[எழுத்தாளர் ஆ.சி.கந்தராஜா ‘ஆசிகந்தராஜாவின் முற்றம்’ என்னும் தனது வலைப்பதிவில் பகிர்ந்துகொண்டிருந்த இக்கட்டுரையினைப் ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம் ஒரு பதிவுக்காக. – பதிவுகள் -]
‘மாறுதல் பருவம்’ என்ற ஒன்றைப்பற்றி இலக்கிய விமர்சகர்கள் பொதுவாக குறிப்பிடுவதுண்டு. இலக்கியத்திற்கு மிக உகந்த பருவம் இது. கலாச்சார மாறுதல்கள் நிகழும் போது தான் சிறந்த படைப்புகள் உருவாகின்றன. தமிழில் காப்பிய காலகட்டம், அதற்கு மகுட உதாரணம். பௌத்த, சமண மதங்களின் வருகையை ஒட்டி உருவான கலாச்சார மாறுதல் (கலாச்சார உரசல் என்று மேலும் குறிப்பாகச் சொல்ல வேண்டும்) பெருங்காப்பியங்களின் பிறவிக்கு வழிவகுத்தது. நிலைத்துபோன மதிப்பீடுகள் மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுவதனால் இலக்கியத்தின் களங்கள் மாறுபடுகின்றன. அதன் விளைவாக இலக்கிய மொழியை, இலக்கியத்திற்கேயுரிய தனி மொழியை (Meta Language) உருவாக்கி நிலை நிறுத்தக்கூடிய ஆழ்மனப் படிமங்களில் பெரும் மாறுதல்கள் உருவாகின்றன. இவ்வாறு இலக்கியம் முக்கியமான மாறுதல்களை அடைகிறது. உண்மையில் இலக்கியமாறுதல் என்பது சமூகம் கொள்ளும் மாற்றத்தின் ஒரு தடையமே. இலக்கியமாறுதல் அச்சமூக மாறுதலை மேலும் துரிதப்படுத்துகிறது. இந்திய மரபுமனம் மேற்கின் இலட்சியவாத காலகட்டத்தை எதிர்கொண்டமையின் மிகச்சிறந்த விளைவுதான் பாரதி. மாறுதல் பருவமே இலக்கிய ஆக்கத்தின் சிறந்த பின்னணி என்று நிறுவ பாரதி இன்னொரு சிறந்த உதாரணம். பாரதியில் தொடங்கிய அப்பருவம் இப்போதும் நீள்கிறது.
மாறுதல் பருவம் உற்சாகம், இக்கட்டு என்ற இரு தளங்கள் கொண்டது. மாறுதல் புதிய ஒரு வாழ்விற்கான கனவினை உருவாக்குகிறது. புதிய காலகட்டத்திற்கான சவால்களை முன்வைத்து மானுட ஊக்கத்தின் முன் சவால்களை திறந்து விடுகிறது. அதேபோல மாறுதல் மரபின் இன்றியமையாத கூறுகளை கூட பழைமை நோக்கித் தள்ளுகிறது. மனிதனின் சுயநலத்தையும் பேராசையையும் இத்தகைய மாறுதல் கணங்களே விசுவரூபம் கொள்ளச் செய்கின்றன. ஒரு உரையில் நித்ய சைதன்ய யதி இதைப்பற்றி சொன்னார். மாறுதல் காலகட்டம் சாத்தியங்களை திறந்து வைக்கிறது. சாத்தியங்கள் மனிதனின் இச்சா சக்தியை திறந்து விடுகின்றன. ஆக்க சக்தியாக வெளிப்படுவதும் இச்சா சக்தியே. சுயநலமாகவும் பேராசையாகவும் போக வெறியாகவும் வெளிப்படுவதும் அதுவே.
