சென்னையில் விரைவில் இயல்பு நிலை தோன்றி , அனைவரினதும் சிரமங்கள், துன்பங்கள் நீங்கிட அனைவரும் வேண்டுவோம். விமானநிலையம் போன்ற கட்டடங்களுக்குள் எல்லாம் எவ்வளவு வெள்ளம்! இந்திய மத்திய , மாநில அரசுகள் இதிலிருந்து பாடம் படிக்க வேண்டும். இவ்விதமான இயற்கைச்சீற்றங்களைச் சமாளிக்கும் வரையில், நகரைத்தயார் நிலையில் வைத்திருக்கும் வகையில் நகர அமைப்புத்திட்டங்களை வடிவமைத்து அமுல் படுத்த வேண்டும். இந்த மாமழை ஒன்றை அனைவருக்கும் புரிய வைத்திருக்கின்றது. காங்கிரீட் வனமாக மாறிக்கொண்டிருக்கும் நகருக்கு, இவ்விதமான சமயங்களில் விரைவாக நீர் வடிந்து போவதற்குரிய வடிகால்கள் போதுமான அளவுக்கு இல்லை என்பதுதான் அந்தப்புரிதல்.
டொராண்டோ, கனடாவிலும் இதுபோன்ற நிலையுண்டு. ஒரு மணித்தியாலம் விடாது மழை பெய்தால் போதும் நகரம் வெள்ளக்காடாக மாறிவிடும். குறிப்பாக ‘டொன் வலி பார்க்வே’ கடுகதி நெடுஞ்சாலை வெள்ளத்தால் நிறைந்துவிடும். இதற்குக்காரணமும் இங்கும் போதிய அளவு குறுகிய நேரத்தில் அதிகமாகப்பெய்யும் மழை நீர் விரைவாக வடிந்து போவதற்குரிய வடிகால் வசதிகள் போதுமான அளவு இல்லை என்பதுதான். சென்னையில் தற்போது பெய்யும் மழைபோல் பல நாள்களாக மழை பெய்தால், ‘டொராண்டோ’வுக்கும் இந்த நிலைதான் எதிர்காலத்தில் ஏற்படும்.
இந்த இயற்கையின் சீற்றத்திலிருந்து இந்திய மத்திய , மாநில அரசுகள் பாடம் படிக்க வேண்டும். நகரத்திட்டமிடல் வல்லுநர்கள் நகரொன்றுக்குப்போதிய அளவில் வடிகால்கள் இருக்கும் வரையில் அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும். சூழற் பாதுகாப்பினை மையமாக வைத்துத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். மக்களை நகரங்களை நோக்கிப் படையெடுக்காத வண்ணம், பிற பகுதிகளிலும் வேலை வாய்ப்புகள் உருவாகும் வகையிலான திட்டங்களை உருவாக்க வேண்டும்.
இலங்கையில் சிறிமாவின் அரசு இவ்விதமானதொரு நோக்கில் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தியது ஞாபகத்துக்கு வருகின்றது. நகரங்களை நோக்கி கிராமப்புறங்களிலிருந்து அதிக அளவில் மக்கள் படைபெடுப்பதன் காரணங்களில் முக்கியமானது வேலை வாய்ப்பு. அந்த மக்கள் தாம் வாழும் இடங்களிலேயே வேலை பெற்று வாழ முடியுமென்றால் ஏன் அவர்கள் நகர்களை நோக்கிப் படையெடுக்கப்போகின்றார்கள்? இதனை மையமாக வைத்து இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் மகாவலி கங்கை அபிவிருத்தித்திட்டமும். நீர் மின்சாரம், நீர்ப்பாசனம் ஆகியவற்றை மையமாக வைத்து உருவான் அத்திட்டத்தால் அந்நதியைச்சுற்றி பல வேலை வாய்ப்புகள் உருவாகின. அத்திட்டத்தைச்செயற்படுத்த வேலை வாய்ப்புகள் பல உருவாகின. மகாவலியை வடக்குக்குத் திருப்புவதாகக்கூட அக்காலகட்டத்தில் பேச்சொன்று அடிபட்டதும் நினைவுக்கு வருகின்றது. ஆனால் இனவாத அரசுகளால், அத்திட்டமும் சிங்களக்குடியேற்றங்களை உருவாக்கவே பயன்பட்டது. தமிழ் மக்கள் பெரிதாக ஏதும் பயன் அடைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அந்தத்திட்டமும் , நகர் நோக்கி வேலை வாய்ப்பு காரணமாகப்படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கையினைக் குறைப்பதை நோக்கங்களிலொன்றாகக்கொண்ட அதன் நோக்கமும் பாராட்டுதற்குரியவை.
இவ்விதமாக நகரை நோக்கிப்படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம், நகரில் அளவுக்கு அதிகமாக உருவாகும் கட்டடங்களின் எண்ணிக்கையினைக் குறைக்கலாம். மேலும் நகரில் போதுமான அளவுக்கு பூங்காக்களும், நீர்நிலைகளும் இருக்கும் வகையில் நகர அமைப்புத்திட்டங்களை மேற்கொள்வதற்குப் போதிய நிலங்களும் கிடைக்கும்.
அத்துடன் புதிய வர்த்தக நிறுவனங்களுக்குரிய கட்டடங்களையெல்லாம் ஒரேயடியாக மாநகரின் எல்லைக்குள்ளேயே கட்டாமல், நகரின் வெளிப்புறமாக உள்ள இடங்களில் , இயற்கைக்கு ஊறுவிளைவிக்காத வகையில் கட்டும் வகையிலான நகர அமைப்புத்திட்டங்களையும் முன்னெடுக்கலாம்.
இது போன்ற திட்டங்களை முன்னெடுத்து , கிராமப்புறத்திலிருந்து சென்னை போன்ற நகர்களை நோக்கிப் படையெடுக்கும் மக்களைத்தடுக்கும் வகையிலான திட்டங்களை முன்னெடுத்து, விவசாயிகள் இலாபமடையும் வகையில் திட்டங்களை முன்னெடுத்து, விவசாய நிலங்களை வீடு கட்டும் நிறுவனங்களிடமிருந்து பாதுகாக்கும் வகையிலான சட்டங்களை உருவாக்கி, போதிய வடிகால் வசதிகளுடன் கூடிய நகர்களை உருவாக்கினால் , இன்று சென்னை அடைந்திருக்கும் நிலை போன்ற நிலை எதிர்காலத்தில் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.