அருளரின் ஆளுமை: அறிந்ததும், அறியாததும்!

அருளர்அமரர் அருளரை அவரது ‘லங்காராணி’ மூலம் மட்டுமே இதுவரை அறிந்திருந்தேன். ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களிலொருவர் என்றும் அறிந்திருந்தேன். அவரது நாவலான ‘லங்கா ராணி’ மூலம் அவர் சமதர்ம சமுதாயத்தை விரும்பும் ஒருவர் என்றும் எண்ணியிருந்தேன். இலங்கைத் தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தைத் தீவிரமாக ஆதரிக்கும் ஒருவராகவும் எண்ணியிருந்தேன். அவரது மறைவு முகநூலில் அவர் பற்றிய பல்வகைப்பட்ட பலரது கருத்துகளையும் வெளிப்படுத்தியது. அதன்பின்னரே அவரது எழுத்துகள் பற்றி கவனத்தைத் திருப்பினேன். எழுத்தாளர் சரவணன் கோமதி நடராசா தனது முகநூற் பதிவொன்றில் அருளரை அவரது லங்கா ராணிக்காகப்பாராட்டிய அதே சமயம் அவர் பாவிக்கும் சாதிரீதியிலான சொல்லாடல்களைத் தனது “தலித்தின் குறிப்புகள்” கட்டுரையில் விமர்சித்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதே சமயம் “இந்த விமர்சனங்களுக்கு அப்பால் அவர் ஈழப் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பு மரியாதைக்குரியவை. அவர் எழுதிய லங்காராணி நாவல் இன்றும் ஒரு முக்கிய இலக்கியமாகவும், பதிவாகவும் போற்றப்படுகிறது. தோழருக்கு செவ்வணக்கங்கள்.” என்றும் அஞ்சலி செலுத்தியிருந்தார். எழுத்தாளர் மைக்கல் (சதுக்கபூதம்) தனது முகநூற் பதிவொன்றில் அருளர் கோவியர்களோடும் ,ஒடுக்கப்பட்ட மனுஷர்களோடும தோளணைக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இவை போல் அருளரைப்பற்றிய பல்வகையான கருத்துகளை முகநூலில் காணமுடிந்தது.

அருளர் முகநூலிலும் இருப்பதாக அறிந்தேன். ரிச்சர்ட் அருட்பிரகாசம் (Richard Arudpragasam) என்னும் அடையாளத்தில் அவர் இருப்பதாகவும் அறிந்தேன். அவர் என் நட்பு வட்டத்தில் இல்லாததால் அவரது பதிவுகள் எவையும் என் கண்களில் தட்டுப்பட்டிருக்கவில்லை. அவரது பதிவுகளைப் பார்வையிட்டபோது அவரது இதுவரை நான் அறியாதிருந்த ஆளுமையினை, அவரது மறுபக்கத்தினை அறியும் வாய்ப்பு கிடைத்தது. அது ஒருவகையில் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியது என்பேன். இதுவரை நான் என் மனத்தில் பதிவு செய்திருந்த அருளர் வேறு, முகநூலில் இயங்கிக்கொண்டிருந்த அருளர் வேறு என்பதை என்பதை உணர முடிந்தது.

Continue Reading →

நூல் அறிமுகம் – நிலம் பூத்து மலர்ந்த நாள்

இந்நாவலை மலையாளத்தில் எழுதியவர் மனோஜ் குரூர், தமிழாக்கம் கே.வி. ஜெயஸ்ரீ , வம்சி பதிப்பகம் திருவண்ணாமலை.இந்நாவலை மலையாளத்தில் எழுதியவர் மனோஜ் குரூர், தமிழாக்கம் கே.வி. ஜெயஸ்ரீ , வம்சி பதிப்பகம் திருவண்ணாமலை.