இலங்கை படைப்பாளிகள் புலம்பெயர்ந்த பிறகு ஒரு மாறுதல் பருவத்தின் பதிவுகள், தமிழிலக்கியத்தில் எழுந்தன. அத்துடன் இணையம் மூலம் தமிழிலக்கியத்தின் சாராம்சமான பகுதியுடன் அடையாளம் காணநேர்ந்த சில இந்தியப்புலம்பெயர் தமிழர்களும் இந்த மாறுதல் காலகட்டத்தின் இலக்கியப் பதிவுகளை உருவாக்கினார்கள். அ.முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி, ரமணிதரன், சோபா-சக்தி, கலாமோகன், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியன், சிறிசுகந்தராஜா, சக்கரவர்த்தி, வ.ந.கிரிதரன் என்று இலங்கை சார்ந்த தமிழ்படைப்பாளிகளின் புலம்பெயர் அனுபவக் கதைகள் முக்கியமானவை. காஞ்சனா தாமோதரன், மனுபாரதி, கோகுலக்கண்ணன், அலர்மேல்மங்கை, நா.கண்ணன் போன்று இந்தியத் தமிழர்களும் எழுதிவருகிறார்கள். இப்படைப்புகளில் பொதுத்தன்மைகளை வகுத்துக் கொள்ள இன்னும் காலம் ஆகவில்லை. எனினும் நம்பிக்கையூட்டும் பல ஆக்கங்கள் தொடர்ந்து வருகின்றன என்பதை கூறாமலிருக்க முடியாது. ஏற்கனவே குறிப்பிட்டது போல மாறுதல் கட்டத்தின் இரு கூறுகளில் உற்சாகமான எதிர்கொள்ளலை இப்படைப்புகளில் குறைவாவே காணமுடிகிறது என்பதே உண்மை. பெரும்பாலான கதைகள் இழப்பு குறித்த பதற்றத்தை வெளிப்படுத்தக் கூடியவையாகவே உள்ளன. இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் மிகப்பெரும்பாலோர் அவர்கள் சொந்த நாட்டில் வாழ்ந்திருந்தால் இருப்பதை விட சிறப்பான நிலையில்தான் வாழ்கிறார்கள் என்ற போதிலும் கூட இப்படி இருப்பது வியப்புக்குரியதே. கலை எப்போதும் விதிவிலக்கான – அபூர்வமான விடயங்களில் கவனத்தை குவிக்கும் என்பதை இங்கு உதாரணமாக கூறலாம். அ.முத்துலிங்கம் கதைகளில் மட்டுமே மாறுதல் காலகட்டம் மீதான சாதகமான எதிர்வினை உள்ளது. அவருக்கு கலாச்சார இழப்பு குறித்த பதற்றங்கள் அதிகமில்லை. அவரது கம்யூட்டர் என்ற கதை ஒரு குறியீடாக மிக முக்கியமானது. கம்ப்யூட்டரில் தன் ‘கதையை’ தொலைத்து தேடி சலித்த பிறகு அதுவே திருப்பியளிக்க, உவகையும் நட்பும் பூணும் அக்கதாபாத்திரம் உண்மையில் நவீன மேற்கையே எதிர்கொள்கிறது.
புலம்பெயர் கதைகளின் போக்கில் மூன்று அம்சங்கள் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன என்று படுகிறது. ஓன்று, ஒரு வேடிக்கை மனநிலை. புதிய உலகின் புதிய காலகட்டத்தின் வாழ்க்கையை சற்று விலகிய மனநிலையுடன் வேடிக்கை பார்த்து வினோதமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் சித்தரிக்கும் கதைகள். பொ.கருணாகரமூர்த்தியின் பல கதைகள் அப்படிப்பட்டவை. அவ்வேடிக்கைக்கு உள்ளே தங்கள் அடுத்தகட்ட அர்த்தங்களை வைத்திருப்பவை. இரண்டு, கடந்தகால ஏக்கங்களை மீட்டும் கதைகள். அனேகமாக எல்லா புலம்பெயர் படைப்புகளும் இவ்வம்சங்களை கொண்டுள்ளன. மூன்று, கலாச்சார வேறுபாடு உருவாக்கும் ஒழுக்கச் சிக்கல்களை பேசும் கதைகள். சோபா சக்தி அப்படிப்பட்ட கதைகளை எழுதியுள்ளார். பெரும்பாலான படைப்பாளிகளில் இம்மூன்று அம்சங்களும் பல்வேறு விகிதாசாரங்களில் விரவிக்கிடக்கின்றன. இவை ஒரு வாசகனின் முதற்கட்ட மனப்பதிவுகள். கிடைக்கும் எல்லா படைப்புகளையும் தொகுத்து முழுமையாக படித்து ஆதாரபூர்வமாக மேலும் பேச முடியும்.
