வாசிப்பும், யோசிப்பும் 167: தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்..’ பற்றிய குறிப்புகள்!

தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி1. தவளைப்பாய்ச்சல்’

தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்.’ அதில் கூறப்பட்டுள்ள சுய விமர்சனங்களுக்காக அந்நூலினை எதிர்ப்பவர்களால் கடுமையாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் அந்நூல் விமர்சனங்களுடன் பல தகவல்களையும் ஆவணப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப்புலிகளின் பல வெற்றிகரமான தாக்குதல்களை, அவை வெற்றிகரமானவையாக அமைவதற்காகப்போராளிகள் செய்த பயிற்சிகள், கொடுத்த விலைகள் ,இவற்றைப்பற்றியெல்லாம் விரிவாகவே விபரிக்கின்றது நூல். தமிழினியின் எழுத்தாளுமை நூலுக்கு மேலும் இலக்கியச்சிறப்பினை அளிக்கின்றது. யுத்தங்களை விபரிக்கையில் ஏற்படும் சக தோழிகளின் இழப்புகள் நெஞ்சைத்தொடும் வகையில் நூலில் விபரிக்கப்பட்டுள்ளன. போதிய உணவின்றி, போதிய ஆடைகளற்று பல சிரமங்களுக்குள்ளான நிலையிலும், தமது இலட்சியத்துக்காகப்  போராடும் அவர்களது நடவடிக்கைகள், உணர்வுகள் ஆகியனவும் நூலில் விரிவாகவே விபரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நூலின் ஆவணச்சிறப்பு அதிகரிக்கின்றது.

நூலில் பூநகரி முகாம் மீதான ‘தவளைப்பாய்ச்சல்’ பற்றி விரிவாகவே விபரிக்கப்பட்டுள்ளது. அதற்காகப் போராளிகள் சுமார் ஒரு வருடமாக எடுத்த பயிற்சி பற்றியெல்லாம் விபரிக்கப்பட்டுள்ளது. பூநகரிச்சமர் பற்றி நூலிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகின்றேன்:

“1993 இறுதிப் பகுதியில் அச்சுவேலிப்பகுதியில் வல்லை வெளியோடு சேர்ந்திருந்த கடல் நீரேரியில் ஒரு மாதிரி இராணுவ தளம் அமைக்கப்பட்டு எமது அணிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அது எந்த இராணுவத்தளத்தின் மாதிரி வடிவம் என்பது அபோது தான் எங்களுக்குப் புரிந்தது. நான் முதன் முதலாகப் பங்கெடுத்த தாக்குதல் பூநகரி இராணுவ முகாம் மீதானதாகும்.” (பக்கம் 55; இலங்கைப்பதிப்பு)

” இத்தாக்குதல் நடவடிக்கைக்காக  விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு வருடத்திற்கும் மேலான தயார்படுத்தல்களை மேற்கொண்டிருந்தது.. வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலிருந்து தாக்குதல் பயிற்சி பெற்ற  ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளைக்கொண்ட  தாக்குதலணிகள்  இந்தச் சமரில்  ஈடுபடுத்தப்பட்டன.” (பக்கம் 56)

இந்தச் சமருக்குத் ‘தவளைப்பாய்ச்சல்’ என்று விடுதலைப்புலிகள் பெயர் வைத்திருக்கின்றார்கள். அவ்விதமான பெயரை அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணம் சுவாரசியமானது. அது பற்றித் தமிழினி பின்வருமாறு விபரிப்பார்:

“புலிகளின் தாக்குதல் வரலாற்றிலேயே முதல் தடவையாக ஒரு இராணுவ- கடற்படைக்கூட்டுப் படைத்தளம் மீது நடாத்தப்பட்ட ஈரூடகத் தாக்குதல் இதுவாகும். இதனால் இந்நடவடிக்கைக்கு ‘ஒப்பரேசன் தவளை’ என இயக்கம் பெயர் சூட்டியிருந்தது.” (பக்கம் 56)

தவளையானது நீரிலும், நிலத்திலும் வாழும் வல்லமை மிக்கது. மேற்படி தாக்குதலும் நீரிலும், நிலத்திலுமுள்ள படைகள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல். விடுதலைப்புலிகள் நீரிலும், நிலத்திலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடாத்தும் வல்லமை மிக்கவர்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட பெயர்தான் ‘தவளைப்பாய்ச்சல்’.

மேற்படி சமரானது புலிகளின் புலனாய்வுத்துறைப்பொறுப்பாளர்  பொட்டு அம்மானின் மேற்பார்வையில் பயிற்சி கொடுக்கப்பட்டு நடாத்தப்பட்ட சமரென்று நூலில் தமிழினி விபரிப்பார்.

