பேரோடும் புகழோடும்
பெரும்பணி ஆற்றும்
சீரோடும் சிறப்போடும்
சிந்தனையைத் தூண்டும்
ஈரோடு மக்கள்
சிந்தனைப் பேரபையின்
உலகத்தமிழ்ப் படைப்பரங்கில்
உங்கள்முன் நிற்கிகிறேன்
பிச்சினிக்காடு நான்
பிறந்தது தமிழ்நாடுதான்
எனினும் எனக்கு
சிங்கப்பூர்
இரண்டாவது தாய்நாடு
தமிழ்நாடு
ஐம்பதாண்டு அதன்பெருவளர்ச்சியில்
இருபத்தைந்தாண்டு எனக்கும் சொந்தம்
தாய்மொழி
தமிழ்மொழியை
அரசுமொழியாய்
அலங்கரிக்கும் நாடு
எனவேதான்
எனக்குச் சிங்கப்பூர்
இரண்டாவது தாய்நாடு
தமிழ்நாடு
ஆனால்
ஈரோடு எனக்குத்
திருத்தலம்
மனிதனின் மானம் காக்கும்
ஆடைக்கு நூல்தரும்
மனிதனை மனிதருள்
மாணிக்கமாக்கும்
சிந்தனைக்கும் நூல்தரும்
ஈரோடு எனக்குத்
திருத்தலம்
ஈரோட்டில் இன்று
கவிதைத்திருவிழா
கவிதைக்குத் திருவிழா
ஈரோடு இன்று
கவிதையாய்ப்பூத்து
கவிதையாய்க்காய்த்து
கவிதைத்தோட்டமாய்க்
காட்சி அளிக்கிறது
கவிதைத்திருவுழா
கவிதைக்குத்திருவிழா
கவிஞனுக்கு இதுதானெ பெருவிழா
எனவே
ஈரோடுதான்
எனக்குத்திருத்தலம்
சிங்கப்பூரில்
கவிமாலையை
நிறுவிய கவிஞன் நான்
ஆனால்
ஈரோட்டில்
இன்றையமாலை
இனிய கவிமாலை
கவிதை உலகில்
சிங்கங்கள் சிற்பிகள்
சிகரங்கள் இமயங்கள்
கணியன் பூங்குன்றன்கள்
காளமேகங்கள் வானம்பாடிகள்
ஒன்றுகூடும் உன்னதமாலை
சிலம்பாட்டம் கவிதையில்
செய்யயும்மாலை
சிந்தனைத் தேன்துளியைத்
தூவும்மாலை
ஞானஒளி கவிதைவழி
காட்டும் மாலை
மணக்கும் மாலையல்ல
கவிதையாய்க் கனக்கும் மாலை
இன்றையமாலை
இனியமாலை
அந்த
அரியமாலையை
அனைவருக்கும் தந்த
ஈரோடு
மக்கள்சிந்தனைப்பேரவையை
இதயத்தால் வணங்குகிறேன்
திருத்தலம் சென்று
திரும்பும் பயணம்
திருத்தலப் பயணமாகும்
திருத்தலம் சென்று
திரும்பும் பயணம்
தினந்தோறும் நடக்கிறது
திசைதோறும் நடக்கிறது
திருத்தலப் பயணம்
நதிதாண்டியும்
மலைதாண்டியும்
கடல்தாண்டியும்
கண்டம்தாண்டியும் நடக்கிறது
நடக்கும் இந்தப்பயணம்
நடையில் நடக்கிறது
காரில் நடக்கிறது
கப்பலில் நடக்கிறது
வானிலும் நடக்கிறது
நடக்கும் இந்தப்பயணம்
எதற்காக நடக்கிறது?
நடக்கும் இந்தப்பயணம்
நடப்பது எதற்காக?
கேள்வி எழுகிறது
மனசு
கேட்காமல் இருக்கிறது
திருத்தலப் பயணம்
சென்று திரும்பினால்……
வருத்தும் துன்பத்தின்
வலிமை குறையலாம்
வருத்தத்தின் வாயில்
அடைக்கப்படலாம்
துன்பத்தின் நுழைவு
தடுக்கப்படலாம்
நுழைந்த துன்பம்
துடைக்கப் படலாம்
கிடைக்காத அமைதி
கிடைக்கப்பெறலாம்
எட்டாத சொர்க்கம்
எட்டுமென எண்ணலாம்
இப்படி
எதைஎதையோ எண்ணித்தான்
திருத்தலப் பயணம்
திசைதோறும் நடக்கிறது
தினந்தோறும் நடக்கிறது
இவைவேண்டி பயணமென்றால்
இதைதீர்க்கும் பயணமென்றால்
நடக்கட்டும் திருப்பயணம்
நட்டம் நமக்கில்லை
திருத்தலங்கள் எல்லாம்
திருத்தும் தலங்களா?
இல்லை நம்மை
வருத்தும் தலங்களா?
கேள்வி எழுகிறது
மனசு
கேட்காமல் கேட்கிறது
கலப்படத்தைக் கவனமாய்க்
கடைபிடிக்கும் கயவன்
திருத்தலம் சென்று
திருந்தி திரும்பினால்
அதுதான் திருத்தலம்
ஆம்
அது
அவனைத் திருத்திய தலம்
திருத்தலம் சென்று
திரும்பியும்
திரும்பியும்
கலப்படம்செய்வதில்
கவனம் கூடினால்
திருத்தலம் தேவையா’?
