முனைவர் பால சிவகடாட்சத்தின் சரசோதிமாலை ஒரு சமூக பண்பாட்டுப் பார்வை சோதிடமாலைக்கு ஓர் மாலையா?

சரசோதிமாலைமுனைவர் பாலகடாட்சத்தின் சரசோதிமாலைத.சிவபாலுமுகவுரை
‘சரசோதி மாலை’ என்னும் சோதிடம் பற்றிய நூல் இலங்கையில், தென்னகத்தில் அமைந்திருந்த தம்பதெனிய என்னும் வரலாற்று இராசதானியில் கி.பி. 1310 ஆண்டளவில் அரங்கேற்றப்பட்ட தமிழ் நூலாகும்.  பண்டைய தமிழ் நூல்களைத் தேடியெடுத்து அவற்றைப் பதிப்பிக்கும் பணி ஈழத்தவரான ராவ்பகதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை மற்றும் தமிழ் பற்றுக்கொண்டவரான தமிழ் நாட்டைச் சேர்ந்து உ.வே.சாமிநாத ஐயர் ஆகியோரைப் பின்பற்றி பல முயற்சிகள் காலங்காலமாக இடம்பெற்றுவருவது கண்கூடு. இவ்வகையிலே ‘சரசோதி மாலை’ கொக்குவில் சோதிடப் பிரகாசயந்திர சாலையில் மூன்று முறை பதிப்பிக்கப்பட்டுள்ளமையை ஆசிரியர் எடுத்துக்காட்டுகின்றார். 1892ல் முதலாம் பதிப்பும் 1909ல் இரண்டாம் பதிப்பும், குரோதி வருடம் அதாவது 1925ல் மூன்றாம் பதிப்பும் இடம்பெற்றுள்ளது. இதனை மறுபதிப்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2014ல் பதிவு செய்துள்ளது. இந்த நூலை அறிமுகம் செய்யப்புகுந்த கலாநிதி பாலசிவகடாட்சம் அவர்கள் அதனைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக “சரசோதிமாலை ஒரு சமூகப் பண்பாட்டுப் பார்வை” என்னும் படைப்பினை கனடாவில் கடந்த யூன் 6. 2015 அன்று அறிமுகம் செய்துவைத்தார்.

சரசோதி மாலைக்கு ஒரு மாலையா?
‘சரசோதிமாலை’ என்ற பண்டைய படைப்பின் முக்கியத்துவம் என்ன? இதனை ஏன் மீள் பதிவாக்கம் செய்யப்படவேண்டும்? இதன் பயன்பாடு எத்தகையது? நாம் வாழும் காலகட்டத்திற்கு இந்நூல் ஏற்புடையதா? இது யாரைச் சென்றடையும்? என்பனபோன்ற கேள்விகள் நம்முன்னே எழுகின்றன.  மனித வாழ்வு இயற்கையோடு ஒட்டியது. இயற்கையின் செயற்பாடுகளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய விஞ்ஞானபூர்வமான ஒரு பார்வையை அல்லது ஆய்வினை மேற்கொள்ளுவதன் மூலமே தமிழனின் பாரம்பரியத்தையும் அவனது வாழ்வியலையும் அறிந்துகொள்ளமுடியும். பதினான்காம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஈழத்தின் தென்பகுதியை ஆட்சிசெய்த மன்னனான பராக்கிரமபாகு சோதிட நூலான ‘சரசோதி மாலை’யை இந்தியாவில் இருந்து வருவிக்கப்படட போஜராஜ பண்டிதரை ஆக்கும் வண்ணம் வேண்டியதன் பயனாக கி.பி. 1310ல் தனது அரசவையில் அரங்கேற்றம் செய்வித்தான் என அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரசோதி மாலை பற்றி அறிந்திருந்த கலாநிதி பால சிவகடாட்சம் அவர்கள் தனது கற்கைத்துறையான தாவரவியிலை விடுத்துச் சோதிட நூல்பற்றி ஆராய முற்றபட்டது ஏன்? என்ற வினாவிற்கும் அவரது ஆய்வினை நுணுகி நோக்குவதன் மூலம் அறிந்துகொள்ளமுடியும்.  அவரது ஆராய்வூக்கமும் தமிழர் சமூகத்தின் மீது கொண்டுள்ள பற்றுதல் மட்டுமன்றி எம்முன்னோர் எமக்காக விடுத்துச் சென்ற அறிவியல் பற்றிய உண்மைகளை உலகறிய வைக்கவேண்டும் என்ற உந்துதலும் அவரது பெற்றோர் வாழையடி வாழையாகக் செய்துவந்த மருத்துவம், சோதிடம் போன்ற துறைகளில் பெற்றிருந்தத தேர்ச்சியும், அனுபவமும் அறிவாற்றலும் இதற்கு அடிப்படைக் காரணிகளாக அமைந்துள்ளன என ஊகிக்க இடமுண்டு.

