-1-
கடந்த இருபது வருடங்களாக, சிட்னியில்; வசிக்கும் என்னுடய அம்மாவுக்கு வயது தொண்ணூறு. இந்த வயதிலும் அவருக்கு நோயற்ற திடகாத்திரமான உடம்பு! அவரின் முப்பத்திரண்டு பற்களும் ஒறிஜினல். சூத்தையோ, ஆட்டமோ அற்ற பால் வெள்ளைப் பற்கள் அவை. பல்வைத்தியரான என்னுடய மகன், அப்பாச்சியின் பற்களை வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்து, பல்வைத்திய மாநாட்டு விரிவுரைகளில் காட்டிப் பெருமைப்படுவான். ‘நல்ல காலம்! ஆஸ்ரேலியர்களுக்கு அப்பாச்சியின் பற்கள் இல்லை. அப்பாச்சி போல, இங்கே பிறந்தவர்களும் இருந்தால், நான் கிளினிக்கை இழுத்து மூடவேண்டும்’ என பேத்தியாருக்கு ‘கொமன்ற்’ அடிப்பான் பேரன். யாழ்ப்பாணத்து தண்ணியும், கைதடி முருங்கைக் காயும்தான், தனது உறுதியான பற்களுக்குக் காரணம் என்பது அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. முருங்கைக்காய் சமாசாரம்பற்றி பேச்சு வரும்போதெல்லாம் கைதடி முருங்கைக் காய்தான் திறமென அடம் பிடிப்பார். கைதடி, ஒரு கலட்டிப் பாங்கான பூமி. அங்கு எது வளருதோ இல்லையோ, முருங்கை மரங்கள் நன்கு வளர்ந்தன. எங்கள் கைதடி வளவிலும் அம்மா பலவகை முருங்கை மரங்களை நட்டிருந்தார். களிமுருங்கை, வலியன் முருங்கை, கட்டை முருங்கை, உலாந்தா முருங்கை என அம்மாவின் பாஷையில் அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள்.