திருத்தலப்பயணம்தான் தேவையா?
தெய்வமும்
கலப்படத்தொழிலுக்கு உதவியா?
கேள்வி எழுகிறது
மனசு
கேட்காமல் கேட்கிறது
வஞ்சகம் சூழ்ச்சி
வன்கொடுமை துரோகம்
பொறாமை திருட்டு
ஏதும் குறையாமல்
ஏகபோகமாய்
செய்து பிழைப்போர்கள்
திருத்தலம் சென்று
திரும்பினால் நன்மையா/?
திருந்தினால் நன்மையா?
திருத்தலம் சென்று
திரும்பவும் செய்தால்
தெய்வமே அதற்கு உடந்தையா
கேள்வி எழுகிறது
மனசு
கேட்காமல் கேட்கிறது
திருத்தலம் சென்று
தெய்வம் வணங்கி
திரும்பாமல்
ஒரு
திருப்பம் நிகழாமல்
முட்டி மோதி
நெருக்கடியில்
மூச்சுவிட மறந்ததையும்
இயற்கைப்பெருந்துணையால்
இறைவனடிச் சேர்ந்ததையும்
செய்தியாய்ப் படிக்கிறோம்
செய்தியாய்ப் பார்க்கிறோம்
திருத்தலம் சென்றோரை
திருப்பி அனுப்பாமல் – உயிரை
வழிப்பறிசெய்வதில்
வல்லமை அதிகம்
இயற்கைக்கா? இறைவனுக்கா?
கேள்வி எழுகிறது
மனசு
கேட்காமல் கேட்கிறது
திருத்தலம் என்றால்
திருத்தலம் சென்றால்
திருப்பம் மனதில் நிகழவேண்டும்
திருத்தம் வாழ்க்கையில் நிகழ்த்த வேண்டும்
உடலை உயிரை
வருத்திக்கொண்டு
ஊர்விட்டு உறவுவிட்டு
வருவோரை மேலும்
வருத்தினால் எப்படி
திருத்தலமாகும்?
கேள்வி எழுகிறது
மனசு
கேட்காமல் கேட்கிறது
திருத்தலம் என்றால்
திருத்தலம் சென்றால்
பொய்யும் புரட்டும்
திருட்டும் கொலையும்
அடியோடு அகலவேண்டும்
மனசெல்லாம் அறம்பூத்து
மணம்வீச வேண்டும்
கணந்தோறும் கொடை செய்து
கரம்சிவக்கவேண்டும்
அறிவில் தெளிவும்
அன்பு மொழியும்
ஆன்றோர் வழியில்
சான்றோ ராக்கும்
தலமே எனக்குத்
திருத்தலமாகும்
ஆம்
ஈரோடு எனக்குத்
திருத்தலமாகும்
மக்களைச் சந்திக்க
மக்களைச் சிந்திக்க
வழிகாட்டும் திருத்தலம்
வழிபோடும் திருத்தலம்
ஈரோடு அன்றி
எது வேறுதலம்?
சான்றோர் வருகின்ற
சான்றோரை அழைக்கின்ற
சிந்தனைப் பேரவையால்
சிறந்தது இத்தலம்
ஈரோடு
ஒரு
சிந்தனைத்தலம்
சிந்திக்கும் தளம்
எனக்கொரு வேண்டுதல்
என்னிடம் இருக்கிறது
இத்தனைமுறை திருத்தலம்
சென்று திரும்பினால்
நினைத்தவை எல்லாம்
நிறைவேரும் என்பதுபோல்
எனக்கொரு வேண்டுதல்
என்னிடம் இருக்கிறது
அது என்ன
வேண்டுதல்?
ஆண்டுக்கொருமுறை
ஈரோடு வரவேண்டும்
அதுவும்
ஆகஸ்டில் வரவேண்டும்
புத்தகக் கடலில்
மூழ்கி மூழ்கி
மூச்சடக்காமல்
முத்தெடுக்க வேண்டும்
காரணம்
மூளைக்குக் கொஞ்சம்
மூலதனம் வேண்டும்
அதை
வைப்புநிதியாய் வைத்து
வாழ்க்கையை நடத்த வேண்டும்
இல்லமும் உள்ளமும் வளம்பெற வேண்டும்
இல்லை இல்லை
ஒரு
வரலாறு படைக்கவேண்டும்
வாங்கிய மூலதனத்தின்
வட்டி பெருகாமல்
படித்து முடிக்கவேண்டும்
படிப்படியாய் சிந்தனையில்
பரிணாமம் பெறவேண்டும்
பரிமாணம் கூடவேண்டும்
ஆம்
எனக்குத்திருத்தலம்
ஈரோடுதான் – இங்கே
ஆண்டுக்கொருமுறை
வரவேண்டும்
ஆகஸ்டில் வரவேண்டும்
ஆயுள்முழுதும் வரவேண்டும்
வேண்டுதல் இதுதான்
விருப்பமும் இதுதான்
வேண்டி விடைபெறுகிறேன்.
pichinikkaduelango@yahoo.com