இந்தச்சமரில் ஈடுபட்ட போராளிகள் உணர்வுகளையும் தமிழினி பதிவு செய்திருக்கின்றார்.

“பல போராளிகள் தமது குடும்பத்தவர்களுக்கு தமது இறுதி மடல்களையும் எழுதிக்கொண்டிருந்தனர். எனது நெருங்கிய பல நண்பிகளும் இத்தாக்குதலில் பங்கு பங்கெடுத்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள், நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், உயிர் மீதான உத்தரவாதமின்மை, வெளிப்படுத்தமுடியாத விரக்தி என நிச்சயிக்கப்பட்ட யுத்தமொன்றில்  பங்குபற்றும் போராளிகளின் இறுதிக்கணங்களில் அவர்களுடைய கண்களில் தேங்கியிருக்கும் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிந்த எவராலும் மீண்டுமொரு யுத்தத்தைப்பற்றி பேசவோ அல்லது நினைத்துப்பார்க்கவோ முடியாது.” (பக்கம் 57)

இந்த யுத்தத்தில் பெரிய வெற்றிகளை இயக்கம் அடைகின்றது. இயக்க வரலாற்றில் முதல் தடவையாக இராணுவத்தினரின் ‘யுத்த டாங்கி’ ஒன்று கைப்பற்றப்படுகின்றது. இது பற்றியெல்லாம் விபரிக்கும் நூலில் தமிழினி இச்சமரில் இழந்த தனது தோழிகள் பற்றியும் விபரித்திருக்கின்றார். நெஞ்சினைத்தொடும் வகையில் அவர்களது இழப்பை விபரித்திருப்பார். குறிப்பாக சாம்பவி பற்றிய அவரது விபரிப்பைக் கூறலாம்.

“வயல் வெளிகளுக்கூடாக நானும் சாம்பவியும் தவழ்ந்தபடி முன்னேறிக்கொண்டிருந்தோம். மழை தொடர்ந்து பெய்து கொண்டேயிருந்ததால் வெள்ளம் தேங்கிக் கிடந்தது. தூரத்தே உயரமான நிலை ஒன்றிலிருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த இராணுவத்தின் குறிபார்த்துச்சுடுபவனின் இலக்குத் தவறாத ரவைகள் அந்த வயல்வெளியில் பல போராளிகளின் உயிர்களைக்குடித்துக்கொண்டிருந்தன.  சிறிதாகக் கூடத்தலையை நிமிர்த்திப்பார்க்க முடியாத நிலையில் சேற்று வயல்களுக்கூடாக நாம் தவழ்ந்து கொண்டிருந்தோம்.  எனது பக்கவாட்டில் ஊர்ந்துகொண்டிருந்த சாம்பவியிடமிருந்து  திடீரென ‘ஹக்’ என வினோதமான சத்தம் கேட்டது.  திரும்பிப்பார்த்தேன்.  அவளது முகம் சேற்றுக்குள் புதைந்துபோய்க்கிடந்தது.  நான் அவளது தலையை நிமிர்த்திப்பார்த்தபோது கடைவாயில் இரத்தம் கசிந்துகொண்டிருந்தது.” (பக்கம் 59).

இச்சமரில் பலியாகிய இன்னுமொரு தோழியான தாமரை பற்றியும் நூலில் விபரிக்கப்பட்டுள்ளது.

இந்த யுத்த அனுபவங்களை வைத்து , இந்நூல் வெளியாவதற்கு முன்னரே தமிழினி ‘மழைக்காலம்’ என்னும் சிறுகதையொன்றினை எழுதியிருக்கின்றார். அது அவரது முகநூல் பக்கத்திலும், ‘பதிவுகள்’ இணைய இதழிலும் வெளியாகியுள்ளது.

இந்த யுத்தம் பின்னர் யுத்தம் பற்றிய புரிதல்களையும் தமிழினிக்கு அளிக்கிறது. அது பற்றியும் நூல் விபரிக்கின்றது.

