பக்தி இலக்கியங்களில் அதிகம் காணப்படுகின்ற புராண இதிகாசக் குறிப்புகளில் ஒரு பகுதி சிவனின் அட்டவீரச் செயல்களைப் பற்றியதாகும். தமிழ் பிற்சங்க இலக்கியங்களில் சிவன் பற்றிய புராணக் குறிப்புகள் பரவலாக அறியபட்டாலும் தேவார காலத்தில்தான் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இப்புராணங்களின் அடிப்படை வேதப்பொருளை எளிய மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்துள்ளது. வடஇந்தியப் பகுதிகளில் சமண பௌத்த செல்வாக்கினால் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து வைதீக சமயம் இப்புராண மரபை அடியொற்றியே தன்னைத் தற்காத்துக் கொண்டது. இந்த வெற்றி தமிழக பக்தி இயக்கக் கவிஞா்களுக்கு ஒரு புதிய ஊக்கத்தையும் தந்திருக்கிறது.
பக்தி இயக்க மதம் பௌராணீக மதமாக மாறியதற்கு இதுவே காரணங்களாகும். தமிழக பக்தி இயக்கத்தில் வடமொழி பௌராணிகக் கதைகளின் தாக்கம் அதிகம் இருப்பினும் அக்கதைகளைத் தமிழ்நாட்டில் நிலவிய கதைகளாகவே மக்களை நோக்கிய பிரச்சாரம் செய்யப்பட்டது. திருஞானசம்பந்தா் பாடல்களில் இடம்பெரும் அட்டவீரட்ட செயல்கள், விற்குடி, கடவூர், கோலூர், கண்டியூர் என்ற வெவ்வேறு தலங்களில் நடைபெற்றனவாகக் கொள்ளப்படுகின்றன. வடஇந்திய பௌராணீகக் கதைகளைத் தமிழ் நிலத்தோடு இயைபுறுத்துவதன் மூலம் தமிழர் சிவமதத்திற்கு ஒருவித தேசிய அங்கீகாரத்தைத் தேட முடிந்தது. சிவனின் இத்தகைய அட்டவீரட்ட புராணங்கள் சமண-பௌத்த மதத்தவர்களை அச்சுறுத்;தவும், விரட்டியடிக்கவும் பயன்பட்டிருக்கும். திருஞானசம்பந்தார் பாடல்களில் இடம்பெறும் அட்டவீரட்டச் செயல்களாகக் கீழ்வருவனவற்றைக் காணமுடிகின்றது.
1. அந்தகாரசுரனைச் சங்கரித்தது (அந்தகாரி)
2. காமனை எரித்தது (காமாந்தகன்)
3. காலனை உதைத்தது (காலசங்காரன்)
4. சலந்தரனைத் தடித்தது (ஜலந்தராரி)
5. தக்கன் வேள்வி தகர்த்தது (தக்கச்சாரி)
6. திரிபுரம் எரித்தது (திரிபுராந்தகன்)
7. பிரம்மன் சிரத்தைச் சிவபிரான் அறுத்தது (பிரம்மரச் சதனன்)
8. சிவபிரான் யானையை உரித்தது (கஜாபக கஜாந்தகன்)
இவை சிவப் பராக்கிரமத்தின் வெளிப்பாடுகளாகக் கொள்ளப்படுகின்றன. இப்புராணக் கதைகளின் வழி சிவன் அகோர ரூபங்களுடனும் அஸ்ட வக்ரங்களுடனும் தோற்றமளிக்கிறான். அச்சம் தரும் ஆயுதம் ஏந்திய இத்தொன்மங்கள் சமண பௌத்த எதிர்ப்பில் ஓர் உணர்ச்சிகரமான, ஆவேசமான உத்வேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கக்கூடும். எனவேதான் திருஞானசம்பந்தர் பாடல்களில் இவை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருபுறம் அடியார்க்கு அருளும் அன்பே வடிவான சிவனையும் மறுபுறம் ஆவேசங்கொள்ளும் ஆயுத பாணியான சிவனையும் படைத்து அதன் மூலம் தன் சமய மேலாண்மைக்கான ஒப்புதலைப் பெற முயற்சித்திருக்கிறார். அடியார்கள் அருளப்படுவா், அடியார் அல்லாதாரைச் சிவன் தண்டிக்கவும் தயங்கமாட்டார் எனும் போது அதிகாரத்ததைக் கைகொள்ள ஆளும் வா்க்கங்கள் பயன்படுத்தும் இருவேறு தன்மைகளை இத்தொன்மங்கள் வெளிப்படையாகக் கொண்டிருப்பது தெரிகிறது. திருஞானசம்பந்தா் பாடல்கள் அட்டவீரட்டப் புராணக் குறிப்புகளை நோக்க திரிபுரம் எரித்த கதை மிகுதியான அளவில் இடம்பெறுகிறது.