Morttgage Agent: Anton Philip Jeyakumar B.Sc.Eng

‘பதிவுகள்’ இணைய இதழ் விளம்பரங்கள் / அறிவித்தல்கள். ‘பதிவுகள்’ இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  ‘பதிவுகள்’ இணைய இதழில்…

Continue Reading →

முற்றுப் பெறாத உரையாடல்கள் – 10 – தொல்.திருமாவளவன் இரு நிகழ்வுகள் : வெளிப்படுத்தப் பட்ட பொய்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும்! தொல்.திருமாவளவனின் இலண்டன் நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்!

முற்றுப் பெறாத உரையாடல்கள் – 10: தொல்.திருமாவளவன் இரு நிகழ்வுகள் : வெளிப்படுத்தப் பட்ட  பொய்களும் மறைக்கப்பட்ட  உண்மைகளும்! தொல்.திருமாவளவனின் இலண்டன் நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்!தோழர் தொல்.திருமாவளவன் இங்கு இலண்டன் வந்தார். இரண்டரை நாட்கள் தங்கி நின்றார். இரண்டு விழாக்களில் பங்கேற்றார். இப்போது தாயகம் திரும்பி விட்டார். ஆனாலும் அவர் இங்கு வருவதற்கு முன்னரே ஆரம்பமாகிய சர்ச்சைகளும், சலசலப்புக்களும், அவர் மீதான அவதூறுகளும், அவரது இரு நிகழ்வுகளிலும் தொடர்ந்தன. இப்போது அவர் தாயகம் திரும்பி பல நாட்கள் ஆகிவிட்ட பின்பும் இன்னமும் தொடர்கின்றன. தொல்.திருமாவளவன் நாம் எல்லோரும் அறிந்த, நாடறிந்த, உலகறிந்த அரசியல் செயற்பாட்டாளர். விடுதலைச் சிறுத்தைகள் என்னும் அமைப்பினை உருவாக்கி தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும்  ஆதரவாக தொடர்ந்தும் குரல் எழுப்பி வரும் அவர், இப்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், மிக அண்மையில் முனைவர் பட்டத்தினை பெற்றுக் கொண்டவர். ஆரம்பம் முதலே ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு சக்தியாக விளங்கிய இவர், விடுதலைப்புலிகள் உடனும் அதன் தலைவர் வே.பிரபாகரனுடனும் என்றுமே நல்ல உறவினையும் நட்பினையும் பேணி வந்தவர். ஆயினும் ஈழவிடுதலைப்போரின் இறுதிக்கட்டத்தில் இவரது விடுதலைச்சிறுத்தைகள்  அமைப்பானது, அன்றைய ஆளும் இந்திரா காங்கிரசுடனும், தி.மு.கழகத்துடனும் வைத்திருந்த உறவானது, ஈழமக்கள் பலராலும் முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு உடந்தையாக இருந்தவர் என்ற துரோக முத்திரையை அவர் மீது சுமத்தியிருந்தது. அத்துடன் இன்று ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் எழுச்சி பெற்ற இந்துத்துவா சக்தியானது  இன்று அனைத்து சிறுபான்மை இனங்களையும் குழுக்களையும் ஒடுக்குகின்ற கால கட்டத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவு  சக்தியாக விளங்கும் இவரையும் இவரது கட்சியினையும் கருவறுப்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது. அதிகாரங்களுடன் ஒத்தியங்கும் ஊடகங்களும் அவர் மீதான ஊடக மறைப்பினைச் செய்வதுடன் அவருக்கெதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைப்பதிலும் மிகத் தீவிரமாக இயங்கி வருகின்றன.

