வழியைத் தெளியக் காட்டும்
எனது மனத்தினிலுள்ள கோவிலிலென்றும் காவலிருக்கும் கடவுளரே,
தினமும் உம்மைப் பற்பல தடவை தலைவணங்கி நான் வேண்டுகிறேன்.
நாளாந்தம் நானும்மைப் பலதடவை துதிக்கையிலே சொல்வதெல்லாம்
வாழ்வதற்கு வழிகாட்டும், தயைசெய்து, பேரீசா, என்னும் சொல்லே.
நடப்பதுவும் நிற்பதுவும் காவுவதும் கடத்துவதும்
கடகடந்து கருமத்தில் களைப்பதுவும் துடைப்பதுவும்
படிப்பதுவும் பார்ப்பதுவும் மேய்ப்பதுவும் மனமுடைந்து
கடிவதுவும் வேண்டுவதும் எல்லாமே நான் செய்வேன், காட்டித்தாரும்,
அடியேனுக்கு, ஒன்றே, நீர், படிப்படியாய் – நான் போகும் பாதை ஒன்றே.
நீரே என் வழிகாட்டி, வேறே யார் என் துணைக்கு உள்ளார், ஈசா?
சீராகச் செவிசாய்த்து நீரே என் பிழையெல்லாம் திருத்திச் செல்லும்.
நேரான பாதை தனில் தவறாமல் செல்வதற்கும் சொல்லித் தந்து
கூரான சிந்தனையும் தாரீர், நீர், என் மனத்தில் குடியிருக்கும் பேரீசா.
எனது மனத்தினிலுள்ள கோவிலிலென்றும் குடியிருக்கும் கடவுளரே !
தினமும் நான் என் தலைவிதி படியே பார்த்துச் செல்ல வழி சொல்லும் !!