ஆய்வு: பண்டைய இலக்கியங்களில் நன்னன் சேய் நன்னனின் மூதூர்ச் சிறப்பு

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -நன்னன் சேய் நன்னனுடைய பழமையான ஊர் செல்வம் நிறைந்து உயர்ந்து ஓங்கிய மதில்களை உடையது. அவ்வூரினின்றும் பெயர்தலை அறியாத பழங்குடிகள் வாழும் ஊர் அகன்ற இடமாயினும் போதுமான இடமில்லாத நிலைபோன்று சிறந்த பெரிய அங்காடித் தெருக்கள் நடைபெறுவது போன்று எப்போதும் இருக்கும். பகைவர் செல்ல அஞ்சும் பல குறுந்தெருக்களும் உள்ளன. ஊர்மக்கள் ஆரவாரம் கடல் போன்றும் மாடங்கள் உயர்ந்து ஓங்கி நிற்கும். அவ்வூரில் வாழ்வோர் வெறுப்பில்லாமல் விருப்பத்துடன் வாழ்வர். குளிர்ந்த பெரிய சோலைகளில் வண்டுகள் ஒலித்துக் கொண்டிருக்கும். அவனுடைய பழமையான வெற்றியையுடையது மூதூர் ஆகும் என்பதைப் பின்வரும் பாடல் வரிகள் காட்டுகின்றன:   

நிதியம் துஞ்சும் நிவந்துஓங்கு வரைப்பின்
பதிஎழல் அறியாப் பழங்குடி கெழீஇ
வியல்இடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து
யாறுஎனக் கிடந்த தெருவின் சாறுஎன 
இகழுநர் வெரூஉம் கவலை மறுகின்
கடலெனக் காரென ஒலிக்கும் சும்மையொடு
மலையென மழையென மாடம் ஓங்கித்
துனிதீர் காதலின் இனிதமர்ந்து உறையும்
பனிவார் காவின் பல்வண்டு இமிரும்
நனிசேய்த் தன்று அவன் பழவிறல் மூதூர்
(பெரும்பாண்.478 – 487).

அவன் தன்னுடன் மனம் பொருந்தாத பகைவரின் கரிய தலை வெட்டுண்டு வீழ, அதைப் பருந்துகள் உண்ண அலையும் போர்க்களத்தில் வெற்றி பெறும் மறவர், தம் கரிய காம்பினையுடைய வேல்கள் சாத்தப் பெற்ற கதவினையுடைய வாயிலைப் பிறர் ஐயுறாது, அஞ்சாமல் புகுவர். இங்கு நன்னனின் பெரிய அரண்வாயில் காணப்பட்டுள்ளது என்பதைப் பின்வரும் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன:

பொருந்தாத் தெவ்வர் இருந்தலை துமியப்
பருந்துபடக் கடக்கும் ஒள்வாள் மறவர்
கருங்கடை எஃகம் சாத்திய புதவின்
அருங்கடி வாயில் அயிராது புகுமின், 
(மலை.க.488 – 491).

Continue Reading →

ஆய்வு: பெண் விடுதலை பாடிய பாரதியார்!

 - செ.யோகம், தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர். -காலந்தோறும் அறங்கள் புதுப்பிக்கப்பெறுகின்றன. பழைமையில் பிடிப்புள்ளவர்கள்> புதுமையை விரும்புகிறவர்கள் பழைமைக்கும் புதுமைக்கும் இடையில் தத்தளிப்பவர்கள் என்று குழம்பிக் குழம்பித்தான் சமுதாயம் வளர்ந்து கொண்டிருக்கிறது.  குடும்ப வாழ்வில் ஆணுக்கு இருக்கிற உரிமையும் சமுத்துவமும் பெண்களுக்கு இன்றைக்கு இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் பழங்காலத்தில் அப்படி இல்லை. ஆண் சொல்வதைத் தான் பெண் கேட்டு நடக்க முடியும்.  குடும்பத்தில் பெண்ணைக் கலந்தாலோசித்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலை இருந்தது. குடும்பத் தலைவனாகிய ஆண் சொல்வதே முடிவு.  அதை எவராலும் மாற்ற முடியாது.

இவற்றுக்கு எல்லாம் மேலாக கணவன் இறந்த பின் மனைவி உயிரோடு இருக்கக் கூடாது என்று ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது.  அவ்வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்கப்பட்டது.  ஆனாலும் கணவனை இழந்த பெண்கள் எவ்வளவு சிறு வயதாக இருந்தாலும் அவர்களுக்கு மொட்டையடித்து வெள்ளை ஆடை உடுத்தி, உணவு முறைகளையும் மாற்றி எங்கும் வெளியில் விடாமல் கொடுமைப்படுத்தி வைத்திருந்தனர்.  ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதற்கேற்ப பெண்களைக் கொடுமைப்படுத்தும், இழிவுபடுத்தும் இந்த முறைகளை எல்லாம் மாற்றி, அவர்களுக்கு நல்லாழ்வளிக்க வேண்டுமென்று பல தலைவர்களும், கவிஞர்களும் போராடினார்கள்.