இப் பின்னணியில்தான் ஆசி.கந்ததராஜாவின் கதைகளை படிக்க முடிகிறது. எனக்கு பழைய இலங்கை முற்போக்குக் கதைகள் மீது ஒரு கசப்பு உண்டு. அவற்றில் கணிசமானவை எவ்விதமான சுவாரஸ்யங்களும் இல்லாத கருத்துச் சட்டக எலும்புக்கூடுகள் என்பதே எனது முக்கிய மனக்குறை. புலம் பெயர்ந்த படைப்பாளிகளின் கதைகளில் எனக்கு பெரும்பாலனவை சுவாரஸ்யமானவையாக உள்ளன. விதிவிலக்கு, கலாமோகன், சோபா சக்தி, சக்கரவர்த்தி போன்றோர் எழுதும் விஷப்பரீட்சைகள். உத்தியின் எலும்புச் சட்டகமன்றி அவற்றில் ஒன்றுமில்லை (ஆனால் சோபா சக்தியின் ‘கொரில்லா’ தமிழின் மிகச்சிறந்த சில நாவல்களில் ஒன்று).
ஆசி கந்தராஜாவின் கதைகள் முதலில் வாசிக்க மிக சுவாரஸ்யமானவை. இந்த முதல் குணத்தை இப்பொழுதெல்லாம் நான் முதல் நிபந்தனையாகவே கூறுவதுண்டு. வாழ்வின் நுட்பமான சிறு சிறு விஷயங்களை அவதானிக்கும் கலைஞனின் (அதாவது குழந்தையின்) பார்வை இக்கதைகளில் உள்ளது. அதன் மூலம் உயிரோட்டம் மிக்க ஒரு வாழ்க்கைச் சித்திரம் நமக்கு கிடைக்கிறது. நுட்பமான தகவல்கள் என்பவை வெறும் தொழில்நுட்ப விஷயமல்ல. உண்மையான அவதானிப்பு இல்லாத ஒருவர் நுட்பமான தகவல்களை தர ஆரம்பித்தால் அதைவிட அலுப்பூட்டும் ஒரு விஷயம் இல்லை. வாழ்க்கை என்பது கருத்துக்களாலோ அது சார்ந்த அமைப்புகளாலோ ஆன ஒன்றல்ல. கண்முன் காட்சி வெளியாக, நிகழ்வுத் தொடராக பெருகியோடும் சம்பவங்களினாலானது என்ற பிரக்ஞையிலிருந்து உருவாவது இந்த இயல்பு.
ஆசி கந்தராஜா படைப்புகளில் அ.முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி ஆகிய இருவரிலும் உள்ள அளவு, வாழ்க்கைச் சித்தரிப்பின் நுட்பம் உள்ளது. பல கதைகள் அ.முத்துலிங்கத்தை பெரிதும் நினைவூட்டவும் செய்கின்றன. ‘கள்ளக் கணக்கு’ கதையின் சீன பயண அனுபவம் முத்துலிங்கத்தின் ஆப்பிரிக்க கதைகளை (குறிப்பாக ‘பெருச்சாளி’ பற்றிய கதை) நினைவூட்டுகிறது. ‘சூக்குமம்’ கதையின் நலமடிக்கும் இடம் இன்னொரு உதாரணம். (எனக்கு இது உடும்பு கதையை நினைவூட்டியது). இந்த நினைவூட்டலை ஓரு மிகச் சாதகமான அம்சமாக குறிப்பிட விரும்புகிறேன். ஓன்றுக் கொன்று மாறுபட்ட படைப்பாளிகள் இவ்வாறு நமது மனதில் உள்ள சித்திரமொன்றை மெதுவாக பல்வேறு பக்கங்களிலிருந்து தீட்டி முழுமைப்படுத்துவது ஓர் அரிய அனுபவம். (மௌனி புதுமைப்பித்தன் படைப்புகளின் இவ்வனுபவம் குறித்து ஏற்கனவே நான் குமுதம் தீராநதி இணையத்தளத்தில் எழுதியுள்ளேன்) அதுவரையான இலக்கியப்படைப்புக்களின் மூலம் உருவான மனச்சித்திரத்தை விரிவுபடுத்துவது ஒரு கலைப்படைப்பின் பணிகளில் ஒன்று.