யார் இந்தக் கலாநிதி பால சிவகடாட்சம்
முனைவர் பால சிவகாடாட்சம் அவர்கள் இலங்கையின் வடபுலத்தமைந்த சப்த தீவுகள் எனப்படும் பகுதியில் சரவணை என்னும கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவரது தந்தையார் கிராமத் தலைமைக் காரராகப் பணியாற்றியதோடு கிராமிய வைத்தியராகவும் மக்களுக்கு நற்பணி புரிந்துள்ளார். அத்தோடு பிறப்புக் கான ஜாதகத்தைக் கணித்து குறித்துக் கொடுப்பதிலும், திருமணப் பொருத்தம் பார்ப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்துள்ளார். இவர் தனது தந்தைவழி இவற்றைக் கற்றுக்கொண்டுள்ளமையோடு அவர்களால் பேணிப்பாதுகாக்கப்பட்டுவந்து ஏட்டில் எழுதப்பட்டிருந்த மருத்துவ வாகடம், ஜோதிடம் என்பன இவரது செவிப்புல ஞானத்திற்குப் பால்வார்த்தது போன்று கட்புல அறிவையும் வளர்க்கக் காரணமாக அமைந்திருந்தது. பரம்பரை பரம்பரையாக மருத்துவத்தையும், சோதிடத்தையம் பின்பற்றி வந்த மரபில் வந்துதித்தமையும் ஒரு பின்னணிக் காரணியாகவும் அமைந்துள்து.

நூலின் கருப்பொருள்
இந்த நூலில் அவரது கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து பின்வரும் தலைப்புக்களில் ஒழுங்கமைத்துத் தந்துள்ளார்:  
1.காலக்கணித வரலாறு
2.சரசோதிமாலை அறிமுகம்
3.சரசோதிமாலையும் காலக்கணிதமும்
4.பண்டிகை நாள்களும் தெய்வவிரத நாள்களும்
5.சரசோதிமாலை கூறும் இல்லறச் சடங்குகள்
6.வெள்ளாண்மை
7.வீடு கட்டும் படலம்
8.மருத்துவக் குறிப்புகள்
9.தேசங்களின் இராசிகள்
10.சரசோதி மாலையைப் போன்ற பழந்தமிழ்ச் சோதிட நூல்கள்,