சங்கக் கால மக்களின் வாழ்வியலை நவீன மொழியோடு  எடுத்துரைக்கும் நாவல். தமிழரின் தொன்மையான பண்பாடு சங்கக் காலப் பண்பாடு. இதனை எடுத்துக் கூறும் அகச் சான்று சங்க இலக்கியம். சங்கக் கால மக்கள் மனித வாழ்க்கையை இரண்டு பிரிவாகப் பிரித்துச் சிந்தித்துள்ளனர். ஆண் பெண் உறவைக் கூறுவது அக வாழ்க்கை என்றும் மன்னர்களின் போர் வீரம் பற்றிப் பேசுவது புற வாழ்க்கை என்றும் பதிவு செய்துள்ளனர். இந்த இலக்கியப் பதிவுகள் அக்கால மக்களின் எண்ண ஓட்டங்களை மன உணர்வுகளை வரலாற்றுப் பின்புலத்தை அறிந்து கொள்ள உதவுகிறது. இத்தகைய பின்புலத்தைக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது.

சங்கப் புலவர்கள் கபிலர், பரணர், ஒளவை இவர்கள், கடையெழு வள்ளல்களில் வேள்பாரி, நன்னன், அதியமான் போன்றோரைப் புகழ்ந்து பாடியுள்ளனர். இவர்களின் நட்புக்குப் பாத்தியப்பட்டவர்களாக இருந்து வந்தனர். நன்னனின் நட்புக்குப் பரணரும் , பாரியின் நட்புக்குக் கபிலரும், அதியமானின் நட்புக்கு ஒளவையும் விளங்கியதை அவர்களின் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

நவிற மலையை ஆட்சி செய்தவன் நன்னன், பறம்பு மலையை ஆண்டவன் பாரி, குதிரை மலையை ஆண்டவன் அதியமான் இவர்கள் அனைவரும் கலை இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள், அதே வேளையில் அரசியல் போர் முதலியவற்றிலும் சிறந்து விளங்கினர். மக்களின் நலன் கருதி புலவர்களின் அன்பு பெற்றுச் செம்மையாக அரசியல் வாழ்வை முன்னெடுத்தவர்கள் இவர்கள். என்றாலும் இம்மன்னர்களின் வாழ்க்கைப் பின்புலத்தைக் கொண்டு பாணர்களின் வாழ்வியலோடு கதைக் கூறுவது இந்நாவல்.

பாடி ஆடி மக்களையும் மன்னர்களையும் மகிழ்விப்பவர்கள் பாணர்கள். இசை கூத்து கதை என்று வாழ்ந்து வரும் பாணர்கள் வறுமையில் உழன்று புகழிடம் தேடி பயணிக்கும் பயணத்தில் இந்நாவல் தொடங்குகிறது. வறுமையின் துன்பம் தாளாமல் கொடையாளரைத் தேடியதில் நன்னன் முதலிடம் பெறுகிறான்.

Continue Reading →

வாழ்வை எழுதுதல் — அங்கம் –06: தேவாலயங்களில் இறுதிமூச்சை காணிக்கையாக்கிய ஆத்மாக்கள் ! அரசியல்வாதிகளே…. நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்…!?

