‘சோளகர் தொட்டி‘ புதினத்தில் இடம்பெற்றுள்ள சோளகர் பழங்குடி மக்களது வாழ்வியலில் வெளிப்படுகின்ற ஒருத்திக்கு ஒருவன் குடும்ப அமைப்பின் நிலை குறித்து விளக்குவதாக இக்கட்டுரை அமையும். இத்தகைய விளக்கங்களின் இறுதியாக தாய் தலைமை சமூகத்தின் பண்பாட்டு எச்சம் யாதென உணர்த்தப்படும். தமிழகத்தின் கர்நாடக எல்லைப்புற மலை கிராமத்தில் வாழும் சோளகர் பழங்குடிகளைப் பற்றிய சோளகர் தொட்டி என்ற புதினத்தை ச.பாலமுருகன் படைத்துள்ளார். இந்தப் புதினத்தைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் இடம்பெறும். அறிமுகத்தைத் தொடர்ந்து புதினத்தில் வெளிப்படுகின்ற குடும்ப முறைகள் விவரிக்கப்படும். இறுதியாக பாலுறவு உரிமை வரலாற்றிலிருந்து ஒருத்திக்கு ஒருவன் என்ற குடும்ப வடிவம் சோளகர் பழங்குடிகளிடம் பெற்றுள்ள அங்கீகாரத்தின் நிலை பற்றி விளக்கப்பெறும்.
சிவண்ணா என்ற சோளகனை மையமாகக் கொண்டு சோளகர் தொட்டி என்ற புதினம் அமைக்கப்பட்டிருக்கிறது. சிவண்ணாவின் தந்தை பேதன் தாத்தனின் வேட்டைதொழிலை கைவிட்டு கடுமையாக உழைத்து காட்டைத் திருத்தி வளமான சீர்காட்டு விவசாய பூமியை உருவாக்கினான். புதிதாக உருவெடுத்துள்ள வனத்துறை என்ற அரசதிகாரத்தால் சோளகர்களின் வேட்டைத் தொழில் படிப்படியாக ஒடுக்கப்பட்டு வருகின்றது. பேதனின் சீர்காட்டை ஒட்டி கோல்காரனது விவசாய பூமியும் இருக்கின்றது. கோல்காரனது மகன் கரடியை வேட்டையாடியபோது வனத்துறையின் ஒடுக்குமுறையிலிருந்து மீட்பதற்காக ஐநூறு ரூபாய் கடன்படுகிறார்கள். கடன் கொடுத்தவனாகிய மணியகாரரின் கையாள் துரையன் கோல்காரனது இயலாமையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நிலத்தை அபகரித்துக்கொள்கிறான். கோல்காரனது பூமியை ஒட்டியுள்ள சீர்காட்டையும் அபகரிக்க முயல்கிறான். மணியகாரரின் உதவியுடன் சீர்காட்டின் மீதான பட்டா உரிமையை அரசிடமிருந்து வாங்கிக்கொண்டு பேதனின் குடும்பத்தை காவல்துறையின் அதிகார உதவியுடன் வெளியேற்றுகிறான். பேதன் இறந்த பிறகு மணிராசன் திருவிழாவில் ஆவியாக வெளிப்படுகிறான். சீர்காட்டை மீட்கும்படி சிவண்ணாவிற்கு அறிவுறுத்துகிறான். சிவண்ணா தீக்கங்காணியாக வேலை செய்தபோது மாதி என்பவளை விரும்பி திருமணம் செய்துகொள்கிறான். மாதியின் மகள் சித்தியை தனது மகளாக ஏற்றுக்கொள்கிறான். மூத்த மனைவி சின்னத்தாயி கோபமுற்று மகனை அழைத்துக்கொண்டு தாய்வீடு சென்றுவிடுகிறாள். ஒருநாள் காலை பொழுதில் போலிஸ்காரர்கள் ஜீப்பில் வந்து மிரட்டலாக அறிவித்தனர். “வீரப்பனை பிடிப்பதற்காக தமிழ்நாடு கர்நாடக போலீஸ் கூட்டு அதிரடிப்படை அமைச்சிருக்கு. நாங்க சொல்றபடி நீங்க கேட்டு நடந்துக்கணும். வீரப்பன் பற்றிய தகவல் தெரிஞ்சா உடனே தெரியப்படுத்தனும். நீங்க அவனுக்கு உதவி செய்தால் உங்களையும் சுட்டுக்கொல்வோம். வனத்திற்குள் வீரப்பனைத் தேடிக்கொண்டிருக்கிறோம். நீங்க யாரும் இனிமே வனத்திற்குள் எந்தக் காரணத்திற்காகவும் போகக் கூடாது. மீறினால் சுடப்படுவீர்கள்.” வீரப்பனை தேடுவதாகச் சொல்லி தமிழ்நாடு கர்நாடக காவல்துறையினரின் முகாம்கள் உருவெடுத்தன. எல்லா முகாம்களிலும் வீரப்பனின் பேரைச்சொல்லி அப்பாவி மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அதிரடிப்படையினரின் சித்திரவதை முகாம்களுக்குள் சிக்கித்தவித்த சிவண்ணா தப்பித்து வனத்திற்குள் ஓடிவிடுகிறான். வனத்தில் வீரப்பன் சிவண்ணாவிற்கு அடைக்களம் தருகின்றான். அதிரடிப்படையினர் சிவண்ணாவின் மனைவி மாதியையும் அவளது மகள் சித்தியையும் சிறைபிடித்துச் சித்திரவதை செய்கிறார்கள். கடுமையான சித்திரவதைகளுக்குப் பிறகு உயிர் பிழைத்துத் தொட்டிக்கு திரும்புகிறார்கள். சிவண்ணா மாதியை இரகசியமாக சந்தித்துச் செல்கிறான். மாதியின் விருப்பப்படி வீரப்பனை விட்டு விலகிவருகிறான். தலமலை அதிரடிப்படை முகாமில் சிக்காமல் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்திற்குச் சென்று சரண்டர் ஆகிறான். தலமலை முகாமில் சிக்காமல் சிவண்ணா உயிர்தப்பிய செய்தியை நாளிதழ் மூலமாக அறிந்துகொண்ட மாதி மகிழ்ச்சி அடைகிறாள் என்பதாக புதினத்தின் இறுதிப்பகுதி நிறைவடைகின்றது.