காலக்கணித வரலாறு
காலக்கணித வரலாறுபற்றிய அவரது பார்வையில் உலகில் தோன்றிய காலக்கணிதம் பற்றிக்குறிப்பிடும்போது கிரேக்கத்தை முதனிலைப் படுத்தியுள்ளார். அங்கு சப்தரிஷிகள் எனப்படும் அறிஞர்கள் வானிலைபற்றி தெளிந்த அறிவு பெற்றிருந்தனர் என்பதனைக் குறிப்பிடும் அவர் லிடியா, மெடேஸ் நாடுகளுக்கிடையே நடந்த நீண்டகாலப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த சூரிய கிரகணம் பற்றிக்குறிப்பிடுகின்றார். இதனை முன்கூட்டியே கிரேக்கத் தத்துவியலாளர்கள் அறிந்திருந்தனர் என்பதனையும் குறிப்பிடுகின்றார். எகிப்தில் வாழ்ந்த குளோடியஸ் தொலமியின் வானியல் அறிவு பற்றிக் குறிப்பிட்டுள்ள சிவகடாட்சம், பூமியைச் சற்றித்தான் கிரகங்கள் வலம்வருகின்றன என்ற கருத்தைக் தொலமி கொண்டிருந்தமையைக் குறிப்பிடுகின்றார். தமிழரின் வானியல் அறிவினை சிவகடாட்சம் வியந்து உரைத்துள்ளமைக்குச் சான்றாக 1825ல் நிகழ்ந்த சூரிய கிரகணத்தைக் குறித்துக்கொடுத்த தமிழ் சோதிடர்களின் காலக்கணிதத்தைச் சான்றாக்கியுள்ளார்.  இந்தக் கணிப்பீட்டிற்கும் மேலை நாட்டவர்களின் தொழில்நுட்பவியல் கணிப்பீட்டிற்குமிடையே 4நிமிடங்கள் மாத்திரம் வித்தியாசம் இருப்பதை அறிந்த கிழக்கிந்திய வர்த்தக் கொம்பனியின் லெப்ரினன் கேணல் ஜோன் வாரன் என்பான் வியந்து கூறியமையை சான்றாக்குகின்றார். “அதிகம் படித்திராத ஒரு தமிழ்ச்
சோதிடர் ஒரு சில வாக்கியங்களை மாத்திரம் பாடமாக்கி வைத்துக்கொண்டு கிரகணம் தோன்றும் காலத்தை மிகத் துல்லியமாகக் கணித்தது விய்பபானதுதான். ஆனால் அதைவிட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மெசப்பத்தேமியாவிலும் பின்னர் கிரேக்கத்;திலும் கி.பி. ஏழாம நு{ற்றாண்டில் இந்தியாவின் காலக்கணதர் வராகிமிகிரராலும் பின்பற்றப்பட்ட அதே கணித முறை இன்றுவரை தொடர்ச்சியாக அறியப்பட்டும் பின்பற்றப்ப பட்டும் வருவதுதான் எனக்கு வியப்பை அளிக்கின்றது”.
என்பதனைக் காட்டி இந்திய பாரம்பரிய சோதிடக் கலைபற்றிப் பெருமிதப்படுவதற்குக் காரணமாக்குகின்றார். எனினும் இந்திய ஜோதிடக் கலைக்கு முன்னரே கிரேக்கர், உரோமர், எகிப்தியர் போன்றோர் வானியல் பற்றி அறிந்துள்ளனர் என்பதனை சுட்டிக்காட்டவும் அவர் பின்நிற்கவில்லை.  

எழுதவைத்தவனும் எழுதியோனும்
‘சரசோதி மாலை’ எனும் நூலின் ஆசிரியர், பாடுவித்தவர், நிகழ்விடம் போன்ற விடயங்களை உள்ளடக்கிய பாடல் நூலின் வரலாற்றைத் தெளிவுபடுத்துகின்றது.

 

உரைத்த சகவருட முறுமாயிரத் திருநூற்
றொருநா லெட்டி லிலகுவசந்தந் தன்னிற்
றரித்திடு வைகாசிபுதன்பனையி னாளில்
றம்பைவளர் பராக்கிரம வாகு பூப
னிருத்தவையிற் சரசோதி மாலையீரா
றெய்துபடல நூற்றொன்பான் முப்பானான்காம்
விருத்தமரங் கேற்றினாற் போச ராச
விஞ்சைமறை வேதியானம் புலவ ரேறே!

இப்பாடலில் இருந்து இது 1310ல் எழுதப்பட்டு அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பதும் இது பராக்கிரமபாகு மன்னனின் ஆட்சியில், அவனால் எழுதுவிக்கப்பட்டது என்பதும் போசராசன் என்னும் அந்தணரால் தொழியிரத்து முப்பத்து நான்கு விருத்தப் பாக்களினால்  எழுதப்பட்டது என்பதும், இந்த நூலில் பன்னிரு படலங்களும் உள்ளதெனவும் உணர முடிகின்றது. இதனை தனது பார்வையில் வாசகர்களுக்கு ஐயம் ஏற்படாவகையில் சிவகடாட்சம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “சகவருடம் 1232க்குச் சமமான கி.பி.1310 ஆம் ஆண்டின் வைகாசி மாதத்தில் வரும் நான்கு புதன் கிழமகளுள் அனுஷநட்சதத்திரமும் சேரம் நாள் ஜீன் மாதம் 10 ஆம் திகதி வரும் புதன் கிழமையே ஆகும். என ஶ்ரீரங்க ஜோதிட கணிதத்தை ஆதாரமாகக் காட்டிச் சான்று பகருகின்றார்.

