அகத்தையும் புறத்தையும் பதிவு செய்திருக்கும் சங்க இலக்கியங்கள் பெண்ணுக்கான களவு வெளியை வெகுவாகப் பேசுகின்றன.ஆணுக்கொரு பண்பாட்டையும் பெண்ணுக்கொரு பண்பாட்டையும் கொண்ட தமிழ்ச்சமுதாயத்தில் பெண் தான் மேற்கொண்ட களவு வாழ்வைக் கற்பு வழிப்படுத்தச் சமுதாயம், குடும்பம், சூழல் முதலான அமைப்புகளைக் கடக்கவேண்டியிருக்கிறது.பெண் தான் விரும்பிய வாழ்வை மேற்கொள்ள சில நேரங்களில் உடன்போக்கு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த உடன்போக்கை, உடன்போக்கு உணர்த்தும் மெய்ம்மைகளை அகநானூற்றுப்பாடல்கள் வழியாக ஆய்வுசெய்கிறது இக்கட்டுரை.
உடன்போக்கு உணர்த்தும் மெய்ம்மைகள்
முன்பே குறிப்பிட்டதுபோலத் தலைவி தான் மேற்கொண்ட களவு வாழ்வைக் கற்பு வழிப்படுத்தச் சமுதாயம், குடும்பம், சூழல் முதலான அமைப்புகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. சிலநேரங்களில் உடன்போக்கு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்குப் பெண்ணே உடந்தையாகவும் இருந்திருக்கிறாள். கயமனாரின் பாலைத் திணைப்பாடலில் தோழி, “ நின்னை மிக விரும்பிய அன்னை எய்தும் துன்பத்தை உளத்திற்கொண்டும் நின் தமையன்மாரது புலியை ஒத்த அச்சம் தரும் தலைமையை நோக்கியும் நீதான் கலங்காத மனத்தினையுடையையாகி என் சொல்லை விரும்பி ஏற்றுக் கொள்வாயாக. உடன்போக்கினைத் துணிவாயாக” என்று கூறுகிறாள் (பா.எ.259.)தோழியின் கூற்றின்படி தமையன்மாரது அச்சம்தரும் தலைமையும் இதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் அன்னையின் துன்பமும் தலைவியின் களவு வாழ்வு கற்பு வாழ்வை நோக்கிப் பயணிக்கத் தடையாயிருக்கின்றன. இத்தடைகளைத் தகர்த்தெறியவே உடன்போக்கு என்ற நிகழ்வு. உடன்போக்குக்குக் காரணமாயிருப்பவள் தோழியே. கயமனாரின் மற்றொரு பாடலில் தோழி, நம் தாய் தந்தையர் மணத்திற்கு ஆவன செய்துள்ளனர், நான் தலைவனுடன் அரிய காட்டுவழியில் செல்வதை ஏற்றுக்கொண்டுள்ளேன் என்று கூறுகிறாள்1. உடன்போக்குக் காரணமான தோழியே தலைவியின் நிலையைத் தலைவனுக்குஉணர்த்தும் வாயிலாகவும் அமைகிறாள்.