“போர்க்களத்தில்  கண்ட இன்னொரு மறக்க முடியாத காட்சியும் எனது ஆழ்மனதில் பதிந்துபோன சித்திரமாகி விட்டிருந்தது.  இராணுவத்தினரினதும், விடுதலைப்புலிகளினதும் உயிரற்ற உடல்கள் மழைத்தண்ணீரில் ஊறிப்போய், ஆங்காங்கே விறைத்துக்கிடந்தன.  அவர்கள் உடல்களிலிருந்து வடிந்திருந்த சிவப்புக் குருதி மழை நீரில் கரைந்து தண்ணீரோடு கலந்து ஓடிக்கொண்டிருந்தது.  சற்று நேரத்திற்கு முன்புவரை தீராப் பகையுணர்ச்சியோடு எதிரும் புதிருமாக நின்று போரிட்டவர்கள் நிலத்தில் சடலங்களாக சிதறிக்கிடந்த காட்சி ஒரு தாயின் மடியில் உறக்கத்தில் புரண்டு கிடக்கும் குழந்தைகளையே நினைவுபடுத்தியது.  எல்லா வேறுபாடுகளும், முரண்பாடுகளும், பகைமைகளும் அர்த்தமிழந்து போகும் இடமும் போர்க்களம்தான் என்பதை முழுமையாக உணரக்கூடிய அறிவு உண்மையாகவே அப்போது எனக்கிருக்கவில்லை” (பக்கம் 60).


தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி2. தமிழினியின் ஓரு கூர்வாளின் நிழலி’லிருந்து…’

ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தில் போராட்ட அமைப்புகள் அவ்வப்போது விமர்சனத்துக்குள்ளாக்கப்பட வேண்டிய செயற்பாடுகளை விடுதலையைக் காரணமாக வைத்து முன்னெடுத்திருக்கின்றன. அக்காலகட்டங்களிலெல்லாம் மக்கள் பேசாமடந்தைகளாக, மெளனமாக இருந்ததாகத்தான் பொதுவாக அனைவரும் குற்றஞ்சாட்டுவது வழக்கம். அவ்விதம்தான் நானும் கருதியிருக்கின்றேன். ஆனால் அண்மையில் வெளியான தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ சுயசரிதை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயமொன்று என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. அது வருமாறு”

“அரசியற்துறையினரால் நடாத்தப்படும் சமகால அரசியல் கருத்தரங்குகளில் மாத்தையா தொடர்பான பிரச்சனை பற்றிப் பல கேள்விகள் மக்களால் எழுப்பப்பட்டன. பல இடங்களில் மாத்தையா எங்கே? எனக்கேட்டு மக்கள் கோபத்துடன் வாதிட்டார்கள். தலைவருக்கெதிரான சதி நடவடிக்கையொன்றின் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுவதாக மக்களுக்குக் கூறும்படி எமக்கு விளக்கம் தரப்பட்டிருந்தது.

1992-1993 காலப்பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக்கணைகளைத்தொடுப்பார்கள். ஏன் வட பகுதியிலிருந்து முஸ்லீம் மக்கள் வெளியெற்றப்பட்டார்கள்? ஏன் மாற்று இயக்கப் போராளிகள் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டார்கள்?  போன்ற கேள்விகளால் இளநிலைப் போராளிகளாயிருந்த நாங்கள் திணறிப்போன சந்தர்ப்பங்கள் அநேகமிருந்தன.  உண்மையில் அந்தக் கேள்விகளுக்கான விளக்கம் அப்போதெல்லாம் எங்களுக்கே சரிவரத்தெரிந்திருக்கவில்லை.” (பக்கம் 65; இலங்கைப்பதிப்பு).

தமிழினியின் இக்கூற்றிலுள்ள முக்கியமான விடயங்கள்:

1. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் இருந்தபோதும் மக்கள் தங்கள் விமர்சனங்களை அவர்களிடம் முன் வைத்திருக்கின்றார்கள். முஸ்லீம் மக்களை வெளியேற்றியது, சக இயக்கங்களுடனான மோதல்கள் பற்றியெல்லாம் அவர்கள் கேள்விகள் கேட்டிருக்கின்றார்கள். ஆவேசத்துடன் வாதிட்டிருக்கின்றார்கள்.
2. அவ்விதம் மக்கள் கேள்வி கேட்பதைப் விடுதலைப்புலியினர் அனுமதித்துள்ளதுடன், தம் அரசியற்துறையினர் மூலம் விளக்கமும் அளித்திருக்கின்றார்கள்.

பொதுவாக விடுதலைப்புலிகள் கேள்விகளுக்கப்பாற்பட்டவர்கள், மக்கள் வாய் பேசா மந்தைகள் என்றுதான் பொதுவாகப் பலரும் நினைப்பது வழக்கம். ஆனால் அது முற்று முழுதான உண்மை அல்ல என்பதைப்புரிய வைக்கின்றன இக்கூற்றுகள். மக்களும் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார்கள். புலிகளும் அவற்றை அனுமதித்திருக்கின்றார்கள் விளக்கமும் அளித்திருக்கின்றார்கள்.


தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி3. விடை நாடும் வினாக்கள் சில….

தமிழினியின் ‘ஒரு கூர் வாளின் நிழலில்..’ நூல் காரணமாக அந்நூலினை எதிர்ப்பவர்கள் தமிழினி இயக்கத்தை விமர்சித்த காரணத்துக்காக அதனை எதிர்க்கின்றார்கள். ஆனால் அந்த நூலில் தமிழினி விமர்சித்த முக்கியமான விடயங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

1. கட்டாய ஆட்சேர்பு.
2. இயக்கங்களுக்கிடையிலான முரண்பாடுகள்.
3. உள் முரண்பாடுகள் (குறிப்பாக மாத்தையா, கருணா அம்மான்)
4. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தலைவர்களின் செயற்பாடுகள்.
5. மக்கள் மத்தியிலிருந்து தாக்குதல்கள் நடாத்தியமை.
6. ஆயிரக்கணக்கான போராளிகள் நிராதரவான நிலையில் விடப்பட்டமை. அதன் காரணமாகச் சரணடைந்தமை.

இவை போன்ற மேலும் சில காரணங்கள். இவையெல்லாம் ஏற்கனவே இலங்கை அரசாலும், சர்வதேச ஊடகங்களாலும், மேற்குலக நாடுகள் பலவற்றாலும், இந்தியாவாலும் கூறப்பட்டவைதாம். இவை போன்ற காரணங்களுக்காகவே மேற்குநாடுகள் பல இயக்கத்தைத்தடை செய்தன. விடுதலைக்கான பாதையில் இவற்றைப்பொறுத்துக்கொள்ள வேண்டுமென்ற மனப்பான்மை கொண்ட பெரும்பான்மை தமிழர்கள் ஏற்கனவே அறிந்துகொண்டவைதாம். ஆனால் வெளிநாடுகளில் வாழும்  தீவிர ஆதரவாளர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாத காரணங்கள்.

ஏற்கனவே இலங்கை அரசும், மேற்கு நாடுகளும், இந்தியாவும் பாவித்த குற்றச்சாட்டுகள் இவை. இயக்கம் இருந்தபொழுது இவ்விதமான காரணங்கள் அவர்களுக்குப் பயன்களைத்தந்திருக்கலாம். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட இன்றைய நிலையிலல்ல. ஆனால் இன்று எதிர்ப்பவர்கள் தமிழினியின் நூலை எதிர்ப்பதற்கு இந்நூல் தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு எதிராக இலங்கை அரசால் பாவிக்கப்படும் என்று கூறினாலும், இலங்கை அரசுக்குத் தமிழினியின் நூல் பெரிதும் உதவப் போவதில்லை. அவர்களுக்கு அவ்விதம் பாவிப்பதற்கான தேவை தற்போதில்லை. யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டு, வடகிழக்கு முற்றாகப் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்காலகட்டத்தில் அவர்கள் இதற்காக அலட்டிக்கொள்ளப்போவதில்லை.

மேலும் இந்நூல் இவ்விதமாக இயக்கத்தை விமர்சிக்கும் அதே வேளை இயக்கத்தின் ஆரோக்கியமான பக்கத்தையும் தமிழர்களுக்கு ஞாபகமூட்டுகின்றது. போராளிகளை, அவர்களது செயற்பாடுகளைப் பெருமையுடன் நினைவு கூர வைக்கின்றது. இயக்கத்தின் வெற்றிகரமான வரலாற்றை ஆவணப்படுத்துகின்றது. உண்மையில் இக்காரணங்களுகாக இந்நூலை இலங்கை அரசு எதிர்க்கலாம். மீண்டும் தமிழர்களுக்கு போராட்டத்தின் வெற்றிகரமான வரலாற்றை ஞாபகப்படுத்துகின்றது, ஆவணப்படுத்துகிறது என்பதற்காக. மகிந்த அரசு இன்றிருந்தால் , கோத்தபாயா பதவியில் இருந்திருந்தால் நிச்சயம் இந்த நூல் வெளிவந்திருக்கும் சாத்தியமே இல்லை. அவர்கள் இயக்கத்தை விமர்சிப்பதை வரவேற்பார்கள்; ஆனால் நிச்சயம் தமிழர்களின் வீர வரலாற்றை நினைவு கூர்வதை, ஆவணப் படுத்தப்படுவதை அவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். விடுதலைப்புலிகளை ஞாபகப்படுத்தும் எல்லாவற்றையும் அழித்தவர்கள் அவர்கள். ஆனால் இன்றைய அரசினர் மாற்றத்தைக்கொண்டு வந்தவர்கள் தாம் என்பதை வெளிப்படுத்துவதற்காக உள்ளூர இவ்விதமான நூல்களைத்தடை செய்ய விரும்பினாலும்,  ‘மாற்றத்தைக்கொண்டு வந்தவர்கள் தாம்’ என்ற மதிப்பு குறைந்து போகக் கூடாதென்பதற்காக இது போன்ற நூல்களை, தற்காலத்தில்,  தடை செய்ய மாட்டார்கள்.