முருகபூபதிஅந்த   தேவாலயத்தின் முன்னால் நிற்கின்றேன்.  சில மாதங்களுக்கு முன்னர்தான் ஏப்ரில் மாதம் 21 ஆம் திகதி அங்கு பலர் தங்கள் இறுதிமூச்சை காணிக்கையாக்கினர். அவர்களின் பெயர்ப்பட்டியல் பதிவான காட்சிப்பலகையின் முன்னால் நின்று மௌனமாக பிரார்த்தித்தேன்.  பிரார்த்தனையின்போது அமைதி அவசியம்  என்று  சிறுவயதில் எனது அம்மாவும் பாட்டியும் அடிக்கடி சொல்லித்தந்திருக்கிறார்கள். எங்கள் வீட்டில்  நவராத்திரி , கந்தசஷ்டி விரத காலங்களில் பிரார்த்தனை வழிபாடு நடக்கும்போது அதற்கு இடையூறு தரும்வகையில் சத்தம் போடக்கூடாது, குழப்படி செய்யக்கூடாது என்று அம்மாவும் பாட்டியும் எச்சரித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்குப்பயந்து  அமைதியாக இருப்போம். வெள்ளிக்கிழமைகளிலும் திருவிழாக்காலங்களிலும் கோயில்களுக்கு செல்லும்போதும், அங்கே அமைதியாக இருக்கவேண்டும் என்றுதான் புத்தி சொல்லி அழைத்துப்போவார்கள். செவ்வாய்க்கிழமைகளில் அம்மா, எங்கள் ஊரில் சிலாபம் செல்லும் பாதையில் தழுபொத்தை என்ற இடத்தில் வரும் அந்தோனியார் கோயிலுக்கு அழைத்துச்செல்வார்கள். அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கும்போது, அம்மா கையோடு எடுத்துவரும் தேங்காய் எண்ணெய் போத்திலை என்னிடத்தில் தந்து அங்குள்ள தீபவிளக்கிற்கு எண்ணெய் வார்க்குமாறு சொல்வார்கள்.

அந்தோனியார் கோயில் மிகவும்  அமைதியாக இருக்கும். வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அங்கு செல்வோம். கோயில்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்வோம். ஊரின் புறநகரத்திலிருக்கும் பௌத்த விகாரைக்கு வெசாக், பொசன் பண்டிகை  காலங்களில் செல்வோம். எனினும் அங்கிருந்த பள்ளிவாசல்களுக்கு செல்லும் பழக்கம் இருந்ததில்லை. ஆயினும்,  அங்கிருந்த  அல்கிலால் மகா வித்தியாலயத்தில் மேல் வகுப்பு படிக்கும்போது, அவர்களின் பிரார்த்தனைகளை கேட்பதுண்டு. எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்களில் அநேகர் இஸ்லாமியர். மூவினத்தவர்களும் செறிந்து வாழ்ந்த பிரதேசமாக  எங்கள் ஊர்  விளங்கியமையால், மூவினத்து நண்பர்களையும் சம்பாதித்திருக்கின்றேன்.

Continue Reading →

ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் ‘நிறமூட்டப்பெற்ற பறவை’ (The Painted Bird) அல்லது ‘வண்ணம் பூசிய பறவை’

ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் 'நிறமூட்டப்பெற்ற பறவை' (The Painted Bird) அல்லது 'வண்ணம் பூசிய பறவை'ஜேர்ஸி கொஸின்ஸ்கியைத் தமிழ் இலக்கிய உலகுக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்திய கட்டுரை சுபமங்களா இதழில் வெளியான Being There கட்டுரை. அது அவரது புகழ்பெற்ற நாவல். அளவில் சிறியதானாலும் காரம் மிக்க நாவல். திரைப்படமாகவும் வெளியானது. விம்ப ஆராதனை மிக்க தற்காலச்சமுதாயத்தை விமர்சிக்கும் நாவல். அக்கட்டுரையை எழுதியவர் வ.ந.கிரிதரனாகிய நானே.

ஜேர்ஸி கொஸின்ஸ்கி போலந்திலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபுகுந்து , ஆங்கிலத்தில் எழுதத்தொடங்கி , ஆங்கில இலக்கியத்தில் தடம் பதித்த எழுத்தாளர்.

