– வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் ‘பூங்காவனம்’ சஞ்சிகையில் வெளியான அண்மையில் மறைந்த எழுத்தாளர் ஏ.இக்பாலின் ‘இலக்கிய அனுபவ அலசல்’ தொடரின் ஓர் அலசலை மீள்பிரசுரம் செய்கின்றோம். அனுப்பி வைத்த வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கு நன்றி. -பதிவுகள் –
இலக்கிய ஈடுபாடு பல்திறப்பட்ட நுணுக்கமான பார்வைக்கு வழிவகுக்கும். ஓர் இலக்கியப் படைப்பின் இயல்புகளை இனங்கண்டு அதனை விவரிக்கவும் விளக்கவும் இலக்கிய ஈடுபாடு ஏற்படுத்தும். வாசிக்கும் வல்லமையால் மனதை உறுத்திய குறிப்புக்களை எப்போதோ எழுதி வைத்திருந்தேன். அவற்றை இப்போது அலசும்போது புதுமையான எண்ணங்கள் எழுவதால் சிலவற்றை இங்கே தருகிறேன்.
01
1967 ஆம் ஆண்டு அ.ந. கந்தசாமி தினகரனில் ”மனக்கண்” என்னும் சிறந்த நாவல் ஒன்றை எழுதினார். இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் மூலம் ஒரு வாசகன் பெறும் தகவல்கள் அளப்பரியன. அவற்றை அட்டவணை செய்து பார்த்தல் அவசியம்.
”உயிருடனிருக்கும்போது கண்தானம் சட்டப்படி செய்ய முடியாது” என்ற உண்மை, வைத்திய சம்பந்தமான நூல் பிரான்ஸ் டாக்டர் பீஸரெரோலன்ட் என்பவர் எழுதிய புத்தகம், வைத்திய நுணுக்கங்கள், கிரேக்க நாடகாசிரியரான செபாக்கிளிஸ் எழுதிய ஈடிபஸ் ரெக்ஸ் நாடகம், துஷ்யந்தன் சகுந்தலை காதல், துட்டகைமுனுவின் மகன் சாலிய குமாரனுக்கும் பஞ்சகுலப் பெண் அசோகமாலாவுக்கும் ஏற்பட்ட காதல், இளவரசி மார்க்கிரட் காதல், அரிச்சந்திர புராணம், காந்திமகான் வாழ்க்கையை மாற்றிய காரணத்துக்கான நிகழ்வு, இளவரசர் அலிகான் ரீட்டா ஹேவொர்த் அந்யோன்யம், ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியத், அறபு நாட்டுக் கதை லைலா மஜ்னு, பெர்னாட்ஷா கூற்றுக்கள், புறநானுற்றுச் செய்யுள்கள், இராமாயனக் கதை, நளன் தமயந்தி தூது, சிலப்பதிகார இந்திரத்திரு விழா, அலெக்சாந்தர் கோடியல் சந்திப்பு, சுவாமி விபுலானந்தர் செய்யுள், வள்ளுவர் குறள்கள், பழமொழிகள், வழக்குச் சொற்றொடர்கள், நீட்சேயின் தத்துவ விளக்கம், சத்தியவான் சாவித்திரி கதை, ஆங்கிலக் கவிஞன் மில்டனின் கவிதைகள், பிரசித்தி பெற்ற குருடர்கள் வரிசை:- துரியோதனனுடைய தந்தை திருதராஷ்டிரன், மாளவ தேசத்து சத்தியவானின் தந்தை, தேபஸ் மன்னன் ஈடிபஸ், யாழ்ப்பாடி, ஆங்கிலப் பெருங்கவிஞன் மில்டன், சிந்தாமணி என்னும் தாசியின் தொடர்பால் தன் கண்ணைத் தானே குத்திக்கொண்ட வைஷ்ணவப் பத்தன் பில்வமங்கள் கதை, சிந்தகன் என்னும் மேலைத்தேயச் சிற்பத் தோற்றம், பட்டினத்தார் பாடல்கள், இன்னோரன்னவைகள் அந்நாவலில் விரவிக் கிடப்பதைப் படிக்க முடியும்.