காலக்கணிதமும் தமிழரும்
தமிழரின் சோதிட ஞானம் பற்றிக்குறிப்பிடப்போந்த முனைவர் சிவகடாட்சம் “புராதன இந்தியர்களின் பாலக்கணிதம் தனித்துவமான அம்சங்கள் பலவற்றை உள்ளடக்கி நிற்பதை மறுக்கமுடியாது. சந்திரனின் கலைகளை அடிப்படையாகக்கொண்டு திதி எனப்படும் நாள்களையும் சாந்திர மாதங்களையும் வகுத்தவர்கள் இந்தியர்களே” எனக்குறிப்பிடுவதில் இருந்து. தமிழகத்தில் மிக நீண்டகாலமாக காலண்கணித முறை பின்பற்றப்பட்டு வருவதினை அறியமுடிகின்றது. அத்தோடு 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காலத்தைக் கணிக்கும் கலண்டர் முறையை உருவாக்கியவர்களும் இந்தியர்களே எனக்குறிபிட்டு அதற்கு அவர்கள் வகுத்துக்கொண்ட சதுர்யுகங்கள், மனுவந்திரங்கள், கல்பங்கள் அனைத்தும் இந்தியரின் கணிப்பு எனக்குறிப்பிடுவதில் இருந்து வானவியலில் இந்தியர்கள் முன்னோடிகளாக இருந்துள்ளனர் என உணரமுடிகின்றது. இவற்றைவிட சங்க இலக்கியங்கள் கூறும் நாள், கோள், காலக்கணித முறைகளையும் அவர் ஆதாரமாக் காட்டப் பின்நிற்கவில்லை. எனினும் கிரேக்கர்களின் வானியல் அறிவியலையும் அவர் வியந்து போற்றுகின்றார்.  இந்தியாவில் இருந்து வானவியல் அறிவியல் மேற்கு நோக்கிச் சென்றிருத்தல் வேண்டும் என்னும் கருத்தையும் எடுத்துக்காட்டும் அவரது ஆய்வுப்பணி மேலும விரிவடையவேண்டும் என்பதனைக் கருத்தூன்றிக் கவனித்தல் வேண்டும்.

தமிழர் வாழ்வியலில் சோதிடம் என்பது மிக நெருக்கமான பிணைப்பை மிக நீண்டகாலமாக் கொண்டுள்ளது. சோதிடம் மனித வாழ்வைப் பற்றிய உட்பொருளை தெளிய வைக்கின்றது என்னும் கருத்து நிலவிவருகின்றது. ஜாதகம் எழுதிவைத்தல், ஜாதகம் பார்த்தல், திருமணப் பொருத்தம் பார்த்தல், ஏர் மங்கலம் பூட்டுதல், தானியங்கள் விதைத்தல், பயிர் நாட்டல் வீடுகட்டுதல், கிணறு வெட்டுதல் போன்றவற்றுக்கு நாள்பார்த்தல் தொன்று தொட்டு தமிழர்களிடையே நிலவி வந்துந்துள்ளது. இந்த நூலை முதன் முதலாகப் பதிப்பித்த கொக்குவில் சோதிடப் பரிபாலன மடத்தின் உரிமையாளராக இருந்து வெங்கடேஸ்வர ஐயர் தனது பதிப்புரையிலே குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத் தக்கது.