இவரது ‘நிறமூட்டப்பெற்ற பறவை’ (The Painted Bird) நாவல் இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க இலக்கியத்தில்; முக்கிய படைப்பாகக் கருதப்படும் படைப்பு. 1965இல் வெளியான இந்நாவல் இதுவரை முப்பதுக்கும் அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகயுத்தக் காலத்து மானுட உரிமை மீறல்கள் வாசிப்பவர்தம் இதயங்கள் உறையும் வகையில் சில இடங்களில் மிகவும் குரூரமாக விபரிக்கப்பட்டுள்ளதால் வாசகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. யூதச்சிறிவனொருவனை அவனது பெற்றோர் அவனாவது நாசிகளிடமிருந்து தப்பிப்பிழைக்கட்டும் என்னும் எண்ணத்துடன் மனிதரொருவனுடன் அனுப்பி வைக்கின்றனர். இவ்விதம் அனுப்பப்பட்ட அச்சிறுவன் யுத்தச்சூழல் நிலவிய காலகட்டத்தில் கிழக்கைரோப்பிய நாடுகளெங்கும் தப்பிப் பிழைப்பதற்காக அலைந்து திரிகின்றான். பல்வேறு வகைப்பட்ட அனுபவங்களுக்குள்ளாகின்றான். அவற்ற விபரிப்பதே ‘நிறமூட்டப்பெற்ற பறவை’ நாவல்.

பல வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஸ்நேகா பாலாஜி அவர்களுடன் இந்நாவல் பற்றி உரையாடியபோது, அந்நாவலால் ஈர்க்கப்பட்ட அவர் அந்நாவலைத் தமிழில் ஸ்நேகா பதிப்பகம் மூலம் வெளியிட விரும்புவதாகக் கூறினார். நாவலிருந்தால் அனுப்பி உதவுமாறும் கூறினார். நானும் அந்நாவலைபெற்று பாலாஜிக்கு அனுப்பினேன். இது பற்றி நண்பர் பாலாஜி என்னுடன் பகிர்ந்துகொண்ட தகவல்கள் வருமாறு:

Continue Reading →

அஞ்சலி: ‘லங்கா ராணி அருளர் மறைவு!

அருளர்எழுத்தாளரும், சமூக அரசிய செயற்பாட்டாளருமான அருளர் (அருட்பிரகாசம்) மறைந்த செய்தியினை முகநூலில் எழுத்தாளர் கருணாகரனின் பதிவொன்றின் மூலம் அறிந்துகொண்டேன். அருளர் இலங்கைத் தமிழர்களின் விடுதலை அமைப்புகளிலொன்றான ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களிலொருவர். அத்துடன் அவர் ஓர் எழுத்தாளரும் கூட.


அவர் எழுதிய ‘லங்கா ராணி’ நாவலானது எழுபதுகளின் இறுதியில் , இலங்கைத் தமிழர்கள் ஆயுதரீதியிலான போராட்டத்தினை ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழ் இளைஞர்கள் தம் போராட்டம் பற்றிய புரிதலை, அறிவினை வளர்த்துக் கொள்வதற்காக இரகசியமாக வாசித்த நாவல். 77 இனக்கலவரத்தைத் தொடர்ந்து தெற்கிலிருந்து அகதிகளாக அக்கப்பலில் இலங்கைத் தமிழர்கள் வடக்கு நோக்கித்திரும்பினார்கள். சுமார் 1200 தமிழர்களைக் காவிக்கொண்டு பயணித்தது ‘லங்கா ராணி’. அந்நாவலின் பல்வகைப் பயணிகளினூடு, விடுதலைப்போராட்டத்தை அணுகிய நாவல். இந்நாவலை வெளியிட்டது ஈரோஸ் அமைப்பு.


‘லங்கா ராணி’ நாவலுக்கு முக்கியமானதொரு பெருமை உண்டு. அது: இலங்கைத்தமிழரின் ஆயுதம் ஏந்திய விடுதலைப்போராட்டத்தில் , அப்போராட்டம் பற்றி முதலில் வெளியான நாவல் இதுவேயென்றே கருதுகின்றேன். . இந்த ஒரு நாவல் மட்டும் போதும் அருளரை வரலாற்றில் நிலைநிறுத்துவதற்கு.