Continue Reading →

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர் மாவட்டம்: மாதக்கூட்டம் 1/9/19

- சுப்ரபாரதிமணியன் -“ தாய்மொழி தாய்ப்பால் போன்றது. நல்ல சுயசிந்தனையை  உருவாக்கும், வாழக்கையை உயர்த்தும். இன்றைக்கு வளரினப்பருவத்தினரின் போக்கும் நடவடிக்கைகளும் கவலை அளிக்கின்றன. அவர்கள் வாழ்க்கைக்கு கலங்கரை விளக்கமாக இலக்கியப்புத்தக வாசிப்பு இருக்கும் என்பதை இளையதலைமுறையினர் உணர வேண்டும். குழந்தைகளைத் தொழிலாளியாக மாற்றும் சமூகம் அநாகரீகமானது.திருப்பூரில் குழந்தைத் தொழிலாளர் இல்லாத நிலையை பின்னலாடைத்துறையில்  உருவாக்க வேண்டும். அது முக்கிய சமூகப்பணியாக இருக்கும்” என்று தி . வெ. விஜயகுமார் ( குழந்தைக் கல்வி இயக்குனர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக இயக்குனர் ) பேசினார்  

* செப்டம்பர்     மாதக்கூட்டம் …1/9/19 ஞாயிறு மாலை.5 மணி. பனியன்  தொழிலாளர் சங்கம், பழைய புஷ்பா திரையரங்கு, எவரெஸ்ட் ஓட்டல்  எதிரில், பெருமாநல்லூர் சாலை,திருப்பூர் நடந்தது.,

நூல்கள் வெளியீடு :
* சுப்ரபாரதிமணியன் தொகுத்த ” . ஓ.. சிங்கப்பூர்”  நூலை பேரா.கோகிலச்செல்வி வெளியிட குறும்பட இயக்குனர்கள் தீபன், ஜெயப்பிரகாஷ் பெற்றுக் கொண்டனர்.

* கோவை தெ.வி.விஜயகுமாரின் “ குழந்தைப்பருவத்து நினைவுகள் ‘’நூலை சேவ் பிரான்சிஸ் வெளியிட விஜயா பெற்றுக்கொண்டார்.

* சி.ந சந்திரசேகரனின் “  அம்பேத்கருடன் ஒரு நேர்காணல் “நூலை வேனில் கிருஷ்ணமூர்த்தி வெளியிட கோவை மாணிக்கம் பெற்றுக்கொண்டார்.

* பாராட்டு : வி டி சுப்ரமணியன் அவர்களுக்கு – (   திரைப்படசங்கம் , கலை இலக்கியச் செயல்பாடுகள் )
* வே.சுந்தரகணேசன் அவர்களுக்கு ( ஓலைச்சுவடி பாதுகாப்பும், அவற்றின் புத்தகப்பதிப்பித்தலும் ) அளிக்கப்பட்டது.
* திருப்பூர் குறும்பட விருதுகள் 2019 வழங்குதல் நடைபெற்றது

Continue Reading →

நூல் அறிமுகம்: பாரதியும் ஷெல்லியும் – தொ.மு.சி. ரகுநாதன்

நூல் அறிமுகம்: பாரதியும் ஷெல்லியும் – தொ.மு.சி. ரகுநாதன்-  முனைவர் போ. ஜான்சன், உதவிப் பேராசிரியர் , தமிழ்த்துறை, பெட்ரீசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அடையாறு, சென்னை – உம் என்ற இடைச்சொல்லை எட்டு நிலைகளில் பயன்படுத்தலாம் என்பார் தொல்காப்பியர் (எச்சம், சிறப்பு, ஐயம், எதிர்மறை, முற்று, எண், தெரிநிலை, ஆக்கம்). நூலாசிரியர் தொ.மு.சி. அவர்கள் சிறப்பு கருதி நூலின் தலைப்பினைக் கொடுத்துள்ளார். ஒப்புமை செய்ய எடுத்துக்கொண்ட இரு கவிஞர்களுமே சிறப்பு வாய்ந்தவர்கள். ஒப்புயர்வு அற்றவர்கள். ஒப்புமையாக்க நூல்களுள் ஆகச்சிறந்த படைப்பு இந்நூல் என்பது மிகையில்லை.

