ஆய்வு: கற்றல் கற்பித்தலில் செயற்கை அறிவின் எதிர்காலம் (The Future of artificial intelligence in learning )

முனைவர் துரை.மணிகண்டன், தலைவர் தமிழ்த்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி நவலூர்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி-9முன்னுரை
கல்வி என்பது மனிதனை மனிதனாக்க உருவாக்கப்பட்ட ஒரு அறிவு திறவுகோல் என்பதாகும். இன்றைய கல்விமுறையில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. கற்றலின் கோட்பாடுகளில் ஆதிகாலத்தில் குருகுலக் கல்வி செயல்பட்டது. அடுத்துத் திண்ணைப் பள்ளிக்கூடம் முறை கையாளப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிக்கூடக் கல்வி படிப்படியாக வளர்ந்து இன்று விஞ்ஞானக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி என நீண்டு சமையல் கல்வி, ஏன் கொத்தனார் கல்வி, சித்தாள் கல்வி என இது வளரும். பயன்பாட்டு கல்வியின் தேவை இன்று இந்திய அளவிலும், உலக அளவிலும் செயல்பட்டுக் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. கல்வியின் நோக்கம் மனிதச் சமூகத்தை ஒழுங்கான பார்வைக்கும், பாதைக்கும் அழைத்துச் செல்லவேண்டும் என்பதே ஆகும்.

செயற்கை அறிவு
தான் கற்றுக்கொண்ட விஷயங்களை எந்திரத்துக்கு, ஒரு கம்ப்யூட்டருக்குக் கற்றுக் கொடுத்துத் தன்னைப் போலப் புத்திசாலித்தனம் நிறைந்ததாக அதை மாற்ற மனிதன் முயற்சி செய்கிறான். இது தான் ‘செயற்கை அறிவு’ திட்டத்தின் விளக்கம் என்கிறோம்.

இயற்கையாக நம் மூளையின் செயல்பாடுகளை ஒரு இயந்திரப் பொறிக்குக் கற்றுக்கொடுத்து அதை இயற்கையாகச் செயல்படுத்த வைக்கும் முயற்சியே செயற்கை அறிவாகும். இஃது இன்றைய கணிப்பொறியின் வளர்ச்சியால் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய மாற்றம்.

செயற்கை அறிவின் பல்துறைப் பயன்பாடுகள்
செயற்கை அறிவின் ஆராய்ச்சியில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கணிதமேதை ஆலன் டூரிங் (Alan Turing) அதிகமாக ஈடுபட்டவர். இவர் 1947 ம் ஆண்டு இது தொடர்பாகப் பல்வேறு சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். கணினி நிராலாக்கம் மூலம் செயற்கை அறிவு கொண்ட எந்திரங்களை உருவாக்க முடியும் என்று ஆலன் டூரிங் நம்பினார். அவரது கருத்துக்களை அடிப்படையாக வைத்தே விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மனிதனின் எண்ணச் செயல்களில் பிரதிபிம்பம் மற்றும் மனிதனால் படைக்கப்பட்ட (மனித அறிவு கொண்ட) எந்திரம்தான் “செயற்கை அறிவு” எதை வேண்டுமானாலும் கற்றறியும் திறன், காரணங்களை அறியும் திறன், மொழிகளைக் கையாளும் திறன் மற்றும் தன் எண்ணங்களைத் தானே ஒழுங்குபடுத்தும் திறன் போன்ற திறமைகளைக் கொண்டதுதான் ‘செயற்கை அறிவு’ ஆகும்.

இயற்கையாக நம் மூளையின் செயல்பாடுகளை ஒரு இயந்திரப் பொறிக்குக் கற்றுக்கொடுத்து அதை இயற்கையாகச் செயல்படுத்த வைக்கும் முயற்சியே செயற்கை அறிவாகும். இஃது இன்றைய கணிப்பொறியின் வளர்ச்சியால் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய மாற்றம்.

