[சிங்கை நகர் வன்னிப் பகுதியில் இருந்ததாக கலாநிதி குணராசா , கலாநிதி புஷ்பரட்ணம் ஆகியோர் கருதுவார்கள். ஆனால் சிங்கை நகர் வல்லுபுரத்திலேயே இருந்திருக்க வேண்டுமென்பதுதான் இக்கட்டுரையாளரின் கருத்து. நல்லூர் இராஜதானி நகர அமைப்பு ஆய்வின் இரண்டாம் பதிப்பு நூலாக வெளிவரும்போது இந்தக் கட்டுரையும் உள்ளடக்கியே வெளிவரும். இக்கட்டுரை ஏற்கனவே திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்தது. இப்பொழுது மீள்பிரசுரமாக வெளிவருகிறது ஒரு பதிவுக்காக.. – வ.ந.கி -] சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக் கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார்.
ஐந்து வருடங்களின் முன்னர் “குமுதம்” வார இதழின் அரசு கேள்வி – பதில் பகுதியில் ஒரு கேள்வி, “ உண்மையில் பாரதி ஒரு நாத்திகரா” என்பதாக கேட்கபட்டிருந்தது. எல்லாம்வல்ல ஒரு இறைவன் இயக்க- தான் தாம் ஒரு கருவியாக செயற்படுவது அல்லாமல், ‘ நான் கிருத யுகம் படைக்க நீ ஆமென் என்று வழிமொழிந்து இரும்’ என்பதுட்பட மக்கள் செயற்பாட்டுக்கான சக்தியாக மட்டுப்படுத்தி கடவுளைக்காட்டும் பாரதி வரிகளை எடுத்துக் காட்டிய பின்னர் – இப்படியெல்லாம் பார்க்கும் போது பாரதியை ஒரு நாத்திகராகவே காண முடிகிறது” என்பதாக அரசின் பதில் அமைந்திருந்தது. தேசிய விடுதலை- சாதியொழிப்பு- பெண்விடுதலை- வறுமைத் தகர்ப்பு – சமத்துவ சமூக படைப்பு என்பவற்றுக்காக மக்களைச் கிளர்ச்சிக் கொள்ள உணர்வூட்டும் படைப்புகளையும் செய்தி வெளிப்பாடுகளையும் எழுதுவதையே தனது தொழில் துறையாகக் கொண்டிருந்தார் பாரதி. கடவுளின் கருவியாக மனிதனை- மனுசியைப் பார்ப்பதை விட்டொழித்து , மனித சக்தியின் கருவியாக கடவுள் உணர்வை மடைமாற்றிவிடும் அவரது பண்பு அவரை முழுமையாக ஆன்மீகவாதியாக தரிசிக்க இடம் தரவில்லை என்பதால் அரசு பதிலில் பாரதி நாத்திகவாதியாகக் காட்டப்படுகிறார்.
தமிழ் இலக்கியங்களைப் பொருத்தவரை சமய இலக்கியங்களை ஒதுக்கிவிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றை முழுமைப்படுத்தி எழுத இயலாது. அந்த அளவு இடைக்காலத் தமிழக வரலாற்றை அறிய சமய நூல்கள் துணைசெய்கின்றன. இச்சமய இலக்கியங்களில் நல்ல பயிற்சிபெற்று, இன்று வாழும் அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிப் பல நூறு தமிழ் மாணவர்களை உருவாக்கியவர். தமிழ் சமயம் சார்ந்த அரிய நூல்கள் வரைந்தவர். தமிழகத்திலும் இலங்கை, கனடாவிலும் பேருரைகள் வழியாகத் தமிழ்வளர்ப்பவர். சமயத்தின் ஊடாகத் தமிழ் வளர்க்கும் இந்தச் சான்றோர் இப்பொழுது கனடாவில வாழ்ந்துவருகின்றார். அவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்கு எண்ணிப்பார்ப்போம். நா.சுப்பிரமணியம் அவர்கள் இலங்கையில் அமைந்துள்ள முள்ளியவளை (முல்லை மாவட்டம்) என்ற சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் நாகராசன், நீலாம்பாள்.இவர்களுக்கு இரண்டாவது மகனாக 25-12-1942இல் பிறந்தவர். தமிழகத்தின் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சார்ந்தவர்களான தந்தையும் தாயும் 1930 ஆம் ஆண்டுகளில் ஈழத்தில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணியன் அவர்கள் முள்ளியவளையிலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலை மற்றும் வித்தியானந்தக் கல்லூரி ஆகியவற்றிலே தமது தொடக்கக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் பயின்றவர். பின்னர் பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழைச் சிறப்புப்பாடமாகப் பயின்ற இவர் 1969இல் இளங்கலை சிறப்பு(B.A.Hons)ப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் “ஈழத்துத் தமிழ் நாவல்கள்” என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி 1972 இல் தமிழில் முதுகலை(M.A)ப் பட்டத்தைப் பெற்றவர். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் “தமிழ் யாப்பு வளர்ச்சி” என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1985இல் முனைவர்(Ph.D.) பட்டத்தையும் பெற்றவர். (கி.பி 11ஆம் நூற்றாண்டுக்குப் பின் 19ஆம் நூற்றறாண்டின் இறுதிவரையான காலப்பகுதியின் தமிழ் யாப்பு வளர்ச்சியை நுட்பமாக நோக்குவதாக அமைந்த இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடானது தேர்வாளர்களால் மிக உயர்வாகப் பேசப்பட்டது.
சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டினுள் ஒன்றாக விளங்குவது மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சியாகும். இந்நூல் எழுநூற்று எண்பது அடிகளை உடைய நெடும்பாடலாகும். இப்பாடலில் சங்ககால அறங்கள் எடுத்துரைக்கப் பெறுகின்றன. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நால்வகை வருணத்தாருக்கு உரிய அறங்கள், சமண, பௌத்த மதத்தோருக்கான அறங்கள், அறத்தைக் காக்கும் குழுக்களின் செயல்பாடுகள். பெண்களுக்கு உரிய அறங்கள் ஆகியன தெளிவு பட எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. இக்கருத்துகளின் முலம் சங்ககால அறங்கள் பற்றிய தெளிவினைப் பெற முடிகின்றது.
பேராசிரியர் கைலாசபதி அவர்களின் 29 வது நினைவு தினம் டிசெம்பர் 6.2011. எமது தெற்காசிய சூழலில் செப்டம்பர் 26 என்பது அண்மைக் காலத்தில் வேறொரு வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவில் முஸ்லீம் தீவிரவாத தாக்குதலின் நினைவு கூரலுக்குரியது அது. சர்வதேச ரீதியாக செப்டம்பர் 11 என்பது இதுபோல முக்கியத்துவம் பெற்றுள்ளமையை அறிவோம். உலக மேலாதிக்க வாத நாடான அமெரிக்க மீது முஸ்லிம் தீவிர வாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நாள் செப்டம்பர் 11. எமது பிராந்திய மேலாதிக்கவாத நாட்டுக்கும் உலக மேலாதிக்கவாத நாட்டுக்கும் முஸ்லிம் தீவிரவாதம் பிரதான அச்சுறுத்தலாக மாறியுள்ள சூழலில் , இனி உலக செல்நெறி வர்க்க மோதலாக அன்றிப் பண்பாட்டு மோதலாகவே அமையும் , என்ற தர்க்கமும் முன்வைக்கப்பட்டு வருவதை அறிவோம். இலங்கையில் சிங்கள- தமிழ் -முஸ்லிம் -மலையக தேசியவாதப் பிளவில் சமூக வேறுபாடுகள் வலுபெற்றுள்ளது. தமிழியல் இன்று அதிகம் கரிசனைகொல்வதாக வர்க்க அக்கறை இன்றி தலித்தியம் ,பெண்ணியம் ,தேசிய இனப்பிரச்சனை என்பனவே மேலோங்கி உள்ளன.
ஆய்வின் முன்னுரை
நூறு ஆண்டுகளுக்கொரு முறைதான் மகாகவிகள் தோன்றுகிறார்கள். இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரே காலக்கட்டத்தில் இரு மகாகவிகள் கவியாட்சி புரிந்தார்கள் என்றால் அவரகள் மகாகவி பாரதியம் தாகூரும்தான். எளிய சந்தம். எளிய மொழிநடை, எளிய மக்கள் என்பதாக எழுதி நாட்டிலும், சமுதாயத்திலும், படைப்பிலக்கிய வடிவத்திலும் மாற்றத்தைக் கொண்டு வந்த பாரதி. அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குச் சமமாக இந்திய இறையியலை உலகமொழியில் மொழிபெயர்த்துக் கீதாஞ்சலிசெய்து நோபல்பரிசினைத் தட்டி வந்த இரவீந்திரநாத் தாகூர் ஆகிய இருவரின் கவிதைகளை ஒப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த இராமாவதாரம் என்ற கம்பராமாயணத்திற்கு நல்ல உரை ஒன்று மறுபதிப்பாகித் தற்போது வந்துள்ளது. தமிழ் வளர்த்துப் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1955 ஆம் ஆண்டில் கம்பராமாயணத்திற்கு ஒரு நல்ல உரையை பதினான்குத் தொகுதிகளில் வழங்கியது. இந்த உரை உருவாக்கத்திற்குச் சொல்லின் செல்வர் ரா. பி . சேதுப்பிள்ளை, இராவ் சாகிப் மு. இராகவையங்கார், பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம், பேராசிரியர் கோ. சுப்பிரமணியப் பிள்ளை, பேராசிரியர் லெ. ப. கரு இராமநாதன் செட்டியார், பேராசிரியர் அ. சிதம்பரநாதன், திரு. பி.ஸ்ரீ ஆச்சாரியா, திரு நீ. கந்தசாமிப்பிள்ளை, பால்நாடார் திரு மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, திரு. பு.ரா. புருஷோத்தமநாயுடு முதலியோர் பங்காற்றியுள்ளனர். இதன் முலமே அந்த உரையின் மேன்மையைப் புரிந்துக் கொள்ள இயலும். இந்த உரை முல பாடலை முதலில் பதச்சேர்க்கையாக முல நூல் வடிவிலேயே தருகின்றது. இதற்கு அடுத்ததாக பாடலைப் பதம் பிரித்து அனைவரும் படிக்கும் வகையில் தருகின்றது. இப்பாடலுக்கு பாடற் பொருள் தொடர்ந்து தரப்படுகிறது. இவற்றுடன் வினைமுடிபுகள், அருஞ்சொற்பொருள், பதவுரை, கருத்துரை, ஒப்புமைப் பகுதி, விசேடக் குறிப்பு, இலக்கணக் குறிப்புகள் முதலாயின தரப்பெறுகின்றன.
நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர், பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் உயர்ந்து, தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்ட பெருமகனார் தான் ஜீவா என்ற ஜீவானந்தம் ஆவார். கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்யப் பாடல்கள் பலவற்றைப் பாடினார். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்ப் பண்பாட்டுடன், கட்சியை வளர்த்த பெருமை ஜீவாவையே சாரும். இத்தகைய பெருமைக்குரிய ஜீவா என்ற ஜீவானந்தம் நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 21-ஆம் தேதி, பட்டப்பிள்ளை-உமையம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். அவருக்கு பெற்றோர் ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயரான சொரிமுத்து எனும் பெயரை இட்டனர்.
தமிழ் நாவல் நூற்றாண்டு நிறைவையொட்டி இழத்துத் தமிழ் நாவல்களின் நூல்விபரப் பட்டியலொன்று தயாரிக்கும் முயற்சியிலீடுபட்டிருந்த வேளையில், தகவல் தோட்ட எல்லைக்குட்பட்ட நாவல்களில், ‘ஒரு பிரசுரக்கள’த்தின் வெளியீடுகள் என்ற வகையில் வீரகேசரி பிரசுரங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அமைந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கடந்த சுமார் தொண்ணூறாண்டுக் காலப்பகுதியில் (1885-1976) ஈழத்தில் நூல் வடிவில் வெளியிடப்பட்ட தமிழ் நாவல்களின் மொத்தத்தொகையில் இருபது வீதத்துக்கு மேற்பட்டவை வீரகேசரி பிரசுரங்கள். கடந்த ஏழாண்டுக் காலப்பகுதியில் நூல் வடிவில் வெளிவந்த எண்பத்தைந்து நாவல்களில் நாற்பத்தைந்து நாவல்கள் வீரகேசரி பிரசுரங்களாகவும், பதின்மூன்று நாவல்கள் வீரகேசரியின் துணை வெளியீட்டு நிறுவனமான ‘ஜனமித்திரன்’ பிரசுரங்களாகவும் அமைகின்றன என்ற உண்மை, அண்மைக்காலத்தில் நாவல் வெளியீட்டுத்துறையிலே வீரகேசரி நிறுவனம் வகிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைகின்றது. இலக்கியத்தரம் என்பது புள்ளிவிபரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல வெனினும் வெளியீட்டுச் சாதனத்தின் தாக்கத்தைக் கருத்திற் கொள்ளாமல் மதிப்பிடக் கூடியதுமல்ல. இவ்வகையில், ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றிலே, கடந்த சுமார் ஐந்து ஆண்டுக் காலத்தின் வரலாற்றுப் போக்கினை நிர்ணயித்துள்ள காரணிகளுள் ஒன்றாக வீரகேசரி புத்தக வெளியீட்டுத்துறை இயங்கிவந்துள்ளதென்பது மிகையுரையல்ல. சமகால இலக்கியப் போக்கைப் புரிந்து கொள்ளும் முயற்சி என்ற வகையில் வீரகேசரி பிரசுர நாவல்களைப் பொதுமதிப்பீடு செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசர்களின் காலத்தில் இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் இருந்திருக்கலாமென்பதை வரலாற்று நூல்கள், வெளிக்கள ஆய்வுகள் (Field Work) , தென்னிந்தியக் கட்டடக் கலை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விளைந்த தர்க்கத்தின் அடிப்படையில் உய்த்துணர முயன்றதின் விளைவாக உருவானதே இந்த நூல். இதன் முதற்பதிப்பு ஏற்கனவே 1996 டிசம்பரில் ஸ்நேகா (தமிழகம்) மற்றம் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகிய பதிப்பகங்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருந்தது. இது பற்றிய மதிப்புரைகள் கணயாழி, ஆறாந்திணை (இணைய இதழ்) மற்றும் மறுமொழி (கனடா) ஆகிய சஞ்சிகை இணைய இதழ்களில் வெளிவந்திருந்தன. இலங்கையிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன் இலங்கையிலிருந்து வெளிவரும் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையில் இதுபற்றியதொரு விமரிசனத்தை எழுதியிருந்தார். ஈழத்திலிருந்து வேறெந்தப் பத்திரிகை, சஞ்சிகைகளில் இதுபற்றிய தகவல்கள் அல்லது விமரிசனங்களேதாவது வந்ததாயென்பதை நானாறியேன். இருந்தால் அறியத்தாருங்கள் (ஒரு பதிவுக்காக).