நன்னன் சேய் நன்னனுடைய பழமையான ஊர் செல்வம் நிறைந்து உயர்ந்து ஓங்கிய மதில்களை உடையது. அவ்வூரினின்றும் பெயர்தலை அறியாத பழங்குடிகள் வாழும் ஊர் அகன்ற இடமாயினும் போதுமான இடமில்லாத நிலைபோன்று சிறந்த பெரிய அங்காடித் தெருக்கள் நடைபெறுவது போன்று எப்போதும் இருக்கும். பகைவர் செல்ல அஞ்சும் பல குறுந்தெருக்களும் உள்ளன. ஊர்மக்கள் ஆரவாரம் கடல் போன்றும் மாடங்கள் உயர்ந்து ஓங்கி நிற்கும். அவ்வூரில் வாழ்வோர் வெறுப்பில்லாமல் விருப்பத்துடன் வாழ்வர். குளிர்ந்த பெரிய சோலைகளில் வண்டுகள் ஒலித்துக் கொண்டிருக்கும். அவனுடைய பழமையான வெற்றியையுடையது மூதூர் ஆகும் என்பதைப் பின்வரும் பாடல் வரிகள் காட்டுகின்றன:
நிதியம் துஞ்சும் நிவந்துஓங்கு வரைப்பின்
பதிஎழல் அறியாப் பழங்குடி கெழீஇ
வியல்இடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து
யாறுஎனக் கிடந்த தெருவின் சாறுஎன
இகழுநர் வெரூஉம் கவலை மறுகின்
கடலெனக் காரென ஒலிக்கும் சும்மையொடு
மலையென மழையென மாடம் ஓங்கித்
துனிதீர் காதலின் இனிதமர்ந்து உறையும்
பனிவார் காவின் பல்வண்டு இமிரும்
நனிசேய்த் தன்று அவன் பழவிறல் மூதூர்
(பெரும்பாண்.478 – 487).
அவன் தன்னுடன் மனம் பொருந்தாத பகைவரின் கரிய தலை வெட்டுண்டு வீழ, அதைப் பருந்துகள் உண்ண அலையும் போர்க்களத்தில் வெற்றி பெறும் மறவர், தம் கரிய காம்பினையுடைய வேல்கள் சாத்தப் பெற்ற கதவினையுடைய வாயிலைப் பிறர் ஐயுறாது, அஞ்சாமல் புகுவர். இங்கு நன்னனின் பெரிய அரண்வாயில் காணப்பட்டுள்ளது என்பதைப் பின்வரும் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன:
பொருந்தாத் தெவ்வர் இருந்தலை துமியப்
பருந்துபடக் கடக்கும் ஒள்வாள் மறவர்
கருங்கடை எஃகம் சாத்திய புதவின்
அருங்கடி வாயில் அயிராது புகுமின்,
(மலை.க.488 – 491).