பெண் விடுதலைக்காகத் தன்னுடைய கவிதைகள், சிறுகதைகள் மூலம் போராடியவர்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர் நம் புரட்சிக்கவி பாரதியார்.  கற்பென்றாலே அது பெண்ணுக்கு மட்டுமே உரியது எனக் கூறிய சமுதாயத்தில்,

“கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும், அஃது பொதுவில் வைப்போம்”

என்று உரக்கப் பாடியவர் பாரதியார்.  எந்தவொரு மூடக் கட்டுப்பாட்டையும் தகர்க்க நினைக்கும் போது பல இடையூறுகள் வரும்.  ஆனால் அதையெல்லாம் தாண்டி பாரதி பெண்களுக்கு விடுதலை கொடுப்பதின் ஆரம்ப நிலையாக சில கருத்துக்களை முன் வைக்கிறார்.

“பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.  விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனைவிட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவனை அவமானப்படுத்தக் கூடாது.  பிதுரார்ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு ஸமபாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது.  விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும். பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக்கூடாதென்றும் பழகக்கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும். பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.  தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது.  சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்ஜியம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்.  இங்ஙனம் நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள் காட்டினோமானால் பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள்” என்று உறுதி கூறுகிறார் பாரதியார்.

Continue Reading →

(ஆய்வு) புறநானூற்றில் மனிதவளம் மேம்பாடு

  - முனைவர் பெ.கி.கோவிந்தராஐ, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி 635 752 -முன்னுரை
இந்த உலகத்தில் நிலைப்பெற்றுள்ள அனைத்து வளங்களையும் நுகரவும், உணரவும் தேவையான பிறிதொரு வளம் மனித வளமாகும். இம்மனித வளமானது மனிதனின் ஆக்கத்திறனை அல்லது தனித்திறனை அவனுடைய வாழ்க்கை மேம்பாட்டிற்கு மற்றம் சமுதாய மேம்பாட்டிற்குப் பயன்படுத்தும் நோக்கமாக அமைகின்றது. இதனை மனிதவள மேம்பாட்டுச் சிந்தனையாளர்கள் “ஒரு பொருளாதார முன்னேற்றம் என்பது அந்நாட்டு மக்களின் சக்தியைச் சார்ந்துள்ளது.”1 இவை கல்வி, அரசியல், தொழில் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சியாக மதிக்கப்படுகிறது. எனவே ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது இயற்கை வளத்தை மட்டும் சார்ந்து அமையாது. மனிதவளத்தையும் சார்ந்தே அமைகின்றது. இதனை ஒளவையார்,

“நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”2

என காட்டிச் செல்கிறார். இதன்வழி ஒரு நாட்டின் வளம் என்பது அந்நாட்டு மக்களின் மனவளம் சார்ந்த கருத்தியலாக அமைகின்றது. இவை ஒரு நாட்டின் அரசியல் செயல்பாடும் கல்வியியற் சிந்தனையும் சீராக அமையும்போது ‘மனநலம் மன்னுயிர்க் காக்கும்’ என்ற கருத்து வலிமைபெறும். இவ்விதக் கருத்து மனிதவள மேம்பாட்டில் ஊக்கம் அளிக்கும்விதமாக அமைந்துள்ள இடத்தினை, மனித வாழ்வின் அனுபவ உணர்வுகளின் வெளிப்பாடுகளை பிரதிபலிக்கும் இலக்கியத்தின் ஊடாகக் காண முற்படுவதாக இவ்வாய்வு அமைகிறது.

மனிதவள மேம்பாடு
ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு  மனிதவள மேம்பாடு அவசியம் என்ற கருத்து தேவைப்படுகிறது. இது தனிமனிதனின் ஆற்றலை மையமாகக் கொண்டு இயங்குவதாகும். எனவே “தனிப் பட்ட மனிதனின்  திறமை என்பது மக்கள் தொகையால் உருவாக்கப் பட்ட சமூக நடைமுறையைச் சார்ந்தே இருக்கிறது.”3 இவ்வகையில் மனிதன் அவன் வாழும் நாட்டின் இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் தன்வயப்படுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து பயன்படுத்துவதற்கான ஆக்கத்திறனை வளர்த்துக்கொள்வதாகிய செயல்பாட்டு நிலையே  மனிதவள மேம்பாடாக அமைகின்றது. இவ்வகை ஆற்றல் அமைவதற்கான புறநிலைத் தன்மையை அவன் வாழும் சமூகத்திலிருந்தே பெறவேண்டியுள்ளது. இதனிலிருந்து ஏற்படுத்திக் கொள்ளும் வாழ்க்கையை“மனிதன் தனியாக அல்லது குழுவாக இயைந்து செயல்பட்டு தனது படைப்புத் திறனால் தானும் முன்னேறி தன்னைச் சேர்ந்தவர்களும் முன்னேறி உதவுதலாகிய செயல்பாடாக”4 அமைத்துக்கொள்கிறான். இவ்விதச் செயல்பாடு ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உந்துசக்தியாக அமைகின்றது. பொதுவாக மனித இனத்தின் நல்வாழ்வுக்கும் முன்னேற்றத்திற்கும் பல ஆக்க காரணிகள் காணப்படுகின்றன. இவற்றில் புறநானுற்றில் காணப்படும் ‘கல்வி’ குறித்த கருத்து நிலைகளும், மன்னுக்குப் புகட்டும் அறிவுரைகளும் மனிதவள மேம்பாடு குறித்த கருத்தியல் கூறாக அமைந்துள்ள விதத்தினை அறியப்படுவதாக இது அமைகிறது.

