கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளில் போராட்ட நிகழ்வுகள் மற்றும் புலப்பெயர்வுகளின் விளைவுகளால் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் புதிய வரவுகளில், இனங்கானப்பட்ட உணர்திறன் முறைமை மாற்றமானது, புனை கதைகளின் பரிணாம வளர்ச்சிக்குப் புது இரத்தம் பாய்ச்சியது. போராட்ட இலக்கியங்களைப் போலன்றி, புலம் பெயர் இலக்கியங்களில் வாசகர் அனுபவித்த வாழ்க்கையானது அவர்களது இயல்பான வாழ்க்கைக் கோலங்களுக்கு முற்றிலும் அந்நியமாகத் திகழ்ந்ததற்கும் அப்பால், புலம் பெயர் இலக்கியங்களில் தரிசித்த புதிய காட்சிகளும் மொழி நடையும், புதியதோர் உலகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றதே, அவ்விலக்கியம் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணமாக அமைந்திருந்தது.
புலம்பெயர் இலக்கியத்தில் காணப்பட்ட இத்தகைய வித்தியாசமான, தனித்துவமான அம்சம்தான் அதற்கோர் சர்வதேசிய அந்தஸ்தைக் கொடுத்ததோடு, புதிய யுகத்தில் அதுவே கிரீடம் சூடிக் கொள்ளும் என்று எஸ்.பொ. போன்றவர்கள் கூறுமளவிற்கு நிறைய நம்பிக்கையையுந் தந்தது. பொ.கருணாகரமூர்த்தி, க.கலாமோகன், ஷோபாசக்தி, தேவகாந்தன், கே.எஸ்.சுதாகர், வி. ஜீவகுமாரன் போன்றவர்களுடன் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் எழுத ஆரம்பித்து தொண்ணூறுகளின் பிற்பகுதியில் உணர்திறன் முறைமை மாற்றத்தில் புதிய பரிமாணம் பெற்ற அ.முத்துலிங்கம் முதலானோர் புலம்பெயர் இலக்கியத்தில் ஆழத்தடம் பதித்ததோடன்றி, மேலும் தமது தொடர்ச்சிகளை உருவாக்க முனைந்தனர். அ.முத்துலிங்கத்தின் கூறுபாட்டின் ஒரு தொடர்ச்சியாகவே ஆசி கந்தராசாவை நான் காண்கின்றேன். உண்மையில் முத்துலிங்கத்தின் உணர்திறன் முறைமையினை மேலும் அகலப்படுத்தும் ஓர் பண்பினையே ‘ஆசி’ யின் ஆக்கங்களில் என்னால் தரிசிக்க முடிகின்றது.