சமூக ஊடகங்களில் வேண்டியதெல்லாம் ஒரு ‘பிம்பம்’ மட்டுமே; அதுவே பிறரைப் பெரிதும் கவர்கிறது. உள்ளடக்கத்தைவிட, உருவம்தான் அங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. சமூக ஊடகங்களில் பதியப்படும் இலக்கியங்கள் பொதுவாகப் பலரது கவனத்தைப் பெறுவதில்லை; பகிரப்படுவதில்லை; ஒருசில வரிகளுக்கப்பால் படிக்கப்படுவதுமில்லை. அரிதாகக் கிடைக்கும் விருப்புக் குறிகள்கூட (likes), பெரும்பாலும் படிக்கப்படாமலே கிடைக்கப்பெறுவன. எனவே, படிக்கப்படா இலக்கியங்களையும் இலக்கிய விமர்சனங்களையும் சமூக ஊடகங்களில் பதிவுசெய்து என்ன பயன்? அன்றாடம் அவற்றில் இடம்பெற்றுவரும் சுயபுராணங்களுடன், கடிபாடுகளும், கிசுகிசுக்களும், வசைகளும், வக்கிரங்களும் மட்டும்தானா இலக்கியம்? இந்நாளைய இலக்கியக்காரர் சிலரது மனக் கவலை, இது! ஒருவகையில், நியாயமான கவலையுங்கூட!
ஒத்த விருப்புக்களையும் பின்னணிகளையும் கொண்ட பாவனையாளர்கள் தம்மை இணைத்து, தமக்கிடையே பகிர்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கும் சமூக வலைத் தளங்களை சமூக ஊடகங்கள் என்பர். இன்னொரு வகையில் கூறுவதாயின், சமூக ஊடகங்கள் என்பன பாவனையாளர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களைத் தாங்கிவரும் இணையத் தளங்கள் எனலாம். மிகப் பிரபலமானவை என Facebook, Facebook Messenger, Instagram, WhatsApp, Google+, Myspace, LinkedIn, Pinterest, Snapchat, Tumblr, Twitter, Viber, VK, WeChat, Weibo, Baidu Tieba, Wikia போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள், தமிழ்மொழிப் பாவனையாளர்கள் பெருவிருப்புடன் ஊறித்திளைப்பது முகநூல் எனப்படும் Facebook ஆகும். இணைய இணைப்பினைக் கொண்ட ஒரு கணினியில், ஒருவர் தாம் விரும்பிய உள்ளடக்கங்களைத் தாமே உருவாக்கி, அவற்றை உலகுடன் பகிர்ந்துகொள்ளச் சமூக ஊடகங்கள் உதவுகின்றன. இவ்வூடகங்கள் பிறருடன் நெருக்கமான ஊடாட்டங்களை மேற்கொள்ளும் வாய்ப்பினை வழங்கக்கூடிய சாதனங்களாக இருப்பதனால்தான், பலரும் இவற்றைப் பெரிதும் விரும்புகின்றனர். இலக்கியப் பரப்பிலும் இவை கால் பதிக்கத் தவறவில்லை. படைப்பாளிகள் பலரும் தமது மூலப் படைப்புக்களை இப்போது சமூக ஊடகங்கள் வழியாகப் பகிர்ந்து கொள்கின்றனர். இது இலக்கியத்தின் பாரம்பரிய வடிவத்தில் மட்டுமன்றி, அதன் கருத்துருவாக்கத்திலும் கணிசமான மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது.
