அத்தியாயம் நான்கு : குட்டிக் காதலன்
நானா சீறியதற்குப் பதிலாக எதுவுமே சொல்லவில்லை ஸோ. அவளுக்கு இருந்த ஒரே ஒரு கவலை எஜமானியின் நாசுக்கற்ற கூச்சல் வீட்டிற்கு வந்திருந்த நானாவின் அபிமானிகளின் காதில் விழுந்து , அவர்களது அபிமானம் கெட்டுவிடக் கூடாதே என்பதேயாகும்.
“ஷ்… இரைந்து பேசாதீர்கள்!” என்று சைகை செய்தாள் ஸோ. “ஆட்கள் வெளியில் இருக்கிறார்கள்” என்று மேலும் தொடர்ந்து கூறினாள்.
நானா குரலைத் தாழ்த்திக் கொண்டு ஸோவின் புகார்களுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தாள். ” நான் என்ன தமாஷ் பண்ணிக் கொண்டிருந்தேன் என்றா எண்ணுகிறீர்கள்? அவன் விடமாட்டேன் என்று மல்லுக்கட்டினான். எனது நிலையில் நீங்கள் இருந்திருந்தால் அல்லவா தெரியும்? எனக்கு வந்த கோபத்தில் அவன் கழுத்தைப் பிடித்து, நெட்டித் தள்ளிவிடலாமா என்றிருந்தது. அதுதான் சனியன் முடிந்ததென்றாலும் இங்கே வருவதற்கு வண்டி கிடைக்கவில்லை. ஓட்டமும், நடையுமாக வந்திருக்கிறேன்.” என்று தன் கஷ்ட்டங்களை விபரித்துக் கூறினாள் நானா.
பேசி முடிந்ததும் “பணம் கிடைத்தா?” என்று கேட்டாள் லெராட் மாமி.
“நல்ல கேள்வி” என்றாள் நானா எரிச்சலுடன்.
அவள் கால்கள் ஓய்ந்து அலுத்துப் போய் இருந்தன. உயிரும் உணர்வுமற்று அசதியுடன் ஒரு நாற்காழியில் தொப்பென்று விழுந்து உட்கார்ந்தாள் அவள். சட்டையுள்ளே மெல்லக் கையை விட்டு ஒரு கவரை வெளியே இழுத்தெடுத்தாள். மொத்தம் நானூறு பிராங்குகள் அதில் இருந்தன.
ஸோவும் லெராட் மாமியும் கவரையே பார்த்தார்கள். நானா கவரின் ஒரு மூலையில் ஒரு கிழிவை ஏற்படுத்தி , உள்ளே இருப்பது பணமா , வெற்றுக் காகிதமா என்று பரிசோதனை செய்திருந்தாள். பச்சை நோட்டுகள் அக் கிழிவின் ஊடாகப் பளிச்சென்று தெரிந்தன.
நானூறு பிராங்குகளுக்கும் செலவினங்களை விபரித்தாள் நானா. “முன்னூறு பிராங்குகள் லூயின் செவிலித் தாய்க்குப் போய்விடும். அப்புறம் நூறு… அதில் ஐம்பது பிராங் , லூயி சம்பந்தமான பிரயாணச் செலவுகளுக்குப் போய்விடும். மற்ற ஐம்பதும் எனக்கு வேண்டும்” ஸோ வெளியில் பலர் வந்திருப்பதாக ஞாபகம் மூட்டினாள். “இருக்கட்டும் வேலை முடிந்துதான் அவர்களைப் பார்க்க முடியும்” என்றாள் நானா. அப்புறம் இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு “யார் யார் வந்திருக்கிறார்கள்?” என்று விபரங்களை விசாரித்தாள் ஸோவிடம்.
மூவர் வந்திருப்பதாகக் கூறி முதலில் ஸ்டினர் பெயரைத் தெரிவித்தாள் ஸோ. அதன் பின் ‘கருங்குரங்கு’ கட்டிலில் காத்திருப்பதாகத் தெரிவித்ததும் “போதும் போதும்! எல்லோரையும் விரட்டிவிடு. எவரையும் பார்க்க முடியாது” என்று கூச்சலிட்டாள் நானா.
இதற்கிடையில் மீண்டும் வாசல் மணி அடித்தது. ஸோ வெளியே போய் இரண்டு ‘விசிட்டிங் கார்டு’களுடன் வந்து சேர்ந்தாள். “இரு கனவான்கள் வந்திருக்கிறார்கள். இருக்கச் சொல்லி இருக்கிறேன்” என்றாள் அவள் அமைதியாக.
