இதிலை நிண்டு விசர்க்கதை கதைச்சு என்ர நேரத்தை மினக்கெடுத்தாமல் போம்!”

ஜூவாலைப் பற்றி எரிந்தது. அதில் அப்பன் தானே எரிந்து கொண்டிருந்தான்.

‘இந்தா…! இதையும் வித்துக் காசாக்கு!”

பால்மா iபாக்கட்டை மேஜையில் போட்டுவிட்டு அப்பன் படியிறங்கி நடந்தான்.

கடையில் நின்ற சில நாய்கள் குரைத்தன. தெருவிலும் நாய்கள் குரைத்தன. தொலைவில் விமானச் சத்தம். வட்டமிட்டது.. குண்டுகள் போடப்போகிறானோ..? பிள்ளைகளை நினைத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குப் போனான் அப்பன். அண்மித்தபோது அந்தத் தெருவிலும் சில நாய்கள் குரைத்துக்கொண்டிருந்தன. அப்பனின் குடிசையிலிருந்து அழுகைக் குரல் கேட்டது.
அது குழந்தையின் அழுகையல்ல.
      000
(சிரித்திரன் சஞ்சிகையிற் பிரசுரமானது 1994)

பதிவுகளுக்கு அனுப்பியவர்: சுதாராஜ், rajsiva50@gmail.com