எழுத்தாளர் ஒருவரின் படைப்பு உருவாகுவதற்குப் பல அடிப்படைக்காரணங்களுள்ளன. அப்படைப்பானது அதனைப் படைத்தவரின் கற்பனையாகவிருக்கலாம். அல்லது நடைபெற்ற சம்பவங்கள் ஏதாவது ஏற்படுத்திய பாதிப்புகளின் விளைவாக இருக்கலாம். அல்லது பத்திரிகை , சஞ்சிகைகளில் வெளிவந்த செய்தியொன்றின் தாக்கத்தின் விளைவாகவிருக்கலாம். இவ்விதம் பல்வேறு காரணங்களிருக்கலாம். புகழ்பெற்ற எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் மிகவும் புகழ்பெற்ற படைப்பான ‘கிழவனும், கடலும்’ நாவல் தோன்றியது ஒரு பத்திரிகைச்செய்தியின் விளைவாகவென்று ஹெமிங்வேயே ஒருமுறை கூறியிருக்கின்றார். பத்திரிகையொன்றில் வெளியான ‘புளூ மார்லின்’ மீனொன்றால் கடலில் பல நூறு மைல்கள் இழுத்துச் செல்லப்பட்ட போர்த்துக்கேய மீனவன் ஒருவன் பற்றி வெளியான செய்தியொன்றின் தாக்கத்தின் விளைவே அவரது ‘கிழவனும், கடலும்’ நாவலின் அடிப்படை.
இச்சமயத்தில் எனது சிறுகதையொன்றான ‘ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை’ உருவான விதம் பற்றிச் சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ளலாமென நினைக்கின்றேன். கனடாவுக்கு வந்த காலகட்டத்தில் என் வேலை காரணமாக டொராண்டோவின் மேற்குப் புறத்திலிருக்கும் ‘கீல்’ வீதியும், ‘சென்ட் கிளயர் மேற்கு’ வீதியும் சந்திக்கும் சந்தியை ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் சந்தர்ப்பமேற்பட்டது. இன்று மிகவும் அபிவிருத்தி அடைந்துள்ள பகுதியாக விளங்கும் அப்பகுதியில் அன்று கனடா பக்கர்ஸ் நிறுவனத்தின் கசாப்புக் கூடம் மிகப்பெரிய அளவில் அமைந்திருந்தது. ஒவ்வொரு முறை அக்கசாப்புக் கூடத்தைக் கடக்கும்போதும் மூக்கைத்துளைக்கும் மணமும், அங்கு வெட்டுவதற்காக அடைப்பட்டுக் கிடக்கும் மாடுகளின் நிலையையும் மனதில் பல்வேறு சிந்தனைகளை உருவாக்கும். மனம் அக்காலகட்டத்தில் இலங்கைச் சிறைக்கூடங்களில் அடைப்பட்டுக்கிடக்கும் தமிழர்களின் நிலையுடன் அக்கசாப்புக்கூடத்தில் அடைபட்டுக்கிடக்கும் மாடுகளின் நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்.
இதன் பின் சில ஆண்டுகள் கடந்து விட்டன. ஒரு நாள் ‘டொராண்டோ சன்’ பத்திரிகையின் முதற் பக்கத்தில் வெளியாகியிருந்த புகைப்படமொன்று என் கவனத்தைக் கவர்ந்தது. ‘400 கடுகதிப்’ பாதை வழியாக, ‘மூஸ்’ என்னும் மானின மிருகங்களை ஏற்றிச் சென்ற ‘ட்ரக்டர் டிரெயில’ரிலிருந்து , இடைவழியில் , கதவு திறந்த நிலையில், அம்மிருகங்கள் அனைத்தும் தப்பி வெளியேறின. சில ‘400 கடுகதி’ப் பாதையின் நடுவில் ஓடித்திரிந்து வாகனப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச்செய்தன. இதன் விளைவாக அங்கு சென்ற காவற்துறையினர் கடுகதிப் பாதையில் நின்ற அம்மிருகங்களைப் பிடிப்பதற்காக நின்ற காட்சிக்கான புகைப்படமே அப்புகைப்படம்.
அந்தப் புகைப்படமும் , ட்ரக்டர் ட்ரெயிலரிலிருந்து தப்பிய ‘மூஸ்’ மிருகங்களும் என் சிந்தையில் பல வருடங்களுக்கு முன்னர் கனடா பக்கர்ஸ் கசாப்புக் கூடத்தைக் கடக்கும் போது அங்கு வெட்டப்படுவதற்காக நிற்கும் மாடுகள் பற்றியெழுந்த நினைவுகளை மீண்டும் அசை போட வைத்தன. வெட்டப்படுவதற்காகக் காத்திருக்கும் மாடுகள் அக்கசாப்புக் கூடத்திலிருந்து தப்பி, வாகனப் போக்குவரத்தை நிறுத்தி, தம் போராட்டத்தினை ஆரம்பித்தால் எப்படியிருக்குமென்று என் மனதில் சிந்தனையோடியது. அச்சிந்தனையின் விளைவாக உருவானதுதான் ‘ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை’. கனடாவிலிருந்து வெளியான ‘தாயகம்’ பத்திரிகையில் வெளியான சிறுகதை (அப்பொழுது தாயகம் பத்திரிகை வடிவில் வெளியாகிக்கொண்டிருந்தது.)