சமூக ஊடகங்களிலிருந்து இலக்கியப் படைப்புக்களைப் படிக்கும் வாசகர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் பல்கிப்பெருகி வருகின்றது. படைப்பாளிகள் வாசகர்களோடு உடனுக்குடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்த முடிவதால் கிடைக்கும் பலாபலன்கள் பெரிதும் சிலாகிக்கப்படுகின்றன. முன்னர் எப்போதுமில்லாத வகையில், தாம் வாசகர்களுக்கு மிகக் கிட்ட நெருங்கியிருப்பதாகப் படைப்பாளிகள் உணர்கின்றனர். வாசகர்களிடமிருந்து உடனுக்குடன் கிடைக்கும் காத்திரமான பின்னூட்டங்கள் தமக்கு உற்சாகமளிப்பதாகக் கூறுகின்றனர். அவை வாசகர்களின் நாடித் துடிப்பை உணர்ந்தறிய உதவுவதுடன், அவற்றிற்கேற்ப தமது படைப்புக்களை அவ்வப்போது இற்றைப்படுத்தி மாற்றியமைக்கவும், புத்தாக்கம் செய்யவும், செவ்விதாக்கம் செய்யவும், இதனால் தமது எழுத்தாற்றலை மென்மேலும் மேம்படுத்தவும் முடிவதாகக் குறிப்பிடுகின்றனர். இந்த நேரடித் தொடர்பாடலாலும் உறவாடலாலும் படைப்பாளிக்கும் வாசகர்களுக்கும் இடையே இருந்துவந்த பாரம்பரியத் தடைச்சுவர் தற்போது தகர்ந்துவிட்டதாகக் கருதும் இவர்கள், பாரிய செலவுகளேதுமின்றித் தமது படைப்புக்களை வாசகர்களுக்கு எடுத்துச் செல்லச் சமூக ஊடகங்கள் உதவுவதாகத் தெரிவிக்கின்றனர். காத்திரமான விமர்சனங்கள், கருத்தாடல்கள் என்பன ஊடாக, வாசகனும் படைப்பாளியும் கூட்டாக இணைந்து படைப்பின் தரத்தை மேம்படுத்த முடிகின்றது என்றும், ’நான் என்றிருப்பதைவிட நாம் என்றிருப்பது எப்போதும் ஒருபடி உயர்ந்ததுதானே’ என்றும் இவர்கள் கருதுகின்றனர்! சமூக ஊடகங்கள் ஆக்கங்களை உடனடியாகவும் இலகுவாகவும் மிகுந்த தாக்கத்துடனும் பகிந்துகொள்கின்றன; செலவின்றிப் பிரசுரிக்கின்றன; மிகப் பரந்துபட்ட, விரைவான, நெருக்கமான வாசகர் பரிவாரத்தைத் தேடித் தருகின்றன; புதிய தலைமுறையினரின் சிந்தனைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் சிறந்த வடிகால் அமைத்துக் கொடுக்கின்றன. இவ்வாறான காரணங்களையிட்டே சமூக ஊடகங்களில் தமது படைப்பிலக்கியங்களைப் பிரசுரித்துவரும் படைப்பாளிகள் பலரும் இதனை மிகுந்த விருப்புக்குரிய ஒரு வழிமுறையாகக் கைக்கொள்கின்றனர். மேலும், ஒரு கவிதையின், ஒரு சிறுகதையின் அல்லது ஒரு நாவலின் இறுதி எல்லைநிலை வரை மட்டுமே படித்து அனுபவிக்கும் வாய்ப்பினை வாசகனுக்கு இதுவரை காலமும் புத்தகங்கள் வழங்கி வந்துள்ளன. இப்படைப்புக்களின் இறுதி நிலையைப் படைப்பாளி எப்படி எட்டினான் என்பதை அறியும் வாய்ப்பு வாசகனுக்கு அநேகமாகக் கிடைத்ததில்லை. ஆனால் சமூக ஊடகங்கள் வழியாகக் கிட்டும் நேரடி ஊடாட்டமானது, படைப்பாளியானவன் படைப்பின் இறுதிநிலை முதற்கொண்டு, தனது படைப்பாக்க முயற்சியின் ஒவ்வொரு படிநிலையிலும் அனுபவித்த வலிகளையும், வேதனைகளையும், புத்துணர்வுகளையும், பூரிப்புக்களையும் வாசகனோடு பகிர்ந்துகொள்ள உதவுகின்றமை இன்னொரு சிறப்பம்சம்.