நானாவுக்கு ஆத்திரம் மூக்கிற்குமேல் பொங்கியது. ஆனால் விசிட்டிங்க்கார்டுகளில் காணப்பட்ட பெயர்களைப் பார்த்தும் அவளது ஆத்திரம் அடங்கி அமைதி ஏற்பட்டது.
முபா பிரபுவும், கோர்ட் பிரபுவும் அவளைப் பார்க்க வந்திருந்தனர். அவ்ள சிந்தனையில் மூழ்கி உட்கார்த்திருந்தாள். சிறிது நேரம் கழித்து “அவர்களை உனக்குத் தெரியுமா? ” என்று கேட்டாள் ஸோவிடம். “ஒருவரைத் தெரியும். ஒரு இடத்திலே நான் பார்த்திருக்கிறேன்” என்றாள் ஸோ அர்த்தபுஷ்டியுடன்.
நானா இப்பொழுது தன்னைச் சிங்காரித்துக்கொண்டு அவர்களைச் சந்திப்பதற்குச் சித்தமானாள். சிங்காரித்து முடிந்ததும் முபா பிரபுவும், கோர்ட் பிரபுவும் நானாவின் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். “நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டேன் மன்னிக்க வேண்டும்” என்றாள் அவள் சுமுகமாக.
இரு கனவான்களும் நானாவுக்கு சம்பிரதாயரீதியில் மரியாதை செலுத்தி விட்டு உட்கார்ந்தனர்.
நானா தனது ‘டிரெஸ்ஸிங்’ கவுனில் ஒரு புதிய பூப்போல மிருதுவான தோற்றத்தோடு காட்சியளித்தாள்.
“அம்மணி எதிர்பாராதா விதத்தில் தங்களை முற்றுகை இட வந்ததற்கு மன்னிக்கவும். இக்கனவானும் நானும் இப்ப ஏழை நிவாரண நிதிக் கமிட்டியில் அங்கத்தினர்கள். உங்கள் அன்பளிப்பை எதிர்பார்த்து வந்தோம்” என்றார் முபா பிரபு.
மற்றக் கனவானும் சில வார்த்தைகள் பேசினார்: “சிறப்பு வாய்ந்த ஒரு நடிகை இங்கே வசிப்பதைக் கேள்வியுற்றதும், ஏழைகளின் குறைகளை எடுத்துக்கூறி நன்கொடை கோருவதெனத் தீர்மானித்தோம். நடிப்புத் திறமை போன்ற சிறந்த பண்புள்ளவரிடம் தாராள மனப்பான்மைக்கும் பஞ்சம் இருக்காது’ . முகஸ்துதி செய்கையில் சிலர் அசடுவழியப் பல்லைத் திறந்து காட்டுவார்களே. கோர்ட் பிரபுவும் அந்த் அரகந்தான். இந்த வார்த்தைகளைக் கூறிவிட்டு அசடுவழியச் சிரித்தார்.
நானா தலையசைத்துக் கேட்டுக்கொண்டேவந்தாள்.” ஆமாம் நீங்கள் வந்தது முற்றிலும் சரியே! என்னாலான உதவியை இந்த விதமான நல்ல காரியங்களுக்குச் செய்வதுதான் என் கொள்கை!” என்றாள் அவள் அடக்கமாக.
அப்போது திடீரென மீண்டும் மணியடித்தது. கோர்ட் பிரபுவோ தனது கதையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். ஏழைகளின் கஷ்ட்டங்களை உருக்கமாக வர்ணித்தார். உண்ண உணவில்லை. உடுக்க உடையில்லை. அய்யோ , ஏழை படும்பாட்டை எவ்வாறு வர்ணிப்பேன் என்றார்
அவர்.
நானா உள்ளத்தில் இரக்க உணர்ச்சி பீறிட்டது. அழகான அவளது குவளைக் கண்கள் குளங்களாகிவிட்டன. ஏதோ ஒரு காரணத்திற்காகக் கீழே குனிந்தாள். அவளது கழுத்தின் கீழ்ப்புறம் வெள்ளைவெளேரெனக் காட்சிதந்தது. பட்டாடையின் அடியிலே அவளது தொடைகளின் உருட்சிதிரட்சியின் சின்னங்கள் அழகாகத் தெரிந்தன.