கதை இதுதான்: அக்கசாப்புக் கூடத்திலிருந்து மாடொன்று தப்பி வெளியேறி சென்ட் கிளயர் வீதியில் வாகனப் போக்குவரத்தை நிறுத்தி விடுகிறது. அன்று தனது காரைத் திருத்துவதற்காக பஞ்சாப்காரனொருவனின் ‘கராஜு’க்குக் கொண்டுசென்று கொண்டிருந்த கதை சொல்லியும் ஸ்தம்பிக்கப்பட்ட அப்போக்குவரத்தில் அகப்பட்டுக்கொள்கின்றான். மாடோ வீதியின் நடுவில் நின்று உயிர் வாழ்வதற்கான தன் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறது. அதை வேடிக்கை பார்க்க, ஊடகங்களில் வெளியிட என்று ஒரு கூட்டமே அங்கு கூடி விடுகிறது. அப்பொழுது கதை சொல்லியின் உள்ளம் அம்மாட்டின் நிலையுடன் ஊரில் இருப்பவர்களை ஒப்பிட்டுப் பார்க்கின்றது.
“மரணத்திலிருந்து தப்பிவந்த அந்த இனந்தெரியாத மாட்டின் மேல் ஒருவித பரிதாபம் தோன்றியது. அநுதாபம் படர்ந்தது. காரை வெட்டி றோட்டுக்கரையோரம் நிறுத்தி விட்டு பொன்னையா காரை விட்டிறங்கி வேடிக்கை பார்க்கும் சனங்களில் ஒன்றானான். ‘ஸ்ட்ரீட் கார்’ செல்லும் இருப்புப் பாதையின் மேல் , சுற்றிவர வேடிக்கை பார்த்தபடி நிற்பவர்களைப்பார்த்து முறைத்தபடி அந்த மாடு நின்றது. அதன் கண்களில் மரண பயம் கவ்விக் கிடந்ததை இவன் உணர்ந்தான். அதைப் பார்க்கப் பாவமாயிருந்தது. பொன்னையாவிற்குக் கவலை தோன்றியது.
உருண்டு திரண்டு கொழுகொழுவென்று வாட்ட சாட்டமாக வளர்ந்திருந்தது. அருகில் சென்று பிடிக்க முனைந்த கனடா பக்கர்ஸ் ஊழியர்களைப் பார்த்து முறைத்தது. முட்டுவது போல் பாசங்கு செய்து முரண்டு பிடித்தது. அருகில் ஒருவரையும் வரவிடாமல் தடுத்து வைப்பதில் ஓரளவு வெற்றி கண்டிருந்தது.
எவ்வளவு நேரத்திற்குத்தான் அதனால், அந்த ஐந்தறிவு உயிரினால், தாக்குப் பிடிக்க முடியும்? ‘மட மாடே! மனிதனுடன் போட்டி போட்டு உன்னால் வெல்ல முடியுமா என்ன?’
திடீரென பொன்னையாவிற்குச் சிந்தையில் ஒரு எண்ணம் எழுந்தது.
‘இந்த மாட்டின் மனநிலை என்னவாயிருக்கும்?’ அருகிலுள்ள ஸ்லோட்டர் ஹவுஸிற்குள் வெட்டுப் படுவதற்காகக் காத்து நிற்கும் ஏனைய மாடுகளின் ஞாபகமும் எழுந்தது. ‘இவ்விதம் தப்பிவர இந்த மாடு எவ்வளவு கஷ்ட்டப் பட்டிருக்கும்?’
‘கிடைத்த சுதந்திரத்தின் நிரந்தரமற்ற தன்மையைப் பாவம் இந்த மாட்டால் உணரமுடியவில்லை..அதனால்தான் தன்னுயிரைக் காத்துக்கொள்ள கிடைத்த அற்ப சுதந்திரத்தைப் பாதுகாக்க இந்த மாடு வீராவேசத்துடன் முயல்கிறது..’
