முன்னுரை
சங்க இலக்கியநூல்களின் மூலம் தமிழர்கள் வாழ்வியல் சு10ழலைப் பற்றிய செய்திகள் புலவர்களின் பாடலடிகளில் காணமுடிகிறது. மரங்களும், மலர்களும் அதன் தன்மையை பல புலவர்கள் தம் பாடலடியின் வழியாக ஆராய்ந்து எடுத்தாளப்பட்டதையும், புலவர்கள் தம் பாடலடிகளின் மூலமாக தலைவன் தலைவியின் வாழ்வியலைத் தாவரங்களில் மீது செலுத்திய அறிவுதிறனைப்பற்றியும் அகநானூற்றுப்புலவர்கள் முல்லைத்திணையின் வழியாக இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
முல்லை மலர்களும் மரங்களும்
வளரியல்பு அடிப்படையில் அமைந்த வகைப்பாட்டில் முதன்மைபெறுவது மரஇனமாகும். பொது மரஇனம் அதன்கண் அமைந்திருக்கும் வலிமையையுடைய உள்ளீட்டைக்கொண்டே வரையறுக்கப்படுகிறது. “ திண்மையான உள்ளீட்டை பதினைந்திலிருந்து இருபதடி உயரமேனும் வளர்வதுமாகிய தாவரம் மரம்” என்று தாவரவியலார் குறிப்பிடுகிறார்.
முல்லைத்திணையில் இடம்பெற்றுள்ள மரங்களான பிடா, காயா, குருந்து முதலியன மரங்கள் மிகவும் உயரமற்ற குறுமரமாகவே காணப்படுகின்றன. பெரும்பாலும் முல்லைநிலத்தில் உள்ள மரங்களின் பூக்கள் தலைவனின் கார்கால வரவினை உணர்த்தும் கற்கால மரமாகவும், முல்லைநிலத்தில் காட்டின் அழகினைக் கூட்டுவதற்கும் ஆயர்கள் அம்மரத்தில் உள்ள செடிப்பூக்களைக்கொய்து தலையில் கூ10டிக்கொள்வதற்கும் பயன்பட்டுள்ளது. மேலும் மயிலினங்கள் கூடி ஆடக்கூடிய முல்லைநிலக்காடானது மரங்கள் அடர்ந்துக்காணப்படும் என்பதை,
மயிலினம் பயிலும் மரம்பயில் கானம் (அகம்.344:6)
என்ற தொடர் சுட்டுகிறது.
பிடவம்
பிடவம், முல்லைநிலத்தில் வரைக்கூடிய குறுமரம். அகநானூற்றுப்பாடல்களில் இதனைப் பிடா, பிடவு எனக் குறிப்பிடுகின்றனர். குளிர்ச்சிப்பொருந்திய முல்லைநிலக்காடுகளில் செழித்து வளரக்கூடிய பிடவமரத்தின் மலர்கள் கார்காலத்தில் மலர்ந்து மணம் பரப்பும் மணத்தால் பெயர்பெற்ற மரங்களும் பிடவமரமும் ஒன்றாகும். இதனுடைய பூ வெண்மை நிறத்துடன் கொத்தாகப்பூக்கும் இயல்புடையதாகும். வினைவயிற்சென்ற தலைவன் மீண்டு வருவதாக கூறிச்சென்ற கார்பருவத்தைத் தலைவிக்கு உணர்த்தும் மலராகவும். பாசறையில் இருக்கும் தலைவனுக்குக் கார்கால வரவை உணர்த்தித் தலைவியை நினைவூட்டும் அடையாளமாகவும் பிடவம் திகழ்கிறது. பிடவமலர் பற்றிய குறிப்பைத் தொல்காப்பியர் கூறுகையில், ‘யாமரக் கிளவியுமு பிடாவும் தளாவும் (தொல்.எழு:230)’ என்ற நூற்பா வழித்தந்துள்ளார்.