வாசிப்பும், யோசிப்பும் 185: ஆய்வாளர்கள் கவனத்துக்கு: ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகும், கவீந்திரனின் (அறிஞர் அ.ந.கந்தசாமியின்) பங்களிப்பும்!

அறிஞர் அ.ந.கந்தசாமி

ஈழத்து இலக்கிய உலகில் கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, இலக்கியத்திறனாய்வு மற்றும் நாடகம் என அனைத்துப் பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்பினைச் செய்து சாதனை புரிந்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள். அவர் முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் கருதப்படுபவர். ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் விமர்சனங்கள், திறனாய்வுகள் செய்பவர்கள் பலருக்குப் போதிய தேடுதல் இல்லை என்பதென் கருத்து. இதனால் அவரது இலக்கியப் பங்களிப்புகள் பற்றிய போதிய புரிதல் இல்லை அவர்களுக்கு. இதனால் ஏற்கனவே யாரும் அவரைப்பற்றிக் கூறியதை எடுத்துரைப்பதுடன் நின்று விடுகின்றார்கள். அவர்களைப்போன்றவர்களுக்காக அ.ந.கந்தசாமி அவர்களின் கவிதைப் பங்களிப்பை எடுத்துரைப்பதுதான் இப்பதிவின் நோக்கம். அ.ந.க எத்தனை கவிதைகள் எழுதியிருக்கின்றார் என்பது சரியாகத்தெரியவில்லை. ஆனால் இதுவரை அவர் எழுதிய கவிதைகளில் எமக்குக் கிடைத்த கவிதைகளைப்பற்றிய விபரங்களைக் கீழே தருகின்றோம். அ.ந.க.வின் ஏனைய கவிதைகள் பற்றி அறிந்தவர்கள் அறியத்தரவும். ஈழத்தில் அவர் காலத்தில் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றைத்தேடிப்பார்ப்பதன் மூலமே அவர் எழுதிய கவிதைகள் பற்றிய மேலதிக ஆய்வினைத்தொடர முடியும்.

அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) எழுதிய கவிதைகளில் எம்மிடமுள்ள கவிதைகள் பற்றிய விபரங்கள்:

1. அன்னையார் பிரிவு – ஈழகேசரி
2. தென்றல் தேவன் – ஈழகேசரி 19.09.1943
3. காதல் தத்துவம் – தேன்மொழி இஅத்ழ்4 , மார்கழி 1955 (ஷெல்லியின் கவிதையின் தமிழாக்கம்)
4. முத்தம் – தமிழமது (மீள்பிரசுரம் 2.7.1972)
5. புதுப்பானை அடுப்பிலே ஏற்றிடுவோம்! – வீரகேசரியில் வெளியான கவிதை மீண்டும் ஶ்ரீலங்கா சஞ்சிகையில் ஜனவரி 1962 இதழில் மீள்பிரசுரமாகியுள்ளது.
6. மோட்டார் சாரதிக்கு – ஶ்ரீலங்கா மார்ச் 1956
7. நெடுங்கவிதை: எதிர்காலச்சித்தன் பாடல் – தேன்மொழி
8. கனல் – ஈழகேசரி 7.11.1943
9. வள்ளுவர் நினைவு – ஶ்ரீலங்கா ஜூன் 1962 (வேலணையூர் தொல்காவிய மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கில் அ.ந.க பாடியது)
10. ஏழைப்பங்காளன் – ஶ்ரீலங்கா மே 1955
11. நாட்டுப்பற்று – ஶ்ரீலங்கா அக்டோபர் 1955
12. துறவியும் , குஷ்ட்டரோகியும் – சுதந்திரன் ஜனவரி 14, 1951., ஶ்ரீலங்கா மே 1956
13. ரவீந்திரர் – ஶ்ரீலங்கா பெப்ருவரி 1961\
14. எங்கிருந்து வந்தாள் –
15. மாம்பொழிலாள் நடனம் – நோக்கு வேனிலிதழ் 1964
16. வில்லூன்றி மயானம் – தினகரன் நவம்பர் 9, 1944
17, கடைசி நம்பிக்கை – தேன்மொழி இதழ் 2 1955
18. சிந்தனையும் மின்னொளியும் – ஈழகேசரி
19. கைதி – : சுதந்திரன் , ஆகஸ்ட் 5, 1951.
20. தேயிலைத் தோட்டத்திலே! – பாரதி ( அ.ந.கந்தசாமி கவீந்திரன் என்னும் புனை பெயரில் எழுதிய கவிதை)
21. முன்னேற்றச் சேனை! – பாரதி (அ.ந.கந்தசாமி ‘கவீந்திரன்’ என்னும் புனைபெயரிலெழுதியது)
22. நகரம் –  சுதந்திரன் மார்ச் 18, 1951
23. நான் செய் நித்திலம் – தமிழமுது 3
24. எழுத்தாளர் கீதம் –  (இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1962இல் நடத்திய அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் பொதுமாநாட்டை ஒட்டி அமரர் அ.ந.கந்தசாமி அவர்களால் இயற்றப்பெற்றது.  ‘புதுமை இலக்கியம் பாரதி நூற்றாண்டு முன்னோடி மலரிலும் (1956-1981) வெளியாகியுள்ளது.

