செங்கை ஆழியானின் ‘ஆச்சி பயணம் போகின்றாள்’
தமிழில் வெளிவந்த நகைச்சுவை நாவல்களில் ஈழத்தில் வெளியான நகைச்சுவை நாவல்களுக்குமிடமுண்டு. அந்த வகையில் செங்கை ஆழியானின் ‘ஆச்சி பயணம் போகின்றாள்’ நாவல் முக்கியமானது. தன் வாழ்நாளில் ஒரு தடவை கூடப் புகையிரதத்தில் ஏறாத ஆச்சிக்கு அந்தச் சந்தர்ப்பம் அவரது முதிய பருவத்தில் ஏற்படுகிறது. கதிர்காமம் செல்வதற்காக அவரை அழைத்துக்கொண்டு ஆச்சியின் கடைசி மகன் சிவராசனும், சிவராசனுக்காகக் காத்திருக்கும் ஆச்சியின் தம்பி மகள் செல்வியும் (இவள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிப்பவள்) செல்கின்றார்கள். ஆச்சியின் புகைவண்டிப் பயணமும், இளங்காதலர்களின் பொய்ச்சிணுங்கல்களும், மகிழ்ச்சியான தருணங்களும், நாவல் முழுக்க விரவிக்கிடக்கும் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழும், அவற்றுக்கு மேலும் துணையாக விளங்கும் ஓவியர் செளவின் ஓவியங்களும் வாசிப்பவரைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கின்றன. இந்நாவல் முதலில் ‘விவேகி’ மாத சஞ்சிகையில் தொடராக வெளிவந்தது. தொடர் முடிவதற்குள் இதன் முதற் பதிப்பு (ஏப்ரில் 1969) யாழ் இலக்கிய வட்டத்தினரால் நூலாக வெளியிடப்பட்ட இந்நாவல் அதன் பின்னர் சிரித்திரன் சஞ்சிகையில் தொடராக வெளிவந்திருக்கின்றது. அதன் பின்னர் நாவலின் இரண்டாவது பதிப்பு (அக்டோபர் 1978) ஶ்ரீலங்கா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. என்னிடமிருப்பது நாவலின் மூன்றாவது பதிப்பு. செங்கை ஆழியானின் ‘கமலம் பதிப்பகத்தினரா’ல் மே 2001இல் வெளியிடப்பட்ட பதிப்பு. ஓவியர் ‘செள’வின் ஓவியங்களுடன் நேர்த்தியாக வெளியான பதிப்பு. நூலின் முன்னுரையில் எழுத்தாளர் செம்பியன் செல்வன் இதுவே இலங்கையில் வெளியான முதலாவது நகைச்சுவை நாவலென்று குறிப்பிட்டிருக்கின்றார்.
என்னைப் பொறுத்தவரையில் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நாவலென்று இதனைக் கூறுவேன். நூலாசிரியரின் ‘நடந்தாய் வாழி வழுக்கி ஆறு’வும் எனக்குப் பிடித்த ஆசிரியரின் இன்னுமொரு நகைச்சுவை விவரணச்சித்திரம்.
எனக்கு முதன் முதலில் செங்கை ஆழியான் அறிமுகமானது அவரது ‘கங்குமட்டை’ சிறுகதை மூலம்தான். ஈழநாடு தனது 25ஆவது ஆண்டினையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற சிறுகதை ‘கங்குமட்டை’ செ.யோகநாதன் தொகுத்த ஈழத்துச் சிறுகதைத்தொகுப்பான ‘வெள்ளிப்பாதரசம்’ தொகுப்பிலும் இடம் பெற்றுள்ள சிறுகதையது.
செங்கை ஆழியானின் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் ‘வாடைக்காற்று’. பிடித்த சிறுகதை: ‘கங்குமட்டை”. இந்தச்சிறுகதையை ஈழத்தில் வெளியான சிறுகதைகளில் முக்கியமான சிறுகதைகளிலொன்றாகக்கருதுகின்றேன். இவரது ‘ஆச்சி பயணம் போகின்றாள்’ எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நாவல்களிலொன்று.
செங்கை ஆழியானின் வாடைக்காற்றும் , பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரமும்!
எனக்கு எழுத்தாளர்களின் புனைவுகளைப்போல் அபுனைவுகளும், குறிப்பாக அவர்கள் தம் படைப்புகளை மற்றும் வாழ்வனுபவங்களைப் பற்றி எழுதும் அபுனைவுகளை மிகவும் பிடிக்கும். அண்மையில் எழுத்தாளர் செங்கை ஆழியானின் ‘நானும் எனது நாவல்களும்’ நூலினை வாசித்துக்கொண்டிருந்தபொழுது அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு விடயம் என் கவனத்தைக்கவர்ந்தது.