Continue Reading →

ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலும், எழுத்தாளர் பவா செல்லத்துரையின் காணொளியும்!

ஜெயகாந்தன்எழுத்தாளர் ஜெயகாந்தன் என் வாழ்க்கையில் என் பால்ய காலத்திலிருந்து இன்றுவரை என்னை மிகவும் பாதித்த ,கவர்ந்த, பிடித்த தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். உண்மையில் நான் வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்னரே இவரைப்பற்றி அறிந்திருக்கின்றேன். அப்பா அப்பொழுதெல்லாம் ஆனந்த விகடனில் வெளியான ஜெயகாந்தனின் ‘கோகிலா என்ன செய்து விட்டாள்?’ என்னும் குறுநாவலைப்பற்றிக் கதைத்துக்கொண்டிருப்பார். அப்பொழுதிலுருந்தே ஜெயகாந்தனைப்பற்றி அறிந்திருக்கின்றேன். அதன்பின் நான் வாசிக்கத்தொடங்கிய குறுகிய காலத்திலேயே நிறைய வாசிக்கத்தொடங்கி விட்டேன். ஜெயகாந்தனின் விகடனில் வெளியான முத்திரைச் சிறுகதைகளிலொன்றான ‘ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’ தொடக்கம், ‘தினமணிக்கதிர்ர்’ சஞ்சிகையில் வெளியான ஜெயகாந்தனின் பல சிறுகதைகள் என அவரது கதைகளை அதிகம் வாசித்திருக்கின்றேன். ‘தினமணிக்கதிர்’ சஞ்சிகையில் ஜெயகாந்தனின் சிறுகதைத்தொகுப்பபொன்றிலிருந்து சிறுகதைகளை மீள்பிரசுரம் செய்துகொண்டிருந்தார்கள். ‘ஒரு பிடி சோறு’, ‘ராசா வந்திட்டாரு’, ‘பிணக்கு’, ‘டிரெடில்’ என்று சிறுகதைகள் பல வெளியாகின. தொடர்ந்து அவரது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கோபுலுவின் ஓவியங்களுடன் தொடராக வெளியானது. ‘ரிஷி மூலம்’ குறுநாவலும் , தொடராக கோபுலுவின் ஓவியங்களுடன் வெளியானது. ”அக்காலகட்டத்தில்தான் விகடனில் அவரது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ ஆகிய நாவல்கள் தொடராக வெளியாகின. ராணிமுத்து பிரசுரங்களாக அவரது கைவிலங்கு குறுநாவல் ‘காவல் தெய்வம்’ என்னும் பெயரில் வெளியானது. அதனுடன் சேர்ந்து ‘கருணையினால் அல்ல’ குறுநாவலுமிருந்தது. தொடர்ந்து ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலும் ராணிமுத்துப் பிரசுரமாக வெளியானது.

இவை தவிர நான் வாசிக்கத்தொடங்குவதற்கு முன்னர் வெளியான ‘யாருக்காக அழுதான்?’, ‘உன்னைப்போல் ஒருவன்’ ஆகியவற்றைப் பின்னர் தேடியெடுத்து வாசித்திருக்கின்றேன்.

Continue Reading →

பொறியியல் பீட மாணவி லிண்டா ஷாவை நினைவூட்டிய கால்நடை வைத்தியர் பிரியங்கா ரெட்டியின் மரணம்!