Continue Reading →

ஆய்வு: முத்தொள்ளாயிரத்தில் தற்குறிப்பேற்றம்

- முனைவர்(திருமதி).ஜெ.காவேரி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி,விருதுநகர். -தமிழர் தம் இலக்கிய மாளிகையை அலங்கரிக்கும் இலக்கிய வகைகள் எண்ணற்றவை. அவற்றுள் சிற்றிலக்கிய வகைகள் குறிப்பிடத்தக்கவை. தமிழ்நாட்டின் ஒப்பற்ற போர் வேந்தர்களாம் சேர, சோழ, பாண்டியர்களின் தன்னிகரில்லாப் புகழினைப் பறை சாற்றும் விதமாய் அமைந்திருப்பது முத்தொள்ளாயிரம்;. இதில் வேந்தர்களின் பெருமைகளை ஆசிரியர் அக, புறப் பாடல்களால் வெளிப்படுத்தியுள்ளார்

முத்தொள்ளாயிர இலக்கியம் கருத்தாற்றலாலும், கற்பனையாற்றலாலும், சொல்லாற்றலாலும் சிறப்புற்று விளங்குவது. மொழியின் அழகினை விளக்கும் அணியிலக்கணங்கள் இதில் பல பயின்று வந்துள்ளன. அவற்றுள் புலவரின் குரலாக ஒலிக்கும் தற்குறிப்பேற்ற அணி சிறப்பானதாகும். 

தற்குறிப்பேற்றம்
உலகில் இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது, கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிப் பாடுவது தற்குறிப்பேற்ற அணியாகும். இதன் இலக்கணம் குறித்து தண்டியலங்காரம் பின்வருமாறு கூறுகின்றது.

“பெயர் பொருள் அல்பொருள் எனஇரு பொருளினும்
இயல்பின் விளை திறனன்றி அயலொன்று
தான் குறித்தேற்றுதல் தற்குறிப் பேற்றம்”(தண்டி-56 )

இத்தகைய தற்குறிப்பேற்ற அணியானது இலக்கியங்களில் புலவர் கூற்றாக இலக்கியத்தில் வரும் மாந்தர், பொருள் போன்றவற்றின் சிறப்பினை எடுத்துரைக்கும் முகமாய் காணப்படும்.

முத்தொள்ளாயிரத்தில் தற்குறிப்பேற்றம்
முத்தொள்ளாயிர இலக்கியம் கற்பனையாற்றல் வளத்தால் சிறப்புற்று, ஒப்பற்று விளங்கும் ஓர் இலக்கியமாகும்.  அன்றாட வாழ்வில் நாம் காண்பவை ஆயிரம் ஆயிரம் நிகழ்ச்சிகள். ஆனால் அவற்றிற்கு கற்பனை என்னும் உயிர் கொடுத்துக் கவிதையாக்கும் போது அது இறவாப் புகழுடைய இலக்கியமாகின்றது. நாம் இவ்வவுலகில் இயல்பாகக் காணும் இயற்கைக் காட்சிகள் முத்தொள்ளாயிரப் புலவரின் கற்பனையில் இருந்து முற்றிலும் மாறானவை, புதுமையானவை. ௨லகில் நடக்கும் இயல்பான காட்சிகள் புலவருக்கு மன்னனின் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றன. அவ்வகையில் முத்தொள்ளாயிரப் பாடல்களில் பயின்று வரும் தற்குறிப்பேற்ற அணி குறித்து ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

வானவில்லின் திருக்கோலம்
அண்ணாந்து பார்க்கின்றான் புலவன். வானில் வர்ணங்களின் ஜாலமாம் வானவில் தோன்றி காணப்படுகின்றது. அதனைக் கண்ட புலவன், சேரனுக்கு அஞ்சித் தான் விண்ணோரும் சேரனின் கொடியாம் விற்கொடியினைக் கவினுற வரைந்து வைத்துள்ளனர் என்று எண்ணுவதாய்,

Continue Reading →

ஆய்வு: திருவள்ளுவரின் கடலியல் நுண்ணுர்வு

- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -ஆய்வு நோக்கம் (Objectives)
சங்கப் புலவர்கள், அக்காலத்தில் மக்கள் வாழ்வியலில் நன்கறிந்திருந்த பொருட்களைக் கொண்டு, அரியாதவற்றை அறிவித்தற்கு, அறிந்தபொருள்களை ஆண்டுள்ளனர். சங்கத் தமிழர்கள் கடலியல் அறிவினை மிகச் சிறப்பாகப் பெற்றிருந்தனர். இதனால் கடலும், கடல்சார்ந்த வாழ்வியலும் அவர்களிடையே இரண்டறக் கலந்திருந்தது. அவ்வகையில் திருவள்ளுவரின் கடலியல் அறிவுநுட்பம் குறித்தும், அதனைப் பாடலின் கருத்தினை விளக்குவதற்குப் பொருத்தமுறப் பயன்படுத்தியுள்ள பாங்கினைக் குறித்தும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

