ஆய்வு: சிலம்பில் சொல்லாடல் பண்பாடு

சிலம்பில் சொல்லாடல் பண்பாடுமானிடரின் வாழ்வின் ஏற்ற தாழ்வுகள் பிறரிடம் அணுகும் முறையினையும் அடியொற்றியுள்ளது. உறவுகளின் சொல்லாடலைச் சார்ந்துள்ளது. உரை+ஆடல்=உரையாடல், நீர்+ஆடல்=நீராடல், சொல்+ஆடல்= சொல்லாடல். சொற்களைத் தேவையான இடங்களில் தகுந்த முறையில் ஆளுதல். சொல்லாடல் என்பது ஒரு செயல் போக்கு. பேசுபவர், கேட்பவர் எவராயினும் அவர்களிடையே நடைபெறும் சொற்கூட்டாட்டத்திற்குச் சொல்லாடல் முதன்மைப் பெறுகிறது. சொற்களின் மென்மை தன்மை, கடின தன்மை என்னும் வீச்சுகளைப் பொறுத்தே சொல்லாடலின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும் நிலையில் ‘சிலம்பில் சொல்லாடல் பண்பாடு’ என்னும் தலைப்பில் இவ்வாய்வு கட்டுரை விவரிக்கின்றது.

 கலித்தொகையில் முல்லை நிலத்தலைவன், தலைவியைப் பற்றி உரைக்கும்போது அவளைச் ‘சொல்லாட்டி’ எனச் சுட்டுகிறான்.

 ‘முல்லை முகையும் முருந்தும் நிரைதந்தன்ன
 பல்லும் பணைத்தோளும் பேரமர் உண்கண்ணும்
 நல்லோன் யான்-என்று நலத்தகை நம்பியே
 சொல்லாட்டி ‘(108 : 15 – 18)

எனும் அடிகளில் தலைவியை ‘சொல்லாட்டி’ என விளிக்கிறான். அதற்கு விடையளிக்கும்போது ‘சொல்லாடல்’ என்னும் சொல் கையாளப்பட்டுள்ளது.

 சிலம்பில் துன்பமாலையில், கோவலன் கொலையுண்ட செய்தியைக் கூற வந்த ஆயர்மகள் ஒருத்தி,

‘அவள் – தான்
 சொல்லாடள், சொல்லாடா நின்றாள்! அந்நங்கைக்குச்
 சொல்லாடும் சொல்லாடுந் தான்’ (8-10)

என்று பேசாமல் நிற்கும் அவளது செயல் ‘சொல்லாடா நின்றாள்’ என்பதால் பேசாமல் நின்றாள் என்பது புலனாகிறது. அவள் நிலை கண்டு பலரும் அவருடன் சொல்லாடி என்ன செய்தி என அறிய முயன்றனர். ‘சொல்லாடல்’ என்பது ‘செய்தியை உரைத்தல்’ எனலாம்.

 ‘சொலல்வல்லான் சோர்விலான் அஞ்சான் அவனை
 ,கல்வெல்லல் யார்க்கும் அரிது’ (தி.கு.647)

என்று சொற்களைத் திறம்பட எடுத்தாள்பவனின் சிறப்பைக் கூறுகிறார் வள்ளுவர். ‘வெறும் பேச்சு பேசேல்’ ‘பயனற்ற சொற்களைப் பேசாதீர்’ என்று இலக்கியங்கள் இயம்பகின்றன. ‘சொல்லின் வனப்பே வனப்பு’ என்கிறது சிறுபஞ்சமூலம், பயனற்ற சொற்களைப் பேசி பொழுதினை வீணே கழிக்கும் மாந்தர் ‘வறு மொழியாளர்’ எனப்படுகின்றார்.

ஒருவர் சொல்லாடலில் ஈடுபட காரணங்கள் :

1. வாழும் சூழல் (சமுதாயம், இயற்கை) பற்றிய கருத்தைப் பெறுதல்
2. பெற்ற கருத்துகளை வெளிப்படுத்துதல்
3. பிறரை பல்வேறு செயல்களில் ஈடுபட வைத்தல்
4. சமூக உறவுகளை வளர்த்தெடுத்தல்

மேற்கண்ட காரணங்களால் சொல்லாடல் நிகழ்கிறது.

