ilakkiyavaasal@gmail.com
பக்தி இலக்கியங்களில் அதிகம் காணப்படுகின்ற புராண இதிகாசக் குறிப்புகளில் ஒரு பகுதி சிவனின் அட்டவீரச் செயல்களைப் பற்றியதாகும். தமிழ் பிற்சங்க இலக்கியங்களில் சிவன் பற்றிய புராணக் குறிப்புகள் பரவலாக அறியபட்டாலும் தேவார காலத்தில்தான் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இப்புராணங்களின் அடிப்படை வேதப்பொருளை எளிய மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்துள்ளது. வடஇந்தியப் பகுதிகளில் சமண பௌத்த செல்வாக்கினால் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து வைதீக சமயம் இப்புராண மரபை அடியொற்றியே தன்னைத் தற்காத்துக் கொண்டது. இந்த வெற்றி தமிழக பக்தி இயக்கக் கவிஞா்களுக்கு ஒரு புதிய ஊக்கத்தையும் தந்திருக்கிறது.
பக்தி இயக்க மதம் பௌராணீக மதமாக மாறியதற்கு இதுவே காரணங்களாகும். தமிழக பக்தி இயக்கத்தில் வடமொழி பௌராணிகக் கதைகளின் தாக்கம் அதிகம் இருப்பினும் அக்கதைகளைத் தமிழ்நாட்டில் நிலவிய கதைகளாகவே மக்களை நோக்கிய பிரச்சாரம் செய்யப்பட்டது. திருஞானசம்பந்தா் பாடல்களில் இடம்பெரும் அட்டவீரட்ட செயல்கள், விற்குடி, கடவூர், கோலூர், கண்டியூர் என்ற வெவ்வேறு தலங்களில் நடைபெற்றனவாகக் கொள்ளப்படுகின்றன. வடஇந்திய பௌராணீகக் கதைகளைத் தமிழ் நிலத்தோடு இயைபுறுத்துவதன் மூலம் தமிழர் சிவமதத்திற்கு ஒருவித தேசிய அங்கீகாரத்தைத் தேட முடிந்தது. சிவனின் இத்தகைய அட்டவீரட்ட புராணங்கள் சமண-பௌத்த மதத்தவர்களை அச்சுறுத்;தவும், விரட்டியடிக்கவும் பயன்பட்டிருக்கும். திருஞானசம்பந்தார் பாடல்களில் இடம்பெறும் அட்டவீரட்டச் செயல்களாகக் கீழ்வருவனவற்றைக் காணமுடிகின்றது.
1. அந்தகாரசுரனைச் சங்கரித்தது (அந்தகாரி)
2. காமனை எரித்தது (காமாந்தகன்)
3. காலனை உதைத்தது (காலசங்காரன்)
4. சலந்தரனைத் தடித்தது (ஜலந்தராரி)
5. தக்கன் வேள்வி தகர்த்தது (தக்கச்சாரி)
6. திரிபுரம் எரித்தது (திரிபுராந்தகன்)
7. பிரம்மன் சிரத்தைச் சிவபிரான் அறுத்தது (பிரம்மரச் சதனன்)
8. சிவபிரான் யானையை உரித்தது (கஜாபக கஜாந்தகன்)
இவை சிவப் பராக்கிரமத்தின் வெளிப்பாடுகளாகக் கொள்ளப்படுகின்றன. இப்புராணக் கதைகளின் வழி சிவன் அகோர ரூபங்களுடனும் அஸ்ட வக்ரங்களுடனும் தோற்றமளிக்கிறான். அச்சம் தரும் ஆயுதம் ஏந்திய இத்தொன்மங்கள் சமண பௌத்த எதிர்ப்பில் ஓர் உணர்ச்சிகரமான, ஆவேசமான உத்வேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கக்கூடும். எனவேதான் திருஞானசம்பந்தர் பாடல்களில் இவை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருபுறம் அடியார்க்கு அருளும் அன்பே வடிவான சிவனையும் மறுபுறம் ஆவேசங்கொள்ளும் ஆயுத பாணியான சிவனையும் படைத்து அதன் மூலம் தன் சமய மேலாண்மைக்கான ஒப்புதலைப் பெற முயற்சித்திருக்கிறார். அடியார்கள் அருளப்படுவா், அடியார் அல்லாதாரைச் சிவன் தண்டிக்கவும் தயங்கமாட்டார் எனும் போது அதிகாரத்ததைக் கைகொள்ள ஆளும் வா்க்கங்கள் பயன்படுத்தும் இருவேறு தன்மைகளை இத்தொன்மங்கள் வெளிப்படையாகக் கொண்டிருப்பது தெரிகிறது. திருஞானசம்பந்தா் பாடல்கள் அட்டவீரட்டப் புராணக் குறிப்புகளை நோக்க திரிபுரம் எரித்த கதை மிகுதியான அளவில் இடம்பெறுகிறது.