நானா உணர்ச்சியுடன் தன்னிடமிருந்த ஐம்பது பிராங்குகளை – தன் செலவுக்காக வைத்த ஐம்பது பிராங்குகளையும் உள்ளே சென்று எடுத்துவந்து கொடுத்தாள். முபா பிரபு அதைக் கையில் எடுத்துக் கொள்ளும்போது நானாவின் மெல்லிய சருமத்தின் ஸ்பர்சம் அவருக்கு ஏற்பட்டது. அதன் பயனாக அவர் உடம்பில் ஒரு புல்லரிப்புணர்ச்சி பாய்ந்து சென்றது. நானா தனது கன்னங்குழியச் சிரித்துகொண்டே “அடுத்த தடவை நான் இதிலும் அதிகமாகத் தருவதற்கு முயலுவேன்” என்று குறிப்பிட்டாள்.
இரு கனவான்களும் மெல்ல விடைபெற்றுச் சென்றுவிட்டார்கள். நானா “போய் வாருங்கள்” என்று வழியனுப்பி வைத்தாள். அவர்கள் போனதும் ஸோவிடம் “சரியான பேர்வழிகள். என்னிடமிருந்த ஐம்பது பிராங்குகளையும் கறந்து விட்டார்கள்!” என்றாள் சிரித்துக்கொண்டே. இதுவரை அவள் புருஷர்களிடம் பணம் வாங்கித்தான் அனுபவப்பட்டிருந்தாள். இப்பொழுது ஆண்கள் தன்னிடம் பணங்கேட்டு வருவது அவளுக்கு ஒரே சிரிபாயிருந்தது.
அதன்பின் நானா தான் பார்க்கவேண்டிய மற்றவர்களைப்பற்றி விசாரித்தாள். முதலில் படுக்கை அறையில் கிடந்த ‘கருங்குரங்கைப்’ பற்றிக் கேட்டாள். அவன் போய்விட்டதாகவும் இரவு வர முடியாது என்பதைத் தெரிவிக்கவே அவன் வந்ததாகவும் கூறினாள் ஸோ.
நானாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. சனியன் வராது எனவே டாக்குனேக்குச் சொல்லி அனுப்பலாம். ஆனால் சிரிது நேரத்துக்கு முன் வரவேண்டாமென டாக்குனேக்கு தான் கடிதம் எழுதியது ஞாபகம் வரவே “சரிதான். இன்று நல்ல நித்திரை கொள்ளலாம்” என்று தீர்மானித்தாள் அவள்.
அப்புறம் ஸ்டினர். அவரைக் காண நானாவுக்கு இஷ்டமில்லை. நேற்று நாடகம் முடியும்போதே ஒரு பூங்கொத்தை அனுப்பிய அந்த மனிதர் அத்துடன் நில்லாமல் நானாவைத் துரத்தவும் ஆரம்பித்துவிட்டார். அந்த மனிதரோ பணக்காரர். வேண்டியவர்தான். எப்படியும் கைக்குள் போடவேண்டுமென்பதும் நானாவின் திட்டம். இருந்த போதிலும் அவரைக் காண அப்போது அவகாசமில்லை என்று அனுப்பிவிடும்படி உத்தரவு பிறப்பித்தாள் அவள்.
“ஆமாம், அவனை வலையில் வீழ்த்த முதலில் இப்படி விரட்டுவதுதான் சரி” என்று சிரித்துக்கொண்டே கூறினாள் நானா.
நானா அதன்பின் வீட்டில் அங்குமிங்கும் உலாவினாள். அப்போது இளைஞன் ஒருவன் வீட்டின் ஒதுக்குப்புற அறையில் பென்னம்பெரிய பூங்கொத்தோடு வீற்றிருப்பதைக் கண்டாள். “அடேயப்பா! இன்னும் இருக்கிறார்களா ஆட்கள்!” என்றாள் அவள் ஆச்சரியத்துடன். இளைஞன் முகம் நாண்த்தால் சிவப்பேறிவிட பதைபதைத்து எழுந்தான். பூங்கொத்தை என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு கையில் இருந்து அதை மறு கைக்கு மாற்றினான். பின் பழைய கைக்கே மீண்டும் கொடுத்துவிட்டுத் தட்டுதடுமாறினான். நானாவுக்கு அந்தக் காட்சியைக் காணச் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. அவள் கலகலவென்று ந்கைத்தாள்.