பலவகை சொல்லாடல் பண்பாடு :

 சொல்லாடல் பண்பாடு பலவகைக் கூறுகளைக் கொண்டிருப்பினும் இளங்கோவடிகள் குறிப்பிடும் சில சொல்லாடல் பண்பாடு எடுத்தாளப்படுகிறது.

1. இல்லற உறவில் சொல்லாடல் பண்பாடு
2. நட்பின் வழி சொல்லாடல் பண்பாடு
3. பெரியோர் காட்டும் சொல்லாடல் பண்பாடு

இம்மூவகை சொல்லாடல் பண்பாட்டுக் கூறுகள் இயம்பப்படுகின்றன.

1. இல்லற உறவில் சொல்லாடல் பண்பாடு :

கோவலன், கண்ணகியின் புற உறுப்புகளைப் புகழ்கிறாள்.
சந்திரனின் குழந்தையாம் பிறை, சிவனின் தலையில் உள்ளது. உன் நெற்றியாக தருவானாக.மன்மதனின் கரும்புவில் உன் புருவாமாகுக. வச்சிராயுதத்தின் இடை, முருகன் வேல், இரக்கம் பொருந்திய இரண்டு கண்கள், மயிலின் சாயல், அன்ன நடை, கிளிகள், குழல், யாழ், அமிழ்த மொழிகள் என்று உறுப்புகள் வருணனையில் ஒப்பீட்டு சொல்லாடல் நிகழ்த்துகிறான். அகப்புற வாழ்வ சிறப்புற ஒப்பீட்டு சொற்கூறுகள் உயர்ந்த கற்பனையைத் தரும். மறக்க இயலா சொல்லாடலாகத் திகழும்.

• நெற்றி வியர்க்க,இடை வருந்த அணிகள் ஏன்?
• கூந்தலுக்குக் கத்தூரி குழம்பு ஏன்?
• தொய்யலுடன் முத்துவடம் ஏன்?

எனக் கேட்கும் போது ‘இயற்கை’ இரசிகனாக காட்சியளிக்கிறான் கோவலன்.

பாராட்டுரையில், சொல்வதற்கு பொருளும், சொற்களும் இல்லாத உச்சத்தில் பாராட்டுதல் அகவாழ்வில் இன்பத்தைத் தரும்.

• பொன் போன்றவள்
• முத்து போன்றவள்
• கரும்பு
• தேன்
• பெண்களுள் சிறப்பு

தந்தையைப் போற்றல் – ‘பெருங்குடி வணிகன் பெருமட மகளே’

 ‘மலையிடைப் பிறவா மணியே எ ன்கோ!
 அலையிடையேப் பிறவா அமிழ்தே எ ன்கோ
 யாழிடைப் பிறவா இசையோ எ ன்கோ!’

• மலை-மணி
• கடல்-அமிழ்து
• யாழ்-இசை என்ன செல்லி உன்னைப் பாராட்டுவேன் என்று,
• உலகில் உள்ளவற்றில் உயர்ந்தவற்றைக் கூறுகிறான்.
• குடும்பப் பெருமையைச் சொல்கிறான்

அவள் பெருமையைப் புகழ்கிறான்

 தாய் – குழந்தை, காதலன் (கணவன்) – காதலி (மனைவி) இவர்களிடையே நடைபெறும் இத்தகைய சொல்லாடல் பண்பாடுடையதாகிறது.
 கனவிலும் நனவிலும் கணவன் எப்போது திரும்பிவருவான் என்று ஏங்கிக் கொண்டு, மெலிந்த வாட்டமடைந்த தோற்றத்தைக் கண்டு வருந்தி,
 ‘குலம் தரு வான்பொருள் குன்றம் தொலைந்த
 இலம்படு நாணுத் தரும் எனக்கு’ (கனாத்திறம் உரைத்த காடை 70-71)

என்ற கோவலனிடம், கணவன் வந்துவிட்டான் என்னும் வியப்பு குறியுடன் வியந்து நின்ற கண்ணகியின் நயத்தக்க சொல்லாடல்’,

 ‘நலம்கேழ் முறுவல் நகை முகம் காட்டிச்
 சிலம்பு உள கொண்மெனச் சேயிழை கேள்'(72-73)

என்றாள். கண்ணகியின் முறுவல் முகம் ஆயிரம் அர்த்தங்கள் சொன்னது.

