– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் –
பதிவுகள் மார்ச் 2004 இதழ் 51
‘இதந்திரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும்,
பதந்திரு இரண்டும் மாறி, பழிமிகுந்து இழிவுற்றாலும்,
விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும்,
சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே.’ –சுப்ரமணிய பாரதியார்-
“பாரதியால் தமிழ் உயர்ந்ததும், தமிழால் பாரதி உயர்ந்ததும் இன்று யாவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். பாரதி மக்கள் கவி. மானுடம் பாட வந்த மாக்கவி. புது நெறி காட்டிய புலவன். தன்னைப் பின்பற்றித் தமிழ் வளர்க்க ஒரு பரம்பரையைத் தோற்றுவித்த ஓர் உயர்கவி. எண்ணத்தாலும், எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர். பல்துறை அறிஞர், தொலை நோக்கினர், அறிவியல் பார்வை நல்கிய கவிஞானி. மெய்ஞ்ஞான விஞ்ஞானங்களின் கூட்டுச் சேர்க்கை அவர் படையல். புதிய தமிழகத்தை உருவாக்கக் கனவு கண்ட கவிக்குயில். சுதந்திரப் போரில் பாரதியின் பாடல் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத் தீயாய், சுதந்திரக் கனலாய்ப், புனலாய்த் தமிழ் நாட்டை வீறுகொள்ளச் செய்தது…”. –ச. மெய்யப்பன், எம்.ஏ. [அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]
பாரதி மகாகவியா இல்லையா வென்று பாரதியின் படைப்புகளைத் திறனாய்வு செய்து, பாராட்டுக்குரிய ஒரு கட்டுரையைக் கோவை ஞானி திண்ணை அகிலவலையில் [டிசம்பர் 12, 2003] வெளியிட்டு இருந்தார். மகாகவிகள் எனப் போற்றப்படும் காளிதாசர், கம்பர், வால்மீகி, வியாசர், தாகூர், ஷெல்லி, ஷேக்ஸ்பியர், காய்தே, பைரன் வரிசையில் பாரதியார் நிற்கத் தகுதி பெற்றவரா அல்லது பாரதியை வெறும் தேசீயக் கவி என்று ஒதுக்கி விடலாமா என்னும் கேள்வி ஒரு சமயம் எழுந்திருக்கிறது! பாரதிக்கு மகாகவி என்னும் பட்டமளிப்பது முறையா அல்லது தவறா என்று ஆய்வதற்கு முன்பு மேற்கூறப்பட்ட கவிஞர் காளிதாசர், வால்மீகி, கம்பர், வியாசர், ஷெல்லி, ஷேக்ஸ்பியர், காய்தே, பைரன் ஆகியோர், பாரதி தனது காவியத்தில் கையாண்ட நூற்றுக் கணக்கான பல்வேறு நிகழ்கால, மெய்யான, முரணான மனிதக் குறைபாடுகளை, மானிடப் பண்புகளை நடைமுறைகளைத், தேசீயப் போராட்டங்களை எந்த வகையிலாவது தொட்டிருக்கிறார்களா என்று பார்ப்பது முதற்கண் அவசியம். அதாவது மற்ற மகாகவிகளை ஒப்பிட்டுப் பாரதியை எடை போடாமல், பாரதியை ஓர் அளவு கோலாக எடுத்துக் கொண்டு மற்ற கவிஞர்களின் தரத்தை, நயத்தை, உயரத்தைத் திறனாய்வு செய்ய ஒருவர் விரும்பலாம்! பாரதியைத் தராசின் ஒரு தட்டில் அமர வைத்து, மற்ற கவிஞர் ஒவ்வொருவரையும் நிறுத்துப் பார்த்துத் தரத்தை அறிய முற்படலாம்!
கவிஞர்களைத் தனித்தனியாகப் பீடத்தில் நிறுத்தி, அவர் மகாகவியா, இவர் மகாகவியா, எவர் மகாகவி என்றெல்லாம் வர்ணம் பூசி வரிசையில் வைக்க முயல்வது, ஒருபுறம் வீணான செயலாக எனக்குத் தோன்றுகிறது! ஆயினும் தமிழ்நாட்டில் பாரதியின் திறமைப் புலமைக்கு ஓர் இடத்தை அளிக்கத் தமிழறிஞர்கள் முற்பட்டிருப்பதால், அதைப் பற்றி எனது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். அந்த ஆய்வுக்குச் சில கவிஞர் வால்மீகி, வியாசர், காளிதாசர் ஆகியோர் ஆக்கங்களைச் சிறிது ஆராய முயல்கிறேன்.
கவிஞர்கள் பலவிதக் கனி வகைகளைப் போன்றவர்கள்! கவிஞரின் தனித்துவப் படைப்புகள் எல்லாம், தனித்தனிக் கனிகளின் அரிய பழச்சுவை போல, முற்றிலும் வேறுபட்டு உள்ளத்தில் உணர்ச்சி அளிப்பவை! பலவிதக் கனிகளான மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, பீச், பியர் ஆகியவற்றுள் எப்பழம் சுவையில் உயர்ந்தது, எப்பழம் சுவையில் மட்டமானது என்று கேட்டால் எவ்விதம் பதில் அளிக்க முடியும்? அவரவர் காலத்தின் கோலங்களை அவரவர் காவியத்தில், கவிதைகளில் வானவில் போல ஓவியம் தீட்டுகிறார்கள், படைப்பாளிகள்!