தமிழகத்திலிருந்து நூல்களை வாங்க ஆர்வமுள்ளவர்களுக்கு நான் நண்பரொருவரை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். அவர் என் பால்ய காலத்து நண்பர்களிலொருவர். நண்பர் வவுனியா விக்கியே எழுத்தாளர் ஸ்ரீராம் விக்னேஷ் (Srirham Vignesh). அவர்களையே நான் அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். நீங்கள் வாங்க விரும்பும் புதிய நூல்களென்றாலும் சரி, உங்களது இளமைக்காலத்தில் நீங்கள் வாசித்த ‘பைண்டு’ செய்த படைப்புகள் அல்லது அக்காலகட்டத்தில் வெளியான நூல்கள் எவையென்றாலும் அவர் தன்னால் முடிந்த வரையில் தேடி, நியாயமான கட்டணத்தில் அனுப்புவார்.
நான் நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த நூல்களிலொன்று: ஆரம்பகால ராணிமுத்துப் பிரசுரமாக வெளியான எழுத்தாளர் ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’. என் பால்ய காலத்தில் நான் வாசித்த என்னைக் கவர்ந்த நூல்களிலொன்றென்பதால் , ஒரு நினைவுக்காக அந்நூலை வாங்க விரும்பினேன். அவரிடம் கூறினேன் இந்நூலை எங்காவது பழைய புத்தக் கடையில் கண்டால் வாங்க விருப்பமென்று. அவர் உடனேயே பழைய புத்தகக் கடைகளெல்லாம் தேடி , கடையொன்றில் அந்நூலைக் கண்டு பிடித்தார். ஆனால் அட்டையில்லாமலிருந்த நூலினையே அவரால் கண்டு பிடிக்க முடிந்தது. இந்நிலையில் எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தன் முகநூலில் பகிர்ந்திருந்த ஆரம்ப கால ராணிமுத்துப் பிரசுரங்களின் அட்டைப்படங்களிலொன்றாக ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’யுமிருந்தது. அதனை நான் என் முகநூலில் பகிர்ந்திருந்தேன். அவர் அவ்வட்டைப் படத்தைக்கொண்டு அழகான அட்டையொன்றினை உருவாக்கி, அட்டையற்ற நந்திவர்மன் காதலிக்கு அதனை அணிவித்துக் கூரியரில் அனுப்பியிருந்தார். அதற்காக அவருக்கு நன்றி.
கூடவே அக்காலகட்டத்தில் ஆனந்த விகடனில் தொடராக வெளியான ஜே.எம்.சாலியின் ‘கனாக் கண்டேன் தோழி’ யின் பைண்டு செய்யப்பட்ட தொகுப்பினையும் கண்டெடுத்து அனுப்பினார். அத்தொடர் நாவலில் ஓவியர் ஜெயராஜ் வரைந்த சில ஓவியங்களையும் இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். இளம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல் விதவையின் மறுமணத்தைப்பற்றியும் பேசுகின்றது. நாவலில் அவ்வப்போது வரும் காவிரி ஆற்றங்கரைக் காட்சிகளும், மொழி நடையும் படிப்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொள்வன.
அவரது இத்தேடலுடன் கூடிய முயற்சி என்னைக் கவர்ந்தது. அதனாலேயே அவரை நான் இங்கு நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த எண்ணினேன். ஆர்வமுள்ளவர்கள் அவருடன் பின்வரும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்: 00 91 9443970260 . அத்துடன் அவருடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள விரும்பினால் அதற்கான மின்னஞ்சல் முகவரி: bairaabaarath@gmail.com அவர் வசிப்பது நெல்லை மாவட்டத்தில். இவர் சிறந்த புகைப்படப்பிடிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா விக்கி தனது முகநூற் பக்கத்தில் தன்னைப்பற்றிய அறிமுகத்தில் குறிப்பிட்ட ஒரு விடயம் என் கவனத்தை ஈர்த்தது. அதிலவர் என்னைப்பற்றிக் கூறியுள்ள விடயமே அவ்விதமென் கவனத்தை ஈர்த்தது. அது :
“எனது இலக்கியத்துறை ஆர்வத்துக்கு அடிப்படைக் காரணமாயிருந்தவர் வ/வவுனியா மகா வித்தியாலயத்தில் 3 – 6ம் வகுப்புவரை என்னோடு படித்த சக மாணவர் ஒருவர்தான்.அவர் 4ம் வகுப்பு படிக்கும்போதே கவிதை,கதை என எழுத ஆரம்பித்துவிட்டார். அதுபோல எழுதவேண்டும் என எழுந்த ஆர்வம் நிறைவேறியது, நான் 11ம் வகுப்பு (+1) படிக்கும்போதுதான். அந்த மாணவர் வேறு யாருமல்ல…. கனடாவிலிருந்து வெளிவரும், பிரபல இலக்கிய (இணைய) இதழான ”பதிவுகள்” இதழின் ஆசிரியர் ”கிரி” (Navratnam Giritharan) அவர்கள்தான். சமீபத்தில்தான் அவருடைய தொடர்பு (முக நூலில்) கிடைத்தது. அதன் பின்புதான் என்னைபற்றிய தகவல்களை வெளியிடவேண்டும் என்ற எண்ணமும் வந்த்து. நன்றி… கிரி…..!”