 வளவள, கொளகொள, நொய்நொய், படபட, சிடுசிடு என்று பேசாமல், முறுவல் முகப்பண்பாட்டுடன் ‘சிலம்பு உள கொண்ம்’ என்னும் ஹைகூ, கண்ணகியின் திருந்திய தேர்ந்த சொல்லாடல், இல்லாமை, இயலாமை ஆகிய மனத்தை அறிந்த பண்பாடுடன் நகர்கிறது.

2. நட்பின் வழி சொல்லாடல் பண்பாடு :

கண்ணகியின் தோழி ‘தேவந்தி’ அருகம்புல், பூளைப் பூக்கள், நெல் இவைகளைத் தூவி ‘கணவனைப் பெறுவாயாக! ‘என கண்ணகியை வாழ்த்துகிறாள். கனவினை தன் தோழியிடம்- நம்பிக்கைக்குரியவள் என்பதால் –  கூறிய திறம், ‘நற்றிறம் கேட்கின் நகையாகும்’ என்னும் கண்ணகியின் சொல்லாடல் பண்பாடுடையதாகிறது.

தோழி, தேவந்தியின் சொல்லாடலில் காரணம், தீர்வு, தன்னை இணைத்தல் என்னும் கோணத்தில் நிகழ்கிறது.

1. கண்ணகியின் துன்பத்திற்கு முற்பிறப்பில் கணவனுக்குச் செய்ய வேண்டியதை செய்யத் தவறியதால் என்னும் காரணத்தைக் கற்பிக்கிறாள்.
2. காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் ,ரண்டு தடாகங்கள்-சோம குண்டம், சூரிய குண்டம்- உள்ளன. அப்பொய்கையில் தொழுதால் இம்மை மறுமையிலும் ,ன்பம் என்று தீர்வும் கூறுகிறாள்.
3. தன்னை இணைத்தல் : தீர்வு கூறிய தேவந்தி நாம் ஒரு நாள் போய் நீராடுவோம் என்கிறாள். இவ்வுரையாடலின் முடிவுரையாக தோழியின் கருத்தை மறுத்தோ உடன்பட்டோ கூறாமல் ஒரே வார்த்தையில் ‘பீடு அன்று’-எனக்கு பெருமை தராது என்று நட்பில் நம்பிக்கை வைத்த கண்ணகி தன் துன்பம் நீங்க அறிவுரை கூறிய தோழியின் பரிகார சொல்லாடலை நாகரிகமாக மறுக்கிறாள். நம்பிக்கையூட்டும் சொல்லாடல் நட்பு வழி நிகழ்கிறது.

3.பெரியோர் காட்டும் சொல்லாடல் பண்பாடு :

 கவுந்தியடிகள், சொல்லாடல் நிகழும் முன் கோவலன் கண்ணகியின் தோற்றத்தைப் பார்க்கிறார்.

• அழகு
• உயர்ந்த குலத்தோற்றம்
• பெரிய பண்புடைய மொழியைப் பின்பற்றுகிறவர்கள்
• அருக தேவன் திரு மொழியைப் பின்பற்றுகிறவர்கள்
• பிறழாத நோன்புடையவர்கள்
• துன்புற்றவர்கள் போல் வருத்தம்

மதிநுட்பம், தோற்றத்தைப் பார்த்து பிறர்மனதைப் படித்தல் என்னும் வழிகளில் கவுந்தியடிகளின் சொல்லாடல் நிகழ்கிறது. ‘நானும் போகிறேன் என்னுடன் வாருங்கள்’ என்று கூறவில்லை. மதுரைக்கு சென்று வரவேண்டும் என்பது என் உள்ளத்து ஆசை. ‘நானும் உங்களுடன் வருகிறேன்’ என்ற கவுந்தியடிகளின் சொல்லாடலில், பெரியோரின் பெருந்தன்மையான, பாதுகாப்பான சொல்லாடலைக் காணலாம்.