உண்மையில் இந்நூலைப்படிப்பவர்களுக்கு ஆங்காங்கே கூறப்படும் விமர்சனங்களை விட இயக்கத்தின் வீர வர வரலாறே கண் முன்னால் படம் விரிக்கும். ஏனென்றால் அவை பற்றியே நூலில் அதிகமாகக்கூறப்பட்டுள்ளன. விமர்சனங்கள் ஓரிரு குறிப்புகளாக மட்டுமே வருகின்றன.

அப்படியானால் இந்த நூலை ஏன் சிலர் எதிர்க்கின்றார்கள்?  சுய விமர்சனம்  எப்பொழுதும் ஆரோக்கியமானது. ஏன் அதற்குச் சிலர் பயப்படுகின்றார்கள்? சுய விமர்சனத்தால் தமிழர்களுக்கிடையில் முரண்பாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கவே அதிகமான சாத்தியங்கள் உள்ளன? அதனை இவர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள்?  பெரும்பான்மையான இயக்கங்கள் தம் கடந்த கால வரலாற்றைச் சுய விமர்சனம் செய்திருக்கின்றன. தவறுகளை ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்நூலினை எதிர்ப்பவர்கள் ஆரம்பத்தில் நூலின் பகுதிகள் சிலவற்றைக்காரணமாக வைத்து எதிர்த்தார்கள். அது சரியான நடைமுறை. ஒரு நூலை எதிர்ப்பவர்கள் தாம் ஏன் எதிர்க்கின்றோம் என்பதற்குத் தர்க்கரீதியிலான காரணங்களை முன் வைத்து எதிர்க்கலாம். அவ்விதம் படைப்பொன்றை அப்படைப்பை வைத்தே விமர்சிப்பதே முறையானது. ஆனால் தற்போதோ படைப்பை எதிர்ப்பதற்குப் பதிலாக நூலை வெளியிட்ட தமிழினியின் கணவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். இவ்விதம் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது என்பது கத்தி மேல் நடப்பதைப் போன்றது. நூலினைப் படிக்கும் எமக்கு அவரது தனிப்பட்ட , அந்தரங்க வாழ்க்கை பற்றிய விபரங்கள் தெரியாது. ஆனால் உண்மையில் அவரது வாழ்க்கையில் அவ்விதமான சம்பவங்கள் பல நடந்திருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் முன் வந்து பகிரங்கமாக குற்றங்களை ஆதாரங்களுடன் முன் வைக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் தம்பதிகளுக்கிடையில் பல தடவைகள் மணமுறிவுகள் ஏற்படுவதும், பல தடவைகள் மணம் புரிவதும் அதிசயமானதல்ல.
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் இவ்விதமானவர்களை அதிகமாக அறிந்திருக்கலாம். ஆனால் இவற்றுக்குப்பின்னால் உள்ள காரணங்கள் எவற்றையும் அறியாமல், பொதுவாகக் குற்றங்களை அடுக்குபவர்கள், அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால்  ஏன் இதுவரை மெளனமாக இருந்தார்கள்? உண்மையில் இவ்விதமான குற்றச்சாட்டுகளை முன் வைப்பவர்கள் , ஆதாரங்களை, பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து நிரூபிக்க வேண்டும். அவ்விதம் ஆதாரங்களை முன் வைக்கும்போது தமிழினியின் கணவரும் தன் பக்க நியாயங்களைக் கூற வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

அன்று இயக்கங்களுக்கிடையில் மோதல்கள் அதிகமாக இருந்தபொழுது , ஒவ்வொரு இயக்கமும் மற்றைய இயக்கத்தின் மீது தாம் நடத்தும் தாக்குதல்களுக்குக் காரணங்களை அள்ளி வைப்பார்கள்; ‘நடத்தைப்படுகொலை (Character Assasination). அது போன்ற நடைமுறைதான் இத்தகைய நடத்தைப்படுகொலைகளும்.

ngiri2704@rogers.com