ஆசி சுந்தராஜாவின் படைப்புகளில் இரு அம்சங்களே மிகவும் தூக்கலாக உள்ளன. ஓன்று, கலாச்சார மாறுதல்களின் விளைவாக உருவாகும் வேடிக்கைகள் மீதான அவதானிப்பு. இரண்டு, அதன் மூலம் ஏற்படும் கலாச்சார இழப்பின் மீதான விமர்சனம். ஆனால் இப்படைப்புகள் கலைப்படைப்புகளுக்குரிய அடக்கத்தைக் கொண்டிருப்பதனால் வேடிக்கைகள் கரிப்பாகவோ இழப்புகள் புலம்புதல்களாகவோ மாறாது சகஜத்தன்மை கொண்டவையாக உள்ளன. இவ்விரு அம்சங்களும் சரியாக கலந்த அவரது சிறந்த படைப்பான ‘பாவனை பேசலன்றி’ உதாரணமாகக் கூறப்படலாம். யாழ்ப்பாணச் சூழலில் உயரிய மதிப்பீடுகளின் அடையாளமாக இருந்தவர் சின்னத்துரை வாத்தியார். முற்றிலும் லௌகீகமான வாழ்க்கை மதிப்பீடுகள் நிரம்பிய சிட்னி சூழலில் அவர் அர்த்தமற்ற, பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு இருப்பாக மாறி அழிவதை, அழிந்ததுமே ஒருவகை தொல்பொருள் கவுரவத்தைப் பெற்று பணமே உலகில் கொண்டாடப்படுவதை கூறும் இக்கதையில் நுட்பமான அங்கதம் ஊடாடியபடியே உள்ளது. ஆனால் ஒருபோதும் விமரிசனம் தார்மீக கோபத்தின் எல்லைகளை மீறவில்லை. இருவேறு உலகங்களில் ஒன்றுக்காக வாதாடும் குரல் எழவும் இல்லை. இந்தச் சமநிலைதான் இக்கதையின் வலு.
இச்சமநிலை காரணமாகவே இக்கதைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புத்தன்மை சாத்திமாகிறது. கதாசிரியரின் சார்பு நிலை – கதை சொல்லியினூடாக கதையில் வெளியான போதும் கூட எனக்கு இக்கதை வாழ்வின் இன்றியமையாத நியதியை சுட்டுவதாகவே என் மனதில் அர்த்தம் கொண்டது. இங்கும் எத்தனையோ காந்தியவாதிகள் இதே முடிவையே அடைகிறார்கள். மானசீகமாக இக்கதையின் தலைப்பை நான் ‘பழையன கழிதலும்…’ என்று வைத்துக் கொண்டேன். இத்தகைய மாற்று வாசிப்புக்கு இடமளிப்பதாலேயே இக்கதை முக்கியமானதாக ஆயிற்று எனக்கு. இக்கதையின் மறுபக்கம் போலிருந்தது ‘காலமும் களமும் ‘. மெல்ல மெல்ல விதானையார் ஆஸ்திரேலியாவிலும் வேறு ஒருவகை விதானையாராக மாறுவார் என்ற எண்ணமே எழுந்தது.
அங்கதம் இழையோடும் ‘எலி புராணம்’ ஆசி கந்தராஜாவின் நல்ல கதைகளில் ஒன்று. ‘இஞ்சையும் எலி இருக்குமோ?’ என்ற அந்த வினாவில் உள்ளது அக்கதையின் சூக்குமம். ‘இஞ்சை’ உள்ள எலி வேறு வகையானது. நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நாய்க்கு மட்டுமே அது பிடிபடுகிறது. வேறுவகை நியதிகள் வாழும் மண் மீதான ஒரு ஆழ்ந்த அவதானிப்பை இக்கதை மூலம் நான் வாசித்தேன் (சமீபத்தில் கனடா சென்ற போது இலங்கையை சேர்ந்த ஒரு குற்றவாளிக் கும்பலை அங்கு போலிஸ் கைது செய்வதை தொலைக்காட்சியில் காட்டினார்கள். என்ன மரியாதை, எத்தனை ராஜ உபசாரம். இங்கே கைதானால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். கைதானவரின் முகத்தை பார்த்த போது இக்கதையில் யாழ்ப்பாண அம்மாவின் கேள்வியாக எழுந்த வரியே எனக்குள்ளும் ஓடியது ‘இஞ்சையும் உண்டா?’).