அன்புடையீர் வணக்கம்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32ஆவது தமிழ் விழா, 10ஆவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன் விழா நிகழ்வுகள் முப்பெரும் விழாவாக சிகாகோ நகரில் ஜூலை 4 முதல் 7 வரை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. இவ்விழாவிற்கு உலகெங்கிலுமிருந்து வந்து கலந்து சிறப்பித்த 6000- த்திற்கும் மேலான தமிழர்களுக்கு விழாக்குழுவினர் சார்பில் மிக்க நன்றி உரித்தாகுக. வட அமெரிக்கத் தமிழர் வரலாற்றில் இந்த நிகழ்வு, ஒரு மைல் கல் என்றால் மிகையாகாது. உலகத்தமிழர்கள் தமிழின்பால் கொண்டுள்ள அன்பையும், பிணைப்பையும் இந்த முப்பெரும் விழா உலகிற்குப் பறைசாற்றி உள்ளது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மொரிசியஸ் நாட்டுக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு பரமசிவம் பிள்ளை வையாபுரி, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை அமைப்பின் முன்னாள் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை, தமிழ் நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு மா.பா.பாண்டிய ராஜன், அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் திரு. ராஜா கிருஷ்ணமூர்த்தி, கனடிய ப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கேரி ஆனந்த சங்கரி, யாழ்ப்பாண மாநகரத்தந்தை திரு. இமானுவேல் ஆனல்ட், இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன், தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ் அறிஞர்கள், தமிழக அரசு மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல உரித்தாகுக.
பேரவை விழா மற்றும் 10வது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடத்த பொருளுதவி செய்த புரவலர்கள், பேராளர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு மிக்க நன்றி. கொடையாளர்கள் உதவி இல்லை என்றால் இந்த முப்பெரும் விழாவை நடத்துவது சாத்தியமல்ல. அதற்காக அரும்பாடு பட்ட விழா ஒருங்கிணைப்பாளர் திரு. வீரா வேணுகோபால் மற்றும் திரு. சிவா மூப்பனார் ஆகியோருக்கும் நன்றி. முப்பெரும் விழாவில் 5.5 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையொன்றை நிறுவ முழு உதவி செய்த தொழிலதிபர் வி. ஜி. சந்தோசம் அவர்களுக்கு விழாக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
புன்னகை தவழும் முகம். தமிழில் பேசினால் குழந்தையின் மழலை உதிரும். ஆழ்ந்த அமைதி. இலக்கிய நண்பர்களை அரவணைக்கும் வார்த்தைகள். இந்த அடையாளங்களுடன் வாழ்ந்த நண்பர் உபாலி லீலாரத்ன அவர்களை இனிமேல் ஒளிப்படங்களில்தான் பார்க்கமுடியும்! இனிமேல் நிகழும் மொழிபெயர்ப்பு சார்ந்த உரைகளில் பேசுபொருளாவார். தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை முன்னர் ஒருவழிப்பாதையாகத்தான் இருந்தது. அந்தப்பாதையை இருவழிப்பாதையாகவும் இருகை ஓசையாகவும் மாற்றியவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் உபாலி லீலாரத்ன. அவரது மறைவுச்செய்தி எமக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் மலையகம், உயிர்த்தியாகங்களினால் பசுமையானது மட்டுமல்லாமல், இலங்கைப் பொருளாதாரத்திற்கு அறுபது சதவீதமான அந்நிய செலவாணியையும் ஈட்டித்தந்தது. ஆனால், அதற்குக் காரணமாக இருந்த மக்கள் அவலமான வாழ்க்கைதான் வாழ்ந்தனர். இன்றும்கூட ஒரு ஐம்பது ரூபாவுக்காகவும் போராடவேண்டி நிலையில் வாழ்கின்றனர்.