கதை எழுதப் பயன்படும்
நாம் இதுவரை கதை எழுதப் பேனாவைக்(எழுதுகோல்) கொண்டு ஒரு தாளில் கதை எழுதி வந்தோம். பிறகு தட்டச்சு செய்து கதைகளை எழுதி வருகிறோம். இது இயற்கை, இயல்பு. இதையே கொஞ்சம் மாற்றி சிந்தித்துப் பார்த்தால் பேனாவே கதை எழுத முயற்சித்தால் எப்படி இருக்கும் அதற்குப் பெயர் செயற்கை அறிவு.

நாம் கதை எழுதத் தொடங்கும் போது நமது மூளையில் பல ஆயிரங்கோடி நரம்பு மண்டலங்களின் சிந்தனை சக்தியில் கதைக்குத் தேவையான காரணக் காரணங்கள் மற்றும் நாம் கண்ட கேட்ட செய்திகள், நிகழ்வுகள் அனைத்தையும் ஒருங்கே கொண்டு பேனாவால் எழுதுவோம். இதையே பேனாவிற்கு அந்தச் செயற்கை அறிவைக் கொடுத்து அதையே எழுதச் சொன்னால் அதற்குப் பெயர்தான் செயற்கை அறிவு. இது எப்படிச் சாத்தியம் ஆகிறது. இதுவரை நாம் எழுதிய கதைகளை அந்தப் பேனாவிற்குச் செயற்கை அறிவுமூலம் கொடுத்துவிட்டால் பேனா சிந்திக்கத் தொடங்கிவிடுகிறது. நாம் எழுதும் கதையை அது தீர்மாணிக்கும். ஐயா இந்த இடத்தில் இப்படி வந்தால் கதை நன்றாக இருக்கும் என்று பேனா சில இடங்களில் ஆலோசனை வழங்கும்.

நாம் ஓர் இடத்திற்குச் செல்ல வேண்டும். உடனே உங்களிடமிருக்கும் கூகுள் வரைபடத்திடம் கேட்கின்றீர்கள். உடனே வரைபடம் அந்த இடத்திற்குச் செல்ல 30 நிமிடம் ஆகும் என்று கூறுகின்றது. நாம் அந்த இடத்திற்குச் சென்று விடுகிறோம். அடுத்து நாளும் அதே இடத்திற்குச் செல்ல வேண்டும். தற்பொழுது கூகுள் வரைபடத்திடம் கேட்கின்றோம். அது தற்பொழுது 45 நிமிடம் ஆகும் என்கிறது. நமக்கு ஒரே அதிர்ச்சி. என்ன இது சென்ற முறை சென்றபோது 30 நிமிடம் என்றது இப்பொழுது 45 நிமிடம் என்கிறதே என்று நமக்கே வியப்பாக இருக்கும். இதில் உண்மை எது? பொய் எது? என்று வரைபடத்திடம் கேட்டால் அது சிரித்துக்கொண்டே கூறும். அன்று செல்லும்போது அவ்வழியில் போக்குவரத்து குறைவாக இருந்தது. இன்று காலை நேரம் அனைவரும் அதே சாலையில் பணிக்குச் செல்ல இருப்பதால் இன்று போக்குவரத்து அதிகமாக இருக்கும் எனவே 45 நிமிடம் ஆகும் என்றேன் என்று வரைபடம் கூறுகிறது. என்ன வியப்பு இது எப்படிக் கூகுள் வரைபடத்திற்குத் தெரியும். யாரும் ஆள்வைத்துப் பார்த்துக் கூகுள் கூறுகிறதா? இல்லை யாரேனும் பக்கத்தில் அமர்ந்துகொண்டு கூகுள் வரைபடத்திற்குச் சொல்லிக்கொடுக்கின்றார்களா? இல்லையே? ஒவ்வொரு நகரிலும் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு நேரங்களில் இருக்கிற முன்பு இருந்த போக்குவரத்து நிலவரங்களைக் கணினி தொடர்ந்து கவனிக்கின்றது. அதன் அடிப்படையில் எங்கிருந்து எங்கே செல்ல எவ்வளவு நேரமாகும் என்பதை அதுவே கற்றுக்கொள்கிறது.