ஆயினும், சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் இலக்கியங்கள் பலவும் புத்தகங்களில் பிரசுரிக்கப்படுவனவற்றை ஒத்தவையாகவோ அல்லது அவைபோன்று விரிவானவையாகவோ பெரும்பாலும் இருப்பதில்லை; மேலும் வாசகர்கள் எல்லோருமே நவீன தொழில் நுட்பங்களிலும், மின்னணுவியலிலும் பரிச்சயம் உடையவர்கள் அல்லர்; இந்நிலையில் சமூக ஊடகங்களில் வெளிவரும் என்பதனால் இலக்கியங்கள் அவற்றுடன் ஊடாடுவோரை மட்டுமே சென்றடைகின்றன; சமூக ஊடகங்களில் பாவனையாளர்கள் தமக்கு விரும்பிய எதனையும் தாமே எழுதிப் பிரசுரிக்கும் வசதி இருப்பதனால், தரக்குறைவான, பண்பற்ற, பகிரப்படக்கூடாத, வக்கிரமான, குரோதமான, சட்டவிரோதமான படைப்புக்களும் பகிரங்கமாக வெளிக் கொணரப்படுகின்றன; அத்துடன், உலகெங்கும் ஏராளமான சமூக ஊடகங்களும் e books, fan fictions என்பனவும் இணையங்களில் உள்ள நிலையில், இவற்றில் பிரசுரமாகும் இலக்கியங்களைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் இலகுவான காரியமல்ல; பதிப்புரிமைச் சட்டதிட்டங்களும் நிலைமைகளுக்கேற்ப, நாட்டுக்கு நாடு பொருந்தலாம் அல்லது பொருந்தாமற் போகலாம், இதன் விளைவாக, கருத்துக்களவு (plagiarism) சர்வசாதாரணமாகவே இடம்பெற முடியும். இவை அனைத்தும் ஒன்று திரண்டு, இலக்கியத்தின் நேர்மைக்கும் நாணயத்திற்கும் பெருத்த சவாலாக அமைந்துவிடுகின்றன.
இலக்கியம் பிறருடன் இணைப்பை ஏற்படுத்த வல்ல சாதனம். ஓர் இலக்கியம் மீதான பிரியத்தைப் பகிர்வது பெறுமதிமிக்க செயல். இலக்கியத்துக்கு ஆர்வலர்களும் ஆதரவாளர்களும் பயன்மிக்க அடையாளச் சின்னங்கள். எனினும் சமூக ஊடகத்தில் இலக்கியமொன்றைப் பகிர்வதென்பது, தம்மை ஓர் இலக்கியக்காரன் எனக் காட்டிக்கொள்ளும் ஓர் உத்தி மட்டுமே என்பது சிலரது கருத்து. சமூக ஊடகங்களின் வரவின் பின்னரான இன்று, எழுத்தாளர் ஒருவர் தமது படைப்பைப்பற்றி பிறர் என்ன சொல்கிறார்கள் என அவரே தேடுகிறார்; அல்லது அவரைச் சீண்டுமுகமாக விமர்சகர் ஒருவர் கடுமையாகத் தாக்குகின்றார்; எழுத்தாளரும் தாம் என்ன சொல்ல வந்தேன் என விளக்கம் கொடுக்க நிர்ப்பந்திக்கப் படுகின்றார்; தாக்குதல் தடுப்பு முயற்சியில் ஈடுபடுகிறார். இதுவரை காலமும் வாசகர்கள் எவ்வாறு ஒரு படைப்புக்கு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதைப் படைப்பாளியால் கட்டுப்படுத்த முடியாதிருந்தது. மாறாக, இன்று எழுத்தாளரும் வாசகரும் முன்னும் பின்னும் உரையாடக் கிடைத்திருக்கின்றது. முன்பு அது ஓர் ஒருவழிப்பாதைச் செயற்பாடாகவே இருந்தது. இதனால், ஒரு படைப்பினை வெளியிட்ட பின்னர், ’எழுத்தாளர் இறந்துபோனார்’ என முன்னொரு காலம் விமர்சனத்தில் பொதுவாகப் புழங்கி வந்த கூற்று, இன்று பொருளற்றுப் போயிற்று.
