அப்பா என்றில்லை..யாவர்க்கும் பொதுவான குணம்தான்.அப்பா என்பதினால் அதிகமாய் கவனத்தில் கொள்கிறோம். அவ்வளவே. காலை, மாலை, இரவு என மாறுகின்ற பொழுதுகளுடன் நாமும் நகர்ந்துகொண்டிருக்கிறோம்.
தன்னம்பிக்கை மிக்கவர் அப்பா.வாழ்வின் சகல அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து தன்னைத்தானே வடிவமைத்துக் கொண்டவர்.
ஒருநாள் மாலைநேரம் இரத்தம் சொட்டச் சொட்ட பரிதவித்துவந்தது பூனை.. விறாந்தை முழுக்க ரத்தம்.
அப்படியே அனைத்துத் தூக்கிப்பிடிக்க அம்மா துணியால் துடைத்துவிட்டு இன்னொரு துணியால் இரத்தம் வந்த பகுதியை கட்டிவிட்டால்.வலியால் பூனை துடித்தது.
அம்மா அப்பாவைத் திரும்பிப்பார்த்தாள்.
‘உடைஞ்சு போச்சு எண்டு தெரியும்..அதைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போறதுக்கு பொருட்காட்சிக்கு வைக்கபோற மாதிரி…’
அப்பா எதுவும் பேசவில்லை.
அந்தக் கண்ணாடியை தனது பதினைந்தாவது வயதில் தனது முதல் உழைப்பில் வாங்கியதாக பெருமையாகச்சொல்வார்.
முகச்சவரம் செய்வதற்கு சலூனுக்குப் போனதில்லை.முகச்சவரம் செய்யும் கருவிக்குள் பிளேட்டைப்பொருத்தி முகச்சவரம் ச்ய்வார்..அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பார்…
எங்களுக்கும் பழகிப்போயிற்று..அறைக்குள் கண்ணாடி இருந்தாலும் பவுடர் போடவும்,பொட்டுச் சரியோ எனப்பார்க்கவும் அம்மாவும் தங்கைகளும் முண்ணனியில் நிற்பார்கள்.நானும் தலையைச் சீவவும்,பவுடர் போடவும் தான் என்றாலும், அவ்வப்போது வளர்கிற தாடியை பார்த்து உள்ளுக்குள் குதூகலிக்கவும் அந்தக் கண்ணாடியின் உதவி தேவைப்பட்டது.
அடுக்களையிலிருந்து அம்மா தங்கைகளைக் கூப்பிட்டாலும், ம் ..ம் என்று வெகுநேரம் கண்ணாடியின் முன்னால் நிற்பதைக் காண அம்மாவிற்கு கோபமாக வரும்.விறகுக்கட்டையுடன் வர அம்மா.. என்றபடி அறைக்குள் நுழைந்துவிடுவார்கள்.