அமேசான்
அமேசான் இணையப் பக்கத்தில் நீங்கள் சென்று ஒரு நூல் ஒன்று வாங்குகிறீர்கள். நீங்கள் தேடும் புத்தகம் உங்களுக்குக் கிடைத்துவிடும். பிறகு அதே இணையப்பக்கத்தில் நாம் தேடிய புத்தகம் தொடர்பான இன்னும் பல நூல்களை நமக்குக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருக்கும். இது எப்படிச் சாத்தியமாகின்றது. இப்படி யோசிப்போம். முன்பு நாம் நூல் நிலையங்களுக்குச் சென்று நூல் வாங்கினால் அந்தக் கடை ஊழியன் இதுபோன்று பல நூல்கள் இருக்கின்றன இதனையும் பாருங்கள் என்று அழைத்துச் சென்று நூல்களைக் காட்டுவான். அந்த வேலையை இன்று கணிப்பொறி செய்கிறது அவ்வளவே. மனிதன் பார்த்த வேலையை ஒரு எந்திரம் மற்றும் கணிப்பொறி செய்கிறது. இதுவே மனிதன் சிந்திக்கும் அறிவை ஓரளவேனும் இயந்திரத்திற்கும் கணிப்பொறிக்கும் கொண்டுவரும் முயற்சியே செயற்கை அறிவாகும்.

இவ்வாறு நாம் மருத்துவமனையில் எந்திரம் உடல்கூறு ஆய்வு செய்கிறது; மனித உடலில் அறுவைச் சிகிச்சை செய்கிறது; வங்கிகளில் ஒருவருக்குக் கடன் கொடுக்கலாமா? வேண்டாமா? என்பதைக் கணிப்பொறி தீர்மானிக்கிறது. இங்கே வங்கி மேலாளர் ஒரு ஓரமாக உட்கார்ந்து கணினியிடம் கேட்க வேண்டியதுதான் உடனே கணினி பதில் கொடுத்துவிடும். எனவே இதுபோன்று எண்ணிலடங்காப் பணிகளைச் செய்யச் செயற்கை அறிவு இன்றைய காலக்கட்டத்திற்குத் தேவையாக உள்ளது.

கல்வியில் செயற்கை அறிவு
கல்வியில் இன்று கற்றல் திறன் என்பது பல்வேறு வகைகளில் மேன்மைப்படுத்தப் பட்டுள்ளன. மணலில் எழுதிப் பழகிய காலம் சென்றுவிட்டது. இன்று தொடுதிரையில் எழுதிப் பழகும் அளவில் கற்றல் திறன் வளர்ந்துள்ளது. ஒருகாலக்கட்டத்தில் பள்ளிக்கூடம் சென்று படித்த குழந்தைகள் இன்று கணினியின் முன் அமர்ந்து கற்கும் சூழலியலுக்குச் சென்றுவிட்டனர். எங்கோ இருந்துகொண்டு இங்கிருக்கும் மாணவ மாணவிகள் கேட்கும் வினாக்களுக்குப் பதில் சொல்கின்றன. இவ்வாறு கற்றல் கற்பித்தலிலும் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்படியெல்லாம் கல்வி கற்றலில் மாற்றம் வருமா என்று நாம் சிந்தித்துக்கூடப் பார்த்தது இல்லை. ஆனால் இன்று இவையெல்லாம் நடைமுறையில் உள்ளன. நாம் ஏன் செயற்கை அறிவுகொண்ட ஒரு எந்திரம் மற்றும் கணினியின் மூலம் கற்றல் கற்பித்தலை முன்னிலைப்படுத்தக் கூடாது என்பது எனது வினா? ஏன் எனில் ஒரு வகுப்பறையில் சுமார் 40 மாணவர்கள் இருக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் உள்ளவர்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்க 40 மாணவர்களின் அறிவு தேடல்களையும் ஒரே ஆசிரியனால் ஒருங்கு படுத்தமுடியும் என்பதும் சற்று இயலாத காரணம்.