” என்ன! குழந்தைகளும் வருகிறார்களா? அப்போ பிள்ளைகள தங்கள் நடை வண்டியை விட்டுக் காலூன்றி நடக்க ஆரம்பித்த்தும் நானாவின் சன்னிதானத்துக்கு நேரே வருகிறார்கள்!” அவளுக்கு ஒரு திடீர் உற்சாகம் ஏற்பட்டது. தன் தொடைகளைக் கைகளால் தட்டிகொண்டே “ஓ நீ ஏன் இங்கே வந்தாய்? பிரப்பம்பழம் வேண்டுமா?” என்று கேட்டாள் தமாஷாக ஒரு தாயைப்போல.
“ஆம்” என்று வெட்கத்துடனே என்ன சொல்லுகிறேன் என்ற உணர்வேயின்றிக் கூறினான் இளைஞன். அவள் சிரிப்பும் உறசாகமும் மேலும் அதிகரித்தன. அந்த இளைஞனுக்குப் பதினேழு வயதிருக்கலாம். பெயர் ஜியார்ஜ். முதல்நாள் வெரைய்ட்டி தியேட்டரில் “நானா அபாரம்! அபாரம்!” என்று கூறி விபரம் விசாரித்தவன் அவன்தான்.
” எனக்கா இந்த மலர்கள்?’
“ஆம்”
“அப்படியானால் இதோ என் கையில் தாடா என் தம்பி”
நானா இவ்வாறு கூறிகொண்டே பூச்செண்டை வேண்டிக்கொள்வதற்காகக் கையை நீட்டிய்துதான் தாமதம், வாலிபத்தின் வைகறையில் ஏற்படும் தாங்கொணா அவாவுடனும் வெறியுடனும் அந்த இளைஞன் அவளது கரங்களை தன் கைவிரல்கள் யாவும் அவ்ளது சொகுசான சதையில் அழுந்தும்படியாக ஆசை மயக்கத்திலே அப்பிப் பிடித்துக் கொண்டான். நானா அவனது கரத்தில் ஓங்கி அறைந்த பிறகே தன் கையை நெகிழ விட்டான். அவனது முகம் நாணத்தால் ரோஜா வர்ணமாகிவிட்டது. சிறுவனை அவள் கடிந்து கொண்டாள். அவனோ செய்வதென்னவென்று அறியாது ஒரே தவியாய்த் தவித்தான். பாவம் என்று பரிதாபபட்டாள் அவள். “சரி இன்று போய்விட்டு வேறு சமயங்களில் இங்கே வா” என்று புன் சிரிப்புடனே கூறி அனுப்பி வைத்தாள் வாலிபனை.
சிறிது நேரத்தில் பிரான்ஸின் வந்தான். தன் கூந்தலை முகில்போல் பரவவிட்டு அவன் முன்னர் உல்லாசமாக அமர்ந்தாள் அவள். சீப்பை எடுத்து அவளது பொன்னிறமான சிகையைக் கோதிவிட்டு அலங்கரிக்க ஆரம்பித்தான் அவன். “இன்று அழகி ரதி நாடகத்தின் இரண்டாவது இரவு. மிக ஜோராக ஜோடனை செய்து விடுகிறேன்.” என்று கூறி நானாவின் மென்மையான் கேசத்தை அவன் தொட்டு வகிடு பிரித்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது மணி அடிக்க் ஆரம்பித்தது. ஸோ ஒடிவந்தாள். ஒருவர் பின்னொருவராக பலர் வந்து நிறைந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தாள் அவள்.எல்லோருக்கும் நானாவைப் பார்க்க வேண்டுமாம். மாடிப் படியில் ஒரே ஜனக் கூட்டம். முதலிரவு வந்திருந்த எல்லோரும், அம்முதலிரவின் தெய்வத்தின் சன்னிதானத்தில் பக்தி சிரத்தையுடன் திரண்டு கொண்டிருந்தார்கள். அந்த போதினாவின் வேலைதான் இது. எல்லோருக்கும் நானாவின் விலாசத்தைத் தாராளமாகத் தெரிவித்திருந்தான். போக்கிரி.
நானாவுக்குத் தான் மூட்டிய மோகப்புயலின் வேகம் இப்போது தெரிய ஆரம்பித்தது. அதை நினைத்ததும் தன் சக்தியை எண்ணிப் பெருமிதம் கொண்டாள் அவள். அந்தக் குட்டிக் காதலனின் கள்ளங்கபடற்ற ஆசை முகமும் அவள் சிந்த்னையிலே மிதந்து வந்தது. பென்னம் பெரிய மரங்கள் மட்டுமல்ல, சின்னஞ்சிறு பூஞ்செடிகளும் அந்தப் புயலிலே சிக்கி நிலைதடுமாறுகின்றன என்பதை நினைத்ததும் ஒருவித திருப்தி அவளது உள்ளத்திலே ஊற்றெடுத்தது.