கால்நடை வைத்தியர் பிரியங்கா ரெட்டிLinda Shawஹைதராபாத்தில் கால்நடை வைத்தியர் பிரியங்கா ரெட்டி பயணித்த ‘ஸ்கூட்ட’ரின் ‘டய’ரொன்றினைப் ‘பங்ச’ராக்கி, , அவருக்கு உதவுவதுபோல் நடித்து, அவரைப்பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிப் படுகொலை செய்த செய்தியானது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விரைவிலேயே கொலையாளிகள் நால்வரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். பிரியங்கா ரெட்டி இறப்பதற்கு முன்னர் தனது சகோதரியை அழைத்துள்ளார். தனக்குப் பயமாகவுள்ளதாகவும், தன்னுடன் பேசிக்கொண்டிருக்கும்படியும் வேண்டியுள்ளார். நிலைமையின் தீவிரத்தைச் சகோதரி  உணர்ந்திருக்கவில்லை. பிரியங்கா ரெட்டியும் சகோதரியை அழைத்ததற்குப் பதில் காவல்துறையினைரை அழைத்திருந்தால் ஒருவேளை தப்பியிருக்கக்கூடும். இது போன்ற சந்தர்ப்பங்களைப பெண்கள் தவிர்க்க வேண்டும். இரவுகளில் தனிமையாக  நேரங்கெட்ட நேரங்களில் ‘அண்டர்கிரவுண்ட்’ வாகனத்தரிப்பிடங்களில் வாகனத்தை நிறுத்தச் செல்லல், தனிமையாகத் தொலைதூரத்துக்குப் பயணித்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். செல்லும் வழியில் ஏதாவது வாகனத்துக்கு நடந்து விட்டால் , நிராதரவான நிலையில் , தவிக்கும் நிலை ஏற்படும் சாத்தியமிருப்பதால் இதுபோன்ற சந்தர்ப்பங்களைத்  தவிர்க்க வேண்டும்.

‘டொரண்டோ’ நகரில் இளம் பெண் வைத்தியரொருவர் தான் வசிக்கும் ‘கொண்டோ’வின் ‘அண்டர்கிறவுண்ட்’ வாகனத்தரிப்பிடத்துக்கு நள்ளிரவில் தனது வாகனத்தைக் கொண்டு சென்றபோது அங்கிருந்த வீதி மனிதனிருவனால் தாக்கப்பட்டுக் கொலை  செய்யப்பட்டது நினைவுக்கு வருகின்றது.

Continue Reading →

முகநூற் பதிவுகள் சிலவும் , எதிர்வினைகள் சிலவும்!

கோகிலம் சுப்பையாவை எழுத்தாளர் நந்தினி சேவியர் முகநூலில் நினைவுபடுத்தியிருந்தார். வீரகேசரி பிரசுரமாக வெளியான இவரது ‘தூரத்துப்பச்சை’ மலையக இலக்கியத்துக்கு, தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த, சேர்க்கும் முக்கியமானதொரு படைப்பு. நாவலில் வரும் வள்ளி என்னும் பாத்திரம் மறக்க முடியாத பாத்திரம். தகழியின் தோட்டியின் மகனை வாசித்தபொழுது ஏற்பட்ட உணர்வு எனக்கு இந்நாவலை வாசிக்கையிலும் ஏற்பட்டது. இரு நாவல்களுமே மானுட வாழ்வின் குழந்தையிலிருந்து முதுமை வரையிலான போராட்டத்தை, சமூக, அரசியற் சூழல்கள் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவுகளை வெளிப்படுத்துவதாக அமைந்த நாவல்கள். மீண்டும் அவரது ‘தூரத்துப் பச்சை’ நாவலினைப் வாசிக்க வேண்டுமென்ற உணர்வினை நந்தினி சேவியரின் நினைவூட்டல் ஏற்படுத்திவிட்டது.


நந்தினி சேவியரின் பதிவில் எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் ‘தூரத்துப்பச்சை’ (வீரகேசரி பிரசுரம்) அட்டையினைப் பகிர்ந்திருந்தார்.அதனை நன்றியுடன் இங்கு பகிர்கின்றேன்.