பாரதிக்கும் ஷெல்லிக்கும் கிட்டத்தட்ட ஓர் நூற்றாண்டு இடைவெளி உள்ளது (90 ஆண்டுகள்). இதனால் ஷெல்லி காணத பல புரட்சிகளையும், வெற்றிகளையும், அவன் காணவிரும்பிய பல்வேறு நிகழ்வுகளையும் பாரதி கண்டான் என்பது தொ.மு.சி. அவர்களின் கூற்று. இரு கவிகளையும் ஒப்புமையாக்கம் செய்யும்போது ஷெல்லியின் கவிதைகளையும் முதலிலும் அதன்பின் பாரதியின் படைப்புகளை அதனோடு ஒப்பிட்டும் காட்டியுள்ளார். பல்வேறு தலைப்புகளில் பல்வேறு செய்திகளைப் பற்றிய விரிவான விளக்கச் செய்திகளாகப் பதிவு செய்துள்ளார்.

பாரதியையும், ஷெல்லியையும் பற்றிய அறிமுகம், அவர்களின் வாழ்க்கைச் சூழல், அவர்களின் படைப்புப் பின்னணி போன்றவற்றை ஒப்புமையோடு விரிவாகக் கூறித்தொடங்கும் நூலாசிரியர், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றில் இருவரின் மனப்பாங்கு எவ்வாறு இருந்தது என்பதை மிகவிரிவாக அழகாக எடுத்துக்காட்டுகிறார். அதேநேரத்தில் அவர்கள் எக்கருத்தில் மாறுபடுகிறார்கள் என்பதைக் காட்டி அதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார். காட்டாக, மன்னர்கள், மதகுருமார்கள் பற்றிய கருத்து நிலைப்பாடு இருவருக்கும் வெவ்வேறாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே அவரவர் காலத்தைக் காணும்போக்கில் மிகத்தீவிரமாக இருந்துள்ளனர்.

பெண்விடுதலை பற்றிய கருத்துநிலையில் ஒரேமாதிரியாக சிந்திக்கும் திறம்பெற்றும், குறிப்பாக, பாரதி அதில் தமிழக நிலையைக் கருத்தில்கொண்டு தம்முடைய படைப்புகளைப் படைத்துள்ளார் என்றும் பாரதியை உயர்த்திக் காட்டுகிறார் நூலாசிரியர். காதல் நிலையில் இருவரும் சற்று முரண்படுகின்றனர். அதற்கான காரணம், இயல்பிலேயே (இளமையிலேயே) ஷெல்லி கடவுள் மறுப்புக் கொள்கை உடையவராக இருந்து, இயற்கையையே காதல் என்று கூறியதும், பாரதி பராசக்தியையே காதல் வடிவமாகக் கண்டதுமே இம்முரண்பாடு.

உருவகங்களையும் உவமைகளையும் பயன்படுத்துவதில் ஷெல்லி முன்னனியில் இருக்கிறார். அதனை அடியொற்றியே பல்வேறு இடங்களில் பாரதி தன்னுடைய உவமைகளையும், உருவகங்களையும் படைக்கிறான். ஷெல்லியின் கவிதைகளில் மனங்கசிந்த பாரதி, ஷெல்லியின் அனைத்துத் திறங்களையும் அப்படியே தமிழில் கொண்டுவர முயற்சித்திருக்கிறான்.