ஒவ்வொரு மாணவன் பல்வேறு வினாக்களை ஆசிரியர்களிடம் கேட்கும்போது ஒருசில வினாக்களுக்கு ஆசிரியர் பதில் தெரிகிறது. ஒருசில வினாக்களுக்கு ஆசிரியர்களுக்குப் பதில் தெரிவதில்லை. மறுநாள் பார்த்துவிட்டுக் கூறுகின்றேன் என்று சொல்லிவிட்டுச் சென்று விடுகின்றார்கள். இதற்கு ஏன் ஒரு செயற்கை அறிவு கொண்ட ஒரு எந்திர மனிதனையோ அல்லது கணிப்பொறியையோ நாம் கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தக் கூடாது? என்ற எண்ணம் தோன்றுகிறது. (எ.கா சதுரங்க விளையாட்டில் கேஸ்பரோவை வெற்றிகொண்ட ‘டீ புளூ’ எந்திர மனிதன்.)

தமிழில் கற்றல் கற்பித்தலில் செயற்கை அறிவைப் பயன்படுத்துதல்
உலக மொழிகளில் கற்றல் கற்பித்தலில் இன்னும் முழுமையான செயற்கை அறிவுத் திறன் கொண்ட எந்திர மனிதனோ அல்லது கணிப்பொறியையோ முழுமையாகப் பயன்படுத்தவில்லை. அதை ஏன் தமிழ்மொழிக்கு உருவாக்கக் கூடாது! அப்படி உருவாக்கும் செயற்கை அறிவின் துணையை நாம் நாடினால் என்ன? அதற்கு மனிதன் சிந்திக்கும் திறனைப்போலவும் மூளையின் செயல்திறனையும் எந்திரத்திற்கும் கணிப்பொறிக்கும் செயற்கையான அறிவை நாம் கொடுக்க வேண்டும்.

அடிப்படை கற்பித்தலான அடிச்சுவட்டுக் கல்வியான தமிழ் எழுத்துக்கள் மற்றும் இலக்கியம் சார்ந்த அனைத்து நூல்களையும், அதற்கான பல்வேறு உரைகளையும், அதுதொடர்பான சிறப்புரைகளையும், பல்வேறு காலகட்டங்களில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட வினாக்கள், சந்தேகங்கள் போன்றவற்றைத் தொகுத்தும் பகுத்தும் வைத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு தொகுத்த, பகுத்த செய்திகளை நாம் எந்திரம் மற்றும் கணிப்பொறிக்குக் கொடுக்க வேண்டும்.

அவ்வாறு கொடுக்கும் செய்திகளை நிரல்படக் கொடுக்க வேண்டும். இதனைக் கணினிக்குப் புரியும் வகையில் கணினிமொழியாக மாற்றம் செய்து சின்னச் சின்ன நிரலாக்கமாக எழுதிக் கொடுக்க வேண்டும்.

மேலும் இலக்கணம் தொடர்பான செய்திகளையும் இதைப்போன்று கொடுக்கவேண்டும்.

(எ.கா : தொல்காப்பியம் நூற்பா முழுமையையும் ஒரு நிரலாக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான தேர்வு செய்யப்பட்ட பத்து உரையாசிரியர்களின் உரைகளை ஒரு நிரலாக்கமாகவும், பல்வேறு அறிஞர்கள் பேசிய உரையை ஒரு நிரலாக்கமாகவும், ஓம்தமிழ் இணைய இதழ் மூலமாகக் காணொலி(you tube) களை ஒரு நிரலாக்கமாகவும், இது தொடர்பான கேள்விகளையும் பதில்களையும் ஒரு நிரலாக்கமாகவும் வடிவமைத்துக் கொண்டு இயற்கை அறிவு மூலம் ஒரு எந்திரத்தையோ அல்லது கணிப்பொறியையோ நாம் உருவாக்கினோம் என்றால் மிக நேர்த்தியாகக் கற்றல் கற்பித்தல் என்பது புதிய உத்தியில் இயங்கும்.)