* ‘கடவுள் என் சோர நாயகன்’ என்னும் கவிதை சாகித்திய விழா ஒன்றில் பாடப்பட்ட கவிதை. இது பற்றி எழுத்தாளர் அந்தனி ஜீவா எழுதிய அ.ந.க பற்றிய ‘சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்’ கட்டுரைத்தொடரில் தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை அவர்கள் ‘ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறையே தோன்றுமொரு கவிதை’ என்று அதுபற்றிக் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கவிதை எமக்குக் கிடைக்கவில்லை. அ.ந.க பல கவியரங்குகளிலும் பங்கு பற்றியிருந்ததாகவும் அறியக்கிடக்கின்றது. அங்கு அவரால் பாடப்பட்ட கவிதைகளின் முழு விபரங்களும் கிடைக்கவில்லை.

அ.ந.க இலங்கைத்தகவல் தொழிற் திணக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அக்காலகட்டத்தில் அத்திணைக்களத்தால் வெளியிடப்பட்ட ஶ்ரீலங்கா சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்ததாகவும் அறியப்படுகின்றது. அப்போது அதில் அவர் கவிதைகள் எழுதியுள்ளார். ஏற்கனவே ஏனைய ஊடகங்களில் வெளியான சில கவிதைகளையும் மீள்பிரசுரமும் செய்திருக்கின்றார். அத்துடன் ‘பொம்மை வீடு’ என்னும் சீனத்து நாவலொன்றினையும் அதில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.


தேடி எடுத்த கவிதை: அ.ந.கந்தசாமியின் ‘மோட்டார் சாரதிகளுக்கு”

அறிஞர் அ.ந.கந்தசாமி

“காரில் செல்லும் பேர்களைப்போல் காலிற் செல்லும் பேர்களுக்கும்
ஊரில் தெருவில் உரிமைசில உண்டிங் கென்பதை மறவாதீர்.” 🙂

கவீந்திரன் (அறிஞர் அ.ந.கந்தசாமி) எழுதிய கவிதைகள் பல்பொருள் கூறுவன. காதலைப்பற்றி, மக்கள் புரட்சியைப்பற்றி, மழையைப்பற்றி, எதிர்கால மனிதனைப்பற்றி.. என்று அவரது கவிதைகள் பல் வகையின. அ.ந.க மோட்டார் சாரதிகளுக்காகவும் ஒரு கவிதையொன்றினை எழுதியிருக்கின்றார். ஶ்ரீலங்கா சஞ்சிகையில் வெளியான அக்கவிதையினை இங்கு தருகின்றேன். அதிலவர் வாகனச்சாரதிகளுக்கு

“காரில் செல்லும் பேர்களைப்போல் காலிற் செல்லும் பேர்களுக்கும்
ஊரில் தெருவில் உரிமைசில உண்டிங் கென்பதை மறவாதீர்.” என்று அறிவுரை கூறுகின்றார்.