Continue Reading →

கைக்கோளர் படை

வரலாறுகைக்கோளர் என்போர் இந்நாளில் செங்குந்த முதலியார் என அறியப்படுகின்றனர். அண்மைக் காலம் வரை தறி நெசவு இவர்க்கு தொழிலாய் இருந்துள்ளது. ஆனால் பல்லவர் ஏற்படுத்திய  இந்த சாதிமார் ஒரு படைக்குடி ஆவர். கல்வெட்டில் இவர்கள் பட்டடைக்குடி என தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது.  ‘குந்தம்’ என்பதற்கு வேல் என்ற பொருளே இதற்கு சான்று. கள்ளர் படை, மறவர் படை என்பது போல 12 ஆம் நூற்றாண்டு வரை கைக்கோளப் படை என்று தனியாகவே இருந்துள்ளது. இப்படி போர்க்குடிகளாக இருந்த இவர்கள் சைவ சமய எழுச்சியின் காரணமாக அதன்பால் மிக்க ஈடுபாடு கொண்டதனாலும், இவர்கள் நம்பி இருந்த பல்லவர்கள் வேந்தர் என்ற நிலையும் மன்னவர் என்ற நிலையும் இழந்து அரையர்களாக, கிழார்களாக சிதறுண்டு போனதன் காரணமாகவும் போர்த் தொழிலை விட்டு வணிகத்தைப் பிழைப்பாக மேற்கொண்டனர்.  இதாவது, நெய்த ஆடைகளை விற்பதைத் தொழிலாக மேற்கொண்டனர். ஆனாலும் கைக்கோளர் சிலர் மட்டும் பல்வேறு ஆட்சியாளரிடம் படைத்தலைவர்களாகவும் படைஆள்களாகவும் தொடர்ந்து வேலை செய்தனர். இப்படி தொழில் மாறி பிழைப்பு மேற்கொண்டாலும் அதிக வரி, பிற மொழித் துணி வணிகரின், சிறப்பாக சௌராட்டிரர், பத்மசாலி ஆகியோரின் தொழிற் போட்டி ஆகியன இவர்களை வறுமையின் பிடிக்கு தள்ளியது.  இவற்றுக்கும் சான்று கல்வெட்டுகள் உண்டு. கைக்கோளரைப் போலவே சேனைக்கடையார், செட்டியார், வாணியர் போன்ற போர்க்குடிகளும் போர்த் தொழிலை விட்டுவிட்டு வணிகத்தை மேற்கொண்டனர். கைக்கோளர் படைத்தொழிலை விட்டதுமுதல் பல்லவர் ஆட்சி போலவே சோழர் ஆட்சியும் விரைந்து சரிந்தது. அதன் பின் வடக்கே இருந்து இசுலாமியப் படையெடுப்பு, விசயநகர படையெடுப்பு ஆகியவற்றால் தமிழராட்சி அறவே தொலைந்து போனது.  அரையர்கள் பலரும் பல்லவர் வழிவந்தவர் என்ற வகையில் கூட்டரசை (confederacy) அமைத்திருக்க முடியும். ஆனால் படைஆளுக்கு எங்கே போவது? பட்டடைக்குடி சாதிகள் படைத்தொழிலை விட்டதனால் அதற்கும் வழி இல்லாமல் போனது. உண்மையில், வட தமிழ்நாட்டில் தமிழர் படை சுருங்கிப் போயிருந்தது. சம்புவராயர் ஆட்சியும் குறுகிய காலத்தில் வீழ்ந்ததற்கு தம் படையை மேலும் பெருக்க முடியாமல் போனதே முதற் காரணம் ஆகும். 

ஒரு தொழிலை செய்யும் ஒரு கூட்டத்து மக்கள் அத்தொழிலை விடுத்தால் மாற்று ஏற்பாடாக வேறு ஒரு கூட்டத்தாரை அத் தொழிலில் ஈடுபடுத்தி சமூகத்தில் தொழில் சம நிலையை பேண வேண்டும். ஒரே தொழிலில் அதிகம் பேர் ஈடுபட்டாலோ அல்லது ஒரு தொழிலில் தேவைப்படும் பணிஆள்களில் பற்றாக்குறை ஏற்பட்டாலோ தொழிற் சமநிலை இழப்பு ஏற்படும்.  அதனால் தான் பண்டு ஒரு தொழில் செய்தவர் மாற்று தொழில் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதில்லை. அதனால் தொழில் அடிப்படையில் சாதிகள்  உண்டாயின என்பதுஉண்மை தான். வேந்தர் அனுமதித்தால் சில தனிஆள்கள் மட்டும் தொழில் மாறலாம் மற்றபடி அது பொதுவான வழக்கம் அல்ல. கைக்கோளரை தொழில் மாறவிட்டதன் விளைவாக தமிழக வரலாற்றில் பிற மொழியாளருக்கு அடிமைப்படும் அளவிற்கு தன்னாட்சியை மாபெரும் விலையாகத் தமிழகம் கொடுத்தது ஒருவரலாற்றுப் பிழையே. அந்த மாபெரும் பிழையால் தமிழகம் வந்து புகுந்த அயலவர் பொன்னான வாழ்வு பெற்றுவிட்டார்கள்.  இந்த வரலாற்று உண்மைகளை தெளிவுபடுத்தவே கீழ்காணும் கல்வெட்டுகளின் விளக்கம்.