நானா அவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டு காலத்தைக் கழிக்கப் போவதில்லை. நாடகத்துக்கு நேரமாகிக் கொண்டிருந்தது. எனவே அவளுடலிலே அவசர உணர்ச்சி பரவிக் கொண்டிருந்தது. அவள் கைகளிலே அப்பொழுது ஒரு செம்புச் சல்லிகூட இல்லை என்பது அவளுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது. பிரான்ஸினைப் பார்த்து ” ஒரு ஐந்து லூயி காசு உன்னிடம் இருக்கிறதா?” என்று கேட்டாள்.
பிரான்ஸின் பதில் பேசமுன் “அதற்குப் பிணை எதுவும் வேண்டுமானால் அதோ” என்று தன் பக்தர் பரிவாரம் காத்திருந்த அறையின் திக்கை நோக்கிச் சுட்டிக் காட்டினாள் புன் சிரிப்புடன். பிரான்ஸின் காசை எண்ணிக் கொடுத்து விட்டு கடையைக் கட்டியதும் லபோர்தெத் வந்திருப்பதாக ஸோ தெரிவித்தாள். லபோர்தெத் காத்திருக்கும் பேர்வழியல்ல; நேரே நானாவின் அறையுள் நுழைந்தான். நானா அவனிடம் ஒரு காரியத்தைச் செய்து தரும்படி கேட்டிருந்தாள். அதைச் செய்து முடித்தாகிவிட்டது என்பதைத் தெரிவிக்கவே அவன் வந்தான்.
நானா இப்பொழுது உடுத்திக் கொள்ள ஆரம்பித்தாள். மிக விரைவாகவே காரியத்தை முடித்துக் கொண்டு “லபோர்தெத், வா பின்வாசலாம் போய் விடுவோம்” என்று துரிதப் படுத்தினாள். வெரைய்ட்டி தியேட்டருக்கு நேரமாகிக் கொண்டிருந்தது. “வந்தவ்ர்கள் காத்திருந்துவிட்டுப் போகட்டும். அதுவும் எனக்குப் பெருமைதான். அவர்கள் என்மீது கொண்ட் மோகம் இன்னும் அதிகரிக்கும்” என்று சிந்த்னை செய்து கொண்டாள் அவள்.
லபோர்தெத்தும் , நானாவும் பின் வாசலால் போய் விட்டார்கள்.
(தொடரும்)
அடுத்த இதழில் 5ம் அத்தியாயம் நானாவின் நள்ளிரவு விருந்து.
– 28.10.1951ல் சுதந்திரன் வாரப்பதிப்பு. –
-ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரான அறிஞர் அ.ந.கந்தசாமி புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஸோலாவின் ‘நானா’ நாவலை மொழிபெயர்த்துச் ‘சுதந்திரன்’ பத்திரிகையில் வெளியிட்டார். அ.ந.க. பல மொழிபெயர்ப்புகளைப் பணிநிமித்தமும், எழுத்துக்காகவும் செய்துள்ளாரென்று அறிய முடிகிறது. அவற்றில் பெட்ராண்ட் ரஸலின் ‘யூத அராபிய உறவுகள்’, சீனத்து நாவலான ‘பொம்மை வீடு’, மேலும் பல கவிதைகள், மற்றும் ‘சோலாவின் ‘நானா’ போன்றவற்றைப் பற்றிய தகவல்களே கிடைக்கப்பெறுகின்றன. அ.ந.க.வின் ‘நானா’வின் , எமக்குக் கிடைத்த பகுதிகளை’ ஒரு பதிவுக்காக பதிவுகளில் பதிவு செய்கின்றோம்.