1977 இல் பதவியிலிருந்த அம்மையாரின் ஏகபுதல்வனுக்காகவே நுவரேலியா – மஸ்கெலிய என்ற புதிய தேர்தல் தொகுதி சிங்களப்பேரின ரீதியாக உருவாக்கப்பட்டது. அதன் பின்னணியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட தமிழ்மக்கள் வாழ்ந்த மலையகக் காணிகளை அபகரித்து, பெரும்பான்மை இனத்தவருக்கு வழங்கும் சதியை அன்றைய அரசு மேற்கொண்டதால் வெடித்த போராட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவர்தான் சிவனு லெட்சுமணன் என்ற தொழிலாளி. அந்த டெவன் தோட்டப்போராட்டம் குறித்து கதைகள் எழுதப்பட்டுள்ளன. தி. ஞானசேகரன் எழுதிய குருதிமலை அந்தப்பின்னணியில் எழுதப்பட்ட குறிப்பிடத்தகுந்த நாவல்.
இனநெருக்கடி உச்சம் பெற்ற அந்தப்பிரதேசத்தில் பிறந்து இலக்கியப்பிரவேசம் செய்தவர்தான் அண்மையில் மறைந்துவிட்ட உபாலி லீலாரத்ன. ஆனால், அவரிடம் இனக்குரோதம் இருக்கவில்லை. அப்பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் – சிங்கள மக்களிடத்தில் தோன்றிய இனமுறுகளினால் அவருக்குக்கிடைத்த புத்திக்கொள்முதல் இன ஐக்கியம்தான். அங்கு நீண்டகாலம் வாழ்ந்தமையால், தமிழை பேசுவதற்கும் வாசிப்பதற்கும் கற்றுக்கொண்டார். ஆனால், தனது தனிப்பட்ட தேவைக்காக அவர் கற்கவில்லை. அவரிடத்தில் சமூகம் சார்ந்த ஆழமான பார்வை இயல்பிலேயே இருந்திருக்கிறது. மலையக தமிழ்மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டமையால்தான் அவரால் தே கஹட்ட – தேயிலைச்சாயம் என்ற நூலையும் எழுதமுடிந்தது. தனது தொடக்ககால வேலையை தலவாக்கலையில் ஒரு அச்சகத்தில் ஆரம்பித்திருக்கிறார். இங்கு மலையகத்தமிழ் மக்கள் செறிந்து வாழ்கிறார்கள். இங்கிருந்து நாடாளுமன்றத்திற்கும் பிரதிநிதிகள் தெரிவாகின்றனர். சி.வி. வேலுப்பிள்ளையிலிருந்து சந்திரசேகரனிலிருந்து இன்றைய மல்லியப்பூ திலகர் வரையில் அதனை நாம் அவதானிக்கலாம். உபாலி லீலாரத்ன பணியாற்றிய அச்சகத்தில் தமிழ்ப்பிரசுரங்களும் அச்சடிக்கப்பட்டமையால் அவரால், தமிழை எளிதாக புரிந்துகொள்ளவும் முடிந்திருக்கிறது. அதிர்ந்து பேசத்தெரியாதவர். அதனால் எளிமை அவரது இருப்பிடமாகியது. பின்னாளில் அவரது வாழ்க்கை தலைநகரில் மருதானையில் அமைந்துள்ள கொடகே புத்தகசாலையிலும் அதன்பதிப்பகம் சார்ந்தும் தொடங்கியதும் தென்னிலங்கையில் வசித்த தமிழ் – முஸ்லிம் எழுத்தாளர்களதும் நண்பரானார்.