கருதுகோள் (Hypothesis)
திருவள்ளுவர் நிலம், மண், நீர், மலை, கடல் முதலானவற்றின் இயற்கையியல் அறிவு கைவரப்பெற்றவர். அவரது இயற்கையியல் அறிவின்நுட்பம் திருக்குறளின் காட்சிப்பொருள் விளக்கத்திற்கு மட்டுமல்லாது, அறக்கருத்துரைக்கும் துணைபுரிந்துள்ளது பெருந்துணை புரிந்துள்ளது என்பதே இக்கட்டுரையின் கருதுகோள் ஆகும்.

கருவிச்சொற்கள் (keywords)
கடல், பிறவிப்பெருங்கடல், நெடுங்கடல், காமக்கடல். நாமநீர்…

முன்னுரை
சங்க இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவை இயற்கை சார்ந்த வாழ்வியல் மரபுகளைக் கொண்டுள்ளமையே. சங்க கால வாழ்வியலில் இயற்கை மனித வாழ்க்கையின் எல்லாத் தளங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தது. இயற்கையைத் தவிர்த்த வாழ்க்கையை அவர்களால் எஞ்ஞான்றும் மேற்கொள்ள இயலவில்லை. இதன்பொருட்டே புலவர்கள் இயற்கைக்கு மிக முக்கியமான இடத்தைத் தந்து பாடல்களைப் படைத்தளித்தனர். இயற்கையியல் அறிவும், இயற்கையில் தோய்ந்த உள்ளமும் சங்கப் புலவர்கள் பெற்றிருக்க வேண்டிய அறிவுப்புலமாக இருந்துள்ளது. இவ்வாறு இயற்கையை மிகநுணுக்கமாகப் பதிவு செய்த புலவர்களை இன்றும் போற்றி நிற்கும் மரபினைக் காணலாம். சங்கச் சமூகத்தில் நிலவிய இயற்கையியல் அறிவும், இயற்கையியலின்வழி வெளிப்படுத்தப்பட்ட பாடுபொருள் தளமும் அற இலக்கியங்களின் படைப்பாக்கத்திற்கு அடிப்படை அலகாக அமையவில்லை. தூய்மையான அறிவுரைத் தரும் போக்கில் அமைந்த அறநூல்களில் இயற்கையியல் அறிவு புலவர்களுக்கு இரண்டாம் நிலையினதாகவே இருந்துள்ளது. இதனை மடைமாற்றம் செய்யும் நோக்கில் அறிவுரை புகட்டுவதற்கும் இயற்கையை ஒரு கூறாகப் படைத்துக் காட்டியவர் திருவள்ளுவர் என்பது அவரது நூலின்வழி புலனாகக் காணலாம். அறநூல்களில் தலையானதாகத் திகழும் திருக்குறளில் இயற்கைப் பொருட்களில் ஒன்றான கடல் பற்றியும் அதனைப் பொருள்விளக்கத்திற்குக் கையாண்ட திருவள்ளுவரின் அறிவுநுட்பம் குறித்தும் இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றது.

சங்க வாழ்வில் கடலியல் அறிவு
சங்கத் தமிழர்கள் நீரியல் அறிவுச் சிந்தனையை மிகச்சிறப்பாகப் பெற்றிருந்துள்ளனர். மனித வாழ்வியலுக்கு மிக முக்கியத் தேவையான ஒன்றாக நீர் அமைந்திருப்பதனை அறிந்த்தன்வழி, அதனைத் திறம்பட மேலாண்மை செய்வதற்கும், தேவைப்படும் காலங்களில் அந்நீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்துவதற்குமான அறிவினைக் கைவரப் பெற்றிருந்தனர். இதேபோன்று சங்க மக்கள் வாழ்வில் கடலியல் வாழ்வு மிக முக்கியமான இடத்தினைப் பெற்றிருந்துள்ளது. நாம் வாழும் உலகம் கடலால் சூழப்பட்டது. கடலும் கடல் சார்ந்த வாழ்வும் நெய்தல் நிலமாகக் கருதப்பட்டு, கடலியல் செல்வங்களைக் கொண்டு வாழும் வாழ்க்கை முறை சங்கத் தமிழர்களிடத்தில் பெருவழக்காக இருந்துள்ளது. இதன்பொருட்டே பூமிப்பரப்பில் பெருமளவினதாக அமைந்திருக்கும் கடலைப் பற்றி சங்கப் புலவர்கள் மிகச்சிறப்பாக அறிந்து வைத்திருந்ததோடு, அதன் தன்மைகளையும், சிறப்புகளையும், பெருமைகளையும் உணர்ந்திருந்து, பாடற்புனைவில் கடலுக்கும், கடல்சார் வாழ்வியலுக்கும் மிகச்சிறப்பான இடத்தினைத் தந்துள்ளனர்.