வாசிப்பின் போதான கவனக்குவிப்பின் எல்லை, இந்நாட்களில் வரவரக் குறுகி வருகிறது. அச்சு ஊடகங்களில் காட்டப்படும் அவதானம் குறைந்து வருகின்றது. கணினி/ஸ்மார்ட் ஃபோன் திரைகளுடனான ஊடாடுட்டமும் அசையும் ஆக்கங்கள் மீதான ஆர்வமும் அதிகரித்துவிட்டன. இதனால் ஒரு கோப்பியைக் குடித்து முடிப்பதற்கிடையில் வாசித்து முடிக்கக்கூடிய Micro-fiction வகைப்பட்ட குறுங்கதைகளே வாசகர்களுக்குத் தேவைப்படுகின்றன. அதிலும் உருவம்தான் குவிமையம். எழுத்து இரண்டாம் பட்சம். இதனால் சமூக ஊடகப் பாவனைக்குப் பின்னர், புத்தக மதிப்பாய்வுகள் ஆழமற்றவை ஆகிவிடுகின்றன. மேலும், மொழிப் பாவனையின்போது வசனங்கள் பொதுவாகக் குறுகிச் சுருங்கிவிட்டன.
சமூக ஊடகங்களில் உறவுகளைப் பேணுவதுடன், இலகுவான, மிகக் காத்திரமான சுய-ஊக்குவிப்பு, சுயவிளம்பரம் அல்லது சுயபரம்பல் செய்ய முடியும். அது பொதுவாக கட்டணமற்றது; எல்லையற்றது; மிகக் குறைந்த முயற்சியுடன் இவைபோன்ற பல அனுகூலங்களைச் சாத்தியமாக்கிக் கொள்ள முடியும். ஆகையால் இவற்றைச் சுடச்சுடச் செய்து வெற்றியடைவதில் பலரும் அவசரம் காண்பிக்கிறனர்; பொறுமையை இழக்கின்றனர். நேரத்தில் மட்டும் குறியாக இருந்து அடிக்கடி மணிக்கூட்டைப் பார்க்கும் பரபரப்பில் இருக்கின்றனரே தவிர, ஆறஅமர இருந்து சீர்தூக்கிப் பார்த்து எழுதும், மதிப்பிடும், விமர்சிக்கும் பக்குவத்தை இழந்து வருகின்றனர். இவற்றின் அடிப்படையிலேயே இன்றைய இலக்கிய விமர்சகர்களுள் ஒருசாரார் சமூக ஊடகங்களில் இலக்கியங்கள் பிரசுரமாவதை எதிர்க்கின்றனர்; சமூக ஊடகங்களில் இலக்கியத்தின் பேரில் இடம்பெற்றுவரும் அடாவடித் தனங்களால் இலக்கியத்தை விட்டுத் தூர விலகி நிற்கின்றனர்.
சமூக ஊடகங்களில் தமது இலக்கியங்களைப் பிரசுரித்தவர்கள் யாவரும் கோடீஸ்வரர்கள் ஆகிவிடவில்லை என்பது என்னவோ உண்மைதான். ஆனால் எந்தவித பணச் செலவுமின்றி இவர்கள் தமது இலக்கிய உலகின் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளனர்; உலகப் புகழ் பெற்ற படைப்பாளிகள் பலரை இலகுவில் எட்டியிருக்கின்றனர்; மிகப் பெருந்தொகையிலான வாசகர்களையும், அவர்களிடமிருந்து உடனடியான பின்னூட்டங்களையும் பெற்றிருக்கின்றனர்; இவற்றின் வழியாகத் தமது எழுத்து நடையை மாற்றியிருக்கின்றனர் – விருத்தி செய்திருக்கின்றனர் என்ற உண்மைகளையும் மறுப்பதற்கில்லை.