ஊரில் இருப்பவர்களின் நினைவுகளும் எழாமலில்லை…’இந்த மாட்டைப் போன்ற நிலையில் இருப்பவர்கள் எத்தனை பேர்?..அரைகுறையாகத் தப்பி மீண்டும் அகப்பட்டவர்கள்..தப்புவதற்கு முடியாமல் சமாதியாகிப் போனவர்கள்…’
மீண்டும் கவனம் மாட்டின் மேல் திரும்புகின்றது. இன்னமும் அது மூர்க்கத்துடன் தன்னை நெருங்குபவர்களை எதிர்த்து நிற்கின்றது. யாரும் நெருங்காத சமயங்களில் ஒருவித சோகம் கலந்த பாவத்துடன் அமைதியாக ஒருவித பயத்துடன் நிற்கிறது.
அதன் கண்களிருந்து மெல்ல மெல்ல இலேசாகக் கண்ணீர் வடிகிறது..எதை நினைத்து அழுகிறது? தன் பரிதாபகரமான நிலையை நினைத்தா?தன்னை சமாதியாக்குவதற்குக் கங்கணம் கட்டி நிற்கும் மனிதர்களால் தனக்கேற்பட்ட நிராதரவான நிலையை உணர்ந்தா? ஏன் அது அழுகிறது?”
இவ்விதமாகச் செல்லும் சிறுகதை பினவருமாறு முடிகின்றது:
“இதற்கிடையில் யாரோ மாடு டிரபிக்கிற்குத் தடையாயிருப்பதை பொலிஸிற்கு அறிவித்து விட்டார்கள் போலும்.. ‘எமர்ஜன்ஸி பிளாஸிங் லைட்’டுடன் ‘சைரன்’ முழங்க பொலிஸ் காரொன்று விரைந்து வந்து இறங்கியது. இரு பொலிசார் இறங்கினார்கள். கயிரொன்றில் வளையம் செய்து சிறிது நேரம் முயற்சி செய்தார்கள். பலனில்லை. மாடு மிகவும் உறுதியாகவே எதிர்த்து நின்றது. இதற்கிடையில் விஷயத்தை மோப்பம் பிடித்துப் பத்திரிகைக்காரர்கள், தொலைக்காட்சிக்காரர்களென்று கமராக்களுடன் கூடி விட்டனர்.
மாடு தன்னுயிரைக் காப்பதற்கானதொரு போராட்டத்தில், ஜீவமரணப் போராட்டத்திலீடுபட்டிருக்கின்றது. இதை அடக்க, வேடிக்கை பார்க்க, படம் பிடிக்க ஒரு கூட்டம். ஒன்றிற்கும் செயல் பட முடியாத , இயலாத கூட்டம். தானும் அக்கூட்டத்தில் ஒருவன் என்பதை நினைக்கையில் பொன்னையாவிற்குத் தன்மேல் ஒருவித வெறுப்புக்கூடத் தோன்றியது.
தங்கள் முயற்சி சிறிது தோல்வியுற்றதைக்கண்ட பொலிஸார் தங்களிற்கு கூடிக் கதைத்தார்கள். இதற்குள் வீதியில் இரு திசைகளிலும் வாகனங்கள் பெருமளவில் முடங்கத் தொடங்கிவிட்டன.
தொலைவிலிருந்தவர்கள் போக்குவரத்து தடைப்பட்டதன் காரணத்தை அறியாத நிலையில் ஹோர்னகளை மாறிமாறி அடிக்கத் தொடங்கிவிட்டார்கள். நிலைமை கட்டுமீறுவதைப் பொலிஸார் உணர்ந்தார்கள்.
இறுதியில் மாட்டுப் பிரச்சினை ஒரு முடிவிற்கு வந்தது.
ஆறறிவுப் பிராணியின் முன்னால் சுதந்திர வேட்கை நசுக்கப் பட்ட நிலையில் ‘ட்ரான்குலைசரா’ல் மயக்கப்பட்டு சாய்ந்த மாட்டைத் தூக்கிய கனடாப் பக்கர்ஸ் ஊழியர்கள் அதனை ‘ஸ்லோட்டர் ஹவுஸி’ற்குள் கொண்டு சென்றார்கள்.
ஒருவழியாகப் போக்குவரத்துச் சீர்பட்டது. சனங்கள் ஒவ்வொருவராகக் கலையத் தொடங்கினார்கள்.
பஞ்சாப்காரன் திட்டப் போகின்றானென்ற நினைப்புடன் தன்காரில் பாய்ந்தேறினான் பொன்னையா. கூடவே அடிக்கடி மிருகங்களை வதைப்பதாகக்கூறி வழக்குப் போடும் ‘ஹியுமேன் சொசைடி’யின் ஞாபகமும் வந்தது. சிரிப்பு வந்தது.
சிறிது போராடித் தோல்வியுற்ற மாட்டின் நிலைமை அநுதாபத்தை தந்தாலும் அதன் சுதந்திர வேட்கையும் அதற்காக அது போராடிய தீவிரமும் அதன் மேல் ஒருவித பக்தியை, பெருமிதத்தை ஏற்படுத்தியது. சொன்னால் நம்ப மாட்டீர்கள்! அன்றிலிருந்து பொன்னையா மீண்டும் முழுச் சைவமாகிவிட்டான்.”