“சரசோதி மாலையெனும் இவ்வரிய நூல் சோதிடத்தின் ஒரு நிறை களஞ்சியம். ஒருவன், சாதாரண குடிமகனாயினும் மன்னனாயினும், அவனுக்கு இகம் பரம் ஆகிய இரண்டுக்கும் வேண்டப்படும் சோதிட நியதிகள் நிறைந்து விளங்குகின்றன. யாழ்ப்பாண விவசாய மக்களின் வாழ்க்கைக்கு வேண்டிய அத்தனையும் இதிற் காட்டப்பட்டுள்ளது. ஏர் மங்கலப் படலம், இவெர்களுக்கென்றே தனியாகச் செய்யப்பட்டது. அவ்வாறே அரசியற் படலம் அரசர்களுக்கே தனியாச் செய்யப்பட்டது. மனைசெயற் படலம், தெய்வவிரதப் படலம், சுபாசுபப்படலம், சாதகப் படலம் என்பன எல்லார்க்கும் பொதுவாகச் செய்யப்பட்டன.   அதனால் எல்லார்க்கும் வேண்டப்படும் ஜோதிட விடயங்கள் யாவும் பொதிந்துள்ளது என்பது இந்நூலின் சிறப்பியல்பு.” என்பதனை நன்கு அவதானித்துள்ள சிவகடாட்சம் அவற்றில் உள்ளவற்றை அனைவரும் அறியவேண்டும் என்னும் நோக்கோடு மீண்டும் பதிப்பிக்கவேண்டும் என எண்ணங் கொண்டதன் விளைவே இப்பதிப்பாக உருவாகியது. அவரது காலக்கணிதம் பற்றிய உரையைக் கேட்டபின்னர் உலகத்தமிழாராய்ச்சி நிறுவன அறிஞர்கள் இலங்கையில் எழுதப்பட்ட அந்த நூலைப் பதிப்பிக்க அவாவுற்றனர். அவரை அழைத்துப் பல நூறு அறிஞர்கள் மத்தியில் உரையாற்றவைத்தனர். இன்று தமிழரின் வருடப்பிறப்பு  சித்திரையிலா அல்லது தைமாதத்திலா? என்பதற்கான வரலாற்று ஆதாரத்தை சிவகடாட்சம் எடுத்துக் காட்டித் தெளியவைத்தமை அறிந்து இந்து நூலைப் பதிப்பிக்க முன்வந்தனர். அதற்காக அவர் ஆற்றிய உரையை ஒரு தனி நூலாக்கம் செய்யவும் முடிவெடுத்து அவரை அணுகினர். அவரது எதிர்பார்ப்புக் கைகூடுவதை மிக்க மகிழ்வோடு வரவேற்றார். தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு இவை கிடைக்கவேண்டும் என்னும் பொது நலன் அவரை அவ்விதம் உந்தியது. “சரசோதி மாலை – ஒரு சமூகப் பண்பாட்டு பார்வை பாகம் 1” என்ற நூலைப் பதிப்பிக்கும் உரிமையை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திடம் கொடுத்தார். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஏன் கொடுக்கவேண்டும் நாமே பதிப்பித்திருக்கலாமே என்ற வினாவும் எழுகின்றது.

உலக விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் தமிழனின் பஞ்சாங்கம்! என்னும் கட்டுரையை எழுதிய ச. நாகராஜன் அவர்கள் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு கிரக நிலைகளை அவதானித்து தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“பல பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை? இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்! உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை! இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும்? இதை நாம் ‘பேட்டன்ட்’  எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேட்டன்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும்!

தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று! அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று. ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும்! தமிழர் அல்லாத இதர பாரத மாநிலங்கள் காதி ஒன்பது எழுத்துக்கள்,டாதி ஒன்பது எழுத்துக்கள், பாதி ஐந்து எழுத்துக்கள், யாதி எட்டு எழுத்துக்கள் ஆக 31எழுத்துக்களைக் கொண்டு பஞ்சாங்கத்தைக் கணிக்கிறார்கள்!”  என அவர் ஆதங்கப்படுவதுபோன்று பால சிவகடாட்சம் ஆதங்கமும், விசனமும் கொண்டுள்ளார். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கணிக்கப்பட்டு வரும் காலக் கணிதத்தை எப்படிக் கணித்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனினும் அவை சரியாக இருப்பதனைப் பார்த்து வியப்படையாமல் இல்லை என்று குறிப்பிடுகின்றார்.  சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான திதி, வாரம், நட்சத்திரம், யோகம்,  கரணம் பற்றிய உண்மைகளைப்  பஞ்சாங்கம் தெரிவிக்கிறது.