எமிலிசோலாவின் நாவலான ‘நானா’வைச் சுதந்திரனில் மொழிபெயர்த்து அ.ந.க. வெளியிட்டபோது அது பெரும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியதை சுதந்திரனில் பிரசுரிக்கப்பட்டுள்ள கடிதங்களிலிருந்து அறியமுடிகின்றது. அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் ‘நானா’ சுதந்திரனில் 21-10-51தொடக்கம் -28-8-1952 வரையில் மொத்தம் 19 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. முதலாவது அத்தியாயம் ‘முதலிரவு’ என்னும் தலைப்பிலும், பத்தொன்பதாவது அத்தியாயம் ‘போலிஸ்’ என்னும் தலைப்பிலும் வெளிவந்துள்ளன. நாவல் வெளிவந்தபோது வெளிவந்த வாசகர் கடிதங்களிலிருந்து பெரும்பாலான வாசகர்களை நானா அடிமையாக்கி விட்டாளென்றுதான் தெரிகின்றது. எதிர்த்தவர்கள் கூட அ.ந.க.வின் மொழிபெயர்ப்பினைப் பெரிதும் பாராட்டியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. நாவலை அ.ந.க தனக்கேயுரிய அந்தத் துள்ளுதமிழ் நடையில் மொழிபெயர்த்துள்ளார். நாவல் காரணமாகச் சுதந்திரனின் விற்பனை அதிகரித்துள்ளதையும், நானாவை வாசிப்பதில் வாசகர்களுக்கேற்பட்ட போட்டி நானா வெளிவந்த சுதந்திரனின் பக்கங்களைக் களவாடுவதில் முடிந்துள்ளதையும் அறிய முடிகிறது. . மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவாவும் ஒரு கடிதம் எழுதியிருகின்றார். ‘நானா’ பற்றி வெளிவந்த வாசகர் கடிதங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.
‘”நானா” கதை சுதந்திரனில் வெளிவரத்தொடங்கிய பின்பு மார்க்கெட்டில் சுதந்திரன் பத்திரிகைக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பலர் கடைகளுக்குச் சென்று பத்திரிகை கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றுள்ளதை நான் கண்ணாரக் கண்டேன். அதனால் பலர் சேர்ந்து ஒரு பத்திரிகையை வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏறபட்டுள்ளது. தமிழாக்கம் அபாரம்’ இவ்விதம் தனது கருத்தினை எழுதியிருக்கின்றார் செம்மாதெரு, யாழ்ப்பாணத்திலிருந்து டொமினிக் ஜீவா.
கொள்ளுப்பிட்டியிலிருந்து எம்.மாதவன் என்பவர் பின்வருமாறு குமுறியிருக்கின்றார்: ‘நானா’ கதையைத் தொடர்ச்சியாகப் படித்து வருகின்றேன். ஆனால் அந்தப் பிரதிகளைக் கூட அற்பத்தனமாகக் களவெடுத்துவிடும் கயவர்கள் உலகில் இல்லாமலில்லை. ஒரு நண்பன் ‘நானா’ பக்கங்களைப் பார்த்தே திருடி எடுத்து விட்டான். என் குறையை வேறு யாரிடம் சொல்லி அழுவது? இவ்வளவுக்கும் காரணமான உங்களிடமே கூறிவிட வேண்டுமென்று இதை எழுதுகிறேன்.’
சென்னையிலிருந்து ‘செங்கோல்’ பதிப்பகத்தைச் சேர்ந்த வே.கணபதி என்பவர் பின்வருமாறு எழுதியுள்ளார்: ‘எமிலி ஸோலாவின் அற்புதமான கதையை அழகான தமிழில் தந்து வருகின்றீர்கள். தமிழறிந்தோரிடையே ஸோஸாவின் நூலைத் தங்கள் பத்திரிகைதான் அறிமுகம் செய்து வைக்கிறது என்று நினைக்கின்றேன். இந்த முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.’
‘சமுதாயப் பதிப்பகம்’, சென்னையிலிருந்து சம்பந்தன் என்பவர் பின்வருமாறு எழுதியிருக்கின்றார்: ‘சுதந்திரனில் தொடர்ந்து வெளியாகும் ‘நானா’ வின் முதற் பகுதியைப் படித்தேன். கதையின் சுவையில் ஆழ்ந்து போனேன். அது ஒரு மொழிபெயர்ப்புக் கதையாகவே தோன்றவில்லை… நானா ஒரு வெற்றிகரமான மூலத்தின் சுவை குன்றாத அற்புத மொழிபெயர்ப்பு என்பதில் சந்தேகமில்லை’. இவர்களுடன் இன்னும் பலரின் கடிதங்கள் ‘அருமையான கதை- சுவை குன்றாத் தமிழாக்கம்’ என்னும் தலைப்பில் 18-11-51 சுதந்திரன் இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இது போல் 30-12-51 சுதந்திரன் இதழிலும் ‘நானா திசையிலிருந்தும் ‘நானா’வுக்குப் பாராட்டு’ என்னும் தலைப்பில் பல வாசகர் கடிதங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. நானாவை வரவேற்றும், எதிர்த்தும் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றார்கள்.- ஆசிரியர் –