மனக்குறள் 16: வேந்தரும் விளங்கும் பாடநூலும்
எண்ணங் கருகி இதயம் மடிசோர்ந்து
கண்ணில் உதிக்கும் கவி!
வேந்தனார் தன்னின் மிகுதமிழ் வண்ணமே
காந்தளாய்ப் பூக்கும் கழல் !
பிறந்த பொழுதிலே பெற்றவள் விட்டு
மடிந்தனள் வேந்தன் மகர்க்கு !
பேணி வளர்த்திட்ட பேரனார் நன்றியைக்
காணிக்கை யிட்டநூல் காழ் !
[ காழ்-வைரம், முத்துவடம், விதை ]
– இக்குறுநாவல் இலங்கையிலிருந்து எழுத்தாளர் தி.ஞானசேகரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் ‘ஞானம்’ சஞ்சிகையின் ஆகஸ்ட் 2019 இதழில் வெளியாகியுள்ளது. என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. சுமணதாஸ பாஸைப் பொறுத்தவரையில் ஒரு முக்கிய உண்மையைக் கூறத்தான் வேண்டும். வன்னிமண்ணில் நாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் எங்கள் வீட்டிற்கருகில் ஒரு சிங்கள பாஸ் குடும்பம் இருக்கத்தான் செய்தது. அந்த பாஸ் குடும்பத்தவர்கள் நாங்கள் அம்மண்ணிற்குப் போவதற்கு முன்பிருந்தே அம்மண்ணுடன் பிணைந்து வாழ்ந்து வந்தவர்கள். எங்களுடன் நெருங்கிப் பழகியவர்கள். சுக துக்கங்களில் பங்கு பற்றியவர்கள் ஒருமுறை எங்கள் வீட்டிற்கருகிலிருந்த குளமொன்றில் மூழ்கும் தறுவாயில் தத்தளித்துக் கொண்டிருந்த என்னையும், சாந்தா என்ற சிங்கள இளைஞனையும் துணிச்சலுடன் காப்பாற்றியவர் அந்த சிங்கள் பாஸ்தான். நாங்கள் 70களில் யாழ்ப்பாணம் திரும்பி விட்டோம் அதன்பிறகு எங்களிற்கும் அவர்களிற்குமிடையிலிருந்த தொடர்பு விடுபட்டுப்போனது. 1983 இலிருந்து மாறிவிட்ட நாட்டு நிலைமையைத் தொடர்ந்து, தமிழ் மக்களின் போராட்டம் கனன்றெரியத் தொடங்கி விட்டது. இந்தக் காலகட்டத்தில் விடுதலைக்காகப் போராடும் அமைப்பொன்றினால் அந்தச் சிங்கள பாஸ் குடும்பமே முற்றாக அழிக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். யார் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? வழக்கம்போல் பலவிதமான வதந்திகள், ஊகங்கள். அந்த சிங்கள பாஸ்தான் ‘சுமணதாஸ பாஸாக’ இக்கதையில் உருப்பெற்றிருக்கின்றார். நான் இன்று உயிருடன் இருப்பதற்குக் காரணமானவர் அந்தச் சிங்கள பாஸ். அதனை என்னால் ஒரு போதுமே மறக்க முடியாது. – வ.ந.கிரிதரன் –
1.