முனைவர் பால சிவகடாட்சத்தின் இந்த நூலுக்கு மூவர் அணிந்துரை எழுதியுள்ளனர். உலகத்தமிழாராச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விஜயராகவன், முனைவர் சி.பத்மநாதன், வேந்தர், யாழ் பல்கலைக்கழகம், முனைவர் நா.சுப்பிரமணியன் முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியர், குடவாயில் பாலசுப்பிரமணியன், தொல்லியல் அறிஞர் ஆகிய நால்வர் எழுதியுள்ளனர். பாண்டித்தியம் பெற்ற இந்த நால்வரினதும் அணிந்துரைகள் மிகத் தாக்கமுள்ளவை, எனினும் நூலை வாசிக்கப்புகும் ஒருவனுக்கு அதனைப்பற்றிய அதிகப்படியான தெளிவைக் கொடுப்பதன்மூலம் உள்ளே உள்ளவற்றை வாசிக்காது ஆடு குழைகடித்த மாதிரி வாசகனை நுனிப்புல் மேயவைத்துவிடுமோ? என்ற எண்ணமும் தோன்றுகின்றது. மறுபுறம் சோதிடத்தில் பரிட்சயமற்ற என்போன்ற அறிவிலிகளுக்கு அது வரப்பிரசாதமாக அமையும் என்ற கருத்தும் தோன்றுகின்றது. அதே வேளை 128 பக்கங்கள் கொண்டுள்ள இந்த கட்டுரை நூலுக்கு 28 பக்கங்கள் கொண்ட அணிந்துரை சற்றுக் கனமாக அமைந்துள்ளது போலத்தோன்றினாலும் அந்து அணிந்துரைகளில் தரப்பட்டுள்ள விடயங்கள் நூலுக்குப் பிறிதான தகவல்களைக் கொண்டுள்ளமை வாசகர்ளைத் தூண்டுவனவாகவும், அவர்களின் வாசிப்புத்தாகத்திற்கு வித்திடுவதாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழர்களிடையே தை மாதத்திலா சித்திரை மாதத்திலா புத்தாண்டைக் கொண்டாடுவது என்னும் வினாவுக்கு விடை தருவதாக அதற்கான தொன்மை ஆவணங்கள் சான்றாகக் காட்டப்பட்டுள்ளமை அவதானிக்க முடிகின்றது. இந்த நூலுக்கு அணிந்துரை தந்தவர்களுள் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விஜயராகவன் அவர்கள் “சரசோதிமாலை எனும் இக் காலக்கணித நூல் கூறும் பல கருத்துக்களுள் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் எனும் தமிழ் நாட்டரசின் கருத்துக்ககு அரண் சேர்ப்பதற்கான சான்றுகள் உள்ள. சித்திரைப் புத்தாண்டு நாளில் நீராடுவதற்கான முறைகளையும் இந்நூற் பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன. சிங்கள அரசர்கள் மற்றும் சிங்கள பௌத்தர்கள் மத்தியிலும் சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்படுதலையும் இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்” என தனது அணிந்துரையில் சரசோதிமாலையைச் சான்றாக்குகின்றார்.