மாறிவிட்ட சூழலில் வாழ்வை ‘வென்றடக்குவதற்கான’ கடுமையான போட்டியில் ஈடுபட்டிருக்கும் தமிழர்களின் சித்திரங்களை இக்கதையுலகு முழுக்க காணமுடிகிறது. ‘மறுக்கப்படும் வயசுகள்’ அதற்கு சிறந்த உதாரணமாகும் கதை.
ஆசி. கந்தராஜாவின் சிறந்த கதைகளில் ஒன்று ‘இனமானம்’. கதையின் இரு கோடுகள் தனித்தனியான சுவாரஸியத்துடன் நீண்டு செல்வதும் அவை, புதிய ஓர் அனுபவ தளத்தை திறந்தபடி சந்திப்பதும் தேர்ந்த சிறுகதைக்கலைஞனின் கைவண்ணத்துடன் உள்ளது. அந்த கொரிய விருந்து அழகாகவும் நுட்பமாகவும் கூறப்பட்டுள்ளது. இக்கதையின் இறுதிப்பத்திதான் வாசகனின் ஊகிக்கும் திறனை ஐயப்பட்டபடி உபரியாக நிற்கிறது. இனமானம் என்ற தலைப்புகூட அதீதமான சுட்டல்தான். தமிழ்ச்சிறு கதை வாசகன் எளிமையாகவே இந்த கதையின் நுட்பத்தை உள்வாங்கிக் கொள்ளக்கூடியவன் தான்.
இக்கதைகளை மதிப்பிடும் போது எதிர்மறைக்கூறாக முக்கியமாக சொல்லபடவேண்டிய அம்சம், இவை ‘வெளிப்படையான’ கதைகள் என்பதே. ஒரு விஷயத்தை கூறித்தெளிவுபடுத்தும் தன்மை கொண்டவையாக இவை உள்ளன. இந்த அம்சம் பொதுவாக ஈழச் சிறுகதைகளின் அடிப்படை இயல்பாக உள்ளது. அ.முத்துலிங்கத்தின் ‘பூமாதேவி’, ‘கறுப்பு அணில்’ போன்ற சில கதைகளே விதிவிலக்காக என் நினைவுக்கு வருகின்றன. சிறுகதை என்பது கதை அல்ல. அது கவிதைக்கு மிக நெருக்கமான ஒரு வடிவம். ‘கவிதை என்பது மறைபொருள்’ என்ற நம்பிக்கை பற்பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் சமூகம் நம்முடையது. பதினைந்து வார்த்தைகளில் மிக தவிர்க்க முடியாத விஷயங்களை மட்டும் சொல்லி மீதி அனைத்தையுமே வாசகக் கற்பனைக்கு விட்டு விடும் பெரும் கவிஞர்கள் நிரம்பிய மரபு நம்முடையது. கவிதை வாசகனின் கற்பனையில் தான் வளர வேண்டும். அங்கேயே அது முழுமை பெறவேண்டும். சிறுகதையும் ஒருவகை கவிதைதான் என்றபோதும் தமிழில் புதுமைப்பித்தன் மௌனி காலம் முதல் ஆழ வேரூன்றி அழுத்தமான விளைச்சல்களை உருவாக்கியுள்ளது. ஈழ எழுத்திலும் மு.தளையசிங்கத்தின் ‘ரத்தம்’ போன்ற கதைகளில் இப்புரிதல் இருப்பதை காணலாம். இரண்டாவதாக கதையின் பரப்பிலிருந்து எழுந்து நமது சொந்தப்பிரச்சினையாகவே மாறிவிடக்கூடிய ஆழமான அறஒழுக்க பிரச்சினைகளை நோக்கி இப்படைப்புகள் நகரவில்லை. இது புலம்பெயர் படைப்புகளின் அடிப்படைச்சிக்கல்களில் ஒன்று. புலம்பெயர் அனுபவத்தின் சிக்கல் அத்தளத்திலிருந்து