[ வாசித்தவை, யோசித்தவை, வாசித்து யோசித்தவை எனப்பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியது இந்த ‘வாசிப்பும், யோசிப்பும்’ பகுதி. – பதிவுகள். ]
அன்று ரணில் பிரதமராக இருந்தபோது ஏற்பட்ட ‘சமாதானப் பேச்சு வார்த்தைகள்’ அன்று நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதியாக விளங்கிய சந்திரிகா குமாரதுங்க அம்மையாரால் நிறைவேற்ற முடியாமல் செய்யப்பட்டது. இன்று ஆட்சி மாறி மீண்டும் பிரதமராக ரணில்…. சந்திரிகா குமாரதுங்கவோ எந்தவித அதிகாரங்களுமற்ற முன்னாள் ஜனாதிபதி. ஆனால் அவர் ரணிலுடன் கூட்டுச்சேர்ந்திருக்கின்றார். அன்று சமாதான உடன்படிக்கையைச் சீர்குலைத்து மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்கட்டிலில் ஏற வழி வகுத்த அவர். இன்று மகிந்தாவைப் பதவியை விட்டே ஓட வியூகம வகுத்து வெற்றியும் அடைந்திருக்கின்றார். இன்று ஜனாதிபதியாக எதிர்கட்சியின் தலைவரான மைத்திரிபால சிரிசேன. இருக்கிறார்.
அன்று ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை சீர்குலைந்ததால் ஏற்பட்ட விளைவு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் வந்து முடிந்தது. அத்துடன் விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களையும் மெளனிக்க வைத்தது.
இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் சீர்குலையாமல், இலங்கையில் சிற்பான்மை மக்கள் பிரச்சினைக்கு அரசியல்ரீதியிலான தீர்வு காணப்பட வேண்டுமானால் ஆண்டுக்கணக்காய்ச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையடைய வேண்டும். வட, கிழக்குப் பகுதிகளில் நிலவும் இராணுவ ஆதிக்கம் நீக்கப்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை நீக்கப்பட வேண்டும். மகிந்த ராஜபக்ச சகோதரர்கள் இழைத்த குற்றங்கள் முறையாக விசாரணக்குள்ளாக்கப்பட்டு, குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு உரிய தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு முன்னர் அன்று சந்திரிகா அம்மையார் நிறைவேற்று அதிகாரங்கள் உள்ள ஜனாதிபதியாக இருந்து செய்ததை, இன்று தனது அதிகாரங்களை இழந்த நிலையிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இனவாதத்தைக்கிளறிவிட்டுச் செய்ய முற்படுவார். அதற்கு இடங்கொடுக்கக்கூடாது. அதற்கு தற்போதுள்ள் கூட்டணி உடையாமல் , புதிய ஜனாதிபதி மைத்திரிபாக சிரிசேன ‘மாத்தையா’வின் செயல்திட்டங்கள் உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்தக் கூட்டணி மட்டும் உடையுமானால் இலங்கையின் சகல மக்களுக்கும் பாரதூரமான விளைவுகள் ஏற்படும். கூட்டணியின் ஜனாதிபதி சிறிலங்காக் கட்சியினரின் ஜனாதிபதியாகிவிடுவார்.
இன்று வடகிழக்கில் வாழும் தமிழ் முஸ்லீம் மக்கள், மற்றும் மலையகத்தமிழ் மக்கள், வடகிழக்குத்தவிர்ந்த வெளி மாவட்டங்களில் வாழும் சிறுபான்மையின மக்கள் அனைவரும் ஆட்சி மாற்றத்துக்குப் பெரிதும் உதவியிருக்கின்றார்கள். இது சிங்கள் மக்கள் மத்தியில் இனவாதத்தைக் கிளப்புவதற்குப் பதில் சிறுபான்மையினர்பால் ஒருவித நல்லெண்ணத்துடன் கூடிய புரிந்துணர்வினை ஏற்படுத்த வழி வகுத்திருப்பதாகவே எனக்குப் படுகிறது. இந்தச் சூழலைச் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தமக்குச் சாதகமாகப் பாவிக்க வேண்டும்.
இதுவரை காலச் சிறிலங்காவின் அரசியல் வரலாறு நம்பிக்கை தரவில்லை. ஆனால் ஏற்படும் புதிய சந்தர்ப்பங்களை அதற்காகப் பாவிக்காமல் விடுவதும் முட்டாள்தனம். மீண்டுமொரு சந்தர்ப்பம் கொடுத்துப்பார்ப்பதில் தவறேதுமில்லை.