தனது ‘குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள்’ என்னும் கவிதைத்தொகுப்பின் முன்னுரைக்குறிப்பில் பின்வருமாறு எழுதினார்:
“மூங்கில்களை முறித்து எழுகின்ற துயரத்தின் குரல் பதினாறு திசைகளிலும் பரவுகின்றது. சோற்றுப் பானைக்குள் இருக்கும் பருக்கையை எண்ணுவதற்குள் குழந்தை செத்துக் கிடக்கின்றது. இரவையும் பகலையும் திருடிக் கொண்டு போய் விட்டார்கள். காற்று இடம் பெயர்கின்றது, பிண வாசனையை சுமந்து கொண்டு. சமயத்தில் மனிதர்களையும் தூக்கிக் கொண்டு. வாழ்க்கையை பனை மரத்தின் அடியிலும், வயல் வரம்புகளுக்குள்ளும் தொலைத்து விட்டு வந்து பனிப்புலங்களுக்கடியிலும் இயந்திரங்களுக்கிடையிலும் தேடியவர்களும் களைத்துப் போனார்கள். ஈரக் காற்றில் குளிர்ந்து இப்போதும் துடித்துக் கொண்டிருக்கின்றது நம்பிக்கை. கண்ணீரிலும், மூச்சிலும் கரைந்து பிரபஞ்சத்தின் முடிவிலி வரை எதிரொலிக்கின்றது. பூவரசம் காற்றைக் குடித்துக் கொண்டு, புழுதியைத் திரட்டிப் பூசிக் கொண்டு வாழ வேண்டுமென்ற ஆசை- மனிதனாக வாழ வேண்டுமென்ற ஆசை – மறுபடியும் மறுபடியும் கொழுந்து விட்டு எரிகின்றது. இறுதி மூச்சின் கடைசிச் சொட்டு காற்றிலும் இந்த நம்பிக்கை துடித்துக் கொண்டு தான் இருக்கும். – அன்புடன் – செழியன்”