விரிந்து முற்றிலும் வேறான தளத்தில் வாழ்பவர்களுக்கும் தங்களது சிக்கலாக ஆகிவிடுவதையே குறிப்பிட்டேன். அடிப்படை தார்மீகம் பற்றிய வினாவாக ஒரு வாழ்க்கை முடிச்சை ஆழமாகக் கொண்டு செல்லும்போதே இந்த தளம் அடையப்படுகிறது. உதாரணமாக காம்யூவின் ஒருகதை (வந்தவன் என்ற பெயரில் க.நா.க. தமிழாக்கம் செய்திருந்தார். மூலப்பெயர் நினைவில்லை) ஒரு பிரஞ்சுகாரன் அல்ஜீரியாவில் அல்ஜீரியர்களுக்காக ஒரு பள்ளி நடத்துகிறான். ஆல்ஜீரியர் மீது பிரியமும் அவர்களுக்காக வாழ்வை அர்ப்பணம் செய்துகொண்ட தீவிரமும் உடையவன் அவன். ஒரு நாள் பிரெஞ்சுக் காலனியாதிக்க அரசின் காவலர் ஒரு அல்ஜீரிய சுதந்திரப் போராளியை அப்பள்ளிக்கு கொண்டு வந்து சிலமணி நேரம் வைத்திருந்து விட்டு கொண்டு செல்கிறார்கள். மறுநாள் ஆசிரியன் தன் மாணவர்களில் எவராலோ கரும்பலகையில் எழுதப்பட்ட ஒரு வரியை காண்கிறான். ‘நீ எங்களில் ஒருவனை காட்டிக் கொடுத்தாய். உன்னை பழிவாங்குவோம்’.
இக்கதை அது எழுதப்பட்ட தளத்தைமீறி எனக்கு மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயான தூர்க்க முடியாத அகழியைப் பற்றிய ஒன்றாகப் பொருள்படுகிறது. இது என் சொந்த வாழ்வின் தளத்தில் நான் கண்டு கொண்டிருப்பதும் கூட. ‘நீ X நாங்கள்’ என்ற அக்குரல் எங்கும் எப்போதும் எழக்கூடியது. அவ்வாறு அடிப்படை மானுடப்பிரச்சினையாக மாறும் கதைகளே நமது இலக்காக இருக்க வேண்டும்.
ஆம், புலம் பெயர்ந்த அனுபவங்களை நாம் எழுதுவது அவ்வனுபவங்களுக்காக அல்ல. அந்தச் சந்தர்ப்பத்தின் மூலம் மானுட மனதின் அறியப்படாத சில தளங்களை கண்டடையவே. மானுட வாழ்வின் புதிய நுட்பங்களை தொட்டுணரவே. அது ‘மானுட அனுபவம்’ ஆகையால் காலபேதம் அற்றது. அனைவருக்கும் உரியது. அத்தகைய பெரும் ஆக்கங்களுக்காகவே நாம் கனவு கானவேண்டும். அடைந்தவற்றை அறிந்து மகிழ்வோம். அடைய வேண்டியவை குறித்த பெரும் கனவுகளுக்கான தருணமாகவும் அதை மாற்றுவோம். புலம்பெயர் தமிழ் படைப்பாளிகளிடம் பொதுவாக எதிர்பார்ப்பது போலவே ஆசி. கந்தராஜாவிடமும் மேலும் எதிர்பார்க்கிறேன்.
ஜெயமோகன் (31-10-2002
(‘ஆசி கந்தராஜாவின் ‘பாவனை பேசலன்றி’ சிறுகதை தொகுதிபற்றி ‘சொல் புதிது’ என்ற சிற்றிதழில் எழுத்தாளர் ஜெயமோகன் 2002 ம் ஆண்டு எழுதிய விமர்சனம்.)
நன்றி: http://www.aasi-kantharajah.com