பரத்தையின் இகழ்ச்சி சொல்லைக் கேட்டதும் கவுந்தியடிகள்,
‘——————— என்
மக்கள் காணீர் மானிட யாக்கையர்
பக்கம் நீங்குமின்'(224-226)

என பொறுப்புணர்ந்து கடிந்து கொள்ளும் சொல்லாடல் காணலாம்.

• தோள் துணையாக சென்ற கவுந்தியடிகளின் அறவுரை சொல்லாடல் இரவில் நடந்த களைப்பபைப் போக்க வழி செய்தது.
• வணிகர்க்கு தன் நிலை உணர்த்த செல்லும் தான் வரும் வரை கண்ணகியை தாங்களிடம் விட்டு செல்ல நிகழ்த்தும் உரையாடல் ஒப்படைப்பு சொல்லாடல்.
• துன்பத்தின் கரணங்களை இராமன், நளன் வாழ்வில் நடந்த ஏற்றதாழ்வுகளை ஒப்பிட்டுக் காட்டி கூறும் அறிவுரை சொல்லாடல்.
• இங்கு ஒழிக நின் இருப்பு’ என்று நல்லது, கெட்டது என பாகுபாடு சொல்லி அறநெறி கூறும் சொல்லாடல்
என்று பல்நோக்கு சொல்லாடலை கவுந்தியடிகளிடம் காணலாம்.
காடுகாண் காதையில், மதுரைக்குச் செல்ல வழி கூறும் மாடல மறையோன்,
‘தென்னவன் நாட்டுச் சிறப்புச் செய்கையும்
—————————————————-
தன் நலம் திருந்த தன்மையிற் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல் இயல்பு ,ழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிமம் கொள்ளும்’
(சிலம்பு 172 : 63 – 66)

என்னும் சொல்லாடல் மாடல் மறையோனின் நயத்தகு மாண்பினைக் காட்டுகிறது.

கோவலனின் முன் வாழ்கையை அறிந்த மாடலமறையோன்
• மணிமேகலையின் பிறப்பு, கோவலன் செய்த கொடை
• கோவலனின் வீர செயல்
• கோவலன் செய்த தான தருமங்கள்
• கோவலனின் வடமொழி புலமை
• கோவலனின் சமூகப் பணி
• கோவலனின் அறிவு புலமை
என்ற அவன் சிறப்புகளை எடுத்தியம்பியதோடு அவன் வருத்தத்திற்கான காரணம் அவன் முன்வினை போலும் என்னும் சொல்லாடல், வழிநடத்தும் சொல்லாடலாக அமைகிறது.

முடிவுரை :
 சொல்லாடலில் ‘பதில்’ என்பது இங்கு அதிக முக்கியத்துவம் பெறாமல் தன் கருத்தைக் கூறல், தெரிவித்தல், வழிகாட்டுதல் என்பதைச் சுட்டுகிறது. தனிமனிதன், சமூகம், நாடு என்னும் முக்கோண வளர்ச்சி சொல்லாடல் பண்பாட்டினைச் சார்ந்துள்ளது. சொல்லாடலில் ஏற்படும் முக்கோண வளர்ச்சி சொல்லாடல் பண்பாட்டினைச் சார்ந்துள்ளது. சொல்லாடலில் ஏற்படும் பிழை பண்பாடற்ற சமூகத்தை உருவாக்கிய நிலையினை வரலாறு பதிவு செயதிருக்கிறது.

இல்லற உறவில் சொல்லாடல் பண்பாடு = நம்பிக்கையுடன் நடைபோடுகிறது.நட்பின் வழி சொல்லாடல் = தீர்வுடன் தீர்க்கமாகிறதுபெரியோருடனான சொல்லாடல் = பாதுகாப்புடன் பயணிக்கிறது என்பவை சிலப்பதிகாரம் காட்டும் உயரிய சொல்லாடல் பண்பாடாகும்.

அனுப்பியவர்: sengodi550@gmail.com