சமூக ஊடகங்களூடாக இலக்கியங்களைப் பகிர்வதென்பது, சாதாரண மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வது; இலக்கியங்களைப் பகிர்ந்து, அச்சமூக ஊடகங்களை மக்கள் மயப்படுத்துவது; அதன் மூலம், பொதுவான உணர்வுகளைச் சுற்றி, மக்களை ஒன்றுபடுத்துவது; எழுச்சிகளைத் தூண்டுவது; மகத்தான மாற்றங்களுக்கு ஒளியூட்டுவது போன்ற பயன்களை இலக்கிய உலகு உணர ஆரம்பித்துவிட்டது. எமது சமூகம், பண்பாடு என்பவற்றில் தகவற் தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள பிரதான பாதிப்பு, எல்லைகளை உடைத்தெறிதலாகும். முன்னர் கண்ணில் அகப்பட மறுத்தவற்றைக் கண்டடைதலை இலகுவாக்கியதும், அதேவேளை கடினமாக்கியதும் அதுவே. இலக்கியத்திலும் இதே பணிகளைத் தகவல் தொழில் நுட்பம் செய்கின்றது. ‘இணையத்தளங்கள் எல்லைகளை உடைத்தெறிகின்றன’ என்பதற்கிணங்க, நல்ல நூல்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு நண்பர்கள் வட்டத்தை சமூக ஊடகங்கள் அகலித்துத் தந்துள்ளன. எல்லா சிபார்சுகளும் பரிந்துரைகளும் நல்லனவல்ல என்ற போதிலும் – முன்னர் கேள்விப்படாத சிறந்த படைப்புகளுக்கும் நூல்களுக்குமான சிபார்சுகளும் பரிந்துரைகளும் உலகுபூராவுமிருந்து கிடைக்கின்றன.
விரும்பியோ விரும்பாமலோ, சமகால இலக்கிய கர்த்தாக்கள் அனைவருமே சமூக ஊடக சந்ததியைச் சார்ந்தவர்கள்தான். ஆகையால், அவ்வூடகங்களை நாம் பயன்படுத்தப் போகின்றோமா இல்லையா என்பதல்ல – எப்படிப் பயன்படுத்தப் போகின்றோம் என்பதுதான் முக்கியமான கேள்வி. சமூக ஊடகங்கள் குறித்த சாதக, பாதக அம்சங்களைக் கருத்தில் கொண்டு, உங்கள் ஆக்கத்தை சமூக ஊடகங்களில் பதிவிடுவதன் மூலம் ஆழமான பாதிப்பை, பயன்பாட்டைப் பெறவேண்டுமாயின் – தினமும் ஏதோ ஒரு ஆக்கத்தைப் பதிவிடுங்கள். உங்கள் சமூக ஊடகத்தில் துரிதமாக இயங்குங்கள். அடிக்கடி இற்றைப்படுத்தல் செய்துகொளுங்கள். அல்லாதவற்றை யாரும் பெரிதாகக் கவனிக்கப் போவதில்லை. உங்கள் சமூக ஊடகங்களை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென ஒருபோதும் எண்ண வேண்டாம். பதிலாக, உங்கள் கட்டுப்பாட்டின்கீழ், அதற்கென ஒரு ஆளுமையை அல்லது அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்வதே முக்கியம். முரண்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். பொதுவாக உங்கள் தனிப்பட்ட கருத்துக்களையும் உள்மன உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஊடகமாக மட்டும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டாம். சிலருக்கு அது கைகூடினாலும், ’இணையத் தளங்களில் ஒருவரும் தமது வாதங்களை ஒருபோதும் வென்றதில்லை’ என்ற உண்மையை மறந்துவிடாதீர்கள்.