5. இதுபோன்று நாம் வடிவமைத்தால் மாணவர்கள் ஆய்வாளர்கள் மற்றும் பிறநாட்டு அறிஞர்களுக்குத் தொல்காப்பியம் குறித்த எந்தவிதமான கேள்விகளுக்கும் உடனே பதில் கிடைத்துவிடும். மேலும் தொல்காப்பியத்தைப் படிக்கும் அனைவருக்கும் எழும் பொதுவான சந்தேகங்களையும் எந்திரம் யூகித்துப் பதில் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் மனிதன் தன் மூளையால் சிந்தித்து அறியும் திறனை இயந்திரம் செய்ய வேண்டும். இது தமிழ் மொழிக்குமட்டுமன்றிப் பிற உலக மொழிகளின் இலக்கிய, இலக்கண அறிவைப் பெற்றுக்கொள்ளவும் இந்தச் செயற்கை அறிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முடிவுரை
செயற்கை அறிவின் மூலம் கற்றல் கற்பித்தல் முறை வளர்ந்தால் கல்வியின் நோக்கம் மிக உன்னத நிலையை அடையும். இனி வருங்காலத்தில் அனைத்தும் எந்திரன் மற்றும் கணிப்பொறியின் அடிப்படையில் இயங்கும் சூழல்தான் உள்ளது. செயற்கை அறிவின் மூலம் கற்றல் கற்பித்தல் முறை வளர்ந்தால் ஆசிரியர்களுக்கான பணி வாய்ப்புகள் குறையும் என்று யாரும் என்ன வேண்டாம். அதுவேறு பாதையில் பயணிக்கும், இதுவேறு பாதையில் பயணிக்கும். செயற்கை அறிவு உருவாக்கம்தான் அனைத்திலும் பெரியதாகவும் நாகரீக வளர்ச்சியின் வரலாற்றில் நடைபெறும் கடைசி நிகழ்வாகவும் இருக்கும் எனப் பிரிட்டன் விஞ்ஞானி ஸ்டிபன் ஹாக்கிங் (Stephen Hawking) தெரிவித்துள்ள கருத்தை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

துணைநூல் பட்டியல்
1. முனைவர் துரை.மணிகண்டன், த.வானதி , தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள், கமலினி பதிப்பகம், கச்சமங்கலம், தஞ்சாவூர், இ.ப 2017.
2. http://therinjikko.blogspot.in/2009/04/blog-post_5825.html
3. http://www.paristamil.com/tamilnews/view-news-MTE4ODk4MTUxNg==.htm
4. https://ta.wikipedia.org/wiki
5. Nilsson, Nils (1983), “Artificial Intelligence Prepares for 2001”, AI Magazine 1 (1), செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டு கூட்டமைப்பின் தலைமை உரை.
6. Searle, John (1980), “Minds, Brains and Programs”, Behavioral and Brain Sciences 3 (3): 417–457
7. Searle, John (1999), Mind, language and society, New York, NY: Basic Books, ISBN 0465045219, OCLC 43689264 231867665 43689264

குறிப்பு: (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னையில் நடைபெற்ற “தமிழில் புதுத்தடங்கள்” என்ற பன்னாட்டுக்கருத்தரங்கில் சிறப்புரை வழங்கியது நாள்:10-08-2017 )

* கட்டுரையாளர் – முனைவர் துரை.மணிகண்டன், தலைவர் தமிழ்த்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி நவலூர்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி-9

mkduraimani@gmail.com