“செந்தமிழ் இலக்கியங்கள் (சங்கம், சமண -பௌத்த காவியங்கள்) காட்டும் தமிழ்ப் புத்தாண்டு தினத்திற்குத் தமிழ்நாட்டு அரசாங்கம் மீண்டுள்ளது. கொல்லம் ஆண்டு, சக வருஷாப்தம், ஹிஜிரி வருஷம். கிறித்துவ வருஷம், … என்பவற்றில் புத்தாண்டு தினம் கணக்கிடுதல் போல் தமிழ் புத்தாண்டு என்பது செம்மொழி வரையறை கொண்ட தமிழ் இலக்கியங்களைக் கொண்டு பார்த்தால் சித்திரை ஒன்று என நன்கு தெரிகிறது. மறைமலை அடிகள் செய்த கணக்குப் பிழையால் இந்தக் குழப்பம் (பொங்கல் = புத்தாண்டு) நேர்ந்துவிட்டது. தை 1-ஆம் தேதி திருவள்ளுவர் பிறந்தநாள் என்று அறிவித்தார் அடிகள். அதற்கு யாதொரு ஆதாரமும் இல்லை. மேலும் திருவள்ளுவர் வாழ்ந்த காலம் மறைமலையார் சொன்ன தேதிக்கு 500+ வருஷம் பிற்பட்டது. இலக்கியத்தில் மறைமலை அடிகட்கு முன்னர் தைப் பொங்கல் புத்தாண்டாக இருத்தலைக் காணோம். பாசி என்றால் கிழக்கு, ஊசி என்றால் வடக்கு என்று பிராகிருதச் சொற்கள் வரும் புற நானூற்றுப் பாடலைப் அடுத்ததாகப் படித்துப் பார்ப்போம். அது ஆடு  என்றுகுறிப்பிடும் ஏரிஸ் (Aries) கொண்டு தொடங்கும் பாடல் அது. ஏரிஸைக் குறிப்பிட ஆட்டின் தலை  ‘♈  யுனிகோட் சின்னமாகத் திகழ்கிறது. அந்த மேஷ ராசியில் புத்தாண்டு தொடக்கம் என்பது வசந்த காலத்தின் தொடக்கம். இப் புத்தாண்டு தமிழர்கள் வாழ்ந்து ஆட்சியில் தொடர்பு கொண்டிருந்த கேரளம், ஸ்ரீலங்கா. கம்போடியா எல்லாவற்றிலும் இன்றும் நடைமுறையில் உள்ளது. மேலும், சமணரும். பௌத்தரும் கொண்டாடிய புத்தாண்டு சித்திரை 1 தான். பஞ்சாங்கம் வைத்தே புத்த ஜெயந்தி. பரிநிர்வாண தினம். சமணர் திருவிழாக்கள் கணிக்கப்படுகின்றன.” என டாக்டர் நா.கணேசன் அவர்கள் காலக்கணிதம் தொடர்பாக சங்ககாலப் புலவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை பற்றிக்குறிப்பிடும்போது சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்பட்டதன் தொன்மை வரலாற்றைச் சுட்டிக் காட்டுகின்றார்.
இதனை கலாநிதி சிவகடாட்சம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “மேடசங்கிராந்தி நாளான சித்திரை மாதத்து முதல்நாளே புதுவருடப் பிறப்பாகக்கொண்டாடப்பட்டது. சித்திரைப் புத்தாண்டு பிறக்கவிருக்கும்போது மருத்துநீர் காய்ச்சி அந்த நீரில் தலையை நனைத்து நீராடி, புத்தாடை புனைந்து, உணவு உட்கொள்ளும்படி சரசோதிமாலையில் கூறப்பட்டுள்ளது”

சடங்குகள்
சரசோதிமாலை கூறும் இல்லறச் சடங்குகள் மக்களின் வாழ்வியலோடு ஒட்டியனவாக அமைந்துள்ளமையையும் திருமணப் பொருத்தம், பூப்புநீர்க் கொண்டாட்டம், பிறப்பு, இறப்பு ஆகியவற்றின் சடங்குகள் செய்யும் முறைகளும் அதற்கான நாட்கள் நட்சத்திரங்கள் பற்றியும் காணப்படுவதனை குறிப்பிடுகின்றார்.

வோளாண்மை செய்தற்பொருட்டு
வேளாண்மைத் துறையில் ஆசிரியருக்கு மிகுந்த ஈடுபாடு உள்ளது என்பதனை அவர் இவ் அதிகாரத்திற்குக் கொடுத்துள்ள முக்கியத்துவத்தைக் கொண்டு அறியமுடிகின்றது. ஏர்நாள், பயிர்நாட்டல், விதைத்தல், அறுவடை செய்தல், புதிரெடுத்தல் என்பனவற்றோடு பயிர்களைப் பீடைகளில்’ இருந்துபாதுகாத்தல், விலங்குகளிடமிருந்து பாதுகாத்தல் தொடர்பான விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. அத்தோடு குளம்தொட்டு வளம்பெருக்கிய இலங்கை வேந்தர்களின் கடப்பாட்டையும் மக்களுக்கு சேவை செய்யும் மன்னனின் உள்ளத்தையும் குறிப்பிடுகின்றார்.