இந்தச் சிறுகதை தமிழகத்தில் தொகுக்கப்பட்ட ‘பனியும் பனையும்’ தொகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. இச்சிறுகதை ‘பதிவுகள்’ , திண்ணை’ ஆகிய இணைய இதழ்களிலும் மீள்பிரசுமாகியுள்ளது. டொராண்டோவில் வெளியாகும், வெளியான பத்திரிகைகளில் மீள்பிரசுரமாகியுள்ளது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டது) பதிவுகள் இணைய இதழில் வெளியானது. பின்னர் இலண்டலிருந்து வெளியாகும் ‘தமிழ் டைம்ஸ்’ ஆங்கில இதழிலும், ‘கலிபோர்னியாவில் வெளியான TNC (Tamils of Northern California) செய்திக் கடிதத்திலும் (மே 2001 இதழில்), சுலேகா.காம் ஆங்கில இணையத்தளத்திலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் சிறுகதைகள்.காம் இணையத்தளத்திலும் சிறப்புச் சிறுகதையாக பிரசுரமாகியுள்ளது. தமிழகத்தில் ஸ்நேகா / மங்கை பதிப்ப வெளியீடாக வெளிவந்த ‘அமெரிக்கா’ தொகுப்பிலும் பிரசுரமாகியுள்ளது. இத்தொகுப்புக்கு முன்னுரை வழங்கிய எழுத்தாளர் செ.கணேசலிங்கன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
” பனியும் பனையும் என்ற புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் சிறுகதைத்தொகுதியை ‘இந்து’ ஆங்கில நாளிதழுக்கு விமர்சனம் எழுதும்படி அதன் உதவி ஆசிரியர் என்னிடம் தந்திருந்தார். அக்கதைத்தொகுதியிலுள்ள கதைகள் யாவற்றையும் படித்தபொழுது ‘ஒரு மாட்டுப் பிரச்சினை’ என்னை மிகவும் கவர்ந்தது. அவ்விமர்சனத்தில் சிறப்பாக அக்கதையைக் குறிப்பிட்டிருந்தேன்………. ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினையில் வாழும் சுதந்திரம் வேண்டி கொலைக்கூடத்திலிருந்து தப்பும் மாடும் ஒன்று வாகனப் போக்குவரத்தையே தடை செய்கிறது. அதன் போராட்டம் மூலம் ஈழத்தமிழனின் இன்றைய நிலையை விளக்குகிறார். கதையின் அமைப்பும் எடுத்த நிகழ்ச்சியும் இது நல்லதோர் சிறுகதைக்கு இலக்கணமாய் திகழ்கிறது.“
TNC செய்திக்கடிதத்தில் இக்கதையினை மீள்பிரசுரம் செய்கையில் இவ்விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது:
‘ A moving story making a comparison between a cow’s plight and the situation of Tamils in Sri Lanka”
இக்கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் வெளியானது) இணையத்தில் வெளியானபோது அதனை வாசித்து மேலும் சில திருத்தங்களைச் செய்து அமெரிக்காவில் வசிக்கும் Betsy Harrell அனுப்பியபோது பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
“You make a very nice contrast between the serenity of Ponnaiya ‘s Sunday drive & the dreadful episode which follows. You make a wonderful, moving comparison between the doomed cow’s plight & the situation of your own Tamil people in Sri Lanka. You often express powerfully, e.g., ” a great, grand butcherhouse where hundreds of cows are done to death and cut to pieces every day. Your final sentence is perfect!”-Respectfully,Betsy Harrell (USA)]
மேலும் இணையத்தில் இக்கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியான காலகட்டத்தில் அதனைப் படித்த, இலண்டனில் வசிக்கும் எழுத்தாளரொருவர் இச்சிறுகதையிலுள்ளது போலொரு சம்பவம் அண்மையில் நடந்ததாகவும், மாட்டுக்குப் பதில் பன்றியொன்று இவ்விதம் தப்பி வந்து வாகனப் போக்குவரத்தைத் தடை செய்ததாகவும், மக்கள் தலையிட்டு அப்பன்றியை மீண்டுக் கசாப்புக் கூடத்துக்கு அனுப்பாமல் மிருகப் பராமரிப்பு நிலையமொன்றுக்கு அனுப்ப உதவியதாகவும் குறிப்பிட்டிருந்தார். தொண்ணூறுகளில் மாட்டை வைத்து எழுதப்பட்ட இக்கதையில் வரும் சம்பவத்தையொத்த நிகழ்வொன்று , பன்றியொன்றுக்கு 2000க்குப் பிற்பட்ட காலகட்டத்தில் நடைபெற்றது ஆச்சரியம்தான்.