கவிஞர் கண்ணதாசனின் கவித்துவத்தையும், மொழியாற்றலையும் வெளிப்படுத்தும் சிறந்த திரைப்படப்பாடல்களிலொன்று. மானுட வாழ்க்கையைப்பற்றிய சிந்தனையைத்தூண்டிவிடும் கருத்துகளின் பெட்டகம் இப்பாடல். கே.பாலச்சந்தர் படப்பாடல்களில் முதலிடத்திலுள்ள பாடல்களிலொன்று. வாணி ஜெயராம் பாடிய சிறந்த பாடல்களிலொன்று. அவரது பாடல்களைப்பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது மல்லிகை என் மயங்கும் பாடல். கூடவே நினைவுக்கு வரும் பாடலிப்பாடல். எம்,எஸ்.வி இசையமைத்த சிறந்த பாடல்களிலொன்று.
நடிகை ஶ்ரீவித்யாவை நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் திரைப்படம் அபூர்வராகங்கள். கூடவே நினைவுக்கு வரும் பாடல் இப்பாடல். நடிகை ஶ்ரீவித்யா தாய் எம்.எல்.வசந்தகுமாரி சிறந்த கர்நாடகப்பாடகி. ஶ்ரீவித்யாவும் சிறந்த பாடகி. சிறந்த நர்த்தகியும் கூட. ஆனால் அவர் சுடர்விட்டது திரையுலகில்தான். தமிழ்த்திரையுலகைப்பொறுத்தவரையில் ஆரம்பத்தில் அவர் கதாநாயகியாக நடித்திருந்தாலும் ,, நினைவுக்கு வருவது பின்னாளில் அவர் நடித்த நடுத்தர அம்மா வேடங்கள் மூலமே. ஆனால் மலையாளத்திரைப்படங்களைப்பொறுத்தவரையில் நிலை வேறு. மிகச்சிறந்த நடிகையாக, பின்னணிப்பாடகியாக அவரை மலையாளத்திரையுலகம் கொண்டாடுகின்றது.
ஜார்ஜ் தாமஸ் என்ற மலையாள துணை இயக்குனரோடு தொடங்கிய அவரது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. துயர் மிகுந்தது. ஆரம்பத்தில் நடிகர் கமலகாசனுக்கும், அவருக்குமிடையில் நிலவிய காதல்பற்றிச் செய்திகள் வெளியாகின. அதுவும் தோல்வியில் முடிந்தது. அது ஶ்ரீவித்யாவை உளரீதியாக மிகவும் பாதித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் தனது கடைசிக்காலத்தில் புற்றுநோயால் மரணப்படுக்கையில் கிடந்தபோது அவர் தன்னைப்பார்க்க அனுமதித்த மிகச்சிலரில் கமலகாசனும் ஒருவர். அவர் நிலைகண்டு மிகவும் மனம் வருந்திய கமல் அவரை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று சிகிச்சை செய்ய முன்வந்ததாகவும் , அதை ஶ்ரீவித்யா மறுத்துவிட்டதாகவும் இணையத்திலெங்கோ வாசித்துள்ளேன்.
எனக்கு ஶ்ரீவித்யாவின் திரைப்படங்களில் மிகவும் பிடித்த திரைப்படங்களாக பாலச்சந்தரின் அபூர்வராகங்களையும், அவரது இன்னொரு திரைப்படமான நூற்றுக்கு நூறு திரைப்படத்தையும் குறிப்பிடுவேன். அதில் பேராசிரியராக நடித்திருக்கும் ஜெய்சங்கரின் மீது காதலுறும் மாணவியாக அவர் நடித்திருப்பார். ஜெய்சங்கரின் நடிப்புத்திறமையினை வெளிப்படுத்தும் திரைப்படங்களிலொன்று அத்திரைப்படம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், & ஹிந்தி என இவர் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை எண்ணூறுக்கும் மேல் என்று இவரைப்பற்றிய விக்கிபீடியாவின் ஆங்கிலப்பக்கம் கூறுகின்றது. தனது இறுதிக்காலத்தில் அதிக அளவில் மலையாளத்திரைப்படங்களில் நடித்தார். கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதினை 1979 , 1983 ஆம் ஆண்டுகளில் பெற்றார். சிறந்த இரண்டாவது நடிகைக்கான கேரள மாநில அரசின் விருதினை 1986, 1987 ஆகிய வருடங்களில் பெற்றார். பிலிம்ஃபெயர் சஞ்சிகையின் சிறந்த நடிகைக்கான விருதினை மலையாளத்திரைபடங்களுக்கான பிரிவில் இரு தடவைகள் (1979 & 1980) பெற்றுள்ளார். தமிழக அரசின் சிறப்புப்பரிசு (1979) மற்றும் எம்ஜிஆர் விருது (1992) ஆகியவற்றைப் பெற்ற இவர் தனது கலையுலகப்பங்களிப்புக்காகத் தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொலைகாட்சியையும் இவர் விட்டு வைக்கவில்லை. சிறந்த தொலைக்காட்சி நடிகைக்கான கேரள அரசின் விருதினையும் (2004) இவர் பெற்றுள்ளார். சிறந்த பாடகியான இவர் சில திரைப்படங்களில் பின்னணிப்பாடகியாகப்பாடியுமுள்ளார். தமிழில் அமரன் திரைப்படத்திலும், மலையாளத்திரைப்படங்கள் பலவற்றிலும் இவர் பின்னணிப்பாடகியாகப்பாடியுள்ளார்.
இவரது வாழ்க்கையை மையமாக வைத்து இவரது மறைவுக்குப்பின்னர் மலையாளத்திரைப்படமொன்றும் வெளியாகியுள்ளது. மலையாளத்திரைப்படத்துறையில் கொடிகட்டிப்பறந்த இவர் மறைந்தபோது கேரள அரசு அரச மரியாதையுடன் இவரது இறுதிச் சடங்கினை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை ஶ்ரீவித்யாவின் கண்களும் , புன்னகை தவளும் வதனமும் மறக்க முடியாதவை. அவரை எப்பொழுதும் நினைவு படுத்துபவை. என்னைத் தம் நடிப்பால் கவர்ந்த நடிகையர்களில் நடிகை ஶ்ரீவித்யாவுக்குமோரிடமுண்டு.
பாடல் முழுமையாக:: https://www.youtube.com/watch?v=PX5CrhZ9dU0
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் – வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி – அது
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் – மனிதன்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்டு எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை – என்றும்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க – அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க – எந்த
வேதனையும் மாறும் மேகத்தை போல