சிந்தனையில் மூழ்கிவிடும் போதுதான் எவ்வளவு இனிமையாக, இதமாக விருக்கின்றது. மெல்ல இலேசாகப் பறப்பதுபோல் ஒரு வித சுகமாகக் கூடவிருக்கின்றது. எனக்கு இன்னமும் சரியாக ஞாபகமிருக்கின்றது. 1963ம். ஆண்டு மாரிகாலம் தொடங்கி விட்டிருந்தது. என் பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். அப்பா ஆங்கில வாத்தி, அம்மா தமிழ் டீச்சர். இருவரிற்குமே வவுனியாவிற்கு மாற்றலாகியிருந்தது. அம்மாவிற்கு வவுனியா மகாவித்தியாலயத்திற்கும் அப்பாவிற்கு நகரிலிருந்த இன்னுமொரு பாடசாலைக்கும் மாற்றல் உத்தரவு கிடைத்ததுமே அப்பா முன்னதாக வவுனியா சென்று, வாடகைக்கு வீடு அமர்த்திவிட்டு வந்திருந்தார். வீட்டுச் சாமான்களையெல்லாம் ஏற்றி வர ஒரு லொறியை ஏற்பாடு செய்துவிட்டு அப்பா லொறியுடன் வர, நானும் அம்மாவும் அக்காவும் தம்பியும் மாமாவுடன் சோமர் செட் காரொன்றில் வன்னி நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது எனக்கு வயது ஐந்துதான். அந்தப் பயண அனுபவம் இன்னமும் பசுமையாக நெஞ்சில் பதிந்து கிடக்கின்றது. முதன் முதலாக பிறந்த இடத்தை விட்டு இன்னுமொரு இடத்திற்கான பயணம். நெஞ்சில் ஒருவித மகிழ்ச்சி, ஆர்வம் செறிந்து கிடந்தது. கார் பரந்தன் தாண்டியதுமே வெளியும், வானுமாகத் தெரிந்த காட்சி மாறிவிட்டது. சுற்றிவரப் படர்ந்திருந்த கானகத்தின் மத்தியில் பயணம் தொடங்கியது.
வன்னி மண்ணின் அழகு மெல்ல மெல்ல தலைகாட்டத் தொடங்கிவிட்டது. மரங்களிலிருந்து செங்குரங்குகளும், கறுத்த முகமுடைய மந்திகளும் எட்டிப் பார்க்கத் தொடங்கி விட்டன. பல்வேறு விதமான பட்சிகள் ஆங்காங்கே தென்படத் தொடங்கி புதிய சூழலும், காட்சியும் என நெஞ்சில் கிளர்ச்சியை ஒருவித ஆவலை ஏற்படுத்தின. பயணத்தை ஆரம்பித்த பொழுது இருண்டு கொண்டிருந்த வானம், இடையிடையே உறுமிக் கொண்டிருந்த வானம், நாங்கள் மாங்குளத்தைத் தாண்டியபொழுது கொட்டத் தொடங்கிவிட்டது. பேய் மழை அடை மழை என்பார்களே அப்படியொரு மழை, சூழல் எங்கும் இருண்டு, ‘சோ’ வென்று கொட்டிக்கொண்டிருந்த மழையில் பயணம் செய்வதே பெரும் களிப்பைத் தந்தது. அன்றிலிருந்து கொட்டும் மழையும் அடர்ந்த கானகமும் பட்சிகளும் எனக்குப் பிடித்த விடயங்களாகிவிட்டன. ஒவ்வொரு முறை மழை பொத்துக் கொண்டு பெய்யும் போது, விரிந்திருக்கும் கானகத்தைப் பார்க்கும்போதும், அன்று முதன்முறையாக வன்னி நோக்கிப் பயணம் செய்த பொழுது ஏற்பட்ட அதேவிதமான கிளர்ச்சி, களிப்பு கலந்த உணர்வு நெஞ்சு முழுக்கப் படர்ந்து வருகின்றது. பேரானந்தத்தைத் தந்து விடுகின்றது.