ஏதோ ஒருவகையில் எழுத்தாளர் ஒருவரின் உதயத்துக்கு நானும் காரணமாகவிருந்திருக்கின்றேன் 🙂 அது ஒருவகையில் திருப்திகரமான உணர்வினையே தருகின்றது.
எழுத்தாளர் ஸ்ரீராம் விக்னேஷ் ,Srirham Vignesh (வவுனியா விக்கி) தன்னைப்பற்றி முகநூலில் எழுதியுள்ள அறிமுகத்தில் மேலும் கூறிருப்பது வருமாறு:
” சிறுகதை,கவிதை துறைகளில் ஆர்வம் உண்டு. ”ஆனந்த விகடனி’ல் (1991)ஆறுதல் பரிசும், ”தினமல’ரில்(1999) முதல் பரிசும் சிறுகதைக்காக பெற்றுள்ளேன். மேலும், ”தினமலர்” (நெல்லை) வாரமலரில் (கதை மலர்), சில சிறுகதைகளும், ஒரு குறுநாவலும், ஒரு தொடர்கதை ஆகியன எழுதியுள்ளேன். ”கரிசல்காட்டுக் கதைகள்” (சிறுகதைத் தொகுப்பு) நூலில் எனது சிறுகதை உள்ளது. கவிதைத் துறையில், ”குமரி முரசு”பத்திரிகை என் கவிதைகளுக்கு இடம் தந்தது. ”தமிழ் முரசு” சஞ்சிகை நடத்திய,”பொற்கிழி கவிதைப் போட்டி”யில், தகுதிகாண் பரிசு கிடைத்தது. வீரவ நல்லூர் ”வாசகர் வட்டம்”, சேரன்மகாதேவி ”வாசகர் வட்டம்”,வீரவ நல்லூர் ”பாரதியார் கவிமுற்றம்” , மற்றும் (இலங்கை)”வவுனியா இலக்கிய வட்டம்” ஆகிய அமைப்புக்கள் நடத்திய, ”கவியரங்கு”களில் பங்குபற்றியுள்ளேன். தவிர, கவிதைத் துறையில்,என்னால் மறக்கமுடியாத (”சாதனை ” என்று சொன்னால் யாரும் தவறாக எண்ணாமல் மன்னித்து விடுங்கள்.) ஒரு செயல்பாடு நடந்தது. கவிஞர்களான – அழகாபுரி அழகுதாசன், சீவல்புரி சிங்காரம் , மற்றும் இருவர் (பெயர் நினைவில் இல்லை. மன்னிக்கவும்.) சேர்ந்து, ”செம்மாங்கனி” என்னும் பெயரில், ”உலகத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு ” நூல் ஒன்றை (1982ல்) கோலாலம்பூரிலிருந்து வெளியிட்டார்கள். அத்ற்கு,”வன்னி நாடு” என்னும் (மரபுக்கவிதை) அனுப்பியிருந்தேன். ஈழத்திலிருந்து பல கவிஞர்கள் அனுப்பியதில்,பிரசுரத்துக்கு தெரிவாகி, எனக்கு மனமகிழ்வைத் தந்தது.முதன் முதலில், பிரசுர வடிவில் வந்த படைப்பும் அதுதான். ”செம்மாங்க்னி ” யிலுள்ள ”ஈழத்தார் கவிதை”களை, விமர்சித்து, அங்குள்ள பிரபல பத்திரிகையான,”வீரகேசரி” யில் வந்த விமர்சனக் கட்டுரையில், மிகச் சிறப்பான கவிதைகள் எனக் குறிப்பிடப்பட்ட, 7கவிதைகளில் இதுவும் ஒன்று………. இச் சம்பவம் நடக்கும்போது எனக்கு வயது 23. ”சிறகுப் பேனா” என்னும் கையெழுத்துப் பிரதியை சில மாதங்கள் நடத்தினேன்.(இப்போது இல்லை) சென்னை, கோடம்பாக்கம் ”தென்னிந்திய திரைப்படக் கல்லூரி” (S.I.F.I)யில்(1996) படித்துள்ளேன். “
ngiri2704@rogers.com