ஆய்வு: காட்டுநாயக்கர் பழங்குடிகளின் சடங்கும்,வழக்கும் (கூடலூர், நீலகிரி மாவட்டம்)

தமிழகத்தின் மேற்கே,மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைமாவட்டம் நீலகிரியாகும். இம்மாவட்டம் பல்வேறு தனிச்சிறப்புகளை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. அவற்றுள் முதன்மையானது யுனெஸ்கோவால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் உயிர்க்கோள காப்பகமும் அவை உள்ளடங்கிய உயிர்க்கோள மண்டலமும்  நீலகிரியாகும். தவிரவும் இந்தியாவெங்கும் இனங்காணப்பட்ட அருகிவரும்  தொன்மையான 75 பழங்குடி குழுக்களில் ஆறுவகையான தொல் பழங்குடிகளின்  ஒருமித்த வசிப்பிடமாகவும், பழங்குடிகள் உள்ளிட்ட பல்வேறு இனக்குழுமக்கள் வாழும் பகுதியாகவும்,15 க்கும் மேற்பட்டதிராவிட மொழிகள் பேசப்படும்  திராவிட மொழிகளின் நுண்ணுலமாகவும், சமூகவியல் , மானுடவியல், மொழியியல்,புவியியல்,சூழலியல் முதலான பல்துறை சார்ந்த  ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வுக்களங்களின்  ஆவணப் பெட்டகமாகவும் நீலகிரி விளங்கிவருகிறது.

உயிர்சூழல் மண்டலம்
பூமியில் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றுள் மனித இனமும் ஒன்றாகும். உயிர்க்கோளத்தில் உயிர் வாழ தேவையான சூழலை உருவாக்கித்தரும் அரிய இயற்கை அமைப்புகள் சில இடங்களில் மட்டுமே இருக்கும். இந்த இடங்களே உயிர்க் கோளத்தில் தேவையான சூழலை உருவாக்கித்தரும் என்பதால், அத்தகைய இடங்கள் உயிர்க்கோள் காப்பகங்கள் என ‘யுனெஸ்கோ’ அமைப்பு இனங்கண்டு  வருகிறது . அவ்வாறு யுனெஸ்கோ அமைப்பால் 1986 இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் உயிர்க்கோள் காப்பகமும்  நீலகிரியாகும். இங்கு  இலையுதிர் மற்றும் முட்புதர் காடுகள் ,ஈரப்பதம் மிகுந்த  பசுமை மாறாக் காடுகள் , சோலை புல்வெளிகள் ,சவானா புல்வெளி காடுகள்  முதலானவை இங்குள்ளன.அவற்றுள் உலகில் உள்ள 3238 பூக்கும் இனத்தாவரங்களுள் சுமார் 135 இனங்களும்  தவிரவும் அரியவகை பூச்சியுண்ணும் தாவரமான, டொசீ இமயமலைக்கு அடுத்தப்படியாக இங்குதான் உள்ளது.

Continue Reading →

ஊடக அறிக்கை: இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை இலங்கை அரசு உறுதி செய்திட வேண்டும்

Communist Party of India (Marxist)


30.11.2019

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று (29.11.2019) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை

இலங்கை அரசு உறுதி செய்திட வேண்டும்

இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் கோத்தபயா ராஜபக்சே குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே இருந்த அரசு ராஜினாமா செய்த பின்னணியில் இவரது சகோதரர் மகிந்திர ராஜபக்சே பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்பட்டு புதிய அமைச்சரவையும், பிரதமரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சியின் போது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்கள் மத்தியில் அச்சம் கலந்த சூழல் ஏற்பட்டுள்ளது.
ராஜபக்சே அரசின் அதிகார வர்க்க, மக்கள் விரோதப் போக்கின் காரணமாகவே 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியடைந்து புதிய கூட்டணி அரசு ஏற்பட்டது. ஏற்பட்ட புதிய அரசு மக்களுக்கு அளித்த குறிப்பாக, தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இலங்கையின் பொருளாதாரம் நிலைகுலைந்து போனதுடன், இவ்வாட்சியாளர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சேர்ந்து ராஜபக்சே சகோதரர்கள் மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. 

Continue Reading →