Continue Reading →

அஞ்சலி: நினைவுகளில் ஓவியமாகிவிட்ட ஓவியர் மொராயஸ்! நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களின் கதைகளுக்கு உயிர் வழங்கிய ஓவியர்! எம்.ஜி.ஆரின் விருப்பத்தில் அவரது ‘ தாய் ‘ இதழுக்கும் படம் வரைந்தார்!

நினைவுகளில் ஓவியமாகிவிட்ட  ஓவியர் மொராயஸ்! நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களின் கதைகளுக்கு உயிர் வழங்கிய ஓவியர்!  எம்.ஜி.ஆரின் விருப்பத்தில் அவரது ' தாய் ' இதழுக்கும் படம் வரைந்தார்!உலகப்பிரசித்திபெற்ற ஓவியர் பிக்காசோ, மொனாலிசா ஓவியம் பற்றி அறிந்திருப்போம். ஆனால், இந்தப்பெயர்களை லங்கையில் பிறந்து, தனது வாழ்நாள் முழுவதும் ஓவியராகவே வாழ்ந்த ஒருவர் தமது பிள்ளைகளுக்கு வைத்து அழகு பார்த்த செய்தி தெரியுமா…? வீரகேசரியுடன் எனக்கு உறவும் தொடர்பும் ஏற்பட்ட 1972 ஆம் ஆண்டு முதல் என்னுடன் நட்புறவாடியவரான  ஓவியர் மொராயஸ்  கடந்த 26 ஆம் திகதி  திங்கட்கிழமை  மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். சிலர் தமது முன்னாள் காதலிகள், காதலர்களின் அல்லது தமது விருப்பத்துக்குரிய கடவுள்களின் பெயர்களை -வாசித்து அனுபவித்த கதைப்பாத்திரங்களின் பெயர்களை அல்லது குடும்பத்தின் பரம்பரை பெயரை தமது பிள்ளைகளுக்கு வைப்பார்கள். அவ்வாறு தமக்குப் பிடித்த ஓவியத்துறை சார்ந்த பெயர்களை மொராயஸ் தமது பிள்ளைகளுக்குச் சூட்டியது வியப்பல்ல.

வத்தளை புனித அந்தோனியார் வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியை முடித்திருந்த மொராயஸ் விரும்பியவாறு இவரது தந்தையார் தமிழ்நாட்டுக்கு இவரை அனுப்பி படிக்கவைத்தார். இளம் வயதுமுதலே இவருக்கு ஓவியம் வரைவதில் இருந்த நாட்டம்தான் பின்னாளில் ஓவியக்கல்லூரியிலும் இணையச் செய்திருக்கிறது. பொதுவாக எமது தமிழ் சமூகத்தில் தமது பிள்ளைகள் மருத்துவர்களாக பொறியியலாளராக சட்டத்தரணிகளாக கணக்காளராக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புத்தான் அந்நாளைய பெற்றோர்களிடம் இருந்தது. காரணம் இந்தத்துறைகளில் நிறைய சம்பாதிக்கமுடியும் சமூக அந்தஸ்தை வளர்த்துக்கொள்ளவும் முடியும் என்ற மனப்பான்மைதான். ஓவியம், கலை, ஊடகம் முதலான துறைகள் புகழை மட்டும்தான் தரும், சோற்றுக்கு திண்டாட்டத்தைதான் தரும் என்று அந்நாளைய பெற்றோர்கள் நினைத்தார்கள்.