இந்திய சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழகத்தின் நாகர்கோயிலில் விருட்சமாக வளர்ந்து நின்ற ஒரு புளியமரத்தைச்சுற்றி நிகழும் கதையை இற்றைக்கு ஐம்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னவர் சுந்தரராமசாமி. இக்கதை விஜயபாஸ்கரன் சிறிது காலம் நடத்திய சரஸ்வதி இதழில் தொடராக சில அத்தியாயங்கள் வௌிவந்தது. சிற்றிதழ்களுக்கு வழக்கமாக நேர்ந்துவிடும் இழப்பிலிருந்து அந்த சரஸ்வதியும் தப்பவில்லை. அதனால், சுந்தரராமசாமி அதனை முழுநாவலாகவே எழுதி முடித்து 1966 இல் வெளியிட்டார். அதன் முதல் பிரதி வெளியானபோது கல்கி இதழில் சிறந்த நாவல்களின் வரிசையில் ஒரு புளியமரத்தின் கதை பற்றிய சிறிய அறிமுகத்தை படித்திருக்கின்றேன். அப்பொழுது நான் பாடசாலை மாணவன். உடனே அதனை கொழும்பில் வாங்கி வாசித்தேன். அதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள், காட்சிகள் மனதில் மங்கிப்போன சித்திரமாகவே வாழ்ந்தன. அதில் வரும் ஆசாரிப்பள்ளம் சாலையை ஏனோ மறக்கமுடியவில்லை.
அதன்பின்னர் சுந்தரராமசாமியின் கதைகள், நாவல்கள், கட்டுரைகளையும் நேர்காணல்களையும் படித்திருந்தாலும், அவரது முதல் நாவல் ஒரு புளியமரத்தின் கதை கனவாகவே மனதில் நீண்டிருந்தது. மெல்பன் வாசகர் வட்டத்தை கடந்த இரண்டு வருடகாலமாக ஒருங்கிணைத்துவரும் தீவிர இலக்கிய வாசகி திருமதி சாந்தி சிவகுமார், தொலைபேசியில் அழைத்து, “இந்த மாதம் சு.ரா.வின் புளியமரத்தின் கதை பற்றி பேசப்போகின்றோம் “ எனச்சொன்னதும் வியப்படைந்தேன்.
அரைநூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட நாவல், பல பதிப்புகளையும் கண்டது. அத்துடன் இந்திய மொழிகளிலும் ஒரு சில பிறநாட்டு மொழிகளிலும் பெயர்க்கப்பட்டதுடன், நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கத்தக்க நாவல் என்று சிலாகித்தும் பேசப்பட்டது. மெல்பன் வாசகர் வட்டத்தின் இரண்டு ஆண்டு நிறைவைக்கொண்டாடுமுகமாக கடந்த ஞாயிறன்று வாசகர்களின் ஒன்றுகூடல் இடம்பெற்றது. இலக்கியப்பிரதிகளை அயராமல் தொடர்ந்து வாசித்து, தங்கள் அனுபவங்களை பகிர்ந்துவரும் தீவிர வாசகர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் வருகை தந்திருந்தனர்.
மிலேனியம் வருடத்திற்கு முன்பின்னாக பிறக்கும் ஒருவர் வாசகராகும் பட்சத்தில், அது என்ன ஒரு புளியமரத்தின் கதை..? அந்தமரத்தில் என்ன இருக்கும்? அது எப்படி வளரும் ? அதன் பயன்பாடு என்ன ? தாவரவியல் பாடத்திற்கான எளிய விளக்கங்களுடன் அமைந்த நூலா..? எனவும் கேட்கவும் கூடும்!