அதிலவர் ஒருமுறை இலங்கை வந்திருந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் அச்சமயம் இலங்கையில் திரைப்படமாக வெளியாகியிருந்த ‘வாடைக்காற்று’ திரைப்படத்தைப்பார்த்துப் பாராட்டி, , அந்நாவலின் பிரதியொன்றினைப்பெற்று, தான் இந்தியாவில் மீண்டும் அந்நாவலைத் திரைப்படமாகத்தயாரிக்கப்போவதாகக்கூறிச் சென்ற விபரத்தினைப்பகிர்ந்திருக்கின்றார். அது பற்றி மேலும் தனது நூலில் அவர் குறிப்பிட்டுள்ள விடயத்தைப்பாருங்கள்:
“மேஜர் சுந்தரராஜன் எடுத்துச்சென்ற நாவலை என்ன செய்தார் என்பதோ, அவர் பார்த்து ரசித்த ரசனையை என்ன செய்தார் என்பதோ எனக்குத்தெரியாது. ஆனால் தென்னிந்தியப்படவுலகில் முன்னணி இயக்குநர் கே.பாரதிராஜாவின் ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தைப்பார்க்க நேர்ந்தது. எவ்வளவு அற்புதமாக வாடைக்காற்று திருடப்பட்டிருக்கிறது என்பதைப்புரிந்துகொள்ள முடிந்தது. வாடைக்காற்றில் இரண்டு மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக ஒரு கிராமத்துக்கு வருகின்றார்கள். கல்லுக்குள் ஈரத்தில் இரு வாலிபரகள் ஒரு கிராமத்திற்குத் திரைப்படம் பிடிப்பதற்காக வருகின்றார்கள். அக்கிராமத்தில் வாடைக்காற்றில் வருவதுபோல் இரு பெண்கள். வாடைக்காற்றின் வித்தியாசமான பாத்திரமான கையில் கூர் ஈட்டி ஏந்திய விருத்தாசலம், கல்லுக்குள் ஈரத்திலும் கூர் ஈட்டியுடன் வருகின்றான். உணர்வு பிறழ்ந்த சண்முகம் இங்கும் வருகிறான். அதே கதை; அதே சம்பவங்கள். பாரதிராஜா தயாரித்திருந்தார். யாரிடம் போய் முறையிடுவது இந்த மோசடியை?”
நகைச்சுவை எழுத்தாளர் த.இந்திரலிங்கம்:
நகைச்சுவை எழுத்தாளர் த.இந்திரலிங்கம்: என் பால்யகாலத்தில் இலங்கையில் வெளிவந்துகொண்டிருந்த ‘சிந்தாமணி’ பத்திரிகையில் (தினபதி பத்திரிகையின் ஞாயிறுப் பதிப்பு சிந்தாமணி என்னும் பெயரில் வந்துகொண்டிருந்தது) த. இந்திரலிங்கம் என்னும் எழுத்தாளர் நகைச்சுவை ததும்பும் படைப்புகளை எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதிய தொடரொன்று ஞாபகத்திலுள்ளது. அத்தொடரின் பெயர், பாத்திரங்களின் பெயர்கள் எல்லாம் மறந்து விட்டாலும், தொடரின் மையக் கரு இன்னும் ஞாபகத்திலுள்ளது. யாழ்ப்பாணத்து மணிக்கூட்டுக் கோபுரத்துக்கருகிலுள்ள முற்றவெளியிலிருந்தென்று நினைக்கின்றேன் சிலர் சந்திரனுக்கு ‘ராக்கட்’ மூலம் பயணிக்க விளைகின்றார்கள். ‘அப்புக்குட்டி’ ‘மணியண்ணை’ போன்ற பாத்திரங்களுடன் , சிறுவனொருவனும் விண்வெளி வீரர்களாகப் பயணிக்கின்றார்களென்று எண்ணுகின்றேன். பனங்கள்ளை ராக்கட்டுக்குரிய எரிபொருளாகப் பாவித்து ஒரு வழியாக ராக்கட்டில் புறப்படுகின்றார்கள். இவ்விதம் பலத்த ஆரவாரங்களுடன் புறப்பட்டவர்களின் விண்வெளிக்கப்பலுடனான தொடர்பு அறுந்து விடுகின்றது. தொடர்பு அறுவதற்கு முன்னர் அவர்கள் தரையினைக் கண்டது பற்றி அறிவிக்கின்றார்கள். பூமியிலிருந்தவர்களெல்லாரும் விண்வெளிக்கப்பலில் சென்றவர்கள் நிலவில் இறங்கிவிட்டதாக எண்ணுகின்றார்கள். அவர்களது நிலை பற்றிக் கவலையுறுகின்றார்கள். ஆனால் தொடரின் இறுதியில்தான் தெரிய வருகிறது அவர்கள் இறங்கியது நிலவிலல்ல , பரந்தனுக்கு அருகிலுள்ள பிரதேசமொன்றிலென்று. இவ்விதமாகத்தான் எனக்கு ஞாபகமிருக்கிறது. என் ஞாபகத்தில் பிழைகள் இருக்கக்கூடும். ஆனால அன்றைய காலகட்டத்தில் விழுந்து விழுந்து சிரித்துச் சிரித்து மேற்படி தொடரினை வாசித்தது மட்டும் இன்னும் நினவிலிருக்கிறது. ஈழத்தில் நகைச்சுவைப் படைப்புகளைத் தந்தவர்களில் த.இந்திரலிங்கத்தின் பெயரும் நிச்சயம் இடம்பெறும். செங்கை ஆழியானின் ‘ஆச்சி பயணம் போகின்றாள்’, முக்கியமானதொரு நகைச்சுவைப் படைப்பு. பொ. சண்முகநாதனும் நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர். எழுத்தாளர் த.இந்திரலிங்கம் தற்போது என்ன செய்து கொண்டிருக்கின்றார்? அவர் எழுதிய படைப்புகள் எவையெவை? அவை நூலுருப்பெற்றுள்ளனவா? அறிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும்.
அக்காலகட்டத்தில் சிந்தாமணியில் பல சிறுவர் தொடர்களை எழுதிக்கொண்டிருந்தார் மாஸ்ட்டர் சிவலிங்கம். தமிழகத்து வாண்டுமாமாவைப் போன்ற மிகவும் சிறுவர்களைக் கவரும் நடையில் எழுதிய மாஸ்ட்டர் சிவலிங்கத்தின் சிந்தாமணித் தொடர்கதைகள் நூலுருப்பெற்றுள்ளனவா? அறிந்தவர்கள் அறியத்தரவும்.
ngiri2704@rogers.com