தமது மகனின் விருப்பம் அறிந்து தமிழ்நாட்டில் ஓவியக்கல்லூரியில் இணைத்துவிட்ட அந்தத் தந்தை சற்று வித்தியாசமானவர்தான். அத்துடன் மொராயஸின் அண்ணன் லெனின் மொராயஸ், இலங்கையில் பிரபலமான சினிமா இயக்குநர். சுமார் நாற்பது சிங்களப்படங்களை இயக்கியிருப்பவர். அவர் இறுதியாக இயக்கிய படம் ‘நெஞ்சுக்குத்தெரியும்’ என்ற தமிழ்ப்படம். ஆனால், அது வெளியாகவில்லை. எஸ்.ரி.ஆர். பிக்சர்ஸ் ( எஸ்.ரி. தியாகராஜா தயாரித்த) படம் வத்தளை சினிமாஸ் ஸ்டுடியோவில் 1983 வன்செயலில் எரிந்து சாம்பரானது.

ஒகஸ்டின் மொராயஸ் இலங்கை பத்திரிகை ஊடகத்துறையில் ஓவியர் மொராயஸ் என்றே அறியப்பட்டவர். அண்ணன் காட்டிய வழியில் அவர் தம்பி மொராயஸ_ம் ஆரம்பத்தில் இலங்கையில் திரைப்படத்துறையில் கலை இயக்குநராகவும் திரைப்படங்களுக்கு டைட்டில் எழுதுபவராகவும் தொழிற்பட்டிருக்கிறார்.

தமிழ்நாடு ஓவியக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் ஓவியம் பயின்றுவிட்டு அங்கேயே இரண்டு ஆண்டுகாலம் ஓவிய ஆசிரியராகவும் பணியாற்றிய பின்னரே நாடு திரும்பிய மொராயஸ், கொழும்பில் வெளியான சிங்களப்படங்களுக்கு சுவரொட்டிகள் வரைந்தார். அக்காலத்தில் வெளியான  தமிழ்ப்படம் ‘மஞ்சள் குங்குமம்’. இந்தப்படத்திற்குரிய சுவரொட்டிகளை வரைந்துகொண்டிருந்தபொழுது, அதில் நடித்த நடிகர் ஸ்ரீசங்கர், இவரை அழைத்துக்கொண்டு வீரகேசரி  அலுவலகம் வந்து, அச்சமயம் அங்கு செய்தி ஆசிரியராக இருந்த டேவிட் ராஜூவிடம் அறிமுகப்படுத்தினார். 1969 இலிருந்து வீரகேசரியில் ஓவியராக பணியாற்றிய மொராயஸ்1982 ஆம் ஆண்டிலேயே அங்கு நிரந்தர ஊழியரானார்.

Continue Reading →

ஆய்வு: ஹிமானா சையத் சிறுகதைகளில் அயல்நாட்டில் பணிபுரிவோர் நிலை

- அ.அஸ்கா், உதவிப்பேராசிரியா், பகுதி நேர முனைவா் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி  - தாய் நாட்டிலிருந்து பொருள் ஈட்டுவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்பவா்களுக்கு வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக  குடும்பத்தை பிரிந்து வாழ்வதால் உறவினரின் சுக துக்கங்களில் பங்கு கொள்ள முடியாமல் தவிர்ப்பதையும் அதனால் ஏற்படும் இன்னல்கள் குறித்தும் வெளிநாட்டிற்குச் சென்று சரியான வேலையாக அமைந்து பொருளீட்டி மாதம் தவறாமல் வீட்டிற்கு பணம் அனுப்புவதால் வீடு வளம் பெறுவதைப் பற்றியும் ஹிமானா சையத் தம் சிறுகதைகளில்  உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளார். மேற்கண்டவற்றை விரிவாக ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஹிமானா சையத் சிறுகதைகளில் அதிகமாக வெளிநாட்டில் பணிபுரிவோரின் வாழ்வியல் சிக்கல்கள் கதைக்கருவாகக் காணப்படுகின்றன. இதற்கு அவரே பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்.