Continue Reading →

ஆய்வு: எட்டுத்தொகை முன்னிறுத்தும் முருகன் செய்திகள்!

ஆய்வு: எட்டுத்தொகை முன்னிறுத்தும் முருகன் செய்திகள்!

முன்னுரை
சங்கப் பாக்களைத் தொகுத்தார் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பிரிப்பை அமைத்தனர். பத்துப்பாட்டில் இடம்பெறும் பாடல்கள் நூல்களில் தொகுப்பாக அமையும். எட்டுத்தொகைப் பாடல்கள் தனிநூலாக இல்லாது உதிரிப்பாடல்களின் தொகுப்பாக அமையும்.

“நற்றிணை நல்லகுறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்குபரிபாடல்- கற்றறிந்தார் 
ஏத்தும் கலியொடு அகம்புறம் என்ற 
இத்திறந்த எட்டுத்தொகை” என்பதோர் நுற்பா. 

அகமும், புறமுமாய் அமைகின்ற நூல்கள் இவை. இந்த எட்டு நூல்களில் முருகனைப் பற்றிய செய்திகள் பலவகைகளில் இடம்பெற்றுள்ளன. அவற்றை உட்தலைப்பிட்டுப் பகுத்துப் பார்த்தல் பயன்பலதரும். அதனையே இக்கட்டுரை மேற்கொள்கிறது. 
சங்ககாலம் முதலே முருகன் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன. தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூலாக விளங்கும் தொல்காப்பியம் முருகனைச் “சேயோன்” என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளது. இதனை முருகனைப் பற்றிய முதற்பதிவாகக் கொள்ளலாம். சங்கப் பாக்களில் முருகப்பெருமானின் பிறப்புமுறை, தோற்றப்பொலிவு, பெயரீடுகள், ஊர்திகள், கொடிகள், ஆயுதங்கள் மற்றும் தொன்மச் செய்திகள் போன்றவை இலக்கியங்களில் எடுத்தாளப்பெற்றுள்ளமை பற்றியும், முருகனின் ஆறுபடை வீடுகளின் சிறப்புகள் பற்றியும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது. 

பெயரீடுகள்
சங்க இலக்கியங்களில் முருகனைக் குறித்து வழங்கும் பெயர்கள் மிகுதி. இப்பெயர்கள் அனைத்தும் அவற்றின் சூழல்களின் அடிப்படையில் வெவ்வேறாக அமைகின்றன. முருகனைக் குறித்து (முருகனுக்குரிய) பெயர்களாகச் சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, கடவுள், மலைவான், விறல்வேள், மலைஉறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் போன்றவை சுட்டப்படுகின்றன. பதிவுகள் சில வருமாறு:

Continue Reading →

ஆய்வு: செவ்விலக்கியங்களில் சீரிளம் பெண்மை

-  முனைவர் கி.இராம்கணேஷ், உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,  ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி.-642107.முன்னுரை
மானிடப்பிறவியில் மகத்துவம் வாய்ந்த பிறவியாகச் சிறப்புடன் கூறப்பட்டு,காலங்காலமாய் கண்ணைக்காக்கும் இமைபோல, இல்லறத்தை நல்லறமாக நடாத்தும் பெண்மை போற்றத்தக்கது. போற்றுதற்குரிய பெண்மையைச் செவ்விலக்கியங்களின் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

அகமும் புறமும்

சங்ககால மக்களின் வாழ்வியலை அகம்,புறம் என இரண்டாகச் சான்றோர் பாகுபடுத்தினர். இதில் அகமாக அமைவது வீடு; புறமாக அமைவது நாடு எனக் கொள்ளலாம். காதலும் வீரமும் எனக் குறிப்பிடினும் சாலப் பொருந்தும். வீடு சிறந்தால் நாடு சிறக்கும் என்ற முதுமொழியை கூர்மதி கொண்டு காணும் போது, பெண்மை சிறந்தால் ஆண்மை சிறக்கும் என்பதை உணரலாம். ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து, நன்மக்களைப் பெற்று, சுற்றந்தழுவி, அறம் பல செய்து வாழ்வதையே வாழ்க்கையின் குறிக்கோளாய்க் கருதி வாழ்ந்தனர்.

“ஆணுக்குப் பெண் இளைப்பில்லை”
“ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம்”

என்பதைப் பாட்டுக்கொரு புலவன் பாரதி பாட்டால் அறியலாம். ஆணும் பெண்ணும் சமம் என்பதை சரி, நிகர்,சமானம் என்ற மூன்று வார்த்தைகளில் ஆணித்தரமாக பதிவேற்றிய நிலை மனங்கொளத்தக்கது.

மனை விளக்கு
ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த இடத்தைப் பெறினும் மனைக்குத் தேவையான மனைவியைப் பெறாதவனாயின் அவன் வாழ்வு சிறப்படையாது. இருளை ஓடச் செய்யும் ஒளி பொருந்திய விளக்குப் போல மனைக்குரியவளாக மனைவி திகழ்கின்றாள்.

“ மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்,
முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை             
நடுகல் பிறங்கிய உவல்இடு……”
(புறம் – 314)

“ மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே…..”
(நான்மணிக்கடிகை- 105)

மேற்கூறிய பாடல்கள் வீட்டிற்குத் தேவையானவள் மனைவி என்பதைப் பெருமையுடன் கூறியுள்ளன. மனைவி இருந்தால்தான் அது மனை என்பதை செவ்விலக்கியங்கள் செம்மையாக உணர்த்தியுள்ளன.

Continue Reading →

ஆய்வு: தொல்தமிழர் நாகையும் நாகூரும்

முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113நாகை மாவட்டம் ஆன்மீகத்திலும் தொன்மைச் சிறப்பிலும் பேறுபெற்ற ஓர் பகுதியாகும். இங்குள்ள நாகூரும் நாகையும் பிரிக்க முடியாத அங்கமாகத் திகழ்கிறது. நாகூர் ஓர் இசுலாமியத் தலமாக இருப்பினும் அனைத்துச் சமயத்தினருக்கும் பொதுமையாக விளங்கி வருவது இதன் தனிச்சிறப்பாகும். தமிழுக்கும் இசுலாத்திற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பு இருந்து வருகிறது. ஈசாநபி சகாப்தம் ஆரம்பமாவதற்கு முன்பிருந்தே அராபிய வர்த்தகர்களுக்கும் தென்னிந்தியா, இலங்கை, சீனா போன்ற கீழைத் தேயங்களுக்கும் இடையிலான தொடர்பு ஆரம்பமாகிவிட்டது என்பதனை வரலாற்றாசிரியர்கள் நிறுவுகின்றனர். (நூர்மைதீன், வ.மு.அ. (உ.ஆ) நெஞ்சையள்ளும் நாகையந்தாதி, ப.9) சங்ககால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்றவற்றில் அவ்வுறவு மக்களைக் குறிப்பதற்கு ‘யவனர்’ என்னும் பதம் பயன்படுத்தப்பட்டது. நாம் இன்று அறிந்துள்ள வரையில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்புதான் இசுலாமியப் புலவர்கள் தமிழில் நூல்கள் இயற்ற ஆரம்பித்தனர். இப்பகுதியில் ஆங்காங்கே பல தர்காக்கள் இருப்பினும் காவிரிச் சமவெளியில் உள்ள நாகூர் தர்காவே புகழ்பெற்ற தர்காவாகவும் இசுலாமியர்களுக்கு இந்தியாவில் ஒரு புனித தலமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரிக் கரையோரத்து நாகையும் நாகூரும் பற்றி ஆராய்வோம்.

நாகூர் ஆண்டவர்

வடநாட்டில் அலகாபாத் என்னும் பிரயாகை நகரின் பக்கத்திலுள்ள மாலிக்காபூரில் சையது அப்துல் காதிறு ‘சாகுல் ஹமீது நாயகம் பிறந்தார்.(குலாம் காதிறு நாவலர், கர்ஜூல் கராமத்து, ப.4) இவர் ஆற்றிய சமயப்பணி பாராட்டிற்குரியது. இவரை நல்லடக்கம் செய்த இடம் இதுவே. நாகூரில் வாழ்ந்து மறைந்து நாகூரிலேயே அடக்கமாகி இருக்கும் இறைநேசச் செல்வரின் வாழ்நாள்காலம் 1490-1579 என்று பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் சாகுல் ஹமீது பாதுஷா நாகூருக்கு வந்த பொழுது முதன்முதலில் அவரை வரவேற்று குடிசைப் பகுதியில் தங்க வைத்தது மீனவர்கள். இதனால் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கும் மீனவர்களுக்கும் காலம் காலமாக பிணைப்பு இருப்பதோடு, முதல் மரியாதையும் வழங்கப்படுகிறது. நாகூர் தர்காவிற்கு இடம் கொடுத்ததும் பெரிய மினராவை அதாவது கோபுரத்தைக் கட்டியதும் சரபோஜி மன்னர் காலத்தில் தான். நாகூர் தர்கா இசுலாமிய தலமாக இருந்தாலும் இங்கு அதிகம் வந்து வழிபடுபவர்கள் இந்துக்களே. ஆகையால் இந்துக்கள் வழிபாட்டு முறைப்படி வழிபாடுகளும் நடைபெறுகின்றன. நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவில் கொடி ஊர்வலத்தின் போது செட்டியார் சமுகத்தை சேர்ந்த செட்டி பல்லாக்கு இடம்பெறும். நாகூர் ஆண்டவர் சமாதியின் மீது போர்த்தப்படுகின்ற சால்வை பழனியாண்டி பிள்ளை என்ற பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர்களின் வாரிகளே இன்றளவும் வழங்கி வருகின்றனர். 

ஓவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் இரவு தர்காவில் தங்கிவிட்டுச் செல்கின்றனர்.. ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளை முன்னிட்டு ஆண்டு தோறும் கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த கந்தூரி விழா கடந்த பிப்ரவரி 17 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும். ஆண்டுதோறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நாகூரில் உள்ள அபிராமி அம்மன் கோயில் திருவாசலிலிருந்து தாரைதப்பட்டையுடன் புறப்படும். முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் வரும்போது, இருபுறங்களிலும் திரளான மக்கள் கூடி நின்று ரதத்தின் மீது மலர்களைத் தூவி பிரார்த்தனை செய்வர்இதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மத வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிப்பர்.