புதிய படைப்பாளிகள் தமது நூல்களை வெளியிட்டு வெற்றி காண்பது சுலபமல்ல. சமூக ஊடகம் இத்தடையை உடைக்க உதவுகிறது. அதற்கென உங்களுக்கு ஏற்கனவே ஒரு சமூகத்தளம் தேவை. ஒரு மதிப்பார்ந்த தோற்றவடிவம் தேவை. புதிய படைப்பாளிகள் தமது நூல்களை வெளியிட்டு வெற்றி காணவேண்டுமேயாயின், உங்களுக்கு விருப்பமான, சௌகரியமான, நோக்குக்குகந்த, இணக்கமான, தொடர்ந்து இயங்கக்கூடிய ஒரு தளத்தைத் தேர்ந்தெடுங்கள். எல்லா சமூக ஊடகங்களிலும் உங்கள் ஆக்கங்களை வெளியிடாதீர்கள். நீங்கள் ஓர் எழுத்தாளர் என்பதை உங்கள் பதிவுகள் பிரதிபலிக்க வேண்டும். பொதுத் தளங்களில் ஊடாடும் பிறரிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டும் வகையிலான உங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் பகிருங்கள். அவற்றை யாரோடு பகிர்கிறீர்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு பதிவிடுங்கள். இணையப் பெருந்தெருவில் பொய்போலி, பேய்பிசாசு உலாவுவதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்! பலர் உங்களைப் பின்தொடரவும் உங்களோடு தொடர்பிலிருக்கவும் உதவும் வகையில், அடிக்கடி. தொடர்ந்து பதிவிடுங்கள். உங்கள் தனித்துவமான அடையாளத்தில் கவனமாக இருங்கள். உங்கள் எழுத்தை விற்பனை செய்வதிலேயே எப்போதும் குறியாக இருந்துவிடாதீர்கள். உங்கள் வாசகர்கள் அதை விரும்பமாட்டார்கள். சமூக ஊடகங்களில் ஊடாடுவோரது கவனத்தைப் பெற, உங்களைப் பின்தொடர்ந்து, உங்கள் எழுத்துக்களைப் படிப்போருடன் தொடர்பில் இருங்கள். நல்ல உறவைப் பேணுங்கள். சமூக ஊடகங்களின் மிகப் பெரும் பலம் இது. ஏனைய படைப்பாளிகளுடன் சமூக ஊடகங்களில் ஊடாடுங்கள்; படைப்பாளிகள் சமூகம் மிகப் பெரும் ஆதார சக்தி. உங்கள் படைப்புகளுக்குப் பின்தொடர் அடையாளக் குறியீடு (Tag) இட்டுவிடுங்கள். இது உங்கள் வாசகர் வட்டத்தை விரிவாக்கும். உங்கள் படைப்புகள் உரியவர்கள் கண்ணில் அகப்படாமல் போவதைத் தடுக்கும்.
இப்போது நீங்கள் பலராலும் அறியப்படும் ஒரு ‘பிரபலம்’ ஆகிறீர்கள். ’எல்லாப் பிரபலங்களும் நல்ல பிரபலங்களல்ல’ என்பதை வாசகர்கள் நன்கறிவர். சமூக ஊடகங்களில் இடப்படும் உங்கள் சின்னச் சின்னப் பதிவுகளையும் மிக நுணுக்கமாக அவர்கள் கவனிப்பார்கள். நீங்கள் இடும் பதிவுகளே உங்கள் உண்மை ஆளுமையின் அடையாளங்கள். நீங்கள் யார் என்பதை அவை இலகுவில் இனங்காட்டி விடுகின்றன. ஆகையால் உங்கள் பதிவுகளின் குறிக்கோளிலும், சாராம்சத்திலும், தொனியிலும், தோற்றத்திலும் அவதானமாக இருங்கள். அவை உங்கள் படைப்பிலிருந்து வாசகர்களைத் துரத்திவிடாதிருக்கப் பார்த்துக்கொள்ளுங்கள். குரலற்றவர்களின் குரலான சமூக ஊடகத்தை உங்கள் வழித்துணையாக வரும் அன்புத் தோழனாக ஆக்கி வைத்திருங்கள்; உங்கள் தோளிலேறி ஆட்டிப் படைக்கும் அதிகாரி ஆக்கிவிடாதீர்கள்! அது உங்கள் ஆக்கபூர்வமான சமூக ஊடாட்டத்திற்கும், உடல்-உள ஆரோக்கியத்திற்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்!
உசாத்துணைகள்:
Cassandra Clarke, ‘How Technology Is Changing The Literary World,?’ Forbes
Anne Leigh Parrish, ‘Is Social Media Changing How We Write?,’ Writer’s Digest
Tim Ellison, ‘Social Media and Literature,’ Ploughshares
க. நவம், ‘இலக்கியம் காவிகளும் இனிவரும் காலங்களும்,’ ஃப்பெற்னா தமிழ் ஆண்டுவிழா மலர், 2013
nknavam@gmail.com