“ஒரு நூலை வெளியிடும் போது அந்த நூலின் வெற்றி விற்பனை சார்ந்ததாக இருக்கிறது. அப்படி பார்க்கும் போது இதுவரை  வெளிவந்த  என்  நூல்களில்  சுமார்  ஐம்பது சதவீதம் அரபுநாடுகள், புருனை, மலேசியா, சிங்கப்பூர்,  இலங்கை போன்ற நாடுகளில் உள்ள தமிழ் வாசகா்களால் வாங்கப்பட்டுள்ள உண்மை தெரிகிறது. எனவே என் சிறுகதைத் தொகுதிகளில் இந்தச் சகோதரா்களுக்காக அவா்களது வாழ்க்கையை மையமாகக் கொண்டு நான் எழுதிய கதைகளைச் சேர்ந்தாக வேண்டிய புரிந்துணா்வும் கடமை சார்ந்ததாகி      விடுகிறது ”1

என்பதாக “உங்களோடு ஒரு நிமிடம்…” என்னும் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பின் மீதான மோகம்
கல்வியின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, குறுகிய காலத்தில் அதிகமாகப் பொருளீட்ட வேண்டும் என்ற பேராசை ஆகியவை வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தூண்டுகின்றன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் பெரிதும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாய மக்களை இந்தச் சமூக அவலம் பெரிதும் வாட்டுகிறது. ‘பாதை’ என்னும் கதையில் கபீர் என்பவரின் மனம் வெளிநாட்டு வேலை வாய்ப்பினை வட்டமிடுவதை ஹிமானா சையத்,

“உள்நாட்டில் இருந்து கொண்டு இதைச் செய்வதை விட சில ஆண்டுகள் வெளிநாடு சென்று திரும்ப வேண்டும் என்பதைச் சுற்றியே மனம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது ”2
எனக் காட்டுகிறார்.

Continue Reading →

கவிதை: முதியோர் முரசு

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

அது ஒரு அளவான குடும்பம் – ஆனால்
அழகான குடும்பம் என்று சொல்வதற்கில்லை…

அது மூன்று தலைமுறைகள் வாழுகின்ற வீடு
மூவருக்கு அது கூடு –
வயதில் முதிர்ந்த இருவருக்கு அது கூண்டு…

முதிர்ந்த தலைமுறைக்கு மகனொருவன்
உண்டு – அவன் மனைவி என்னும்
மலரின் பின்னால் சுற்றுகின்ற மயக்க வண்டு…

இன்னும் சொன்னால் மனைவி
என்னும் சாட்டையால் சுற்றுகின்ற பம்பரம்
மணிக்கணக்கில் வேலை
செய்து தளர்ந்துவிடும் எந்திரம்…

அந்த வீட்டின் இல்லத்தரசி ஆணைகளால் ஆளுகிறாள் –
அடக்கி ஆளுகின்ற அதிகாரத்தால் நீளுகிறாள்…

மூன்றாம் தலைமுறையாய் மழலை
மொழி பேசும் மகவொன்றும் உண்டு –
அவன் வாசமும் பாசமும் வீசுகின்ற மலர்ச்செண்டு…

அந்த வீட்டின் இரு தூண்கள் வேம்போடு ஓர் அரசு…
அவர்கள் படும் இன்னல்களில் உருவானது என் முரசு…

வாழ்கையில் கடந்து வந்த பாதைகளை
முதிய நெஞ்சங்கள் அசை போடுகின்றன
விரக்கிதியின் விளிம்பில் நின்று
சோக இசை பாடுகின்றன…

Continue Reading →

நிறைவு

- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். -

காலைக் கதிரவனோடு
கைகோர்த்து
தூரத்து
ரயில் பயணம்
தொடர் வண்டியின்
தடதட சப்தம்
திடீரென
வீசிய சாரல்
மழை!!

Continue Reading →