Continue Reading →

ஆய்வு: ‘யுகதர்மம்’ உணர்த்தும் வறுமையும் குடும்பச் சூழலும்

வண்ணநிலவன் சிறுகதை (முழுத் தொகுப்பு), நற்றிணை வெளியீடு, சென்னை-5, பக்கம்: 656 விலை ரூ. 550, 044 28442855இலக்கியங்கள் யாவும் மனித சமூகம் நன்கு வாழ்வதற்குரிய சூழலைத் தோற்றுவித்தல் வேண்டும். அந்நிலையை பண்டையக் காலந்தொட்டு இன்று வரையும் தமிழ் இலக்கியங்கள் செய்து வருகின்றன எனலாம். சங்க இலக்கியம், சங்க மருவிய கால இலக்கியம், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் என பல்வகையில் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் புதிய எழுச்சியோடு, மரபினை உடைத்த இலக்கியங்களாய்த் தோன்றின. அவற்றுள் சிறகதை, புதினம், புதுக்கவிதை தனிச்சிறப்புடைய இலக்கிய வகைமைகளாகும்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் எல்லோரும் படிக்கும் வண்ணமும், தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட சூழலுக்கு ஏற்றவாறும் அமைந்த சிறுகதைகள், புதினம், புதுக்கவிதைகள் போன்றவை நடைமுறை நிகழ்ச்சிகள், அதனால் விளையும் செயல்கள் ஆகியவற்றை உரைநடையில் எளிமையாகவும், நுட்பமாகவும், சமூகப் பின்புலங்களோடு எடுத்துரைத்ததை நாம் மறுக்க இயலாது. அத்தகைய இலக்கியங்களுள் சிறுகதையின் வரவு மிகச் சிறந்த இலக்கிய கலைப்படைப்பாக மாறி வாசகர்களைக் கூடுதலாக்கியது என்றே கருதலாம்.

20-ஆம் நூற்றாண்டில் புதுமைப்பித்தன், மௌலி, நா.பிச்சைமூர்த்தி, லா.சா.இராமாமிர்தன், கல்கி, அகிலன், அரவிந்தன், சுந்தரராமசாமி, ரெகுநாதன் போன்ற பலரும் சிறுகதைப் படைப்பதில் தனித்தன்மைப் பெற்று விளங்கினர். அத்தகையோhpன் ஆற்றலைப்போல ‘வண்ணநிலவன்’ அவர்களின் சிறுகதைகளும் மிகச்சிறந்த படைப்பாக வலம் வந்தது என்றே கூறலாம்.

“கதைக்கரு எந்த இடத்திலிருந்தும் வரக்கூடும் எந்த நேரத்திலும் வரக்கூடும். ஊசி குத்துவது போல் சுருக்கென்று தைக்கக்கூடியது அது” (டாக்டர்.கோ.கேசவன், தமிழ்ச் சிறுகதைகளில் உருவம், ப.50)

என்பதற்கு ஏற்ப, எல்லா சூழலிலும், வாழும் புற உலகு மனிதனின் அக வாழ்க்கையை மிக நுட்பமாக வெளிப்படுத்தும் திறன் கொண்டவராய் வண்ணநிலவன் காணப்படுகின்றார். மேலும்,

“சிறுகதையில் பாத்திரங்கள் வளர்க்கப்படுவதில்லை, வார்க்கப்படுகின்றன. அதாவது வார்த்த பாத்திரங்களின் இயக்க நிலையில் தோன்றும் ஓர் உண்மை தான் சிறுகதையின் கருவாக அமையும்” (கா.சிவதம்பி, தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், ப. )

என்பதற்கு ஏற்பவும், மிக அழகாக, நுட்பமாக, தெளிவாக சிறுகதைக்கு ஏற்றார் போல பாத்திரங்களைப் படைத்து கதைக்கருவை மிகச் சிறப்பாக அமைத்துள்ளார் எனலாம்.

‘யுகதர்மம்’ கதையும், சமூக நிலையும்

வண்ணநிலவன் சிறுகதைத் தொகுப்பிலுள்ள முதல் சிறுகதையே அவர் கதைக்கரு அமைத்த விதத்தையும், கதைப்பின்னலையும் மிக நுட்பமாக அடையாளப்படுத்திவிடுகின்றன எனலாம். நடுத்தர, வறுமைக் கோட்டுக்குக் கீழான மக்களே இவர் கதையின் பெரும்பகுதி பாத்திரங்கள், நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கை நிலையையும், சமூகத்தில் ஏற்படுகின்ற அகநிலை, புறநிலைச் சார்ந்த கருத்தியலும், மக்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், தீர்வுகள் எனப் பலவற்றையும் இவர் கதைகள் எடுத்துரைக்கின்றன என்பதை ‘யுகதர்மம்’ என்ற ஒரு கதையே சான்றாக அமைந்துவிடும்.