“காரை ஓட்டக் கைபிடிக்கும் கால மெல்லாம் கடவுளரின்
பேரை நினைத்து :என்காரில் வருவோர் நலன்கள் பேணிடுவேன்.
காரைக் கவனக் குறைவால்நான் ஓட்டேன்’ என்று சொல்லிக்
காரை ஓட்டின் விபத்தொழிந்து நாடு முழுதும் களித்திடுமே.” என்றும் மேலும் அக்கவிதையில் கூறுவார் அவர்.

முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியின் மோட்டார் சாரதிகளுக்கான அறிவுரைக்கவிதை இது. ஒருவிதத்தில் மக்களைப்பற்றிய, மக்களுக்கான, மக்களின் நலன்களுக்கான கவிதை.

வாகனச்சாரதிகள் நிச்சயம் கேட்க வேண்டிய பல அறிவுரைகள் உள்ள கவிதை அது. சுவைத்து மகிழுங்கள். அதே சமயம் கவிதை கூறும் பொருளின் தேவையினை உணர்ந்து செயற்படுங்கள். உங்கள் வாகனங்களை ஓட்டுங்கள். 🙂

2. மோட்டார் சாரதிகளுக்கு

காரை ஓட்டும் பேர்களெல்லாம் கைகால் தனித்து கட்டிலிலே
பீறும் இரத்த வெள்ளத்தான் பெருகா திருக்கத் துணிசுற்றிக்
கூரை பார்த்து ஓர்தடவை  குழறி வலியிற் கிடப்பாரேல்
யாரு மவர்க்கு வீதிமுறை சொல்லித் தருதல் வேண்டாவே

நேசமான ஒருநண்பன் நேர்ந்த விபத்தால் படுத்திருக்க
மோசம் இவன் இனிப்பிழையானே முற்றும் முடிந்த தெனடாக்டர்
பேசப் பக்கத் ததைக்கேட்கும் பேற்ய்யார்க்கும் கிடைத்திடிலே
தேசத்தவர்க்கு வீதிமுறை தேடிச் சொல்லல் வேண்டாவே.

தந்தை பிரியத் தாய்கலங்கத் தனயர்சுற்றி விம்மிநிற்கும்
அந்த வீட்டின் உள்ளே நீர் அடிவைத் ததனைப் பார்ப்பீரேல்
எந்த நாளும் கார்விசையை ஏற்றி முடுக்க மாட்டீரே
சொந்த நாட்டின் வீதிமுறை சொல்லித் தருதல் வேண்டாவோ,

காரில் செல்லும் பேர்களைப்போல் காலிற் செல்லும் பேர்களுக்கும்
ஊரில் தெருவில் உரிமைசில உண்டிங் கென்பதை மறவாதீர்.
பாரும் பக்கத் தேசிறுவர் பாய்ந்து வருவார் வழிபார்த்து
காரை ஓட்டின் தெருமரணக் கணக்குப் பெரிதும் குறைவுறுமே.

ஓட்டும் காரின் யந்திரத்தை ஒடிந்த பிரேக்கைச் சக்கரத்தை
நாட்டத் தோடு கவனித்து நல்ல முறையில் சரிபார்த்து
ரோட்டில் சென்றால் விளக்குகளை இரவில் நன்கு துலங்கவைத்தால்
நாட்டில் வீதிவிபத்தெல்லாம் நாளும் குறைந்து வந்திடுமே.

வீதி நெடுக்க கோடுகளாம் வீதி யருகில் விளம்பரமாம்
சேத முயிர்க்கு நேராமல் செய்து வைத்த  முறைமைகளால்
நீதி யன்றோ அவற்றை எலாம் நினைவில் கொண்டு காரோட்டின்
யாதும் விபத்து நேராது யாரும் மகிழ்ந்து வாழ்வாரே.

காரை ஓட்டக் கைபிடிக்கும் கால மெல்லாம் கடவுளரின்
பேரை நினைத்து :என்காரில் வருவோர் நலன்கள் பேணிடுவேன்.
காரைக் கவனக் குறைவால்நான் ஓட்டேன்’ என்று சொல்லிக்
காரை ஓட்டின் விபத்தொழிந்து நாடு முழுதும் களித்திடுமே.

– ஶ்ரீலங்கா மார்ச் 1956, பக்கம் 5