வீடு கட்டுவதற்கான வாஸ்துசாத்திரம் பற்றிச் சரசோதிமாலை குறிப்பிடுவதனையும் அதனைக் கட்டுவதற்கான நிலத்தைத் தெரிந்தெடுக்கும் அறிவினை அக்கால மக்கள் அறிந்திருந்தனர் என்பதனையும் சரசோதி மாலையில் குறிப்பிட்டுள்ளமையின் விஞ்
ஞான பூர்வமான அறிவாற்றலைப் பற்றிக்குறிப்பிடுகின்றார்.

இந்நூல்பற்றி நல்லறிஞர்கள்
இந்த நூலைப் பற்றி பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டு அதற்குத் தகுதிச் சான்று வழங்கியுள்ளார்.
“இது ஓர் அருமையான ஆய்வுநூல். ஆய்வுநூல்களுக்கு ஒரு முன்னுதாரணமான நூல். ஆதாரமின்றி எந்தமுடிபும் அதிலே சொல்லப்படவில்லை. தமிழர் சமுதாயத்தின் சமய பண்பாட்டு மரபுகளையும் வாழ்க்கை முறையிமைனயும் புரிந்துகொள்ளவதிலும் கற்றறிவதிலும் ஆர்வமுடையோர் எல்லோரும் படிக்கவேண்டிய நூல். நூலாசிரியரின் புலமையும் ஆர்வமும் மொழிநடையும் எமது பாராட்டுகளுக்கு உரித்தானவை.”

ஒட்டு மொத்தமாக இற்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய சமுதாய அமைப்பையும் மக்கள் வாழ்வியலையும் சரசோதிமாலையின் மூலம் தெளிவாக்க முற்பட்டுள்ள ஆசிரியர், தமிழர்களின் பண்பாட்டையும் சிங்கள, தமிழ் மக்களின் வாழ்வில் முறைகளையும் சிங்கள தமிழ் மக்களுக்கிடையே இருந்த நெருக்கத்தையும், ஒற்றுமையையும், ஒத்த பண்பாட்டு விழுமியங்களையும், சோதிடத்தின்மீது மன்னர்களும் மக்களும் கொண்டிருந்த பற்றுதலையும் எடுத்தக்காட்டியுள்ளார். சோதிடம் உண்மையா? அல்லது பொய்யா என்பதற்கு அப்பால் அக்கால மக்களின் வாழ்வியலைச் சரசோதிமாலை என்னும் நூல் எமக்கு எடுத்துக்காட்டுகின்றது என்பதில் நம்பிக்கை வைத்துள்ள ஆசிரியர் அதன்வழி அக்காலப் பண்பாட்டு விழுமியங்களை அலச முனைந்துள்ளார் என்பதனை உணரமுடிகின்றது. 

அண்டத்தில் இயங்கும் ஆற்றலுக்கும் உடலுக்கும் தொடர்பு இருப்பதால் அண்டம் வேறு, பிண்டம் வேறு என்னும் பாகுபாடு இயற்கை நியதியில் இல்லை. என்பதை,

” அண்டத்தி லுள்ளதே பிண்டம்
பிண்டத்தி லுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே”

என்று, சட்டமுனிஞானம் உரைக்கிறது.  பன்நெடுங்காலமாக தமிழர் வானவியல் அறிவு மிகவும் நுணுக்கமான கணிப்பீடுகளைக் கொண்டமைந்துள்ளமையை நுணுகிப்பார்க்கவேண்டிய கட்டாயத் தேவை இன்று எழுந்துள்ளது. ஆயிரக்கணக்கான வாகடங்கள், ஏட்டுச்சுவடிகள் இன்னும் பார்க்கப்படாத நிலை காணப்படுகின்றது. இவற்றை ஆராய்வதன்மூலம் தமிழரின் நீண்டகாலப் பண்பாட்டை அறியமுடியும் என்பது எனது துணிபு.

avan.siva55@gmail.com