Continue Reading →

ஆய்வு: பாறப்பட்டி இருளர்களின் சமூக அமைப்பில் உறவுமுறைச் சொற்கள்

ஆய்வுக் கட்டுரை!பண்டைக் காலத்தில் விலங்குகளைப் போன்று அலைந்து திரிந்த மனிதன் காலப் போக்கில் பல படிநிலைகளைக் கடந்து வளர்ச்சி பெறலானான். உணவினைத் தேடி அலைந்த மனித இனம் உணவினை உற்பத்தி செய்யத் தொடங்கி நிலையான ஒரு குடியிருப்பை அமைத்துக் கொண்டு வாழத் தொடங்கியது முதல் சமூகம் என்ற ஒரு அமைப்பு தோற்றம் பெறலாயிற்று. அது முதல் அவர்களிடையே ஓர் உறவு ஏற்பட்டது. காலப்போக்கில் இவ்வுறவுகளே மனிதனை உயர்நிலைக்கு அழைத்துச் சென்றது. மேலும் ஒரு சமுதாயத்தின் உயர்வு தாழ்வுகளை நிர்ணயிக்கக்கூடிய காரணிகளுள் ஒன்றாக வளர்ச்சி பெற்றது. ஓர் உறவு ஏற்பட வேண்டுமெனில் குறைந்த அளவு இருவர் தேவை இவ்விருவரும் ஒருவரை மற்றொருவர் ஏதோ ஒரு சொல்லால் குறிப்பிட முற்படும் பொழுது அவர்கள் குறிப்பிட்ட உறவுமுறையை ஏற்க வேண்டியுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு தனிநபரும் ஒரே வேளையில் பல உறவு நிலைகளை அடைய நேரிடுகிறது. அதே வேளையில் இந்த உறவுகளைக் குறிக்க பல வகையான உறவுமுறைச் சொற்களும் தோன்றியது. உறவுமுறைகள் பற்றிய ஆராய்ச்சியில் இவ்வுறவுமுறைச் சொற்கள் முக்கிய இடம் பெறுகின்றது. 

ஆய்வு நோக்கம்

உறவுமுறைச் சொற்கள் ஆய்வில் மானிடவியலார்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள். அவர்கள் ஒரு சமுதாயத்தில் காணப்படும் உறவுமுறைச் சொற்களைக் கண்டுபிடித்து வகைப்படுத்த பலவகையான அணுகுமுறைகளைக் கையாண்டுள்ளனர். அவற்றின் அடிப்படையில் பாறப்பட்டி இருளர்களின் சமுதாய அமைப்பில் காணப்படும் உறவுமுறைச் சொற்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பாறப்பட்டி இருளர்கள்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 அடி உயரத்தில் அடர்ந்த வனப்பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ள இருளர் குடியிருப்பு பாறப்பட்டி ஆகும். இருளர்கள் இந்திய நடுவண் அரசால் இனம் காணப்பட்ட “பண்டைய பழங்குடி இனத்தவர்” (Primitive Tribes) ஆவர். மேற்கே வண்ணப்பாறை, தெற்கே மங்கலத்தாள் பாறை, கிழக்கே சங்கிலிப்பாறை இவ்வாறு மூன்று பக்கங்களும் பாறைகளை எல்லையாகக் கொண்டுள்ளதால் இவ்வூர் பாறப்பட்டி என்று பெயர் பெற்றது. பாறப்பட்டி இருளர்கள் திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்த “இருள” மொழியைப் பேசுகின்றனர். இவர்களின் மொழியில் தமிழ், மலையாளம், கன்னடம் கலந்து காணப்படுகின்றது. இருளர்கள் தங்களுக்குள் உள்ள பிரிவுகளை ‘குலம்’ என்று குறிப்பிடுகின்றனர். இவர்களிடையே மொத்தம் 12 குலங்களும் 96 வகை உட்பிரிவுகளும் காணப்படுகின்றன. இருளர்கள் ஆவி, ஆன்மா, மாந்திரீகம், பில்லிசூனியம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை உடையவர்கள். இவர்கள் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதில் நுண்மதி படைத்தவர்கள். பாறப்பட்டி இருளர்கள் பேச்சு வழக்கு, சடங்குகள் போன்றவற்றால் மற்ற இருளர்களிடமிருந்து தனித்து நிற்கின்றனர். தற்பொழுது இவர்கள் வேலைவாய்ப்பு, குழந்தைகளின் கல்வி போன்ற பல காரணங்களுக்காக மலையை விட்டு கீழே இறங்கி மலையடிவாரங்களில் குடியேறியுள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் பெருமாள் கோவில் பதி, மூங்கில் மடை குட்டை பதி, முருகன் பதி, புதுப்பதி, சின்னாம்பதி மற்றும் கேரள மாநிலத்தில் வாளையார் அருகே நடுப்பதி ஆகிய ஊர்களில் வசித்து வருகின்றனர். மேலும் தாங்கள் பாறப்பட்டியில் இருந்து வந்ததால் தங்களை பாறப்பட்டி இருளர் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

Continue Reading →