– 24-06-2019 அன்று மகாஜனக்கல்லூரியில் எழுத்தாளர் குரு அரவிந்தன் நிகழ்த்திய மகாஜனக்கல்லூரி நிறுவியவர் நினைவுதின நினைவுப் பேருரையில் இருந்து ஒரு பகுதியை இங்கே தருகின்றேன் –
வணக்கம். எனது உரையை ஆரம்பிக்கு முன், கனடாவில் மகாஜனா பழைய மாணவர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களாக இருந்து எம்மை வழி நடத்தியவர்களும், மகாஜனன்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்து எம்மைவிட்டுப் பிரிந்தவர்களுமான முன்நாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்களுக்கும், சமீபத்தில் எம்மைவிட்டுப் பிரிந்த ஆசிரியர் திரு. எம். கார்த்திகேசு அவர்களுக்கும், மற்றும் எம்மைவிட்டுப் பிரிந்த அனைவருக்கும் அகவணக்கம் தெரிவித்து எனது உரையை ஆரம்பிக்கின்றேன்.
‘கல்லூரித் தாபகர் கல்விக் கலைஞன்
துரையப் பாபுகழ் துதிப்போம்’
இந்த வரிகள் எங்கள் வாழ்வோடு கலந்துவிட்ட, காலத்தால் அழிக்க முடியாத மகாஜனன்களின் இதயத்தில் பதிந்து விட்டதொன்றாகும். இன்று ஆயிரக் கணக்கான மாணவ, மாணவிகள் திக்கெல்லாம் மகாஜனாவின் புகழ்பரப்ப அன்று அடிக்கல் நாட்டியவர்தான் எங்கள் கல்விக் கலைஞன் பாவலர் துரையப்பாப்பிள்ளையாவார்.
இந்தப் பாடல் வரிகளைக் கல்லூரிக் கீதத்தில் எமக்காக விட்டுச் சென்றவர், எமக்குத் தமிழ் அறிவைத் தந்து தமிழ் உணர்வைப் புகட்டிய எமது ஆசான், அமரர் வித்துவான் நா. சிவபாதசுந்தரனராவார். கல்லூரியில் படித்த காலத்தில் மட்டுமல்ல, இன்றும் கனடாவில் பழைய மாணவர் சங்க நிர்வாகசபை கூட்டங்களிலும் சரி, ஏனைய நிகழ்ச்சிகளின் போதும் சரி நிகழ்ச்சி தொடங்கும் போது, கல்லூரிக் கீதத்தை நாங்கள் இசைப்போம். அனேகமான நாடுகளில் இருக்கும் பழைய மாணவர் சங்கங்கள் எமது கல்லூரிக் கீதத்தின் மூலம் கல்லூரி வாழ்க்கையின் நினைவுகளை எப்பொழுதும் மீட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். எமது நினைவுகள் எல்லாம் நாம் கல்விகற்ற கல்லூரியைச் சுற்றியே இருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பார்ப்பதுண்டு. ‘பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் உங்கள் கல்லூரியை இங்கே இப்பொழுதும் நினைவில் வைத்திருக்கிறீர்களா?’ என்று இன்றைய தலைமுறையினர் எங்களைக் கேட்பார்கள். அவர்களுக்குப் புரியுமோ இல்லையோ, ‘எம்மை வளர்த்து ஆளாக்கிய அன்னையை எங்களால் மறக்க முடியுமா?’ என்ற பதில்தான் அவர்களுக்காக எம்மிடம் இருக்கும்.
சமூக மேன்மைக்கான கலை, இலக்கியங்களின் பெறுமதியை மகாஜனன்களுக்கு உணர்த்திய கல்லூரி ஸ்தாபகர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட எங்கள் கலை, இலக்கியப் பயணம் புலம் பெயர்ந்த மண்ணிலும் இன்று ஆரோக்கியமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்த நாடுகளில் எங்கே கலை இலக்கிய விழாக்கள் நடந்தாலும் அங்கே கட்டாயம் குறைந்தது ஒரு மகாஜனனின் பங்களிப்பாவது இருப்பதை அவதானிக்கலாம். எங்கள் கல்லூரிக்கு அந்த நிகழ்வுகள் எப்பொழுதும் பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கும்.