கவிதை: யசோதரையின் போதிமரம்

கவிதை: யசோதரையின் போதிமரம் - முனைவர் தாரணி அகில்

-  Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for Women –

புயல் தாக்கும் பூகம்ப வேளையில், போதிமரம் என்ன செய்யும்?
புத்தன்தான் என்ன செய்வான்?
பொதி சுமக்கும் மனத்தின் குமுறல்கள் யாருக்கு எட்டும்?
சூறாவளி சுழன்று சுழன்று  அடிக்கும் மனப்பிரதேசத்தில் வசிப்பது யார்?
விடையில்லா வினாக்கள் ஆண் வர்க்கத்திற்கே உரித்தாகுமா?
மாயாதேவியின் மாயமகன் நீயாகின் என் வாழ்வே மாயம் ஆனது என்பதா?
யாமத்திலே, மெய் மறந்த தருணத்தில் நீ நீங்கியது கடவுளர்களின் ஆணையோ?
பேரொளி பிழம்பு என்னை நீ துறந்தது உன் ஞானத்தின் முதல் அடியோ?
ஆறாத்துயர் அளித்து ஆறுவது சினம் என்று போதித்தாயோ?
பெண் மனம் பேதை என்ற நிலைக்கு ஆட்படுத்தும் வன்செயல் நிகழ்த்தினையோ?
உன் மனம் முற்றும் துறந்த வேளை என் சித்தம் அழிக்க துணிந்தனையோ ?
காலம் உன்னை வேள்விகளில் நிலை நிறுத்தும் எனில் என் நிலை குலைத்த செயல் நிம்மதியோ?
நிஜமாய் நீ நீடித்திருக்க  நிழலாய் நான் பரிதவித்தேன்
ஈர் ஐந்து வருடங்கள் நீயே என் போதி மரம்
கருவின் வளர்ச்சி என் மணிவயிற்றில்! மன சுழற்சி உன்னிடத்தில்!
நான் தாயாகிறேன். நீ தாயுமானவன் ஆகிறாய்
உன் நிழல் எனக்கு போதித்த பாடங்கள் என் மன வேதனைகள்
புலன் அடக்கிய நீ என் புலன் இச்சை அறியாதது ஏனோ?
பெண்ணுக்கு மெய் பாரம் ஆகுமோ? ஆனது உன்னால் அன்றோ?

நடு நிசியில் நாடு நீங்கிய கள்வனே!
ஓங்கி உரைக்கிறேன்! உணர்!
மனையாள் தேகம் உன்தேசம்! தேசம் ஆண்ட உன் செயலே நம் ராகுலன்
தேசாந்திரம் நீ மேற்கொண்டால் என்  தேக தேசம்  எனக்கு ஆட்படுமோ?
நீ புத்தன் ஆகும் முன்னமே நான் துறந்தேன் என் இச்சைகளை
துறந்தாய் நீ அரியணையை, அரண்மனையை, செல்வத்தை, சீர் வாழ்வை, என்னை, உன்னை, நம்மை
துறந்தேன் உன்னை உன் மாண்பிலா நம்பிக்கை துரோகத்தை
உன் போல் நான் கொடும் மனம் கொண்டிருந்தால்
என்றோ உன்னை நான் நீங்கி இருப்பேன்
நடு நிசியில் அல்ல, பட்ட பகலில்
புத்தனுக்கு பெண்பால் பூமிதனில் பிறப்பதில்லையோ?
ஆண் கொண்ட ஞானம் பெண்ணுக்கு ஏன் மறுக்கப்பட்டது ?
பெண்ணுக்கு குலத்தொழில் பிள்ளை பேறு மட்டும்தானா?
நீ என்னை நீங்கிய கடுஞ்சினத்தை உன் குலத்திடம் நான் கொட்டவில்லை
மனித நேயத்துடன் போற்றினேன் உன் பெற்றோரை
உலகளாவிய உன் தேடுதலின் விடையை 
உன் மாளிகையில் நான் உணர்ந்தேன்
உன் போல் மனை துறந்த மாண்புமிகு மனிதர்களின்
மனைவிகளை என் மனம் சேர்த்தேன்
மாற்றான் மனைவிகளை கவரத்துடிக்கும்
இச்சாதாரிகளின் அண்மையை தவிர்த்தேன்
மாறினேன் புத்த பிக்குனியாய்
மலர்ந்தேன் மாபெரும் மகோன்னத வடிவாய்
என் கௌதம புத்தனே!
மானுடம்  உன்னை போற்றுகிறது
மங்கை என்னை புறக்கணிக்கிறது
போதி மரம் அனைவருக்கும் பொது.
பேதம் பார்க்காமல் பாதகம் செய்யாமல் போதனை தரும்
பெண் என்று இகழாது, ஆண் என்று புகழாது.
பேதைகளுக்கு போதி மரம் தென்படவில்லையோ?
புத்தனுக்கு பின் போதி மரம் வேருடன் வீழ்த்தப்பட்டதோ?
வீழ்த்தப்படவேண்டியதுதான் போதி மரம் அல்ல.
அதன் கீழ் அமர் ஆண் ஞானம்
பெண் எனும் பேதமையை தவிக்கவிட்ட உனக்கு
போதி மரம் மெய்ஞானம் நல்குமோ?
எனில் போதி மரத்தின் கரியமில வாயு
என் பேதமையை சிதைக்குமா?
மன்னிக்கிறேன் போதி மரத்தை
என் மாதர் குல நற்குணத்தால்
நான்
ராஜ ஸ்திரீ
ராகுலனின் தாய்
புலன் அடக்கிய பூகம்பம்
பூஜா பலன்களின்பாக்கியம்
உடல் இச்சைகள் துறந்தவள்
பேரின்ப வழி நடத்தும் புத்த பிக்குணி
மகளிர் மனம் மலர்த்தும் மகாநிதி
மானுடத்தின் பிரதிநிதி
மாளிகையிலேயே ஞானம் ஈட்டியவள்
புத்தா! எனக்கு தேவை இல்லை உன் போதி மரமும்,
உன் மனைவி என்ற மதிப்பும்
இல்லாளை நீ இல்லாமல் ஆகிவிட்டாலும்,
உள்ளேன் நான் என என்னை நிருபித்தவள்
நான் போதி மரத்தையும் புத்தனையும் மிரள வைக்கும்  சூறைக்காற்று
நான்
நான் பெண் எனும் பேரரசி!

* முனைவர் ஆர்.தாரணி–  akilmohanrs@yahoo.co.in